வீடியோ விளையாட்டுக்களும் கணினி இணையாளலும் – பகுதி 1

எனக்கு தெரிந்த பெரியவர் ஒருவர், தன் மகன் மூலம், நான் அனிமேஷன் கட்டுரைகள் எழுதியதை அறிந்து, சில ஆண்டுகள் முன்பு, இப்படி அலுத்துக் கொண்டார்:

“பொம்மை படம் பற்றி எல்லாம் கட்டுரை எழுதறயாமே!” (இவருக்கு, மனிதர்கள் நடிக்காத படங்கள் எல்லாமே பொம்மைப் படங்கள்)

“ஆமாம்”

“இந்த சின்ன பசங்க தொல்லை தாங்க முடியலப்பா. எப்பப் பாரு வீடியோ விளையாட்டு என்று எதையாவது திருகிகிட்டே இருக்காங்க”

”அவங்க சுறுசுறுப்புக்கு அது ஒரு நல்ல வடிகால் தானே. உங்க பேரங்க எல்லாம் நல்லாத்தானே படிக்கிறாங்க”

“அதெல்லாம் சரிதான். அதென்ன 4,500 டாலருக்கு கம்ப்யூட்டர்? 600 டாலருக்கு பிரமாதமான கம்ப்யூட்டர் கிடைக்கறப்ப எதுக்கு இந்த வீண் செலவு?”

“விளையாட்டு கம்ப்யூட்டருக்கு நிறைய சக்தி வேணும். அதனால விலையும் கூட”

“ஒன்னும் புரியலப்பா. எல்லாரும் சொன்னாங்கன்னு ‘ரோபோ’ படம் பார்த்தா, அது பாதி பொம்மை படமா இருக்கு. ஒரே இரைச்சல் வேற” என்று மேலும் அலுத்துக் கொண்டார்.

Ravi_Natrajan_Circuits_Mother_Boards3அவர் சொன்னதில் ஓரளவு உண்மை இருப்பதை மறுக்க முடியாது. என்னுடைய அலுவலகத்தில் 6,000 டாலருக்கு விளையாட்டு கணினி வாங்கும் சிலரை அறிவேன். இவர்கள் பேசுவதே, வித்தியாசமாக இருக்கும். தண்ணீரால் குளிர்விக்கப்பட்ட கணினியில் இரவில் 10 மணி நேரம் தொடர்ந்து விளையாடுவதைப் பற்றி பெருமை கொள்ளும் விந்தை மனிதர்கள்.

இது என்ன வீடியோ விளையாட்டு பற்றிய கட்டுரையா? சத்தியமாக இல்லை. ஓரளவிற்கு, ‘சொல்வனம்’ இதழில் முன்னம் எழுதிய ‘விஞ்ஞான கணினி’ என்ற கட்டுரையின் தொடர் என்றுகூட கொள்ளலாம். சற்று பொறுங்கள் – வீடியோ விளையாட்டுக்கும் சீரியஸான விஞ்ஞான கணினிக்கும் என்ன சம்மந்தம்? இருக்கிறது. அதைத்தான் இந்தக் கட்டுரைத் தொடரில் பார்க்கப் போகிறோம்.

கணினி வீடியோ விளையாட்டுக்களுக்கு ஏராளமான கணிப்பு சக்தி (CPU power) தேவை. இன்றைய வீடியோ விளையாட்டுக்கள், உண்மையான காமிராக் காட்சிகள் போலக் காட்சிகளை செயற்கையாக உருவாக்கும் வல்லமை படைத்தவை. குறிப்பாக, இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

1. வெகு வேகமாக மாறும் காட்சிகள் – இயற்கையான காட்சி மாற்றம், அதாவது, டிஜிட்டல் துள்ளல்கள் இல்லா மாற்றங்கள்

2. தத்ரூபமான நீர்க் காட்சிகள்

3. மிகத் துல்லியமான ஒளிச் சிதறல் (diffraction) மற்றும் ஒளிப் பிரதிபலிப்பு (reflection)

4. ஒரே சமயத்தில், காட்சிக்கேற்ப, நடமாடும்/ஓடும் மனிதர்கள். அவர்களது இயக்கத்திற்கேற்ப, அசையும் அவர்களது உடை மற்றும் தலைமுடி.

5. துப்பாக்கியிலிருந்து/வில்லிலிருந்து வரும் குண்டு, மற்றும் அம்பு, எய்த திசையில் துல்லியமாக பயணம் மேற்கொள்ளும் அழகு. உண்மை துப்பாக்கிக் குண்டைப்போல, காற்று மற்றும் புவிஈர்ப்பு சக்திகளை கையாளும் விஞ்ஞான லாகவம்.

6. எந்த ஒரு கணினி திரையும் படமூலம், அதாவது pixel -களால் நிரப்பப்பட்டவை. இன்றைய கணினி திரைகளில், லட்சக்கணக்கான பிக்சல்கள் ஒரு காட்சியை தோற்றுவிக்கின்றன. அத்துடன், ஒவ்வொரு படமூலத்திற்கும், பல லட்சம் வண்ணங்கள் (colors) , ஒளிர்வு (brightness) என்று ஒரு காட்சிக்கே, பல லட்சம் பைட்டுகள் (megabytes) தேவை. மேலும், நொடிக்கு நொடி மாறும் வீடியோ விளையாட்டுகளில், சிலபல லட்சம் பைட்டுகளை ஒவ்வொரு நொடியும் கையாளுதல் அவசியம். இத்துடன், ஒளி அளவுகள், எய்யப்படும் குண்டுகளின் பாதை என்று அவற்றை துல்லியமாக கணக்கிட ஒரு பெளதிக எஞ்சினும் (physics engine) தேவை.

Ravi_Natrajan_Circuits_Mother_Boards1

இத்தனை விஷயங்களை கையாள பெண்டியம் போன்ற சக்தி வாய்ந்த பொது செயலிகளால் (General processors or CPUs) கூட இயலாத காரியம். இதற்காகவே, வீடியோ விளையாட்டுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படும் கணினிகளில், மேற்சொன்ன விஷயங்களுகாகத் தனியாக ஒரு வடிவியல் செயலி (graphics processor) தேவை. நம்முடைய அன்றாட கணினிகளில் கூட சுமார் சக்தி கொண்ட வடிவியல் செயலிகள் இருப்பதாலேயே நம்மால், அதிக சக்தி தேவையற்ற பல வீடியோ விளையாட்டுகளை விளையாட முடிகிறது. இதை on-board graphics processor என்கிறார்கள். பல சக்தி வாய்ந்த வீடியோ விளையாட்டுக்கள், தனிப்பட்ட வடிவியல் செயலிகள் உள்ள கணினிகளில் மட்டுமே இதை ஒன்றிப்போய் விளையாட முடியும் என்று சொல்லிவிடுகிறார்கள். நல்ல வேளை, சுந்தர் வேதாந்தம், ‘சொல்வனத்தில்’ , செயலிகள் பற்றிய அருமையான தொடர் ஒன்றை சமீபத்தில் எழுதினார். தயவு செய்து, அதை சொஞசம் படித்து விடுங்களேன். மீண்டும், அதைப் பற்றி இங்கு விளக்கி உங்களை அறுக்க விருப்பமில்லை.

சுறுக்கமாகச் சொல்லப் போனால், எந்த கணினி வீடியோ விளையாட்டிலும், விஞ்ஞானம் மறைந்திருக்கிறது. அதுவும், துல்லிய விஞ்ஞானம். இந்த வடிவியல் செயலிகள் வெறும் படமூலத்துடன் போராடும் செயலிகள் மட்டுமல்ல. அதையும் தாண்டி புனிதமானது (’குணா’ ஸ்டைலில் சொஞ்சம் எதிரொலியும் சேர்த்துக் கொள்ளுங்கள்)

பெரியவர் சொன்னது போல, முதலில், யாரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சின்ன பசங்க சமாச்சாரம் என்று விட்டு விட்டனர். ஏனென்றால், விஞ்ஞான கணக்கிடல்களுக்கு ராட்சசக் கணினிகள், பல கோடி டாலர்கள் செலவில் தேவையாக இருந்தது உண்மை. அத்துடன் அவை கணினி விஞ்ஞான ரீதியில், வேறு பாதையில் பயணித்துக் கொண்டிருந்தன. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், இவ்விரு பாதைகள் ஒன்றாகும் சாத்தியம் உண்டானது.

Ravi_Natrajan_Circuits_Mother_Boards2திடீரென்று, விளையாட்டாய்த் தொடங்கிய இத்துறை, மிக சீரியஸான விஞ்ஞானத் துறைகளில், இன்று விஞ்ஞானிகளுக்கு பல வித ஆராய்ச்சி முயற்சிகளில், பெரும்பங்கு வகிக்க ஆரம்பித்து விட்டது. விஞ்ஞானிகளும் இத்துறையை தன்னுடைய ஆராய்ச்சிக்கு உபயோகிப்பதில் தயக்கம் காட்டவில்லை. ஏனென்றால், சில அடிப்படை விஷயங்களில், இத்துறையின் வசீகரம் விஞ்ஞான சமூகத்தை தன் பக்கம் ஈர்த்துவிட்டது. உதாரணத்திற்கு, பல லட்சம் விளையாட்டு வடிவியல் செயலிகள், வருடம்தோறும் விற்கின்றன. அதனால், இந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படை பிரச்னைகள் யாவும் பல நுகர்வோர்களின் பயன்பாட்டால், தீர்க்கப்பட்டு விட்டன. அதாவது, இவை நம்பகமான செயலிகள் என்று பெயர் எடுத்துவிட்டன. அதுவும், பொறுமையே இல்லாத இளைஞர்களின் துல்லிய தேவைகளை நொடிப் பொழுதில் தீர்த்து வைப்பது சாதாரண விஷயமல்ல.

உயிர் தகவல் விஞ்ஞானம் (bio informatics), கூட்டணு இயக்கவியல் (molecular dynamics), மருத்துவ படமாக்கல் (medical imaging) மற்றும் குவாண்டம் வேதியல் (Quantum chemistry) போன்ற துறைகளில், இந்த வடிவியல் செயலிகள் பெரிய அளவில் உதவத் தொடங்கியுள்ளன. இதைத் தவிர, காற்றுமண்டல விஞ்ஞான ஆராய்ச்சி (atmospheric sciences), மூலப்பொருட்கள் விஞ்ஞான ஆராய்ச்சி (material sciences) போன்றவை இதன் பிற புதிய பயன்கள்.

வடிவியல் செயலி தயாரிப்பாளர்களும், விஞ்ஞானிகளின் தேவைக்கேற்ப புதிய மென்பொருள் கருவிகளையும் சேர்த்துக் கொண்டே வருகிறார்கள். இத்தனை வசதிகளுடன், சில ஆயிரம் டாலர்களுக்குஅருமையான ஒரு விஞ்ஞான உதவியாளன் கிடைத்தால் என்ன கசக்குமா?
இப்படி ஆரம்பத்திலிருந்தே அமையவில்லை. ஒரு பிரச்னையைத் தீர்க்கப் போய், இப்படியும் செய்தால் என்ன என்று ஆரம்பித்த சிந்தனை, இத்தகைய புதிய பாதையை வகுத்துள்ளது. ஆரம்பத்தில், பலகலைக்கழக விஞ்ஞானிகள் இத்தகைய வடிவியல் செயலிகளை கடைகளிலிருந்து வாங்கி வந்து, தன்னுடைய கணினிகளில் இணைத்து, அதற்காக தனியான குளிர்விக்கும் விசிறிகளை (cooling fans) பொறுத்தி, விஞ்ஞான பிரச்னைகளை இத்தகைய வடிவியல் செயலிகள் எப்படி தீர்க்கின்றன என்று சின்ன முயற்சிகளை மேற்கொண்டனர். சில விஞ்ஞான கருத்தரங்களில், பலத்த எதிர்ப்புகளுக்கு நடுவே, தங்களுடைய அணுகுமுறையை விளக்கினார்கள். யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. (ஒழுங்காக விஞ்ஞான ஆராய்ச்சி செய்யாமல், விளையாட்டு எந்திரங்களோடு பொழுதை கழித்துவிட்டு, நம் நேரத்தையும் வீணடிக்கும் இவர்களை எப்படி விஞ்ஞானிகள் என்று ஒப்புக் கொள்வது?).

இத்தகைய ஆரம்ப முயற்சிகளில் நிலநடுக்க ஆய்வாளர்கள் (Seismologists) முதலில் இவ்வகை வடிவியல் செயலிகளை பயன்படுத்த முன் வந்தனர்.

 

Ravi_Natrajan_Circuits_Mother_Boards4மெதுவாக இவ்வகை செயலிகளின் விலையைப் பார்த்து, (மிகக் குறைவு), மற்ற விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் உபயோகிக்கத் தொடங்கினர். இன்று, பல இயந்திரவியல் கட்டமைய்யு பொறியாளர்கள் (mechanical design engineers) இத்தகைய வடிவியல் செயலிகளை, தங்களது அன்றாடப் பணிகளுக்குப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். மேலும், உலகின் மிக சக்தி வாய்ந்த 10 கணினிகளை எடுத்துக் கொண்டால், அதில், இத்தகைய வடிவியல் செயலிகள் பொறுத்தப்பட்டவை 3 –வது இருக்கும் என்று சொல்லலாம்.

எதிர்காலத்தில், விளையாட்டுப் பிரியர்களை மட்டுமே சார்ந்து வடிவியல் செயலி நிறுவனங்கள் இருக்கப் போவதில்லை. இத்தகைய வடிவியல் செயலிகளை முன்னேற்றத் துடிக்கும் நிறுவனங்கள், தங்களது வியாபார விரிவுக்காக இத்தகைய உத்திகளை பின்பற்றி வந்துள்ளார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. இதனால், விளையாட்டும், விஞ்ஞானமும் தொடர்ந்தே இத்துறையில் பயணிக்கும் என்று நம்ப வாய்ப்புள்ளது. அதற்கு முன்னால், சொஞ்சம் சரித்திரம், இவ்வகை வடிவியல் செயலிகளின் வளர்ச்சியை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

அடுத்த பகுதியில் கொஞ்சம் சரித்திரம் பார்ப்போம்…

பின்குறிப்பு
தமிழ்ச் சொற்கள் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். இச்சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்

 

#

ஆங்கிலச் சொல்

தமிழ் பரிந்துரை

1

Bio Informatics

உயிர் தகவல் விஞ்ஞானம்

2

Molecular dynamics

கூட்டணு இயக்கவியல்

3

Medical imaging

மருத்துவப் படமாக்கல்

4

Quantum chemistry

குவாண்டம் வேதியல்

5

Atmospheric sciences

காற்றுமண்டல விஞ்ஞானம்

6

Material sciences

மூலப்பொருட்கள் விஞ்ஞானம்

7

General processors or CPUs

பொதுச் செயலிகள்

8

Graphics processor

வடிவியல் செயலிகள்

9

Personal Computer

தனிநபர் கணினி

10

Pixel

படமூலம்

11

Brightness

ஒளிர்வு

சொல்வனம் – ஜூலை 2014

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s