டிஜிட்டல் இசைப் புரட்சியின் தாக்கம்

கணினியின் தாக்கம் இல்லாத துறைகளே இன்று இல்லை என்று சொல்லலாம். உதாரணமாகக் கணக்கிடல் (Accounting) துறையில் மிகப் பரவலாக மென்பொருள் தொகுப்புகள் (software packages) உபயோகிக்கப்படுகின்றன. இன்று, ஒரு கணக்கிடல் நிபுணரின் மென்பொருள் தொகுப்புப் பயன்பாட்டுத் தேர்ச்சியைப் பொறுத்தே அவரது தகுதி நிர்ணயிக்கப்படுகிறது. கணக்கிடல் துறையில் அவரது பல்லாண்டு உழைப்பு மற்றும் துறை அறிவு, பயிற்சி எல்லாம் அதற்குப் பின்னர்தான். மென்பொருள் தொகுப்புகள் கணக்கிடல் துறையை மிகவும் எளிதாக்கியுள்ளன. ஓரளவு கணக்கிடல் தெரிந்தால் போதுமானது. கடும் பயிற்சிக்கு தேவை இல்லாமல் போய்விட்டது. இதனால் அடிப்படைக் கணக்கிடல் திறன்களை ஒரு தலைமுறையே இழ்ந்துவிட்டதோ என்று அஞ்சுபவர்களும் உண்டு. அத்தோடு மேலை நாட்டுக் கணக்கிடல் முறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டிய அனாவசிய வேலையையும் நினைத்து சிலர் சிணுங்குவதுண்டு. எந்த ஒரு தொழில் நுட்பத்தாலும் நல்லவையும் கெட்டவையும் வருவது இயல்பு. இந்த கணக்கிடல் மென்பொருள் புரட்சியால் இந்தியா போன்ற நாடுகளுக்கு பல பில்லியன் டாலர்கள் வருமானம் வருவது இந்த தொழில் நுட்ப வளர்ச்சியின் நல்முகம். கணக்கிடல் துறையில் தொழில் அறிவு பரவலாகாமல் குறைந்து வருவது அதன் தீயமுகம்.

இசைத்துறையின் நிலைமையும் இன்று அப்படியாகிவிட்டது.  இன்று பல இசையமைப்பாளர்கள் தங்கள் வீடுகளிலேயே ஒலிப்பதிவுக் கூடங்களை வைத்திருக்கிறார்கள். இன்று பல பாடகர்களுக்கும் பாட வாய்ப்புள்ளது. சினிமா மற்றும் தொலைக்காட்சித் துறைகளில் பல இசையமைப்பாளர்கள் வந்துவிட்டார்கள். பாடகர்களும் யேசுதாஸ் அல்லது எஸ்பிபி போன்று திறமைசாலிகளாய் இருக்கத் தேவையில்லை. இன்றைய திரைப்பாடல்கள் மேற்கத்திய இசைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதால், கடுமையான கர்நாடக இசைப் பயிற்சியும் தேவையில்லை. பாடகர்கள் பஞ்ச் செய்து பாடலின் பகுதிகளைப் பதிவு செய்து விடுகிறார்கள். அந்தப் பகுதிகளை அழகான பாடலாக சேர்த்து விடுகிறார்கள்.

இன்றைய திரையிசையில் கர்நாடக மற்றும் மேற்கத்திய செவ்வியல் இசையின் தாக்கம் குறைந்து ராக், பாப், ஆர் & பி, ராப், லத்தினோ, ஜாஸ் இசைவகைகளின் சாயல் அதிகம் தெரிகிறது. அப்படி என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம். அதற்கு முன் சற்று பின்னோக்கி எங்கிருந்து வந்தோம் என்று பார்ப்போம். டிஜிட்டல் இசை வடிவங்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் வரும் நன்மை தீமைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

நமது திரையிசை என்றுமே குழு இசைக்கு (orchestral music) முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது. உதாரணமாக, 1960-களில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைப்பில் வெளி வந்த ‘புதிய பறவை’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘எங்கே நிம்மதி’ என்ற பாடல் 120 இசைக் கலைஞர்களுடன் பதிவு செய்யப்பட்டது. எம்.எஸ்.வி அவர்கள் பிறகு 1970 களில் இந்த முறையை இன்னும் விரிதாக்கினார். அவரது படைப்பான, ‘சிவந்த மண்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பட்டத்து ராணி’ என்ற பாடல் பல நூறு இசைக் கலைஞர்கள் ஒன்றாக சேர்ந்து இசைத்து உருவானது.

அதற்கு பின் வந்த இளையராஜா மேற்கத்திய செவ்வியல் இசை நிபுணர். அவர் 1980 களில் இசையமைத்த ‘மனிதா மனிதா’ என்ற பாடல் ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ என்ற திரைப்படத்தில இடம்பெற்றது. பல்லியல் இசைமுறையை (symphonic orchestration) ராஜா உபயோகித்தார். இந்த பாடலுக்கு பல நுறு இசைக் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து இசைத்தார்கள்.

அதைத் தொடர்ந்து 1990-களில் ராஜா குழு இசையின் எல்லையையே தொட முயற்சித்தார். அவரது உன்னதப் படைப்பான, ‘தளபதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சுந்தரி கண்ணால்’ என்ற பாடலைப் பதிவு செய்ய பம்பாய் நகரில் உள்ள பல வயலின், செல்லோ, டிரம்பெட், டிராம்போன் இசைக் கலைஞர்கள் வாசித்தது போதாமல், இந்திய கடற்படையின் டிரம்பெட், டிராம்போன் கலைஞர்களையும் சேர்த்துக் கொண்டார். அப்போது ஸ்டுடியோ நிரம்பி வழிந்தது இன்றும் மும்பையில் இசை வட்டாரங்களில் பேசப்படுகிறது

அதெப்படி, நாம் அரங்கு நிரம்பிய ராட்சச அளவுக் குழு இசையிலிருந்து இசையமைப்பாளரின் வீட்டுக்குள் வந்துவிட்டோம்? கடந்த 18 வருடங்களில் அப்படி என்ன புரட்சி நடந்துவிட்டது?

சமீபத்தில பாடகர் மனோ நடத்தும் ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் பாண்டியராஜன், “இப்பொழுது பாட்டு கேட்டால் CD வர வேண்டும் என்கிறார்கள். முன்பெல்லாம்  மூடு வந்தாலே பாட்டு வந்துவிடும்” என்றார். அது சரி, இசையமைப்பாளர்கள் அவர்களது படைப்புகளை CD ஆக வெளியிடுவதை நாம் அறிவோம். அதென்ன CD வந்தால்தான் பாட்டு? இது டிஜிட்டல் இசைப் புரட்சியின் வெளிப்பாடு. நடந்த, நடந்து கொண்டிருக்கும் டிஜிட்டல் இசைப் புரட்சியை முன்று பகுதிகளாக அலசுவோம்.

1) ஸிந்தசைசர் – பல இசைக்கருவிகளை விழுங்கும் ராட்சசக் கருவி. இதன் தாக்கம் 30 வருடங்களாக உள்ளது. சமீப காலமாக இதன் திறன் மிகவும் பெருகிவிட்டது. 2 ) ரிதம் பேட் – பல தாள வாத்தியங்களை விழுங்கும் ராட்சசக் கருவி.- பார்ப்பதற்கு என்னவோ சிறிது தான். இதன் தாக்கம் கடந்த 20 ஆண்டுகளில் அதிகம் உள்ளது. 3 ) வி எஸ் டி (Virtual Studio Technology) என்ற வீட்டையே ஸ்டுடியோவாக மாற்றும் தொழில் நுட்பம். இதன் தாக்கம் கடந்த 15 ஆண்டுகளில் அதிகம் உள்ளது. இந்த முன்று பகுதிகளில் ஸிந்தசைசர் மற்றும் ரிதம் பேட் வன்பொருள் மூலமான (Hardware based) தாக்கங்கள். வி எஸ் டி மென்பொருள் மூலமான (Software based) தாக்கம்.

ஸிந்தசைசர்

ஆரம்ப நாட்களில் இந்த இசைக் கருவி பெரிதாக இருந்தது. ரோலாண்டு போன்ற கம்பெனிகளால் தயாரிக்கப்பட்டது. நாளாக நாளாக அதன் உருவம் மாறி அதுவே கீபோர்ட் ஆகியது. இதை இன்று சுருக்கமாக கிஸ் என்கிறார்கள். இதன் ஆதாரக் கருவி பியானோ. மெதுவாக இக் கருவி எல்லை தாண்டி மற்ற இசைக் கருவிகளைப் போல ஒலி எழுப்ப ஆரம்பித்துவிட்டது. முதலில் கிடார், சித்தார், வீணை என்று ஆரம்பித்து, வயலின், செல்லோ என்று வளர்ந்துவிட்டது. இன்று அது குழல் வாத்தியங்களையும் விட்டு வைக்கவில்லை. புல்லாங்குழல், டிரம்பெட், சாக்ஸ் என்று எல்லா வாத்தியங்களும் அதில் அடக்கம்.  ஒரு இசைக் குழுவே இந்த கருவிக்குள் அடக்கம்.

இதைப் புரிந்துகொள்ள, ‘அழகன்’ திரைப்படத்தில் வந்த ‘தத்தித்தோம்’ என்ற பாடல் நல்ல உதாரணம்.

இன்று கீபோர்டுகள் மிக முன்னேறிவிட்டன. இதை 1986 ல் வெளிவந்த ‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தின் தலைப்பு இசையில் இளையராஜா உபயோகித்திருந்தார்.

இன்று கீபோர்டுகளுக்கு ராக் அடுக்குகள் (rack modules) வந்து அதன் திறன் பன்மடங்காகிவிட்டது. ராக் பாகங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக பல கீபோர்டுகளை அடுக்கி, ஒவவொரு கீபோர்டிலும் வித விதமான இசைக் கருவிகளை ஒரே நேரத்தில் வாசிக்கலாம். மென்பொருள் அதை மேலும் சக்தி வாய்ந்ததாக்கி விட்டுள்ளது. இன்று கீபோர்டில் இசைக்க முடியாத கருவிகள் மிகக் குறைவு. அதன் விளைவு, கடினமான பயிற்சி பெற்று அனுபவமிக்க வீணை, வயலின், ஷெனாய், டிரம்பெட், சாக்ஸ் கலைஞர்கள் வேலையற்றுத் தவிக்கிறார்கள். இன்றைய இசையமைப்பாளர்கள் கீபோர்டு வாசிப்பாளர்களை பெரிதும் நம்பி இருக்கிறார்கள். ஒரு ஷெனாய் வாத்தியக்காரரை வைத்து வேலை வாங்குவதற்கு யாருக்கும் நேரமில்லை. அதற்காக இசைக் குறியீடுகளைக் கூட கீபோர்டுக்கு மாற்றத் தயார்.

ரிதம் பேட்

தொலைக்காட்சியில் இசைப்போட்டி நிகழ்ச்சிகளில் இரு கோல்களுடன் ஒருவர் சகல தாளவத்தியங்களை ஒரு சிறிய பேடில் வாசிப்பதை கவனித்திருப்பீர்கள். இதை சிந்த்பாட் மற்றும் மல்டிபாட்(synth pad, multi pad) என்றும் அழைக்கிறார்கள். சிறியதாக இருந்தாலும்,. பல ஜாலங்களைச் செய்யக்கூடிய மின்னணு விந்தை இது. இதில் இந்திய தாள வாத்தியங்களான தபலா, டோலக், கடம், செண்டா என்று பலவற்றையும் வாசிக்கலாம். தந்தி வாத்தியம், குழல் வாத்தியம் போன்றவற்றை ஸிந்தசைசர் ஈடு செய்வது போல ரிதம் பாட் தாள வாத்தியங்களை ஈடு செய்து இசைக்குழுவில் பலருக்கு வேலையில்லாமல் செய்துவிடுவது வேதனைக்குரியது .

இன்றைய ரிதம் பேட் களில் பல ‘ஒட்டுகள்’ (patches) இதன் திறனை மேம்படுத்துகின்றன. இதனால் லத்தினோ, ரெக்கே, ஆஃப்ரிக்க, தாள முறைகள் வாசிக்க இலகுவாக உள்ளது. நாம் பல புதிய வேற்றுநாட்டு ஒலிகளை கேட்க ரிதம் பேட் மற்றும் ‘டிரம் எந்திரங்கள்’ (drum machines) காரணம். இந்த ஒட்டுகள் குறுந்தட்டு முலமாக வெளியிடப்படுகின்றன. இப்பொழுது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன், ஏன் CD வந்தால்தான் பாட்டு வருகிறது என்று. உதாரணம், சமீபத்தில் வெளிவந்த ‘கந்தசாமி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மாம்போ மாமியா’ என்ற பாடல் ரிதம் பேட் லத்தினோ ஒட்டு உதவியுடன் வெளிவந்த ஒன்று.

ரிதம் பேட் வருகையால் பல தாள வாத்தியக்காரர்கள் பாதிக்கப்பட்டாலும், பல தாள வாத்தியக்காரர்கள் ரிதம் பேட்டை வாசிக்கக் கற்றுக்கொண்டு வேலையைத் தொடர்கிறார்கள். தபலா, மிருதங்கம் மற்றும் கடம் போன்ற தாள வாத்தியக்காரர்கள் சிலர் தடுமாறத்தான் செய்கிறார்கள்.

வி எஸ் டி

ஒரு வி.எஸ்.டி ஸ்டுடியோமற்றவை தொழில் நுட்பக் காற்று என்றால், வி எஸ் டி ஸ்டுடியோவை வீடுவரை அழைத்துச் சென்ற புயல். இந்த வி எஸ் டி எந்த மாதிரி விந்தை? எல்லாம் கணினி சமாச்சாரம்தான். இவ்வுலகில் கோடி கட்டிப் பறப்பது ஆப்பிள் கணினிகளே. பல மின்னணு இசைக் கருவிகளை ஒருங்கிணைப்பதே வி எஸ் டி-யின் முதல் நோக்கம். பாடகர்கள் மற்றும் இசைக்கருவிகளின் துண்டுகளை( punch)  ஒருங்கிணைத்தல். இதில் மிக பிரபலமானது ஆப்பிளின் ‘லாஜிக் ஸ்டுடியோ’ (Logic Studio). ரஹ்மான் இதைத்தான் உபயோகிக்கிறார். பல வருடங்கள் தனியாக வெற்றியடைந்த ஆப்பிளுக்குப் பல போட்டியாளர்கள் வந்துவிட்டார்கள். இன்னுவென்டோ( Innuendo), க்யுபேஸ் (Cubase) போன்ற தயாரிப்பாளர்கள் போட்டியை அதிகரித்து விட்டார்கள். புதிய வெளியீடுகள் நான்கு முதல் ஆறு மாதத்திற்கு வந்த வண்ணம் களத்தை மாற்றிக் கொண்டு வருகின்றன.

ஏ.ஆர்.ரஹ்மானின் தொழிற்கூடம்புதிய இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் ஒரு ஒலிப் பொறியாளராக இருந்ததைப் பெருமையாகச் சொல்லிக் கொண்டார். இன்று ஒலிச் சேர்க்கை மற்றும் மின்னணு ஒலி பற்றிய அறிவு, இசை அறிவுக்கேற்ற அளவு முக்கியமாகிவிட்டது. ஒரு இசையமைப்பாளர் இசை அறிவைப்பற்றி கவலைப்படும் முன் மின்னணு ஒலி அறிவுத் திறனாலேயே அளவிடப்படுகிறார். ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்கள் பாதி ஒலிப் பொறியாளர்களாகவும் பணி செய்யும் திறனே இதற்கு காரணம்.

அது சரி, இதிலென்ன பெரிய விஷயம்? பல துறைகளைப் போல, இசையமைப்பாளர்களுக்கும் வேலை பளு குறைக்கும் நுட்பங்கள் தேவைதானே? நிச்சயமாக. இவர்கள் வேலைப் பளுவை முதலில் இந்த தயாரிப்பாளர்கள் குறைத்தார்கள். போகப் போக போட்டி காரணமாக நுகர்வோருக்கு சோமபேறித்தனம் வளர பல வழிகளையும் கொடுத்தார்கள். இதனால் வந்தது பிரச்னை. இந்த மென்பொருள் தொகுப்புகளை வாங்கும்போது பல உதாரண ஒலிகள் மற்றும் தாளச் சுழற்சிகள் (sample sounds, rhythm loops) கொடுக்க ஆரம்பித்தார்கள். மேலும் பல தனி நிறுவனங்கள் பல நாட்டு இசை வகைகளை – ஜாஸ், டெக்னோ, ரெட்ரோ, ராக், ஆபிரிக்க, அரேபிய, ஜப்பானிய மற்றும் பல சாம்பிள் ஒலிகள் மற்றும் தாளச் சுழற்சிகள் அடிக்கடி ஒலித் தட்டில் வெளியிடுகிறார்கள். இவை உதாரண இசை என்ற நிலை மாறி, அதுவே இசை என்று வருபோது பிரச்னை விஸ்வருபம் எடுக்கிறது.

உதாரணத்திற்கு, ‘இந்தியன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அக்கடான்னு நீங்க’ என்ற பாடலின் ஆரம்பத்தில் வரும் தமிழல்லாத இசை ஒரு சாம்பிள் இசைதான் ….

மேலும், ‘காக்க காக்க’ திரைப்படத்தில இடம்பெற்ற ‘உயிரின் உயிரே’ பாடலின் ஆரம்பத்தில் வரும் தமிழற்ற பாகமும் சாம்பிள் இசைதான்.

ரோலாண்டு மற்றும் கோர்க் (Roland, Korg) போன்ற மின்னணு இசைக்கருவி தயாரிப்பாளர்கள் அடுத்த கட்டத்தில் இறங்கியுள்ளனர். இவர்களின் புதிய எந்திரங்கள் குழு இசைக்கு (chorus) ஒரு சவால். மேலை நாட்டுக் குழு இசை நம் குழு இசையை விடத் தேர்ந்தது . ஆபெரா (Opera), க்வொயர் (Choir) முறைகளில் பாடுவது அவர்கள் கலாச்சாரம், பயிற்சி, ரசனை முறை. இளையராஜா போன்ற இசையமைப்பாளர்கள் கூட்டிசை முறையில் நம் நிலையை உயர்த்தினாலும் நம் வளர்ச்சி அவ்வளவு இல்லைதான். இந்த எந்திரங்கள் இந்தக் குறையைப் போக்க வழி செய்யும். இதையே சாக்காக வைத்து நம் இசையமைப்பாளர்கள் குழுப் பாடகர்களின் நிலைமையையும் மோசமாக்கினால் வியப்பில்லை.

இளையராஜா பாடல் பதிவுஇதுவரை நாம் பார்த்தது ஒரு வாத்தியத்தை அல்லது குரலை மின்னணுவியலால் ஈடு செய்த முயற்சி. புதிதாக இப்பொழுது ‘சிம்போபியா’ (Symphobia) என்ற  யூரோப்பிய மென்பொருள் ஒன்று வந்துள்ளது. இதனால் ஐரோப்பியப் பல்லிசை குழுவின் திறன்களை ஒரு குட்டி ஸ்டூடியோவிலிருந்து மென்பொருள் மூலமாகவே பெற்றுவிடலாம். பல நூறு ஆண்டு பயிற்சியுடைய பல்லியல் குழுக்களின் இசைத்திறனை இந்த மென்பொருளில் சாம்பிளாகத்  தருகிறார்கள். வீட்டிலிருந்தபடி பின்னணி இசையில் ஜான் வில்லியம்ஸைப் போல அசத்தலாம். இக்கட்டுரை பதிவாவதற்குள், நம் நாட்டு இசையமைப்பாளர்கள் கையில் இந்த மென்பொருள் இருக்கும் என்று நம்புகிறேன்.

உதாரணத்திற்கு, சமீபத்தில் வெளியான ‘டா வின்சி கோட்’ (Da Vinci Code) என்ற திரைப்படத்தின் அசல் தலைப்பு இசை (ஹான்ஸ் ஜிம்மர்- Hans Zimmer) இதோ …

குட்டி ஸ்டூடியோவிலிருந்து ஒருவர் அதே இசையை ‘குபேஸ்’ -சை வைத்து அசத்துகிறார் இங்கே ….

இவ்விஷயத்தில் விந்தை என்னவென்றால், இதை வியாபார நோக்கம் கொண்டு செய்யும் இசையமைப்பாளர்கள் ஆரம்ப காலத்தில் வாத்தியக் கலைஞர்கள்தான். உதாரணத்திற்கு, வித்யா சாகர் பல வாத்தியங்களையும் வாசிக்க தெரிந்த வித்தகர், ராஜா ஒரு கிடார் புலி, ரஹ்மான் கீபோர்டில் வல்லவர், ஹாரிஸ் கிடார் வாசிப்பதில் வல்லவர். ஒரு பேச்சுக்கு எண்ணிப் பாருங்கள் – இவர்கள் இன்றைய நிலையை மறந்து, வாத்தியக்காரர்களாக வந்தால், இவர்களின் நிலைமை என்னவாகும்? ஒரு கீபோர்டு வித்தகர் இவர்களை பிரகாசிக்க வழியில்லாமல் செய்ய வாய்ப்புண்டு. அத்தோடு எல்லா வாத்தியக்காரர்களும் இசையமைப்பாளர்கள் ஆவதில்லை. அதற்கென்று தனித் திறன் வேண்டும். மேலும் இந்த டிஜிட்டல் புரட்சியால் நம் இசை பின்னுக்கு தள்ளப்படுகிறது. சொல்லப்போனால் மேற்கத்திய செவ்வியலின் நிலைமையும் அதேதான். மேலை நாடுகளில் செவ்வியலில் தேறியவர்கள் வேலையின்றி பாப், ராக் மற்றும் ராப் இசைக்கு தாவி விடவேண்டிய அவல நிலை. பல்லிய இசைக்குழுக்கள் நலிந்து வருகின்றன.

இதைக் கால மற்றம் என்று சுலபமாக தள்ளி வைக்க முடிவதில்லை. ஏனென்றால், பல ஆண்டுப் பயிற்சி, உழைப்பு கண்மூடித்தனமான மின்னணு இசையால் வீணடிக்கப்படுகிறது. இசையில் வேறுபாடில்லாமல், படைப்பாற்றல் அடிபட்டுப் போகிறது. நம் கலாச்சாரமும் மறககப்படுகிறது.

உயிருள்ள இசை (live music) யின் சுவையே தனி. பல கலைஞர்களின் உழைப்பு, ஒத்துழைப்பு, கூட்டுப்பயன் மற்றும் உயரிய கலாச்சாரத்திற்கு விலை மதிப்பேயில்லை. இதோ, பந்துவராளியையும் மேற்கத்திய செவ்வியல் இசையையும் ஒரு இசைக்குழுவுடன் ‘ராஜபார்வையில்’ குழைத்துக் கொடுக்கும் இந்த சுகத்தினை எப்போது இசையமைப்பாளர்கள் திரும்பிக் கொடுப்பார்கள் ?

சொல்வனம் – ஆகஸ்ட் 2010

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s