இசைபட வாழ்வோம்- 2

சில வாரங்களுக்குப் பின் மீண்டும் அந்த காஃபி ஷாப்பிற்கு சென்ற எனக்கு அந்த மூவரும் அங்கிருப்பது வியப்பளித்தது. விவேக் என்னிடம் வந்து, “சார்,  கடைசில சொன்ன தடாலடி இசை விஷயத்தை இன்னிக்கி விவாதிக்கலாமா? கடந்த இரண்டு வாரங்களாக நீங்க இங்க வருவீங்கன்னு காத்திருந்தோம்.”

“என்னுடைய செய்திகளைப் படித்து விட்டு கொஞச நேரம் பேசலாமே”

க: “ஏதோ இசைத்துறையில் தவறாக பயன்படுத்தலாம்னு சொல்லிட்டு போய்டீங்க. அப்படி என்ன தவறு செய்ய முடியும்? இசை வேணும்னா ஒருவருக்கு பிடிக்காம இருக்கலாம். அதனால் என்ன தீங்கு விளைவிக்க முடியும்?”

“கணேஷ், உங்களுக்கு இளையராஜா இசை ஏன் பிடிக்கும்?”

க: “இதென்ன கேள்வி சார்? இசை ஏன் பிடிக்கும்னா, எப்படி பதில் சொல்றது?”

“நீங்க கேள்விக்கு இன்னொரு கேள்வியை பதிலாக சொல்றீங்க.”

க: “சரி சார், எனக்கு தெரிந்த வரை சொல்றேன். விவேக், கார்த்திக் அவங்களும் ஏன் பிடிக்கிறது என்று சொல்லட்டும். ராஜா பாட்டைக் கேட்டால் அப்படியே மெய் மறந்து போய்விடுகிறது. சில சமயம் திரைக்காட்சிகள் மனதில் வந்து போகின்றன. மற்ற சமயங்களில், பாடலை முதலாக கேட்ட சூழ்நிலை வந்து மறைகிறது. சில சமயம் சோகமாக இருக்கும் பொழுது ராஜாவின் சில பாடல்கள் ஒரு வித ஆறுதலைத் தருகிறது.”

வி: “என்னைப் பொறுத்த வரை, ரஹ்மானின் இசையில் இருக்கும் ஒழுங்கு எனக்குப் பிடிக்கிறது. எத்தனைதான் மேற்கத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும், இந்திய இசை அதில் பின்னோட்டமாய் அவரால் உருவாக்க முடிகிறது. அத்துடன் இளமை துள்ளலும் என்னுள் ஏதோ செய்கிறது.”

கா: “கண்ணதாசனின் கருத்துள்ள வரிகள் நம்மிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை எம்.எஸ்.வி. எடுத்துக் கொண்டு மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளார். எத்தனையோ இசையமைப்பாளர்களும் கவிஞர்களும் வந்தாலும், மிக எளிமையாக இன்றுவரை காலத்தைத் தாண்டி மனதை இசையும், பாடல் வரிகளும், நம்மை வேறு உலகிற்குக் கொண்டு செல்கின்றன”

“ஆக, நீங்கள் மூவரும் சொன்னதைச் சுருக்கமாகச் சொன்னால், ஒருவரின் இசை தாலாட்டுகிறது, மெய் மறக்கச் செய்கிறது, இன்னொருவரின் இசை துள்ளலாக இளமையைக் கொண்டாடுகிறது. மற்றொருவர், வரிகளால் சிந்திக்க வைக்கிறார். ஏன் இதை எல்லாம் ஒரே இசையமைப்பாளரால் செய்ய முடியவில்லை?”

வி:”இன்னிக்கி நீங்க கேக்கற கேள்வி எதுவுமே சரியாக இல்லை. எப்படி சார் மெய் மறந்தால், சிந்திக்க முடியும்? எப்படி இளமைத் துள்ளலில் எளிமையைத் தேடுவது?”

“அட, நீங்களும் கேள்விக்கு பதிலளிக்காமல், கேள்வியாகவே கேட்கிறீர்கள். கணேஷ் இதை ஏற்கனவே செய்து விட்டார்.”

வி:”மூன்று இசையமைப்பாளர்களும் வெவ்வேறு உணர்வுகளை நம்மில் உருவாக்கி, வெற்றி பெற்றுள்ளார்கள்.”

“அப்படிச் சொல்லுங்க. இந்த உணர்வுகள் விஷயத்துக்குப் பிறகு வருவோம். இளையராஜா ஒரு முறை தன்னுடைய பாடல்கள் ஏன் ரசிகர்களுக்கு பிடிக்கிறது என்று தன்னுடைய தியரியைச் சொல்லியுள்ளார்.”

க: “அது என்ன தியரி சார்?”

“ராஜாவின் பார்வையில் ‘ராகங்கள் கோடி எதுவும் புதிதல்ல, பாடல்கள் கோடி எதுவும் புதிதல்ல.’ அதாவது, பிரபஞ்சத்தில் நமக்குப் பிடித்த சில அதிர்வுகள் இருக்கின்றன. அந்த அதிர்வுகளோடு ஒத்து போகும் ஒலிகளே பிரபலமான பாடல்கள். இதை அவர் ஆல்ஃபா ரிதம் என்று சொல்லுவார்.”

க: “என்ன சார், நீங்களும் ராஜா பாணியில் ஒரே தத்துவமாகப் பேச ஆரம்பிச்சுட்டீங்க?”

“இசை என்பது ஒலிகளின் கோர்வை. ஒலி என்பதே அதிர்வுதான் – பெளதிகம் அதைத்தான் சொல்லுகிறது. ராஜா சொல்லுவது போல, நமக்கு பிடித்த அதிர்வுகளை பாடல்களால் உருவாக்க முடிந்தால், பாடலை நமக்கு பிடிக்கிறது. வார்த்தைகள் வேறு விஷயம். ஒலி, கேள்வி சம்பந்தப்பட்டது.”

கா: “அதிர்வுகள் பற்றிக் கேட்க நன்றாகத்தான் உள்ளது. ஆனால், எப்படி நான் எம்.எஸ்.வி. ரசிகனாக இருக்கிறேன்? விவேக் எப்படி ரஹ்மான் ரசிகனாக இருக்கிறான்?”

“அருமையான கேள்வி. இசையால் உருவாக்கப்படும் அதிர்வுகள் வெவ்வேறு. உதாரணத்திற்கு, ராஜாவின் ‘ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு’ பாடலைக் கேட்க யானைகள் தேனி மலைப் பகுதியில் உள்ள சின்ன சினிமா தியேட்டருக்கு வருவதைப் பற்றி கேள்விப்பட்டுள்ளோம். அந்தப் பாடலின் அதிர்வுகள் அந்த விலங்குகளுக்குப் பிடித்திருந்தது.அதே யானைகளுக்கு வேறு மனித பாடல்கள் பிடிப்பதில்லை.”

க: “எங்களைப் போலத்தான். எனக்கு ராஜா பாடல்கள் போல மற்றவர்கள் பாடல்கள் பிடிப்பதில்லை. விவேக்கிற்கும், கார்த்திகிற்கும் அப்படித்தான். அதனால் தான் நாங்கள் ரசனையில் வேறுபடுகிறோம்.”

“முதலில் அதிர்வுகள் என்று சொன்னோம். இப்பொழுது நம்மிடையே வழக்கமான சொல்லான ‘ரசனை’ என்கிறோம். இரண்டும் ஒன்றுதான். ஒரு கர்னாடக இசை ரசிகருக்கு சினிமா பாடல்கள் பிடிக்காமல் இருக்கவும் இதுதான் காரணம். சரி, அடுத்த கேள்விக்கு வருவோம். அந்த ‘ரசனை’ அல்லது அதிர்வுகள் எப்படி உங்களை பாதிக்கிறது? விவேக், நீங்க அமைதியாகவே இருக்கீங்க…”

வி: “பிடிக்கிறது என்று சொல்லிட்டோமே. அப்புறம் எப்படி பாதிக்கிறது என்று கேட்டால் என்ன சொல்றது சார்?”

கா: “கண்ணை மூடிக் கொண்டு கேட்டால், வாழ்க்கைத் தத்துவங்கள் எளிமையான இசையோடு, நம்மை இன்னொரு உலகிற்கு கொண்டு செல்கின்றன.”

க: “பல ராஜாவின் பாடல்கள், ஒலிகளால் நம்மை அமைதிப்படுத்துகிறது. பதட்டத்தைக் குறைக்கிறது. இன்னும் சில பாடல்கள் ராகங்களை கையாண்ட வித்ததில் நம்மை வியப்பிலாழ்த்தி, தாலாட்டவே செய்யும். இப்படி பல விதமாக நம்மை பாதிக்கும்.”

“கணேஷ், உங்களது பதில், நம்மை இந்த உரையாடலின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன். நீங்கள் சொன்னபடி, அமைதிப்படுத்துவது, பதட்டத்தைக் குறைப்பது, தாலாட்டுவது என்பதை எப்படி விஞ்ஞான பூர்வமாகச் சொல்வது?”

க: “என்ன சார், இப்படி மாட்டி விடறீங்க? எனக்கு தெரியல. நீங்களே சொல்லுங்க.”

“இந்த உணர்வுகள், ரசனை எல்லாமே வெறும் உடலில் ரசாயன மாற்றங்கள். அவ்வளவுதான், இல்லையா? உதாரணத்திற்கு, ஒரு கோமா நிலையில் அல்லது முழு மயக்க நிலையில் இருக்கும் மனிதருக்கு இந்த வகை ரசாயன மாற்றங்கள் நேர வாய்ப்பில்லை. இசை இந்நிலையில் உள்ளவர்களை பாதிப்பதில்லை.”

க: ”நீங்க சொல்றது உண்மைன்னு ஒத்துக் கொண்டாலும், எப்படி இசை ரசனையை வெறும் ரசாயன மாற்றங்கள்னு ஒத்துக்கறது?”

“நீங்க ஒண்ணும் ஒத்துக்க வேண்டாம். இதை விஞ்ஞான ரீதியாக நிரூபிச்சிருக்காங்க.

Emotions Over Time: Synchronicity and Development of Subjective,Physiological, and Facial Affective Reactions to Music by Oliver Grewe, Frederik Nagel, Reinhard Kopiez, and Eckart Altenmu ̈ ller 

Hannover University of Music and Drama, Germany

Research reveals the biochemical connection between music and emotion: You are in a concert hall, listening to music you love, Ludwig von Beethoven’s Ninth Symphony. You are happily awaiting the glorious climax in the fourth movement — you know it’s coming — when the full orchestra and chorus erupt with the “Ode to Joy.” The moment is here and you are exhilarated, awash in a sudden wave of pleasure.

குறிப்பாக, மனித மூளையில் இசையினால் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்து வருகிறார்கள்.”

வி: “சரி, ஆராய்ச்சில என்ன தெரிய வந்தது?”

“மனித மூளையில் டோபமைன் (dopamine) என்ற ரசாயனம் பல விதங்களிலும் உருவாகிறது. இதை ஒரு நியூரோ ட்ரான்ஸ்மிட்டர் ஆகவும் மனித மூளை பயன்படுத்துகிறது. மனித உடலுறவு, போதைப் பொருட்கள் போன்ற விஷயங்களில் இன்ப உணர்ச்சிகள் தோன்றுவதற்கு டோபமைன் காரணம். இதை வேறு விதமாக சொன்னால், ‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது’, ‘மெளனமான நேரம் இளமனதில் என்ன பாரம்’, ‘உயிரும் நீயே உறவும் நீயே’, போன்ற பாடல்களை நீங்கள் மூவரும் மணிக் கணக்காக ரசிப்பதற்கும் டோபமைன் காரணம்.”

கா: “இது கொஞ்சம் ஓவராக இருக்கிறதே. நம்முடைய முன்னோர்கள், நீங்கள் சொல்லும் இசை அல்லாத இன்பங்களைச் சிற்றின்பம் என்றும், இறைவனைப் போற்றி பக்தியை பெருக்கும் இசையை பேரின்பம் என்றும் சொல்லியுள்ளனர். சினிமா இசை என்பது இறை இன்பத்தைக் கொடுக்காவிட்டாலும், அதை ஒரு சிற்றின்பத்தோடு ஒப்பிடுவது சரியில்லை.”

“உங்களது சிற்றின்பம் டெஃபனஷன்  முன்னோர்கள் சொன்னது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், பேரின்பம் என்பது மிகவும் சப்ஜெக்டிவ் விஷயம். பக்தி இசைதான் இதை உருவாக்கும் என்று சொல்வதற்கில்லை. பெரும்பாலும், மத நம்பிக்கை ஏற்கனவே உள்ளவர்களை பரவச நிலைக்கு (அதாவது, உடலில் ரசாயன மாற்றங்கள்) பக்தி இசை கொண்டு செல்கிறது. இன்று இவ்வகை உணர்ச்சிகளை எப்படி மனித மூளையில் உருவாகிறது என்பதைப் புரிந்து கொள்ள, மனித மூளை ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள்.”

க: “நீங்க இந்தத் துறையில் ஆராய்ச்சி செய்யறீங்களா சார்? மேலும் கொஞ்சம் விளக்குங்களேன்.”

“இது போன்ற பல இசை சார்ந்த விஷயங்கள் என்னுடைய ஆராய்ச்சியில் அடங்கும். அதை விடுங்க, கணேஷ், உங்களைப் பற்றி ஏதோ ஒன்று நினைத்தேன், சிரிப்பாக வந்தது. உங்களை எப்படி டெய்லர் ஸ்விஃப்டின் ரசிகராக மாற்றுவது. அதே போல, விவேக்கை எப்படி கே.பி.சுந்தராம்பாள் ரசிகராக மாற்றுவது, கார்த்திக்கை எப்படி செலின் டியானின் ரசிகராக மாற்றுவது?”

க, கா, வி: “என்ன சார் விளையாடறீங்களா? அது எப்படி சாத்தியம்?”

“அடுத்த வாரம் இதைப் பற்றிப் பேசலாம்.”

*** *** ***

வழக்கமான காஃபி ஷாப்பில் அடுத்த வாரம் மீண்டும் சந்திப்பு. விவேக் முதலில் ஆரம்பித்தான்.

வி:”விட்ட இடத்திலிருந்து பிடிக்கலாமா சார்? யுடியூப்பில் கே.பி..எஸ்ஸின் இசை கேட்டேன். தலை கீழாக நின்றாலும், என்னை உங்களால் அவரது ரசிகன் ஆக்க முடியாது.”

க: “எனக்கு டெய்லர் ஸ்விஃப்ட் யாருன்னே தெரியாது. நீங்க சொன்னவுடன் யுடியூப்பில் கேட்டேன். அந்தம்மாவின் பாட்டெல்லாம் ஒரே மாதிரி இருக்கு சார். விட்டா போதும்னு ராஜா பாட்டுக்கே வந்துட்டேன்.”

கா: “செலின் டியான் – அந்தம்மா ஒல்லியா என்னம்மா உச்சஸ்தாயில பாடறாங்க. ஆனாலும், ஒரு ரெண்டு மூணு பாட்டுக்கு மேல முடியல சார். ‘பொன்னை விரும்பும் பூமியிலே’ –க்கு மாறிட்டேன்.”

“நான் எங்க உங்களை இவர்களது ரசிகனாக்குவேன்னு சொன்னேன்? நினைச்சு பார்த்தேன். அவ்வளவுதான். இதுக்கே இப்படி ரியாக்‌ஷன். உண்மையில நடந்தா என்னவாகும்?”

வி: “கொலை விழும் சார். ரஹ்மானை நானே விரும்பி கேட்டேன். அவர் ஒன்னும் எங்கிட்ட வந்து என்னை ரசிகனாகச் சொல்லவில்லை. கார்த்திக்கும், கணெஷும் அப்படிதான். இதென்ன அபத்தமான கற்பனை?”

“அபத்தமான கற்பனை அல்ல. சில விஞ்ஞானிகளின் கருத்தில் ஒரு செயற்கை நுண்ணறிவு எதிர்கால சாத்தியம்.”

க: “என்ன சார் குண்டைத் தூக்கிப் போடறீங்க. இது என்ன சைன்ஸ் ஃபிக்‌ஷன் மாதிரி போகுது? இது எப்படி சாத்தியமாம்?”

“இன்னும் முழுசாக எப்படி இது நிகழும்னு தெரியாது. ஏராளமான மூளை நரம்பு இயல்பியல் (neuroscience) வளர்ச்சி இதற்கு தேவை. ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக நிறைய முதலீடு, செயற்கை நுண்ணறிவுத் துறையில் (artificial intelligence) செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் துறையின் அடிப்படை, மூளை நரம்பு இயல்பியல் துறை. அதனால், மூளை நரம்பு இயல்பியல் துறையிலும் நிறைய ஆராய்ச்சிகள் நேர்ந்த வண்ணம் இருக்கிறது. எதிர்காலம் முழுவதும் எப்படி இருக்கும் என்று தெரியாவிட்டாலும், தொழில்நுட்பத் துறைகளில் எதிர்கால போக்கு எப்படி இருக்கும் என்று மதிப்பிடுவது ஒரு பயனுள்ள செயல். சில எதிர்கால மதிப்பீடுகள் இவ்வகை சாத்தியங்களை முன் வைக்கின்றன.”

கா: “Interesting.முழுவதும் இது எப்படி நிகழும்னு சொல்லுங்க.”

“அதாவது நான் முன்னமே சொன்னது போல, உன்னுடைய உடல் ரீதியான எம்.எஸ்.வி ரசாயன மாற்றங்களை சற்று மாற்றினால், செலின் டியானின் இசையை ரசித்து மெய் சிலிர்க்க வைக்க முடியும். அதே போல, கணேஷை டெய்லர் ஸ்விஃப்டின் இசையில் மெய் மறக்கச் செய்ய முடியும்.”

வி: “இதை ஒரு வியாபார உத்தியாக பயன்படுத்தி, நம்முடைய இசையை நீக்கி, இங்குள்ள எல்லோரையும் மேற்கத்திய கலைஞர்களின் ரசிகர்களாக்கி விடுவார்களா?”

“அது ஒரு சாத்தியப்பாடு. அதைத்தான் முன்னர் நான் இசைத்துறையில் தவறாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வழி உண்டு என்று சொன்னேன்.”

க: “எனக்கு என்னவோ இது அசாத்தியம்னே தோன்றுகிறது.”

“நீங்கள் சொல்வதில் தவறேதும் இல்லை. இந்தத் துறையின் பயன்கள் சற்று மழுப்பலாக இருப்பது உண்மை. ஆனால், இப்படி நிகழக் கூடாது என்று எல்லோருக்கும் சற்று பயம் இருப்பது என்னவோ உண்மை. இது ஒரு சாத்தியக்கூறாகவே இன்று பார்க்கப்படுகிறது. நிறைய மனித மூளை சார்ந்த விஷயங்கள் இன்னும் புதிராகவே இருக்கிறது. ஆனால், ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு கணினியால் மனிதனால் உருவாக்கப்பட்ட வண்ணப் படங்களில் உள்ள பொருட்களை கண்டறிய முடியும் என்று நினைக்கவில்லை. 1 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு உயிரின் தோலெச்சத்தைக் கொண்டு, அதன் ஜாதகத்தையே சொல்ல முடியும் என்று 20 ஆண்டுகளுக்கு முன் நாம் நினைக்கவில்லை.”

கா: “இப்படி நிகழ எது உந்துதலாக இருக்க முடியும்?”

“வேறென்ன, பணம் தான். இந்தியா, சைனா போன்ற நாடுகளில் உலகின் பாதி மனிதர்கள் வசிக்கிறார்கள். இவர்களைக் கவருவது எல்லா வியாபாரங்களுக்கும் முக்கியம். ஒலியை விற்கும் வியாபாரத்திற்கு இவ்வகை தொழில்நுட்பம் கையில் கிடைத்தால், சிலர், அறம் செய்ய விரும்பாமல், இப்படிச் செய்ய நேரலாம்.”

வி: “நல்லா இருக்கு சார் இது. தில்லாலங்கடி செய்து கார்த்திக்கை செலின் டியான் ரசிகனாக்கி விட்டால் அப்படி என்ன லாபம் பார்க்க முடியும்?”

“இன்று உலகின் பிரபலமான இசைக் கலைஞர்கள் சில நாடுகள், சில மொழிகள் என்று ஒரு வட்டத்திற்குள் இயங்குகிறார்கள். டெய்லர் ஸ்விஃப்ட் இந்தியாவில் ஒரு 15 நகரங்களில் இசைக் கச்சேரி நடத்தினால், சிலர் வருவார்கள். இவ்வகை தொழில்நுட்பத்தால், பல கோடி டாலர்கள் ஈட்ட முடியும். ஏனென்றால், ஒரு இந்தியக் கச்சேரிக்கு கூடும் கூட்டம், பல நூறு மேற்கத்திய கச்சேரிகளுக்கு ஈடாகும்.”

கா: “இது அமெரிக்க தேர்தலில் ரஷ்யா, தலையிடுவதை விட மோசமாக இருக்கிறதே”

“நீங்க சொல்வது இன்னொரு முக்கிய விஷயம். சமூக வலைத்தளங்கள் மூலம் அமெரிக்க தேர்தலில் ரஷ்யா ஊடுருவியது என்று எல்லா செய்தி ஊடகங்களும், அரசியல்வாதிகளும் கதறுகிறார்கள். என் பார்வையில், நாம் பேசும் இந்தப் புதிய தொழில்நுட்பம், இந்த வகை ஊடுருவல்களை ஒரு குழந்தைச் செயலாக்கி விடும்.”

க: “புதுசா என்ன குண்டை போடறீங்க சார். இந்த தொழில்நுட்பத்தை எப்படி அரசியலில் பயன்படுத்த முடியும்?”

“அரசியல், ராணுவம் எல்லாவற்றிலும் தாராளமாக பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு, எதிர்காலத்தில் ஹிட்லர் போன்ற ஒரு திறமையான பேச்சாளன் பதவிக்கு வந்து விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு, அவன் என்ன பேசினாலும் உங்களை மெய்சிலிர்க்க வைக்கலாம். ‘உங்களது வருமான வரியை இரண்டு மடங்காக்குகிறேன்’ என்று சொன்னால், அனைவரையும் தன்னை மறந்து கைதட்ட வைக்கலாம். ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கையான ஃப்ரீ வில் என்பது மழுங்கடிக்க இதைப் பயன்படுத்தலாம். இந்த ரஷ்யா விஷயம் இதற்கு முன் ஒன்றுமே இல்லை. ராணுவங்கள், இதை ஆக்கிரமிக்கும் நாடுகள் மீது தவறான பிரச்சரத்திற்காகப் பயன்படுத்தலாம்.”

கா: “அப்படி ஏதும் நடக்காது என்று நம்புவோம். குறைந்த பட்சம், நம்முடைய வாழ்நாளில் அப்படி நடக்காது என்று தோன்றுகிறது.”

“உங்களோடு discuss செய்தது மிக்க மகிழ்ச்சி. இன்னொரு தலைப்பில் சந்திப்போம்னு நினைக்கிறேன்.”

கா,வி,க: “நன்றி சார். குட் நைட்.”

சொல்வனம் – டிசம்பர் 2019

இசைபட வாழ்வோம் – பகுதி 1

என் வீட்டருகே உள்ள காஃபி ஷாப்பிற்கு போவது வழக்கம் என்றாலும், சமீபத்தில் மிகச் சுவாரசியமான ஒரு மாலை விவாதம் அந்த அனுபவத்தை மெருகேற்றியது. அதற்கு முன், கொஞ்சம் என்னைப்பற்றி – நான் ஒரு செயற்கை நுண்ணறிவு ஆய்வாளன் – அதாவது artificial intelligence researcher. எனக்கு சங்கீதம் புரியுமாதலால், செயற்கை நுண்ணறிவு சங்கீதம் என்னுடைய ஆராய்ச்சித் துறை.

HNMMW7 Robot Plays the Piano Artificial Intelligence Concept 3d Illustration Close-up

அன்று மாலை நான் காஃபி ஷாப்பிற்குள் நுழைந்த பொழுது, மூன்று இளைஞர்கள் மிகவும் காரசாரமான திரை இசை விவாதத்தில் இருந்தனர். நான் வழக்கம் போல காஃபி ஆர்டர் செய்துவிட்டு என்னுடைய செய்திகளைத் திறன்பேசியில் நிதானமாகப் படித்துவிட்டு அங்கிருந்து புறப்படலாம் என்றிருந்தேன். ஆனால், இந்த இளைஞர்களின் வாதம் என்னை அவர்கள் பால் ஈர்தது.

“வணக்கம். உங்களோட விவாதம் ரொம்ப interesting. நான் உங்களோட விவாதத்தில் கலந்துக்கலாமா?”

வி: “என் பேரு விவேக். நான் ஒரு க்ராஃபிக் டிஸைனராகப் பணியாற்றுகிறேன். தாராளமாக நீங்களும் பங்கேற்கலாம். ஆனால், சும்மா  வேடிக்கை பார்க்கக் கூடாது. உங்களது கருத்துக்களைத் தாராளமாக நீங்க சொல்லலாம். நாங்க மூவரும் ஒரே ஸ்கூல் சென்ற நண்பர்கள். எங்களுக்குள் இப்படி வாரம் ஒரு விவாதம் நடக்கும். நான் ஒரு ஏ.ஆர். ரஹ்மான் ரசிகன். அதோ, அவன் கணேஷ், ஒரு இளையராஜா ரசிகன். கணேஷ் ஒரு புகைப்படக் கலைஞன். என்னுடைய மூன்றாவது நண்பன், கார்த்திக். அவனுக்கு, சொன்னால் நம்ப மாட்டீர்கள், எம்.எஸ்.வி. ரொம்ப பிரியம். அவன் ஓர் அனிமேட்டர். உங்களைப் பற்றி சொல்லுங்களேன்”

“எனக்கு ஓரளவு இசை புரியும். நான் ஓர் இசை சார்ந்த செயற்கை நுண்ணறிவு ஆய்வாளன்”

வி: ”தமிழ் சினிமா இசை ஓரளவிற்கு உலகெங்கும் அறியப்பட்டது ரஹ்மானுக்குப் பிறகுதான். அவர் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பல புதிய குரல்களுடன் பங்கிட்டுக் கொண்டார். ஒலித் துல்லியம் என்பது அவருக்குப் பின் திரையிசையில் முக்கியமானது. இந்தியா முழுவதும் மிகவும் மதிப்புடன் பார்க்கும் ஒரு கலைஞராக அவர் உயர்ந்துள்ளார். இந்தி டிவியில் ஓர் இசைப் போட்டியில்கூட அவர் நடுவராக இருக்கிறார்”

இதைக் கேட்ட கணேஷ் உடனே தன்னுடைய கருத்தை ஒரு உத்வேகத்துடன் முன் வைத்தான்.

க: “ஓர் இசைக்கலைஞர் மூன்று தலைமுறையினரைக் கட்டிப் போட்டுள்ளார் என்றால், அது இளையராஜாதான். அவருடைய தொடக்க கால இசைக்கலைஞர்கள் இன்று நம்மிடையே இல்லை. ஆனால், அவர் காலத்திற்கு ஏற்ப தன் இசையை மாற்றிக் கொண்ட வண்ணம் இருக்கிறார். இந்தியப் பண்ணிசையாகட்டும், மேற்கத்திய இசையாகட்டும், அவரால் எளிதாக தன் முத்திரையைப் பதிக்க முடிகிறது. அவருடைய பல உத்திகளைப் புரிந்து கொண்டு,  இன்னும் சில பத்தாண்டுகளில் உலகம் வியக்கும். உலகெங்கும் இசை அறிந்தவர்கள் அவருடைய உத்திகளைக் கண்டு இன்றும் வியக்கின்றனர்”

அடுத்ததாக, கார்த்திக், தன்னுடைய வாதத்தைப் பொறுமையாக முன் வைத்தான்.

கா: “என்னதான் ராஜா, ரஹ்மான் என்று நாம் இன்று பெரிதாகப் பேசினாலும், ஆணிவேர் என்னவோ எம்.எஸ்.வி. தான். இன்றும், தமிழ்நாட்டில், எந்த ஒரு குடும்ப மற்றும் விழாச்சூழல் என்றாலும் அவர் மெட்டமைத்த கருத்துள்ள பாடல்கள்தான் ஒலிக்கின்றன. கண்ணதாசனுடன் அவர் இணைந்து வழங்கிய தத்துவப் பாடல்கள் இன்றும் பண்பலையில் ஒலித்த வண்ணம் இருக்கின்றன. அவரது காலத்தில், சரியான ஊக்கம் இல்லாதது அவரைச் சற்றும் பாதிக்கவில்லை”

வி: “நீங்க சும்மா இருக்கக் கூடாது. உங்க கருத்து என்ன?”

“முதல்ல, நீங்க மூவரும் அழகாகத் தம் கருத்துக்களை மிகவும் civil ஆக முன் வைக்கிறீர்கள். என்னுடைய பார்வையில், மூன்று மிகப் பெரிய இசைக் கலைஞர்கள் தமிழில் இயங்கி வந்துள்ளார்கள் என்பதே நமக்குப் பெருமையான விஷயம். 1960 முதல், 2000 வரையிலான நாற்பது வருடங்கள் தமிழ்த் திரையிசையின் பொற்காலம் என்று தாராளமாகச் சொல்லலாம்”

க: “என்ன சார் எஸ்கேப் ஆகப் பார்க்கிறீங்க. நீங்க எந்தக் கட்சின்னே தெரியலையே!”

”இதுல நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனில்லை. என் பார்வையில், நீங்கள் மூவரும் திரையிசைத் துறையின் நடப்புகளை இன்னும் கூர்ந்து கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது”

கா: “என்ன, அப்படி கவனிக்கவில்லை? புரியும்படி சொல்லுங்களேன்”

“எம்.எஸ்.வி. காலத்தில் ஆங்காங்கு பெரிய குழுவிசை, அதாவது orchestra அதிகமாகப் பயன்படுத்தப்பட்டாலும், ராஜா காலத்தில், விஸ்வரூபம் எடுத்து, ஸ்டூடியோக்கள் நிரம்பி வழிந்தன. இன்று, வாத்திய இசை என்பது திரையிசையில் மிகவும் குறைந்து போய்விட்டது. ராஜாவும் ரஹ்மானும் மேற்கத்திய வாத்தியக் குழுக்களுடன் உறவு வைத்திருந்தாலும், இந்தியத் திரையிசையில் அதிக வாய்ப்புகள் இல்லை என்றாகிவிட்டது”

வி: “நீங்க சொல்றது உண்மைதான். டெக்னாலஜி வளர்ச்சியினால் வரும் விளைவுதானே  இது? ஆனால், நீங்க என்ன சொல்ல வரீங்க?”

“வாத்தியங்கள் மற்றும் அதனைச் சார்ந்த வாழ்வாதாரம் தொழில்நுட்பத்தால் அடிபட்டது என்பதை நீங்கள் மூன்று பேரும் ஒப்புக் கொள்வது மகிழ்ச்சி. இன்னொரு மிகப் பெரிய விஷயத்தை இந்த மூன்று கலைஞர்கள் விவாதத்தில் நீங்கள் கோட்டை விட்டீர்கள் என்றே தோன்றுகிறது”

க: “அப்படி என்ன பெரிய விஷயத்தை நாங்க சொல்லவில்லை?”

”கடந்த 15 ஆண்டுகளாக, இந்தியத் திரைப்படங்களில் ஒரு பெரிய மாற்றம் வந்துள்ளது. 1% அல்லது 2% என்று தொடங்கி இன்று 15% -ஐத் தொடும் அளவிற்கு, பாடல்கள் இல்லாதத் திரைப்படங்கள் வெளிவருகின்றன. இது எல்லா மொழியிலும் நடக்கும் விஷயம். ஆனால், சகட்டு மேனிக்கு பாடகர்/பாடகிகளை உருவாக்கும் டிவி நிலையங்கள் பெருகி வருகின்றன. இவர்களது எதிர்காலம் independent artists, ஆனால், இவர்களது பயிற்சி, இசையமைப்பளர்களைச் சார்ந்த திரையிசை”

கா: “நாங்கள் முன் வைத்தது, எங்களுக்குப் பிடித்த இசைக்கலஞரைப் பற்றிய ஒன்று. நீங்கள், இந்தத் துறையின் போக்கைப் பற்றி சொல்லுகிறீர்கள். இது என்ன எம்.எஸ்.வி. –யின் குறையா அல்லது ராஜா/ரஹ்மான் குறையா? இவ்வளவு பெரிய கலைஞர்களால் கட்டுப்படுத்த முடியாத ஒரு விஷயத்தை நாம பேசி என்ன செய்யப் போகிறோம்?”

”நியாயமான வாதம்தான். ஒண்ணு யோசிச்சுப் பாருங்க. இன்னும் பத்து வருஷத்துல, இப்படி ஒரு வாதம் நடக்க வாய்ப்பே இருக்காது என்பதுதான் என் கருத்து”

க: “அப்படி ஒரு காலம் முழுவதும் வருமா என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை. உங்கள் வாதத்தில் ஒரு குறை இருக்கிறது. பாடல்கள் திரைப்பட இசையின் ஒரு சின்ன பகுதி. பின்னணி இசைதான் திரைப்படங்களின் முக்கிய அங்கம். ராஜா, இதை ஒரு 40 வருடமாக செய்து காட்டியுள்ளார். உதாரணமாக, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ என்ற 2013 திரைப்படத்தில், பாடல்களே இல்லை. ஆனால், தமிழ் திரைப்படங்களின் தலைசிறந்த பின்னணி இசையில் இந்தப் படத்திற்கு நிச்சயமாகப் பங்கு உணடு”

”பின்னணி இசையைப் பற்றி நீங்கள் சொல்வது உண்மை. ஆனால், உலகின் பல்வேறு சினிமா ரசிகர்களும் பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. குறை இருந்தால் சொல்லுவார்களே தவிர, நல்ல பின்னணி இசைக்கு, பாடல்கள் போல அவ்வளவு ரசனை இல்லை. உதாரணத்திற்கு, மேற்குலகில், ரிஹானாவைத் தெரிந்த அளவிற்கு ஜான் வில்லியம்ஸை மக்களுக்குத் தெரியாது”

வி: ”நீங்க என்ன சொல்ல வரீங்க? பின்னணி இசை இருந்தாலும், அதைச் சினிமா ரசிகர்கள் ஒன்றும் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை, சரியா?”

“உண்மைதான். ஆனால், கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் ஒன்று தெரியவரும். கடந்த 100 ஆண்டுகள் சினிமா வரலாற்றில், கடந்த 50 ஆண்டுகளில், உலகில் உள்ள பல சினிமாத் துறைகளும், முக்கிய மனித உணர்வுகளுக்கு இசை சேர்ப்பதில் வல்லமை காட்டியுள்ளார்கள். இதில், சில வட்டார இசையும் அடங்கும். உதாரணத்திற்கு, ஒரு ஹாலிவுட் நகைச்சுவைக் காட்சிக்கு கரகாட்டக்காரன் நகைச்சுவை இசை பொருந்துமா என்பது கேள்விக்குறி. ஆனால். இன்றைய அனிமேஷன் திரைப்படங்கள், இந்தக் கலையை ஓர் உலகத் தரத்திற்குக் கொண்டு சென்று வெற்றி பெற்றுள்ளன. ஹாலிவுட்டின் அனிமேஷன் திரைப்படங்களில், டப் செய்யும்பொழுது, மனிதக் குரல்களை மட்டுமே மாற்றுகிறார்கள். பின்னணி இசையை அல்ல. அவை, பல நாடுகளில் வெற்றியும் பெற்றுள்ளன. இதனால், கொஞ்சம் ஆராய்ச்சி செய்தால், பல திரைப்படங்களின் பின்னணி இசையை ஒரு கணினி மென்பொருளால் உருவாக்கும் சாத்தியக்கூறு உள்ளது”

க: ”சும்மா பூ சுத்தாதீங்க. இளையராஜா போல ஒரு மென்பொருள் பின்னணி இசையை உருவாக்கும் என்பதெல்லாம் சும்மா கற்பனை”

“இன்னிக்கு நான் சொல்வது கற்பனை போலத் தோன்றும். முதல் கேள்வி, ஒவ்வொரு திரைப்படத்திற்கும் இளையராஜா/ரஹ்மான் தேவையா? இவர்கள் மிகவும் விலையுயர்ந்த கலைஞர்கள். திரைப்படங்கள், குறைந்த செலவில் உருவாக்கவே விரும்பும் ஒரு தொழில். சொன்னால் நம்ப மாட்டீர்கள். மேற்குலகில், இதன் ஆரம்பம் அவர்களது பண்ணிசையில் உருவானது. ஏன் ஒரு கணினி பாஹ்ஹைப் போல இசையை உருவாக்கக் கூடாது? ஏன் ஒரு கணினி மென்பொருள் சிம்ஃபொனி ஒன்றை உருவாக்கக் கூடாது?”

க: “இது கொஞ்சம் ஓவராக இருக்கு. பண்ணிசையை கணினியால் உருவாக்குவது சாத்தியமா? அதுவும் பாஹ் போன்ற மேதையின் கற்பனை ராஜா போன்றவர்களே வியக்கும் விஷயம்”

”டேவிட் கோப் என்பவர் கலிஃபோர்னியாவின் ஸாண்டா க்ரூஸ் பல்கலைக்கழகத்தில் இசைப் பேராசிரியர். கொஞ்சம் சர்ச்சைக்குரிய அறிஞர். இவர் கணினிகள் கொண்டு மேற்கத்தியப் பண்ணிசையை உருவாக்கும் பணியில் வெற்றி பெற்றுள்ளார். இவர், கோரால் (chorale), சிம்ஃபனி (symphony) , மற்றும் ஆப்பெரா (opera) போன்ற இசை வடிவங்களைக் கணினி மூலம் எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றி தீவிர ஆராய்ச்சி செய்தவர்.
https://en.wikipedia.org/wiki/David_Cope

இவருடைய பல சோதனைகளை நீங்கள் கூர்ந்து கவனித்துக் கேட்டால், நான் சொல்வது எதுவுமே புதிராகத் தெரியாது. அடுத்த வாரம் இந்த விவாதத்தைத் தொடரலாம்”

~oOo~

இதற்காக எங்கே திரும்பி வரப் போகிறார்கள் என்று நம்பிக்கையில்லாமல் அடுத்த வாரம் காஃபி ஷாப்பிற்குள் குறிப்பிட்ட நேரத்தில் நுழைந்தேன். அவர்கள் மூவரும் அங்கு வந்திருப்பது எனக்கு வியப்பளித்தது. கணேஷ் கையசைத்துக் கூப்பிட்டான்.

க: ”என்னதான் விக்கிபீடியாவில படிச்சாலும், எனக்கு நீங்க எப்படி இளையராஜாவையும் டேவிட் கோப்பையும் முடிச்சுப் போடப் போறீங்கன்னு ஒரே யோசனை”

“நான் எப்போ அப்படி முடிச்சு போடப் போவதாகச் சொன்னேன்? என் பார்வையில் எதிர்காலத்தில் ஓர் இளையராஜா போன்ற திறமையாளர் இருந்தால் கூட, பிரகாசிக்கச் சிரமப்படுவார் – நம்மிடையே உள்ள இளையராஜாவை விடப் பல மடங்கு சிரமப்படுவார். ராஜா போட்டியிட்டது மனித இசையமைப்பாளர்களோடு. எதிர்கால ராஜாவின் போட்டி ஓர் அதிவேக கணினி நெறிமுறையோடு (computer algorithm)”

வி: “கணினி நெறிமுறைகளோடு இன்றைய இசைக் கலைஞர்களும் போட்டி போட்டு வெற்றி பெற்றுள்ளனர். ரஹ்மான் கணினி இசையில் வல்லமை பெற்றுள்ளது உலமறிந்தது”

”ரஹ்மான் பயன்படுத்தும் கணினி நெறிமுறைகள் அவர் கட்டுப்பாட்டில் இயங்கும் முறைகள். அதனால், சில வாத்தியக் கலைஞர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கலாம். ஆனால், ரஹ்மானின் வேலையான இசையமைப்பதை அவர் கணினியிடம் விடுவதில்லை. கணினி மூலம் இசைக்கும் வாத்திய ஒலிகளும் அவர் உருவாக்கியதுதான். சில சமயங்களில், கணினி உருவாக்கிய ஒலித்துண்டுகள் பயன்படுத்தப்படுவது உண்மை. ஆனால், இசை அமைப்பது என்பது இன்று வரை சினிமாவில் கணினியிடம் விடப்படவில்லை. சினிமாவை விடுங்கள். அது ஒரு 120 வருட பழைய விஷயம். எந்த ஓர் இந்தியப் பாரம்பரிய இசையும் (கர்னாடக, இந்துஸ்தானி) ஒரு 300 முதல் 1,000 வருடங்கள் பழையது. கணினிகள் புதிய கீர்த்தனையையோ, ராகத்தையோ உருவாக்கவில்லை. மேற்குலகில் இதைத்தான் முயன்று வருகிறார்கள்”

கா: “அப்படி வாங்க. டேவிட் கோப் அப்படி என்ன செய்து பெரிய சர்ச்சைக்கு ஆளானார்?”

“டேவிட் தான் எழுதிய மென்பொருள் மூலம், ஒரே நாளில், 5,000 கோரால்களை (chorales) பாஹ் போல உருவாக்கினார்.அதில் சில கோரால்களை ஸான்டா க்ரூஸில் நடந்த ஒரு பண்ணிசை விழாவில் ஒலிக்க விட்டார். கேட்டவர்கள் பலரும் புல்லரித்து, இதைப் போல ஓர் இசை நிகழ்ச்சியைக் கேட்டதே இல்லை என்று வியந்தனர். டேவிட், இதை ஒரு கணினி உருவாக்கி ஒலித்தது என்று சொன்னவுடன், அவர் மீது கோபம் கொண்டு, அவரை ஒரு தில்லாலங்கடி என்று விமர்சிக்கத் தொடங்கினார்கள். இன்றும் அது ஓயவில்லை. விடவில்லை டேவிட். மென்பொருளை மேலும் மெருகேற்றி, பீதோவன், ஷோபென், ரஹ்மானினோவ் என்று பலரது இசை பாணிகளையும் கற்றுவித்து, அவற்றை சிடியாக விற்று வெற்றி பெற்றார் – Classical Music composed by a computer என்பது இவரது ஆல்பத்தின் பெயர்.

ஸ்டீவ் லார்சன் என்னும் ஆரகன் பல்கலைக்கழக இசைப் பேராசிரியர், டேவிட்டிற்கு ஒரு சவால் விட்டார். அவரது சவால் இதுதான். தேர்ந்த பியானோ இசைக் கலைஞர் ஒருவர் பாஹின் ஒரு இசைத்துணுக்கு, டேவிட்டின் கணினி இசைத்துணுக்கு மற்றும் ஸ்டீவின் இசைத்துணுக்கு என்று மூன்று இசையை ஒன்றன் பின் ஒன்றாக இசைக்க வேண்டும். யார் எந்த இசையை உருவாக்கினார்கள் என்று அறிவிக்கப்படக் கூடாது. ஸ்டீவின் வாதம், தேர்ந்த இசை ரசிகர்கள், எந்திர இசையை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள் என்பது. டேவிட் ஒப்புக் கொண்டார். நூற்றுக்கும் மேற்பட்ட இசை ஆர்வலர்கள், மாணவர்கள், இசைப் பேராசிரியர்கள் இந்த இசை நிகழ்ச்சியைக் கேட்க ஆரகன் பல்கலைக்கழக அரங்கத்தில் கூடினர். ரசிகர்களின் முடிவு என்னதாய் இருந்திருக்கும்?”

க: “பாஹின் இசையை உடனே கண்டுபிடித்துவிட்டு, மற்ற இசைத் துண்டுகளில் சற்று குழப்பம் நேர்ந்திருக்கலாம், சரிதானே?”

”அப்படி நடந்தால் சுவாரசியம் அதிகம் இருக்காதே. டேவிட்டின் கணினி இசையைப் பாஹ் இயற்றிய ஒரிஜினல் இசை என்று பறை சாற்றினர் ரசிகர்கள். பாஹ் உருவாக்கிய ஒரிஜினல் இசையை ஸ்டீவ் உருவாக்கியது என்றார்கள். அதுகூட தேவலாம். ஸ்டீவின் இசையை டேவிட்டின் கணினி இசை என்று சொன்னார்களே, பார்க்கலாம். பாவம் ஸ்டீவ்!”

வி: ”இது நம்பும்படியாக இல்லை. அப்புறம் என்ன செய்தார் டேவிட்?”

“இவர் இன்றைய எந்திரக் கற்றல் தொழில்நுட்பம் கொண்டு, பல புதிய புதுமைகளைச் செய்து வருகிறார். உதாரணத்திற்கு, ஹைகூ ஓவியங்களை வரையக் கணினிக்குக் கற்றுக் கொடுத்து வெற்றியும் பெற்றுள்ளார். நம்மூரைப் போலதான் மேற்கத்தியரும். இதெல்லாம் சாத்தியம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் துறையில் கனேடியர்கள், கூகிள் என்று பலரும் முனைப்பாக வேலை செய்து வருகிறார்கள்”

கா: “என்னது, கூகிள் இதிலுமா? என்ன செய்யறாங்க கூகிள்?”

“ப்ராஜக்ட் மஜெண்டா (Project Majenta) என்பது கூகிளின் இசை சார்ந்த ஒரு செயற்கை நுண்ணறிவு ப்ராஜக்ட். இதன் இன்றைய குறிக்கோள், மனிதர்கள் இதுவரை உருவாக்காத ஒலிகளை மென்பொருள் மூலம் உருவாக்குவது. அப்படி சொன்ன கூகிள், பல இசை வல்லுனர்களையும் தங்களுடைய மென்பொருளைக் கொண்டு இசைத் துணுக்குகளையும் வாசிக்க சொல்கிறார்கள். ஒலிகளைக் கண்டுபிடிப்பது மட்டுமல்லாமல், இசையை உருவாக்க ஒரு பயிற்சியாகவும் இந்த மஜெண்டா பயன்படுத்தப்படுகிறது”

க: “இசை உருவாக்கம் என்றால்?”

“புதிய இசை வடிவங்களை இசை பயின்ற மென்பொருள் (அதாவது எந்திரக் கற்றலியல் மூலம் பயின்ற) உருவாக்குவது. இது இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் சாத்தியம். தொடர்ந்து மெருகேற்றக் கூகிளின் எண்ணம் – அதாவது, இந்த மென்பொருளே பல ஒலித் தோரணங்களை முதலில் உருவாக்கும் என்று எதிர்பார்ப்போம். அடுத்த கட்டமாக, குறிப்பிட்ட ஒரு மனித உணர்ச்சிக்கு இசையை உருவாக்க கற்றுக் கொடுக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்பட்ட பலவகை இசை ஓர் ஒருங்கிணைப்பாளருக்குக் கொடுக்கப்படும். அவர் எந்த ஒரு இசைத் தொகுப்பு சரி வருகிறது, எத்தனை நொடிகள்/நிமிடங்கள் இவ்வகை ஒலி தேவை, எந்தத் தாள இசை ஒலி இத்துடன் சேர்க்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அவ்வளவுதான் – பின்னணி இசை ரெடி. நான் ஒருங்கிணைப்பளர் என்று சொன்னேன். கம்போஸர் என்று சொல்லவில்லை”

வி: “இப்படி போனால், நம்ம ஊரு இசையமைப்பாளர்களின் கதி?”

“உடனே பிரச்சினை இல்லை. முதலில், இந்தத் தொழில்நுட்பம் வளர்ந்தவுடன், சிறு பட்ஜெட் படங்கள் தொழில்நுட்ப இசைக்குக் கட்சி மாறும். நாளடைவில், அது மத்திய பட்ஜெட் படங்களைப் பாதிக்கும். இதனால் தான் எனக்கு இந்த ரஹ்மான், ராஜா ஒப்பிடல் எவ்வளவு ஒரு பெரிய பொழுதுபோக்காக இருந்தாலும், அதில் அதிக அர்த்தமில்லை என்றே தோன்றுகிறது”

கா: “நீங்க சொல்றது கொஞ்சம் மிரட்டலாக இருக்கு. அடுத்த தலைமுறைக்கு நம்மைப்போல இந்த ஜாலியான பொழுதுபோக்கெல்லாம் இருக்காதா?”

“வேற ஏதாவது புதிய பொழுதுபோக்கு இல்லாமலா போகும்? இதையே நீங்கள் மிரட்டலாக சொல்றீங்க. இந்தச் செயற்கை நுண்ணறிவு இந்த இசைத்துறையில் நிறையத் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயமும் உண்டு. அதைப் பற்றி நான் இன்னும் சொல்லவே இல்லை. உங்களுக்கு இஷ்டமிருந்தால் சொல்லுங்கள். அடுத்த வாரம் சந்திப்போம்”

கா, வி, க : ”நிச்சயமாக அடுத்த வாரம் சந்திபோம் சார்” ***

சொல்வனம் – நவம்பர் 2019

நம்ம கையில என்ன இருக்கு?

விரக்தியான தலைப்புடன் தத்துவம் பேசப் போகிறேனா? சத்தியமாக இல்லை. எனக்கு கொஞ்சம் தொழில்நுட்பம் தெரியும். ஆனால், அதன் மீது வெறி கிடையாது. பேச, மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பவே திறன்பேசி என்று மிகவும் திருப்தி அடையும் ஜாதி நான்.

சில மாதங்களுக்கு முன் கோவையிலிருந்து சென்னைக்கு ஷதாப்தி விரைவு ரயில் பயணத்தில் இரண்டு இளைஞர்களுடன் நடந்த உரையாடலின் பதிவுதான் இந்தக் கட்டுரை.

ஒரு இளைஞரின் பெயர் உதய். மற்றவனின் பெயர் வருண். முதலில் உதய் (உ) பேச்சுக் கொடுத்தான்.

உ : “சார், நீங்க அதிகம் செல்பேசியை பயன்படுத்துவதில்லையா?”

“எனக்கு அது ஒரு பேச்சு, குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் கருவி. அவ்வளவுதான்”

உ : ”தப்பா நெனனச்சுக்காதீங்க சார். நீங்க எதிர்காலத்துல, இப்படி டெக்னாலஜியைப் பயன்படுத்தாமல் போய்விட்டோமேன்னு வருத்தப்படுவீங்க”

“நம்ம கையில் என்ன இருக்குப்பா?” (எஸ்.வி.சேகர் நாடகம் போல, ஆகா, கட்டுரைத் தலைப்பு வந்துருச்சு என்று இத்தோடு படிப்பதை நிறுத்தி விடாதீர்கள்)

உ: ”அப்படி ஏன் விரக்தியா சொல்றீங்க? எப்போதும் இல்லாத அளவுக்கு இன்னிக்கி எல்லாம் நம் கையில் இருக்கு சார். இந்த செல்பேசி இல்லைன்னா எனக்கு எதுவுமே ஓடாது”

“உன்னோட செல்பேசி காதல் புரியுது உதய். கொஞ்சம் விவரமாச் சொல்லேன் ஏன் உனக்கு அது இல்லாவிட்டால் கையும் காலும் ஓடலைன்னு”

உ: ”பல உதாரணங்கள் சொல்லலாம் சார். நான் பேச்சுக்கு ஒரு பயன்பாட்டைப் பற்றிச் சொல்றேன். வேஸ் (waze)  -ன்னு ஒரு பயன்பாடு இல்லாம நான் கார் ஓட்டறதே இல்லை சார். நேரத்திற்கு ஆபீஸ் மற்றும் மற்ற இடங்களுக்குப் போவதற்கு இது ஜி.பி.எஸ் உலகின் சூப்பர் ஸ்டார்”

”இன்னிக்கி பலவகையான ஜி.பி.எஸ். வசதிகள் எல்லா கார்லயும் வந்து விட்ட்தே. இதில் என்ன அப்படி விசேஷம்?”

உ : “நானும் முதல்ல அப்படித்தான் நெனச்சேன் சார். கொஞ்ச கொஞசமா இந்த App –ஐ பயன்படுத்தின பின் இதன் முழுத் திறனும் புரிய ஆரம்பிச்சுது”

“கொஞ்சம் அந்த முழுத் திறனை விரிவாகச் சொல்லேன்”

உ : ”எங்க போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்குன்னு உடனே இந்த App –க்கு தெரிஞ்சு, உங்களோட பயணத்தை மாற்றி அமைக்கிறது”

“கேட்க நல்லாத்தான் இருக்கு. அதுக்கு அப்படி ஒரு சக்தி எங்கிருந்து வருது?”

உ : “எல்லாம் என் போன்ற பயன்பாட்டாளர்கள் கிட்ட இருந்துதான்.முதல்ல நானும் இதை ஒரு மேஜிக் போலப் பார்த்தேன். என்னைப்போல, பல பயன்பாட்டாளர்கள் இந்த வேஸைப் பயன்படுத்துகிறார்கள். எங்காவது நெரிசல் ஏற்பட்டா உடனே இந்த App -ஐ அப்டேட் செய்துடுவோம். இந்த வேஸ் அந்த அப்டேட்டை வைத்துக் கொண்டு மற்ற பயன்பாட்டாளர்களின் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. அவர்களின் பாதையில் இந்த நெரிசலைத் தவிர்த்து விரைவில் அவர்களது இலக்கை அடைவதற்கு வழி காட்டுகிறது”

“ஆக, வேஸ் சொல்வதை நீங்கள் முழுவதும் நம்புகிறீர்கள். இல்லையா?”

உ : ”அதிலென்ன சந்தேகம்? இன்னிக்கி வேஸ் இல்லாம நான் பயணம் செய்யறதே இல்லை”

”ஆரம்பத்திலிருந்தே நீங்க வேஸை முழுசா நம்பினீங்களா?”

உ : ”ஆரம்பத்தில் அரை குறையாய் நம்பினேன். இப்போ, வேஸைப் பயன்படுத்தி, முழுசா நம்பறேன்”

“ஆரம்பத்தில், ஒரு சந்திப்பில் நீங்க இடது பக்கம் போகணும்னு நினைக்கிறீங்கனு வச்சிப்போம். வேஸ் உங்கள வலது பக்கம் போகச் சொல்லுதுன்னா என்ன செய்வீங்க?”

உ : “சந்தேகமாகத்தான் இருந்துது. ஆனால் வேஸ் சொல்படி போகாவிட்டாலும், அது, உங்களை நெரிசலிலிருந்து கப்பாற்ற மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும். கடைசியில ஒரு நாள், ’வேஸ் சொல்றபடி போய்தான் பார்ப்போமே’ –னு தோணிச்சு. அப்படி செஞ்சதுல, என்னுடைய ஏரியாவில இருக்கும் சில சக ஊழியர்களை விட முன்னமே ஆபீஸ் போய்ச்  சேர்ந்தேன். அப்புறம் என்ன, எல்லாம் வேஸ் புகழ்தான்”

இந்த உரையாடலில் வருண் (வ) சேர்ந்து கொண்டான்.

வ: “சார், உதய் வெறும் வேஸின் புகழ் மட்டும் பாடுகிறான். நான் இதை எல்லாம் தாண்டி, கூகிள் அஸிஸ்டென்ட் செய்யும் சாகசங்களைச் சொன்னால், அசந்து போயிடுவீங்க”

”அப்படி கூகிளில் என்ன விசேஷம்னு நீயே சொல்லு வருண்”

வ: “போக்குவரத்து நெரிசலுக்கேற்ப  வாகனங்களை சேர வேண்டிய இடத்திற்கு குறுகிய நேரத்திற்குள் அழைத்துச் செல்வது, மற்றும் ஜி.பி.எஸ். கூகிளின் ஒரு சின்ன அம்சம். முதலில் கூகிளை நம்ப நான், தயாராக இல்லை. அப்புறம், அது எவ்வளவு அபத்தம்னு புரிஞ்சுது”

“ஆக, கூகிளை நம்பாதது அபத்தம்னு சொல்றயா”

வ: ”பின்ன என்ன சார்? கூகிளிடம் நம்மைவிட ஏராளமான டேடா இருக்கு. அதை வச்சு அவங்க நமக்கு பயனான விஷயத்தைச் செய்யறாங்க”

”அப்படி என்ன செய்யறாங்க கூகிள்”

வ: “சில உதாரணங்கள் சொல்றேன் சார். என்னுடைய காருக்கு எண்ணெய் மாற்றுவது போன்ற விஷயத்தை கூகிள் சரியாக ஞாபகப் படுத்திவிடும்”

“டீலர் உங்க கார்ல ஸ்டிக்கர் ஒட்டறதில்லையா?”

வ: ”ஒட்டுவாங்க சார். ஆனால், காருக்குள் போனப்பறம் ஆயிரம் அவசரம். யாருக்கு ஸ்டிக்கர் பார்க்க நேரமிருக்கிறது? கூகிள் காலை எழுந்தவுடன், ’இன்று காருக்கு எண்ணெய் மாற்றிவிடு’ என்று ஞாபகப்படுத்துவதோடு நிற்பதில்லை. அதற்கு ஒரு வாரம் முன்பே டீலரிடம் முன்னேற்பாடு செய்து கொள்ளவும் நினைவூட்டுகிறது”

“வேற என்ன உதாரணம்?”

வ: “நான் வழக்கமா போற ஜிம்,  நகர மையத்தில் இருப்பதால், பார்க்கிங் கொஞ்சம் கஷ்டம். ஒரு முறை பார்க்கிங்கிற்காக சுற்றிச் சுற்றி வரும் பொழுது, கூகிள், முன்னம் நான் பார்க் பண்ணிய இடத்தை ஞாபகப்படுத்தியது. அப்பதான், ‘எதுக்கு இப்படி சுற்றிச் சுற்றி வரோம்னு’ ஆயிடிச்சு. இப்பெல்லாம் சுத்தறதே இல்லை. கூகிள் சொன்ன இடத்திற்குச் சென்றால், பார்க்கிங் எளிது”

“கூகிள் காரோட்டுதுனு கேள்விப் பட்டேன். பார்க் செய்யுதுனு இப்பத்தான் தெரியும்”

வ: ”கடந்த இரண்டு வருஷமா எவ்வளவு பிஸியாக இருந்தாலும், என்னோட மனைவியோட பிறந்த நாளன்று கொண்டாடுவதைத் தவறுவதில்லை”

“அதுக்கும் கூகிளுக்கும் என்ன சம்மந்தம்?”

வ: “கூகிள் என்னோட மனைவியின் பிறந்தநாள் வருவதற்கு ஒரு வாரம் முன்னிருந்தே, அவளுக்கு பரிசு வாங்க நினைவுபடுத்தும். அத்தோடு, பிறந்த நாளுக்கு முன் தினம் மீண்டும் நினைவுபடுத்தும். இதனால், நான் இந்த விஷயத்தில் இப்பல்லாம் தவறுவதே இல்லை”

”அப்ப, உங்க குடும்ப வாழ்க்கைக்கு கூகிள் ரொம்ப உதவுது இல்லையா?”

வ: ”குடும்ப வாழ்க்கை ஒரு பக்கம் இருக்கட்டும். இ.எம்.ஐ. கட்டுவது, ஜிம் மெம்பர்ஷிப் என்று எதையும் நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. எல்லாத்துக்கும், கூகிள் நினைவுபடுத்தும்”

“இது கேக்க நல்லாத்தான் இருக்கு. புத்திசாலி நாய்க்குட்டி போல”

வ: ”சமீபத்துல எங்க குடும்ப நண்பருடைய வீட்டில் கல்யாண ரிசப்ஷன். அதை ஞாபகப்படுத்துவது பழைய விஷயம் சார். ஆறு கடைகளில் கல்யாண ரிசப்ஷனுக்காக நான் கூகிளில் பரிசுகள் வாங்கப் பட்டியல் வைத்திருந்தேன். அந்த ஆறு கடைகளையும் நினைவுபடுத்தியதோடு நிற்காமல், எங்கு எத்தனை ரூபாய்க்கு பரிசு வாங்கினேன்னு ஒரு பட்டியல் காட்டியவுடன் நான் கூகிளிடம் சரணம். இப்ப நீங்க சொல்லுங்க. டெக்னாலஜியை மிஸ் பண்ணறீங்களா?”

”எனக்கு  இன்னும் இந்த வசதிகள் தேவையாகப் படவில்லை. என்னை விடுங்க. நான் சில கேள்விகள் கேட்கிறேன். சாய், நீயும், வருணும் ஆரம்பத்தில் உங்கள் செல்ல App -ஐ நம்பவில்லைதானே?”

இருவரும் (இ): “அதைத்தான் நாங்க ஏற்கனவே சொல்லிட்டோமே. ஆரம்பத்தில் நம்பத்தான் இல்லை”

“பிறகு நம்பித்தான் பார்ப்போமே. இதிலென்ன பெரிய ரிஸ்க் இருக்கப் போகிறது? அப்படித்தானே அடுத்த படிக்கு போனீங்க?”

இ: ”முதல்ல , கொஞ்சம் நம்பிப் பார்த்தோம். வேஸ் மற்றும் கூகிள் நம்பிக்கைக்கு தகுந்தவாறு பயனளித்தது. நம்பிக்கை அதிகமாக, பயனும் அதிகமாகியது. அதோடு, முழுசா நம்பாத போது, நம் மீது கோபித்துக் கொள்வதில்லை. பொறுமையாக நம் வழியில் சென்று முடிந்த அளவு உதவுகிறது”

“என்ன ஒரு மனித நேயம். புல்லரிக்கிறதப்பா! சரி, முழுசா நம்பினதுக்கப்புறம், எப்படி இந்த Apps உங்களது நன்மைக்காகவே இயங்குகிறதுன்னு தெரியும்”

வ:”இதென்ன வினோதமான கேள்வி சார். கூகிள் என்ன நம் கார் ஸ்பீக்கரில், ‘உன்னை மெச்சினேன் பயனாளியே’ –ன்னு சொல்லணும்னு எத்ரிபார்க்கறீங்களா? நமக்கே புரியும் , கூகிள் எப்படி நம்முடைய டேட்டாவை வைத்து நமக்கு உதவுகிறதுன்னு.”

“ஒரு உதாரணம் சொன்றேன் உதய். உங்களது நாள்தோறும் போகிற  பாதையில் ஏகமான நெரிசல்னு வைத்துக் கொள்வோம். வேஸ் வைத்திருக்கும் அனைவரையும் புதிய வழியில் அனுப்பினால், புதிய வழியில் நெரிசலாகிவிடும். சரி, பாதி வேஸ் பயன்பாட்டாளர்களை அங்கேயே இருக்கச் செய்து, மற்ற பாதி பயன்பாட்டாளர்களை புதிய வழியில் அனுப்பினால், இரு சாராரும் தங்களுடைய இலக்கை விரைவில் அடைய முடியும், இல்லையா? இதில் உங்களுக்குப் பழைய வழியா அல்லது புது வழியா என்று வேஸ் எப்படி முடிவு செய்கிறது? நீ மெச்சிய வேஸ் எப்படி உன்னை அழைத்துச் செல்லும்?”

உ: “புரியாம பேசறீங்க சார். ஒரு நாள் நெரிசலில், என்னைப் புது வழியில் போக வேஸ் சொல்லலாம். மற்றொரு நாள் அதே வழியில் போகச் சொல்லலாம். மாதக் கடைசியில், கூட்டிக் கழித்துப் பார்த்தால், வேஸ் உங்களுக்கு உதவியதைப் புரிஞ்சுக்கலாம்”

”வருண். உனக்கு இன்னொரு உதாரணம் சொல்றேன். நீ சொன்னாயே, ரிசப்ஷன் பரிசு வாங்க 6 கடைகளை கூகிள் பரிந்துரைத்தது என்று. இந்த ஆறு கடைகளில் எந்தக் கடைக்கு முதலிடம் தந்தது கூகிள்? நீ முதலில் வாங்கிய கடையா அல்லது வேறா?”

வ: ”நிச்சயமாக நான் முதலில் வாங்கிய கடை இல்லை. ஆனால், இப்பெல்லாம் டிவில கூட அதிகமாக விளம்பரம் வருதே, அந்தக் கடைதான் முதலில் வந்தது என்று நினைக்கிறேன்”

“இந்தக் கடை உங்கள் ஆறு கடைகளில் மிக அதிகமாக விளம்பர பட்ஜட் உள்ள கடைன்னு கவனிச்சயா?”

வ: “நான் அப்படியெல்லாம் யோசிக்கல. ஆனால், தேடிப் பார்த்த பிறகு, அந்த முதல் கடையில் வாங்கவில்லை. இரண்டாம் கடையில்தான் வாங்கினேன். இதிலென்ன தப்புன்னு நீங்க நினைக்கிறீங்க?”

“தப்புன்னு சொல்ல மாட்டேன். ஆனால், உங்களது வாங்குதலில் (purchasing) கூகிள் சற்று தனது சந்தைப்படுத்தல் செல்வாக்கைப் (marketing influence) பயன்படுத்துகிறது. கூகிளின் வரிசைப்படுத்தல் எப்படி வேலை செய்கிறது? கூகிளிடம் அதிகமாக விளம்பரம் செய்யும் கடைப் பட்டியலின் முதலிடம் வகிக்கும். சற்றுக் குறைவாக விளம்பரம் செய்யும் கடை அடுத்தபடி என்று இந்தப் பட்டியலை கூகிள் கணினிகள் மின்னல் வேகத்தில் தயார் செய்து உங்களிடம் காட்டுகிறது. அதில் நீங்கள் கிளிக் செய்தால், கூகிளுக்கு வருமானம்”

வ: “நான் தேடிப் பார்த்து, முதல் கடையில் வாங்கவில்லையே. இதில் நம்முடைய வாங்கும் சுதந்திரம் எங்கே குறைஞ்சது? நீங்க ஓவரா சிந்திக்கறீங்கன்னு தோணுது”

“இரண்டாவது மற்றும் முதலாவது கடையில் நீ கிளிக் செய்ததில் கூகிளுக்கு வருமானம். முதல் கடைக்கு இல்லை. வருணிற்கு பதில் பரத் முதல் கடையின் சுட்டியில் கிளிக் செய்து வாங்குகிறான் என்று வைத்துக் கொள்ளுவோம். கடைசியில், கூகிளும் பயனடைகிறது, அதன் மூலன் விளம்பரம் அளிக்கும் கடைகளும் பயனடைகிறது”

வ: “எனக்கு கூகிள் செய்யும் சேவை பிடித்திருக்கிறது. இல்லையேல், இந்தப் பெரிய நகரத்தில், எது எங்கே அவசரத்திற்குக் கிடைக்கிறது என்று தெரியவே வாய்ப்பில்லை. என் அளவில் இந்த டேடாவை வைத்துக் கொண்டு நமக்கு பயனான விஷயத்தை தானே கூகிள் செய்கிறது”

”உதய், உன்னுடைய வேஸ் எப்படி உன்னை தகுந்த நேரத்திற்கு உன் இலக்கிறகுக் கூட்டிச் செல்லுகிறது என்பதைப் பற்றி அதிகம் கவலையில்லை. மாதக் கடைசியில் உன் நன்மைக்காக அது இயங்குகிறது என்று சொன்னாய். வருண், கூகிளைப் பற்றிச் சொல்லுகையில், அதன் சிபாரிசுப் பட்டியல் எப்படித் தயாராகிறது என்பதைப் பற்றி நீ அதிகம் கவலைப் படவில்லை. உன்னுடைய நுகர்வில் (consumption) கூகிள் அதிகம் தனது விளம்பரச் செல்வாக்கைப் பயன்பத்துவதாக நீ நினக்கவில்லை”

இ: “இப்ப என்ன சொல்ல வர்ரீங்க நீங்க?”

”இந்த உரையாடலின் ஆரம்பத்தில், எல்லாம் நம் கையில் இருப்பதாக இருவரும் சொன்னீர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள், உங்க கையில் என்ன இருக்கு?”

சொல்வனம் – அக்டோபர் 2019

கில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந்திரன்

எங்கள் காலனி விளையாட்டில் இன்றைய ஐபிஎல் போலச் சிக்கலான விதிகள் எதுவும் கிடையாது. ஆனால், தவறாது விளையாடுவோம். கிரிக்கெட் விளையாட எங்களுக்கெல்லாம் இஷ்டம்தான். ஆனால், சில சமயம் பேட் கொண்டு வரும் ரமேஷ் கொஞ்சம் அலட்டிக் கொண்டால், கிரிக்கெட் ரத்து. அல்லது, எல்லா டென்னிஸ் பந்துகளும் எங்கெங்கோ அடித்துத் தொலைந்துவிடும். இன்னும் ஒரு 6 டென்னிஸ் பந்து வாங்க ஏராளமான நிதி சமரசங்கள் மற்றும் உலக வங்கி ரேஞ்சுக்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும். இப்படி ஏதாவது நேர்ந்தால், உடனே கைவசம் கில்லி விளையாட்டு எப்பொழுதும் இருந்தது. கில்லி விளையாட்டிற்கு ஏராளமான வீட்டளவில் எதிர்ப்பு. விளையாட்டு சுவாரசியத்தில், அடிபடும் ஒரு மிகவும் ரிஸ்கான விளையாட்டு, கில்லி. அம்மாக்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. அம்மாக்களின் பார்வைக்கு அப்பால் விளையாட வேண்டிய கட்டாயம் வேறு எங்களுக்கு!


1969 ஜுலை மாதம் ஒரு மாலை, கிரிக்கெட் முடிந்து, அம்மாவின் ஹோம்வொர்க் கூக்குரலைக் கேட்டு, இன்னும் ஒரு 10 நிமிடம் கடன் வாங்கி ஆரம்பித்தது அந்த சின்ன உரையாடல்:

“டேய் அப்போலோ 11 -ன்னு ஒரு ராக்கெட்டை அமெரிக்கா சந்திரனுக்கு 3 மனிதர்களோடு அனுப்பியிருக்காங்களாம்.”

உடனே சதீஷ், “சும்மா, பூ சுத்தாத. நிலாவுக்கு எப்படி போறதாக்கும்?”

“இந்து பேப்பர் படிச்சியா? எவ்வளவு பெரிய ராக்கெட் தெரியுமா? சும்மா, நாம விடற தீபாவளி ராக்கெட் மாதிரி இல்லை.”

சந்துரு, உடனே, ”சிவகாசி ராக்கெட்டுல மனுஷன கட்டி மேல அனுப்ப்டுவாங்களா? அஞ்சு நிமிஷத்துல எரிஞ்சுற மாட்டான்?” “இது வேற மாதிரி ராக்கெட். ராக்கெட்டுக்குள்ள மனுஷங்க இருக்கலாம். இப்ப நேரமாச்சு, நீங்கெல்லாம், ’இந்து’ படிச்சுட்டு வாங்க, நாளைக்கு பேசலாம்.”


‘இந்து’ பத்திரிகையைத் தவிர, 1969 -ல் மிக முக்கியமான ஒரு செய்தி அறிந்து கொள்ளும் முறை, அகில இந்திய ரேடியோவில், காலை 7:15 மணிக்கு, “செய்திகள் வாசிப்பது விஜயம்”  , என்று தொடங்கும் தமிழ் செய்தி நிகழ்ச்சி. முதல் ஐந்து நிமிடங்கள் அரசியல் செய்திகள் என்னைக் கவராது. பிறகு, அப்போலோ 11 ராக்கெட் நிலவரம் என்ன என்பதை சரியாக பாத்திரச் சத்தங்களை மீறிக் கேட்க, என்னுடைய காதை ரேடியோவுடன் ஒட்டிக் கொள்வதை ஒரு பழக்கமாகக் கொண்டிருந்தேன். என்னுடைய தந்தையுடன் அந்த மாதம் எப்படியாவது ‘இந்து’ -வை முதலில் படிக்கக் கெஞ்சி வெற்றி பெற்றிருந்தேன். அவரும், ”ராக்கெட் செய்தியெல்லாம், தனியாகப் போடக்கூடாதா?” என்று முணுமுணுத்து, என்னிடம் ஒரு 15 நிமிடங்கள் தருவார். மாலை நேரத்தில் எந்தப் போட்டியும் இல்லாமல், பாவமாக அதே பேப்பர் வீட்டில் தூங்குவது வழக்கம். விக்கிபீடியாவும், உல்ஃப்ராம் ஆல்ஃபாவும், கூகிளும் இல்லாத அந்தக் காலத்தில், எனது விஞ்ஞான ஆவலைத் தூண்டியது இந்த ஊடகங்கள்தான். முக்கியமான இன்னொரு விஷயம், என்னுடைய ஆங்கிலப் புலமை. ‘இந்து’ -வில் வரும் செய்தி எனக்குத் தோராயமாகத்தான் புரியும். அதை வைத்து மிகவும் உற்சாகமடைந்து, நண்பர்களையும் எப்படியாவது வியக்க வைக்க வேண்டும் என்பதே என்னுடைய அன்றையக் குறிக்கோள்.


அன்றைய கிரிக்கெட் முடிந்து மீண்டும் என்னுடைய விஞ்ஞானக் கிசுகிசு தொடர்ந்தது.

“நிலாவ அப்போலோ 11 நெருங்கிடுச்சாம். அதைச் சுத்தி வராங்களாம். இன்னிக்கு படிச்சேண்டா”

கிடைத்தது சாக்கு என்று ரமேஷ், ”மேல பாருங்கடா, நிலா பக்கத்துல அப்போலோ தெரியுது பார்”

“டேய், அது ஒரு விமானம்டா. நகருவது தெரியல. நிலா இங்கிருந்து 4 லட்சம் கிலோமீட்டராம். அந்த லூனார் மாட்யூல் இங்கிருந்து தெரியாது”

உடனே ரமேஷ், “அதெல்லாம் சரிதான். எப்படி ராக்கெட் அங்கதான் இருக்குன்னு நிச்சயமா இங்கிருந்தே சொல்றாங்க?”

“அதெல்லாம் எப்படின்னு தெரியாது. இந்துல சும்மா எழுத மாட்டாங்க. ரேடியோலயும் சொல்றாங்களே”

“இங்கிருந்து அங்க  போக எவ்வளவு நேரமாகும்?”

“இந்துல மூணு நாள்னு படிச்சதாக ஞாபகம்.”


அடுத்த நாள் ரமேஷ் டிமிக்கி கொடுத்துவிட்டான். அன்றைக்கு  கில்லி விளையாட்டு. என்னை விட சதீஷ் பிரமாதமாக ஆடினான். விளையாட்டிற்குப் பின் ராக்கெட் விவகாரம் மீண்டும் தொடர்ந்தது.

“நேத்திக்கு ஆம்ஸ்ட்ராங் –னு ஒரு அமெரிக்கர் தைரியமாக நிலாவில் நடந்தார்னு இந்துல படிச்சேன்”

சதீஷ், “அப்படி என்ன தைரியம் வேணும்? அங்க என்ன புலியா இருக்கு”?

“யாருக்குத் தெரியும் என்ன இருக்குமோ. யாருமே போகாத இடம்னா கொஞ்சம் பயமாக இருக்காதா என்ன? இன்னொரு விஷயம், அவரு ஜாலியா அங்க குதிச்சு குதிச்சு நடந்தாராம்”

சதீஷ், “நாம கூடதான் ஜாலியா இங்க குதிக்கிறோம். இதுக்கு எதுக்காக நிலாவுக்குப் போகணும்?”

“நிலாவில் பூமியை விட 6 மடங்கு ஈர்ப்பு சக்தி குறைவு. இன்னிக்கு நான் நிலாவில் விளையாடியிருந்தா என்னாயிருக்கும் தெரியுமா? 2 தெரு தள்ளி இருக்கும் உங்க வீட்டு ஜன்னல் கண்ணாடி உடஞ்சிறுக்கும்”

கோபம் பொங்க சதீஷ், “போடா, நான் இன்னிக்கு அடிச்ச ஷாட், 5 மைல் தாண்டி பஜாரில் உள்ள கடையின் கண்ணாடி உடஞ்சிறுக்கும்”

குறுக்கே வந்த சந்துரு, “விடுங்கடா. ஆம்ஸ்ட்ராங் எப்படிடா பூமிக்கு திரும்பி வருவாரு?”

“அந்த லூனார் மாட்யூல் மேலே கிளம்பி, நிலாவைச் சுற்றி வரும் ராக்கெட்டோட சேர்ந்துரும். அப்புறமா, அங்கிருந்து கிளம்பி, பூமிக்கு வந்துருவாங்க.”


அடுத்த இரண்டு நாட்கள் அதிக ராக்கெட் பேச்சு இல்லை. மூன்றாம் நாள் கிரிக்கெட்டிற்குப் பின் மீண்டும் ராக்கெட் விவகாரம் தொடர்ந்தது.

”ராக்கெட் பூமிக்குள் வரும்பொழுது பயங்கரமாக எரியுமாம்”

சந்துரு, “இதென்ன பெரிய விஷயம்? ராக்கெட் எரிஞ்சுதான மேலே போச்சு?”

“அப்படி இல்லை. பாக்கி இருக்கற ராக்கெட் – அத என்னமோ சாட்டிலைட் –னு சொல்றாங்க. அதுவே எரியுமாம்”

சந்துரு, “உள்ள இருக்கிற அமெரிக்கர்கள் வெந்துற மாட்டாங்க?”

“அதுக்கு பாதுகாப்பாக சில அடுக்குகள் ஏதோ இருக்காம். அப்படியும் ரொம்ப சுடுமாம்”

சந்துரு, “கடைசில, தொப்புனு தரைல ராக்கெட் விழுந்துருமா?” “அப்படி இல்ல. கடல்ல வந்து விழுமாம். தவறி ரஷ்ய கடற்படை கிட்ட சிக்கற வாய்ப்பு இருக்காம். அமெரிக்க கடற்படைஅவங்கள  சுத்தி இருக்குற எல்லா கடலிலும் தயாராக காத்துகிட்டு இருக்காங்களாம்.”

இந்தச் சிறுவர்களின் பேச்சு வேடிக்கையாக இருக்கலாம். இந்தக் கட்டுரையை நீங்கள் படிப்பதற்கே முக்கிய காரணம் இந்த விண்வெளிப் பயணம் உருவாக்கிய தொழில்நுட்பப் புரட்சியின் விதை. ரமேஷ், சதீஷ் மற்றும் சந்துரு, எங்கோ இன்று உலகில் ஒரு திறன்பேசியுடன் தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள், ஏன் பேரன் பேத்திகளுடன் வாட்ஸாப்பலாம். இத்தனை கேள்வி கேட்ட சந்துரு, அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பெளதிகம் இன்னும் சொல்லிக் கொடுக்கிறான். சதீஷ், தன்னுடைய வியாபாரத்தை மகனிடம் விட்டு விட்டதாகக் கேள்வி. ரமேஷ் இந்தியாவின் தலை சிறந்த வண்ணப்படக் கலைஞன். நான் கணினி மென்பொருள் துறையில் பணியாற்றிக் கொண்டு இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிறேன். எங்களைப் போன்ற சிறுவர்களை விஞ்ஞானம் பக்கம் ஈர்த்த இந்த முதல் மனித நிலாப் பயணத்திற்கு 50 வயதாகிறது.

சொல்வனம் – ஆகஸ்ட் 2019

டேடா மதம்!

என்னுடைய வயது அறுபதைத் தாண்டி விட்டது. என்னுடைய வழக்கமான மாலைப் பொழுது போக்கு, பக்கத்தில் உள்ள பூங்காவிற்குச் செல்லுவது. அங்கு விளையாடும் குழந்தைகளின் சத்தம், பறவைகளின் ஒலி, எதுவும் என்னை அதிகம் பாதிப்பதில்லை. அத்துடன், அங்கு வரும் பெரும்பாலானவர்களுடன் பேசுவதையும் தவிர்ப்பவன்.

சில மாலைப் பொழுதுகளில், அங்கு ஒரு இளைஞன் தன்னுடைய திறன்பேசியில் (smart phone) ஏதாவது செய்து கொண்டிருப்பான். இந்த பூங்காவில் நான் நிகழ்த்திய உரையாடல் என்றால் இந்த இளைஞனுடந்தான். இங்கு என் நினைவில் இருக்கும் சில சுவாரசியமான வாதங்களை முன் வைக்கிறேன்.

“வணக்கம் சார். என் பேர் காளிதாஸ். எல்லோரும் காளின்னு கூப்பிடுவாங்க. உங்களை இந்தப் பூங்காவில் அடிக்கடிப் பார்த்திருக்கிறேன். இங்கு என்ன செய்றீங்க?”

“இங்கு ஏதாவது செய்வதற்குத் தான் வரணுமா?”

கா: ”அப்படி இல்லை சார். இங்கு நான் உங்களைப் பார்க்கும் பொழுது, நீங்கள் வெறுமனே உடகார்ந்திருக்கீங்க….”

“யார் சொன்னாங்க நான் வெறுமனே இருக்கேன்னு? என்னுடைய வேலையை நான் செய்துகிட்டுதான் இருக்கேன்.”

கா: “அப்படி என்ன வேலைதான் செய்யறீங்க இங்க?”

“என்னுடைய வேலை பல தெய்வங்களைத் துதிப்பது. என்னுடைய சுவாசத்தைக் கட்டுப்படுத்துவது.”

கா: “இதை ஒரு வேலையாக நீங்க நெனக்கிறீங்களா?”

“நான் எங்க இதை வேலைன்னு சொன்னேன்? நீதான், நான் வெறுமனே இருக்கேன்னு சொன்னாய்.”

கா: “தப்பா எடுக்காதீங்க சார். கொஞ்சம் விவரமா இங்க நீங்க செய்யறதைச் சொல்ல முடியுமா?”

“அதை உனக்குப் புரிய வைப்பது கஷ்டம்.”

கா: “பரவாயில்லை, முயற்சி பண்ணுங்க, நான் புரிஞ்சுக்க முயற்சிக்கிறேன்.”


கா: “என்னோட வேலையை முடிச்சுட்டேன். இப்ப சொல்லுங்க சார்.”

“பல இஷ்ட தெய்வங்கள் எனக்கு உண்டு. ஒவ்வொரு தெய்வத்தையும் துதிப்பதற்குச் சில பாடல்கள் உள்ளன. அதை என் மனத்தளவில் பாடி விடுவேன். இதை நான் ஒரு முப்பது ஆண்டுகளாகச் செய்து வந்துள்ளேன்.”

கா: “ஒரு மாலைப் பொழுதில் எத்தனை தெய்வங்களைத் துதிப்பீர்கள்?”

“அப்படி எல்லாம் கணக்கு ஒன்னும் கிடையாது. முடிந்த அளவு நான்கைந்து தெய்வங்களை ஒரு நாளில் துதித்து விடுவேன்.”

கா: இந்த நாளில் இந்த தெய்வம்னு ஏதாவது கணக்கு உண்டா?

“அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது. ஒரு வாரத்தில், பெரும்பாலும் எனக்குத் தெரிந்த பாடல்கள் எல்லாத்தையும் சொல்லி முடிச்சுடறது வழக்கம்.”

கா: “சார், தப்பா நெனச்சுக்காதீங்க சார். எல்லா தெய்வமும் ஒன்னுதான்னு சொல்றாங்க. அப்படியிருக்க, நீங்க மட்டும் ஏன் பல தெயவங்களையும் வழிபடறீங்க?”

“நான் இந்த வாக்கு வாதத்திற்கு வரலை. எனக்குப் பிடிச்சதை நான் செய்யறேன். யாருக்கும் கெட்டது செய்யலையே.”

கா: “எப்படி சொல்லறதுன்னு தெரியல. இந்த 21 –ஆம் நூற்றாண்டில் இப்படியெல்லாம் செய்யறது கொஞ்சம் பிற்போக்குத்தனமாகத் தெரியவில்லை?”

“அடுத்த முறை சந்திக்கும் பொழுது விவரமாக இதைப் பற்றி பேசலாம்.”


“உன்னோட வேலையை முடிச்சிட்டயா?”

கா: “முடிச்சிட்டேன் சார்.”

“அப்படி என்ன வேலை செஞ்ச?”

கா: “அது உங்களுக்கு புரியாது.”

“பரவாயில்லை. விவரி, நான் புரிஞ்சுக்க முயற்சிக்கிறேன்.”

கா: “என் பொண்ணு இங்க விளையாடறத திறன்பேசில படம் பிடிச்சிடுவேன்.”

“பார்த்திருக்கேன்.”

கா: “அப்படியே, அந்த படத்தை ஃபேஸ்புக், இன்ஸ்டாக்ராம் –ல மேலேத்திடுவேன்.”

“அப்புறம்?”

கா: “சார், உலகத்துல எத்தனை விஷயம் நடக்கறது. டிவிட்டரில என்னை ஒரு 10,000 பேர் பின்பற்றறாங்க. பல விஷயங்களைப் பற்றிக் கருத்துத் தெரிவிப்பேன்.”

“டிவிட்டர், உங்களுக்குக் கருத்துத் தெரிவிக்க பணம் ஏதாவது தராங்களா? இல்லை, அவங்க உங்களை கருத்து தெரிவிக்காவிட்டால், ஏதாவது மோசமான விளைவுன்னு
பயமுறுத்தறாங்களா?”

கா: “என்ன சார் புரியாம பேசறீங்க. உலக நிகழ்வுகளில் ஒவ்வொரு மனிதனும் பங்கேற்க வேண்டும் சார். உங்க காலம் போல இல்லை. ஒவ்வொரு மனிதனிடம் ஒரு திறன்பேசி மூலம் ஒரு ஊடகப் போரையே நிகழ்த்த முடியும்.”

“ஆக, எந்த வித நிர்பந்தமும் இல்லாம, நீங்களே கருத்து தெரிவிக்கறீங்க. Interesting. அப்புறம் வேற என்ன செய்வீங்க?”

கா: ”புதிய சினிமா பற்றி டெக்னிகலாக அலசுவோம். அதையும் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸப்பில் விவரமாகக் கருத்து தெரிவிப்போம். முக்கியமாக, யுடியூப்பில் புதிதாக டிரெண்டு ஆகின்ற விடியோக்களை அவசியம் பார்த்து விடுவேன்.”

“புரியாமத்தான் கேக்கறேன். இதை எல்லாம் செய்ய வேண்டும்னு யார் உங்களுக்கு சொல்லிக் கொடுத்தாங்க?”

கா: “எதுக்கு சார், யாராவது சொல்லித் தரணும்? எப்படி வாழ்க்கையை அனுபவிக்கணும்னு நாமே தான் முடிவு செய்யணும். இந்தப் புதிய திறன்பேசி தொழில்நுட்பம் வந்ததிலிருந்து, இந்த முறைகளை என்னுடைய சந்ததியினர் தானே கத்துக்கிட்டோம்.”

“அப்புறம், வாட்ஸப்புனு ஏதோ சொன்னீங்களே. அதுல என்ன செய்வீங்க?”

கா: “எனக்கு ஒரு 30 வாட்ஸப் குழுக்களில் பங்குண்டு. என்னோட பள்ளி, கல்லூரில, படிச்சவங்க, பல ஆபீஸ்ல வேல செஞ்சவங்க, சில அரசியல் மற்றும் சினிமா ஆர்வமுடைய குழுக்கள்னு ஒரு நாளைக்கு குறைஞ்சது ஒரு 100 செய்திகள் வரும். சில சுவையான செய்திகளை மற்ற குழுக்களுடன் ஷேர் செய்வது, சில கருத்துக்களுக்கு என்னுடைய ஆமோதல், எதிர்ப்பு, விளக்கம் என்று அது ஒரு பெரிய உலகம். உங்களுக்கு புரியாது சார்.”

“கொஞ்சம் புரியுது, உனக்கு எவ்வளவு வேலைகள் இருக்குன்னு. நாளைக்கு மேலும் பேசலாம்.”


கா: “இஷ்ட தெயவங்களை வணங்கி முடிச்சாச்சா, சார்?”

“இன்றைக்கு முடிச்சாச்சு. கொஞ்சம் உன்னுடைய பூங்கா திறன்பேசி வேலைகளைப் பற்றி நினைத்தேன். சில சந்தேகங்கள் கேக்கலாமா?”

கா: “தாராளமா!”

“நீங்க டிவிட்டர், வாட்ஸப் மற்றும் ஃபேஸ்புக்கில் பல உலக நடப்புக்கும் கருத்து தெரிவிக்கிறதா சொன்னீங்க. உலக நடப்புகள் நடந்த வண்ணம் இருக்கு. இன்னிக்கி ஒரு பெரிய விபத்து, நாளைக்கு ஒரு வங்கி ஸ்ட்ரைக் அப்படி ஏதாவது நடந்துகிட்டே இருக்கு, இல்லையா? உங்களைப் போல பல கோடி பேர்கள் கருத்து தெரிவிக்கிறீங்க. அதுக்கு பிறகு என்ன நடக்கிறது?”

கா: “சார், அமெரிக்க தேர்தலையே மாற்றி விடும் சக்தி இந்த சமூக வலையமைப்பிற்கு இருக்கு. என் போல பல மக்களின் கருத்து, அரசியல் தலைமையை வேறு விதமாகச் சிந்திக்க வைக்கிறது.”

“அதெல்லாம் சரி. இதை வேற விதமாக சொன்னால், உங்கள் கருத்தின் வீச்சு பற்றி உங்களுக்கே தெரியாது. நம்முடைய கருத்தால், ஏதாவது நல்லது நடக்காதா என்ற எண்ணத்தில் நீங்கள் பதிவு செய்கிறீர்கள். அப்படித்தானே?”

கா: “சார், இந்த டிஜிட்டல் உலகில், உங்கள் பங்கைச் செய்தல் ஒவ்வொரு மனிதனுடைய கடமை. ஒரு பிரச்னையில், மனிதர்களின் கருத்துக்கள் எல்லாம் ஒன்றிணைந்து சரியான முடிவை உலக நாடுகள் எடுக்கும்னு நம்பணும் சார்.”

“யார் உங்களுடைய கருத்துக்களை ஒன்றிணைக்கிறாங்க?புரியும்படி சொல்லுங்களேன்.”

கா: “அதெல்லாம் உங்களுக்குப் புரியாது. எந்த ஒரு மனிதரும் இதைச் செய்வதில்லை. ஏன், எந்த ஒரு அமைப்பும் கூட இதைச் செய்வதில்லை. பல அமைப்புகள் இந்தக் கருத்துக்களை ஒன்றிணைத்து வெளியிடுகின்றன. அதன்படி சில பிரச்னைகளுக்கு முடிவெடுக்கப்படுகிறது.”

“ஆக, நம்ம அரசாங்கம் இந்த அமைப்புகளின் அறிக்கைக்காக காத்திருந்து முடிவெடுக்கிறதா? அப்புறம் அதிகாரிகள், அமைச்சர்கள், துறை வல்லுனர்கள் எதுக்கு?”

கா: “நம்ம நாட்டுல இன்னும் அந்த அளவுக்கு முன்னேறல. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பல அறிக்கைகளை டிவிட்டர் மூலம் வெளியிடுகிறார்.”

“சரியா போச்சு. தப்பு இல்லாம ஆங்கிலம் கூட டைப் செய்யத் தெரியாத ஒரு அதிபர், உங்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாகி விட்டாரோ?”

கா: “அத விடுங்க சார். தப்பான உதாரணம். இன்னிக்கி அமெரிக்க செனட், மார்க் மற்றும் சுந்தரை கேள்விக் கணைகளால் துளைக்கக் காரணம் என்ன? சமூக வலைத்தளங்களின் பலத்தைக் கண்டு அரசாங்கங்கள் பயப்படுகின்றன.”

“சரியா நீங்க புரிஞ்சுக்கல தம்பி. சமூக வலைத்தளங்கள் டிவி மற்றும் செய்தித்தாள்கள் போல ஒரு கட்டுப்பாட்டோடு நடந்து கொள்வதில்லை என்பதற்காகவே செனட் இவர்களைக் கேள்வி கேட்டது. சரி, யார் இந்த மார்க்?”

கா: “என்ன சார் ஓட்டரீங்க. மார்க் ஃபேஸ்புக்கின் தலைவர். சுந்தர் கூகிளின் தலைவர்.”

“இவர்களை உனக்குத் தெரியுமா?”

கா: “இதென்ன கேள்வி சார்? அவர்களை எனக்குத் தெரியும். அவ்வளவுதான். என் வேலை இந்த டிஜிட்டல் உலகில் பங்கேற்பது.”

“சரி நாளை மேலும் பேசுவோம்.”


“சரி, காளி, இன்னொரு கேள்வி கேட்கலாமா?”

கா: தாராளமா!

“எப்படி, வாட்ஸப், ஃபேஸ்புக், யுடியூப், இன்ஸ்டாக்ராம் போன்ற பல வகை சமூக வலைத்தளங்களை ஒரே சமயத்தில் சமாளிக்கிறீர்கள்?”

கா: “ஒரே சமயத்தில் எல்லாத்தையும் செய்யறது முடியாத காரியம் சார். ஒரு வாரத்தில், ஏறக்குறைய எல்லா தளங்களிலும் ஓரளவிற்கு என்னுடைய பங்களிப்பை முடித்து விடுவேன்.”

“புரியுது. ஆனால் இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு முறை இருக்கல்லவா?”

கா: “உண்மைதான். ஆனால், இதெல்லாம் எளிதில் புரிஞ்சுக்கலாம். கடைசியில் எல்லாம் ஒன்னுதான். நம் பங்கு, நம் கருத்துக்களை எழுத்துக்களாகவோ, விடியோவாகவோ, அல்லது படமாகவோ தெரிவிப்பது. சில சமயம் ஒலியாகக் கூட சொல்லிவிடுவோம்.”

“இப்ப புரியுது உங்களது மதத்தின் அடிப்படை.”

கா: “என்ன சார், நான் டெக்னாலஜி பற்றி சொல்றேன், நீங்க மதம்கிறீங்க. சரியில்லை சார்!”

“நீ சொன்னபடி உன்னுடைய எழுத்து, படம், ஒலி, விடியோ எல்லாம் அடிப்படையில் என்ன?”

கா: “அது டிஜிட்டல் உலகில் டேடா அல்லது தமிழில் தரவுன்னு சொல்ல்லாம்.”

“இப்ப சொன்னாயே, அந்த தரவுக்கு பல வடிவங்கள் உண்டு, இல்லையா?”

கா: “அது சரி, அதுக்கு என்ன?”

“நீ சொன்னபடி, வாரத்திற்கு எல்லா வடிவங்களிலும் இந்த பல சமூக வலைத் தளங்களில் உன் பங்கீட்டை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நீ செய்கிறாய், இல்லையா?”

கா: “இதென்ன சார், நான் சொன்னதையே திருப்பி சொல்றீங்க?”

“சரியா கவனி – நான் ‘எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்’ என்பதை சேர்த்துச் சொன்னேன். ஒவ்வொரு சமூக வலத்தளத்திற்கும் ஒரு அனுகுமுறையுடன் உன் கடமையைச் செய்கிறாய் இல்லையா? இதை யாரும் நீ செய்ய வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தவில்லை, சரியா?”

கா: “சார், என்னதான் சொல்ல வரீங்க?”

“பெரிதாக உனக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லை. நான் இஷ்ட தெய்வங்களை பல விதங்களிலும் துதிக்கிறேன். நீயும் பல முறைகளில் இந்த சமூக வலைதளங்களில் உன் பங்கீட்டைச் செய்கிறாய். நீயும் சரி, நானும் சரி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இதைச் செய்கிறோம். சரியா?”

கா: “சார், என்னை மதவாதியாக்கி விடாதீங்க சார்…”

“நீ டிஜிட்டல் மதத்தைச் சேர்ந்தவன். நான் சற்று பழமை முறைகளைப் பின்பற்றுகிறேன். மற்றபடி, எனக்கு ஒரு பேட்டரி கூடத் தேவையில்லை. ஒரு விதத்தில் உன் மத முறைகளை விட, என்னுடைய முறைகள் மேலானது. மற்றவருக்கு எந்த தீங்கும் இதனால் நேராது.”

கா: “That’s a stretch, சார்.”

“சமூகப் பொறுப்பு எல்லாருக்கும் உண்டு. அதை மறந்துடாத. வெறுமனே இருந்தாலும் சரி, டிஜிட்டல் மதவாதியாக இருந்தாலும் சரி.”

கா: “குட் நைட் சார்.”

செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – புதியதொரு எதிர்காலம் – பகுதி 18

எந்திரங்களைக் கண்டு அஞ்சுவது மனிதர்களுக்கு அழகல்ல. நாம் உருவாக்கும் எந்திரங்கள் நமக்கே தீங்கு விளைவிக்காமல் இருக்க நாம் தான் பொறுப்பு. எந்திரங்களோடு இன்றும் வாழ்கிறோம். என்ன, எதிர்காலத்தில், இன்னும் சற்று கூடுதலாக நம் வாழ்க்கையில் பங்களிப்போம். அவ்வளவுதான்.

இந்தப் பகுதியில், மூன்று புதிய செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளை முன்வைக்கிறேன். இவை கல்வித்துறை,செய்தித் துறை மற்றும் இந்திய இசைத்துறையாகும்.

குறிப்பாக, என் பார்வையில் மனிதர்களால் அதிகம் புரிந்து கொள்ள முடியாத ஒரு இசை மேதை இளையராஜா. இவருடைய முக்கிய பங்களிப்புகளில் ஒன்று, இந்திய பண்ணிசையையும் , மேற்கத்திய பண்ணிசையையும் திறமையாக ஒன்றிணைப்பது. இதைச் சிலர் ஓரளவிற்கு செய்தாலும், இவரின் வல்லமை எவரிடமும் இல்லை. நல்ல வேளையாக ராஜா தன்னுடைய இசையை முழுவதும் மேற்கத்திய குறிப்புகளாய் எழுதுகிறார். ஒரு எந்திரத்தை, ராக வாரியாக ராஜாவின் harmony முறைகளைக் கற்பிக்க நாம் முயற்சிக்க வேண்டும். இதை நான் Deep Raja என்ற ஒரு ப்ராஜக்டாக செய்தால், இந்திய பண்ணிசை பரவ ஒரு பெரிய வாய்ப்பாக எதிர்காலத்தில் அமையும். அதாவது ஒரு மேற்கத்திய இசைக் கலைஞருக்கு ஒரு முக்கிய நுழைவாயிலாக Deep Raja உருவாக வேண்டும்.

செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – எதிர்கால வேலைகள் – பகுதி 17

இதுவரை நாம் பார்த்த காணொளிகளில், சற்று negative – வான காணொளி இது. இந்தக் காணொளியில், இரண்டு விஷயங்கள் நாம் பார்க்க உள்ளோம்.

முதலாவது, இன்னும் 15 -20 ஆண்டுகளில் எந்தெந்த வேலைகள் மறைய வாய்ப்புண்டு என்ற கசப்பான ஒரு ஆய்வுக் கட்டுரையின் அடிப்படையில் ஒரு அலசல். 15 -20 ஆண்டுகள் என்பது எவராலும் சரியாக கணிக்க முடியாத ஒரு கால அளவு. சற்று விவரமறிந்த கிளிஜோசியம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், இன்றைய இளைஞர்கள் தங்களை தயார் செய்து கொள்ள மிகவும் முக்கியம். எதிர்காலத்தில், ‘இதோ அபத்தமான ஒரு 2019 விடியோ’ என்று இதை எவராவது கிண்டல் செய்தால், அவசியம் மகிழ்ச்சி அடைபவன் நான். இந்த காணொளியில் உள்ள அத்தனை விஷயங்களும் பொய்யானால், மிகவும் சந்தோஷம்.

இதைப் பற்றி மேலும் விரிவாகப் படிக்க:

https://www.oxfordmartin.ox.ac.uk/downloads/academic/The_Future_of_Employment.pdf

ஏன் நாம் AI –ஐக் கண்டு அஞ்சுகிறோம்? நாம், ATMs, smartphones, Expedia, Microsoft Excel, Google search கண்டு பயப்படவில்லையே. இவை யாவும் பல வேலைகளை நீக்கிய technology தானே?