அரை செஞ்சுரி துல்லியம் – பகுதி 2

லேசர் பொழுதுபோக்கு

விடியோ விளையாட்டுக்கள் மற்றும் சினிமா/பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் டிவிடி மூலம் வினியோகிக்கப்படுகின்றன. இவை எப்படி மலிவாகி விட்டன என்பதற்கு நான் பார்த்த இரு உதாரணங்கள்: 1) சமீபத்தில் ஒரு பிரபல  செய்திதாளுடன் ஒரு நிறுவனம் தன்னுடைய தயாரிப்புகள் பற்றிய டிவிடியை இலவசமாக சென்ட்ரல் ஸ்டேஷன் போன்ற இடத்தில் வினியோகித்தது. பயணிகள் டிவிடியை உதறிவிட்டு செய்திதாளை எடுத்து சென்றதைப் பார்த்தேன். மேலும் அத்தனை டிவிடிகள் பயனிகளுக்கு இடைஞ்சலாக இருக்குமென ஊழியர் ஒருவர் பல நூறு டிவிடிக்களை குப்பை தொட்டியில் எறிந்ததும் உண்மையாகக் கண்ட காட்சிகள். 2) நாம் உதாரணத்தில் சொன்ன ‘Command and Conquer  4”  என்ற விடியோ விளையாட்டு சமீபத்தில் வட அமெரிக்காவில் குளிர் அதிகமுள்ள மாதங்களில் விற்கத் துவங்கியது. அந்த விளையாட்டை முதலில் வாங்க, பல நூறு பேர் குளிரையும் பொருட்படுத்தாமல், கடை திறப்பதற்கு பல மணி நேரங்களுக்கு முன் அதிகாலையில் வரிசையில் பொறுமையாக நின்று வாங்கிச் சொன்றதும் உண்மையான காட்சி. இதே விடியோ விளையாட்டு டிவிடி இன்னும் இரு வருடங்களுக்குப் பின் கடையோரத்தில் வாங்குவோருக்காக ஏங்குவது உறுதி. இரு உதாரணங்களிலும் டிவிடிதான்.

பிடித்த பொழுதுபோக்கு விஷயங்களை டிவிடியில் பார்க்கும் பொழுது அதன் துல்லியமான ஒளி மற்றும் ஒலி நம்மை கவர்கிறது. புதிய வீட்டு சினிமா எந்திரங்கள் லேசர் துல்லியத்தை எதிர்பார்த்து தயாரிக்கப்படுகின்றன. சினிமா தியேட்டரை ப்ளூ ரே மற்றும் டால்பி ஒலி மூலம் வீட்டிற்கே வரச் செய்ததில் லேசரின் பங்கு முக்கியமானது.

stock-photo-fantastic-orange-laser-show-at-the-disco-party-night-3431176லேசரின் வண்ணங்கள் மிக வசீகரமானவை. பல பொழுதுபோக்கு அரங்குகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் இதன் பல வண்ணங்களால் மிக அழகான கூம்பு போன்ற வடிவங்களை உருவாக்குகிறார்கள். லேசர் ஒளிக்கீற்றை இசைக்கேற்ப நடனமாடவும் வசதிகள் உள்ளதை ரசிகர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். பலவாறு சுழலும் உருண்டையில் ஒட்டப்பட்ட கண்ணாடிகள் லேசர்களை பலவாறும் பிரதிபலிக்க ரசிகர்கள் பரவசமடைவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்த ஒரு விஷயம், ‘திருட்டு விசிடி மற்றும் டிவிடி விடியோக்கள்’. சினிமாக்காரர்கள் அடிக்கடி ஊர்வலம் நடத்திப் பிரபலப்படுத்திவிட்டார்கள். லேசர் தொழில்நுட்பத்திற்கு தமிழ் சினிமா செய்த பெரிய தொண்டு இதுவென்றால் அடிக்க வராதீர்கள்!

லேசர் ராணுவம்

லேசரை ராணுவத்தில் உபயோகிக்க பல முயற்சிகள் ஆரம்ப காலங்களிலிருந்தே மேற்கொள்ளப்பட்டன. ‘ஸ்டார் வார்ஸ்’ போன்ற திரைப்படங்களில் வருவது போல இன்னும் அவ்வளவு எளிதாய் ஒரு சிறிய துப்பாக்கியிலிருந்து லேசர் பாய்ந்து எதிரே உள்ளதை சாம்பலாக்குவது சாத்தியமாகவில்லை. பெரும்பாலும், அதிக சக்தி வாய்ந்த லேசர் வேண்டுமெனில் அது வாயு மற்றும் திரவ லேசராக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு ‘லேசர் உற்பத்தி’ என்ற பகுதியில் ராட்சச லேசர் வெல்டிங் எந்திரங்களின் படம் ஒன்று உள்ளது. இது போன்ற சக்தி வாய்ந்த லேசர்களை படைவீரர் ஒருவர் எவ்வாறு எடுத்துச் செல்ல முடியும்? நாடிலஸ் லேசர் (Nautilus laser system) அப்படிப்பட்ட ஒரு முயற்சி. காயில் என்ற லேசர் (COIL – Chemical Oxygen Iodine Laser) விமானத்திலிருந்து உபயோகிக்கும் ஒரு முயற்சி. இவை முயற்சி அளவிலேயே இருக்கக் காரணம், இப்படிப்பட்ட லேசர்கள் உமிழ்ப்பான்கள் பல்லாயிர கிலோக்கள் கனக்கின்றன. இதை பொதுமக்கள் அறியாதவரை ஹாலிவுட் பூச்சுற்றல் தொடரும்!

laser10ராணுவத்தில் லேசர்கள் வழிகாட்டிகளாக மிக அதிகமாக  பயன்படுத்தப்படுகின்றன. (laser guidance).  ஒரு இலக்கை நோக்கி ஒரு குண்டை வீசுவதற்கு முன் அந்த இலக்கை நோக்கி ஒரு லேசர் கதிரைச் சுட்டி விடுகிறார்கள். இலக்கு ஒரு கட்டடமாக இருந்தால் அதை லேசரால் வரைந்து விடுகிறார்கள். குத்து மதிப்பாக விமானம் மற்றும் இதர ஏவும் வசதிகளிலிருந்து குண்டு  வீசப்படுகிறது. குண்டில் உள்ள டிடெக்டர் பிரதிபலிக்கும் லேசர் கதிரை பொறுத்து தன் பாதையை மாற்றிக் கொள்கிறது. லேசரின் குறி சரியாக இருந்தால், குண்டின் குறியும் அதே.

இத்தகைய லேசர்கள் பல ராணுவங்களால் உபயோகிக்கப்படுவதால் இத்தகைய லேசர்களை கண்டுபிடித்து குழப்பவும் நுணுக்கங்கள் வந்து விட்டன. நகரங்களில் நில ஏற்றத் தாழ்வுகளை அளக்கும் சர்வேயர்களுக்கு உதவுவது போல, ராணுவத்திலும் லேசர் ரேஞ்ச்ஃப்ய்ண்டர் குறிகளின் தூரம் மற்றும் இலக்கை சரியாக அறிந்து கொள்ள பயன்படுத்தப்படுகின்றன. பல ஹாலிவுட் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள்: தூரத்திலிருந்து சுடுபவர் (sniper) ஒரு சிவப்பு அல்லது பச்சை லேசருடன் தன் குறியை சரிபார்ப்பதற்கு முன் கதாநாயகன் தாவி தப்பி விடுவார்.

ரோனால்டு ரேகன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பொழுது, ஸ்டார் வார்ஸ் என்ற ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று குதியோ குதியென்று குதித்தார். இதை ஒரு வகை லேசர் ஆயுதம் தாங்கிய ஒரு கவசமாக சொல்லி வந்தார். தொழில்நுட்பம் அதிகம் வளராததால் பல நாடுகள் அவருடன் துணை போகவில்லை.

பொதுவாக லேசர்கள் இன்று ஆயுதத் தாக்குதலுக்கு உதவுகின்றனவே தவிர, அவையே ஆயுதமாகவில்லை என்றால் மிகையாகாது. எத்தனை வருடம் இந்த நிலை நீடிக்கும் என்று சொல்ல முடியாது, ஏனென்றால், லேசர் ஆராய்ச்சியில் அதிகம் ராணுவத்தின் பங்கு உள்ளது.

லேசர் மின்னணுவியல்

laser11நாம் முன்னே சொன்னதுபோல மின்னணுவியல் துறை லேசரை உபயோகித்து வளர்க்கவும் செய்த ஒன்று. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இத்துறை  பாகங்களை மேற்பரப்பாக வடிவமைத்து (surface mounted components) வருகிறது. இதற்கு துல்லியம் மிகத் தேவை. மேலும் தயாரிக்கும் பொருட்களின் அளவு குறைந்து கொண்டே வருவது இத்துறையின் தனிச்சிறப்பு. ஆரம்ப நாட்களில் வந்த டிரான்ஸிஸ்டர் ரேடியோக்களை இன்றைய கழுத்தில் தொங்கக்கூடிய பண்பலை ரேடியோக்களுடன் ஒப்பிட்டாலே தெரியவரும் எவ்வளவு முன்னேற்றம் என்று. ஆரம்ப நாட்களில் டிரான்ஸிஸ்டர் அனுப்புகிறோம் என்று சில ஏமாற்று டில்லி நிறுவனங்கள் பார்சலில் செங்கல்லை அனுப்புவார்களாம்! இன்று அந்நிறுவனங்கள் எங்கே சென்றன என்று தெரியவில்லை.

தயாரித்த மின்னணு பாகங்கள் சர்க்யூட் போர்டில் சால்டர் செய்யப்பட வேண்டும். சர்க்யூட் போர்டுகள் மிகவும் சிக்கலானதாகி விட்டது. கணினிக்காக சில புதிய போர்டுகளை வாங்கும் போது பார்த்திருப்பீர்கள். இன்று உபயோகப்படும் போர்டுகளில் பல அடுக்குகள் உள்ளன. இவை அனைத்தும் துல்லியமாக இணைக்கப்பட்டுள்ளன. இத்தனை சிக்கலான போர்டுகளை கணினிகள் லேசர் மற்றும் ரசாயன உதவியுடன் தயாரிக்கப்படுகின்றன. போர்டில் உள்ள துவாரங்கள் லேசர் துளை எந்திரங்களால் செய்யப்படுகின்றன. மேலும் சில துவாரங்களில் உலோகம் துல்லியமாக பூசப்பட்டும் (plated through hole) தயாரிக்கப்படுகின்றன.

மேலும் முக்கிய கணினி பாகங்களான பிராஸஸர், மற்றும் மெமரி சிப்கள் தயாரிக்க லேசர் இல்லையேல் கணினிகள் இவ்வளவு சின்னதாக பார்க்க முடியாது. மிகச் சிறிய பாகங்களை சால்டர் செய்வதற்கு லேசர் கொண்டு சால்டர் செய்வதும் வந்துவிட்டது.

லேசர் நிறமாலையியல் (laser spectroscopy) பல உயர் தொழில்நுட்பங்களில் மிக முக்கியம். உதாரணத்திற்கு, கணினி சிப் செய்தலுக்கு மிகத் தூய்மையான சிலிகன் தகடுகள் (silicon wafer) தேவை. அதன் மேற்பரப்பு மிக மிக சரியாக இருக்க வேண்டும். சில ஏற்றத்தாழ்வுகள் சிப்பை உபயோகமின்றி செய்துவிடும். லேசர் நிறமாலையியலின் ஒரு ஸ்பெஷல் பகுதியான CRD (Cavity Ring Down) நிறமாலையியல் உற்பத்திக்கு எந்த சிலிகான் தகடுகள் உகந்தவை என்று தேர்ந்தெடுக்க உதவுகிறது.

ம்ற்றொரு கணினி உலகின் பெரிய லேசர் உபயோகம் லேசர் அச்சிடும் கருவிகள் (laser printer). முதலில் கருப்பில் அச்சிட்டு வந்த இக்கருவிகள் அழகாக பல நிறங்களில் இன்று அச்சிடுகின்றன. 1969 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இக்கருவிகள் இல்லாத அலுவலகமே இல்லை என்று சொல்லலாம். ஒரே சமயத்தில் முழு பக்கமும் அச்சிடும் சக்தி கொண்டவை. சொல்லப்போனால், லேசர் அச்சிடும் கருவிக்குள் ஒரு சின்ன கணினியே உள்ளது. ஒவ்வொரு எழுத்தும் பல சின்ன பொட்டுக்களாய் ஒரு லேசரால் மிக பயங்கர வேகத்தில் ஒரு ஒளியினால் தூண்டப்படக்கூடிய பேரிகையில் உருவாக்கப்படுகின்றன. அதன் மேல் டோனர் துகள்கள் தூண்டப்பட்ட இடங்களில் ஒட்டிக் கொள்கிறது. 2000 டிகிரி வெப்பத்தில், துகள்களை காகிததில் ஒட்ட நிமிடத்திற்கு 8 முதல் 80 பக்கங்கள் வரை படம் மற்றும் எழுத்துக்கள் அச்சிடும் விந்தையின் பின்னே லேசர்!

பல வழங்கி கணினிகளில் (server computers)  பாகங்களை இணைக்கும் கேபிள்கள் மொத்த வழங்கி திறனையும் நிர்ணயிக்கின்றன. வழங்கி கணினிகளையும் அதன் முக்கியமான SAN  என்ற ராட்சச சேமிப்பு அமைப்புகளையும் இணைப்பது தொலைதொடர்பு நுட்பத்தில் உபயோகித்த நுண்ணிய கண்ணாடி குழாய்கள் உள்ள கேபிள்கள் (fiber optic cable – இதை கணினி பொறியாளர்கள் FCAL  என்று செல்லமாக அழைக்கிறார்கள்!).

லேசர் கல்வி மற்றும் இதர உபயோகங்கள்

laser12நாம் உதாரணத்தில் பார்த்த லேசர் போக்குவரத்து டிடெக்டர் சாலையில் ஊர்த்திகளின் வேகத்தை சந்தேகத்திற்கு இடமின்றி சரியாக கணிக்கிறது. சில இடங்களில் வட அமெரிக்காவில் சாலை ஓரங்களில் பெரிய எழுத்துக்களுடன் உங்கள் வாகன வேகத்தை காட்டுகிறார்கள். இன்றுள்ள நவீன வாகனங்களில் வேகத்தின் அளவை உணர முடிவதில்லை. 80 கி.மீ வேகத்தில் போவதாக நினைத்துக் கொண்டிருப்போம் – உண்மையில் 120 கி.மீ வேகத்தில் பயணம் செய்து கொண்டிருப்போம். ஆரம்பத்தில் புதிதாக வாங்கிய போது பார்த்துக் கொண்டிருந்த வேகம் காட்டும் கருவியை (speedometer)  பழக பழக பார்ப்பதில்லை. சாலை ஓர லேசர் வேகம் காட்டிகள் சிலரை வேகம் குறைக்க செய்கிறது.

லேசர் பல நகர மற்றும் மாநில துறைகளால் சர்வேயிங் போன்ற நிலத்தளவு செயல்களுக்கு உபயோகப்படுத்தப்படுகின்றன.

விடியோ விளையாட்டுக்களுக்கு உபயோகப்படும் அதே டிவிடி க்கள், படிப்பதற்கும் உதவும் என்றால் உங்களது குழந்தைகளின் முகங்கள் சுருங்கினாலும் ரொம்ப உபயோகம். உயர்நிலைபள்ளி  கணக்கு, விஞ்ஞானம், புள்ளியியல் போன்ற பாடங்களுக்கு அழகான டிவிடிக்கள் 500 முதல் 1,000 ரூபாய்க்குள் கிடைக்கின்றன. கணினியில் அழகாக விடியோவுடன் பாடம் சொல்லித் தருவார்கள். கால்குலஸில் உங்கள் மகனுக்கு உதைக்கிறதா? டிவிடி வாங்கிப் பாருங்களேன்? போக்குவரத்து மற்றும் நிர்வாக நேர விரயம் கிடையாது. இப்பொழுது வரும் கணினிகள் எல்லாவற்றிலும் டிவிட் கருவிகள் உள்ளன.

தொழில் கல்வி சம்மந்தமான விளக்கங்கள், பலவித பரீட்சை சோதனைகள் எல்லாம் டிவிடிக்களில் வந்துவிட்டன. ஜி.ஆர்.இ, படிக்கும் இளைஞர்களிலிருந்து பொழுதுபோக்குக்கு ஸ்நார்க்ளிங் வரைக்கும் எல்லாம் டிவிடி மயம்! இசை வாத்தியக் கருவி கற்றுக் கொள்ள வேண்டுமா? அலலது உங்கள் வீட்டில் மரவேலை செய்ய பழக வெண்டுமா? மேலை நாடுகளில் சொல்லிக் கொடுப்பதற்கு ஆள் கிடைப்பதை விட டிவிடிக்கள் எளிதாக கிடைக்கின்றன. மேலும் பல தயாரிப்பாளர்கள் தங்களுடைய தயாரிப்புகளுடன் உபயோக முறையை டிவிடி மூலம் விளக்குவதையே விரும்புகிறார்கள். புதிய உயர்தர டிஜிட்டல் கேமரா, அல்லது மின்னணு கீபோர்டு எல்லாவற்றிற்கும் உபயோக முறை பற்றிய டிவிடிக்கள் பொருளோடு அல்லது தனியாக வந்து மிகவும் உதவியாக உள்ளன.

லேசர் விஞ்ஞானம்

லேசர் விஞ்ஞானம் வளர பல முறைகளில் உதவுகின்றது. சில பயன்களை இங்கு பார்ப்போம்.

•    ஒளி வேதியல் (photo chemistry)  என்ற விஞ்ஞான துறைக்கு லேசர் மிக உதவியாக உள்ளது. மிக குறுகிய பொழுதில் (இதை ஃபெம்டொவினாடி என்கிறார்கள் ஒரு வினாடியில் கோடி கோடி பகுதி. சொல் பிழையல்ல – கோடி கோடி) சில ரசாயன மாறுதல்களை ஆராய உதவும் ஃபெம்டோ லேசர்கள். எங்கு உதவும்? உயிர் தொழில்நுட்ப துறையில் (bio technology) புரத கூட்டணுக்களை ஆராய் மிக அவசியம்.

laser13•     லேசர் நிறமாலையியல் (laser spectroscopy)  மிகவும் உதவியான துறை. ஒரே நிறமுள்ள ஒரே அலைவரிசையுடைய லேசர் ஒளி பல விதத்தில் உதவி. பல சிக்கலான பொருட்களை விஞ்ஞானபூர்வமாக அறிவதற்கு வசதி. இதில் ராமன் நிறமாலையியல் என்ற துறையின் மிகச் சிறந்த பொதுப்பயன், விமான நிலயங்களில் உள்ள வருடிகள். பயணியின்  பெட்டிக்குள் வெடிமருந்து மற்றும் ப்ளாஸ்டிக் வெடிமருந்து உள்ளதா என்று சொல்வது ராமன் நிறமாலையியலின் வெற்றி. பயணிகளுக்கு நிம்மதி.

•    வானியல் ஆராய்ச்சிக்கு லேசர் ஒரு வரப்பிரசாதம். கருந்துளை (black hole) ஆராய்ச்சி, மற்றும் ஈர்ப்பு சக்தி ஆராய்ச்சிக்கு லேசர்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. உதாரணம், LIGO  என்ற வாஷிங்டன் அருகில் உள்ள ஒரு ராட்சச எந்திரம் ஈர்ப்பு சக்தி அலைகளை அளக்க முயற்சி செய்கிறது.

•     வானியல் துறையில் அன்றாட ஆராய்ச்சிக்கே லேசர் உதவுகிறது. கவிஞர்கள் சொல்லும் மின்மினி நட்சத்திரம், பூமியின் காற்று மண்டலம் மற்றும் அதன் உள்ள தூசு போன்ற விஷயத்தால் வரும் ஒளி சிதறல். இதை நீக்கி படம் பிடிக்க ஹப்பிள் போன்ற வின்வெளி அமைப்புகள் இருந்தாலும், புதிய முறை ஒன்று மிகவும் விஞ்ஞானிகளிடம் பிரசித்தி. ஒரு லேசர் கதிரை 100 கி.மீ உயரத்தில் காற்று மண்டலத்தில் உள்ள சோடியம் அணுக்களின் மேல் பாய்ச்சினால், தெளிவான ஒரு நட்சத்திரம் (மின்மினி இல்லாத) போல தோற்றமளிக்கும். இதன் உதவி கொண்டு, பல நிஜ நட்சத்திரத்தின் மின்மினியை குறைத்து, அதனை ஆய்வு செய்ய உதவுகிறது லேசர்.

•    விலையுயர்ந்த கலைப்பொறுள், தங்கம் மற்றும் அதிக மதிப்புள்ள பொருட்களைக் காக்க லேசர் அத்துமீறல் தடுப்பு அமைப்பு உபயோகத்தில் உள்ளது. ஆங்கில மற்றும் தமிழ் படங்களில் (நாணயம்) வருவது போல லேசர் கதிர்கள் கண்ணுக்கு தெரியாது. எத்த்னை நாட்டியம் தெரிந்த அழகான கதாநாயகி வந்தாலும் லேசரிடம் செல்லாது!

•    இன்று உலகின் சரியான நேரத்தை கணிப்பது அணு கடிகாரங்கள். இவை உபயோகிக்கும் அணுக்களை லேசர் கொண்டு குளிர்க்கப்படுகின்றன. இந்த அணு கடிகாரங்கள் ஜிபிஎஸ் இயங்க மிக தேவையான ஒன்று..

லேசரின் 50 வது பிறந்தநாள்

laserfest-logoவிஞ்ஞான சமூகம் லேசரின் 50 வது பிறந்த நாளை மிகவும் விரிவாக இவ்வாண்டு கொண்டாட திட்டமிட்டுள்ளது. இதற்காக ‘லேசர்ஃபெஸ்ட்’ என்ற விழாவை நிறுவியுள்ளது. பிப்ரவரி 12 ஆம் தேதி அமெரிக்காவில் வாஷிங்டனில் இவ்விழா தொடங்கப்பட்டது. பல லேசர் சம்மந்தப்பட்ட விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கழகங்கள் இதில் மிக உற்சாகத்தோடு ஈடுபட்டு அழகாக பல நிகழ்வுகளை நடத்தி வருகின்றன. இந்தியாவில் மைசூரிலும், டில்லியிலும் இவ்விழா மார்ச் மாததில் நடந்தது. ஸ்மித்ஸோனியன் காப்பகத்தில் நடந்த பிப்ரவரி 12 விழாவில் பல்வேறு லேசருக்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் பங்கேற்று நடத்திய அருமையான சொற்பொழிவுகளை இங்கே பார்த்து ரசிக்கலாம்:

http://www.laserfest.org/lasers/videos.cfm

லேசரின் எதிர்காலம்

சமீபத்தில் துடியான மர வேலைகளில் ஈடுபாடு கொண்ட கனேடிய இளைஞர் ஒருவருடன் நடந்த உரையாடல் மிகவும் வினோதமானது.

ஐபோனுடன் அலையும் அவர் மிகவும் அலுத்துக் கொண்டார், “இந்த 4-1/4 அடி தூரத்தை அளக்க என் அளவு டேப் தேவைப்படுகிறது!”.

நான் அவருடைய அலுப்பின் காரணம் புரியாமல், “என்னிடம் டேப் உள்ளது. தரவா?” என்றேன்.

அவர், “என்னுடைய காரில் உள்ளது. எல்லாம் ஐபோனில் இருக்கனும்”, என்றார்.

நான் அவரிடம், ‘இதற்கும் ஐபோனுக்கும் என்ன சம்மந்தம்?” என்றேன்.

அவர், “சரியான மட்ட நிலையில் இருக்கிறதா என்று பார்க்க நான் காருக்கு ஓடவில்லையே. ஐபோனில் அதற்கு என்று ஒரு உப்யோகமான பயன்பாடு உள்ளது. ஆனால் இதற்கும் இருந்தால் உதவியாக இருக்கும்.”, என்றவர், “4-1/4 அடி தூரத்தை ஒரு ஜிபிஎஸ்ஸினால் துல்லியமாக அளக்க முடியாது. கொஞ்ச நாளில் வந்துவிடும். இல்லையேல் ஐபோனில் ஒரு லேசர் இருந்தால் பலவற்றுக்கும் உதவும்” என்றார்.

laser14தொழில்நுட்பம் தெரிந்த பலரது எதிர்பார்ப்புகள் இன்று இப்படித்தான் வளர்ந்துவிட்டது. இம்மாதிரி எதிர்பார்ப்புகளுக்கு லேசரின் மிக துரித வளர்ச்சி மற்றும் முன்னேற்றங்கள் ஓரளவுக்கு காரணம். உதாரணத்திற்கு, ஒர் சிடியின் அளவும் ஒரு டிவிடியின் அளவும் ஒன்றே. சிடியை விட ஆறு மடங்கு அதிக தகவல்களை டிவிடியில் பதிவு செய்யலாம். அதே போல, ஒரு ப்ளூ ரே டிவிடி சாதாரண டிவிடியை விட ஆறு மடங்கு அதிக தகவல்களை பதிவு செய்யலாம் – சிடி மற்றும் டிவிடி மற்றும் ப்ளூ ரே டிவிடி களின் அளவு ஒன்றே. 216 மடங்கு முன்னேற்றம்! 50 ஆண்டுகளில் இவ்வாறு வளந்துள்ள லேசர் என்னவெல்லாம் செய்யக்கூடும் என்று பார்ப்போம்.

சிடிக்கள் விரைவில் அருங்காட்சியகத்திற்கு சென்றுவிடும். ப்ளூ ரே டிவிடி கருவிகள் 2012 க்குள் மலிந்துவிடும். இன்று ப்ளூ ரே டிவிடிக்களின் முழு கொள்திறனும் உபயோகிக்கப்படுவதில்லை. இதன் முழு திறனில் 100 கிகாபைட் வரை ஒரு சிடியில் நிரப்பலாம். இன்று 25 கிகாபைட் வரைதான் நிரப்புகிறார்கள். இன்னும் 5 ஆண்டுகளில் பல விதமான உபயோகங்களும் கண்டுபிடிக்கப்படும். உதாரணத்திற்கு, தொலைக்காட்சியில் குஷ்பு அணிந்திருக்கும் நகையைப் பார்த்து கிளிக்கினால், அதே நகையை அந்தக்கடையில் உடனே வாங்கலாம். ‘வாரணம் ஆயிரம்’ சூர்யாவின் டூயட் பார்த்து, க்ளிக்கினால், ஸான்ஃப்ரான்ஸிஸ்கோவுக்கு உடனே டிக்கட் வாங்கலாம். உருப்படியான உபயோகங்களும் எதிர்பார்க்கலாம். உதாரணத்திற்கு, ப்ளூ ரே பாட புத்தகம் மிகவும் அருமையான ஒரு அனுபவமாய் இருக்கும். பெளதிகம் படிக்கும் மாணவன் உண்மையிலேயே இரு கார்கள் பயங்கர வேகத்தில் பயணிப்பதை பார்க்கலாம். க்ளிக்கினால், அதன் வேகம் தெரியும். அதே போல இரு கார்களில் இடையே உள்ள தூரத்தையும் தெரிந்து கொள்ளலாம். பிறகு, ப்ரச்னை சொல்லப்படும். ப்ரச்னையை தீர்த்து சரியான விடையையும் காட்சியாக பார்க்கலாம். காகிதம் மற்றும் மையைவிட பல நூறு மடங்கு சக்திவாய்ந்த படிப்பு!

அமெரிக்காவில் உள்ள லாரன்ஸ் லிவர்மோர் ஆய்வுக்கூடத்தில் ஒரு மிகவும் நம்பிக்கையூட்டும் முயற்சி நடந்து வருகிறது. ஒரு பில்லியன் வாட் சக்தியை லேசர் கொண்டு உற்பத்தி செய்ய முயன்று வருகிறார்கள் விஞ்ஞானிகள். ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்களை சூரியன் போல ஃப்யூஷன் முறையில் லேசர் மூலம் இணைத்து கரியமிலமற்ற சக்தி மிகவும் நம்பிக்கையூட்டுகிறது.

பல முயற்சிகள் இத்துறையில் எப்பொழுது பலனளிக்கும் என்று சொல்ல முடியாத நிலையில் உள்ளன. உதாரணத்திற்கு, மைக்ரோ ப்ரொபல்ஷன் என்ற துறை, லேசர்களை வைத்து சிறிய எடைகளை எப்படி நகர்த்துவது, உயரே எழுப்புவது போன்ற ஆராய்ச்சி. சில சிறிய வின்வெளி செயற்கை கோள்களில் உபயோகப்படுத்தப்பட்டிருந்தாலும், இன்னும் முன்னேற வாய்ப்புள்ளது. சில விஞ்ஞான கதை எழுதுபவர்கள் எதிர்காலத்தில் பயணமே இம்முறையில் நடக்கலாம் என்று ஊகித்து வருகிறார்கள்.

பல மருத்துவ துறைகளில் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைகளுக்கு லேசர்கள் மேலும் நிறுவப்படுவது நிச்சயம். உற்பத்தி துறையில் மேலும் பல வேலைகளை லேசர்-கணினி கூட்டணி அபகரிப்பது நிச்சயம்!

இன்னும் இரு ஆண்டுகளுக்குள் வழக்கமான மூக்கு கண்ணாடி தயாரிப்புகள் கைவிடப்பட்டு லேசர் ராஜ்ஜியம் நடந்தால் ஆச்சரியப்படாதீர்கள்.

எதிர்காலத்தில் ஹோலோகிராம் தாங்கிய சேமிப்பு கருவிகள் (holographic optical storage) உருவாக சாத்தியக்கூறுகள் உள்ளன. இதில் விசேஷம் என்னவென்றால், குறைந்தபட்சம் 30 ப்ளூ ரே டிவிடிகளில் உள்ள செய்திகளை இதில் சேமிக்க முடியும். ஒரே இடத்தில் பல்வேறு உருவங்களை சேமிக்க கூடிய சக்தி கொண்டது. இன்றுள்ள எந்த சேமிப்பு தொழில்நுட்பத்திலும் இது சாத்தியமில்லை. சங்கீதத்தில் வருவது போல, ஆதார லேசரின் கோணம் பற்றும் இதர தன்மைகளை பொருத்து, பல்வேறு உருவங்களை ஒரே இடத்திலிருந்து மீட்கலாம். பரவலாக நிண்டெண்டோ விடியோ விளையாட்டுக்கள் தயாரிக்கும் நிறுவனம் இந்த நுட்பத்தை இன்னும் இரு ஆண்டுகளுக்குள் சந்தைக்கு கொண்டுவரும் என்று பரவலாக நம்பப்படுகிறது.

மிக பரபரப்பான லேசர் விஞ்ஞான வளர்ச்சிகள் இரண்டைப் பற்றி சுறுக்கமாக பார்ப்போம். இம்முயற்சிகள் பயனளிப்ப்து எப்போது என்று சொல்வது கடினம். முதலாவது சேசர் (SASER) என்ற நுட்பம். ஒளியை வைத்து துல்லிய கதிரை உருவாக்குவதைப்போல ஒலியை வைத்து செய்வது சேசர். பல மருத்துவ மற்றும் துல்லிய உற்பத்தி தொழில்கள் இதனால் பயன் பெற வாய்ப்புள்ளது. மற்றொன்று, ஸ்பேஸர் (SPASER) என்ற மிக மிக நுண்ணிய தொழில்நுட்பம் (nano technology) தாங்கிய வளர்ச்சி. (எதிர்காலத்தில் ‘சொல்வனத்தில்’ மிக மிக நுண்ணிய தொழில்நுட்பம் பற்றிய கட்டுரைகள் எந்திர்பார்க்கலாம்). மிகச்சிறிய அணு துகள்களை சீரான கதிராக மாற்றும் முயற்சி இது. எதிர்கால கணினி சிப் செய்வத்ற்கு மற்றும் பல இன்னும் நாம் சிந்திக்காத பல பயன்கள் இதிலிருந்து எதிர்பார்க்கலாம்.

பொதுவாக, லேசர்கள் இன்றைய கைதொலைபேசி போல எங்கும் காணும் காலம் மிக விரைவில் வர உள்ளது. வித்தியாசம் என்னவென்றால், எதற்காக என்று மட்டும் சொல்வது கடினம்.

முடிவுரை

இக்கட்டுரையில் அதிகமாக உபயோகிக்கப்பட்டுள்ள சொல் ‘துல்லியம்’. லேசரென்றாலே துல்லியம்தான் முதலில் மனதுக்கு வருகிறது. லேசர் பல தரப்பட்ட மக்களுக்கும் பல உதவிகள் கடந்த 50 ஆண்டுகளாக செய்து வந்துள்ளது. 20ஆம் நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு லேசர். 21 ஆம் நூற்றாண்டின் லேசர் போட்டியாளர் எதுவோ? இன்று பல லேசர் உபயோகங்களை நாம் பார்க்கிறோம். ஆனால், இது இன்னும் பலவாறு அதிகரிப்பது மிக சாத்தியமான ஒன்று.

இதுவரை நீங்கள் படித்த எல்லாவற்றையும் சுறுக்கமாக ஒரு விடியோவில் இதோ:

http://www.laserfest.org/lasers/video-life.cfm

சொல்வனம் – மே 2010

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s