இரு சுருள் வளைய சர்ச்சை மற்றும் மூலக்கூறு உயிரியல் வளர்ச்சி – பகுதி 2

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு
கோழிகுஞ்சு வந்ததுன்னு
யானகுஞ்சு சொல்லக்கேட்டு
பூனகுஞ்சு சொன்னதுண்டு

கவிஞர் கண்ணதாசனின் ‘16 வயதினிலே’ பாடல் வரிகள், மிகவும் பிரபலம் அடைந்த ஒன்று. நகைச்சுவைக்காக எழுதிய பாடல் என்றாலும், இந்த நகைச்சுவையின் பின்னால், நமக்கு எல்லாம் புரிந்த, சில மரபுத்தொடர் (heredity) விஷயங்கள் அடங்கியுள்ளது. ஆட்டுக்குட்டி, முட்டையிடாது. அப்படியே முட்டையிட்டாலும் அதிலிருந்து கோழிக்குஞ்சு வராது. இது சாமானியருக்கும் புரியும் மரபுத்தொடர் விஷயம். ஏன் இப்படி என்று நாம் யாரும் கேட்பதில்லை.

அத்துடன், இன்னொரு விஷயமும் நாம் அன்றாட வாழ்க்கை மூலம் கற்றுக் கொண்டுள்ளோம். ஒரு உயிரினத்திற்கு பிறக்கும் சிசுவானது, தாயின் தன்மையை சார்ந்தே இருக்கும் – அதாவது, தாய்க்கு இரு கரங்கள் இருந்தால், சேய்க்கும் அவ்வாறே. நாய்க்குட்டிக்கு, தாயைப் போல நான்கு கால்கள். இப்படித்தான் கால காலமாக உள்ளது. இதில், ‘காலகாலமாக’ என்பது மிக முக்கியமான ஒரு விஷயம். பல்லாயிரம் ஆண்டுகளாக இவ்வாறே நடந்து வந்துள்ளது. இயற்கை அவ்வப்பொழுது, சிறு தவறுகள் செய்தாலும், 99.9999 சதவீதம், இது சரியாகவே நடந்து வந்துள்ளது.

இயற்கையிடம் ஏதோ ஒரு ரகசிய முறை ஒன்று இல்லையேல், எப்படி பல்லாயிரம் ஆண்டுகளாக ஆட்டிற்கு ஆட்டுக் குட்டியையும், மனிதனுக்கு குழந்தையையும் தொடர்ந்து அளிக்க முடிகிறது? அதே இயற்கை பிரெஞ்சு நாட்டவருக்குத் தங்க நிற முடியையும், வெள்ளை தோலையும் தந்து, இந்தியருக்குக் கரு நிற முடியும், மாநிற/கருநிறத் தோலையும் தர முடிகிறது? இப்படிப்பட்ட கேள்விகள் மனிதர்களை பல்லாயிரம் ஆண்டுகளாக வியக்கச் செய்த விஷயம்.

திரைப்படப் பாடகி சுவேதா மோகன், தாய் சுஜாதாவைப் போல இருப்பது பெரிய விஷயமல்ல. ஆனால், அவரது பாடும் குரல் சுஜாதாவைப் போலவே இருப்பதும் இயற்கை ஏதோ ஒரு ரகசிய முறையைப் பின்பற்றுவதைக் காட்டுகிறது. ஆனால், அதை சரியாக விளக்குவது என்பது, இன்றுவரை இயலாத காரியம்.

இதே இயற்கை, சில விஷயங்களை, உடனே செய்வதில்லை. உதாரணத்திற்கு, சுவேதாவின் குழந்தைக் குரல் தாய் சுஜாதாவைப் போல இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், ஒரு 17 வயதுக்குப் பின், எப்படி இது நடக்கிறது?

சரி, எல்லாமே சுவேதாவின் தன்மை போல நடக்கிறதா என்றால், அதுவும் இல்லை. அன்றாட வாழ்க்கையில், இப்படிப்பட்ட உரையாடல்களை சாதாரணமாக கேட்கிறோம்;

“சின்ன பிள்ளையா இருக்கும் போது, மூணு சக்கர வண்டி ஓட்ட பயப்படுவ. இப்ப ஃபார்முலா கார் ரேசுல எல்லாம் ஓட்டுறயாமே?”

“பள்ளிக் கூடத்தில், தனியாக யாருடனும் பேசவே பயப்படுவ. எப்படி நாலாயிரம் பேர் முன்னால் தீ பரக்கும் சொற்பொழிவெல்லாம் செய்யற?”

இப்படி, இயற்கை, சில குணாதிசயங்களைக் காலப் போக்கில் மாற்றி விடுகிறது. பல விஷயங்களை, காலகாலமாக அப்படியே வைத்திருக்கிறது. எப்படி, ஒரு தாய் தந்தையிடமிருந்து சில கட்டமைப்பு மற்றும் இயல்புகளை உடனே குழந்தைக்கு வழங்குகிறது? எப்படி, சில கட்டமைப்பு

மற்றும் இயல்புகளை காலந்தாழ்த்தி வழங்குகிறது?

மனிதர்கள் பூமியில் சமீப பிறவிகள். பல மில்லியன் ஆண்டுகளாக நம் பூமியில் வாழும் சுறா மீன்கள், தங்களது கட்டமைப்பு சற்றும் மாறாமல் இருப்பது மனித பரிணாம மாற்றத்தை விட அதிசயமான இயற்கை விஷயம்.

இத்தனை கேள்விகளுக்கும் வாட்ஸன் மற்றும் க்ரீக் -கின் இரட்டை சுருள் வளையம் பதில் சொல்ல இயலுமா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சற்று அவசரப்பட்டு, படைப்பின் ரகசியத்தை கண்டு பிடித்து விட்டதாக அறிவித்து விட்டார்கள். இன்று, படைப்பின் சிக்கலை அணு அளவில் படிப்படியாக ஆராய்ந்து வருகிறார்கள் விஞ்ஞானிகள். இன்று வரை, பல கேள்விகளுக்குப் பதில் இல்லாமல் இருக்கிறோம். அவ்வளவு எளிதில் இயற்கையைப் புரிந்து கொள்வது என்பது என்றும் விஞ்ஞானத்தில் நடந்ததில்லை. மனித மரபணு திட்டம், இந்த உயிர்தொழில்நுட்ப ஆராய்ச்சியில் முக்கியமான ஒரு மைல்கல். இதைத் தொடர்ந்தும் பல முன்னேற்றங்களும், கேள்விகளும் தொடர்கின்றன.

 

Ilaiyaraja_Music_Double_Helix_Music_Series_Raga

நம்முடைய உயிர் தொழில்நுட்ப ஆராய்ச்சி அணுகுமுறையை சரியாகப் புரிந்து கொள்ள இசை மேதை இளையராஜாவின் இசைப் பணியை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்வோம். நாம் இளையராஜாவின் காலத்தில் வாழ்வதால், அவருடைய இயக்க முறை, ஓரளவிற்கு நாம் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. முதலில் அதை விளக்க முயற்சிப்போம். பிறகு, ஒரு சிந்தனை சோதனை மூலம், அவரது பணியை எப்படி எதிர்கால ஆய்வாளர் ஒருவர் அணுகுவார் என்று பார்ப்போம். எல்லா விஞ்ஞான உதாரணங்களைப் போலவே, இந்த முறையையும் முற்றிலும் அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால், இவ்வகை ஆராய்ச்சியைப் புரிந்து கொள்ள ஓரளவு உதவும் என்று நம்புகிறேன்.

அட, என்ன உயிர்தொழில்நுட்ப ஆராய்ச்சியை விட்டு, இசைக்குக் கட்டுரை தாவி விட்டதோ என்று, கட்டுரையிலிருந்து தயவு செய்து தாவி விடாதீர்கள். இசை பற்றிய நுட்ப விஷயங்களுக்கு இங்கு இடமில்லை. ராஜாவின் செயல்முறை ஒன்றுதான் நமக்கு இங்கு தேவை.

மேல்வாரியாக, ராஜா ஆர்மோனியப் பெட்டியை வைத்துக் கொண்டு மெட்டமைப்பார் என்பது சாமானியருக்கும் புரிந்த விஷயம். ஆனால், அவரது இசையில் வெறும் ஆர்மோனியம் மட்டுமா நம் காதுகளுக்குக் கேட்கிறது? சொல்லப் போனால், அவரது இசையில் பெரும்பாலும் ஆர்மோனியத்தின் சத்தமே கேட்பதில்லை என்பதுதான் உண்மை.

விவரமாகப் பார்த்தால், இதில் பல படிகள் உள்ளன. சில வார்த்தைகளைத் தடிமனாகக் காட்டியுள்ளேன்.

 1. ராஜாவுக்கு ஒரு திரைப்படத்தின் சூழ்நிலை விவரிக்கப் படுகிறது
 2. சூழ்நிலைக்கேற்ப, அவர் ஆர்மோனியப் பெட்டியில் ஒரு மெட்டை உருவாக்குகிறார். இந்த மெட்டை கேட்டு, அது திரைப்படத்திற்கு சரியாக வரும் என்று இயக்குனரிடமிருந்து ஒப்புதல் பெறுகிறார் ராஜா, இந்த மெட்டை, அவர்  ஒலிப்பதிவு செய்து கொள்கிறார்
 3. முக்கியமாக, சூழ்நிலைக்கேற்ப, ராஜா வெவ்வேறு மெட்டுக்களை அமைப்பார். மகிழ்ச்சிக்கு, நட்பிற்கு, துரோகத்திற்கு, காதலுக்கு, சோகத்திற்கு, நடனத்திற்கு என்று பல மெட்டுக்களை அமைப்பது அவரின் தொழில். ஒவ்வொரு உணர்விற்கும் அவர் பல நூறு பாடல்களை இவ்வாறு கடந்த 40 ஆண்டுகளாக உருவாக்கியுள்ளார்
 4. பாடலின் உண்மையான பதிவு நாளில் சில பணிகள் நடைபெறுகின்றன. முதலில், ராஜா, இயக்குனரிடமிருந்து ஒப்புதல் பெற்ற மெட்டைக் கேட்கிறார். கவிஞர் ஒருவரிடம், இதற்கான வார்த்தைகளைப் பெறுகிறார்
 5. பாடலை எஸ்பிபி -யும், சித்திராவும் பாட வேண்டும் என்று முடிவெடுக்கிறார். பிறகு, அவர் வாத்தியக் கருவிகளுக்கு வேண்டிய இசைக்குறிப்புகளை எழுதுகிறார்
 6. இவர் எழுதிய இசைக்குறிப்பை அவருடைய நடத்துனரான புருஷோத்தமனிடம் கொடுத்து விடுகிறார். புருஷோத்தமன், ராஜாவின் உதவியாளரிடம் தொடர்பு கொண்டு, பாடகர்கள், மற்றும் இசைக் கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்
 7. உதாரணத்திற்கு, கிடார் சதா, புல்லாங்குழல் நெப்போலியன், கீபோர்டு பரணி, தபேலா பிரசாத், மற்றும் வயலின் பிரபாகர் என்று அனைவரையும் இப்பாட்டுக்காக புருஷோத்தமன் ஒருங்கிணைக்கிறார்
 8. இந்த இசை கலைஞர்களுக்கு, இசைக் குறிப்புகள் பிரித்து கொடுக்கப்படுகிறது
 9. இசைக்கலைஞர்கள், குறிப்பைப் பார்த்து வாசித்துப் பழகிக் கொள்கிறார்கள்
 10. ராஜா, ஒரு முறை தன் இசை குறிப்புகளுக்கேற்ப, கலைஞர்கள் வாசிக்கிறார்களா என்று ரிகர்சல் பார்க்கிறார். இந்த ரிகர்சலையும் புருஷோத்தமன் நடத்துகிறார்
 11. ராஜாவுக்குத் திருப்தியாக இருந்தால், புருஷோத்தமன் நடத்த, இசைக்கருவி பாகங்கள் பதிவு செய்யப்படுகிறது
 12. எஸ்பிபி -யும் சித்ராவும், பாடலைக் கற்றுக் கொண்டு, பாடலில் உள்ள சூழ்நிலை மற்றும் பாவத்திற்கேற்ப பாடி, பதிவு செய்கின்றனர்

மேல் சொன்ன படிகள் நமக்குத் தேவையான படிகள். நடைமுறையில் இசை உருவாக்கம் என்பது இன்னும் சிக்கலான பணி.

ஆனால், இதில் நாம் சில முக்கியமான வேறுபட்ட நிலைகளையும் மனதில் கொள்ள வேண்டும்;

 1. உருவான பாடலைக் கேட்டவுடன், இது ராஜாவின் பாடல் என்று சொல்லுபவர்கள் பலருண்டு.
 2. அதே போல, நாம் மேல் சொன்ன தபேலா பிரசாத், புல்லாங்குழல் நெப்போலியன் எல்லா பாடல்களுக்கும் வாசிப்பதில்லை.
 3. இதே சூழ்நிலைக்காக உருவாக்கப்பட்ட இன்னொரு பாடலில் பாலுவுடன் ஜானகி பாடலாம்.
 4. இதே ராஜா, அதே திரைப்படத்தின் பின்னணி இசையை உருவாக்கும் பொழுது, எந்தப் பாடகரையும் பயன்படுத்தமாட்டார்
 5. மேலே சொன்ன பாடல் மகிழ்ச்சியான பாடல் என்று கொண்டால், சோகமான இன்னொரு பாடலுக்கு இசைக்கருவிகள், கலைஞர்கள், மற்றும் பாடகர்கள் வேறுபடலாம்
 6. பாடல்கள் வெவ்வேறு, உணர்வுகள் வெவ்வேறு, இசைக்கருவிகள் வெவ்வேறு, கலைஞர்கள் வெவ்வேறு. ஆனால், ராஜாவின் பணி முறை நாம் மேல் சொன்ன முறைதான். ஒவ்வொன்றுக்கும் அவர் இசைக்குறிப்புகள் எழுதுகிறார். அதை நடத்துனர், இசைக்கலைஞர்களோடு வெவ்வேறு விதமாக நிறைவேற்றுகிறார்
 7. இதனால், நமக்கு அவை வெவ்வேறு பாடல்களாகத் தோன்றுகிறது. ராஜாவைக் கேட்டால், ஏழு ஸ்வரங்களை வைத்துத் தான் எல்லாவற்றையும் செய்வதாகச் சொல்கிறார். இயற்கை, நாலு ஸ்வரங்களை வைத்து, (A,C,G,T) ஏராளமான ஜாலங்களை பல மில்லியன் ஆண்டுகளாகச் செய்து வருகிறது.

அடுத்த பாகத்தில், எப்படியொரு சிந்தனைச் சோதனை மூலம், இன்றைய விஞ்ஞானிகள் இயற்கையின் இசையைப் புரிந்து கொள்ள முயன்று வருகிறார்கள் என்று பார்ப்போம்.

சொல்வனம் – ஃபெப்ரவரி 2015

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s