விஞ்ஞானக் கணிணி – இறுதிப் பகுதி

‘விஞ்ஞானியாகப் போகிறேன் – இந்த கணினி விஷயமெல்லாம் தேவையில்லை’ என்று மட்டும் நினைக்காதீர்கள். கணினி ஒரு கருவி – ஒரு காமிரா போன்ற ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த கருவி. காமிரா வல்லுனர்கள் இருந்தாலும், பொதுவாக நமக்கெல்லாம் டிஜிட்டல் புகைப்படம் எடுக்கவரும். அதேபோல, யாராக இருந்தாலும் கணினியை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஒருவர் பூச்சியைப் படமெடுக்கலாம். இன்னொருவர் நடன கோணங்களைப் படமெடுக்கலாம். ஆனால் இருவருக்கும் புகைப்படம் எடுக்கத் தெரிந்திருக்க வேண்டும். கணினி உபயோகிக்க அதிநுட்பப் படிப்பெல்லாம் தேவையில்லை. அதிகம் கணினி வளராத காலத்தில், ஏராளமாகப் படித்துவிட்டு இந்தியப் பொறியாளர்கள் விற்பனை லெட்ஜர் போன்ற அபத்த விஷயங்களுக்கு நிரல்கள் எழுதி பெருமைபட்டுக்கொண்டதோடு அவர்களது பெற்றோர்களும் அலட்டிக்கொள்ள வாய்ப்பளித்தார்கள்.

வளர்ந்துவரும் உயிரியல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் விஞ்ஞானம் தொடர்பான தகவல்கள் மற்ற துறைகளைவிட அதிகமாக சேமித்து, மீட்கப்படுகிறது. 2040 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வருடத்திற்கும் சேமிக்கப்பட்ட தகவல்கள் இரட்டிப்பாகும் என்று விஞ்ஞானிகளால் நம்பப்படுகிறது. தகவல்களை தேவைக்கேற்ப வரிசைப்படுத்தி, சட்டென்று தேடி மீட்பது அடிப்படைத் தேவையாக மாறப்போகிது. எதிர்காலத்தில், இதற்காகத் தனியாகக் கணினி நிபுணரை தேடினால் கிடைக்காது. எத்தனை விஞ்ஞான தேர்ச்சி இருந்தாலும் கணினி தேர்ச்சியும் தேவை. அத்துடன், விஞ்ஞான பிரச்சினைகள் வியாபார பிரச்சினைகள் போலப் பரவலானவை அல்ல. அதற்கான விடைகளும் விசேஷமானது. சாதாரண ஜன்னல் க்ளிக் திறமைகள் வேலைக்கு ஆகாது.

நாம் முன்னே பார்த்த சமீபத்திய விஞ்ஞான சோதனைகளை இந்த நோக்குடன் சற்று பார்ப்போம். முதலில் ‘மனித மரபணு சோதனை’யை அலசுவோம். 1990களில் விஞ்ஞானிகள் ஜினோம் வரிசைபடுத்தலில் சரித்திரத்தில் முதன் முறையாக ஈடுபட்டுத் தீவிரமாக உழைத்து வந்தார்கள். மிக அதிகமான கணினித்திறன் இதற்குத் தேவைப்பட்டது. 15 வருடங்களுக்கு அரசாங்கமும் தனியார் ஆராய்ச்சியாளர்களும் மரபணு வரிசைபடுத்த முக்கிய காரணம், யாரிடம் புத்திசாலித்தனமான மென்பொருள் வழிமுறைகள் (அல்கரிதம்), விசேஷ கணினிகள் மற்றும் சோதனை வசதிகள் உள்ளது என்பதே. இன்று மனித மரபணு சார்ந்த விஞ்ஞான டேடா பல வழங்கி கணினிகளில் பல டெராபைட் வரை சேமிக்கப்பட்டு மீட்பதற்காக தயாராக உள்ளது. இதில் சில மரபணு தரவுதளங்கள் (databases) வியாபார ரீதியில் விற்கவும் செய்கிறார்கள். பல மருந்து தயாரிப்பு மற்றும் சோதனையில் இது மிக அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. எதிர்கால உயிரியல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பார்மா உலகிற்கு இத்தரப்பட்ட கணினி முன்னேற்றம் அடிப்படை தேவை என்று சொன்னால் மிகையாகாது. உயிரியல் பல நூறு ஆண்டுகளாக ஆராயப்படும் ஒரு முக்கிய விஞ்ஞானத் துறை. அடுத்த ஐந்து ஆண்டுகளை இத்துறையில் கணினியின்றி நினைத்து பார்க்கக் கூட முடியாது.

செர்கே பிரின் (Sergey Brin) என்பவர் கூகிளைத் தொடங்கிய இருவரில் ஒருவர். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் டாக்ட்ரேட் பட்டம் வாங்கிய இவர் கூகிள் நிறுவனத்தை வெற்றிகரமாக நட்த்தி வருகிறார். இவர் ஏராளமான டேடாவை கையாள்வதை தன்னுடைய லட்சியமாக கொண்டவர். அதுவும் முக்கியமான விஷயம், ”டேடா பொய் சொல்லாது, மனிதர்களைப் போல” என்பது இவரது அசைக்க முடியாத நம்பிக்கை. பல கோடி இணையத் தளங்கள், பல கோடி கோப்புகள், வரை படங்கள் என்று எதையும் விடாமல் கூகிளின் வழங்கி கணினிகள் சலிக்காமல் 24 மணி நேரமும் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிய வண்ணம் கடந்த 12 ஆண்டுகளாக சேவை புரிந்து வந்துள்ளன. இவரின் மனைவி, ஒரு மரபணு சோதனை சார்ந்த ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்செயலாக தன்னுடைய மரபணுவை தன் மனைவியின் அலுவலகத்தில் பிரிசோதனை பார்த்த்தில் இவருக்கு ஒரு முக்கிய விஷயம் தெரிய வந்த்து. செர்கேவின் 12 வது க்ரோமோஸோமில் LRRK2 என்ற மாற்றம் (genetic mutation) உள்ளது தெளிவாயிற்று. இதனால் பார்கின்ஸன்ஸ் வியாதி வர ஒரு 25% சாத்தியம் என்று தெரிந்து கொண்டார் செர்கே. அதுவும் உடனே அல்ல. 36 வயதான இவருக்கு ஒரு 70 வயதுக்கு மேல் வர வாய்ப்புள்ளது என்று கணக்கிடப்பட்டது. அதுவும் அவரது குடும்பத்தில் ஏற்கனவே இந்நோயால் பாதிக்கப்படவர்கள் இருப்பதால், இவருக்கு வர சாத்தியக்கூறுகள் அதிகம். பார்கின்ஸன்ஸ் நோய் நரம்புகளைத் தாக்கி மனிதனை ஊனமாக்கும் தன்மை கொண்டது. இதற்கு இன்றுவரை தீர்வு/மருந்து ஏதும் இல்லை.

தமிழ் சினிமா போல சோகப் பாட்டு பாட தயாராக இல்லை இந்த இளைஞர். இந்நோயைப் பற்றிய ஆராய்ச்சி எந்த அளவில் இருக்கிறது என்று ஆராயத் தொடங்கினார் (எல்லாம் கூகிளை வைத்து தான்!). செர்கே கூகிள் முறையில் சிந்திக்க தொடங்கினார். அவரது சிந்தனை இக்கட்டுரையின் மைய கருத்துக்கு ஒரு சிறந்த எழுத்துக்காட்டு. வழக்கமான மருத்துவ ஆராய்ச்சியில் பல படிகள் உள்ளன. முதலில் ஒரு கோட்பாடு ஒன்றை (hypothesis) அடிப்படையாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, பல விரிவான சாத்தியக்கூறுகளை ஆராய்கிறார்கள். அடுத்தபடியாக பல நோயாளிகளின் மருத்துவ நிலை பற்றிய தகவல்களை சேகரிக்கிறார்கள். புள்ளியியல் முறைப்படி, தகவல்களை ஆராய்கிறார்கள். ஆராய்ச்சியின் முடிவுகளை ஒரு கட்டுரை எழுதி மருத்துவ இதழ்களில் வெளியிடுகிறார்கள். இதற்கு குறைந்தபட்சம் 6 வருடங்களாகிறது. பல குழுக்கள் பல கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டு ஆராய்வதால், பல வித கட்டுரைகளும் வந்த வண்ணம் உள்ளன. செர்கே வேறு முறைபடி ஆராய்ச்சி செய்ய (கூகிள் முறை) ஏராளமான நன்கொடை வழங்கியுள்ளார். இவர் முறையில், முதல் படியாக ஒரு வல்லுனர் குழு பல நோய் அறிகுறிகள் (symptoms) கொண்ட கருத்தரிய பயன்படும் கேள்விதாளை (questionnaire) உருவாக்குகிறார்கள். அடுத்தபடியாக இந்நோயாயால பாதிக்கபட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். (இதுவரை எந்த வித கோட்பாடும் இல்லை – அதை டேடா சொல்லும் என்பது இவர்களது வாதம்). அடுத்த படியாக கேள்விதாள்களை சேகரித்து வகைப்படுத்திக் கொள்கிறார்கள். புள்ளியியல் முறைப்படி, பலவித சாத்தியக் கூறுகள், நோய் சம்மந்தப்பட்ட டேட்டாவில் உள்ள உறவுகள் (data relationships) , அதன் வலிமை எல்லாவற்றையும் கணினி கொண்டு அலசித் தள்ளுகிறார்கள். கண்டுபிடித்த போக்குகள், உறவுகள், சாத்தியக்கூறுகள் எல்லாவற்றையும் ஒரு காட்சியளிப்பாக (presentation) பார்கின்ஸன்ஸ் நோய் சம்மந்த அமைப்பில் உடனே வெளியிடுகிறார்கள். ஆரம்பத்திலிருந்து கடைசிவரை இவர்கள் ஒரு முழு பயணத்திற்கு இவர்கள் எழுத்துக் கொள்ளும் காலம் 8 மாதங்கள். செர்கே, 8 மாத முயற்சிகள் பலதும் எடுத்துக் கொண்டால், கணினிகளை உபயோகித்து ஆராய்ச்சியை துரிதப் படுத்தலாம் என்று நம்புகிறார்.

தன்னுடைய 60 வது வயதுக்குள் இந்நோயிற்கு தீர்வு கண்டுபிடிக்க முடியும் என்று நினைக்கிறார். விஞ்ஞான உலகில் இதற்கு அவ்வளவு ஆதரவு இல்லைதான். வழக்கமான ஆராய்ச்சி முறைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட்து என்பது, உயிர் சம்மந்தப்பட்ட்து என்பதாலும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் செர்கே இந்த புதிய முறைக்கு பல கோடி டாலர்கள் செலவழித்து ரிஸ்க் எடுக்க தயாராக உள்ளார். முடிவுகளை காத்திருந்துதான் பார்க்க வேண்டும். (நன்றி: ஸ்யண்டிஃபிக் அமெரிக்கன்).

ஹப்பிள் தொலைநோக்கி ஒரு அருமையான வானவியல் பரிசு. காற்று மண்டலத்திற்கு மேலே விண்வெளியில் துல்லியமாக படமெடுத்து வானியல் ஆராய்ச்சிக்கு அருமையாக உதவுகிறது. ஹப்பிள் புகைப்படம் எல்லாம் டிஜிட்டல். இதுவரை 120 டெராபைட் அளவிற்கு படங்கள் எடுத்து சேமிக்கப்பட்டுள்ளது. இதை ஆராய, மற்றும் தேட கணினிகள் மிக மிக அவசியம். இது போன்று வானவியல் டிஜிட்டல் படங்களை மேம்படுத்துவது மற்றும் அதன் நிறங்களிலிருந்து நிறமாலை ஆய்வு நடத்தி பல தொலைவில் உள்ள நட்சத்திர மண்டலம் மற்றும் கருந்துளை (black hole) ஆராய்ச்சிக்கு முக்கிய தேவை கணினி மற்றும் டிஜிட்டல் குறிப்பலை கையாள்மை (digital signal processing) என்ற நுட்பம். வானியல் கலிலியோ காலத்திலிருந்து வளர்ந்துள்ள ஒரு விஞ்ஞானம். கடும் கணித சக்தி தேவையான ஒரு துறை.

அணு நுண்துகள்கள் (sub atomic particles) ஆராய்ச்சி மிக முக்கியமான ஒன்று. மனிதனின் அடிப்படை கேள்விகளில் பிரிக்க முடியாத அடிப்படை துகள் எது என்பது. அதே போல பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது என்பதும். முதல் கேள்வி மிக மிக சிறியன பற்றிய ஆராய்ச்சி. பின்னே சொன்னது மிக மிக பெரியன பற்றிய ஆராய்ச்சி விஞ்ஞான ஆராய்ச்சி தொடங்கிய காலத்திலிருந்து கண்ணதாசன் சொன்னது போல ‘மனிதன் பெரிது சிறிது (இன்ப துன்பம்) எதிலும் கேள்விதான் மிஞ்சும்’. பெரிய ஹாட்ரான் கொலைடர் பன்னாட்டு ராட்சச ஆராய்ச்சி. பல பெளதிக தியரி ஆய்வாளார்கள் பல அணு நுண்துகள்கள் இருப்பதை குவாண்டம் கோட்பாடு கொண்டு சொல்லி விட்டார்கள். இதை சோதனை மூலம் நிரூபிக்க இந்த ராட்சச கொலைடரை ஐரோப்பாவில் ப்ரான்ஸ் மற்றும் சுவிஸ் நாட்டின் எல்லையில் அமைத்துள்ளார்கள். 17 மைல்கள் நீளமுள்ள நிலத்தடி சுரங்கத்தில் அணுக்களை பயங்கர வேகத்தில் மோத விட்டு அணு நுண்துகள்களை தேடும் முயற்சி. இந்த மோதல் நேரிடும் போது ஒரு வினாடிக்கு 1 பில்லியன் படங்கள் எடுக்கப்பட வேண்டும். ஒரு வினாடியில் 10 பெடாபைட் அளவுக்கு டேடா என்றால் பாருங்களேன். இதை எப்படி கையாள்வது என்று கணினி பொறியாளர்கள் பலவாறு முயன்று வருகிறார்கள். அத்தனை சக்தி வாய்ந்த கணினிகல் நம்மிடம் இல்லை. இதனால் ஒரு வினாடிக்கு 100 நிகழ்வுகளை படம்பிடிக்க முடிவு செய்துள்ளார்கள். இதுவே ஒரு வருடத்தில் 15 பெடாபைட் வரை தேவை என்று கணக்கிட்டுள்ளார்கள். இந்த டேடாவை பல்லாயிரம் கணினிகள் உள்ள ஒரு வலையமைப்பில் செயலாக்க திட்டமிட்டுள்ளார்கள். இதைப் பற்றிய இன்னும் விவரங்கள் இங்கே

http://public.web.cern.ch/public/en/lhc/Computing-en.html

கூகிளுக்கும் விஞ்ஞானத்திற்கும் என்ன சம்மந்தம் என்று புரிந்திருக்கும். இரண்டிற்கும் பல டெரா/பெடா பைட் அளவு ராட்சச செய்தி கையாளும் திறமை தேவை. வித்தியாசம், கூகிள் தேடும் சேவை ஒரு முன்னேற்பாடுடைய கையாள்மை. விஞ்ஞான தேடல்கள் ஒவ்வொரு முறையும் மாறுபட்டது.

முன்னே சொன்னது போல, ராட்சச சோதனைகளுக்கு மட்டுமே கணினிகள் தேவை என்று நினைக்க வேண்டாம். இன்று மிக சிறிய சோதனைகளுக்கு மற்றும் ஆய்வுகளுக்கு விஞ்ஞான கணினி அவசியமாகிவிட்டது. இதற்கென்று பல மென்பொருட்கள் வந்து விட்டன. வெகு ஜன சந்தை (mass market) இல்லாததால் அவவளவு பிரசித்தி பெறவில்லை. படம் வரையும் (graphing programs) மென்பொருட்கள், கணிக்கும் சேவைகள் மற்றும் பலதரப்பட்ட விஞ்ஞான உதவி மென்பொருட்கள் எளிதில் கிடைக்கின்றன. திறந்த மூலநிரல் (open source) முறையில் இலவசமாக மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு பல மென்பொருட்கள் வந்துள்ளன.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்: கணினிகளின் உதவியால் விஞ்ஞான ஆராய்ச்சி வளர்ந்து வருகிறது. கணினிகளே விஞ்ஞானம் அல்ல. மனித விஞ்ஞான சிந்தனையை கணினிகள் என்றும் நீக்கப் போவதில்லை. விஞ்ஞானத்தில் முடிவுகள் சர்ச்சைகளுக்குப் பின் பொதுவாக அனைத்து விஞ்ஞான வல்லுனர்களாலும் ஒப்புக் கொண்ட பின்பே கோட்பாடாகிறது. அத்துடன் காரணத்தன்மைக்கும் (causation) சம்மந்தத்தண்மைக்கும் (correlation) நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஒன்றிருந்தால், மற்றொன்றை பிடித்துவிடலாம் என்பதெல்லாம் விஞ்ஞான பித்தலாட்டமாகிவிடக் கூடிய வாய்ப்புகள் அதிகம். காரணத்தன்மையை சந்தேகத்திற்கு இடமின்றி நிறூபிப்பது என்றும் விஞ்ஞானத்தின் அடிப்படைத் தேவை. விஞ்ஞான ஆராய்ச்சிகள் அதே சமயத்தில் மிகவும் சிக்கலானதாக மாறி வருகிறது. அதிகமாக விஞ்ஞான வெளியீடுகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. இன்றைய, நாளைய விஞ்ஞானிகளுக்கு கணினி அறிவு மிக அவசியம். மற்ற துறைகளைப் போல விஞ்ஞானத்திலும் அலுப்பு தட்டும் வேலைகள் பல உண்டு. மற்ற துறைகளைப் போல கணினிகள் இங்கு உதவுகின்றன. மிக துல்லியமாக சோதனை கண்காணிப்புகளை கணக்கிட மற்றும் விளக்கவும் கணினிகள் மிகத் தேவை என்ற நிலை வந்துவிட்டது.

ஓரளவுக்கு பெளதிக/வேதியல் துறையில் தியரி, சோதனையியலை விட முன்னேறிவிட்டது. பல தியரிகளை நிரூபிக்க ராட்சச இயந்திரங்கள் தேவை; அல்லது ராட்சச கணினி சக்தி தேவை. பொதுவாகவே விஞ்ஞான ஆராய்ச்சி பல்துறை ஆராய்ச்சியாக (multi disciplinary) மாறி வருகிறது. உயிர் தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம், என்று பல்துறை ஆராய்ச்சிகள் மிகவும் பறந்த திறமையுள்ள விஞ்ஞானிகள் தேவையான வளர்ச்சி வாய்ப்புகள். பல விஞ்ஞான துறைகளோடு கணினி திறமைகள் மிக அவசியம். இன்று விடியோ எந்திரத்தை இயக்கத் தெரிந்தவர் என்று யாராவது இருக்கிறார்களா? விடியோவின் ஆரம்ப காலத்தில் விசிஆர் களை இயக்கத் தெரிந்தவர்கள் புதிதாக எந்திரத்தை வாங்கியவர்களுக்கு உதவி வந்தார்கள் என்று சொன்னால் இன்றைய குழந்தைகள் என்னை மீண்டும் கிரகபெயர்ச்சி செய்து விடுவார்கள். அதே போலத்தான் எதிர்காலத்தில் கணினியும்.

உதாரணத்திற்கு, நீங்கள் ஒலி சம்மந்தமான ஆராய்ச்சி செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு வித்தியாசமான பறவையின் ஒலியை டிஜிட்டல் உலகிற்கு அறிமுகப் படுத்துவது உங்கள் குறிக்கோள் என்று வைத்துக் கொள்வோம். முதலில், பறவையின் ஒலியை பதிவு செய்யும் தரமான கருவி தேவை. பிறகு, அதை ஆராய்ச்சி செய்ய ஒலி சாதன்ங்கள் தேவை. பிறகு, அதை டிஜிட்டலாக உருவாக்க தேவை கணினிகள். இதை டிஜிட்டல் குறிப்பலை கையாள்மை (digital signal processing) என்ற துறையின் ஆதார கருத்துக்கள் தேவைப்பட்டாலும், கணினியில் உருவாக்க மற்றும் தேவைக்கேற்றாற்போல மாற்றி அமைக்க கணினி அல்கரிதம் அவசியம். ஒளி சம்மந்தப்பட்ட துறைகளில் அளவிடவே கணினிகள் தேவை. ஓரளவிற்கு, இன்று கணினிகளால் எங்கு தூய விஞ்ஞானம் முடிந்து எங்கு பயன்பாட்டு விஞ்ஞானம் தொடங்குகிறது என்ற எல்லைக் கோடுகள் மறைந்த வண்ணம் இருக்கின்றன.

விஞ்ஞான ஆர்வலர்களுக்கு விஞ்ஞான தகவல்கள் மற்றும் விஞ்ஞான வெளியீடுகளை படித்து பயன்பெற இணையத்தில் பல வசதிகளும் உள்ளன. உதாரணத்திற்கு, பல விஞ்ஞான வெளியீடுகளும் சந்தாதார்ர்களுக்கு மட்டுமே படிக்க முடியும். இந்த முறையை மாற்ற பல இணைய முயற்சிகளும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. மூன்று உதாரணங்கள் இன்கு பார்ப்போம்.

1. இந்திய விஞ்ஞான அக்காடமி, பல ஆராய்ச்சி வெளியீடுகளையும் தனது இணைத்தளத்தில் இலவசமாக வெளியிடுகிறது (http://www.ias.ac.in/). இந்த இணைத்தளத்தில் பெளதிக வெளியீடுகள் இங்கே (http://www.ias.ac.in/j_archive/pramana/25/vol25contents.html). சந்தா எதுவும் தேவையில்லை.

2. பல விஞ்ஞான வெளியீடுகள் சந்தா இல்லாமல் படிக்க இந்த சுட்டி உதவும் ().

3. ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுவது இக்கட்டுரையை எழுதுவது போல சாதாரண வேலையில்லை. சம்மந்தப்பட்ட கட்டுரைகளை மேற்கோள் காட்டுவது, மற்றும் பல சிக்கலான குறிகள், கணித சமாச்சாரம் எல்லாம் இணைப்பது பெரிய வேலைதான். இதை ஓரளவு சமாளிக்க உதவும் இன்னொரு அருமையான மென்பொருள் மெண்டலே (http://www.mendeley.com/). பல துறைகளில் உலக ஆராய்ச்சியாளர்கள் இந்த மென்பொருளைக் கொண்டு தங்களது ஆராய்ச்சியை உலகில் எங்கிருந்தாலும் சமாளிக்க அருமையான வசதிகள் இந்த இலவச மென்பொருளில் உண்டு.

இன்று கணினி படிக்கும் இளைஞர்கள் வெறும் விஷுவல் பேசிக், ஆரக்கிள் என்று ஜனரஞ்சன மென்பொருட்களை வைத்துக் கொண்டு காலம் தள்ள முடியாது. மென்பொருள் துறையும் சற்று வசீகரம் இழந்து புதுமையற்று சாதாரண கணக்கு வேலை போல ஆகிக் கொண்டு வருகிறது. இன்று பள்ளிப் படிப்பு முடித்த இளைஞர்கள் பல கணினி வேலைகளை www.zoho.com போன்ற நிறுவனங்களில் முன்னாள் ஐஐடி இளைஞர்கள் செய்த வேலைகளை துடியாக செய்கிறார்கள். படித்த இந்திய இளைஞர்கள் விஞ்ஞான பிரச்னைகளை தீர்க்க உதவும் விஞ்ஞான கணினி உலகில் இறங்கி பல புதுமைகள் செய்ய வேண்டும்.

ஐஐடியில் படித்து விற்பனை லெட்ஜர் நிரல் எழுதுவதில் என்ன புதுமை? கொளுத்தும் வெய்யிலில் அமெரிக்க மென்பொருளின் பெருமையை பேசி காசு சம்பாதிப்பது தற்காலிக மகிழ்ச்சியே தரும். விஞ்ஞான கணினி உலகில் புதுமை செய்து மனித முன்னேற்றத்திற்கு உதவிய மனநிறைவுக்கு நிகர் இல்லை.

விஞ்ஞான கணினி உலகம் அவ்வளவு லெட்ஜர் நிரல் போல எளிதல்ல. ஆனால் நம் படிப்ப்பெல்லாம் எதற்கு? உயரிய, சிக்கலான பிரச்னைகளை தீர்ப்பதற்குதானே?

விஞ்ஞான கணினி மென்பொருள் புற மேற்கோள்கள் (external references)

2010ல் மீண்டும் இந்தியா வந்த போது –கணினி பொறியியல் மாணவர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த்து. ஃபெடோரா என்ற லினிக்ஸ் இயக்கமையத்தில் (OS) அசத்துவதைக் கண்டேன். கீழே, பல சுட்டிகள் லினிக்சுடன் தொடர்பு இருப்பதற்கு இதுவே காரணம்.

http://www.windows7download.com/win7-scilab/ukafhapj.html – SciLab என்ற திறந்த மூலநிரல் மென்பொருள். மாணவர்களுக்கு தோதானது.

http://www.texmacs.org/ விஞ்ஞான சமன்பாடுகளை மைக்ரோசாஃப்டுடன் போராடாமல் அழகாக கோப்புக்கள் எழுத உதவும் மூலநிரல் மென்பொருள் – லினிக்ஸ் உலகிற்கு.

http://www.mathomatic.org/math/ விஞ்ஞான கணக்கியல் உதவிக்கு – ஆரம்ப மாணவர்கள் மேல்தட்ட கணக்கு பாடங்களுக்கு உபயோகிக்கலாம் – லினிக்ஸ் உலகின் அன்பளிப்பு.

http://www.r-project.org/ புள்ளியியல் ஆர்வலர்களுக்கு அருமையான லினிக்ஸ் அன்பளிப்பு.

http://www.gle-graphics.org/ வித விதமான படங்களை சமன்பாடுகளோடு வரைவது விஞ்ஞான தேவை. இதை லினிக்ஸ் மூலம் செய்வது எளிது.

http://visifire.com/ மேற்சொன்ன விஷயத்தை விண்டோஸ் உலகில் செய்ய.

http://www.mathworks.com/products/matlab/ மேட்லேப் என்ற நிரல் கல்லூரிகளில் பலவித விஞ்ஞான வேலைகளுக்கு உபயோகிக்கப்படும் மென்பொறுள். இதன் பயன் பல்வேறு துறைகளில்.

http://www.wolfram.com/mathematica/ உல்ஃப்ராம் பற்றி விவாதித்தோம் அல்லவா? உல்ஃப்ராம் ஆல்ஃபா பின்னால் உள்ள என்ஜின் இந்த மேத்தமேடிக்கா.

http://www.maplesoft.com/products/maple/ மேட்லேப் மற்றும் மேத்தமேடிக்கா வின் மூன்றாவது போட்டியாளர்.

http://eumat.sourceforge.net/ மேட்லேப் மிகவும் விலை அதிகமாக தோன்றினால், ஆய்லர் என்பது அதைப் போன்ற ஆனால், இலவசமான மென்பொருள் – லினிக்ஸ்.

http://www.ni.com/labview/ மிக அழகாக விஞ்ஞான ஆராய்ச்சி எந்திரங்களோடு உரையாடி, அதிலிருந்து வரும் டேட்டாவை கணினியில் வரைந்து, போக்குகளைக் காட்ட சிறந்த நிரல் லேப்வ்யூ.

சில மென்பொருட்களே இங்கு ஒரு சாம்பிளுக்காக சொல்லியுள்ளேன். விஞ்ஞான உலகில் பல வகையான விசேஷ படிப்புகள் இருப்பதால், பல்லாயிரம் மென்பொருள்கள் இருக்கின்றன. இக்கட்டுரையைப் படிக்கும் மாணவர்கள் வரைபடம் (plotting), ஆவணத்துவம் (documentation) மற்றும் கணிதம் சம்மந்தப்பட்ட மென்பொருள்களை உபயோகிக்க பல வாய்ப்புகள் இருக்கின்றன.

சொல்வனம் – ஜனவரி 2011

Advertisements

விஞ்ஞானக் கணினி – பகுதி 1

தலைப்பைத் தவறாகப் படித்து விட்டோமோ என்று படித்தவுடன் தோணலாம். கவலைப்படாதீர்கள். சரியாகத்தான் படித்திருக்கிறீர்கள். கணினி விஞ்ஞானப் படிப்பு ஒவ்வொரு தெருவோரத்திற்கும் வந்துவிட்டது. இதை ‘சொல்வனத்தில்’ வேறு எழுதி மேலும் ஜன்னல் பறவைகளை உருவாக்க எண்ணமில்லை. ஒரு வெட் கிரைண்டர் வாங்கினால் கணினி விஞ்ஞான சீட் இலவசம் – வெட் கிரைண்டர் விற்ற லாபத்தில் ஒரு குட்டி காலேஜ்!

சில ஆண்டுகளுக்கு முன் உயர்நிலைப்பள்ளி ஒன்றில் விஞ்ஞானம் படிக்கும் மாணவ மாணவியருடன் ஆற்றிய உரையின் சுருக்கம் இக்கட்டுரை. முதலில் இம்மாணவர்களில் எத்தனை பேருக்கு எதிர்காலத்தில் விஞ்ஞானிகளாக விருப்பம் என்று கேட்டேன். மிக நாணத்தோடு சில மாணவிகள் கையைத் தூக்கினார்கள். மற்ற மாணவர்கள் என்ன நினைப்பார்களோ என்று சில மாணவர்கள் தயங்கியபடியே கையைத் தூக்கினார்கள். ஒரு 5 சதவீத மாணவர்களே தேறும். எத்தனை பேருக்கு பொறியிலாளர்கள் ஆகவேண்டும் என்றவுடன் பார்க்க வேண்டுமே – பிரகாசமாகத் தூக்கிய கைகளை எண்ணவே சற்று நேரமாகியது. ஒரு 75 சதவீத மாணவர்கள் எதிர்காலத்தில் எஞ்ஜினீயர்களாக ஆசை என்று சொன்னார்கள். பாக்கி 20 சதவீததினர் சும்மா வேடிக்கை பார்க்க வந்திருந்தனர்.

இம்மாணவர்களின் நோக்கு மிகவும் சுவாரசியமானது. நான் குறிப்பிட்ட 5 சதவீதத்தினர் பலவிதக் குழப்பங்களுடன் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். இதில், சிலருக்கு உயிரியலில் ஆவல். சிலருக்கு வேதியியல் மற்றும் பெளதிகம். சிலருக்கு உயிரியல் தொழில்நுட்பம், மனோதத்துவம், வானவியல், விமானவியல், ஏன் பொருளாதாரம் எதையும் விட்டுவைக்கவில்லை. இவர்களின் விஞ்ஞானப் புரிதல் எந்த அளவில் உள்ளது என்று கணிக்க சில கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன்.

நியூட்டன் மற்றும் ஆப்பிள் கதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று கேட்ட பொழுது என்னை ஒரு செவ்வாய் கிரக மனிதனாக பார்த்தார்கள். பிறகு இச்சம்பவத்திலிருந்து ஈர்ப்பு சக்தி எப்படிப்பட்ட சக்தி என்று கேட்டபொழுது அப்படி ஒரு நிசப்தம். (பக்கத்திலிருந்த ஆசிரியர்கள் நன்றியோடு என்னை பார்த்தார்கள்! அடுத்த முறை மாணவர்கள் மிகவும் கூச்சலிடும் பொழுது ஒரு உபயோகமான உத்தி சொன்னதற்கு நன்றி). ஒரே ஒரு சுட்டி மாணவி தைரியமாக ‘ரொம்ப வீக் சக்தி சார்’ என்றாள். மற்றவர்கள் வீக்காக பார்த்தார்கள்!

வேதியியலில் ஆவலான மாணவியிடம் எதிர்காலத்தில் விஞ்ஞானியானவுடன் எந்த விதமான கருவிகளை உபயோகப்படுத்துவீர்கள் என்று கேட்டதற்கு, சோதனைக்குழாய், ரசாயனங்கள் என்று பலவற்றையும் சொன்னாள். பெளதிக ஆவல் மாணவன் நிறமாலைக் கருவி, வித வித மைக்ராஸ்கோப், மின்னியல் கருவிகள் என்று அடுக்கினான். வானவியல் ஆவல் மாணவன் டெலஸ்கோப், ரேடியோ மற்றும் எக்ஸ்ரே டிடெக்டர் என்றான். உயிரியல் ஆவல் மாணவி மைக்ராஸ்கோப், செண்ட்ரிபியூஜ் என்று அடுக்கினாள். ஒரு மாணவன்/மாணவி கூட கணினியைத் தங்கள் எதிர்காலக் கருவியாகச் சொல்லவில்லை. கணினியை ஒரு எதிர்கால விஞ்ஞானக் கருவியாக நீங்கள் நினைக்கவில்லையா என்று கேட்டவுடன் நான் செவ்வாயிலிருந்து புதன் கிரக மனிதனானேன்!

கணினியை எதற்கு உபயோகிக்கலாம் என்று கேட்டதற்கு, விளையாட்டு, இணைய மேய்தல், தேடல் மற்றும் எம்.பி.3, யூட்யூப் என்றார்கள். கடந்த இருபது ஆண்டுகளில் மாணவர்கள் கேள்விப்பட்ட பெரிய விஞ்ஞான சோதனைகள் மற்றும் முன்னேற்றங்கள் என்னவென்று கேட்டதற்கு சற்று மெதுவாக சில பதில்கள் வந்தன. சில விஞ்ஞான முன்னேற்றங்களைப் பற்றிச் சொன்னவுடன் சில மாணவர்களுக்கு அதைப் பற்றிய சில விஷயங்களை குவிஸ் போட்டி போல ஒப்பித்தார்கள். முக்கியமானவை இதோ:

1. மனித மரபணுத் திட்டம்
2. ஹப்பிள் டெலஸ்கோப்
3. பூமி வெப்பமடைதல் ஆராய்ச்சி
4. பெரிய ஹேட்ரான் கொலைடர்
5. கூகிள் தேடல் சேவை

நியூட்டனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கக்கூடும் என்று கேட்டவுடன் மயான நிசப்தம் – ஆசிரியர்கள் மீண்டும் நன்றியோடு பார்த்தார்கள். ஒரு மாணவன் தைரியமாக ”நியூட்டனுக்கு கூகிள் தேடல் சேவை இல்லை” என்று ஜோக் அடித்தான். சரி, கூகிள் இருப்பதால் மனித குலத்தை நியூட்டனை விட இரு மடங்கு உன்னால் முன்னேறச் செய்ய முடியுமா என்று கேட்டதற்கு வழியத்தான் செய்தான்.

பொதுவாக இப்படிப்பட்ட கேள்விகளைச் சில பல்கலைக்கழக மாணவர்களிடம் கேட்டாலே சரியாக பதில் வராது. நாம் எல்லோரும் நினைப்பது இதுதான்: “சுலபமான எல்லா கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகளையும் நமக்கு முன்னே வந்தவர்கள் செய்து முடித்து விட்டார்கள். நம் பாடுதான் கஷ்டம்!”.

இப்படிப்பட்ட சிந்தனை நேற்று இன்றல்ல, பல நூறு ஆண்டுகளாக சொல்லப்பட்ட ஒன்று. ஆனாலும் விஞ்ஞானம் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. விஞ்ஞானிகள் சோர்ந்து விடுவதில்லை.

பலதரப்பட்ட விஞ்ஞானக் கணினி சமாச்சாரங்களை அலசுவதற்கு முன்பு, பிரிடிஷ் விஞ்ஞானி ஸ்டீவன் உல்ஃப்ராம் அருமையான ஒரு ‘உல்ஃப்ராம் ஆல்ஃபா’ என்ற  இணையதளம் ஒன்றை விஞ்ஞான உலகிற்காக மிக அழகாகப் பரிசளித்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளில் கணினி உலகில் என்னை அசத்திய முன்னேற்றம் இது. இணைய தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றுவிட்டார் ஸ்டீவன். இக்கட்டுரையைப் படிக்கும் பெற்றோர்களுக்கு இந்த இணையதளம் அருமையான ஒரு உதவியாளன். அடுத்த முறை உங்கள் மகன் பெளதிக சந்தேகம் கேட்டு வந்தால் பேச்சை மாற்ற வேண்டிய அவசியமில்லை. தேர்ந்த ஆசிரியரைப் போல அசத்தலாம். சரி, கூகிளுக்கும் உல்ஃப்ராமுக்கும் என்ன வித்தியாசம்?

wolframசாதாரண கேள்விகளுக்கு கூகிள் மிக உதவியாக இருக்கும். வியன்னாவில் இப்பொழுது எத்தனை மணி, ’நந்தலாலா’ சினிமா விமர்சனம், உங்களது பங்குகளின் நிலை, இன்றைய தட்பவெப்ப நிலை, ஏன் உங்களது ஃபெட்எக்ஸ் பார்சல்வரை கூகிளிடலாம்! ஆனால் சற்று சிக்கலான கேள்விகளுக்கு கூகிள் அவ்வளவு தோதாக இருப்பதில்லை. உல்ஃபராம் இணையதளத்திற்குப் பின் இருக்கும் ஒரு மிக சக்திவாய்ந்த விஞ்ஞானக் கணக்கிடும் இன்ஜின் மற்றும் அறிவு சேமிப்பு (scientific calculation engine and knowledge base) கூகிளால் நினைத்து பார்க்க முடியாத விஷயங்களை சாத்தியமாக்குகிறது. விஞ்ஞானம், கணிதம், பூகோளம், மருத்துவம் எதையும் விட்டுவைக்கவில்லை. இது உயர்நிலைப்பள்ளி படிக்கும்போது பிரிட்டானிக்கா களஞ்சியத்தை புரட்டுவதைவிட பல்லாயிரம் முறை சுவாரசியமானது.

பெளதிகத்தில் ஆரம்பிப்போம். E=mc2 (இப்படியே டைப் செய்துவிடுங்கள்) என்று ஐன்ஸ்டீனின் பிரசித்தி பெற்ற சமன்பாட்டை உல்ஃபராமில் டைப் செய்தால் சும்மா ஐன்ஸ்டீன் பற்றி சுயசரிதம் எல்லாம் கிடையாது. ஒரு கிலோ எடையைக் கொண்டு அழகாக இந்த சமன்பாட்டை புரியும்படி அழகான விளக்கம். அத்தோடு விடுவதில்லை. அந்த 1 கிலோவை கிளிக்கினால் அதுவே சக்தியாக மாறி மீண்டும் சமன்பாட்டை புரியவைக்க முயற்சிக்கிறது. அதாவது சக்தியும் எடையும் (திணிவு?) எப்படி எளிதாக மாற்றப்படலாம் என்ற ஐன்ஸ்டீன் தத்துவத்தை வளவளவில்லாமல் புரிய வைக்கிறது உல்ஃப்ராம். 30 ஜூல் என்று சக்தியைப்பற்றி சாதாரணமாகக் கேட்டால், ஒரு சின்ன பெளதிக உலகமே திறக்கும் உல்ஃப்ராமில்! பொறியாளர்கள் விரும்பும் BTU, பெளதிக விஞ்ஞானிகள் உபயோகிக்கும் eV என்று சொல்வதோடு விடாமல், இந்த 30 ஜூல்கள் சூரியனிடமிருந்து கிடைக்கும் சக்தியில் எத்தனை பங்கு, ஒரு புகைப்பட ஃப்ளாஷ் வெளிச்சத்தில் எத்தனை பங்கு என்று அசத்தி விடுகிறார்கள். பெளதிக ஆசிரியர்கள் இந்த இணையதளத்தை மேய்ந்தால் வகுப்பில் அறுக்கவே மாட்டார்கள்!

உங்களை ஒரு புகைப்படக் கலைஞர் ‘depth of field’ என்று சொல்லி குழப்பப்பார்க்கிறார் என்று வைத்துக்கொள்வோம். உல்ஃப்ராமில் தேடினால், சுருக்கமாக இந்த விஷயத்தைப் புரியும்படி விளக்குவதோடு விட்டு வைக்காமல், சின்னதாக சம்மந்தப்பட்ட ஒளி பெளதிகத்தை அறிமுகமும் செய்கிறார்கள். கூடவே f-number மற்றும் focal length போன்ற முக்கியமான புகைப்படக்கலை விஷயங்களை சமன்பாட்டை வைத்துப் புரியவைக்கிறார்கள்.

உல்ஃப்ராமை கன்னாபின்னாவென்று கேள்விகள் கேட்கலாம். உதாரணத்திற்கு, சீனப் பெருஞ்சுவரின் நீளத்திற்கும் இந்திய ரயில்வேயின் நீளத்திற்கும் என்ன சம்மந்தம்? இந்திய ரயில்வே ஏறத்தாழ 7 மடங்கு சீனச் சுவரைவிட நீளமானது. இது நான் உல்ஃப்ராமில் கேட்டவுடன் கிடைத்த பளிச் பதில். கனடாவில் உள்ள டொரோண்டோவிற்கும் வான்கூவருக்கும் இடையே உள்ள தூரம் சென்னை டில்லி இடையே உள்ள தூரத்தை விட இரு மடங்கு. இதை உல்ஃப்ராமிடம் இப்படிக் கேட்க வேண்டும்: Distance between Toronto and Vancouver/Distance between Chennai and Delhi. இன்னொரு சுவாரசியமான உதாரணம். ‘human 5ft 5 in’ என்று உல்ஃப்ராமை கேட்டால், உங்கள் பாலினப்படி உங்களது எடை எவ்வளவு இருக்க வேண்டும், எத்தனை கலோரிகள் ஒரு நாளுக்குத் தேவை, நீர், ரத்த அளவு என்று சகல அனாடமியும் கொட்டுகிறது.

உல்ஃப்ராமிடம் “AAGCTAGCTAGC” டைப் செய்து பாருங்கள். இந்த ஜினாம் தொடரை மிக அழகாக விரித்து 22 க்ரோமோஸோம் மற்றும் X, Y என்று தூள் கிளப்பும். தலைவலி மருந்தான “Ibuprufen 40 mg” டைப் செய்துபாருங்கள். ரசாயன ஜாதமே உங்கள் கையில். உங்களது நண்பர்களிடம் அசத்தவோ அல்லது உங்கள் குழந்தைகளுக்கு சுவாரசியமான விஞ்ஞான விஷயங்களை எடுத்துச் சொல்ல, விஞ்ஞான வகுப்பில் களைகட்ட – இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒழுங்காக விஞ்ஞானத்தைப் புரிந்துகொள்ள அசாத்தியமான துணைவன் உல்ஃப்ராம். இது விஞ்ஞானக் கணினி உலகின் உயரிய முன்னேற்றம்.

படிப்பிற்கும், புரிந்து கொள்வதற்கும் ஒரு இணையதள உதாரணத்தைப் பார்த்தோம். மற்றபடி விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்குக் கணினிகள் எப்படி உதவக்கூடும்?

சமீபத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய விஞ்ஞான சோதனைகளில் கூகிளும் ஒன்று என்று எழுதியவுடன் சிலருக்கு அது சரியாகப்பட்டிருக்காது. கவலை வேண்டாம். கூகிள் ஒன்றும் பெரிய விஞ்ஞான ஆராய்ச்சி செய்யவில்லை. விளம்பரங்களை இணையத்தில் விற்று காசு பண்ணும் விஷயம் கூகிள். ஆனால், கூகிள் முன்னே இல்லாத அளவில் கணினிப் பிரச்சினைகளை தீர்த்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. இதற்கும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் சம்மந்தம் உள்ளது. அத்தோடு நான் சந்தித்த மாணவர்களுக்கு கூகிள் தெரிந்திருந்தது. சரி, மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டுத்தான் பார்ப்போமே!

1980-களில் பெரிய ப்ளாஸ்டிக் உறையுடன் ஃப்ளாப்பி என்ற ஒரு தகவல் தேக்கும் மீடியா அறிகமுகப்படுத்தப்பட்டது. இஸ்திரி செய்யப்பட்ட சட்டைமேல் டை அணிந்த மனிதர் ஒருவர் அதைக்காட்டி, அதற்குள் 125 பக்கம் டைப் செய்த செய்திகளைச் சேமிக்கலாம் என்று சொல்லி கைத்தட்டு வாங்கியது இன்னும் நினைவிருக்கிறது. 8GB மெமரி குச்சி பற்றி அறிந்த இந்நாள் குழந்தைகள் அதை நம்புவார்கள் என்று எதிர்பார்ப்பார்ப்பது அபத்தம். ஒரு ஆங்கில எழுத்து ஒரு பைட் (தமிழ் இரண்டு பைட்) என்று கொண்டால், ஒரு சாதாரண MP3 கோப்பு ஏறக்குறைய 60 லட்சம் பைட். இதை 6 மெகா பைட் என்கிறார்கள். மெகா பைட் காலம் போய் கிகா பைட் இன்று சர்வ சாதாரணம். ஒரு சினிமா டிவிடியில் 4.5 கிகாபைட் வரை தகவல் உள்ளது. 1,000 கிகா பைட் ஒரு டெரா பைட் என்கிறார்கள். 1,000 டெரா பைட் ஒரு பெடா பைட். பெடாபைட் எவ்வளவு பெரியது என்று இங்கே ஒரு நல்ல விளக்கம்.

2008-ஆம் ஆண்டின் கடைசியில் யூட்யூப்பில் 530 டெரா பைட் அளவுக்கு விடியோக்கள் சேமித்திருந்தார்கள். இளைஞர்களுக்குப் பிடித்த ஃபேஸ்புக்கில் மாதத்திற்கு 20 டெரா பைட் புகைப்படங்கள் மட்டும் மேலேற்றப்படுகின்றது. ஒவ்வொரு 72 நிமிடங்களுக்கும் கூகிள் வழங்கி கணினிகளால் 1 டெரா பைட் தகவல் கையாளப்படுகிறது. அசாத்தியமான தகவல் கையாள்மையில் (very large data set handling) கூகிள் அபார வெற்றி பெற்றுள்ளது. இதுவரை மனித வரலாற்றில் இவ்வளவு தகவல் கையாளப்படவில்லை. சரி, இதற்கும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் என்ன சம்மந்தம்?

விஞ்ஞானம் கடந்த 200 வருடங்களாகத்தான் பயங்கரமாக வளர்ந்து வந்துள்ளது. அதற்குமுன் தேவாலயமும் விஞ்ஞானிகளும் சண்டை போட்டுக்கொண்டு முன்னேறவிடாமல் சடுகுடு ஆடினார்கள். போர்கள் அரசாங்கங்களுக்கு விஞ்ஞானம் மேல் நம்பிக்கை ஏற்பட முக்கியக் காரணம். போர்களை வெல்ல முக்கியக் காரணம் விஞ்ஞானம் என்று புரியத் தொடங்கிய நாளிலிருந்து (முதல் உலகப் போர் முதல்) அரசாங்க முதலீடு விஞ்ஞானத்தில் ஆரம்பமாகியது. ஆரம்பகால கணினிகள் போர் சார்ந்த வேலைகளுக்கே பயன்படுத்தப்பட்டன. போரில் வெற்றி பெற விஞ்ஞானம் உதவும் என்று புரிந்தபின், தேவாலயத்தை மீறி, அரசாங்கங்கள் விஞ்ஞானிகளை மதிக்கத் தொடங்கியது. ஆரம்ப நாட்களில், விஞ்ஞானப் பிரச்னைகளைத் தீர்க்க உருவாக்கப்பட்ட கருவி கணினி. இடையில், பல்வேறு வியாபார பிரச்சினைகளைத் தீர்க்க உதவுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. ஒரு 50 ஆண்டுகளுக்குப் பின், அதன் பழைய நிலைக்கு மீண்டும் செல்ல இன்று நல்ல சூழ்நிலை உருவாகியிருப்பது வரவேற்கத்தக்க முன்னேற்றம்.

கணினிகளின் ஆரம்பகாலத்தில், அமெரிக்காவில் உள்ள காங்கிரஸ் புத்தகசாலையின் தகவல் (library of the Congress) ஒரு அளவுகோலாக கருதப்பட்டது. இன்று கூகிள் போன்ற தனியார் நிறுவனத்திடம் அதை விட அதிக தகவல் இருப்பது நிஜம். கடந்த 200 வருடங்களாகத்தான் அதிகமாக விஞ்ஞான ஆய்வுகள்/முன்னேற்றங்கள் வெளியிட்டு அலசப்படுகிறது. சில வெளியீடுகள் என்ற நிலை மாறி இன்று விஞ்ஞான வெளியீடுகள் கணக்கில் அடங்காது. சுருக்கமாகச் சொல்லப்போனால், விஞ்ஞானம் வளர வளர விஞ்ஞானத் தகவலும் பெருகத் தொடங்கியது. உதாரணத்திற்கு, சி.வி.ராமன் இன்றைய விஞ்ஞானியைவிட நூற்றில் ஒரு பங்கு அளவு கூட விஞ்ஞான வெளியீடுகளைப் படிக்க வேண்டியிருக்கவில்லை.

1990 ஆண்டை ஒரு அளவாக கொண்டால், 2000 ஆம் ஆண்டில் அத்தகவல் இரு மடங்காகியது. 2005 ல் 2000 வருட நிலையை விட இரட்டிப்பாகியது. வேண்டுமோ வேண்டாமோ, நாகரிக உலகில் ஈடுபட்டுள்ள அனைத்து மனிதர்களும் அதிக தகவல்களைக் கையாளவேண்டும் – வேறு வழியில்லை. விஞ்ஞானிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

மிக முக்கியமான இன்னொரு விஷயம். இன்று விஞ்ஞான சோதனைக்கருவிகள் கணினியுடன் சரளமாக உரையாடுகின்றன. எல்லாம் டிஜிட்டல் மயம். யாரும் காதில் பென்சில் வைத்துக்கொண்டு குட்டிப்புத்தகத்தில் தாடியுடன் எழுதுவதில்லை. மென்பொருள் சோதனைக்கருவியிலிருந்து தகவல்களை கணினிக்கு மாற்றி அழகாக படங்கள் (graphs) , போக்குகள் (trends) எல்லாம் நொடியில் வரைந்து விடுகிறது. சோதனைகள் மிகச் சிக்கலாகவும், அதே நேரத்தில் உயர் தரத்துடனும் செய்யப்படுகின்றன. மனோதத்துவதுறை கூட புள்ளியியல் மென்பொருளை நம்பியுள்ளது என்றால் மிகையாகாது.

சொல்வனம் – ஜனவரி 2011

இணையத்துடன் போராடும் விளம்பரத்தாள்கள் – இறுதிப் பகுதி

ன்று நடந்த செய்திகளை நாளை வெளியிட்டு, விளம்பரங்களால் தழைத்த தொழில் பத்திரிகைத் தொழில். சில பெரிய நகரங்களில் மதியம், மாலை என்று செய்திதாள்கள் அன்றைய செய்தியை அன்றே வெளியிட்டு மக்களைக் கவர முயல்வது உண்மையானாலும் இதுபோன்ற செய்திதாள்களின் வீச்சு அதிகமில்லை. இணையம் 1990-களில் வளர்ந்து வந்தாலும், பல செய்திதாள்கள் இணைத்தளங்கள் வைத்திருந்தாலும் அவை பிரபலமடையவில்லை. மேலும் பல இணைய நுகர்வோருக்கு இப்படி செய்திதாள்களை தேடி படிப்பது மிகவும் சுற்றி வளைப்பது போலப்பட்டது. அது போல 9/11/2001 தினமன்று கிருஷ்ணா பரத் என்ற அமெரிக்காவில் வாழும் இந்தியருக்கும் தோன்றியது. அன்று நடந்த பயங்கரவாத சம்பவங்களைப் பற்றி அறிந்து கொள்ள பல செய்திதாள் இணைத்தளங்களையும் மாறி மாறி படித்து அலுத்துவிட்டது. கூகிள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கிருஷ்ணா இது போன்ற தேவைகளை எப்படி பூர்த்தி செய்வது எப்படி என்று யோசித்தார். கூகிள் நிறுவனத்தில் அதன் மென்பொருள் பொறியாளர்கள் தங்களுக்கு பிடித்த ‘செல்ல ப்ராஜக்ட்’ ஒன்று எடுத்துக் கொண்டு வாரத்தில் ஒரு நாள் செலவிடலாம். கிருஷ்ணா செய்தி இணையதளங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கினார். ஒரு வருடம் உழைத்து, தன்னுடைய மென்பொருள் சேவையை கூகிள் மேலான்மைக்கு காட்ட இன்று அது Google News என்ற அருமையான சேவை. உலகில் உள்ள பல தரப்பட்ட செய்தி இணைத்தளங்களை இணைக்கிறது கூகிள் நியூஸ். நீங்கள் விளையாட்டுப்பிரியரா? விளையாட்டு சம்மந்தமான அத்தனை செய்தி இணையதளங்களையும் ஓரிடத்திலிருந்தே அலசலாம். இதில் நீங்கள் தேர்ந்தெடுத்த செய்தி இணையதளங்களிலிருந்து தலைப்புகளை அழகாகக் கொடுக்கிறார்கள். ஆர்வமிருந்தால் அந்த செய்தியை முழுவதும் படித்தால் போதும். மிக முக்கியமான ஒரு பங்கு விலை சரிந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அதைப்பற்றி பல நிதி சம்மந்தப்பட்ட செய்தி மையங்கள் மற்றும் இணைதளங்கள் என்ன சொல்கின்றன என்று மிக விரைவில் தெரிந்து கொள்ள இந்த சேவை மிகவும் உதவுகிறது. அடுத்த நாள் காலை வரை காத்திருந்து ஒரு செய்திதாளின் கருத்துக்காக ஏங்கத் தேவையில்லை. இன்று கூகிள் முகப்புப்பக்கத்தை செய்திகளுடன் உங்களுக்கு வேண்டியபடி விளையாட்டு, விஞ்ஞானம், வணிகம் என்று அமைத்துக் கொள்ளலாம். கூகிள் முகப்பு பக்கத்தை திறந்தால், ரிலையன்ஸ் பங்கின் விலை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். செய்தியைக் கொண்டு சேர்க்கும் வேகப்போட்டியில் செய்திதாள்கள் தோற்று விட்டன. காகித செய்தி நிறுவனங்கள் கடும் விமர்சனம் செய்த கிருஷ்ணா பரத் இன்று கூகிள் இந்தியாவின் தலைவர்!

இணையத்தின் பெரும் சக்தி அதன் வீச்சு. எங்கோ தயாரித்த ஒரு பொருளை எங்கோ உள்ள ஒரு பயன்படுத்தும் நபர் வாங்க வழி வகுக்கிறது. டெல் போன்ற கணினி தயாரிப்பாளர்கள் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களாக வளரக் காரணம் இணைய வணிகத்தின் சக்தியைப் புரிந்து கொண்டதால்தான். கணினி வாங்குவோர் விற்பனையாளர் அழுத்தம் அதிகமின்றி, ஆனால் நம்பிக்கையுடன் தனக்குப் பிடித்த கணினிகளைத் தேர்ந்தெடுப்பதோடு, வீட்டிலிருந்தபடியே பொறுமையாகப் பல மாடல்களையும் ஒப்பிட்டு வாங்க முடிகிறது. இதுபோல பல இணைய நிறுவனங்கள் சக்கை போடு போடுகின்றன. அமேஸான், டெல் போன்ற நிறுவனங்களுக்கும் இந்த செய்தித்தாள் சமாச்சாரத்திற்கும் என்ன சம்மந்தம்? இருக்கிறது. இவர்களது விற்பனை வடிவம் மாறுபட்டது. இதில் உயர் அழுத்த விற்பனையாளர்கள் இல்லை. ஆனால் இணையமற்ற புத்தகக்கடை மற்றும் கணினி நிறுவனங்களைவிட அதிகம் விற்கிறார்கள்.

செய்தித்தாள்களுக்குக் கிடைக்கும் விளம்பரங்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியும் இப்போது இணைய நிறுவனங்களுக்குச் செல்லத் தொடங்கியிருக்கிறது. 2008-இல் முதன்முறையாக வட அமெரிக்காவில் இணைய விளம்பர முதலீடு அச்சு விளம்பர முதலீட்டை விட அதிகரித்தது. இங்கிலாந்தில், கூகிள் இணையதள விளம்பர வருமானம் 2009-இல் அந்நாட்டில் உள்ள அத்தனை அச்சு செய்திதாள்களின் விளம்பர வருமானத்தைவிட அதிகரித்தது. சமீபத்தில், செல்பேசி விளம்பரங்களில் நூறு கோடி டாலர்கள் ஈட்டியுள்ளதாக கூகிள் அறிவித்துள்ளது!

அவசரமான இந்த உலகத்தில் உங்களின் ஒரு கற்பனை விளம்பரத் தேவையை அச்சு நிறுவனம் எப்படி பூர்த்தி செய்கிறது என்று ஒரு உதாரண உரையாடல் மூலம் பார்ப்போம். நீங்கள் காருக்குள் உபயோகப்படுத்தப்படும் வாசனை திரவியம் தயாரிக்கும் சிறிய நிறுவனத்தை சேர்ந்தவர் என்று வைத்துக் கொள்வோம்.

தொழிலதிபர் (தொ): ரொம்ப நேரமாக கால் செண்டர் சங்கீதம் அலுத்துவிட்டது. அவசரமாக ஒரு விளம்பரம் வெளியிட வேண்டும். நான் வாசனை திரவியம் காருக்குள் உபயோகபடும்படி சில வருடங்களாக தயாரித்து வருகிறேன்.

அச்சு விளம்பர கால்செண்டர் (செ): நான் கார் பற்றிய விளம்பரங்களைக் கையாளுகிறேன். உங்களை காஸ்மெடிக்ஸ் விளம்பர இலாகாவுக்கு மாற்றுகிறேன். (மீண்டும் கால் செண்டர் சங்கீதம்….).

செ: சொல்லுங்க, உங்களுக்கு என்ன விளம்பர உதவி வேண்டும்?

தொ: அவசரமாக ஒரு விளம்பரம் வெளியிட வேண்டும். நான் வாசனை திரவியம் காருக்குள் உபயோகபடும்படி சில வருடங்களாக தயாரித்து வருகிறேன். அடுத்த வாரம் வெளிவர வேண்டும்.

செ: சார், உங்களுக்கு அரிய வாய்ப்பு, அடுத்த புதன் கிழமை ஒரு புதிய கார் ஸப்ளிமெண்ட் வெளி வருது. ஹோண்டா, ஸ்கோடா எல்லாம் பெரிய கலர் விளம்பரங்கள் வெளியிடுகிறார்கள். நிறைய ஸ்பெஷல் கட்டுரைகள் வெளியிடுகிறோம். உங்கள் விளம்பரம் அங்கு வந்தால் உங்க கம்பெனிக்கு ரொம்ப நல்லது!

தொ: விளம்பர இடம் இருக்கிறதா? என்ன விலையாகும்?

செ: ஒரு கால் பக்க விளம்பரம் போட்டுறலாம் சார். ஆர்ட்வர்க் எல்லாம் ரெடியா வச்சிருக்கீங்க இல்லையா?

தொ: கால் பக்க விளம்பரம் என்ன விலையாகும்?

செ: கொஞ்சம் பொறுங்க. ஸப்ளிமெண்டிற்கு விசேஷ ரேட். ஒரு 50,000 ஆகும்.

தொ: அது கட்டுப்படியாகாதே. நாங்க சின்ன நிறுவனம். எங்கள் விற்பனை வருடத்திற்கு 10 லட்சம்தான். எங்கள் விளம்பர பட்ஜெட் 10,000 தான். ஏதாவது வழி சொல்லுங்களேன்.

தொ: நீங்க க்ளாசிஃபைடு இலாகாவை தொடர்பு கொள்ளுங்கள். நான் மாற்றுகிறேன். (மீண்டும் கால் செண்டர் சங்கீதம்….).

சின்ன விளம்பரதாரர்களை இப்படித்தான் ஏறக்குறைய பெரிய  விளம்பரப்பிரிவுகளில் பந்தாடுகிறார்கள். இதற்குப் பின் ஆர்ட்வர்க் ரெடி செய்து, விளம்பரம் வெளியாவதற்காகக் கட்டணம் செலுத்துவதற்குள் வெறுப்பாகிவிடும். மேலும், பணம் கட்ட அச்சு நிறுவனத்திற்குச் செல்ல வேண்டும். இதை எல்லாம் சமாளிக்க விளம்பர ஏஜென்ஸி ஒன்றிடம் இந்தப் பொறுப்பை சிறிய நிறுவனங்கள் ஒப்படைத்துவிட்டு, பலனை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியுள்ளது. இதில் சில  அச்சு நிறுவனங்களில், பல வகையிலும் சிறிய விளம்பரதாரர்கள் வேறுபடுத்தப்படுகிறார்கள். முதலில், பெரிய நிறுவன விளம்பரம் போகத்தான் இவர்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. இரண்டாவது சரியான பகுதியில் விளம்பரம் வெளியிட எந்த சலுகையும் கிடையாது. அச்சு நிறுவனங்கள் அவர்களது இணையதளங்களில் தங்களுடைய விளம்பர விலை விவரங்களை வெளியிடுவதில்லை. அப்படிச் சில நிறுவனங்கள் செய்தாலும், விளம்பரத்திற்கு இணையதளம் மூலம் பணம் கட்ட வழி இருக்காது. மூன்றாவது, சிறிய விளம்பரதாரர்களுக்கு விலை சலுகைகள் அதிகம் கிடைப்பதில்லை. இந்த வழிமுறைகள் சிறிய முதலீட்டார்களுக்கு சிக்கலானதாகப்படுகிறது. இவர்கள் கதி ரஜினி படம் வெளியாகும் பொழுது வெளிவரும் சின்னப்படம் போலத்தான் என்றால் மிகையாகாது.

விளம்பரதாரர் நோக்கிலிருந்து சிந்தித்த கூகிள் இப்பிரச்னையை அழகாகத் தீர்த்ததுடன் பெரும் லாபமும் ஈட்டியுள்ளது. பல நிறுவனங்களை அச்சு விளம்பரங்களை நிறுத்தும்படியே செய்துவிட்டது என்றால் பாருங்களேன்! அப்படி என்ன புதுமை செய்துவிட்டது கூகிள்? முதலில் கால் செண்டர் அறுவை இல்லை. சகல விளம்பர வேலைகளையும் கூகிள் இணையதளத்திலேயே முடித்துக் கொள்ளலாம். கூகிள் சிறிய, பெரிய நிறுவனங்களை அலைய விடுவதில்லை. விளம்பர ஏஜன்ஸிகளின் தேவைகளையும் இணையதளம் மூலமே பூர்த்தி செய்துவிடுகிறது.

முதலில் AdWords என்ற ஒரு கணக்கு கூகிளுடன் திறக்க வேண்டும். அதில் உங்கள் க்ரெடிட்கார்டு விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். உங்கள் விளம்பரத்தை உங்களுக்கு வேண்டியபடி கணினித்திறமை இருந்தால் நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். அதற்கு வேண்டிய மென்பொருள் கருவிகள் கூகிள் இணையதளத்திலேயே உண்டு. விசேஷ சலுகைகளும் உண்டு. விளம்பர விலைப்பட்டியலும் உண்டு. வார்த்தைகளுக்கேற்ப கட்டணம் இருந்தாலும், ஒரு கால்குலேட்டரும், இணையதளத்திலேயே கணக்கிடக் கொடுக்கிறார்கள். மேலும் உள்ளூர் சோப்பு கம்பெனிக்கும் யுனிலீவருக்கும் பாரபட்சம் கிடையாது. எல்லோருக்கும் இடம் உண்டு. கூகிள் விளம்பரங்கள் அதன் தேடல் சேவையுடன் இணைந்தது. அதனால், சாமர்த்தியமாக எதைத் தேடினால் உங்களுடைய விளம்பரம் வர வேண்டும் என்று நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். நீங்கள் புத்திசாலித்தனமாக உங்களது விளம்பரத்தை அமைத்தால், யுனிலீவருக்கு பதில் உங்கள் விளம்பரம்தான் வரும்! கூகிள் உலகில் உங்களது சாமர்த்தியம்தான் முக்கியம், உங்களது விற்பனை அளவு அல்ல.

மேலும் இணையத்தில் விளம்பரம் தோன்றுவதற்கு கூகிள் உங்களிடமிருந்து காசு கேட்பதில்லை. உங்கள் விளம்பரத்தால் வாசகர்கள் கவரப்பட்டு, அதை க்ளிக்கினால்தான் உங்களிடமிருந்து சில நூறு க்ளிக்கிற்கு இத்தனை என்று கூகிள் உங்கள் க்ரெடிட்கார்டிலிருந்து பணம் எடுத்துக் கொள்கிறது. இதுவரை எத்தனை செலவழித்தீர்கள் என்று தெரிய இணையதளத்திலேயே ஒரு பட்டியல் கொடுக்கிறார்கள் உங்கள் Adwords கணக்குடன். ஆர்ட்வர்க் சரியாக வேண்டும், ஆனால் உங்களுக்கு தயக்கமாக இருந்தால், விலையுடன் சில ஏஜன்ஸிகளையும் சிபாரிசு செய்கிறார்கள் – எல்லாம் இணையமயம். எந்தப் பகுதியில் உங்கள் விளம்பரம் வரும் என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை கூகிள் தேடும் சேவை பார்த்துக் கொள்கிறது. நம் உதாரணத்தில் உள்ள நிறுவனம் தங்களுடைய கூகிள் விளம்பரத்துடன் ‘car’, ‘perfume’ போன்ற keywords உடன் இணைத்தால் சரியாக இந்த சொற்களை கொண்ட தேடல் சேவையுடன் கூகிள் இணைத்து விடுகிறது. நீங்கள் அர்விந்த் மில்ஸ் அல்லது கோல்கேட்டாக இருந்தாலும், உள்ளூர் வியாபாரியாக இருந்தாலும் ஒரே மாதிரி சேவை. கூகிளின் இந்த அசுரவளர்ச்சியோடு அச்சு விளம்பரங்கள் போட்டி போட வேண்டுமென்றால், தொழில்நுட்பத்தை வளர்த்துக்கொண்டுப் பலரையும் வரவேற்று சேவை தருவதன் மூலமே சாத்தியம்.

கூகிள் அடுத்தபடியாக அச்சு விளம்பர வசதியையும் தன்னுடைய Adwords வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது. இணையம், அச்சு என்று இரண்டிலும் விளம்பரம் செய்தால் சலுகைகள் கொடுக்கிறது. மேலும் பல அச்சுப் பத்திரிகைகளில் உங்கள் விளம்பரம் சில நாட்களுக்கு வரும்படியும் கூகிள் ஏற்பாடு செய்கிறது. “மிக அதிக தாக்கம் ஏற்படுத்த வழிகள்’ என்று டிப்ஸ் வேறு. ஒரே இடத்திலிருந்து உங்களது விளம்பரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய எளிய வழிகளை தந்து பல கோடி விளம்பரதார்ர்களை கவர்ந்துவிட்ட்து கூகிள்.

கூகிள் உள்ளூர் விளம்பர விஷயத்திலும் அதிகம் ஆர்வம் காட்டுகிறது. சமீபத்தில், யோடில் என்ற நிறுவனத்தை AdWords மறு விற்பனைக்கு அமைத்தது. அதாவது, உள்ளூர் வீடு விற்றல், வாங்கல், சிறு வியாபாரங்கள் (ஹோட்டல்கள், பல சரக்கு கடைகள்) போன்ற நிறுவனங்களை கூகிள் மூலம் விளம்பர படுத்த உதவும் புதிய சேவை இது. பல செல்பேசிகளில் கூகிள் வரைபடங்களை (google maps) தரவிறக்கும் செய்யும் வசதி வந்துவிட்டதால், இது மேலும் முக்கிய விளம்பர மீடியாவாகும் வாய்ப்பை கூகிள் நன்று புரிந்து கொண்டுள்ளது.

சமீபத்தில் கூகிள் வரைபடத்தளத்திற்குச் சென்றீர்களா? அதில் “ரியல் எஸ்டேட்” என்ற புதிய பகுதியை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். எந்த வட அமெரிக்க ஊரை எடுத்துக் கொண்டாலும் அதில் உள்ள சந்தைக்கு வந்துள்ள வீடுகள், அதன் விலை, வீட்டின் படம் என்று வரைபடத்துடன் சின்ன ஒரு வகைப்படுத்தப்பட்ட செய்திதாள் உங்கள் முன் விரிகிறது.

அதே போல கூகிள் வரைபட சேவையில் உள்ளூர் வியாபாரிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மாலை ஒரு வியாபார விருந்துக்கு இந்திய உணவகத்திற்குப் போக வேண்டுமா? இங்கே கலிபோர்னியாவில் உள்ள சான்ஃப்ரான்ஸிஸ்கோ நகரில் உள்ள இந்திய உணவகங்களை கூகிள் வரைபட சேவையில் தேடினால் அழகாக வரைபடத்துடன் காட்டுகிறது கூகிள். முன்பதிவு செய்ய தொலைப்பேசி எண்ணும் உண்டு. அந்த உணவகத்தின் இணையதளம் இருந்தால், அவர்களுடைய மெனுவையும் பார்த்துவிடலாம். கூகிள் வரைபடம் மூலம் அந்த உணவகத்திற்கு எப்படிச் செல்வது என்றும் வழி விவரம் அறிந்து கொள்ளலாம். இப்படிக் காட்டப்படும் வியாபார விளம்பரங்கள் கூகிளுடன் ஏற்கனவே Adwords கணக்கு வைத்துக் கொண்டவை! இதுபோல ஏராளமான சிறிய வியாபாரிகள் கூகிள் மூலம் பயனடைந்திருக்கிறாரகள்.

கூகிள் வெற்றியைப் பற்றி பல கருத்துகள் உள்ளன. ஆனால், சில முக்கிய விஷயங்களை அச்சு மீடியா கவனிக்காமல் விட்டு விட்டு இன்று தவிக்கிறது. சில உதாரணங்கள்:

– இணையத்தின் சக்தி, தொடர்பு சுட்டிகள் (hyper links). முன் பதிவை இணைக்கும் சுட்டியை கொடுத்தால் போதும். புதிதாய் படிப்பவர் முன் பதிவுகளை படித்துக் கொள்வார். தொடர்ந்து படிப்பவர் சுட்டியை புறக்கணிப்பார். இந்த வசதி அச்சில் சாத்தியமில்லை.

– சுட்டிகள் கூகிளுக்கு எரிபொருள் போல. தேடல் சேவையில் சுட்டிகள் மூலம் இணையதளத்தை கூகிள் அடைய வழி செய்கிறது. இணையதளத்தில் கூகிளுடன் உறவு இருந்தால், சம்மந்தப்பட்ட விளம்பரங்கள் தோன்றும். இணையதளத்தால் கூகிள் பயனடைகிறது. கூகிளால் இணையதளம் பயனடைகிறது. அச்சு உலகில் இது சாத்தியமில்லை.

– இணையதளத்தில் விளம்பரங்களை அனுமதிக்க கூகிள் சன்மானம் தருகிறது. இணையதளத்தின் பிரபலத்திற்கேப சன்மானமும் மாறுபடும்.

– இப்படி பல லட்சம் நிறுவனங்கள்/இணையதளங்கள் பயனடையும் விளம்பர வியூகத்தை கூகிள் அமைத்துக் கொண்டு வெற்றி கண்டு பல புதிய இணைய சேவைகளை அறிமுகப்படுத்திக் கொண்டபடியே வளர்ந்து வருகிறது.

– தேடல் சேவையில் தொடங்கி இன்று வரைபடங்கள், விடியோக்கள், புகைப்படங்கள், மின்னஞ்சல்கள், ப்ளாக்கள், ஆவணங்கள், செல்பேசிகள் என்று எதையும் விட்டு வைக்கவில்லை கூகிள். எதிலும் விளம்பரம் சாத்தியம். அச்சுத் தொழிலால் நினைத்து பார்க்க்கூட முடியாத தொழில்நுட்ப முன்னேற்றம்.

– பெயர் பெற்ற பத்திரிகைகள், வாடிக்கையாளர்கள் தங்களை தேடி வருவார்கள் என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு விட்டன. கூகிளோ, எங்கெல்லாம் அதன் சேவை தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் ஆஜர். பெரிய பந்தாவெல்லாம் கிடையாது.

கூகிள் Adwords பல வியாபாரங்களுக்கு சரி வருவதில்லை என்ற கருத்தும் உண்டு. கூகிள் அடுத்த கட்டமாக செல்பேசிகளில் விளம்பரங்களை கொண்டு வரும் திட்டங்கள்/மென்பொருள்களை உருவாக்கி வருகிறது. ஆனால் எல்லாம் கூகிள் மயமில்லை. கூகிள் தவிர இன்னொரு புதிய நிறுவனமும் அச்சு நிறுவனங்களோடு போட்டி போடத்தொடங்கியிருக்கிறது. அது ஃபேஸ்புக். இளைய சமுதாயத்தை ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் ஆக்கிரமித்திருக்கும் விதம் மீடியாவில் உள்ள எல்லோரையும் சற்று பிரமிப்படைய செய்துள்ளது.

social_network

பல ‘சமூக வலையமைப்பு’ (soicial networking) இணையதளங்கள்  இருந்தாலும், அவற்றில் படு பிரபலமானவை நான்கு: 1) ஃபேஸ்புக் 2) ஓர்கூட் 3) லிங்க்ட் இன் (www.linkedin.com) 4) டிவிட்டர். இதில் ஓர்கூட் இந்தியர்களிடம் மிகவும் பிரபலம். ஓர்கூட் என்பது ஒருவகை ரசிகர் மன்றம் அல்லது அமைப்பு என்று கொள்ளலாம். பல தலைப்புகளில் பல சம்மந்தப்பட்ட விஷயங்களை அலசுகிறார்கள். உதாரணத்திற்கு, கிரிக்கெட் பற்றி ஒரு ஓர்கூட் அமைப்பு இருந்தால், அதன் அங்கத்தினர், 2020, டெஸ்டு பந்தயங்கள், ஆஸ்த்ரேலியா, தோனி, என்று பல விஷயங்களையும் தனித்தனி இழைகளில் அலசுகிறார்கள். இந்த அமைப்பில் ‘ஸ்க்ராப்’ என்ற வசதி மூலம் சின்ன சின்ன செய்திகளை அங்கத்தினர் பரிமாற்றிக் கொள்ளுகிறார்கள். ஓர்கூட் நிறுவனத்தை கூகிள் சில வருடங்களுக்கு முன் வாங்கியது.

ஃபேஸ்புக் இளைஞர்களிடம் மிகவும் பிரபலம். இந்த அமைப்பில், நன்பர்களுடன் அரட்டையடிக்கலாம்.. புகைப்படங்களைப் பகிர்ந்து  கொள்ளலாம். ‘சுவர்’ என்ற அமைப்பின் மூலம் அனைத்து நண்பர்களும் பார்க்கும் வகையில் செய்திகளை பரிமாற்றிக் கொள்ளலாம். இன்று, எதற்கு வேண்டுமானாலும் ஒரு ஃபேஸ்புக் பக்கம் உள்ளது. பல சிறிய வர்த்தகர்களும் ஃபேஸ்புக்கில் பக்கம் திறந்து, தங்களுடைய விற்பனையை அதிகரிக்க முயன்று வருகிறார்கள்.

புதிதாக வரும் பல செல்பேசிகளும் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற அமைப்புகளில் செய்திகள் அனுப்ப, படிக்க வசதிகளுடன் வருகின்றன. ‘லிங்க்ட் இன்’ அமைப்பில், பணியாட்கள் தங்களுடைய தொழில்திறமைகள் மற்றும் வேலை சம்மந்தப்பட்ட விஷயங்களை வெளியுலகோடு பகிர்ந்து கொள்கிறார்கள். பல நிறுவனங்களில் இருக்கும் வேலைவாய்ப்புகள் பற்றி இணையசுட்டிகளோடு வெளியிட்டு, அந்த வலையமைப்பில் உள்ளவர்கள் அறிந்து கொண்டு விண்ணப்பிக்கிறார்கள். வெளி உலகத்திற்கே தெரியாமல் குறைந்த செலவில் நிறுவனங்கள் எளிதாகப் புதிய பணியாட்களைத் தேடிக் கொள்கின்றன. இதில், நிறுவனங்கள் பிற வேலைவாய்ப்பு இணையதளங்களில் தேடுவதைப் போல, விண்ணப்பதாரர்களைத் தேடலாம். ‘ஒருவரிடம் ஃபேஸ்புக் பக்கமிருந்தால், அவரது வயது 12 முதல் 25 வரை. ஒருவரிடம் லிங்க்ண்ட் இன் பக்கம் இருந்தால், அவரின் வயது 30 முதல் 50 வரை’ என்றொரு ஜோக் கூட இருக்கிறது.

இன்று விரைப்பாக சூட் அணிந்த விற்பனையாளர்கள் நிறைந்த Oracle போன்ற நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில் பக்கம் வைத்திருக்கிறார்கள்:

http://www.facebook.com/Oracle?ref=ts

அதே போல, ‘லிங்க்ட் இன்’னில் இதோ ஐபிஎம் நிறுவனம்:

http://www.linkedin.com/company/1009

மீண்டும் அடுத்த இணைய சுற்றுக்கு வந்து விட்டது போன்ற பிரமையை ஏற்படுத்தும் ஆரகிளின் ஃபேஸ்புக், அல்லது ஐபிஎம்மின் லிங்க்ட் இன் பக்கம். பட்டும் படாதுமாய் ‘நாங்களும் ஃபேஸ்புக்கில் இருக்கிறோம்’ என்று பறை சாற்றுகிறார்கள். நிறைய தற்புகழ்ச்சி சமாச்சாரங்கள்தான். ஆரம்பத்தில் (ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்) இப்படித்தான் இணையத்தில் பெரிய நிறுவனங்கள் அரைமனதாக காலடி எடுத்து வைத்தார்கள். இன்று அமேஸான், ஈபே, டெல் என்று ராட்சச வியாபாரிகள் புதிதாக உருவாகி அபார வெற்றி பெற்றுள்ளார்கள்.

சமூக வலையமைப்பு மென்பொருள் மூலம் விளம்பரங்களை கணினியிலும், செல்பேசிகளிலும் சுலபமாக வழங்கும் அடுத்த ஐடியாவுக்கு பல கோடி டாலர்கள் காத்திருக்கிறது. அதுவரை அச்சுத் தொழில் தன்னை புதுப்பித்துக் கொள்ளாவிட்டால், சற்று மாற்றி பழைய தமிழ் சினிமா பாட்டை பாட வேண்டியதுதான்:

காகித ஓடம், இணையஅலை மீது
போவது போல யாவரும் போவோம்!

இணையத்துடன் போராடும் விளம்பரத் தாள்கள்

தென்ன புதிதாக விளம்பரத் தாள்கள்? செய்தித்தாள்களின் பெயர் திடீரென்று எப்படி மாறியது? இரண்டும் ஒன்றுதான். இணையத்தின் தாக்கத்தைப் பற்றி செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி என்று தனியாக எழுதுவதைவிட ஒன்றாகவே எழுதுதல் எளிது. இவற்றை இயக்கும் சக்தி விளம்பரம் என்ற ஒன்றே.

தொலைத் தொடர்பு அதிகம் வளராத காலங்களில் (அதாவது 19 ஆம் நூற்றாண்டு வரை), செய்திகள் அனைவரையும் எட்டுவது மிகவும் கடினமாக இருந்த பொழுது உருவாக்கப்பட்ட ஒரு ஊடகம் செய்தித்தாள். ஒன்றிரண்டு நாட்கள் கழித்து செய்திகள் அறிவது மிகவும் த்ரில்லிங்காக இருந்து வந்த காலம். உலகத்திலேயே மிகவும் அபத்தமான விஷயம், இன்னும் பலரும் தங்கள் சந்தாவால் செய்தித் தாள்கள் இயங்கி வருவதாக நினைத்துக் கொண்டிருப்பது. சந்தாவால் காகித செலவைக் கூட சமாளிக்க முடியாது. எல்லா காலகட்டங்களிலும் செய்தித் தாள்களை இயக்குவது பல விதமான விளம்பரங்கள்தாம்.

2006 ல் வெளி வந்த மணிரத்னத்தின் ‘குரு’ திரைப்படத்தில் செய்தித்தாள் அதிபருக்கும் குருபாய்க்கும் ஒரே மோதல். குருபாயை மிகவும் விமர்சனம் செய்து எழுதியவுடன் அவர், தன்னுடைய உதவியாளரிடம், “கடுமையாக விமர்சனம் செய்த பத்திரிக்கையின் விளம்பர பட்ஜெட்டை இரட்டிப்பாக்குங்கள்!” என்று சீறுவது போல காட்சி. சற்று சிந்தித்துப் பாருங்கள் – ‘அஙகாடி தெரு’ திரைப்படம் வரும் வரையில் எந்த தமிழ் பத்திரிகை ஜவுளி வியாபார தொழிலாளிகள் நிலை பற்றி எழுதியது?  உள்ளூர் ஃப்ளாட்களின் தரம் சரியில்லை என்று எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி செய்தித்தாள்களில் மூச்! பெரிய விளம்பரதாரர்களை தர்மசங்கடப்படுத்தாமல் இருப்பதே உத்தமம். காரணம், பத்திரிகைகளை இயக்குவதில் ஜவுளி வியாபாரமும், ரியல் எஸ்டேட்காரர்களின் விளம்பரங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அடக்கி வாசிப்பதே வியாபாரத்திற்கு நல்லது.

வட அமெரிக்காவில் ஒரு வழக்கம் உண்டு: “உங்கள் ஊரில் கார் பேப்பர் எது?” என்று விசாரிப்பது. இங்கு எது உண்டோ இல்லையோ, கார் டீலர்கள் ஒவ்வொரு ஊரிலும் உண்டு. விளம்பரத்திற்காக அதிகம் செலவழிக்கும் தொழில்களில் இதுவும் ஒன்று. வீடோ அல்லது காரோ வாங்க வேண்டுமானால் எந்த உள்ளூர் செய்தித்தாளை பார்ப்பீர்களோ அதுவே அந்த நகரில் அதிகம் விற்கும் செய்தித்தாள். இப்படி விளம்பரத்துடன் மிகவும் கலந்துவிட்ட ஊடகம் செய்தித்தாள். விளம்பரத்திற்கு இடம் போகத்தான் செய்திகள் வருகின்றன. ஒவ்வொரு நாளும் விளம்பர பகுதிகளை விற்க செய்தி நிறுவனங்களில் பல நூறு ஊழியர்கள் உழைத்து வருகிறார்கள். விளம்பரம் இல்லையேல் அடுத்த நாள் செய்தித்தாள் அதோகதிதான். வியாபார விளம்பரங்கள் செய்திகளை பின்னேற்றி உள்ளமை உண்மை. இது எப்படி நிகழ்ந்தது?

அச்சு, காகித செலவுகள் உயர உயர அதை சமாளிக்க வழிகள் தேவைப்பட்டன. சந்தா உற்பத்தி செலவின் ஒரு 10% அளவையே ஈடுகட்ட உதவுகிறது. சந்தாவை உயர்த்தினால் படிப்போர் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. விளம்பரங்கள் செய்தித்தாள் தயாரிப்புச் செலவை சமாளிக்க உதவியதோடு அதை ஒரு லாபகரமான தொழிலாகவும் மாற்ற உதவியது. சின்ன செய்தித்தாள்கள் அரசாங்க டெண்டர் போன்ற விளம்பரங்கள் இல்லையேல் பத்திரிகையை மூட வேண்டியதுதான். லாபம் ஈட்டுவது குறிக்கோளாகக் கொண்ட பெரிய செய்தித்தாள்களுக்கு செய்தி என்பது இரண்டாம் பட்சம்தான். இப்படித்தான் செய்தித்தாள்கள் விளம்பரத் தாள்கள் ஆயின. விளம்பரத்திற்கு இடம் போகத்தான் செய்திகளுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. செய்திகள் பல தருணங்களில் சுருக்கப்படுவதற்கும் இதுவே காரணம்.

ஆரம்ப காலங்களில் செய்தித்தாள்கள் தொலை தொடர்பை மிகவும் அதிகமாக உபயோகித்து வந்த துறையாக விளங்கியது. இந்தியாவில் இணைய புரட்சிக்கு முன், டெலக்ஸ், ஃபாக்ஸ் போன்ற வசதிகளை அரசாங்கத்துடன் போராடிப் பெற்று அதிகமாக உபயோகித்தது என்னவோ செய்தி நிறுவனங்கள் தான். ஆனால் தொலைத் தொடர்பின் ராட்சச வளர்ச்சியான இணையத்தை பற்றி குறை கூறுவதும் இதே நிறுவனங்கள்தான்! இன்று இதே நிறுவனங்களின் பல அன்றாட இயக்கங்கள், தொலைத் தொடர்பு சாதனங்களின் இன்றைய வடிவுகளான இணையத்தையும், அதன் ஒரு முக்கிய அம்சமான மின்னஞ்சலையும் நம்பி உள்ளன என்பது அவற்றால் எளிதில் ஜீரணிக்க முடியாத உண்மை.

செய்தித்தாள்களில் உள்ள ஒரு மிகப் பெரிய செளகரியம் அதன் parallel படிக்கும் முறைகள். அதாவது, அரசியல் படித்துவிட்டுத்தான் விளையாட்டைப்பற்றி படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அரசியல் படிக்கும் அப்பாவிடமிருந்து, கிரிக்கெட் பக்கத்தை மகன் உருவி படிக்கும் காட்சி நமக்கு மிகவும் பழக்கமானது. செய்திதாளின் முதல் போட்டி ரேடியோ. ஆனால், ரேடியோவில் மிகப் பெரிய குறை அதன் serial கேட்கும் முறைகள். விளையாட்டில் ஈடுபாடு உள்ளவர்கள் மற்ற செய்திகள் வந்து போக காத்திருக்க வேண்டும். ஆனால், படிக்கத் தெரியாதவர்களையும் சென்றடையும் ரேடியோவின் சக்தி 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் செய்தித்தாள்களை மிகவும் அச்சுறுத்தியது. ரேடியோ, மேலும் மற்ற வேலைகளை செய்து கொண்டே கேட்கவும் தோதாக இருந்த்து.

ரேடியோவின் போட்டியை சமாளிக்க, செய்தித்தாள்கள் படங்களுடன் விளம்பரங்களை பிரபலப் படுத்தின. ரேடியோவில் பார்க்க முடியாதே. இந்த புதிய விளம்பர யுக்தி ஓரளவுக்கு செய்தித்தாள்களை காப்பாற்றியது. அடுத்து, 1950 களுக்கு பின் வந்த தொலைக்காட்சி, படம் தாங்கிய செய்தித்தாள்களை அச்சுறுத்தியது. நகரும் படங்கள் கொண்ட விளம்பரங்கள் விளம்பரதார்ர்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்ததாக படவே, “செய்தித்தாளின் காலம் முடிந்துவிட்ட்து” என்று பல பண்டிதர்களும் ஜோசியம் சொல்லத் தொடங்கினார்கள். ஆனால் அப்படி நடக்க வில்லை. விளம்பரதாரர்கள் தங்களது செலவை தொலைக்காட்சிக்கும் செய்தித்தாளுக்கும் இடையே பங்கு போடத் தொடங்கினார்கள். செய்தித்தாளின் பங்கு குறைந்தாலும் அது முற்றிலும் நிறுத்தப்படவில்லை. மேலும், தொலைக்காட்சியும் serial முறையில் தான் செய்திகள் படிக்கப்பட்டு காட்டப்படுகின்றன. தொலைக்காட்சியில் சானலை மாற்றுவது தான் சற்று இணையான போக்கைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. செய்தித்தாள்களைப் போலவே தொலைக்காட்சியும் விளம்பரங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க அது ஒரு பெரிய தனியார் வியாபாரமாக உருவாகியுள்ளது. சோப்பு, ஷாம்பூ, பற்பசை, உணவு பொருட்கள் (இதை ஆங்கிலத்தில் FMCG – Fast Moving Consumer Goods என்று சொல்வதுண்டு) மற்றும் ஜவுளி விளம்பரங்களே அதிகம். யுனிலீவர், கோல்கேட் பாமாலிவ், பி & ஜி பற்றி கடுமையான விமர்சனத்தை ஏதாவது தொலக்காட்சி சானலில் பார்த்து ‘சொல்வனம்’ இதழுக்கு அனுப்புபவர்களுக்கு ஒரு ஸ்கூட்டர் இலவசம் என்று தைரியமாக அறிவிக்கலாம். செய்தித்தாள்கள் எப்படித் தொலைக்காட்சியின் வியாபாரப் போட்டியை சமாளித்தன?

செய்தித்தாள்களில் வீடு வாடகை, விற்பது, வாங்குவது மற்றும் பழைய கார் போன்ற பொருட்களை வாங்குவது, விற்பது என்பன வகைப்படுத்தப்பட்ட (Classifieds) விளம்பரங்களாக வடிவு கொள்கின்றன. சிறு விளம்பரங்கள் படத்துடன் அல்லது வெறும் வார்த்தைகளுடன் செய்தித்தாள்களில் வருவது உபயோகமான விஷயம். ஓரளவுக்கு தொலைக்காட்சியின் போட்டியைச் சமாளிக்க செய்தித்தாள்களுக்கு உதவியது இந்த வகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள் என்றால் மிகையாகாது. தொலைக்காட்சியில் விடாமல் வீட்டு வாடகை விளம்பரங்களை காட்டினால் யாரும் பார்க்க மாட்டார்கள். வாங்குவோருக்குச் செய்தித்தாளை கையில் எடுத்துக் கொண்டு, வீடு/கார் தேட மிகவும் தோதாக இருப்பது போல தொலைக்காட்சி உபயோகப்படுவதில்லை. பெரிய நகரங்களில் சனி ஞாயிறுகளில் பல நூறு விளம்பரங்கள் வெளியிட்டு செய்தித்தாள்கள் பிழைத்து வந்தன. நலிந்து வந்த செய்தித்தாள் வியாபாரத்திற்கு வகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள் ஓரளவு பிழைப்புக்கு வழி வகுத்தன. ஆனால், இன்று இணையப் புரட்சியால் வகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களும் இடம் பெயர்ந்து போக ஆரம்பித்துவிட்டன. இந்த நகர்வு செய்தித்தாள்களை மிகவும் பாதித்து விட்டது. இதைப்பற்றி விவரமாகப் பிறகு பார்ப்போம்.

செய்தித்தாள் என்பது அரசியல், சினிமா போன்ற பொதுஜனத் துறைகளில் மிக முக்கியமானதாக பல நூறு வருடங்களாக நம்பப்படும் ஒன்று. பல புகழ் பெற்ற அரசியல் எழுத்தாளர்கள் செய்தித்தாள்களில் பணிபுரிந்தவர்கள். இன்றும் இந்தியாவில் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் மற்றும் ஹிண்டு போன்ற செய்தித்தாள்களின் தலையங்கங்கள் நாட்டு நடப்பின் மிகவும் முக்கிய பிரதிபலிப்பாக கருதப்படுகிறது. இதை நான்காவது எஸ்டேட் என்று செல்லமாக சொல்வதுண்டு[1]. அமெரிக்காவில் நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், வால் ஸ்டீரீட் ஜர்னல் மிகவும் பிரசித்தி பெற்றவை. இவை அமெரிக்க ஜனநாயகம் மற்றும் வியாபாரத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுகின்றன. அமெரிக்க பங்குச் சந்தையில் எந்த நிறுவனத்தை வேண்டுமானாலும் சில விதிகளுக்கு உட்பட்டு பணமிருந்தால் வாங்கி விடலாம். உங்களிடம் வேண்டிய பணமிருந்தாலும் மேல் சொன்ன அமெரிக்க பத்திரிகைகளை வாங்க முடியாது. அமெரிக்க பொருளாதார அமைப்பில் அப்படி ஒரு வசதி உண்டு.

இப்படிப்பட்ட சக்ரவியூகத்தை தாண்டி இணையப் புயல் முன் தள்ளாடும் ராட்சச பத்திரிகை நிறுவனங்களைப் பார்க்கக் கஷ்டமாக உள்ளது. ஏன் இப்படி தள்ளாட வேண்டும்? இவர்கள் ப்ரச்னைதான் என்ன?

முதலில் இத்தொழில் எந்த அளவுக்கு அடிபட்டு உள்ளது என்று பார்ப்போம். பிறகு அதன் காரணங்களை ஆராய்வோம்.

 

மேலே உள்ள விளக்கப்படம் 2006 ல் உருவாக்கப்பட்டது. இதில் உள்ள 2010 ஜோஸியம் ஏறக்குறைய உண்மையாகிவிட்ட்து. இணையமில்லா மற்ற வழிகளில் விளம்பரத்திற்காக ஒதுக்கப்படும் செலவு தேங்கிய நிலையில் உள்ளது. அடுத்த 20 வருடங்களில் மற்ற வழி விளம்பரச் செல்வுகள் குறைக்கப்பட்டு இணைய வழி விளம்பரங்கள் ஏறக்குறைய வருடத்திற்கு 40 பில்லியன் டாலர்கள் வரை உயர வாய்ப்புண்டு என்று கணிக்கப்படுகிறது. எந்த வகை இணைய ஊடகத்தில் செலவு செய்யப்படும் என்றுதான் சரியாகச் சொல்ல முடியாது. இன்னும் பல பெரிய செய்தித்தாள்கள் மடிய அதிக வாய்ப்புகள் உலகம் முழுவதும் உள்ளன.

செய்தித்தாள்களின் விற்பனை எண்ணிக்கை 1946 க்கு பிறகு 2009 ல் தான் மிக குறைவாக இருநத்து என்ற செய்தி எந்த விதத்திலும் அச்சுத் தொழிலுக்கு ஊக்கம் தருவதாக இல்லை. கடந்த 20 ஆண்டுகளில் எப்படி அச்சிலிருந்து விளம்பரங்கள் பிக்ஸ்ல்களாக மாறின? துவக்க கட்டத்தில், இணையத்தின் சக்தியைப் பற்றி எழுதி காசு பண்ணினாலும், உண்மையில் அச்சுத் தொழில் தன் மீது இணையத்தின் தாக்கத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. பெயருக்கு எல்லா செய்தித்தாள்களும் இணையத்தளம் ஒன்று உருவாக்கி செய்திகள் வெளியிட்டு வந்தது. இது ஃபாஷன் போல கருதப்பட்ட்தே தவிர சீரியஸான வியாபார வழியாக சிந்திக்கப்படவில்லை. இணையத்தில் யார் விளம்பரம் ஒன்றைப் பார்த்து பொருளை வாங்கப் போகிறார்கள் என்ற இறுமாப்போடு செய்தித்தாள்கள் செயல்பட்டன. ’எங்களுக்கும் தொழில்நுட்பம் வரும்’ என்று உலகிற்கு காட்ட ஒரு அரைமனது முயற்சிகளே இவை. இது என்னவோ ஹாலிவுட்டில் ராமராஜன் தன்னை விளம்பரபடுத்திக் கொள்ள அலுவலகம் திறப்பதைப் போலதான் காட்சி அளிக்கிறது  அத்துடன் 1990 களின் ஆரம்பத்தில் இணைய வியாபாரம் (E-Commerce) அதிகம் வளரவில்லை. பலரும் இணையத்தில் பொருட்களை வாங்க விற்கத் தயங்கினார்கள்.

ஆனால், 1990 களின் கடைசியில் ஒரு இணையப்புரட்சியே நடந்ததை அச்சுத் தொழில் உணரவில்லை. முதலில், இணையம் மூலம் வியாபாரம் செய்வதற்கான நம்பிக்கை, நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுக்கு வளரத் தொடங்கியது. அமேஸான் மற்றும் ஈபே போன்ற இணைத்தளங்கள் இதில் பெரும் பங்கு வகித்தன. புதிய/பழைய புத்தகங்கள் மற்றும் பல பொருட்களை தனி நபர் விற்க, வாங்க தங்கள் வீட்டிலிருந்தபடியே 24 மணி நேரத்தில் செளகரியப்பட்ட நேரத்தில் செய்ய முடிந்தது. கடை திறந்திருக்குமோ, வாரக் கடைசியோ என்று கவலைப்பட வேண்டியதில்லை. இதற்கு ஈடு கொடுக்கும் வகையில் க்ரெடிட் கார்டு நிறுவனங்கள் பணம் கைமாறுவதற்கு உதவின. இந்தக் கட்டத்திலும் அச்சுத் தொழில் அதைப் பற்றி எழுதியதே தவிர தன்னை பாதிக்கும் என்று நினைக்கவே இல்லை.

சரி, ஈபே-வுக்கும், அமேஸானுக்கும் செய்தித்தாள்களுக்கும் என்ன சம்பந்தம்? இந்த இணைத்தளங்களில் புதிதாக பல்லாயிரம் புதிய வியாபாரிகள் தங்களுடைய பொருட்களை விளம்பரப் படுத்தினார்கள். இணையம் இல்லையேல் இவர்கள் செய்தித்தாளிடம் சென்றிருப்பார்கள். இன்று இது லட்சக்கணக்கான சில்லறை வியாபாரிகளாக வளர்ந்து இத்தகையவர்களில் எவரும் இணைத்தளங்களை விட்டு வெளியே விளம்பரத்திற்காக மூச்சும் விடுவதில்லை. இப்படிப்பட்ட பெரிய சந்தையை அச்சுத் தொழில் தவற விட்டது என்று நாம் கருதலாம்.  ஆனல் இத்தகைய வடிவில் உள்ள வர்த்தகத்துக்கு உதவ எந்த வசதியும் அச்சுத் தொழிலின்பால் இல்லை என்பதே உண்மை நிலை.

1990 களின் கடைசியில் கூகிள் (www.google.com) என்றஇலவசத்  தேடல் மையம் வந்ததை அச்சுத் தொழில் அதிகம் பொருட்படுத்தவில்லை. தேடல் என்பது நல்ல ஒரு கணினி செளகரியம் என்ற அளவிலேயே இருந்தது இவர்களின் கணிப்பு. இது எப்படி தங்களது விளம்பர வருமானத்தை தாக்க முடியும்? 2010 ல் கூகிள் உலகின் மிகப் பெரிய விளம்பர நிறுவனம் – வருமானம் 20 பில்லியன் டாலர்கள். இது எப்படி நிகழ்ந்தது என்று பிறகு விவரிப்போம்.

வகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள் என்னவோ பெரிய வியாபாரமாக அச்சுத் தொழிலை காப்பாற்றி வந்தது என்று முன்னம் சொன்னோம். அதுவும் இன்று பெரிதும் மாறிவிட்ட்து. க்ரெய்க்ஸ்லிஸ்ட் (craigslist.org) மற்றும் கிஜிஜி (kijiji) போன்ற இலவச இணைத்தளங்கள் உலகின் பெரிய 50 நகரங்களில் இலவச வகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள் வெளியிடுகின்றன. அச்சுத் தொழிலை மிகவும் பாதிக்க தொடங்கி விட்டன. ஜெர்மன் மொழி சொல்லிக் கொடுப்பது, கணினி திரை விற்பது, தொல் பொருள் விற்பது என்று எதை வேண்டுமானாலும் இலவசமாக இந்தத் தளங்களில் சாதாரண மக்கள் விற்றுத் தள்ளுகிறார்கள். இந்தியாவில் சுலேகா போன்ற இணைத்தளங்கள் பல இந்திய நகரங்களில் வகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களை வெளியிட்டு வெற்றி கண்டுள்ளன. மேலும் இந்தியாவில் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணங்கள் இன்றும் ஒரு பெரிய விஷயம். இதற்கு செய்தித்தாள் விளம்பரங்கள் மிகவும் முக்கியமாக கருதப்பட்டது ஒரு இடைக்காலம். செய்தித்தாள்களுக்கு முன்பு குடும்பத் தொடர்புகளும், தரகர்களும், சாதாரணத் தபாலும் இந்த பரிமாற்றங்களை நிகழ்த்த உதவின.  சில பத்தாண்டுகளே செய்தித்தாள்கள் இந்தச் சந்தையில் ஆட்சி செலுத்தின.  இன்று அதற்கும் வந்தது வேட்டு.

இன்று பாரத்மாட்ரிமனி.காம் (bharatmatrimony.com)  மற்றும் தமிழ் மாட்ரிமொனி.காம் (tamilmatrimony.com) என்ற வகையான பல இணைத்தளங்கள், இந்த வியாபாரத்தை அச்சுத் தொழிலிடமிருந்து வெகுவாக தட்டிச் சென்று விட்டன. இதைப்போன்ற இணைத்தளங்களில் பல வகை செளகரியங்கள் செய்தித்தாள்களை காட்டிலும் கூடுதலாகவே உள்ளது. முதலில், இணைத் தளங்களில் சில மாதங்களுக்கு விளம்பரத்தை புகைப்படத்துடன் வைத்துக் கொள்ள செலவு குறைவு. மேலும், பல வகையிலும் பொருத்தம் பார்க்க வழி உள்ளது. பல இடங்களிலும் வேலை செய்யும் ஆண் மற்றும் பெண்கள் வாழ்க்கையில் இணைவதற்கு இணை உலகின் துரிதத் தொடர்பு வசதிகள் மிக உதவியாக உள்ளன. உதாரணத்திற்கு, கல்கத்தாவில் உள்ள தமிழ்க் குடும்பங்களுக்குத் திருமண விஷயத்திற்காக ‘ஹிண்டு’ பார்க்கத் தேவையில்லை. இணைத்தளத்தில் திருமண விஷயம் சம்மந்தப்பட்ட சகல சேவைகளும் வீட்டிலிருந்தபடியே ஆரம்ப வேலைகளை தொடங்கலாம்.  பொருத்தமான நபர் என்று தோன்றும் ஒரு நபருடன் உடனடியே தொடர்பு கொள்ளவும் ஈ-மெயில் உதவுவதால், இணையத்திலிருந்து மின்னஞ்சலுக்குப் போகச் சில வினாடிகள்/ நிமிடங்களே ஆகும்.

எது எங்கு போனாலும் வேலை வாய்ப்பு போன்ற விளம்பரங்கள் இருக்கிறதே என்று கொஞ்சம் ஆறுதலாக இருந்த செய்தித்தாள்களுக்கு மான்ஸ்டர் (www.monster.com) மற்றும் வொர்கோபாலிஸ் (www.workopolis.com) போன்ற இணைத்தளங்கள் மேலும் சவால் விட்த் தொடங்கின. இதில் உறுப்பினர்கள் தங்களுடைய தற்குறிப்பை (resume) இணைத்தளத்தில் மேலேற்றி விடலாம். வேலைகளுக்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிது. தபால் கவர், தலை என்று அலைய வேண்டாம். செய்திதாளைப் போல அல்லாமல் தேவைக்கேற்ப, உங்கள் துறையில் உள்ள புதிய வேலைவாய்ப்புகளை வாரம் ஒரு முறையோ, அன்றாடமோ அனுப்பிவிடுகிறது மான்ஸ்டர். உங்களுக்கு எலக்ட்ரிக் ரிப்பேர் வேலை தெரியும் என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கு கட்டிடத் தொழிலில் வேலை கிடைக்கலாம், அல்லது கார், மற்றும் மோட்டார் தயாரிப்பு நிறுவனங்களில் கிடைக்கலாம் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். செய்தித் தாள்களில் இப்படிப் பல துறைகளிலும் சம நேரத்தில் வேலை தேடுவது கடினம், பலவிடங்களில், பல செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய நேரிடலாம். மேலும் செய்தித்தாள்கள் ஒரு பிராந்தியத்தோடு தாக்கத்தை நிறுத்திக் கொள்வன.  இணைத் தளங்களான, மான்ஸ்டர் போன்றவை ஒரு நாடு என்று கூட இல்லை, ப்ல நாடுகளில் கூடத் தகவலை ஒரே நேரத்தில் பரப்பும் சக்தி உள்ளவை.  அதற்காகச் செலவு ஒன்றும் அதிகமும் இல்லை.

மான்ஸ்டர் மற்றும் வர்கோபாலிஸ் போன்ற இணைத்தளங்களில் தேடுவதும் மிகவும் எளிது. ஒவ்வொரு துறைக்கும் ஒரு வேலை வடிகட்டி (filter) உருவாக்கினால், வாரம் ஒரு முறை புதிய விளம்பரங்களை உங்களுக்கு மின்ன்ஞ்சல் மூலம் அனுப்பி விடுகிறார்கள். அதற்கு பின் பிடித்த துறையில் வேலைகளை வெற்றிகரமாக அடைவது உங்கள் சாமர்த்தியம். எப்படி அனைவரையும் கவர்வது போல தற்குறிப்பு எழுதுவது என்று பல வித ஆலோசனைகளையும் வழங்குகிறார்கள். மேலும், நிறுவனங்களுக்கு தங்களது இணைத்தளங்களில் உள்ள தற்குறிப்புகளை பரிசீலனை செய்ய வசதியும் செய்து கொடுத்து காசு பண்ணுகிறார்கள். மான்ஸ்டர் மற்றும் வர்க்காபாலிஸ் இந்திய இணைத்தளங்களும் வைத்துள்ளார்கள். இந்த விசேஷ இணைத்தளங்கள் இந்த ஒரு வேலையை மட்டும் செய்வதால், செய்தித்தாள்களை விட மிக ஆற்றலுடன் செயல்பட்டு அச்சுத் தொழிலை மேலும் அச்சுறுத்தி வருகிறார்கள். இன்று அச்சுத் தொழில் என்று சொல்வதை விட அச்சுறுத்தப்பட்ட தொழில் என்று சொல்வதே சரி என்று படுகிறது!

செய்தித்தாள்களுக்கு இந்த நிலை எப்படி வந்தது என்று சற்று சீரியஸாக அடுத்த கட்டுரையில் அலசுவோம்.

________________________________________________

குறிப்பு:

[1] நான்காவது எஸ்டேட் என்பது யூரோப்பிய அரசியலில் இருந்து வந்த ஒரு சொல்/ பெயர். ஃப்ரெஞ்சு அரசியலில் நாட்டின் மூன்று முக்கிய பங்குதாரர்களாகக் கருதப்ப்பட்டவை, ஆளும் வம்சங்கள்,  சர்ச், பொதுமக்கள்.  இங்கிலாந்தில் இதுவே சற்று வேறாக வருணிக்கப்பட்டது.  ஆன்ம வாழ்வின் எஜமானர்கள், எதார்த்த வாழ்வின் எஜமானர்கள், சாதாரண மக்கள் என்று பிரிவு.  நான்காவது எஸ்டேட், அல்லது பிரிவு இந்த மூன்றுக்கும் அடங்காத சுதந்திர இயக்கம் கொண்டது எனத் துவக்கத்தில் கருதினர்.  இன்று தெரிகிறது, செய்தி நிறுவனங்கள், பொருளுக்கும், அரசியலுக்கும் அடங்கியே இயங்குகின்றன, மக்களை அவையும் வேட்டைதான் ஆடுகின்றன் என்பது?

சொல்வனம் – நவம்பர் 2010

நடனமாடும் நாவலுலகம்

செய்தித்தாளுலகத்தை பின்னால் அலசுவோம். முதலில் நாவல் பிரசுரிக்கும் வெளியீட்டு உலகத்தை ஆராய்வோம். அச்சு எந்திரம் கண்டுபிடித்து 300 ஆண்டுகளுக்கு பின்பு தான் நாவல் அச்சடிக்கத் துவங்கினார்கள். நாவல் உலகம் ஒரு 200 ஆண்டுகளாகத் தான் வளர்ந்து வந்துள்ளது.

ஆரம்பத்தில் நாவல்கள் பெரிய புத்தகங்களாகத்தான் அச்சடித்தார்கள். பல வன் அட்டை (hard cover) நாவல்களில் காகித நுனிக்கும் அச்சிட்ட பகுதிக்கும் இடையே நிறைய இடம் இருக்கும். மேலும் ஒரு அத்தியாயம் முடிந்ததும் ‘Page left intentionally blank’ என்று வெற்றுப் பக்கமும் இருக்கும். பைண்டு செய்வதற்கு உபயோகமாய், எல்லா அத்தியாயங்களும் வலது பக்கத்திலிருந்துதான் தொடங்கும். இதைப்பற்றி எல்லாம் இங்கு எதற்கு எழுதுவானேன்? சற்று பொறுத்திருங்கள் – எல்லாம் ஒரு காரணத்திற்காகத் தான். ஆரம்ப நாட்களில் நாவல்கள் அவ்வளவு மலிவாக விற்கப்படவில்லை. படிப்பவர்கள், புத்தகத்தில் தங்களது கருத்துக்களை ஓரத்தில் எழுதுவதற்காக அத்தனை இடைவெளி விடப்பட்ட்து. புத்தகத்தின் கடைசியில் குறிப்பு எழுதுவதற்கென்றே சில வெற்றுப் பக்கங்களும் இணைக்கப்பட்டது. நம் கிராமங்களில் டீக்கடையில் ‘இன்னிக்கு என்ன சேதி தெரியுமா?’ என்று பேசித் திரியும் கூட்டத்தைப் போல, மேற்கத்திய கலாச்சாரத்தில் புத்தக விமர்சன மன்றங்கள் அங்கங்கே இருந்தனவாம். உதாரணத்திற்கு, ‘சார்லஸ் டிக்கன்ஸ்’ ரசிகர் மன்றத்தில் தங்களுடைய எழுதிய கருத்துக்களை நண்பர்களுடன் அலசுவார்களாம். நாவலாசிரியர்கள் பிரபலமடைய அதிக தொலைத் தொடர்பு இல்லாத காலத்தில் இப்படித்தான் கருத்துப் பரிமாற்றம் செய்தார்களாம்.

மென் அட்டை (paperback) என்ற வடிவு, ஒரு அச்சுப் புரட்சி.  இது நாவல்களை மிகவும் பிரபல/மலிவு படுத்தியது. அந்த விலையில் பல பதிப்பீட்டாளர்களும் பல கோடிப் புத்தகங்களை விற்றுத் தள்ளினார்கள். மிகவும் சின்ன எழுத்து அளவு மற்றும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இடத்திலும் மறுபயன்பாட்டுக் காகிதத்தில் அச்சடித்தார்கள். இதனால் பல நாவலாசிரியர்கள் பயங்கர பணக்காரர்கள் ஆனார்கள். மேலும் அவர்களை சுற்றி ஒரு உலகமே உருவானது.  வட அமெரிக்கா மற்றும் யூரோப்பில் வருடத்திற்கு 60 பில்லியன் டாலர் வணிகம் இது! இன்றோ இவர்கள் தடுமாறும் நிலையில் உள்ளனர், அது ஏனென்று  ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

உலகிலேயே பைபிளுக்கு அடுத்தபடி அதிக அளவில் (80 கோடி பிரதிகள்) அச்சடிக்கப்பட்ட புத்தகம் ‘தலைவர் மா சே துங் மேற்கோள்கள்’. ஜே.கே. ரோலிங் (J.K.Rowling) எழுதிய ‘ஹாரி பாட்டர்’ கதைகள் 40 கோடி புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. இப்படி வளர்ந்துள்ள புத்தக வெளியீட்டுத் தொழில் எப்படி நடக்கிறது?

1. முதலில் எழுதும் எழுத்தாளருக்கு ஒரு ஏஜண்ட் தேவை. இவர், இத்தொழிலில் மிக முக்கியமானவர். முதலில் ஏஜண்டை எழுத்தாளர் கவர வேண்டும். இதிலேயே பல எழுத்தாளர்கள் அடிபட்டு போகிறார்கள். ஒரு ஏஜண்டுடன் ஒத்து வரவில்லையானால், மற்றவரை நாட வேண்டும்.

2. புத்தகத்தின் கருவை இவரிடம் எழுதுவதற்கு முன் விவரிக்க வேண்டும். இவர், பல வெளியீட்டாளர்களிடம் இந்த கருவை வைத்து வியாபார ஏற்பாடுகள் செய்வார். வெளியீட்டாளர்களின் தேவைகள் மாறுபடும், அவர்களின் வீச்சும் விற்பனை அளவுகளும் மாறுபடும் – இவர்கள் கொடுக்கும் ராய்ல்டியும் அதற்கேற்ப மாறுபடும்.

3. எல்லா வியாபார ஏற்பாடுகளும் ஒப்புக் கொள்ளப்பட்டால், எழுத்தாளர் தன்னுடைய படைப்பைப் பகுதி பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ ஏஜண்டுக்கு அனுப்பிவிடுவார். இதை மானுஸ்கிரிப்ட் (manuscript) என்கிறார்கள்.

4. ஏஜண்ட் இதை வெளியீட்டாளருக்கு அனுப்புவார். வெளியீட்டாளரின் நிறுவனம், இத்தொழிலின் நெளிவு சுளிவுகளை அறியும். எழுத்துக் கோர்வை (spelling/grammar) சரியாக இருக்கிறதா, எழுத்து நடை சரியாக இருக்கிறதா என்று பல நிபுணர்கள் ஆராய்ந்து எழுத்தாளருக்கு ஏஜண்டு மூலம் குறைகளைச் சுட்டிக் காட்டுவார்கள்.

5. திருத்திய படைப்பை, மதிப்பீடு செய்ய ஒரு சின்ன கமிட்டி உண்டு. அவர்கள், எழுத்துத் தொழிலில் இருப்பவர்கள். உள் முரண்பாடுகள், தகவல் பிழைகள் (factual errors) மற்றும் சுவாரசியக் குறைகளைச் சுட்டிக் காட்டுவார்கள்.

6. எல்லாம் திருத்திய, திருப்திகரமான பொருள் தயார். அச்சடிக்குமுன் விளம்பரம் தொடங்க வேண்டும். வெளியீட்டு நிறுவனம், ஏஜண்டுடன் சேர்ந்து வெளிவர இருக்கும் புத்தகத்தைக் கடைகள், சினிமாக்கள், இணைத்தளங்கள் என்று எல்லா இடத்திலும் இன்ன தேதிக்கு இப்படி ஒரு புத்தகம் வெளிவருகிறது என்று விளம்பரம் செய்யத் தொடங்குவார்கள்.

7. முதல் பதிப்பில் சில பிரதிகள், பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சியில் புத்தக விமர்சனம் செய்யும் விமர்சகர்களுக்கு அனுப்பப்படும். உடனே ஏஜண்ட், பல பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி பேட்டிகளுக்கு ஏற்பாடு செய்வார்.

8. அடுத்தபடி, சொன்ன நாளில் எல்லாப் புத்தக கடைகளிலும் புத்தகம் வெளியிடப்படும். இதை ஒட்டி, சில புத்தகக் குழுமங்கள் எழுத்தாளரைக் குறிப்பிட்ட சில ஊர்களுக்கு தேர்ந்தெடுத்த புத்தகக் கடைகளுக்கு சொற்பொழிவாற்ற அழைக்கும் (புத்தகத்தைப் பற்றிப் பேசத்தான் அழைப்பு). எழுத்தாளரின் விசிறிகள் விளம்பரத்தைப் பார்த்து, எழுத்தாளரே கையெழுத்திட்ட பிரதிகளைப் பெற வரிசையில் நின்று வாங்கிச் செல்வார்கள்.

9. அதிகம் விற்கும் லிஸ்ட் -நம்மூர் சினிமா பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் போன்றது- ஒன்றை வாராவாரம்  நியூயார்க் டைம்ஸ் போன்ற செய்தித்தாள்கள் வெளியிடுகின்றன. இவற்றில் எதிலாவது இடம் பெறுவது மேன்மேலும் விற்பனை பெருகுவதற்கு அவசியம்.

10. அடுத்தபடி, புத்தகங்களை நூலகங்களுக்கு விற்கும் ஏற்பாடுகளை வெளியிடும் நிறுவனம் செய்து விடும்.

11. விற்கும் ஒவ்வொரு புத்தகத்திலிருந்தும் எழுத்தாளருக்கு பங்குத் தொகை (ராயல்டி) உண்டு. அதே போல ஒரு பங்கு ஏஜண்டுக்கும் உண்டு.

மேலே சொன்ன படிகள் அத்தனையும் பாட நூல் மற்றும் பிற ஜனரஞ்சகப் புத்தகங்களுக்கும் (popular non-fiction)  பொருந்தும். முன் சொன்னது போல இவையெல்லாம் மேலை உலகில் நடப்பவை.  நம் நாட்டிலோ இவ்வளவு விவரமான வகையில் பதிப்பிடும் அமைப்புகள் கிடையாது – ஆனால், ஏஜண்டு, விற்பனை முறைகளில் சில வேறுபாடுகள் உள்ளன. நமது எழுத்துப் படைப்புகளின் பரவலும் அளவானது என்பதை நாமறிவோம்.

சரி, மேற்கில் இப்படி செளக்கியமாக நடக்கும் தொழிலுக்கு என்ன தடை வர முடியும்? எல்லாம் தொழில்நுட்பம்தான். முதலில் புத்தகம் படிக்கும் கருவிகள், இரண்டாவது இணையம். இந்த இரு சக்திகளும் அச்சுப் புத்தகத் தொழிலை ஆட்டிப் படைக்கத் தொடங்கிவிட்டன. புத்தகம் படிக்கும் கருவிகள் அச்சுத் தொழிலால் உருவாக்கப் படும் பொருளுக்கு மட்டுமே சவாலாக வளர்ந்து வருகின்றன. ஆனால், இணையமோ, அதன் பல்வேறு சக்தி வாய்ந்த வீச்சால் இத்தொழிலுக்கே சவாலாக வளர்வது உண்மை. விவரமாக இந்த இரு சவால்களையும் ஆராய்வோம். எதிர்காலத்தில் இத்தொழில் எப்படி மாற இருக்கிறது என்று சில போக்குகளையும் ஆராய்வோம்.

புத்தகம் படிக்கும் கருவிகள் பற்றி சொல்வனத்தில் ‘ஒலி/ஒளி மயமான எதிர்காலம்’ என்ற தலைப்பில் ஏற்கனவே எழுதியாகிவிட்டது. இதன் சமூகத் தாக்கங்களைச் சற்று ஆராய்வோம். மின்னணு புத்தகங்கள் (e-book) காகிதப் புத்தகங்களுக்கு சவாலாக உள்ளன. ஏன் மின்னணு புத்தகங்கள் தோன்றின? காகிதப் புத்தகம் வாசகரை அடையுமுன், வெளியீட்டார் பதிப்பகத்திலிருந்து பல ஆயிரம் கி.மீ. பயணம் செய்கிறது. மேலும், அனேகப் புத்தகங்கள் ஒரு முறையே படிக்கப்படுகின்றன. உதாரணம், நம் காமிரா/குளிர்சாதன பெட்டி உபயோக முறை புத்தகத்தை எத்தனை முறை படிக்கிறோம்? எதற்காக காகிதத்தை வீணாக்க வேண்டும்?  எதற்கு மரங்களை அழிக்க வேண்டும்? மேலும் ஒரு நாவலைப் படித்த பின் நாட்டின் இன்னொரு மூலையில் இருப்பவருக்கு இரண்டாம் கையாக (second hand) அமேஸானில் விற்கிறோம். அப்புத்தகம் மீண்டும் டீசல் செலவழித்துப் பயணிக்கிறது. மின்னணு புத்தகங்களுக்கு இந்த பயணப் ப்ரச்னை கிடையாது. உதாரணத்திற்கு, எல்லா செல்பேசி கம்பெனிகளும் அவர்களுடைய செல்பேசி உபயோக முறையில் புத்தகங்களை தரவிறக்கம் செய்ய வசதி செய்துள்ளார்கள்.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மின்னணு புத்தகங்கள் அதிகரிக்க தொடங்கின. பலர் ஆரம்பத்தில், இதை டிஜிட்டல் இசை போல கருதினார்கள். ஆனால் இக்கருவிகள் சற்று வேறுபட்ட்வை. ஐபாட் வாங்கியவுடன் முதலில் அனைவரும் செய்யும் காரியம், தன்னிடமுள்ள அத்தனை சிடிக்களையும் MP3 வடிவத்திற்கு மாற்றி, ஐபாட்டில் பதிவு செய்தல். அப்படிப் பார்த்தால், மின்னணுப் புத்தக தொழில்நுட்பம் வந்தவுடன், நம்மிடம் இருக்கும் அத்தனை புத்தகங்களையும் இந்த புதிய நியமத்திற்கு மாற்றுவதுதானே முதல் காரியமாக இருக்க வேண்டும்? அதில் தான் சிக்கல். அவ்வளவு எளிதல்ல மின்னணு புத்தக வடிவத்திற்கு மாற்றுவது. இதனால் காகித புத்தகங்கள் சற்று பிழைத்தன.

ஆனால், கல்லூரி மாணவர்கள் மின்னணு பாட புத்தகங்களையே விரும்புவார்கள் என பிரசுரகர்த்தர்கள் கருதுகிறார்கள். முதல் கட்டமாக இந்த வடிவம் மாணவரின் தோள் சுமையைக் குறைக்கிறது. ஐபேட், மற்றும் கிண்டில் போன்ற புத்தகம் படிக்கும் கருவி ஒன்றால் பல நூறு புத்தகங்களைப் படிக்க முடிகிறது. பாடப் புத்தக நூல் வெளியீட்டாளர்கள் இதனால் தங்களது முறைகளை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வன் அட்டைப் பாட நூல் ஒன்றை வாங்கினால், மின்னணுப் புத்தகம் இலவசம், அல்லது மின்னணு புத்தகம் குறைந்த விலைக்கு என்று அளிக்கத் தொடங்கினார்கள். இப்பொழுது மிகப் பெரிய போக்கு என்னவென்றால், கல்லூரிப் பாடப் புத்தகங்களை வாங்கினால், அத்துடன் தனியாகக் கேள்வி பதில் புத்தகங்கள் (நம்மூர் கோனார் புத்தகங்கள் போல) வாங்க வேண்டாம், அதற்கு பதில் பதிப்பாளரின் இணைத்தள கேள்வி பதில் பகுதிக்கு ஒரு வருட சந்தா இலவசம்!

இதே போல, இளைஞர்/ஞிகள் காதல் கதைகள், சில கவிதைத் தொகுப்புகள் (romantic novels/ poems) படிப்பதற்கு மின்னணு புத்தகங்களையே விரும்புகிறார்கள். ஏனென்றால், இப்புத்தகங்கள் ஒரு முறை படித்தபின் மறக்கப் படுகின்றன. மிக குறைந்த விலையில் மின்னணு புத்தகங்களாய் டிஜிட்டல் இசையைப் போல தரவிறக்கம் செய்து, படித்து, அடுத்த நாவலுக்குத் தாவ வேண்டியது தான், இதற்காக காகிதம், டீசல், மை, அச்சு எந்திரம் தேவையா?

மேலும் இன்றென்னவோ, ஒரு காகித புத்தகமும் மென்பொருள் கொண்டு, மின்னணு வடிவத்தில் தான் முதலில் உருவாக்கப்படுகிறது. இதனால், புத்தக வெளியீட்டாளருக்கு ஏற்கனவே மின் வடிவில் உள்ள புத்தகத் தகவலை, ஒரு மின்னணு புத்தகமாக வெளியிடுவது மிக எளிது. ஆனால், இதில் அதிகம் காசு பண்ண முடிவதில்லை. அத்துடன் மின்னணு புத்தகங்கள் எளிதில் கணினியில் நகல் எடுக்கப்படலாம். ஒரு காகித புத்தகத்தை ஒரு தருணத்தில் ஒருவருக்குத்தான் கொடுக்க முடியும்; ஆனால், ஒரு மின்னணு புத்தகத்தை ஒரே தருணத்தில், லட்சம் பேர்கள் இணையத்தில் தரவிறக்கம் செய்ய முடியும். இதனால், வெளியீட்டாளர்கள் மிகவும் அஞ்சுகிறார்கள். ஆனால், மின்னணுப் புத்தக வளர்ச்சியை தடுக்க முடியாமல் அரை மனதுடன் பல்வேறு விற்பனை முறைகளை கடைப்பிடித்து எப்படியாவது தங்களுடைய காகிதப் புத்தக விற்பனையைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சித்து வருகிறார்கள்.

இதோடு, புத்தகம் படிக்கும் கருவிகள் (e-book readers) வந்து வெளியீட்டாளர்களை மிகவும் அச்சுறுத்துகின்றன. முதலில் இந்த வகை கருவிகளை அமேஸான் போன்ற பெரிய பன்னாட்டுப் புத்தக விற்பனை மையங்கள் தொடங்கின. அமேஸானின் பயங்கர தொழில்நுட்ப மற்றும் வியாபார பலம் சிறிய புத்தக நிறுவனங்களுக்கு பயம் காட்டத் தொடங்கியது. அமேஸான், தன்னுடைய கிண்டில் கருவியை விற்பதற்காக பல வெளியீட்டாளர்களையும் குறைந்த விலைக்கு மின்னணு புத்தகங்களை வெளியிடும்படி கட்டாயப்படுத்தியது. பரந்த சந்தை அமையும் என்று வெளியீட்டார்களும் சில புத்தகங்களை அப்படி குறைந்த விலையில் மின்னணு புத்தகங்களாய் வெளியிட ஒப்புக் கொண்டனர். ஆனால், இதுவே இன்று முறையாகிவிட்ட்து. மின்னணு புத்தகத்திற்கு காகித புத்தகத்தின் 10% விலை கூட கிடைப்பதில்லை. பல பதிப்பாளர்களும் அமேஸானை ஒரு ராட்சசனைப் போல பார்க்கத் தொடங்கி விட்டார்கள். ஆனால் குறை அமேஸான் பக்கம் இல்லை – இது தொழில்நுட்ப வளர்ச்சியின் விலை. அமேஸானை தொடர்ந்து சோனி, பார்டர்ஸ் என்று பலரும் இதே வகைக் கருவிகளை விறகிறார்கள். படிக்கும் கருவிகளின் விலை குறைந்த வண்ணம் இருக்கிறது. அதனால், அதில் படிக்கும் புத்தகங்களின் விலையும் குறைவாக இருக்க வேண்டும் என்று நுகர்வோர் நினைப்பதில் என்ன தவறு? இதனால் ப்ரச்னை என்னவென்றால், மின்னணுப் புத்தகத்தின் விலை பூஜ்ஜியமாகி கொண்டு வருகிறது. அதனால், புத்தகம் சார்ந்த படைப்பாளி, பதிப்பகத்தார், இடை பதிப்பக தொழில்நுட்ப வல்லுனர்கள் எல்லோரும் நசுக்கப் படுவதாக நினைக்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு இத்துடன் தலைவலி முடிவதாகத் தெரியவில்லை. தலைவலி போய் திருகுவலி என்பார்களே, அதைப்போல, இணையம் என்ற திருகுவலியையும் இவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.

முன்பே சொன்னது போல, இணையத்தின் பாதிப்பு பல வகையிலும் புத்தக அச்சுத் தொழிலை ஆட்டிப் படைக்கிறது. முதலில் நாம் பார்க்க இருப்பது, ப்ளாக் என்ற வலைப்பூ புரட்சி. கவியரசர் கண்ணதாசனின் அருமையான ‘ஆலயமணி’ திரைப்பட பாடல் நினைவுக்கு வருகிறது:

சொல் என்றும் மொழி என்றும் பொருள் என்றும் இல்லை,
பொருள் என்றும் இல்லை
சொல்லிய (ல்லாத) சொல்லுக்கு விலை ஏதும் இல்லை,
விலை ஏதும் இல்லை.

யார் வேண்டுமானாலும் ப்ளாகிக்கலாம்! எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதித் தள்ளலாம். WordPress மற்றும் blogger போன்ற அமைப்புகளில் பல லட்சம் பேர்கள் காய்கறி வியாபாரம் முதல் காயத்ரி ஜபம் வரை எழுதிப் படிப்பவர்களுக்காக தவமிருக்கிறார்கள். ஏனென்றால், எழுதிய எழுத்துக்கு விலை ஏதுமில்லை. இடைத்தரகர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், எடிட்டர்கள் இல்லை. பல வலைப்பூக்களில் எழுத்துப்/கருத்துப் பிழைகள் தாராளமாக உள்ளன. சிலருக்கு இது பொழுது போக்கு. சில நாட்கள் எழுதிவிட்டு ஓய்ந்து விடுவார்கள். இவர்களுக்கு உதவ கூகிள் போன்ற நிறுவனங்கள் தங்களது தேடல் என்ஜின்களோடு இணைக்க இலவச உதவி புரிகிறார்கள். விளம்பரங்கள் விற்க உதவினால் காசு கூட சம்பாதிக்கலாம். சுமாராக எழுதத் தெரிந்தால் போதும். இதில் செளகரியம் என்னவென்றால், படிப்பவர்கள், பதிவு வெளியான பல மாதங்கள், வருடங்களுக்கு பிறகு கூட படிக்கலாம், விமர்சிக்கலாம். விமர்சனத்தை பதிவுடன் படிக்க முடியும்; எழுத்தாளர், தன் நிலையை விளக்க முடியும்; மற்றவர்கள் அனைத்தையும் ஒரேடியாக படிக்க முடியும். புத்தகத்தில் இந்த செளகரியம் கிடையாது. அதுவும் இதெல்லாம் இலவசமாக அல்லவோ கிடைக்கின்றன!

புத்தகத்தில் இல்லாத இன்னொரு விஷயம் விடியோ மற்றும் ஒலித் துண்டுகளை வலைப்பூக்களில் எளிதில் இணைக்க முடியும். செயல் விளக்கம் மற்றும் இசை போன்ற விஷயங்களை விளக்குவதற்கு இது மிகச் சக்தி வாய்ந்த ஊடகம். கிண்டில் போன்ற புத்தகம் படிக்கும் கருவி சில சந்தா உடைய வலைப்பூக்களை படிக்க வழி செய்கிறது! இந்தப் புரட்சியால் நன்றாக எழுதும் பல எழுத்தாளர்கள் நேராக தங்களுக்கு வலைப்பூ அமைத்துக் கொண்டு செளகரியப்பட்ட பொழுது, பிடித்தவற்றை எழுதுகிறார்கள். சில வலைப்பூக்களுக்கு, பத்திரிகைகளைவிட, நாவல்களை விட அதிகம் படிப்போர்கள் உள்ளார்கள். ஒலி, விடியோவுடன் இவை இணையத்தில் சக்கை போடு போடுகின்றன. சிலர் விடியோ ப்ளாக் என்று விடியோவிலேயே அசத்துகிறார்கள். இவர்களின் பலம், எழுதியவுடன் வாசகனின் கருத்துக்களை அறிந்து கொள்ள முடிவதுதான். தபாலுக்கு காத்திருக்க வேண்டியதில்லை. தன்னுடைய படைப்புக்களில் எந்த படைப்பு அதிகம் விரும்பப்பட்ட்து, எது நிராகரிக்கப்பட்ட்து என்று நேரடியாக கணிக்கவும் முடியும். எல்லாவற்றையும் விட, உலகில் இணைய இணைப்பு எங்கிருந்தாலும் படிக்கலாம், பார்க்கலாம், கேட்கலாம். எங்கள் ஊருக்கு விகடன் வருவதில்லை என்பதெல்லாம் பழம் சமாச்சாரம்! உதாரணத்திற்கு, ‘சொல்வனம்’ எங்கிருந்தாலும் படிக்கலாம், பார்க்கலாம், கேட்கலாம். இணைய இணைப்பு இருந்தால் (மின்சாரமும் இருந்தால்) போதும்.

புத்தக உலகம் தொழில்ரீதியாக ”நீள உரை”த் (long text) தொழில் என்று அழைக்கப்படுகிறது. ட்விட்டர் (Twitter)  போன்ற சமூக வலையமைப்பு இணைய வசதிகள் இருப்பினும், ”நீள உரை” தொழிலுக்கு அது ஒரு பெரிய சவாலில்லை. நீள உரை எழுத நேரமில்லாதவர்கள்/திறமையில்லாதவர்கள் இது போன்ற புதிய வசதிகளை உபயோகப்படுத்துகிறார்கள். இதன் தாக்கம், செய்தித்தாள் உலகத்தில் அதிகம் உள்ளது. Twitter உலகில் 140 எழுத்துக்களுக்குள் ஒரு செய்தி அடங்க வேண்டும். அதே போல Facebook போன்ற சமூக வலையமைப்பு இணைய வசதிகள் நேரடியாக ”நீள உரை” தொழிலை பாதிப்பதில்லை என்பது என் கருத்து. இவை ”நீள உரை” தொழிலை சுற்றியுள்ள அமைப்புகளை மட்டுமே பாதிக்கின்றன. இதைப் பற்றி, இக்கட்டுரையில் பிறகு அலசுவோம்.

வேறு எந்த விதமான இணைய பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது? எதிர்பார்க்காத திசைகளிலிருந்தெல்லாம் பதிப்பு தொழிலை தலைகீழாக்க இணைய முயற்சிகள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சுவாரசியமான முன்னேற்றம். இதில் சில முயற்சிகளை இங்கு ஆராய்வோம். முதலில், உங்களுக்கு சிந்திக்க வேண்டிய ஒரு கேள்வி- ‘சொல்வனம்’ என்பது என்ன? அட, இதைப் போய் யாராவது சொல்வனத்திலேயே எழுதுவார்களா? உடனே வரும் பதில் – ‘சொல்வனம்’ ஒரு இணைய பத்திரிகை. இது உண்மையானாலும், பாதி உண்மையே. எழுதும் எனக்கு எழுத்தார்வம் கொண்ட நண்பர்கள்/உறவினர், படிக்கும் உங்களுக்கு நண்பர்கள்/உறவினர் உண்டு. பத்திரிகையை சேர்ந்தவர்களுக்கும் எழுத்தார்வம் கொண்ட நண்பர்/உறவினர் உண்டு. ஒரு படைப்பு ‘சொல்வனத்தில்’ வெளியாவதற்கு/படிக்கப்படுவதற்கு இந்த நீண்ட சமூக அமைப்பு ஒரு காரணம். மேலும், ‘சொல்வனம்’ என்பது இந்த சமூக அமைப்பு சங்கமிக்கும் இடம். பத்திரிகை வடிவத்தில் இந்த சங்கம்ம் ஏற்படுகிறது. இந்த சமூக அமைப்பில் ஒத்துப் போகின்ற ரசனையுடையவர்கள் இணைகிறார்கள். இதை காகித புத்தக வெளியீட்டாளர்களும் மெதுவாக அறிய முனைந்துள்ளார்கள். ஆனால், இந்த கருத்தை சில இணைய அறிவாளிகள் மிக அழகாக புரிந்து கொண்டு காகித புத்தக உலகத்துக்கு சவால் விட்டு வருகிறார்கள்.

பல மின்னணு புத்தக வெளியீட்டாளர்கள் உள்ளார்கள். இவர்களிடம் அச்சடித்த கதையை அனுப்பத் தேவையில்லை. மின்ன்ஞ்சல் வழியே அனுப்பிய கதை பதிப்புக்கு சரியாக வருமானால், உடனே உங்களுக்கு ஒரு சிறிய முன்பணம் தந்து விடுகிறார்கள். ஒரு காகித புத்தகத்திற்கு ராயல்டி கிடைக்க புத்தகம் வெளியாகி 18 முதல் 24 மாதம் வரை ஆகிறது (www.writersservices.com) . புத்தகத்தின் விலையில் 7.5% முதல் 15% வரை காகித புத்தகத்திற்கு ராயல்டி தருகிறார்கள். இவர்களுக்கு, விளம்பர, உற்பத்தி, போக்குவரத்து மற்றும் மேலாண்மை செலவுகள் அதிகம். மின்னணு புத்தகத்திலோ 35% முதல் 50% வரை ராயல்டி தருகிறார்கள். மேலும் அதிகம் காத்திருக்கத் தேவையில்லை. மாதம் தோறும், 3 மாதம் ஒரு முறை அல்லது 6 மாதம் ஒரு முறை கொடுத்து விடுகிறார்கள். மின்னணு புத்தக வெளியீட்டாளர்கள் அவர்களது காண்ட்ராக்டை அவர்களது இணைத்தளத்திலேயே வைத்திருப்பது இன்னும் செளகரியம். அத்துடன், நாங்கள் திகில் நாவல்கள் மட்டுமே வெளியிடுகிறோம் என்று பந்தா எல்லாம் கிடையாது. புது புது ரசனைக்கேற்ப எழுத முடிந்தால் எழுதித் தள்ளலாம். ஒவ்வொரு புத்தகத்தின் விலையும் காகித புத்தகத்தை விட குறைவுதான். ஆனால், வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இவர்கள் அதிவேக மார்கெடிங் செய்கிறார்கள்.

நாம் மேலே பார்த்த்து ஒரு எழுத்தாளரின் பார்வையிலிருந்து. எல்லா நாவல் எழுத்தாளர்களும் மின்னணு புத்தகம் வெளியிட துடிப்பதில்லை. ஆனால், தங்கள் படைப்புகளை வெளியிட இவர்களும் கஷ்டப்படத்தான் வேண்டியுள்ளது. காகித புத்தக விற்பனை தொழிலின் அமைப்பை மின்னணு மயமாக்கினால் எப்படியிருக்கும்? இதை (http://www.fastpencil.com/) ஒரு இணைத்தளம் செய்கிறது. எழுத்தாளர்கள், மற்றும் வெளியீடு சம்பந்தமுள்ளவர்கள் இணையத்தில் சங்கமிக்கும் இடம் இது. புதிய எழுத்தாளர் மற்ற எழுத்தாளர்களுடன் அளவளாவலாம். எழுத்து டெம்ப்ளேட் (அதாவது பக்க அமைப்பு) மற்றும் சில மின்னணு எழுத்துக்கு உதவும் கருவிகள், மற்ற எழுத்தாளர்களின் ஆலோசனை எல்லாம் பெறலாம். மிக முக்கியமாக எடிட்டிங், படம் வரைபவர்கள், புத்தக அட்டை டிசைன் செய்பவர்கள் என்று புத்தக சம்பந்தப்பட்ட அனைவரும் இங்கு ஆஜர். எழுதிய புத்தகத்தை கிண்டிலில், ஐஃபோனில், சோனி ரீடரில் வெளியிட என்ன செய்ய வெண்டும் என்று பல யோசனைகள் இங்கு உண்டு. மேலும் இங்கு வெளியீட்டர்களும் உண்டு. இந்த இணைத்தளம் ஒரு படி மேலே சென்று புத்தக வெளியீடு சம்பந்தப்பட்ட பல தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் எழுத்தாளர்களை இணையத்தில் சங்கமிக்க உதவுகிறார்கள். ஏஜண்டுடன் முட்டி மோதத் தேவையில்லை!

மேல் சொன்ன இணைத்தளத்தைப் போலல்லாமல் சற்று மாறுபட்ட இன்னொரு இணைத்தள முயற்சி (http://www.electricliterature.com/). இதன் நிறுவனர்கள், சற்று மாறுபட்டு யோசிக்கிறார்கள். இலக்கியத்தை டிவிட்டர் கெடுக்கிறது என்று புலம்புவானேன்? டிவிட்டரை வைத்துக் கொண்டே இலக்கியத்தையும் முன்னேற்றலாமே! இவர்கள் ஒரு பத்திரிகை நட்த்துகிறார்கள். பத்திரிகையில் வரும் ஒரு பதிவைப்பற்றி மிக வித்தியாசமாய் சிந்திக்கிறார்கள். ஒரு அனிமேட்டரை அழைத்து, சின்ன அனிமேஷன் ஒன்றை கதைக்கருவிற்கேற்ப செய்யச் சொல்கிறார்கள். பிறகு, ஒரு மின்னணு இசையமைப்பாளரை (electronic musician) அழைத்து அந்த அனிமேஷனுக்கு தகுந்தார்போல இசை க்ளிப் ஒன்றை தயாரிக்கிறார்கள். இரண்டையும் இணைத்து, யூடூயூபில் மேலேற்றி விடுகிறார்கள். டிவிட்டரில் இதைப் பற்றி டிவிட் செய்து விடுகிறார்கள். முடிந்த்து மின்னணு மார்கெடிங்! இவர்களின் ஒரு வாக்கிய அனிமேஷன்:

மேலே உள்ள விடியோ உங்களது ஆவலை ரிக் மூடியின் பதிப்பைத் தேடிப் படிக்கத் தூண்டும். நாவலுலகம் இணையத்தில் எப்படியெல்லாம் முன்னேற்றப்படுகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. சும்மா இலவச இணைப்பு சமாச்சாரம் ரொம்ப புளித்து போன பழைய விஷயம்! இவர்கள், தங்களுடைய பதிப்புகளை பெரும்பாலும் மின்னணு வடிவத்திலேயே வெளியிடுகிறார்கள். தேவைப்பட்டால், காகித அச்சு பிரதியும் உண்டு.

வழக்கமான காகித வெளியீட்டார்கள் என்ன செய்கிறார்கள் என்று அறிவதற்கு முன் சில புதிய காகித வெளியீட்டார்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். மிக வித்தியாசமான சிந்தனை இது. அதாவது, அச்சடிக்கும் நிலையம் எங்கோ நாட்டின் ஒரு கோடியில் இருந்தால்தானே பிரயாண செலவு? உங்கள் ஊரிலேயே, மார்கெட்டிலேயே உங்களுக்கு பிடித்த புத்தகத்தை அச்சடித்து உடனே உங்களுக்கு கொடுத்தால் எப்படி இருக்கும்? இதை காப்பி தயாரிக்கும் எந்திரம் போல ஏக்ஸ்ப்ரஸோ ப்ரிண்டர் என்கிறார்கள். ஷாப்பிங் மையத்தில் சில நிமிடம் காத்திருந்து காசு போட்டால், புத்தகத்தை அச்சடித்து, பைண்ட் செய்து உடனே படிக்க ரெடி. இந்த முறை அச்சில் இல்லாத சில பழைய புத்தகங்களை குறைந்த அளவு காப்பிகள் அச்சடிக்க உதவுகிறது. இதன் விலையும் குறைவாக இருப்பதால் ராட்ச்ச பதிப்பாளராக இருக்க வேண்டியதில்லை. சில சின்ன பதிப்பாளர்கள் தேவைக்கேற்ப அச்சடிப்பதை (Print on Demand) தொழிலாக கொண்டுள்ளார்கள்.

புத்தக தொழில் ஓரளவு இசைக் குழு போன்ற தொழில் என்று சொல்லலாம். முதலில் பீட்டில்ஸ் இசைத்தட்டாக வெளியிட்டார்கள். அனைவரும் கடைக்கு சென்று வாங்கினார்கள். பிறகு குறுந்தட்டு (CD) வந்தது. அதையும் கடைக்கு சென்று வாங்கினர். ஆனால், MP3 வந்தவுடன் கடைக்குப் போய் வாங்குவோரைக் காணோம். இசைக்குழுக்கள் நலியத் தொடங்கின. ஆனால், இன்றும் U2 போன்ற இசைக்குழுக்கள் வெற்றிகரமாக படைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நம் திரையிசைச் சி.டிக்களை அதிகம் யாரும் வாங்குவதில்லை. ரிங் டோன் வியாபாரம், சிடி வியாபாரத்தைவிட பெரியதாக உள்ளது. மேல்நாட்டு இசைகுழுக்கள் எப்படி பிழைக்கின்றன? முதலில், நேரடி நிகழ்ச்சிகளுக்கு, ரசிகர்கள் பணம் கொடுத்து ஊக்குவிக்கிறார்கள். ஆனால், இந்நிகழ்ச்சிகளோடு, ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த கலைஞரோடு சில மணி நேரம் செலவழிக்க நிறைய செலவழிக்க தயார். அதனால், நேரடி நிகழ்ச்சிகளோடு, இது போன்ற பக்கத்திலிருந்து ரசித்து, உரையாடி, விவாதிக்கும் முறை மிக லாபகரமாக உள்ள சமாச்சாரம். அதாவது, தங்களை ஒரு தனி ரசனையுள்ள குறுகிய சமூகத்தில் பங்கெடுக்க ரசிகர்கள் 10 மடங்கு செலவழிக்கத் தயார்.  [பண்டைக் காலத்தில் அரசர்கள், பெருவணிகர்கள், தனிகர்கள் தங்களுக்கும், நட்புக்கும், உறவினருக்கும் மட்டும் என்று சிறு அளவில் விசேஷ இசை நிகழ்ச்சி நடத்தி கலைஞருக்குப் பொற்கிழி அளிப்பார்களாமே, அது போன்ற நிகழ்ச்சிகள் திரும்ப வரும் போலிருக்கிறது!]

புத்தக உலகமும் ஏறக்குறைய அதே முறையில் இயங்கினால்தான் பிழைக்க முடியும் என்று பெரிய பதிப்பாளர்கள் உணரத் தொடங்கி விட்டார்கள். தங்களுடைய தொழிலின் அடிப்படை ஒரே ரசனையுள்ள குழுக்கள் என்று மெதுவாக புரியத் தொடங்கிவிட்ட்து. இந்த குழுக்களை இணையம் மூலம் இணைப்பது ஒன்றுதான் அச்சுத் தொழிலை காப்பாற்ற முடியும். மிகவும் தரமுள்ள குழுவில் சேர படிப்பவர்கள் புத்தகத்தை விட அதிகம் செலவழிக்கத் தயார் என்பது இவர்களது கணிப்பு. இவர்களது பெரிய பயம், புத்தகம் மற்றும் சம்பந்தமான ஊடகங்களை விற்கும் அமேஸான் போன்ற நிறுவன்ங்கள் புத்தக வெளியீட்டு நிறுவனத்தை வாங்கி இவர்களை அழித்துவிடும் என்பது.

புத்தக வெளியீட்டாளர்கள் தங்ளுடைய அமைப்பில் உள்ள ப்ரச்னைகளை ஆராயத் தொடங்கிவிட்டார்கள். மேலும், ஏஜண்ட் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவது போன்ற விஷயங்கள் தளரத் தொடங்கியுள்ளது. நல்ல திறமைகள் அமைப்பு கோளாறுகளால் நிராகரிக்கப்படக் கூடாது என்ற விழிப்புணர்ச்சி வந்துள்ளது. அடுத்தபடியாக, பல வெளியீட்டாளர்களும் மின்னணு புத்தகங்களை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை என்று உணரத் தொடங்கியுள்ளார்கள். இதனால், ஒரு புத்தகம் காகித வெளியீட்டோடு, மின்னணு வடிவத்திலும் வெளிவருகிறது. இசைக்குழுக்கள் போல, வன் அட்டை, மென் அட்டை, ஒலி, மின்னணு என்று புத்தகத்தை எல்லா வடிவங்களிலும் வெளியிடுகிறார்கள். எல்லா வடிவங்களிலும் வாங்குவோருக்கு விலை சலுகைகளும் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு வடிவத்திற்கும் வெவ்வேறு விலை. இதில் வணிக ப்ரச்னைகள் இன்னும் கொஞ்சம் உள்ளது. உதாரணத்திற்கு, ஒரு புத்தகத்தின் ஒலி மற்றும் அச்சு பிரதிகளை ஒரே ஷாப்பிங் கூடையில் சலுகைகளுடன் வாங்குவது இன்றும் கடினம்!

சில பதிப்பாளர்கள் புதிய முறைகளைச் சோதித்தும் வருகிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு பிரபல பதிப்பாளர், ஒரு தொலக்காட்சி தொடரை, தொலைக்காட்சியில் வருவதற்கு முன்னமே தன்னுடைய இணைத்தளத்தில் இலவசமாக சொஞ்சம் சொஞ்சமாக வெளியிட்த் தொடங்கியது. பயங்கர வரவேற்பை அடுத்து, தொலைக்காட்சியில் தொடர் வெளி வந்த்தும், எழுத்துக்கும், தொலைக்காட்சிக்கும் எப்படி ஒத்து வந்தது, எங்கு சொதப்பல் என்று பதிப்பாளர் இணத்தளத்தில் சூடான விவாதம். திடீரென்று அப்பொழுதுதான் புரிந்த்து, பதிப்பாளருக்கு – இந்த தொடரை ரசிக்கும் குழுவுக்கு நாம் ஒரு பாலம் என்று. தொலைக்காட்சி தொடர் வெளிவந்து, முழு கதையும் அச்சடித்து விற்றதில் 2 லட்சம் புத்தகம் விற்பனையாகியது. தனியாக வெறும் புத்தகம் மட்டும் போட்டால், 2 லட்சம் பிரதிகள் விற்றிருக்க முடியாது.

இன்னொரு பதிப்பு நிறுவனம் ஒரு வினோத சோதனை செய்து வருகிறது. எடுக்கப்படாத தொலைக்காட்சி தொடரை இணைத்தளத்தில் பகுதி பகுதியாக வெளியிட்டு வருகிறது. சுவாரசியம் என்னவென்றால், பாத்திரங்களுக்குப் பல இணைய மேய்பவர்கள் விசிறிகளாகி விட்டார்களாம்! முழு தொடரும் வெளி வந்த பின் அதை ஒரு மின்னணு புத்தமாக வெளியிட திட்டமாம்.
இப்படி பதிப்பாளர்கள் பலவித சோதனை முயற்சியில் இறங்கி வருவதால், புத்தக உலகம் இன்னும் 10 வருடங்களில் அழிந்துவிடும் என்று பொருளில்லை. மின்னணு புத்தகங்கள் அச்சு புத்தகங்களின் விற்பனையில் 5%  தான். ஆனால், இவை வெகு வேகமாக வளர்ந்து வருகின்றன.

மின்னணு புத்தகங்களுக்கு குறைந்தபட்சம் படிக்கக்கூடிய திரையுடைய செல்பேசி தேவை. கணினி, செல்பேசி, புத்தகம் படிக்கும் கருவி என்று இவ்வுலகில் ஏறக்குறைய 150 கோடி கருவிகள் உள்ளன. 650 கோடி மனிதர்கள் வாழும் இப்பூமியில், இது பாதியளவு கூட இல்லை. மேலும் பல வளரும் நாடுகளில் மின்சாரமே பெரிய விஷயம். இதை எல்லாம் வைத்துப் பார்த்தால், புத்தகங்கள் நம்முடன் இன்னும் ஒரு நூறு ஆண்டுகளாவது இருக்கும் என்று தைரியமாக சொல்லாம். இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு மிகத் தேவை புத்தகங்கள். அது எந்த வகையானாலும் சரி. மின்னணு பாட புத்தகங்கள் எளிதாக குழந்தைகளை சென்றடைய வாய்ப்புள்ளது. இதற்காக பிரயாண செலவு இல்லை. அத்தோடு, டீசல் போன்ற சுற்றுப்புற பகையான விஷயங்களும் தேவையான பிரயாண விஷயங்களுக்கு மட்டும் உபயோகிக்கலாம். சூரிய வெளிச்சத்தில் மின்னூட்டல் செய்து உபயோகிக்க கூடிய மின்னணு புத்தகங்கள் இந்திய படிப்பறிவு முன்னேற்றத்திற்கு மிகவும் உதவும்.

அடுத்தபடி, செய்தித்தாள் உலகம் எப்படி இணையுத்துடன் சமரசம் செய்து வருகிறது என்று பார்ப்போம்.

சொல்வனம் – நவம்பர் 2010

அனிமேஷன் திரைப்பயணம்: 05 – கல்வி வாய்ப்புகள் மற்றும் எதிர்காலம்

bsc-animation-multimedia

சோம்பேறித்தனமாக தொலைக்காட்சி சானல்களை ஒரு ஞாயிற்றுக்கிழமை மாற்றிக் கொண்டே இருக்கையில் நடிகர் ‘அஜித்’ பற்றி ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

”நீங்க என்ன படிக்கிறீங்க?”

“விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கிறேன்”

காமிரா சற்று பான் செய்ய, இன்னொருவரை, “நீங்க?”

“நான் மல்டிமீடியா படிக்கிறேன்”

அட, நல்ல விஷயமெல்லாம் காட்டுகிறார்களே என்று எழுந்து உட்கார்ந்தவனுக்கு அடுத்தபடி வந்த காட்சிகள் ஒரே ஏமாற்றம்தான். எல்லோரும் ‘தலை’ போகிற விஷயம் பேச உடனே சுவாரசியம் இழந்தேன்!

பல தரப்பட்ட இளைஞர்கள் கணக்கிடல் போன்ற பழைய துறைகளைத் துறந்து, புதிய மல்டிமீடியா கல்வி படிக்கிறார்கள். விளம்பர ஏஜன்சிகள், மற்றும் இணையதளம் அமைத்தல் போன்ற வேலைகளுக்கு வெறும் வசீகரமான வார்த்தைகள் மட்டும் போதாது. அழகான காட்சியமைப்புகள் தேவை. அதுவும் பார்த்தவுடன் மயக்கும் அனிமேஷன் காட்சிகள் தேவை. சினிமாவைவிட விளம்பரம் மற்றும் இணையதள அமைப்பில் வேலை வாய்ப்புகள் அதிகம். இப்பகுதியில், இத்துறையில் உள்ள கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றி ஆராய்வோம். மேலும், இந்திய அனிமேஷன் திரைப்படங்களையும் சற்று அலசுவோம்.

image37முதலில் இந்திய அனிமேஷன் சினிமா சந்தையைப் பற்றி ஒரு அறிமுகம். இது 2009 ல் 600 மில்லியன் டாலர் மதிப்புள்ளது. 2010 ல் இது 1 பில்லியன் டாலர் அளவுக்கு வளரும் என்று நம்பப்படுகிறது. இந்தியாவில் இன்னும் பிக்ஸார் போன்ற அமைப்புகள் வளரவில்லை. ஆனால், சில சிறிய தொடக்கங்கள் நம்பிக்கையூட்டுகின்றன. டூன்ஸ் அனிமேஷன், க்ரெஸ்ட் கம்யூனிகேஷன், UTV டூன்ஸ், ஜீ டிவி, பெண்டா மீடியா போன்ற அமைப்புகள் வளரத் தொடங்கியுள்ளன. இவை பல விதமான அனிமேஷன் திரைப்படங்களை எடுக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருக்கின்றன. இதில் சில விற்பனை அறிவிப்புகளாக இருந்தாலும், சில முழுப்படங்களாக மாற வாய்ப்புள்ளது. இந்திய அனிமேஷன் நிறுவனங்கள், சினிமாவைக் காட்டிலும் அதிக அளவில் வீடியோ விளையாட்டுகள் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனங்களுடன், மற்றும் மேல்நாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்காகப் பணியாற்றி வருகின்றன. முக்கியமாக, அமெரிக்க வீடியோ விளையாட்டு டிஸைனர்களுக்குத் தேவையான மனித சக்தி நிறைந்த சில பளுவான, ஆனால் அதிக படைப்பாற்றல் தேவையில்லாத வேலைகளையே செய்யப் பழகி வருகிறார்கள்.

இந்திய அனிமேஷன் துறையில் உள்ள சிக்கல், சாமன்ய கணினி மென்பொருள் துறை போல செயல்படுவதுதான். இந்தியக் கணினி மென்பொருள் நிறுவனங்கள் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களின் பின் அலுவலக வேலைகளையே அதிகம் செய்து பணம் ஈட்டுகிறார்கள், இதனால், இந்திய வர்த்தகக் குறி (brand) இல்லாவிடினும் அதிகம் யாரும் கவலைப்படுவதில்லை. அனிமேஷனோ மிகவும் படைப்பாற்றல் மற்றும் கற்பனைவளம் தேவையான துறை. இதில் வர்த்தகக் குறிதான் எல்லாம். ‘Toy Story’ எவ்வளவு பிரபலமோ அவ்வளவு பிக்ஸாரும் பிரபலம். ஒரு ஏவிஎம் அல்லது ஜெமினி போல இந்திய அனிமேஷன் ஸ்டூடியோக்கள் பெயர் எடுத்தால்தான் உலகச் சந்தையில் நிலை நாட்ட முடியும். இதற்கு வெறும் அமெரிக்க நிறுவனங்களுக்கு பின்னலுவல் வேலை மட்டும் செய்தால் உயர முடியாது. இதைப் பற்றி விரிவாக பிறகு பேசுவோம்.

சில இந்திய அனிமேஷன் படைப்புகளை விமர்சிப்போம். மும்பை, சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, ஹைத்ராபாத் போன்ற நகரங்களில் அனிமேஷன் நிறுவங்கள் வரத் தொடங்கி விட்டன. இந்நகரங்களில் உள்ள நிறுவனங்கள் வெளி நாட்டு தொலைக்காட்சிகளுக்காக அனிமேஷன் தொடர்களை தயாரிக்கின்றன. பெண்டாமீடியாவின் தயாரிப்பு சிந்த்பாத்.

பெண்டாவின் இன்னொரு தயாரிப்பான ‘பாண்டவாஸ்’ மிகவும் வித்தியாசமான ஒன்று:

இதில் வரும் போர்க்காட்சிகளில் குதிரைகளின் அசைவு மற்றும் போர் வீரர்களின் அசைவு இயந்திர கதியில் உள்ளதைப் பார்க்கலாம்.

க்ரெஸ்ட் கம்யூனிகேஷன்ஸின் “Jakers! The Adventures of Piggley Winks” லிருந்து ஒரு காட்சி:

மேற்கத்திய அனிமேஷன் திரைப்படங்களை இந்திய மொழிகளில் டப்பிங் செய்கிறார்கள் அல்லது இந்தியப் படைப்புகளை ஆங்கிலத்தில் வெளியிடுகிறார்கள். இன்னும் நம் இந்திய மொழிகளில் படம் எடுப்பது அரிதாகவே உள்ளது.

இந்தியாவில் சினிமா தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்த ஒன்று.  ’4K Red’ டிஜிட்டல் காமிராவில் இந்தியாவில் படமெடுக்கிறார்கள். அதுவும் இந்தத் தொழில்நுட்பம் வந்து 4 மாதங்களில் இந்தியர்கள் இதை கரைத்துக் குடித்து விட்டார்கள். பலருக்கு பன்மொழித் திறமைகள் வியக்கத் தகுந்த அளவுக்கு உள்ளது. உதாரணம், எஸ்பிபி பல மொழிகளிலும் பேச மற்றும் அழகாகப் பாடும் திறனுள்ளவர். அனிமேஷன் கதைகள் சரியாக அமைக்கப்பட்டால், பல மொழிகள் பேச நம்மிடம் திறமைகள் உள்ளன. பல தொழில்நுட்பத்திறமைகள் கொட்டிக் கிடக்கின்றன. பல மொழி மனித சினிமாக்கள் உருவாவதைப் போல பல மொழி அனிமேஷன் திரைப்படங்கள் எல்லா இந்தியர்களையும் கவரும் வண்ணம் எடுக்க முடியும் என்பது என் கருத்து. பல மொழிகளில் விளம்பரங்கள் பெரிய நிறுவனங்கள் பல ஆண்டுகளாக தயாரிக்கின்றன. இந்திய மொழிகளில் உதட்டசைவைச் சரியாக செய்வது கடினமானதானாலும் அனிமேஷன் திரைப்படங்களில் வளர்ந்தவர்கள், திரைப்படங்கள் போல அல்லாமல் மிகவும் எளிதான மொழிப்பிரயோகம் செய்தால் இது முடியும். இதனால் உற்பத்திக்குப் பின் செலவுகள் குறைக்க வாய்ப்புண்டு.

ஆனால், என்னவோ தெரியவில்லை, இந்திய சினிமாக்களில் கதைப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கதை சொல்லியே எல்லாவற்றையும் விளக்கும் நம் கலாச்சாரத்தில், இது வினோதமாகத்தான் படுகிறது. புராணங்களை வைத்துப் பல அனிமேஷன் திரைப்படங்கள் எடுக்கலாம் என்று ஒரு வாதம் உள்ளது. ஓரளவு இதில் உண்மை இருந்தாலும், பிரமிப்பாக எடுக்கப்படாவிட்டால், பார்வையாளர்களைக் கவருவது கடினம். புராணங்களில் உள்ள கதையமைப்பை,  கற்பனையுடன் அழகான பாத்திர அமைப்புடன் சுவாரசியமாக விவரிக்க வேண்டும். நம் சினிமாக்களில் தெளிவான திட்டமிடல் கிடையாது. அனிமேஷன் சினிமாவில் இது உதவாது. இதைப்பற்றி முந்தைய பகுதிகளில் பார்த்தோம். குழந்தைகளை மையமாகக் கொண்ட கதைகள் அனிமேஷனுக்கு உகந்தவை. எல்லாவற்றிற்கும் தேவை ஒரு ஜனரஞ்சக முதல் வெற்றி.

சரி, எப்படிப்பட்ட வேலைகள் இத்துறையில் உள்ளன? முதலில் இத்துறையில் ஆர்வம் கொள்பவர்கள் படம் வரைவதில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இன்று இந்தியாவில் குழந்தைகள் கூட ஃபோட்டோஷாப் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இது முதல் படி. ஆனால், எப்படி இயக்கமையத்தை, எப்படி காமிரா கோணங்களை, எப்படி பல சம தளங்களைக் கையாள்வது என்று புரிய கொஞ்சம் வித்தியாசமான கோளவியல் சிந்தனை தேவை. நம் கல்வி முறைகள் இப்படிப்பட்ட சிந்தனையை வளர்ப்பதில்லை. பலருக்கு இது போன்ற திறமைகள் இருப்பதை வெளிக் கொண்டுவர நம் சமூகத்தில் அமைப்புகள் இல்லை. இதை ‘Spatial thinking’ என்கிறார்கள். மேல் நாடுகளில் ஒரு 10 வயது குழந்தையின் ‘Spatial thinking’ ஐ சோதிக்க வழக்கமான சோதனை உண்டு. பல மடிப்புகளாக ஒரு காகிதத்தை மடிக்கச் சொல்லிவிட்டு, அதில் ஒரு ஊசி கொண்டு குத்தினால், பிரித்த காகிதத்தில் எத்தனை ஓட்டை என்று 10 வயது மாணவன் சரியாக சொல்ல வேண்டும். இது போல பல சோதனைகள் மூலம் மாணவர்களின் ‘Spatial thinking’ எப்படி வளர்கிறது என்று கணிக்கிறார்கள்.

அடிப்படை உயர்நிலைப்பள்ளி கணிதத்திறன் போதுமானது. க்ராஃபிக்ஸ் மென்பொருள் தொகுப்புகள் உபயோகிக்க கணினி நிரல் எழுதும் திறன் தேவையில்லை. ஆனால், கணினியை வைத்து காட்சிரீதியாக சிந்திக்கும் திறன் தேவை. திரைக்கல்லூரிகளில் இன்று திரைப்படம் மற்றும் அனிமேஷன் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதற்குத் தனியாக டிப்ளமா மற்றும் தனியான விஷுவல் கம்யூனிகேஷன் டிகிரி படிப்பு எல்லாம் வந்துவிட்டது. மனித சினிமாக்கள் 100 வருடங்களுக்கு மேலாக எடுக்கப்படுகின்றன. அவை மிகவும் அழகாக பல பிரிவுகளாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அதன் நல்ல விஷயங்கள் பலவும் அனிமேஷனுக்கும் பொருந்தும்.

அனிமேட்டர்கள் என்ற பதவி காட்சித்தொகுப்புகளை இணைத்து சோதித்து, ஒளியமைப்பு, மற்றும் ஸ்டோரி போர்டின்படி காட்சியமைக்கும் வேலை. முப்பரிமாண ஆர்டிஸ்ட் சற்று உயர் பதவி. முப்பரிமாணக் காட்சிகளைக் கணினியில் வரைபவர். இதற்கு படம் வரையவும், அனிமேஷன் பற்றியும் நன்றாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முப்பரிமாண அனிமேட்டர்கள் இரு பரிமாண அனிமேட்டர்களை விட சற்று உயர்நிலையாகக் கருதப்படுபவர்கள். ஆனால், இரு பரிமாண அனிமேட்டர்கள் விளம்பரப்படங்களுக்கு எப்பொழுதும் தேவையாக இருப்பவர்கள். அனிமேஷன் டிஸைனர்கள் அனிமேதன் ஆர்டிஸ்டைவிட இன்னும் உயர்பதவி. மாதத்திற்கு 2.5 முதல் 3 லட்சம் ரூபாய் வரை சம்பளம். ஆனால், நாளைக்கு 14 மணி நேரம் உழைக்க தயாராக இருக்க வேண்டும். இதைத் தவிர தகுந்த திறமை இருந்தால் காண்ட்ராக்ட் முறையில் நிறைய சம்பாதிக்க வழிகள் பெரிய நகரங்களில் உண்டு.

இளைஞர்கள் இதை எல்லாம் படித்துவிட்டு, “அடடா, அனிமேஷன் துறை ரொம்ப பசையான துறை” என்று உடனே எல்லாவற்றையும் விட்டுவிட்டுத் தாவ வேண்டாம். வருடத்தில் பிக்ஸார் இரு தரமான படங்களை வெளியிடுகிறார்கள். சரி, இத்தனை இந்தியர்கள் இருக்கிறோமே, வருடத்திற்கு ஒரு 150 படங்கள் தயாரிக்கலாமே என்று மனக்கணக்கு போட வேண்டாம். நல்ல அனிமேஷன் திரைப்படம் எடுப்பது அசாத்திய உழைப்பு, ஒருங்கிணைப்பு, கூட்டு முயற்சி.

ஒரு தனி அனிமேட்டர் ஒருவர் அழகாக இதைப்பற்றி விவரித்துள்ளார். பிக்ஸாரின் திரைப்படம் 1.5 மணி நேரம் (90 நிமிடம்) ஓடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். பிக்ஸார் அதை 6 மாதத்தில் தயாரிக்கிறது. ஒரு 10 நிமிட அனிமேஷன் திரைப்படம் எடுக்க எவ்வளவு நாள் தேவை? 20 நாட்கள். அதுதான் இல்லை. இரண்டு வருடங்கள் உழைத்து இந்த 6 நிமிட திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். ’Pigeon Impossible’ என்ற 6 நிமிட முப்பரிமாண திரைப்படத்தை இங்கே காணலாம்:

படிப்படியாக இவர் செய்த ஒவ்வொரு அனிமேஷன் போராட்டங்கள் பற்றி விடியோ மூலம் விளக்குகிறார், லூகாஸ் மார்டெல்:

அனிமேஷன் துறையில் முன்னேற துடிக்கும் இளைஞர்கள் இவரது இணையதளத்தைப் படிக்க வேண்டும். அழகாக அனிமேஷன் முறைகளை விளக்கியுள்ளார் லூகாஸ்:

http://blog.pigeonimpossible.com/

உழைக்கத் துணிந்த, கற்பனை வளமுள்ள இளைஞர்கள் இத்துறையில் நுழைந்தால் வெற்றிபெற வாய்ப்புள்ளது. யார் கண்டார்கள் – மரத்தைச் சுற்றி டூயட் (இந்தியத் திரைப்படங்களில் மட்டுமே உள்ள காட்சியமைப்பு) போன்ற புதுமைகளை அனிமேஷன் துறையிலும் எதிர்காலத்தில் நாம் காண்போம் என்று நம்புவோம்.

இளைஞர்களுக்கு ஒரு சின்ன யோசனை. வெறும் 3DS Max தெரியும், Maya தெரியும். ஆகவே தன்னை அனிமேஷன் வித்தகர் என்று நினைக்க வேண்டாம். பொதுவாக, நம் இளைஞர்கள், மேல் வாரியாக மேலைநாட்டுத் (அதனால் தான் மேல்வாரி என்ற சொல் வந்ததோ?) தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதிலேயே காலத்தை செலவழிக்கிறார்கள். மென்பொருள் உபயோகத்திறன் மிகவும் முக்கியம் – ஆனால் அதுவே குறிக்கோளாகக் கூடாது. மென்பொருள் அம்சங்களுக்கு (feature/function) பின்னால் உள்ள நுட்பத்தையும் முறையாகக் கற்க வேண்டும். இதற்குக் கோள கணிதம், பெளதிகம் போன்ற அடிப்படை அறிவியல் அறிமுகங்கள் மிக அவசியம். வணிக ரீதியான அனிமேஷன் மென்பொருள்களில் கோள மற்றும் பெளதிக, ஒளி இஞ்சின்கள் பல ஆண்டுகள் ஆராய்ச்சியால் வளர்ந்தவை. திரைமறைவில் உள்ள விஷயங்களை முழுவதும் புரிந்து கொண்டால்தான் புதிதாக மேலை நாடுகளில் செய்யாததை நாம் செய்ய முடியும்.

இந்த அனிமேஷன் தொடரில் 5 பாகங்களில் நாம் பல விஷயங்களை அலசினோம். ஆனாலும் இத்துறையின் விளிம்பையே தொட்டுள்ளோம். இக்கட்டுரைகளால் சில இளைஞர்கள் இத்துறை மீது ஆர்வம் கொண்டு ஒரு இந்திய ஜான் லாஸட்டராக எதிர்காலத்தில் உருவானால், இந்தக் கட்டுரைத் தொடரை எழுதியதற்கு ஒரு மனநிறைவு உறுதி.

சொல்வனம் – செப்டம்பர் 2010

அனிமேஷன் திரைப்பயணம்: 04 – தொழில்நுட்ப வரலாறு

இந்திய நதிகளைப் பற்றி எழுதும்போது கங்கையைப் பற்றி எழுதாமல் இருக்க முடியாது. அதேபோல, கங்கையைப் பற்றி எழுதும் போது, கங்கோத்ரி பற்றி எழுதாமல் முழுமையடையாது. ஒரு விதத்தில் கங்கோத்ரி எல்லா இந்திய நதிகளின் ஆரம்பம் என்று சொல்ல்லாம். குறைந்தபட்சம் கங்கோத்ரியிலிருந்து இந்திய நதிப் பயணத்தை ஆரம்பிக்கலாம். க்ராபிக்ஸ் உலகில் அப்படிப்பட்ட கங்கோத்ரி, இவான் சதர்லாண்ட் என்ற விஞ்ஞானி. இவரிடம் தொடங்கி எல்லா அனிமேஷன் விஷயங்களும் வளர்ந்தன என்றால் மிகையாது. இவர் Sketchpad என்ற புதுமை நிரல் ஒன்றை 1960-களில் உருவாக்கினார். முதன் முறையாக கோடுகள், வளைவுகள், கணினி திரையில் வரைய வழி வகுத்தார். இவற்றைக் கொண்டு வரைந்த படங்களை நகல் எடுக்க முடிந்த்து, ஒட்ட முடிந்தது, சுழற்ற முடிந்தது. முதன் முறையாக இன்னொரு விஷயம் – ஜூம் செய்வது எப்படி என்று அழகாக இந்த நிரல் மூலம் விளக்கினார் சதர்லாண்ட். இவரது மாணவர் வானெவர் புஷ் எழுதிய ‘As we may think’ என்ற கட்டுரை மிகவும் சரித்திர புகழ் பெற்றது.

இவான் சதர்லாண்ட் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பொழுது பல மாணவர்களின் டாக்டர் பட்ட ஆராய்ச்சிக்கு உதவி செய்து ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கினார் என்றால் மிகையாகாது. இவருடைய மாணவர் டேனி கோஹென் உலகின் முதல் விமான சிமுலேட்டர் மென்பொருளை உருவாக்கினார். சதர்லாண்ட் அவருடைய மாணவர் கோஹெனுடன் முப்பரிமாண அனிமேஷன் பற்றிய அடிப்படைக் கொள்கைகளை புத்தகம் மூலம் விளக்கினார். பல்கலைக்கழகங்கள் கணினி க்ராபிக்ஸ் பற்றிய பாடங்கள் நடத்தத் தொடங்கின. சதர்லாண்ட் யூட்டா பல்கலைகழகத்திற்கு 1968-இல் மாறினார். ஒரு க்ராபிக்ஸ் புரட்சியே உருவாக்க இது உதவியது என்று அப்பொழுது அவருக்கு தெரியவில்லை. மற்றொரு மாணவர் ஹென்ரி கெளராட் முதல் நிழலமைப்பு நிரலை உருவாக்கினார். இவருடைய மற்றுமொரு புகழ்பெற்ற மாணவர் எட் காட்மல் – இவர், இன்று டிஸ்னி பிக்ஸாரின் தலைவர்.

இதே சமயத்தில் சதர்லாண்ட் புதிய நிறுவனம் ஒன்றை டேவிட் இவான்ஸ் என்ற சக விஞ்ஞானியுடன் தொடங்கினார். அதில் அவருடைய முதல் ஊழியர்கள் இன்று இந்த தொழிலின் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்கள். ஜிம் க்ளார்க் அதில் ஒருவர் – இவர் சிலிகான் க்ராபிக்ஸ் என்ற மிக பெரிய க்ராபிக்ஸ் மென்பொருள் மற்றும் வன்பொருள் கம்பெனியை உருவாக்கியவர். மற்றவர் – ஜான் வார்னாக், இவர் அடோபி என்ற மிக பெரிய மீடியா நிறுவனத்தை தொடங்கினார். அனிமேஷன் துறையில் உள்ள இன்னொரு மாபெரும் நிறுவனம், ட்ரீம்வர்க்ஸ் – இந்நிறுவனம் ஒன்றுதான் சதர்லாண்டுடன் நேரடி சம்மந்தம் இல்லாதது. சதர்லாண்டின் புரட்சிகரமான கணினி முன்னேற்றம் பல இளம் விஞ்ஞானிகளை க்ராபிக்ஸ் துறையில் ஆர்வம் கொள்ளச் செய்த்து. கடந்த 40 வருடங்களில் இத்துறையின் முன்னேற்றம் அசாத்தியமானது. விஞ்ஞானிகள் சிக்க்ராஃப் (SIGGRAPH) என்ற அமைப்பில் ஒவ்வொரு சந்திப்பிலும் தங்களது புதிய உத்திகளை விவரித்து இத்துறையை முன்னேற்றினார்கள். பல பல்கலைக்கழக டாக்டர் பட்ட ஆராய்ச்சிகள் இத்துறையின் இன்றைய நிலைக்கு காரணம். இவான் சதர்லாண்ட் இத்துறையின் தந்தை என்று சொன்னால் மிகையாகாது.

ஜிம் க்ளார்க் பல க்ராபிக்ஸ் சம்மந்தப்பட்ட கேத்திர மாற்றங்கள் (geometry pipelines) பற்றி ஆராய்ச்சி செய்து வந்தார். 1979 ல் இவருடைய ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழக ஆய்வு குழு கேத்திர என்ஜின் (geometry engine) ஒன்றை மென்பொருளில் உருவாக்கியது. இன்றுவரை அனைத்து விதமான அனிமேஷனுக்கும் ஆதாரம் இந்த அடிப்படை கொள்கையாக விளங்குகிறது. இவர் சில சக விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களுடன் 1982-இல் சிலிகான் க்ராபிக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். 1980/90-களில் ஹாலிவுட்டின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் எல்லாம் சிலிகான் க்ராபிக்ஸ் மென் மற்றும் வன்பொருளாலேயே செய்யப்பட்டது என்றால் மிகையாகாது. ’Jurassic Park’, ‘Congo’, போன்ற திரைப்படங்கள் SGI புண்ணியத்தில் நம்மையெல்லாம் இருக்கை நுனிக்கு வரச் செய்தது!

இதே காலகட்டத்தில் அருகே கனடாவில் உள்ள டெரொண்டோ நகரில் உள்ள ஷெரிடன் கல்லூரியில் சிலர் க்ராபிஸ் மீது ஈடுபாடு கொண்டு பல புதிய மென்பொருள் உத்திகளை கண்டுபிடித்து வந்தனர். இவர்கள் இந்த கல்லூரியிலிருந்து வெளியேறி, ஏலியஸ் (Alias Wavefront) என்ற நிறுவனத்தை தொடங்கி ’Maya’ என்ற உலகின் முதல் முப்பரிமாண மென்பொருள் தொகுப்பை வெளியிட்டார்கள். பல அனிமேஷன் ஸ்டூடியோக்கள் இதை வைத்து பல திரைப்படங்கள், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் எல்லாம் உருவாக்கத் தொடங்கினார்கள். ‘Jurassic Park’ ல் டைனாஸர் மிரட்டுவதெல்லாம் ’மாயா’ புண்ணியத்தில். அதே போல, ‘Terminator-இல் ஆர்னால்டு, தீயிலிருந்து எழுந்து வந்து அனைத்தையும் துவம்சம் பண்ணுவதும் ‘மாயா’ உபயத்தால். 1995 ஆம் ஆண்டு சிலிகான் க்ராபிக்ஸ் ஏலியஸ் நிறுவனத்தை வாங்கியது. இன்று சிலிகான் க்ராபிக்ஸ் நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. ஏலியஸ் ஆட்டோடெஸ்க் என்ற நிறுவனத்திற்கு விற்கப்பட்டு மாயா தொடர்கிறது. ஆட்டோடெஸ்க் ‘மாயா’வைப்போல 3DS Max என்ற முப்பரிமாண அனிமேஷன் மென்பொருள் தொகுப்பையும் விற்கிறது.

ஜான் வார்னாக் யூட்டா பல்கலைகழகத்தில் ஸதர்லாண்டிடம் க்ராபிக்ஸ் படித்தார் என்று பார்த்தோம். இவரின் டாக்டரேட் ஆராய்ச்சி, எப்படி மறை தளத்தை (hidden surface elimination) கையாள்வது என்பதைப் பற்றியது. இதை க்ராபிக்ஸ் உலகின் வார்னாக் அல்கரிதம் என்று அழைக்கிறார்கள். இவர் 1982 ல் அடோபி என்ற நிறுவனத்தை தொடங்கினார். இன்று உலகின் மிகப் பெரிய மீடியா மென்பொருள் நிறுவன்ங்களில் அடோபியும் ஒன்று. அடோபியின் முக்கிய மீடியா மென்பொருட்களில் ட்ரீம்வீவர், ஃப்ளாஷ் அனிமேஷன் துறையில் இணையதளங்களில் அதிகம் உபயோகப்படுத்தப்படுகின்றன.

ஜானைப் போல எட் காட்மல் லும் ஸதர்லாண்டின் மாணவர். எட், நியூ யார்க் இன்ஸ்டிட்யூட் என்ற அமைப்பில் க்ராபிக்ஸ் ஆராய்ச்சி செய்து வந்தார். க்ராபிக்ஸில் ஆர்வமுள்ள ஜார்ஜ் லூகாஸ் என்பவர் (புகழ் பெற்ற Star Wars திரைப்பட தொடரை உருவாக்கியவர்) க்ராபிக்ஸில் ஆர்வம் கொண்டவர். லூகாஸுடன் வேலை செய்த எட், லூகாஸின் ஸ்டூடியோவில் சேர்ந்தார். Star Trek II போன்ற வெற்றி திரைப்படங்களில் பல அனிமேஷன் சாதனைகளை படைத்தவர் எட். 1986 ஆம் ஆண்டு, ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியேறிய ஸ்டீவ் ஜாப்ஸ் (இவர் மீண்டும் 1997 ல் ஆப்பிளுக்கே திரும்பி விட்டார்) ஜார்ஜ் லூகாஸ், எட் காட்மல் மற்றும் ஆல்வி ரே ஸ்மித் சேர்ந்து பிக்ஸார் என்ற அனிமேஷன் நிறுவனத்தை தொடங்கினார்கள். ஆரம்பத்தில் வன்பொருள் மற்றும் விளம்பர படங்கள் தயாரித்து வந்தார்கள். டிஸ்னி ஸ்டூடியோவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு முதல் முறையாக முப்பரிமாண ‘Toy Story’ என்ற திரைப்படத்தை 1995-இல் வெளியிட்டார்கள். ஜான் லாஸட்டர் இயக்கிய இப்படத்தைப் பற்றி மூன்றாம் பகுதியில் விவரமாகப் பார்த்தோம். பல வெற்றித் திரைப்படங்களை உருவாக்கிய பிக்ஸாரை டிஸ்னி 2006-இல் வாங்கியது. சென்ற ஆண்டு பல ஆஸ்கர்களை வென்ற ‘Up’ திரைப்படம் பிக்ஸார் படைப்பு. இவ்வாண்டு வெளிவந்து பிரமாதமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘Toy Story 3’ பிக்ஸார் படைப்பு. அனிமேஷன் திரைப்பட நிறுவனங்களில் டிஸ்னி பிக்ஸார் மிகவும் முக்கியமான வெற்றி நிறுவனம். அத்துடன் பல புதிய அனிமேஷன் நுணுக்கங்களை க்ராபிக்ஸ் உலகிற்கு அளித்த பங்கும் பிக்ஸாருக்கு உண்டு.

முன்பு சொன்னது போல ட்ரீம்வர்க்ஸ் SKG ஸதர்லாண்டுடன் நேரடி சம்பந்தமில்லாத ஸ்டூடியோ. இதில் S என்பது Speilberg ஐயும், K என்பது Katzenberg ஐயும், G என்பது Geffen – ஆகிய மூன்று நிறுவனர்களை குறிக்கும். 2005-இல் வியாகாம் என்ற மிக பெரிய சினிமா கம்பெனி ட்ரீம்வர்க்ஸை வாங்கியது. இந்தியாவைச் சேர்ந்த அனில் அம்பானி இந்த ஸ்டூடியோவின் 50% சொந்தக்காரர். Katzenberg டிஸ்னியிலிருந்து வெளியேறி, ஸ்பீல்பெர்குடன் இந்த புதிய அனிமேஷன் ஸ்டூடியோவை ஆரம்பித்தார். முதல் தயாரிப்பு Antz – இதைப்பற்றி முதல் பாகத்தில் பார்த்தோம். பூச்சிகளைக் களமாக வைத்து எடுத்த படம். இவர்களுடைய மிக பெரிய படைப்பு Shrek – சமீபத்தில் நாலாவது பாகம் வெளிவந்து ஒளி முப்பரிமாண அனிமேஷன் படமான இது, அவ்வளவு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

ட்ரீம்வர்க்ஸுக்கும் பிக்ஸாருக்கும் எப்பொழுதும் கடும் போட்டி. இதனால் நமக்கு நல்ல அனிமேஷன் திரைப்படங்கள் கிடைப்பதோடு, மிக வேகமாக இத்துறையில் தொழில்நுட்பம் வளரவும் காரணமாக இருக்கிறது. பிக்ஸாரின் ரெண்டர்மேன் மென்பொருளும், ட்ரீம்வர்க்ஸின் மனித சித்தரிப்பு அனிமேஷன் சாதனைகளும் குறிப்பிடத்தக்கவை. பொதுவாக பெரிய ஸ்டூடியோக்கள் வணிக ரீதியான மென்பொருள் தொகுப்புகளை ஆரம்பத்தில் உபயோகித்துப் படமெடுத்தாலும், மெதுவாக தங்களது ஸ்டூடியோவிலேயே உழைத்து உருவாக்கிய மென்பொருள் சாதனங்களையே பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. இது ஓரளவு புதிய அனிமேட்டர்களுக்கு சவாலாக உள்ளது. பலகலைக்கழகங்களில் சொல்லித்தராத மென்பொருளால் அனிமேஷன் திரைப்படங்கள் உருவாவதால் வந்த சிக்கல். ஆனால், இந்த பெரிய ஸ்டூடியோக்கள், இதை தங்களது வெற்றிக்குக் காரணமாக இருப்பதால் வெளியே அதிகம் புழங்க விடுவதில்லை. அத்துடன் புதிய படங்களில் புதிய சவால்கள் இருப்பதால், இத்துறையை வளர்த்துக் கொண்டு வருகிறார்கள். வருடத்திற்கு பிக்ஸாரும் ட்ரீம்வர்க்ஸும் குறைந்தது 2 படங்கள் வெளியிடுகிறார்கள். இது மனிதக்கற்பனை மற்றும் உழைப்பு அதிகமாக உள்ள கூட்டு முயற்சித் துறை. பல்லாயிரம் தொழிலாளர்கள் பணியாற்றும் கணினித் தொழில் இது. அமெரிக்க அனிமேஷன் திரைப்படத்துறை ஆண்டுக்கு ஆயிரம் கோடி டாலர் வியாபாரம் நடக்கும் தொழில்.

அனிமேஷன் சினிமாக்களில் பல கணினி தொழில்நுட்பங்கள் எப்படி உபயோகிக்கிறார்கள் என்று பரவலாக அலசினோம். வெறும் கணினி தொழில்நுட்பம் மக்களை கவருவதில்லை. நம் குடும்பங்களிலேயே கவனித்திருப்பீர்கள்.

“என் மகள் ஏதோ கணினியில் செய்து கொண்டே இடுப்பாள். அவள் என்ன செய்கிறாள் என்று மட்டும் கேட்காதீர்கள்” என்று பெற்றோர் சொல்லுவதை அடிக்கடி கேட்கிறோம். இப்படி கணினி என்றாலே ஒதுங்கும் கூட்டத்தை எப்படி கணினியால் உருவாக்கிய படைப்பை பார்க்கக் கவருவது? வல்லுநர்களின் அழகியல், கூட்டு முயற்சி மற்றும் கடின உழைப்புதான் காரணம்.

மனித சினிமாக்களுடன் ஒப்பிட்டு சில விஷயங்களை பார்ப்போம். வீடு, வயல், நகை எல்லாம் அடகு வைத்து சென்னை/மும்பாய் சென்று ராமராஜன் கணக்கில் படமெடுக்கும் சமாச்சாரம் இல்லை அனிமேஷன் திரைப்படம். நல்ல சினிமா எப்படி எடுப்பது என்று தெரிந்திருந்தால் தான் நல்ல அனிமேஷன் சினிமாவும் எடுக்க முடியும்.

மனித சினிமாக்களின் மிகப் பெரிய எதிரி ஹீரோ மற்றும் இமேஜ் சமாச்சாரங்கள். அப்படி, இப்படி இருந்தாலும் கூட ஷாருக்கான் மற்றும் ரஜினிக்காக படம் ஓடுவதைப் போல அனிமேஷனில் எதிர்பார்க்க முடியாது. அனிமேஷன் பாத்திரங்களுக்கு ஸ்டார் வால்யூ எல்லாம் கிடையாது. முதல் விஷயம் ‘திரைக்கதை’. அனிமேஷன் திரைப்படங்களில் வழக்கமான திரைப்படங்களை விட மிகத் தெளிவாகக் கதை சொல்லப்பட வேண்டும். மிக நேர்த்தியான திரைக்கதை அவசியம். குத்து மதிப்பான ஸ்க்ரிப்டை வைத்துக் கொண்டு ஸ்பாட்டில் பார்த்துக்கொள்ளலாம், நடிப்பை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. அனிமேஷன் திரைப்படங்களில் வள, வள வென்று பேசி சிரிக்க வைக்க முடியாது. விஜயின் ஷூவை முன்னும் பின்னும் காட்டி ஜல்லியடிப்பது, விக்ரம் கண்களை க்ளோஸப்பில் காட்டி மிரட்டுவது அனிமேஷன் திரைப்படத்தில் செல்லாது. 2011-இல் முதல்வர் என ஓப்பனிங் சாங் வைக்க முடியாது. ஹீரோ இமேஜ் குழி தோண்டிப் புதைக்கப்படும். கணினியில் அசைவிக்கப்படும் உருவங்களோடு சுவாரசியமாகக் கதை சொல்வது மனித நடிகர்கள் நடிக்கும் படங்களை விடப் பல மடங்கு கடினமானது. காட்சிதான், இசைதான் எல்லாமே.

இப்படி திரைக்கதைதான் எல்லாம் என்று சும்மா புருடா விட முடியாது. ஒவ்வொரு காட்சியும் ‘ஸ்டோரி போர்டு’ மூலம் விவரமாக விளக்கப்பட வேண்டும். அதற்கு முன் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களம் அனைத்தையும் முன்கூட்டியே முடிவு எடுக்க வேண்டும். இதற்காக வரைபடம் வரையும் கலைஞர்கள் மற்றும் களிமண் பொம்மை செய்யும் கலைஞர்கள் என்று பல தரப்பட்டவர்கள் தேவைப்படலாம். ஹீரோவுக்கு பணத்தை அட்வான்ஸாக கொடுத்து இயக்குனரை பதிவு செய்து விட்டு கனவு காணும் விஷயமல்ல அனிமேஷன் திரைப்படம். ‘Character casting’ என்கிறார்கள் – இது போல முக்கியம் எதுவுமில்லை. சரி, முதல் படியாக பாத்திரங்களை தேர்ந்தெடுத்தாகிவிட்டது. வரைபடங்கள் மற்றும் களிமண் பொம்மைகள் செய்து இயக்குனர் சம்மதம் வாங்கியாகி விட்டது. அடுத்து அனிமேஷன் கணினி வேலைதானே?

அதுதான் இல்லை. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பின்னணிக்குரல் தேவை. பின்னணிக்குரல் தேர்வு படம் அனிமேட் செய்யத் தொடங்குமுன் ஆரம்பிக்க வேண்டும். இதுவே ஒரு தனிக்கலை. மனித சினிமாவில் பேசுபவர்கள் விவரம் புரிந்தவர்களுக்காக[ பேசுபவர்கள். அனிமேஷன் திரைப்படங்களோ குழந்தைகள் அதிகம் விரும்பி பார்ப்பவை. பேசுபவர்களின் பேச்சு முதலில் குழந்தைகளுக்கு புரிய வேண்டும். குழந்தைகளுக்கு புரியும்படி பேசுவது மிக மிகக் கடினம். கருத்தையும் சொல்ல வேண்டும், எளிதாகவும் இருக்க வேண்டும். அழகாக டயலாக் பேசத் தெரிந்த எல்லோரும் அனிமேஷன் திரைப்படங்களுக்கு ஒத்துவர மாட்டார்கள். உதாரணம், ஹாலிவுட் நடிகர் எட்டி மர்ஃபியை எடுத்துக் கொள்வோம். அவருடைய ‘Beverly Hills Cop’ என்ற திரைப்படத்தில் அதி வேகமாக டயலாக் வீசுவார். பயங்கர விஷுவல் கோமாளித்தனம் செய்வார். அதே எட்டி, ‘Shrek’ திரைப்படத்தில் எவ்வளவு நிதானமாக ஏற்ற இறக்கங்களுடன் (கழுதை பாத்திரம்) குழந்தைகளை கவர்கிறார் பாருங்களேன்.

அதே போல கனேடிய நடிகர் மைக் மையர்ஸ் தனது ‘Austin Powers’ திரைப்படங்களில் செய்யும் கோமாளித்தனமும் ‘Shrek’-இல் கொடுக்கும் குரலுக்கும்தான் எத்தனை வித்தியாசம்? சில நடிகர்களுக்கு குரல் நிதானமாக அப்படியே அமைந்துவிடுகிறது – உதாரணம், ‘Ice Age’ என்ற அனிமேஷன் திரைப்பட்த்திற்காக குரல் கொடுத்த ரே ரொமானோ என்னும் அமெரிக்க சிரிப்பு நடிகர். குரல் தேர்வு சும்மா பேச வைத்து முடிவெடுப்பதில்லை. அனிமேட்டர்களுடன் ஒரு முன்கூட்டிய டயலாக்கை ஒரு 10 வினாடி க்ளிப்புடன் சேர்த்து சரியாக வருகிறதா என்று பார்க்கிறார்கள். ஏன் இவ்வளவு முன்னமே பார்க்கிறார்கள்? குரலுக்கேற்ப வாயசைவை அனிமேட்டர்கள் முடிவெடுக்க வேண்டும்.

சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. அனிமேஷன் கூட்டு முயற்சியின் உச்சம். வழக்கமான சினிமாக்களில், படப்பிடிப்பு முடிந்தவுடன் காட்சிக்கேற்பப் பின்னணி இசை சேர்ப்பார்கள். அனிமேஷன் திரைப்படங்களில் இசையமைப்பாளர் தொடர்ந்து குழுவுடன் ஒத்துழைக்க வேண்டும். எவரேனும் சற்று சறுக்கினால் அதோகதிதான். கடைசியில் பின்னணி இசையை சேர்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட முடியாது. ‘Up’ திரைப்பட இசையமைப்பாளர் மைக்கேல் கியாச்சினோ, பல காட்சிகளுக்கு அனிமேஷன் தொடர் முடிந்தவுடனேயே இசையமைத்து கொடுத்தார். ’Up’ திரைப்படத்தின் வெற்றிக்கு அதன் பின்னணி இசையும் காரணம். ராண்டி நியூமேன், போன்றோர் இத்துறையின் முன்னோடிகள். காட்டு வழியில் தனிமையில் தத்துவ பாடல் வருவது போல அமைத்தால் குழந்தைகள் தூங்கி விடுவார்கள்! அனிமேஷன் திரைப்படங்களில் கதையின் வேகத்தை ‘டாம் & ஜெர்ரி’ காலத்திலிருந்து இசைதான் நிர்ணயிக்கிறது. அதிவேக சுழற்சி மற்றும் ஜூம் எல்லாம் சாத்தியமான அனிமேஷன் திரைப்படங்களில் அக்காட்சிகளுக்கு மெருகூட்டுவது பின்னணி இசையே.

மனித திரைப்படங்களில் எடிட்டிங் என்பது கடைசி கட்ட உற்பத்திக்குப் பின் நடக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது. எடிட்டிங், அனிமேஷன் திரைப்படங்களில் முன்னமே செய்யப்பட வேண்டும். ஒரு காட்சியை அனிமேட் செய்து முடித்த பின் அனிமேட்டர்கள் அதை ரெண்டர் செய்து பார்த்து விடுவார்கள். என்ன வெட்ட வேண்டுமோ அதை வெட்டி விடுவார்கள். மனித சினிமாவில் எவ்வளவு திட்டமிடல் குறைவாக உள்ளதோ அவ்வளவு எடிட்டருக்கு வேலை அதிகம்.

லைட்டிங் என்ற வெளிச்சவியல் ஃபிலிம் நாட்களிலிருந்து இன்றுவரை மனித சினிமாக்களில் மிக முக்கியம். கணினி அனிமேஷனில் லைட்டிங் அனிமேட்டர்களே ஒவ்வொரு காட்சியிலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அனிமேஷன் திரைப்படங்களில் அழுது வடிந்து லைடிங் இருக்காது – குழந்தைகளைக் கவராது!

அனிமேஷன் இயக்குனர்கள் பொறுமையின், திறமையின் உச்ச நிலையில் இருக்க வேண்டும். பல காட்சிகளில் கணினி பிரச்சினைகள், எதிர்பாரா விதமாக சவால் விடும். சில சமயம் இயக்குனர் கற்பனைக்கேற்ப காட்சி அமைய தொழில்நுட்பம் வளர்ந்திருக்காது. சில சமயங்களில் புதிய க்ராபிக்ஸ் ஆராய்ச்சியே தேவைப்படும். மிக முக்கியமான சவால், ஒரே தொழில்நுட்பமாய் காட்டி அசத்த நினைத்தால் ‘Tron’ போல தோல்விதான். கணினி ஆசாமிகளுக்குத் தங்களது மென்பொருள் ஜாலங்கள் மேல் அவ்வளவு காதல். அதைக் கட்டுப்படுத்துவது இயக்குனரின் பொறுப்பு. சில சமயம் இயக்குனர் எதிர்பார்ப்புக்கேற்ப காட்சி அமையாவிட்டால் பல மாத உழைப்பு வீணாவது அனிமேஷன் உலகில் சகஜம்.

கடைசியாக, மனித சினிமாவில் இல்லாத ஒரு மாபெரும் சவால் கடைசி ரெண்டரிங். அத்தனை காட்சிகள் மற்றும் குரல், இசை எல்லாம் சேர்த்து ரெண்டர் செய்வதற்கு முப்பரிமாண அனிமேஷன் உலகில் அசாத்திய கணினி சக்தி தேவை. சில சமயம் ரெண்டர் செய்து வரும் பதிப்பில் குறைகள் இருந்தால், பயங்கர உழைப்பு தேவை சரி செய்வதற்கு. பல அனிமேஷன் ஸ்டூடியோக்கள் சில வெளி உலக கணினி வழங்கி வயல்களை இதற்காகவே வாடகை எடுத்து பயன்படுத்துகிறார்கள். ‘அவ்தார்’ அப்படி ரெண்டர் செய்து வெளிவந்த சமீபத்திய திரைப்படம்.

அடுத்த பகுதியில் இத்தொழில் இந்தியாவில் எப்படி வளர்ந்து வருகிறது என்று பார்ப்போம். மேலும் கல்வி வாய்ப்புகள் பற்றியும் அலசுவோம்.

சொல்வனம் – செப்டம்பர் 2010