நேரம் சரியாக… – பகுதி 3

டேவிட் வைன்லேண்ட் என்ற அமெரிக்கர், 2012 –ல் பெளதிகத்திற்காக (David Wineland) நோபல் பரிசு பெற்றவர். கொலராடோ மாகாணத்தில் உள்ள போல்டர் என்ற நகரிலிருக்கும், NIST (National Institute for Standards and Technology, Boulder, Colarado) என்ற அமைப்பில், புகழ் பெற்ற ஆராய்ச்சியாளர். பெளதிகம் என்று படித்தவுடன் உங்கள் மனதில் பல எண்ணங்கள் தோன்றியிருக்கலாம். இவரும், இவருடைய சக ஊழியர்களும் தங்கள் வாழ்க்கையை, துல்லியமாக ஒரு நொடியை அளக்கும் பணிக்கு அர்ப்பணித்துள்ளனர். அட, நொடியைத்  துல்லியமாக அளக்க வாழ்நாள் தேவையா? ஒன்றல்ல, சில பல வாழ்நாட்கள் தேவை. விஞ்ஞான முறைகள் அவ்வளவு எளிதானவை அல்ல.

ஒரு நொடியை 10 பில்லியன் பங்குகளாய் பிரித்துத் துல்லியமாக அளக்கும் விஷயம் சாதாரண விஷயம் அல்ல. இன்று உலகம் முழுவதிலும், பல வகைத் தொழில்நுட்பச் சாதனங்கள், ராணுவப் பயன்பாட்டு முன்னேற்றங்கள், ஏன் அடிப்படைப் பெளதிக ஆராய்ச்சிக்குக் கூட, இப்படிப்பட்ட ஆராய்ச்சி தேவைப்படுகிறது. உதாரணமாக, இந்திய விண்வெளிக் கழகத்தின் ராக்கெட்டுகளை ஏவுவதற்கும், அவை சரியாகப் பறப்பதற்கும், நீங்கள் மாலையில் சரியாக 9 மணிக்கு தொலக்காட்சியில் செய்திகள் பார்ப்பதற்கும், இந்த துல்லிய நொடியளவிற்கும் சம்பந்தம் உள்ளது. டேவிட், ஒரு பேட்டியில் இப்படி சொன்னார், “கடந்த 10 நூற்றாண்டுகளாக, நேரத்தின் துல்லிய அளவீடல் கூடக் கூட, புதிய பயன்பாடுகள் தோன்றிக் கொண்டே வந்துள்ளன. அடுத்த துல்லிய அளவீட்டிற்காக எந்த பயன்பாடு காத்திருக்கிறதோ!”

Winner of 2012 Nobel prize for physics, David Wineland

டேவிட் வைன்லாண்ட்

இன்று உலகெங்கும் கார் ஓட்டுபவர்கள் சார்ந்திருக்கும் ஜி.பி.எஸ் எனப்படும் உலக இடங்காணும் அமைப்பு என்பது. நேரத் துல்லிய அளவீட்டின் ஒரு மிக முக்கிய பயன்பாடு. இதைப் பற்றி விவரமாக இன்னொரு பகுதியில் பார்ப்போம். முதலில் நாம் உபயோகிக்கும் கருவிக்கு ஜி.பி,எஸ். ஏற்பி என்பதே சரியானது (GPS receiver). இதை நாம் ஜி.பி.எஸ். என்றே சொல்லிப் பழகிவிட்டோம். ஜி.பி.எஸ். என்பதற்கு சரியான தமிழ் சொல் எனக்குத் தெரிந்து இல்லை. ”உலக நிலை காட்டும் கருவி” என்று வேண்டுமானால் சொல்லலாம். அத்துடன், துல்லியத்தைத் தேடும் விஞ்ஞானிகள், அடிப்படை அணு அமைப்பைப் பற்றிய அறிவையும் வளர்த்து வருகிறார்கள். சரி, அணு அமைப்புக்கும் துல்லிய நேர அளவீடலுக்கும் என்ன சம்பந்தம்? இந்தக் கேள்விக்கு, ஆரம்பத்திலிருந்து மணித் துளியை எப்படி அளந்து இன்றைய நிலையை அடைந்தோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

20-நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் கண்ணதாசன், ஒரு சினிமா கவிதையில்,

இரவுக்கு ஆயிரம் கண்கள், பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள், உறவுக்கு ஒன்றே ஒன்று

என்று மிக அழகாக எழுதியிருந்தார். கவிஞர் சொன்னது போல, ஆரம்ப கால மனிதனுக்கு இரவு, பகல் என்ற மாற்றத்தை அளவிட மட்டுமே தேவை இருந்தது. அதாவது, எப்பொழுது இரவாகும், எப்பொழுது பகலாகும் என்று தெரிந்தால் வாழ்க்கையை அதன்படி அமைத்துக் கொள்ளத் தோதாக இருந்தது, இவ்வகை கணக்கீடுகள். வானத்தில் சூரியனின் நிலை அல்லது இரவில் சந்திரன், அல்லது குறிப்பிட்ட விண்மீன்களின் நிலையைக் கணித்து நேரத்தை மறைமுகமாக கணக்கிட்டனர்.

இப்படி கணக்கிடத் தொடங்கியவர்கள் சில சிரமங்களைச் சந்தித்தனர். வருடந்தோறும் சூரிய ஒளி ஒவ்வொரு நாளும் சீராக இத்தனை மணி நேரம் என்று இருப்பதில்லை. குளிர் காலத்தில், பகல் நேரம் குறைவாகவும், இரவு நேரம் அதிகமாகவும் இருப்பதை உணர்ந்தனர். அத்துடன் தேசங்களிடையே சூரிய ஒளி நேரம் மாறுபட்டது. நேர அளவீடும், வானவியலும் பின்னி வளர்ந்தன. நேர அளவீட்டிற்கு, வானவியல் மற்றும் கணக்கியல் வளர்ச்சியும் தேவைப்பட்டது. சிலர் வானவியலில் குறியாக இருந்தாலும், மற்றச் சிலர், வானவியலைக் கொண்டு துல்லியமாக நேரத்தை அளவிட முற்பட்டனர். எகிப்தியர்கள் சூரிய கடிகார அமைப்பில் பல்லாயிரம் ஆண்டுகள் முன்பு தேர்ச்சியடைந்தனர். ஒரு ஸ்தூபி போன்ற அமைப்பின் நிழலின் நீளத்தை வைத்து நேரத்தை அளந்தார்கள். நாளின் நீளம் குளிர் காலம் மற்றும் வெய்யில் காலத்தில் வேறுபட்டதால், இந்த அளவீடு ஒரு குத்து மதிப்பான ஆரம்பம். ஆனால் இதைப் போன்ற சூரிய கடிகாரங்கள் ஒரே மாதிரி எல்லா தேசங்களிலும் உருவாக்க முடியாது. உதாரணத்திற்கு எகிப்தில் உருவான சூரிய கடிகாரம், கனடாவில் வேலை செய்யாது. ஏனென்றால், கனடாவின் அட்சரேகை (latitude) எகிப்திலிருந்து மாறுபட்டது. கனடாவில், சூரியனின் உயரம் (வானத்து நிலையைப் பார்த்தால்) எகிப்தைவிட குறைவு. அதனால், நிழலில் நீளம் அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட விஷயங்கள் இந்த நேர அளவீட்டு முறையில் குறையாக இருந்தாலும், அருமையான முதல் முயற்சி.
பல பழைய நாகரீகங்கள் நேரத்தைக் கணக்கிடப் பல்வேறு முறைகளைப் பின்பற்றி முயற்சி செய்ததற்கு அறிகுறிகள் உள்ளன. சீனர்கள், எண்ணெயைச் சீராக எரித்து மீதமுள்ள எண்ணெயின் அளவை வைத்து நேரத்தை அளவிட முயற்சித்தனர். மெழுகுவர்த்தியைச் சீராக எரித்தும் முயன்று பார்த்தனர். அடுத்த பெரும் முயற்சி, தண்ணீரை, சில பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கலன்களில் சீராகப் பாயச்செய்Time_Measure_Quantity_Clocks_Life_Rotate_Revolve_Accuracyது, நீரின் அளவை வைத்து நேரத்தை கணக்கிட்டார்கள். சூரிய, எண்ணெய், மெழுகைவிட தண்ணிர் நேரத் துல்லியம் அதிகமிருந்தது. சீனர்கள் இந்த முயற்சியிலும் முதன்மை பெற்றார்கள். அடுத்தபடியாக, பழைய நாகரீகங்கள் உருவாக்கிய நேர அளவீடல் முறை இன்றைய விண்டோஸ் (Microsoft Windows) நுகர்வோர் நிரல் (Consumer programs) இயங்க நேரமானால் பார்க்கும் படவுரு (icon) – அதாவது மணிக் கண்ணாடி (hour glass). முதலில் துல்லியமாக கண்ணாடியை ஊதும் தொழில்நுட்பம் வளர்ந்தது. ஒரே சீரான மணலை நிரப்பி, மேலிருந்து கீழ்க் குவளைக்கு புவிஈர்ப்பு சக்தி மூலம் இறங்கும் காலத்தை வைத்து, நேரத்தை அளவிட முயற்சித்தார்கள். அன்றைய நாகரீகங்களின் நேர அளவீட்டுத் தேவை விவசாயம் மற்றும் தொழுகை நேரம் போன்ற விஷயங்களுக்காக. விவசாயத்திற்குக் கூடத் தோராயமாக நேரமறிந்தால் போதும். ஆனால், பாதிரியார்கள், சுற்றியுள்ள கிராமங்களுக்குச் தொழுகைக்கான நேரத்தைச் சரியாக அறிவிக்கும் கட்டாயத்தில் இருந்தார்கள். ஆரம்ப கால நேர அளவீட்டாளர்கள் பாதிரியார்களாக இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

சுமார் 1275 -ஆம் ஆண்டுவரை, இப்படியே காலத்தை அளவிட்டு (காலம் தள்ளினார்கள்!) வந்தார்கள். ஆனால், வியாபாரக் காரணங்களுக்காக இதைவிடத் துல்லியமான கால அளவீட்டுக் கருவி தேவைப்பட்டது. முதல் எந்திரக் கால அளவீட்டுக் கருவி (mechanical clock) 1275 –ல் உருவாக்கப்பட்டது. லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள உலோகச் சுருளை மையமாகக் கொண்ட, கால அளவீட்டுக் கருவி (metal spring based mechanical clock) 1450 –ல் உருவாக்கப்பட்டது. 1600 –வரை உருவாக்கப்பட்ட கருவிகள் அனைத்தும் கடலில் வேலை செய்பவை அல்ல. கப்பல் பயணம், வியாபாரத்திற்கு தேவையான ஒன்றாகியது. ஆனால், கடலில் இரவு பகலைத் தவிர நேரத்தை அளக்க வழி ஏதும் இல்லாமல் இருந்தது.

க்ரிஸ்டியன் ஹைகென்ஸ் (Christian Huygens) என்பவர், 1656 –ல் முதல் முதலாக ஊசல் நேர அளவீட்டுக் கருவியை (pendulum clock) உருவாக்கினார். இதை நாம் தாத்தா கடிகாரம் என்று அழைக்கிறோம். சரித்திரத்தில் முதன் முறையாக, நேர அளவீட்டின் துல்லியத்தை மனிதர்கள் அறியவும், மதிக்கவும் தொடங்கினார்கள். ஒரு நாளைக்கு ஒரு நிமிடம் இப்படி, அப்படி இந்த கடிகாரம் நேரத்தைக் காட்டியது. அன்று, இது ஒரு மாபெரும் சாதனையாகக் கொண்டாடப் பட்டது. 18 –ஆம் நூற்றாண்டில் இதை மேலும் துல்லியமாக்க முயன்று, நாளொன்றிற்கு 1 நொடியே இழக்கும் அளவுக்கு இந்தக் கடிகாரங்களை முன்னேற்றினார்கள். இதற்கு உலோகத்திற்குத் துல்லிய  இழைப்பு (precision metal machining) தேவைப்பட்டது.

வியாபாரிகள் கடலில் இந்த கடிகாரங்களை எடுத்துச் சென்றால், அவை சரியாக நேரம் காட்டவில்லை. கடலில் வெப்பநிலை மாறிக் கொண்டே இருப்பதும், உப்புக் காற்றினால், உலோகங்களின் உராய்வு (metallic friction) அதிகமாக இருந்தது. 1671 –ல் ஜான் ஹாரிஸன் என்பவர், உராய்வு மற்றும் வெப்பத்தை ஈடுகட்ட, வழியைக் கண்டுபிடித்த பின், இவரது கடிகாரம் முதன் முறையாக மாலுமிகளுக்கு தீர்க்க ரேகையை (longitude) ஒரு அரை டிகிரிக்குள் துல்லியமாக கணக்கிட்டது. கடல் மூலம், ஒரு வியாபாரப் புரட்சி உருவாக உதவியது. எந்திர கடிகாரங்களின் அடிப்படை, ஊசல் (pendulum) மற்றும் தப்பி (escapement), ஊசல், சீரான ஒரு அசைவை உருவாக்குகிறது; தப்பி, ஊசலின் சீரான அசைவை கட்டுப்படுத்துகிறது. இதனால் உருவாகும் சக்தியை பல் சக்கரங்கள் (gears) பகுத்து, நமக்கு நேரத்தைக் காட்டும் முட்களை நகர்த்துகின்றன.

மேற்கொண்டு இயந்திர கடிகார முன்னேற்றம் பற்றி விவரிக்குமுன், ஏன் ஒரு மணிக்கு 60 நொடி என்று முடிவு செய்தனர்? யார் அப்படிச் செய்தது? முதலில் எகிப்தியர்கள், நாளை 12 பாகங்களாகப் பிரித்தார்கள். இது பாபிலோனிய நாகரீகத்திலிருந்து வந்திருக்கலாம் என்று பரவலாக நம்பப்படுகிறது. பாபிலோனியர்கள் 12 ஐ ஒரு விசேட எண்ணாகக் கருதினர். இதற்குக் காரணம், 12 என்ற எண், 1,2,3,4 மற்றும் 6 –ஆல் சரியாக வகுபடும். இரவும், பகலும் ஒரே நீளமானது என்ற நம்பப்பட்டதால், நாளொன்றுக்கு 24 மணி நேரம் என்றாகியது. இத்தோடு, சுமேரியா நாகரீகத்தினர். வட்டமான நேர அளவீட்டு கருவிகளில், சுழற்சியின் கோணத்தை அளக்க, 60 சரியான எண் என்று முடிவெடுத்தார்கள். இதனால், இன்றுவரை, ஒரு நாளைக்கு 24 மணி நேரம், ஒரு மணிக்கு 60 நிமிடங்கள், ஒரு நிமிடத்திற்கு 60 நொடிகள் என்ற பாரம்பரியமான கணக்கு தொடந்து வருகிறது.

இந்த 60 என்ற எண்ணின் இன்னொரு பரிமாணம், முதலில் வருடத்திற்கு 360 நாட்கள் என்ற கணக்கு. இன்றும் புழங்கும் பல சமய, சமூக ஆண்டுப் பிரிப்பில் (அதாவது காலண்டர்/ பஞ்சாங்கங்களில்) இந்த விஷயம் தொடர்கிறது. பூமியின் சுழற்சி பற்றிய துல்லிய அறிவு வளர்ந்தவுடன், 360 நாள் என்பது, வருடத்திற்கு 365.25 நாட்கள் என்று மாறியது. இதைச் சமாளிக்க சில மாதங்களில் அதிக நாட்கள், மற்றும் சிலவற்றில் குறைவாக வைத்துக் கொண்டோம்.

இப்படி, எந்தவித வரலாறும் இல்லாமலிருந்தால், வேறு விதமாகக் கால அளவீட்டை நாம் அணுகியிருக்கலாம்.  பழைய முறைகளில் துல்லியம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், அவர்களால் இயன்றவரை இயற்கையை மிகவும் சரியாகக் கவனித்திருக்கிறார்கள். எந்த மாதத்தின் தொடக்கமும் ஒரு காலைப் பொழுதில் தான் ஆரம்பிக்கிறது. மாலை 3 மணிக்கு இதோ புதிய மாதம் என்ற அபத்தம் எல்லாம் இல்லை. விஞ்ஞானம், பழைய அணுகுமுறைகளை அனுசரித்தே முன்னேறி வந்துள்ளது. அறிவு வளர வளர, சில மாற்றங்கள் தேவையாகி விட்டன. இப்படி உருவான இன்னொரு மாற்றம், நேரப் பகுதி (time zone).

அட்சரேகை என்ற வார்த்தை தமிழில் இருந்தாலும் நேரப் பகுதிக்கு தமிழில் வார்த்தை இல்லை. ஒரு நாடு மிகவும் அகலமாக இருந்தால், அதில் பல அட்சரேகை அளவுகள் அடங்கும். இதனால், சூரிய உதய நேரம், அந்நாட்டுக்குள் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மாறுபடும். உதாரணத்திற்கு, கனடாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஹாலிஃபாக்ஸ் (Halifax, Nova Scotia) நகரத்தில் சூரிய உதயம் 6 மணிக்கு என்றால், மேற்கே உள்ள வான்கூவர் (Vancouver, British Columbia) நகரத்தில், அப்பொழுது அதிகாலை 2 மணி. இது போன்ற நிலை தமிழ் பேசப்படும் பூகோளப் பகுதிகளில் இல்லாததால், நேரப் பகுதி என்ற கணக்குக்கு தமிழில் வார்த்தை இல்லை போலும்! 2000 ஆண்டு நிகழ் இருக்கும் நேரத்தில், பல கணினி நிரல்களையும் சரிகட்டும் வேலையை நிரலர்கள் உலகம் எங்கும் செய்து வந்தார்கள். பக கணினிகள் தாறுமாறாகக் கணக்கிடும், ஏன் போக்குவரத்து சிக்னல்கள் கூட சரியாக வேலை செய்யாது என்று பரவலாகப் புரளி கிளம்பிய காலமது. கனடாவின் மற்ற பகுதிகளில் இருப்பவர்கள், ஹாலிஃபாக்ஸில் எதுவும் அசம்பாவிதம் நடைபெறவில்லை என்றதும் பெரிதும் அமைதியடைந்தனர்.

இயந்திர கடிகாரத்திற்கு வருவோம். இதன் முன்னோடி, சென்ட்ரல் ஸ்டேஷனில் இருப்பதைப் போன்ற மணிக்கூண்டுகள். இவவகைக் கடிகாரங்கள், ராட்சச எடைகள், பற்சக்கரங்கள், கப்பிகள் (weights, gears, pulleys) கொண்டு உருவாக்கப்பட்டவை. இவற்றில், 60 நிமிடங்களுக்கு ஒரு முறை, ஒலி எழுப்பும் முறைகளும் தேவையாக இருந்ததன. மணிக் கூண்டுகள் நாளைக்கு ஒரு நிமிடத் துல்லியம் வரை செயல்படக்கூடியவை. இவற்றை உருவாக்குவது ஒரு தனிக்கலை/பொறியியல். சில மணிக்கூண்டுகள் நாளொன்றிற்கு ஒரு நொடி வரை துல்லியம் வாய்ந்தவை.

இதோ மணிக்கூண்டுகள் பற்றிய ஒரு சுவாரசியமான விடியோ…

20 –ஆம் நூற்றாண்டில், மணிக்கூண்டிலிருந்து, கைக்குத் தாவின கடிகாரங்கள். துல்லியம் என்பது ஒரு வியாபார விஷயமானது. ஸ்விஸ்காரர்கள் துல்லிய எந்திரக் கடிகாரங்களை உருவாக்குவதில் வல்லமை பெற்றார்கள். அதிகத் துல்லியத்திற்கு, அதிகப் பணம் தேவைப்பட்டது. ஏனென்றால், நேர இழப்பைச் சரிக்கட்ட இயந்திரச் சிக்கல்கள் ஏராளமாயின. எந்திரக் கைக்கடிகாரங்கள் சுருளின் (mechanical spring) சக்தியை அடிப்படையாகக் கொண்டவை. முதலில் உருவாக்கப்பட்ட இயந்திரக் கடிகாரங்கள், ஒவ்வொரு நாளும் சுருளைச் சுற்றிவிட்டு (இதற்கென்று பிரத்யேகத் திருகு உண்டு) கடிகாரத்திற்குச் சக்தி கொடுக்க வேண்டும். சுருளில் இருக்கும் சக்தி, சிக்கலான பல்சக்கர அமைப்புகள் மூலம் கடிகாரத்தின் கைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் தானியங்கி கடிகாரங்களும் வந்தன. இவை அணிபவரின், மணிக்கட்டு அசைவை சுருளுக்கு சக்தியாக மாற்றும் வல்லமை கொண்டவை. மிகவும் விலை அதிகம் விற்ற இவ்வகை கடிகாரங்கள் ஸ்விஸ் நாட்டவரின் கருக்கான தொழில்நுட்பத்தின் அடையாளமாகத் திகழ்ந்தன.

முதலில் சுருளால் உந்தப்பட்ட எந்திரக் கடிகாரங்கள், அமெரிக்காவில் 19 –ஆம் நூற்றாண்டில் பிரபலமாயின. தொழிற்சாலைகளில் ஷிஃப்டுகளைக் கட்டுப்படுத்த, ரயில் பயண அளவீடு, ரயில் பிரயாணம் சார்ந்த நேர அளவீடு என்று பல தரப்பட்ட வியாபாரப் பயன்பாடுகள் உருவாயின. ரயில்வே நேரம் என்பது மிகத் துல்லியமானது என்று மக்கள் கருத ரயில்வே நிறுவனங்களிடம் இருந்த துல்லியமான எந்திர கடிகாரங்கள் காரணமாகின. கைக் கடிகாரம் என்பது முதல் உலகப் போரின் போதுதான் (1914-1918) பிரபலமானது. ஆரம்பத்தில் ராணுவ நேர அளவீடுகளுக்கு மட்டுமே உபயோகமானது என்று கருதப்பட்டது. சாதரண மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை நேரம் சார்ந்து அமைத்துக் கொள்ள 1920 –களுக்கு மேல் அவர்களின் கைகளுக்கு தாவியது. பஸ்ஸைப் பிடிக்க, அலுவலகம் செல்ல, பள்ளி செல்ல, ஓட்டப் பந்தயங்களை அளவிட என்று பல விஷயங்களுக்கும் கடிகாரங்கள் ஆயிரக்கணக்கான பயன்பாடுகளுக்கு உபயோகப் படுத்தப்பட்டுள்ளன. இன்று எந்தப் பந்தயம்/விளையாட்டும் நேர அளவீடு இல்லாமல் நடப்பதில்லை. நேர அளவீட்டு துல்லியம் அதிகமாக, அதிகமாக விளையாட்டு போட்டிகள் அதை உபயோகப் படுத்திக் கொண்டுள்ளன. உலகின் மிகப் பெரிய விளையாட்டுப் போட்டிகளில் கடிகாரத் தயாரிப்பாளர்கள் தங்களுடைய மிகத் துல்லியமான கடிகாரங்களைப் பற்றி மார் தட்டிக் கொள்கிறார்கள். ரோலக்ஸ் என்ற மிகப் பெரிய வியாபாரச் சின்னம் (watch brand) உருவாக, விளையாட்டு நேர அளவீட்டுத் துல்லியம் ஒரு காரணம்.

இதோ ஸ்விஸ்காரர்கள் எப்படி எந்திர கடிகாரத்தில் விளையாடுகிறார்கள் என்பது பற்றிய ஒரு சுவாரஸியமான விடியோ…

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் ‘புலோவா’ என்ற கடிகாரத்தை ஒரு பெண் அணிந்திருப்பதாக எழுதியிருந்தேன். இந்த புலோவா நிறுவனக்காரர்கள் கடிகார அமைப்பில் கொடி கட்டிப் பறந்தவர்கள். இவர்கள், மிகச் சிறிய மோட்டார்களை கடிகாரத்திற்குள் வடிவமைத்து, இசைக்கவை (tuning fork) ஒன்றை ஆதாரமாக வைத்து, சிலபல பல்சக்கர உதவியுடன் மிகத் துல்லிய கடிகாரங்களை உருவாக்கினார்கள். மாதத்திற்கு ஒரு நொடியே வித்தியாசம் காட்டும் அளவிற்கு துல்லியமானது என்று உலகிற்கு சவால் விட்டார்கள். 1964 –ஆம் ஆண்டில், இவர்கள் அக்யூட்ரான் (Accutron) என்ற கடிகாரத்தின் துல்லியத்தை யாராலும் 5,000 ஆண்டுகளுக்கு முறியடிக்க முடியாது என்று இதைப் பற்றிய சவாலை நியூயார்கில் ஒரு கால வில்லைக்குள் (time capsule) புதைத்தார்கள் இவர்களுக்கு, வெறும் ஆறு வருடத்தில் இது வெறும் அரசியல்வாதி சவால் போல காலாவதியாகி விடும் என்று தெரிந்திருக்க நியாயமில்லை. விஞ்ஞானம் அப்படிப்பட்டது!

சொல்வனம் – நவம்பர் 2013

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s