வலையில் சிக்கித் தவிக்கும் அச்சுத்தொழில்

ஜூன் 26, 2010: விடாது மழை பெய்த நாள் இது. பாம்பே ஜெயஸ்ரீயின் கர்நாடக இசை மழையில் நனைந்து வெளியே பயங்கர கோடை மழை டொரோண்டோவில். தடுமாறி காரை கண்டுபிடித்து விரட்டினால், ஊரின் மையப் பகுதியில் ஒரே கலவரம் என்று ரேடியோ மழை பெய்தது. G20 மாநாடு என்ற அரசியல் ஸ்டண்ட் பல நாடுகளில் அவ்வப்பொழுது தலைவர்கள் செய்ய முடியாத காரியங்கள் பற்றி ஒரு அறிக்கை விடும் வேடிக்கை நிகழ்ச்சி. இம்முறை டொரோண்டோவில் மாநாடு என்று ஒரே பாதுகாப்பு கெடுபிடி. போலீஸ் நகருக்குள் குவிக்கப்பட்டது. இத்தனை பாதுகாப்புக்கும் மீறி பல கலகக்காரர்கள் கண்ணாடிகளை உடைத்து, சில கார்களை கொளுத்தினார்கள். பெரும் அமைதிப் பூங்காவான கனடாவுக்கு (வெறும் ’அமைதிப் பூங்கா’ தமிழ்நாட்டின் காப்புரிமை!) இதெல்லாம் புதுசு. பல ஊர்வலர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதைவிடப் புதுசு, இந்த செய்தி எல்லோரையும் சென்றடைந்த விதம். டொரோண்டோவில் சில நூறு ரேடியோ நிலயங்கள், சில நூறு டிவி சானல்கள், ஒரு 30 செய்தித்தாள்கள் என்று மீடியாவுக்கு பஞ்சமே இல்லை. ரேடியோவில், டிவியில் வரும் முன்பு, டிவிட்டர் என்ற சமூக வலையமைப்பு மூலம் இந்த சம்பவங்கள் நடக்க நடக்க டிவிட் (சில வாக்கியங்களே கொண்ட செய்திகள்) செய்யப்பட்டது. கலவரம் நடக்கையில் சில போலீஸ் அத்துமீறல்களும் நடந்தன. அதையும் டிவிட் செய்தார்கள். மேலும் பலர் செல்பேசி காமிராக்களில் படம் பிடித்து வலையில் உலவ விட்டார்கள். எல்லாம் 777 போல திடீர் பத்திரிகையாளர்கள்! அடுத்தநாள் நகரின் பெரிய செய்தித்தாளான டொரோண்டோ ஸ்டார்,  எப்படி அதன் நிருபர்கள் டிவிட் செய்தார்கள் என்று விலாவாரியாக விளக்கியிருந்தது. என்ன நடக்கிறது? பெரிய செய்தித்தாளின் நிறுபர்கள் ஏன் டிவிட் செய்ய வேண்டும்?

அடுத்தபடியாக அதிகாரிகள் பூசி மொழுகினார்கள். நம்மூரில் சொல்வார்களே – லேசான தடியடி பிரயோகம் – கிட்டத்தட்ட அது மாதிரி மழுப்பினார்கள். பெரிய பத்திரிகைகள் தலையங்கம் எழுதின. சிறப்பு எழுத்தாளர்கள் (columnists) தங்களது விசேஷ கருத்துக்களை தங்களுடைய புகைப்படங்களுடன் அலசித் தள்ளினார்கள். கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், இது ஜனநாயக உரிமை என்று சிலர் ஊர்வலம் நடத்தினார்கள். அரசாங்க சற்றும் அலட்டிக் கொள்ளவில்லை. அடுத்த சில நாட்களில் அமெரிக்காவில் ரஷ்ய உளவுக் கூட்டம், உலகக்கோப்பை கால்பந்து என்று ஏறக்குறைய G20 யை மறக்க வாய்ப்பிருந்தது.

ஆனால் மறக்க விடவில்லை டிவிட்டர் கோஷ்டி. இதில் பல குழுக்கள். டிவிட்டரின் சக்தி வாய்ந்த hash tags என்ற குறி வார்த்தைகளை பயன்படுத்தி, பல புது பத்திரிகையாளர்களும் நடந்தவற்றை சாட்சியங்களுடன் அலசி அரசாங்கத்தை தர்மசங்கடப்படுத்தினார்கள். ஜூலை முதல் வாரத்தில் போலீஸ் அத்து மீறியதா என்ற ஆராய விசாரணை கமிஷன் அமைக்க அரசாங்கம் முடிவெடுக்கும்படி ஆகிவிட்டது. பெரிய பத்திரிகைகள், தொலைக்காட்சி வலையமைப்புகள் செய்ய முடியாத ஜனநாயகக் கடமையை 50,000 டிவிட்டர்கள் 250 வார்த்தைக்குள் பல செய்திகளாய் இணையத்தில் இணைந்து அரசாங்கத்தையே பதிலளிக்க வைத்திருக்கிறார்கள். இவர்கள் இத்துடன் விடுவதாக இல்லை. விசாரணையின் ஒவ்வொரு நாளும் டிவிட் செய்து கொளருபடி ஏதாவது நடக்கிறதா என்று அனைவரையும் ஒழுங்காக நடக்கும்படி எச்சரிக்கை வேறு விட்டுள்ளார்கள்!

ஜூலை 7, 2010: வட அமெரிக்காவில் கூடைப்பந்து விளையாட்டு மிகவும் பிரபலம். இதில் ஏராளமான டாலரும் கூட. அன்று காலை விளையாட்டு தலைப்பு செய்தி: Chris Bosh என்னும் டொரோண்டோ ராப்டர்ஸ் டீம் வீரர் மயாமி ஹீட்ஸ் என்ற அமெரிக்க குழுவில் சேர முடிவெடுத்திருப்பது. இதில் என்ன பெரிய விஷயம்? கிரிஸ், பத்திரிகையாளர்களைக் கூட்டித் தன் முடிவை சொல்லவில்லை. ஜூலை 6ஆம் தேதி இரவு தன் விசிறிகளுக்கு டிவிட் செய்தார். டிவி, ரேடியோ, செய்தித்தாள்கள் எல்லோரும் டிவிட்டரை மேற்கோள் காட்டி எழுதி/பேசினார்கள். விறைப்பாக டை கட்டிக் கொண்டு, ராய்டர்ஸ், ஏபி சொன்னால்தான் செய்தி என்ற காலம் மலையேறி போய்விட்டது. பெரிய செய்தியாளர்கள் டிவிட்டரையும் ஃபேஸ்புக்கையும் நம்பி செய்தி தேடுகிறார்கள். இதற்கான உதாரணங்களை இந்தியாவிலேயே கூட பார்க்கலாம். டிவிட்டரில் உலவும் பிரபலங்கள் முக்கியமாக ஏதேனும் சொன்னால் உடனுக்குடன் அவை mainstream செய்தி நிறுவனங்களில் மீள்பதிவு செய்யப்படுகின்றன.

பிப்ரவரி, 2010: வட அமெரிக்க டிவியில் இரவில் காமெடி காட்சிகள் ரொம்ப பிரபலம். இதை Stand Up comedy என்கிறார்கள். நல்ல நகைச்சுவையாளர்களுக்கு பல மில்லியன் டாலர்கள் சம்பளம் வருடத்திற்கு. இந்த இரவு காமெடி நேரத்தில் பங்கெடுக்க விளம்பரதாரர்கள், பங்கேற்பாளர்களிடையே கடும்போட்டி. அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, விஞ்ஞானம் என்று எல்லாவற்றையும் கிண்டலடிப்பார்கள். இப்படி NBC என்ற அமெரிக்க சானலுக்கு Conan O’Brien என்னும் நகைச்சுவையாளர் வார இரவுகளில் 1 மணி நேர காட்சி பல வருடங்களாக செய்து வந்தார். திரைக்கு பின்னால் நடந்த சில குழப்பங்களால் இவரை பிப்ரவரி 2010-ல், NBC நிகழ்ச்சியிலிருந்து நீக்கியது. கூடவே, அவர் எந்த தொலைக்காட்சி நிரலிலும் தோன்றக் கூடாது என்று காண்ட்ராக்ட் வேறு! ‘மலரும் நினைவுகள்’ என்று புத்தகம் எழுதுவது ஒன்றுதான் விட்டு வைத்திருந்தார்கள்.

பார்த்தார் கானன் – டிவிட்டரில் ஒரு அக்கவுண்ட் திறந்தார். 1 மணி நேரத்தில் இவரை 30,000 பேர் பின் தொடர்ந்தார்கள்! 24 மணி நேரத்தில் 300,000 பேர்! சில பல ஜோக்குகள் சொல்லி வந்தார். இன்று 1 மில்லியன் பின்பற்றுவோர். பிறகு, இவர் செய்தது எந்த மீடியா வரலாற்றிலும் இல்லை. யூட்யூப் சேனல் ஒன்றை கூகிளுடன் சேர்ந்து அவரது நகைச்சுவை காட்சி ஒன்றை இணையத்தில் வெளியிட்டார். பிறகு, டிவிட்டரில் ஊர் ஊராய் காட்சி நடத்துவதாய் அறிவித்தார். டிக்கட்டுகள் விற்றுத் தீர்ந்தன! அவருடைய காண்ட்ராக்டை சற்றும் மீறவில்லை. ஆனால் டிவியை விட அதிகம் கலக்கத் துவங்கிவிட்டார்.

யூட்யூப் மற்றும் டிவிட்டர் – தொலைக்காட்சி நிறுவனம் இல்லை. ஆனால் அதைவிட மிகவும் சக்தி வாய்ந்தது. NBC கையை பிசைந்து கொண்டு வேடிக்கை பார்க்கத்தான் முடியும். அமெரிக்காவில் டிவி, செய்தித்தாளை மீறி ஒன்றும் இயங்க இயலாது என்ற எண்ணத்தையே உடைத்துவிட்டார் கானன்.

உலகம் முழுவதும் விமான நிறுவனங்கள் பயணிகள் சேவையில் பின்தங்கியே உள்ளன. அதுவும் தொலைந்து/உடைந்து போன சாமான்களை திருப்பித் தருவதில் ஒரே குழப்பம்தான். அமெரிக்காவில் உள்ள யுனைட்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் பல வகைகளிலும் போராடி, வெற்றியில்லாமல், இசைக்கலைஞர் ஒருவர் வித்தியாசமாக இதைக் கையாள முடிவு செய்தார். யுனைடெட் பற்றி யூடியூப்பில் ஒரு விடியோ வெளியிட்டார். தர்மசங்கடப்பட்ட யுனைடெட், அவரது பிரச்னையைத் தீர்க்க ஒழுங்காக முன்வந்தது!

ஆகஸ்ட் 6, 2010: டானர் பிரவுன் என்ற பத்து வயது கனேடிய சிறுவன் மிகவும் சோகமாக இருந்தான். அப்படி என்ன சோகம் பத்து வயதில்? டானருக்கு வினோத நோய் ஒன்றால் (Duchenne muscular dystrophy) மின்சார நாற்காலி இல்லாமல் நகர முடியாது. இன்னும் 2 வருடங்களே வாழ்வான் என்று நிர்ணயிக்கப்பட்டது. டானருக்கோ சில சின்ன ஆசைகள். அதில் ஒன்று நியுயார்க் நகரத்தை பார்க்க வேண்டும் என்பது. பயணத்தின்போது அவனுடைய மின் நாற்காலியை ஏர் கனடா சேதம் செய்து விட்ட்து. விசேஷ மின் நாற்காலி இல்லாத டானர் வலியில் துடித்துள்ளான். விமான நிறுவனம் வழக்கமான நழுவல் வார்த்தைகளை சொன்னது. பார்த்தார் டானருடைய அத்தை – விமான அனுபவத்தைப் பற்றி டிவிட் செய்தார். ஒரு மணி நேரத்தில் 15,000 பேர் ஏர் கனடாவுக்கு எதிராகக் குவிந்தார்கள். நாங்கள் பழுது செய்து தருகிறோம், புதியது வாங்க பணம் இதோ என்று, பல வித செய்திகள் பறக்க, ஏர் கனடா தன் தவறை உணரத் தொடங்கியது. ஒழுங்காக மின் நாற்காலியை பழுது செய்து மேலும் டானருடைய இன்னொரு கனவையும் நிஜமாக்க முன் வந்த்து. அது, டானரும், அவனுடைய இரு உறவினர் குழந்தைகளையும் இலவசமாக ஆர்லாண்டோவில் உள்ள டிஸ்னிலாண்டிற்கு இலவசமாக ஏர் கனடாவில் (அடுத்த முறை, ஒழுங்கான மின் நாற்காலியுடன்) ஒரு வருடத்திற்குள் பயணம் செய்வது. டிவிட்டரால் சில நாட்களே உயிவாழவிருக்கும் சிறுவனின் சோகம் நீங்கியது என்று சொன்னால் மிகையாகாது. இன்று, சமூக வலையமைப்பு இணைத்தளங்கள் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களைவிட அதிகம் கவனிக்கப் படுகின்றன.

2009-இல் பாடகி ஷ்ரேயா கோஷலின் விசிறி ஒருவர் அவரை புது டில்லியில் சந்தித்து அவருடைய இணைத்தளத்தில் (blog) ஒரு பேட்டி வெளியிட்டார். இவர் ஷ்ரேயாவின் பாடல்களை பற்றி பல கட்டுரைகள் எழுதியவர். எப்படி பேட்டி கிடைத்தது? டிவிட்டர் மூலம் ஷ்ரேயாவிடம் சந்திப்பு பற்றி எல்லா ஏற்பாடுகளும் செய்து அவரை 1 மணி நேரம் சந்தித்துள்ளார். இவர் ஒன்றும் பெரிய செய்தி நிறுவனத்துக்கு வேலை செய்யவில்லை.

நாம் பார்த்த ஆறு உதாரணங்கள் 2010-இல் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடக உலகில் வீசும் சூறாவளிக் காற்றை எடுத்துக்காட்டுகிறது. பல நூறு ஆண்டுகளாக ஆளுமை செய்து வந்த அச்சுத்தொழில் இணையப்புரட்சியால் கலக்கம் கண்டுள்ளது. இக்கட்டுரையை நீங்கள் படிப்பதே இத்துறையின் அதிவேக முன்னேற்றத்தால்தான். அச்சு மீடியாவில் செய்தித்தாள்கள், பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் அடங்கும். இவர்கள் உணர்கிறார்களோ இல்லையோ, சற்று தடுமாறும் நிலையில்தான் உள்ளார்கள். தொலைக்காட்சி மீடியா கடந்த 40 வருடங்களாக மிகவும் சக்தி வாய்ந்ததாக வளர்ந்துள்ளது. இதிலும் சற்று ‘இணைய ’அடிதான். ராஜாக்கள் போல சுற்றி வந்த பல புத்தக வெளியீட்டாளர்களும் இணையத்தால் சங்கடத்துக்குள்ளாகியிருக்கிறார்கள். இந்த நிலை பெரும்பாலும் மேற்குலகில் காணக்கிடைப்பது. ஆனால் மேற்கில் ஏற்படும் எந்த ஒரு வர்த்தக, தொழில்நுட்ப மாற்றமும் உடனடியாகவோ, சற்று தாமதமாகவோ இந்தியாவையும் பாதிக்கிறது என்பதால் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயமாகிறது இணையத்தின் வளர்ச்சி.

சரி, இணையமும் வழக்கமான மீடியாவும் அவரவர்கள் தொழிலை கவனிக்கலாமே என்று தோணலாம். அங்குதான் சிக்கல். சகல மீடியாவையும் இயக்குவது விளம்பரப் பணம். இது கொஞ்ச கொஞ்சமாக இணையம் பக்கம் திரும்பியுள்ளதால் வழக்கமான மீடியாவுக்கு ஜுரம். மீடியா ஜுரம் பற்றிய அலசலே இக்கட்டுரையின் நோக்கம். இதை மூன்று பகுதிகளாய் அலசுவோம் :

1) புத்தகங்கள் மற்றும் அச்சு வெளியீடு (print publishing)

2) செய்தித்தாள்கள் & தொலைக்காட்சி .

விவரமாக இப்பகுதிகளை ஆராய்வதற்கு முன் என்னுடைய தனிப்பட்ட அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து கொள்ள ஆசை. புறநகர் பகுதியில் வசிக்கும் நான், கடந்த பத்து வருடங்களாக, ரயிலில் அரை மணி நேரம் வேலைக்கு பயணிக்கிறேன். சில நாட்கள் ரயிலில் இடம் கிடைக்காது. மற்ற பயணிகள் என்ன செய்கிறார்கள் என்று கவனிப்பது சுவாரசியமான விஷயம். இந்த working_at_laptop_on_trainகவனிப்பு இக்கட்டுரையுடன் தொடர்புடையது. முதலில், எது நடந்தாலும் பயணிகளில் ஒரு 20% முன்னிரவு சரியாகத் தூங்காமல் ரயில் பயணத்தின்போது தூங்குவார்கள். 2000 முதல் 2004 வரை பலர் பெரிய செய்தித்தாள்களை (ஒரு 40%) கொச கொச வென்று தூங்குபவர்களை எழுப்பும் வில்லன்களாய் படிப்பார்கள். ஒரு 20% பத்திரிகை மற்றும் நாவல்கள் படிப்பார்கள். சிலர் தீவிர மத நூல்களைப் (காலை பயணத்தில்) படிப்பார்கள். சிலர் வேலை, படிப்பு சம்மந்த புத்தகங்கள் படிப்பார்கள். இதில் 2004-இல் சிலர் மடிக்கணினிகளில் ரயிலில் வேலை செய்யத் தொடங்கினார்கள். 2005-இல் திடீரென்று, பலரும் ஐபாடுக்கு தாவினார்கள். சரேலென ஒரு 30% பயணிகள் கொச கொச செய்தி தாள்களைத் துறந்து, காதணிக்கு மாறினார்கள். 2007 வாக்கில், இது இன்னும் மாறத் தொடங்கியது. பலரும் செல்பேசியில் காதணி அணிந்து, மற்றும் ப்ளாக்பெரியில் ஏதாவது செய்யத் தொடங்கினார்கள். விளம்பரங்கள் நிறைந்த இலவச செய்தித்தாள்கள் கேட்பாரற்று ஏங்கத் தொடங்கின. 2008 முதல் பலரும் மடிக்கணினியில் ஓடும் ரயிலில் கம்பியில்லா இணையத்தில் மேயத் தொடங்கினார்கள். கொச கொச செய்தித்தாள் கூட்டம் 10% ஆக குறைய ஆரம்பித்தது. 2008-இல் நாவல் கூட்டமும் குறையத் தொடங்கியது – கிண்டிலுக்குப் (kindle) பலரும் தாவினார்கள். இன்று ஐபேட் வந்து ஓடும் ரயிலில் பலரும் கணினி திரையை தடவித் தடவி பயணிக்கிறார்கள். தூங்கும் கூட்டத்திற்கோ இது ரொம்ப செளகரியமான வளர்ச்சியாகப்படுகிறது – செல்பேசியின் மின்னஞ்சல் தட்டல், ஐபேடின் திரைதடவல், ஐபாடின் இசை இவை எல்லாம் சிறந்த பின்னணி இசை போல இவர்கள் தூக்கத்தை கெடுப்பதில்லை. ஆனால், அச்சு உலகமோ வில்லன்களாய் இவர்களைப் பாடாய்ப்படுத்துகிறது!

அச்சுத் தொழில் இணைய முன்னேற்றத்தால் பல வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்த சில கட்டுரைகளில் பார்க்க இருக்கிறோம். அதற்கு முன், ஒன்றை நாம் மனதில் கொள்ள வேண்டும். இது ஒன்றும் முடிந்த வரலாற்றுத் தொடர் அல்ல. பல விதங்களிலும், பல புது ஐடியாக்களுடனும் மிகவும் அறிவுபூர்வமாய் நடத்தப்படும் நிகழ்கால வியாபாரப் போராட்டம். இந்த போராட்ட்த்தில் பல சுற்றுகள் உள்ளன. ஒவ்வொரு சுற்றிலும் (டிவியில் வரும் பாட்டுப் போட்டி போல), சில வர்த்தக முறைகள் வெற்றி பெருகின்றன, சில பின்தள்ளப்படுகின்றன. ஒன்று மட்டும் நிச்சயம்: தொழில்நுட்பத்தை வியாபாரரீதியாகப் புரிந்து கொண்ட நிறுவனங்களே வெற்றி பெருகின்றன.

சொல்வனம் -ஆகஸ்ட் 2010

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s