இல்லங்களில் கருவிகள் – கருவிகளின் இணையம் – பகுதி 13

”திருமால், என்ன அகிலா உன்னைக் கூப்பிட்டு, ரொம்ப அலுத்துக் கொண்டாளா?” என்று வெளியூரிலிருந்து நண்பனை விசாரித்தேன்.

“எப்படிச் சரியாச் செல்லற? ஒழுங்கா இணையத் தொடர்பு கட்டணத்தைக் கட்டிடுவியே. ஏன் இந்த மாசம் கட்டல? பணப் பிரச்னையா?”

”அதெல்லாம் ஒண்ணுமில்ல. இந்த அகிலா, சரியாவே பேசறதில்ல. எப்பவும் குளிர்சாதனப் பெட்டி, அடுப்பு, மைக்ரோவேவுடன் பேச்சு. போதாத குறைக்கு மிக்ஸியும் இதுல சேர்ந்து எங்க வீடு கல்யாண வீடாயிடுச்சு”

“புதுசா பேசும் கருவிகள் இருந்தா ஒரு ஜாலியாக இருக்கும். உன்னோட எத்தனை நாள் ஒரே மாதிரி பேசறதாம்…”

“உன்னோட வீட்டுல இதெல்லாம் வந்தாத்தான் தெரியும் திருமால். ஒண்ணு ஒரு நாளைக்குப் பெண்குரலில் சொஞ்சுது, இன்னொன்னு ஆண் குரலில், வேலையை முடித்து விட்டதாக அறிவிப்பு. அவள் வெற்றிகரமாக ரசம் வைத்து முடித்ததற்குப் பாராட்டு வேற. வெறுப்பாயிடுச்சு”

“புரியுது…”

”இன்றிரவு என்ன சமைப்பது என்ற அவளது கேள்விக்குப் பதிலே சொல்ல மாட்டேன். வேளா வேளைக்குக் கொட்டிக்க மட்டும் தெரியுது என்று அர்ச்சனை எனக்குப் பழக்கம். இப்பெல்லாம், ஃப்ரிஜ்ஜிடம் என்ன சமைக்கலாம் என்று கேட்கிறாள். அதுவும் உள்ளிருக்கும் பொருட்களைப் பொறுத்து என்னவெல்லாமோ சொல்லித் தொலைக்கிறது. வெள்ளைக்காரனுக்குச் சாப்பிடவே தெரியாதுன்னு நினைக்கிறேன். ஃப்ரிஜ்ஜில் இருக்கும் காய்கறியை எப்பொழுதும் சாலட் செய்யச் சொல்லுகிறது. வெறுத்து போய், இணைய பில்லைக் கட்டாமல் விட்டு விட்டேன்”

 

oOo

 

IOT part12-pic1நுண்ணறிப்பேசி, அணிக் கருவிகள், கார்களில் கருவிகள் என்று பல தரப்பட்ட விஷயங்களை நாம் பார்த்தாலும், இவற்றின் தாக்கத்தின் ஒரு பாகம்  இல்லம் என்று நிச்சயமாகச் சொல்லலாம். வீட்டில் உள்ள கருவி இணைய உலகில் இரண்டு பகுதிகள் எப்பொழுதும் உண்டு. முதலானது, புதிய உணர்விகள். இரண்டாவது நுண்ணறிப்பேசிகள். இன்று சில பயனுள்ள கருவிகள் சந்தைக்கு வந்தாலும், பெரும்பாலான கருவிகள் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

வீடுகளில் எந்த வகைக் கருவிகள் பிரபலமாகிக் கொண்டு வருகின்றன?

  1. வீட்டின் பாதுகாப்பிற்காக நிறுவப்படும் இணையத்துடன் தொடர்புடைய விடியோ காமிராக்கள் (home video surveillance systems)
  2. வீட்டின் வெப்பம் மற்றும் குளிர்நிலையைக் கட்டுப்படுத்தும் வெப்பச் சீர்நிலைக்  கருவிகள் (smart thermostat)
  3. மின்சார உபயோகத்தைக் கட்டுப்படுத்தும் டிஜிட்டல் நுண்ணறியளவிகள் (smart (electrical) meters)
  4. நுண்ணறி மின்சார விளக்குகள் (smart bulbs)
  5. சமயலறை சாதனங்களைக் கட்டுப் படுத்தும் கருவிகள் (smart kitchen appliances)
  6. வீட்டின் வெளியே பயன்படுத்தப்படும் சில சாதனங்களைக் கட்டுப் படுத்தும் கருவிகள் (outdoor smart devices)
  7. வீட்டைச் சுத்தம் செய்யும் சிறிய ரோபோக்கள் (smart cleaning robots)

இவற்றைத் தவிர மற்ற கருவி இணைய விஷயங்கள், குறிப்பாக வீட்டு இணையக் கருவிகள் என்று சொல்ல முடியாது. என்னுடைய ஆராய்ச்சியில், பெரும்பாலான இணையதளங்கள் காரில் பயன்படுத்தும் கருவிகள், உடல்நிலைத் தகுதி கருவிகளை (physical fitness devices) வீட்டு இணையக் கருவிகளோடு சேர்த்துக் குழப்புவதில் வெற்றி கண்டுள்ளன.

வீட்டின் பாதுகாப்பு இணையக் கருவிகள் (digital video surveillance systems)

கடந்த பத்தாண்டுகளாக, வீடுகளின் பாதுகாப்பிற்காக விடியோ காமிராக்கள் நிறுவும் முறைகள் நிறை/குறைகளோடு வலம் வருகின்றன. சின்னக் குழந்தைகள் இருக்கும் வீடுகளில், பெற்றோர்கள், இதைப் பெரும்பாலும் ஒரு அவசியமானத் தேவை என்று நினைக்கிறார்கள். மகப்பேறு விடுமுறை அதிகம் இல்லாமல் தவிக்கும் தாய்மார்கள், பிஞ்சுக் குழந்தைகளை வீட்டில் செவிலித் தாயிடம் (babysitter) விட்டுச் செல்லும் பொழுது, குழந்தையின் நலம் பற்றி அறிய விடியோ மிகவும் உதவுகிறது. அதுவும், இணையம் மூலம் எங்கிருந்தாலும் (இளம் தாய்மார்கள் வேலை காரணமாக வெளியூர் செல்ல நேர்ந்தால், இது மேலும் பயனுள்ள ஒரு உத்தி) கண்காணிக்கும் திறன் இதன் சிறப்பாம்சம். சிலர், இதை ஒரு சமூக அந்தஸ்திற்காகச் செய்கிறார்கள். டிஜிட்டல் காமிராக்கள் விலை மலிவானதிலிருந்து, இணைய நிறுவனங்கள் இத்தகைய விடியோ கண்காணிப்புச் சேவைகளை வழங்கி வருகிறார்கள். இந்த விடியோ காமிராக்கள் ஒவ்வொரு நிமிட நிகழ்வுகளையும் பதிவு செய்வதால், வீட்டுத் திருட்டு முயற்சிகளைத் தடுக்க உதவுகிறது. ஆனால், சமீப காலமாக, சில இணைய விஷமிகள், (internet hackers) தலைகீழாக, இணையம் மூலம், வீட்டில் நடப்பதைக் கண்காணிப்பது, இந்த முறைகளின் பாதுகாப்பின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. வளரும் இந்தக் கருவி இணைய முயற்சிகளில், பெரிதும் அடிபடுவது, பாதுகாப்பின்மையற்ற வீட்டுக் கருவிகள்.

மேலே உள்ள விடியோ இவ்வகை விடியோ கண்காணிப்பு அமைப்புகளின் அம்சங்களை எளிமையாக விளக்குகிறது. வீட்டின் கண்காணிப்பு அமைப்புகளில் நகருண்ர்வி (motion sensor) எப்பொழுதும் உண்டு. திருடர்கள் பூட்டியிருக்கும் வீட்டில் நடமாடினால், உடனே அதை உணர்ந்து எச்சரிக்கும் உத்தி இது. இணையம் வரும் முன்னே பயனில் உள்ள நுட்பம்.

வீட்டின் வெப்பச் சீர்நிலை இணையக் கருவிகள் (smart thermostats)

மேல் நாடுகளில் வீட்டின் வெப்பச் சீர்நிலைக் கருவிகள் இணையம் வருவதற்கு முன்னே உள்ள ஒரு விஷயம். இக்கருவிகள் குளிர்காலத்தில் வெப்பத்தையும், கோடைகாலத்தில் குளிர்ச்சியையும் கட்டுப்படுத்தும் கருவிகள்.  இன்ன நேரத்திற்கு இன்ன வெப்பநிலை என்று அதில் நிரலி விட்டால், இக்கருவி உலை/காற்றுக் கட்டுப்படுத்தி (furnace/ air conditioner) எந்திரத்தைக் கட்டுப் படுத்தும். ஆனால், சில நாடகள் எதிர்பார்த்ததை விடக் குளிராகவும், அல்லது வெப்பமாகவும் இருந்தால், இக்கருவிகள் வீட்டின் காற்றுக் கட்டிப்படுத்தியைப் படுத்தி விடும். அத்துடன், பருவகாலத்திற்கேற்ப இதை மாற்றி அமைத்துக் கொண்டே இருக்க வேண்டும். மேலும், வீட்டில், இந்தக் கருவியருகில் இருந்தால் மட்டுமே எந்த மாற்றமும் சாத்தியம்.

இன்றுள்ள வீட்டு இணையக் கருவிகளில் மிகவும் முதிர்ச்சி அடைந்துள்ள ஒரு கருவி நெஸ்ட் (Google Nest) என்ற வெப்பச் சீர்நிலை நுண்ணறிக்கருவி (smart thermostat). கருவியின் சொந்தக்காரரின் குளிர்/வெப்ப விருப்பு வெறுப்புகளைக் கற்றுக் கொள்கிறது. ஒரு வருடம் பருவகால மாற்றங்களைக் கவனித்து அதற்கேற்றார்ப் போல வெப்பத்தை/குளிரைச் சீராக்குகிறது. அன்றைய தட்பவெப்ப நிலைக்கேற்றார்ப் போலக் குளிர்/வெப்ப நிலையின் அளவை முடிவு செய்கிறது. எங்கிருந்தாலும், நுண்ணறிப்பேசி மூலம், இந்தக் கருவியைக் கட்டுப்படுத்தலாம்.

கீழே உள்ள விடியோ இந்தக் கருவியின் இயக்கத்தை விமர்சிக்கிறது:

மின்சார டிஜிட்டல் நுண்ணறியளவிகள் (smart electrical meters)

மேற்குலகில், மின்சாரத்தின் விலை, அதைப் பயன்படுத்தும் நேரத்திற்குத் தகுந்தாற்போல மாறும். பகலில் ஒரு விலை, இரவில் ஒரு விலை, காலையில் அலுவலகங்கள், வணிக மையங்கள் திறக்கும் முன், சற்று குறைந்த விலை, வாரக் கடைசியில் சகாய விலை என்று பலவித விலைகள், பயன்படுத்தும் மின்சாரத்திற்கு உண்டு. மாதக் கடைசியில் அனுப்பப்படும் மின்சார பில்லில், உச்ச நேர மின்சாரம் இத்தனை யூனிட்டுகள், காலை நேர யூனிட்டுகள், சகாய யூனிட்டுகள் என்று மின்சார விநியோக நிறுவனங்கள் நுகர்வோரை வருத்தெடுத்து விடுகிறார்கள். மின்சாரத் தொகுதியின் (electrical grid) சுமைக்கேற்றார் போல கட்டணம் வசூலிக்கின்றன இந்த நிறுவனங்கள்.

மின்சார டிஜிட்டல் அளவிகள், எவ்வளவு மின்சாரத்தை ஒரு இணைப்புப் பயன்படுத்துகிறது என்பதை, கம்பியில்லாத் தொடர்பு மூலம் (கம்பி நிறுவனங்களுக்கு, கம்பியில்லாத் தொடர்பு தேவைப்படுவது விநோதமான விஷயம்!) நாளொன்றுக்கு ஓரிரு செய்திகளை அனுப்பிய வண்ணம் உள்ளது. மின்சார விநியோக நிறுவனங்கள், இந்தச் செய்தியின் மூலம் மினசாரத் தேவையை முடிவு செய்கிறது. இது, இத்துறையின் மிகவும் ஆரம்ப நிலை என்றே சொல்ல வேண்டும். இதைப் பற்றிய விடியோ இங்கே:

உண்மையில், பெரிய நுண்ணறிவு என்று எதுவும் இந்த முறையில் இல்லை. முன் பகுதியில் பார்த்த வெப்ப சீர்நிலை நுண்ணறிக் கருவியோ, அல்லது, நுண்ணறி சாதனங்களோ இல்லையேல், இதில் அதிகப் பயனில்லை. இன்றைய நிலையில், இத்தகைய டிஜிட்டல் மின்னளவிகள் அதிகம் பயனில் இல்லாததற்குக் காரணமும் இதுவே.

 

நுண்ணறி மின்சார விளக்குகள் (smart LED bulbs)

எல்.ஈ.டி. விளக்குகள், மின்சாரத்தை அதிகம் உறிஞ்சாமல், அழகாக ஒளி வழங்குகிறது. ஒரு 60 வாட் கம்பியிழை மின் விளக்கின் (filament bulbs) ஒளியை, 6 வாட் மின்சாரத்தில் வழங்குவதோடு, சூடு அதிகம் இல்லாமல் வெளிச்சத்தை வழங்குகிறது. இந்தத் தொழில்நுட்பத்தின் அடுத்த நிலை, நுண்ணறி மின்சார விளக்குகள்.

  1. நுண்ணறிப்பேசி கொண்டு, இவற்றின் ஒளி நிறத்தை மாற்றலாம். தூங்கச் செல்லும் பொழுது ஒரு நிறம், காலை எழும் பொழுது ஒரு நிறம் என்று மாற்றலாம். மேலும், நுண்ணறிப்பேசியில் வரும் பயன்பாடு, ஒரு காட்சியை, சில மின் விளக்குகள் கொண்டு உருவாக்கும் வரை வந்துவிட்டது
  2. சூரிய ஒளிக்குத் தகுந்தாற்போல, இவற்றின் ஒளியளவு மாறும்படி செய்யலாம்
  3. நுண்ணறிப்பேசி மூலம், வீட்டில் உள்ள பல அறைகளின் விளக்குகளைக் கட்டுப்படுத்தலாம். இத்தனைக்கும், கட்டுப்படுத்த வீட்டில் இருக்கக் கூடத் தேவையில்லை

ஒவ்வொரு மின்விளக்கிலும் ஓர் உணர்வி உண்டு – இதனால், மின்விளக்குகள் கம்பியில்லாத் தொடர்பு மூலம்  (பெரும்பாலும் Wifi அல்லது Zigbee) நுண்ணறிப்பேசியுடன் தொடர்பு கொள்கிறது. நுண்ணறிப்பேசியில் உள்ள பயன்பாடு, நுண்ணறி மின்விளக்குகளைக் கட்டுப் படுத்துகிறது. இன்று, இவ்வகை மின்விளக்குகளின் விலை அதிகம். இன்னும் சில ஆண்டுகளில், இதன் விலை வெகுவாகக் குறைந்து விடும் என நம்பலாம்.

ஃபிலிப்ஸ் நிறுவனத்தின் நுண்ணறி மின்விளக்குகளின் விடியோ இங்கே:

சற்று வித்தியாசமான தொழில்நுட்பத்துடன், சாம்சுங்கின் நுண்ணறி மின்விளக்குகளின் விடியோ இங்கே:

அட, நாம் தூங்கும் நேரத்தில், இணைய விஷமிகள் நம்முடைய வீட்டின் விளக்குகளை,  பல நிறம் மாறும், ப்யாஸ்கோப் போல விளையாடி நம்மை எரிச்சலுடன் எழ வைப்பார்களோ என்ற உங்களது கவலை புரிகிறது! அத்துடன், இவ்வகை மின்விளக்குகள் ஒரு நிறுவனத்துடன் நுகர்வோரை பிணைக்கும் விஷயம் மிகவும் வருந்தத்தக்கது.

சமயலறை நுண்ணறிச் சாதனங்கள் (smart kitchen appliances)

கடந்த இருபது ஆண்டுகளில், சமயலறை சாதனங்களில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது மைக்ரோவேவ் அடுப்பு. மற்ற சாதனங்களில் அவ்வப்பொழுது மின்னணுவியல் தலையைக் காட்டினாலும், மிகப் பெரிய முன்னேற்றம் என்று அவற்றைச் சொல்வது கடினம். இன்று, இந்த நிலை மாறி வருகிறது. ஃப்ரிட்ஜ், காபி எந்திரம், தானியங்கி பாத்திரக்கழுவி எந்திரம் (automatic dishwasher) என்று எல்லாவற்றிலும், இணைய வசதிகள் வரத் தொடங்கி விட்டன.

குறிப்பாக, மின்சார டிஜிட்டல் நுண்ணறியளவிகள் தரும் விலைப் பட்டியலுக்கேற்ப, எப்பொழுது இயங்கத் தொடங்க வேண்டும் என்பதை முடிவு செய்கின்றன. உதாரணத்திற்கு, தானியங்கி பாத்திரக்கழுவி எந்திரம் பாத்திரங்களை அடுக்கினாலும், குறைந்த விலை மின்சாரத்திற்காகக் காத்திருந்து இயங்குகிறது. அவசரமாகப் பாத்திரம் கழுவ வேண்டுமானால், உடனேயும் இதை இயக்கலாம்.

ஃப்ரிட்ஜ்கள் இன்று உள்ளே என்ன அடுக்கப்பட்டுள்ளது என்பதை அதன் காட்சியளிப்பில் காட்டிவிடுகிறது. அத்துடன், இந்த விஷயத்தை நுண்ணறிப்பேசி வாயிலாக இணையம் மூலம் கடையிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.  இப்படிப்பட்ட அம்சங்களுடைய சில சாதனங்கள் இங்கே:

எல்.ஜி. –யின் காட்சியளிப்பு:

எவ்வாறு, சமயலறை சாதனங்கள் இவ்வாறு இயங்கவிருக்கின்றன என்பதைப் பற்றிய ஜி,ஈ. –இன் காட்சியளிப்பு:

வீட்டின் வெளியே நுண்ணறி சாதனங்கள் (outdoor smart devices)

வீட்டின் வெளியே மேற்குலகில் வாரந்தோறும், புல் வெட்டுதல் என்பது ஒரு போரடிக்கும் வேலை. என்னதான் இதற்குப் பெட்ரோலில் வேலை செய்யும் புல்வெட்டி எந்திரம் இருந்தாலும், ஒவ்வொரு வாரமும் இதைச் செய்வது  அலுப்பு தட்டும் விஷயம். மின்சார மோட்டார் கொண்டு கம்பியில்லா (மறுமின்னேற்ற மின்கலனின் இயங்குபவை) புல்வெட்டிகளும் வந்துவிட்டன. ஆனாலும், இதை ஒருவர் தள்ளினால் தான் புல்லை வெட்டும். நுண்ணறிப்பேசி மூலம் இயங்கக்கூடிய மின் புல்வெட்டி வந்துவிட்டது. புல்வெளியின் எல்லைகளை சரியாக அதனுள் தரவாகக் கொடுத்து விட்டால், சமர்த்தாக தானே புல்வெட்டிவிடும். இத்தகைய நுண்ணறிப்புல்வெட்டியின் காட்டியளிப்பு இங்கே:

புல் வெட்டுதலை விட இன்னும் சலிப்பான வேலை, தோட்டத்திற்கு, நீர் பாய்ச்சுவது. புல்லாவது வாரம் ஒரு முறை வெட்டினால் போதும். நீரோ தினமும் பாய்ச்ச வேண்டும். இதற்காக நீர்தெளிப்பு அமைப்புகள் (sprinkler systems)  உண்டு. தரைக்கடியில் புதைக்கப்பட்ட நீர்தெளிப்பு அமைப்புகள், ஒரு கடிகை மூலம் காலை, அல்லது மாலை குறிப்பிட்ட நேரத்திற்கு அரை மணியோ, ஒரு மணி நேரமோ நீரை தோட்டத்தில் தெளிக்கும்.  ஆனால்,  இந்த அமைப்பில் மழை பெய்யும் நாளிலும் நீரை குறிப்பிட்ட நேரத்திற்குப் பாய்ச்சும். தட்பவெட்ப நிலை பற்றி இந்த அமைப்பு அறியாது. இன்று, நுண்ணறிப்பேசி மூலம் இயக்கக்கூடிய நீர்தெளிப்பு அமைப்புகள் வந்துவிட்டன. மேலும், இந்த அமைப்புகள், மழை பெய்யும் நாளில் வேலை செய்யாமல், மிகவும் வெய்யிலான நாளில் ஒரு முறைக்கு இரு முறை நீர் தெளித்து வேலை செய்யும் திறன் கொண்டது. சில மேல்மட்ட மாடல்கள், மண்ணில் உள்ள ஈரப்பசையைப் பொறுத்து (விவசாயக் கருவி இணைய அமைப்புகளில் இந்த முறை மிகவும் முக்கியமானது) நீரைத் தெளிக்கும் திறன் கொண்டது – இதற்கென ஈரப்பசையை அளக்கும் உணர்வி ஒன்றும் இத்துடன் உண்டு. அத்தகைய நுண்ணறி நீர்தெளிப்பு அமைப்புகளில் ஒன்றின் காட்சியளிப்பு இங்கே:

வீட்டைச் சுத்தம் செய்யும் சிறிய ரோபோக்கள் (smart cleaning robots)

இன்னொரு அலுப்பு தட்டும் வேலை, வீட்டிற்குள் சுத்தம் செய்யும் வேலை. வெற்றுத் துப்புரவாக்கி (vacuum cleaner) ஒரு பயனுள்ள எந்திரமாக இருந்தாலும், இதை அடிக்கடி இயக்குவது அலுப்பான வேலை. தானியங்கி வெற்றுத் துப்புரவாக்கிகள் சில ஆண்டுகளாக சந்தையில் உள்ளது. இவற்றில் சில உணர்விகள் உள்ளன. எங்கு சுவரிருக்கிறது, படிக்கட்டு இருக்கிறது, அறையின் அளவு எத்தனை என்று அனைத்தையும் அளக்க உணர்விகள் உள்ளது. சுத்தம் செய்து முடித்த பின், சமர்த்தாக, மின்னேற்றிக் கொள்ளச் சென்று விடும். அடுத்தது என்ன? நுண்ணறிப்பேசி மூலம், இதையும் இயக்க வழி வந்துவிட்டது.

சந்தையில் உள்ள பல தானியங்கி வெற்றுத் துப்புரவாக்கிகளில், ஒன்றின் காட்சியளிப்பு இங்கே:

இத்தகைய எந்திரத்தை கம்பியில்லாத் தொடர்பு மூலம் கட்டுப்படுத்தும் முறை இங்கே:

இத்தகைய அலுப்பூட்டும் செயல்களைச் செய்யும் எந்திரங்கள் மிகவும் பிரபலமடையத் தொடங்கிவிட்டன. இன்னும் 5 ஆண்டுகளில் வீட்டில் நுண்ணறிக் கருவிகள் நுண்ணறிப்பேசிகளை விட அதிகமாக இருக்கும் என்று ஓர் ஆய்வு சொல்கிறது. பாதுகாப்பின்மை மற்றும் எல்லாக் கருவிகளும் இயங்கும் ஒரே நுகர்வோர் முறை இல்லாதது இன்றைய பெருங் குறை.

மேலே நாம் பார்த்தது, இத்தகைய வீட்டுக் கருவிகளின் ஒரு சிறிய சாம்பிள். இதைப் போலப் பல பொருட்களைச் சுட்டிகளில் காணலாம்.

சொல்வனம் – ஜனவரி 2016

கருவி இணையத் தொழில்நுட்பம் – கருவிகளின் இணையம் – பகுதி 12

IOT part11-pic1

நாம் முன் பகுதியில், எப்படி கருவிகள் உருவாக்கப்படுகின்றன, மற்றும் மிகச் சிறிய உணர்விகளுடன் இணைக்கப்படுகின்றன என்று பார்த்தோம். ஆனால், நுகர்வோர் மற்றும் நிறுவனங்கள் பயனடைய, இந்த அமைப்பை மேலும் மென்பொருள் மூலம், அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, இக்கட்டுரையைப் படிக்கும் எத்தனை பேருக்கு, ஒரு உணர்வி, செயலியுடன் சேர்ந்து எடுக்கும் முடிவு, நுண்ணறிப்பேசியில், காட்டப்படும் படத்தின் திசைப்போக்கு (orientation) மாற்றம் என்பது பற்றியக் கவலை? நுகர்வோர் பார்ப்பதெல்லாம், ஒரு படத்தைக் காட்டும் பயன்பாட்டை மட்டும்தான். அத்துடன், நுகர்வோரின் எதிர்பார்ப்பு, எல்லா நிறுவன நுண்ணறிப்பேசிகளிலும், படத்தின் திசைப் போக்கு சுழற்சிக்கேற்ப மாறும் என்பதுதான். சாம்சுங்கில் ஒரு முறையும், ஆப்பிளில் இன்னொன்று என்றிருந்தால், குழப்பம்தான்.

இதையே சற்று மேலும் சிந்தித்தால், எதிர்கால கருவி இணைய பயன்பாட்டாளர் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும்?

  1. ஒரு கருவியை (உணர்வி+செயலி+ரேடியோ) பாதுகாப்பாக, எந்த ஒரு செயல்முறை மென்பொருளோடும் (Operating System) தொடர்பு கொள்ள வேண்டும். அதாவது, விண்டோஸ், ஆண்ட்ராய்டு, ஆப்பிள் என்று எதுவாக இருந்தாலும், கருவிக்கு எந்த வித்தியாசமும் இருக்கக் கூடாது
  2. கருவிகள் எப்படி இணைக்கப்பட்டிருந்தாலும், பயன்பாட்டாளர் எந்தச் சிக்கலுமின்றி, தன்னுடைய பயன்பாட்டை இயக்க முடிய வேண்டும். கருவிகள் BlueTooth4, Zigbee, 6LoWPAN என்று எந்த முறையால் இணைக்கப்பட்டாலும், பயன்பாட்டாளருக்கு எந்த வித்தியாசமும் தெரியக் கூடாது
  3. நுகர்வோர் பயன்படுத்தும் பயன்பாடுகள் எளிதாக தரவுகளை பரிமாற்றிக் கொள்ள இயல வேண்டும். நம்முடைய உதாரணத்தில், எப்படி, ‘சக்தியும்’, ‘நெல்லையும்’, சர்வ சாதரணமாக தரவுகளை பரிமாறிக் கொண்டனவோ, அதுபோல ஒரு அனுபவத்தைப் பயன்பாட்டாளர் பெற வேண்டும்

இப்படி எதிர்கால நிலை பற்றி எடுத்துரைப்பது கணினி தொழில்நுட்பத்தில் வழக்கம். நடைமுறையில், வணிக மோதல்கள் மற்றும் சந்தைப் பொருளாதாரம், இத்தகைய குறிக்கோள்களைத் தவிடு பொடியாக்குவதும் வழக்கம். ஆனால், இந்த விஷயத்தில், கருவிகளில் இணையப் பயன்பாடுகளை ஒரே நிறுவனம் செய்து முடிக்க இயலாதது, அனைவருக்கும் புரிகிறது. அத்துடன், இந்த மூன்று குறிக்கோள்களையும் அடைவது எளிதல்ல. பெரிய நிறுவனங்கள், தங்களது கைவரிசையை பயன்பாடுகளில் காட்டுவதே தனக்குச் சரிப்பட்டு வரும் என்பதைச் சரியாக கணிக்கத் தொடங்கிவிட்டன.

மேல்வாரியாகப் பார்த்தால், கருவி இணையக் கட்டமைப்பில் (IOT architecture) சில முக்கிய பெரிய பாகங்கள் உள்ளன:

  1. உணர்வி, செயலி மற்றும் தொடர்பியல் – இவை வன்பொருள் விஷயங்கள் (hardware)
  2. கருவிகள் உருவாக்கும் தரவுகளை பயனுள்ள முடிவாற்றல் விஷயமாக ஏதாவது ஒரு திரை வடிவத்தில் (கணினித் திரை, நுண்ணறிப்பேசித் திரை, வில்லைக் கணினித் திரை) காட்சியளிக்கும் பயன்பாடு – இது மென்பொருள் விஷயம் (software)

IOT part11-pic2

இந்த இரு நிலைகளுக்கு இடையில், பல்வேறு இடை நிலைகள் உள்ளன. பல வித்தியாசமான தொழில்நுட்பங்களை இணைப்பது அவ்வளவு எளிதல்ல. இதனால், பல்வேறு அணுகுமுறைகள், இந்தப் பிரச்னையைத் தீர்க்க  முன்வைக்கப்பட்ட வண்ணம் உள்ளது. மிக எளிமையான ஒரு கருவி இணைய கட்டமைப்பு இங்கே காட்டப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் வசீகரம், இதன் எளிமைதான். இந்தக் கட்டமைப்பின், கீழ்தளத்தில், உணர்விகள் உள்ளன. அடுத்த தளத்தில், உணர்விகளை இணைக்கும் வலையமைப்பு முறைகள் உள்ளன. மூன்றாவது தளமாக, உணர்விகள் அனுப்பும் தரவுகளைச் சேகரிக்கப் பெரிய தரவுத் தேக்கிகள் உள்ளன. நான்காவது தளமாக, முடிவாற்றல் பொறிகள் (decision support tools) உள்ளன. ஐந்தாவது தளமாக, பயன்பாடுகள், முடிவாற்றல் பொறிகளின் பரிந்துரையை பயன்பாட்டாளர்களுக்கு கணினி அல்லது நுண்ணறிப்பேசி மூலம் காட்சியளிப்பிற்காக முன்வைக்கப்படுகிறது.

ஆனால், பல விஷயங்களை இந்த அணுகுமுறை, சரியாக விளக்காமல் விட்டு விட்டது எனலாம். உதாரணத்திற்கு, எல்லா கருவி இணைய அமைப்புகளிலும், முடிவுகள் ஒரு மிகப் பெரிய தரவு தேக்கி (big data store) அமைப்பைச் சார்ந்தே இருப்பதாக, இந்த அணுகுமுறை முன் வைக்கிறது. பல முக்கியக் கருவி சம்பந்த முடிவுகள், பெரிய தரவு தேக்கியை அடையும் முன்பே எடுக்க முடியும். உதாரணத்திற்கு, தானியங்கிக் கார், சுற்று வட்டாரத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டு அந்தக் காரை இயக்க வேண்டும். முக்கியமான முடிவுகள் அரை நொடிக்குள் எடுக்கப்பட வேண்டியவை. இதற்காக, மிகப் பெரிய தரவு தேக்கியை நம்பியிருந்தால், பயனிகளின் பாதுகாப்பு கேள்விக்குறிதான். அதே போல, முடிவாற்றல் பொறிகள் (decision support tools) ஒரு பயன்பாட்டாளருக்குத் தேவையில்லை. அத்தகைய பொறிகள் பயன்பாட்டில், (application) மறைந்திருக்க வேண்டும். அத்துடன், உணர்விகள் கருவிகளாவதை இந்தக் கட்டமைப்பு சரியாகக் காட்டவில்லை.

IOT part11-pic3மேலே உள்ள படம், இந்த தொழில்நுட்ப கட்டுமானத்தை ஏழு தளங்களாகப் பிரிக்கிறது. எல்லா பயன்பாடுகளிலும், ஏழு தளங்களும் இருக்கத் தேவையில்லை. முதல் இரண்டு தளங்களில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இதையே நாம் சென்ற இரு பகுதிகளில் பார்த்தோம். மூன்றாவது தளம், பல உடனடி தேவை பயன்பாடுகளுக்கு மிகவும் தோதான விஷயம். அதாவது, இந்த தளத்திலேயே, இருக்கும் தரவுகளை வைத்து பல முடிவுகளை எடுத்து, கருவிகளின் தரவுபடி, அவற்றை இயக்கவும் செய்யலாம். இதை edge computing என்கிறார்கள். இதைத்தான் தானியங்கிக் காரின் கணினி உடனே செய்கிறது. அதற்கு அடுத்தபடியாக, உள்ள மூன்று தளங்களில், கருவிகளிடமிருந்து உருவாகிய பல கோடி தரவுகளை வைத்து முடிவுகளை எடுக்கலாம். இதை, ஒரு நிறுவனத்தின் கணினி வழங்கி வயல் (central computing server farm) செய்யலாம்; அல்லது ஒரு மேகக் கணினி வழங்கி வயல் (cloud processing) செய்யலாம். கார்கள், வீடுகளில் பயன்படும் பெரும்பாலான கருவி இணைய விஷயங்களுக்கு மூன்று தளங்கள் போதுமானது. மிக முக்கியமான விஷயம், இந்த தளங்களின் தரவுப் பரிமாற்றம், பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

மேலே நாம் சொல்லிய கட்டமைப்பைப் பல அணுகுமூறைகள் கொண்டு செய்லபடுத்தலாம். கணினி மென்பொருள் துறையின் பல்லாண்டுப் பழக்கமான கோஷ்டி பூசலுக்கு இதைப் போன்ற விஷயம், அல்வா சமாச்சாரம். பல கோஷ்டிகள் உருவாகி தன்னுடைய அணுகுமுறைதான் சிறந்தது என்று பறை சாற்றி வருகிறார்கள். இவற்றில் முக்கியமான கோஷ்டிகள்:

  1. Google, Samsung Electronics, ARM Holdings, Freescale Semiconductor, Silicon Labs, போன்றோர் இணைந்து முன்வைக்கும் Thread என்ற அணுகுமுறை
  2. Atmel, Broadcom, Dell, Intel, Samsung இணைந்து முன்வைக்கும் OIC என்ற அணுகுமுறை
  3. Qualcomm, Cisco, Microsoft, LG, HTCஇணைந்து முன்வைக்கும் AllJoyn  என்ற அணுகுமுறை
  4. Intel, Cisco, AT&T, GE, IBM இணைந்து முன்வைக்கும் IIC  என்ற தொழில்துறை அணுகுமுறை

நம்மூர் அரசியல் கட்சிகள் தோற்றது என்று தோன்றலாம். குறைந்த பட்சம், அரசியல் கட்சிகள் ஒரு கூட்டணியுடன் உறவு வைத்துக் கொள்ளும். அவ்வப்பொழுது சந்தர்ப்பத்திற்காக மாறலாம். ஆனால், இங்கு பல கூட்டணிகளில் ஒரே கட்சிகள், எது வென்றாலும் ஆதாயம் நமக்கே என்று இயங்குவது, இந்தத் தொழிலின் மிகப் பெரிய குறை. தேர்தலைப் போல, இந்தக் கூட்டணிகளில் ஏதாவது ஒன்றோ அல்லது இரண்டோ அல்லது ஒரு புதிய கூட்டணியோ இன்னும் 5 ஆண்டுகளுக்குப் பின் வெல்லும் என்று எதிர்பார்க்கலாம். இன்றைய நிலையில், இது ஒரு குழப்பமான துறையின் ஒரு அங்கம் என்று சொல்லலாம். உணர்விகளின் ஊரவலத்தில், ஏராளமான வியாபார வாய்ப்புகள் இருப்பதால், உள்ள குழப்பம் இது. நாளடைவில், சில கூட்டணிகள் உடையும், தோல்வியடையும். தேர்தலைப் போல, எல்லாம் பயன்பாட்டாளர் கையில் உள்ளது.

சொல்வனம் – ஜனவரி 2016

கருவி இணையத் தொழில்நுட்பம் -கருவிகளின் இணையம் –பகுதி 11

உணர்விகள், மற்றும் கருவியாக்கல் பற்றிய ஒரு மேல்வாரியான அலசலை முன் பகுதியில் பார்த்தோம். ஆனால், கருவியாக்கல் என்பதில், பல முறைகள், பல அணுகுமுறைகள் இருப்பது, இத்துறையின் முதல் பிரச்னையாக உள்ளது. அப்படி என்ன பிரச்னை?

பொதுவாக, கணினிகள்/கருவிகளின் வலையமைப்பை சில வகைகளாகப் பிரிக்கலாம்:

  1. கணினிகளின் வட்டார வலையமைப்பு – பெரும்பாலும், இவை கம்பித் தொடர்புமூலம் ஒரு மையக் கணினிக்கோ அல்லது கணினி வழங்கிக்கோ இணைக்கும் நுட்பம். கம்பியில்லா WiFi –யும் இதில் அடங்கும். இதை LAN (Local Area Networking) என்கிறார்கள்
  2. கணினிகளின் தனிப்பட்ட வலையமைப்பு – பெரும்பாலும், கம்பியில்லா தொடர்புமூலம், ஒரு மையக் கணினிக்கோ அல்லது ஒரு மின்பரப்பிக்கோ இணைக்கும் நுட்பம். புளூடூத், Zigbee (இதைப் பற்றி விவரமாக இப்பகுதியில் பிறகு பார்ப்போம்) போன்ற வழிகள் இதில் அடங்கும். இதை PAN (Personal Area Networking) என்கிறார்கள்
  3. கணினிகளின் அகன்ற வலையமைப்பு – கருவிகளை இணையத்துடன் செல்பேசி தொழில்நுட்பங்கள் கொண்டு இணைக்கும் நுட்பம். GSM, LTE போன்ற நுண்ணறிப்பேசி முறைகள் இதில் அடக்கம். இதை WAN (Wide Area Networking) என்கிறார்கள்

மேலே சொன்ன முறைகள் தூரத்தை ஒரு அளவாகக் கொண்ட வகைப்படுத்தல். PAN என்பது மிகவும் குறைந்த தூரத்திலும், WAN  என்ற வலையமைப்பு இந்த மூன்று முறைகளில் அதிக தூரம் செயல்படும் திறன் கொண்டது.

ஆக, எப்படி உணர்விகள் மற்ற பாகங்களோடு இணைக்கப்பட வேண்டும் என்பதில், இரு அடிப்படை வழிகள் உள்ளன.

  1. கம்பியுடைய தொடர்பு (wired connectivity)
  2. கம்பியில்லாத் தொடர்பு (wireless connectivity)

IOT part10-pic1

தொழிற்சாலைகள், கட்டிடங்கள், மருத்துவ மனைகள் மற்றும் வீடுகளில் உள்ள உணர்விகளுக்கு கம்பித் தொடர்பு போதுமானது. உதாரணத்திற்கு, வீட்டில் உள்ள வெப்பநிலைப்படுத்தி உலையுடன் (thermostat to furnace) கம்பித் தொடர்பிருந்தால் போதுமானது. அதே போல, ஒரு தொழிற்சாலையில் உள்ள தயாரிப்பு ரோபோக்கள், தொழிற்பிரிவு கணினியுடன் கம்பித் தொடர்பில் எல்லா தரவுகளை அனுப்புவதுடன், கணினியும் ரோபோவைக் கட்டுப் படுத்தவும், அதே கம்பித் தொடர்பால், முடியும். கணினிகளில் வழக்கமான முறைகளில் (RJ45) இணைக்க முடியும். இவ்வகை இணைப்புகளில் பெரிய பிரச்னை மற்றும் கருத்து வேறுபாடுகள் இல்லை.

ஆனால், பல புதிய பயன்பாடுகளில், உணர்விகளுக்கு ஏதாவது ஒரு செயலியுடன் கம்பியில்லாத் தொடர்பு தேவைப்படுகிறது, உதாரணத்திற்கு, நாம் பார்த்த அணிக் கருவிகள் பெரும்பாலும், நகரும் மனிதர்கள் பயன்படுத்துவதால், கம்பித் தொடர்பு ஒரு இம்சையாகக் கருதப்படும். அதே போல, சாலைப் போக்குவரத்தைக் கணிக்கும் ஒரு அமைப்பில், பல உணர்விகள் கம்பித் தொடர்புடன் உருவாக்கப்பட்டால், மிகவும் விரும்பப்படாத ஒன்றாக மாறிவிடக் கூடும் (இதற்காகச் சாலைகளைத் தோண்ட வேண்டும்). காரில் பயன்படுத்தும் உணர்விகளும் பெரும்பாலும் கம்பியில்லாமல் இருந்தாலே, அது ஓட்டுனருக்குத் தோதாக இருக்கும்.

ஆனால், கம்பியில்லாத் தொடர்பில் ஏராளமான முறைகள் மற்றும் பயன்பாட்டுக் கருத்து வேறுபாடுகள் உருவாகிவிட்டது. உணர்விக்கும் செயலிக்கும் உள்ள தூரத்திற்கேற்ப, பல தொழில்நுட்பங்கள் இன்று உள்ளது. இணைப்பின் வேகத் தேவையும், தொடர்பு முறையைத் தேர்வு செய்ய உதவுகிறது

  • சில கம்பியில்லா உணர்விகள் 10 செ.மீ. அளவிற்குள் செயலியுடன் தொடர்பு கொண்டால் போதும். உதாரணம், இன்றைய நுண்ணறிப்பேசிகளில் உள்ள பக்க தள தொடர்பு முறைகள் (Near field communication – NFC)
  • RFID ஒரு கம்பியில்லா உணர்வித் தொழில்நுட்பம். பெரிய கிடங்குகள், மற்றும் சில்லரை வியாபாரங்களில் இந்த முறை 3 மீட்டர், அதாவது ஏறக்குறைய 10 அடி, தொலைவிற்குள் உள்ள செயலியுடன் தொடர்பு கொள்ளப் பயன்படுத்தப்படுகிறது
  • முப்பது அடித் தொலைவிற்குள் உள்ள செயலியுடன் தொடர்பு கொள்ள புளூடூத் முறைகள் சரிப்படும். பல வகை அணிக் கருவிகள் மற்றும் காரில் பயன்படும் உணர்விகள் இம்முறையையே தேர்ந்தெடுக்கின்றன
  • சில உணர்விகள் கம்பியில்லாத் தொலைப்பேசிகள் பயன்படுத்தும் (cordless phones) முறையை 10 முதல் 70 மீட்டர் வரை உள்ள செயலியுடன் தொடர்பு கொள்ளப் பயன்படுத்துகிறது
  • நமக்கெல்லாம் தெரிந்த வை.ஃபை. (WiFi) முறை, இன்னொரு கம்பியில்லா இணைப்பு முறை. எங்கு முடியுமோ (தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், வீடுகள்), அங்கு இந்த முறைகள் 4 முதல் 20 மீட்டர் வரைப் பயன்படும்

IOT part10-pic2

இவ்வளவுதானா விஷயம் என்று தோன்றலாம். ஒவ்வொரு கம்பியில்லா முறைகளிலும் பல நிறை/குறைபாடுகள் உள்ளன. மேலே பட்டியலிட்ட முறைகளின் மிகப் பெரிய குறை, இவற்றை இயக்கத் தேவையான மின்சாரம். அத்துடன், இவற்றின் செயல் வேகமும் வேறுபடும். இன்னொரு முக்கியப் பிரச்னை, இம்முறைகளின் பாதுகாப்பின்மை. புதிய கருவி இணைய உலகிற்கு, மூன்று அடிப்படைத் (கம்பியில்லா இணைப்பு) தேவைகள் முக்கியம்:

  1. குறைந்த அளவில் மின்சாரப் பயன்பாடு.தேவையில்லாத பொழுது, உணர்விகள் தூங்க வேண்டும்
  2. இணையத்துடன் மற்றும் மற்ற உணர்விகளுடன் தொடர்பு, மிகப் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
  3. தேவையான பொழுது தொடர்பு கொள்ளும் திறன். அதாவது, எப்பொழுதும் இணையத்துடன் தொடர்பு அவசியமில்லை. மிக முக்கியமான விஷயம், ஒரு உணர்விகளின் கூட்டத்தில், மின்பரப்பி மற்றும் மின்வாங்கியாக ஒரு உணர்வி செயல்பட்டால் போதுமானது. இதை இன்னொரு வழியிலும் சொல்லலாம் – அதாவது, ஏதாவது ஒரு உணர்வி செயலிழந்தால், உணர்விகளின் வலைமைப்பு செயலிழக்காமல், தொடர்ந்து வேலை செய்ய வேண்டும்

நாம் இதுவரை பார்த்த தொழில்நுட்பங்களில், இந்த மூன்று விஷயத்தில் எங்கோ அடிபட்டுவிடும். உதாரணத்திற்கு, புளூடூத் முதல் மற்றும் மூன்றாம் புள்ளிகளில் மிகவும் அடிபட்டுப் போகும் தொழில்நுட்பம். ஒரு விஷயம், தவிர்க்க முடியாதது. கம்பியில்லாத் தொடர்பில், தூரத்திற்கேற்ப, நுட்பங்கள் மாறும். அத்துடன், எல்லா நுட்பங்களும் ஒரே வகையான கம்பியில்லா மின்பரப்பி/வாங்கி (wireless transceiver) தொடர்பிருக்காது. இன்றைய கருவி இணைய முயற்சிகள், மேலே சொன்ன மூன்று விஷயங்களைக் கருத்தில் கொண்டு, புதிய உத்திகளை உருவாக்கி வருகிறார்கள்.

  1. Zigbee என்ற நுட்பம், ஒரு சல்லடை வலையமைப்பு (mesh networking) கொண்ட 10 முதல் 300 மீட்டர் வரையுள்ள உணர்விகளின் கம்பியில்லாத் தொடர்பு நுட்பம். கட்டிடங்கள், தொழிற்சாலைகளில் மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. மிகவும் குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுட்பம் இது. அத்துடன், இதன் சல்லடை வலையமைப்பு, ஒரு உணர்வி செயலிழந்தாலும் வலையமைப்பு தொடர்ந்து செயல்படும் திறமை கொண்டது. உதாரணத்திற்கு, கட்டிடம் ஒன்றில் உள்ள பல்லாயிரக் கணக்கான மின் விளக்குகளில் உள்ள உணர்வி ஒன்று பழுதடைந்தால், மற்ற மின் விளக்குகள் செயலிழக்காமல் இருப்பது அவசியம்
  2. Z-wave என்பது, முப்பது அடிக்குள், குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் இன்னொரு தொழில்நுட்பம். Zigbee  -ஐ விடக் குறைந்த மின்பரப்பு வேகம் மற்றும் செயல்படும் தூரம் என்று இருந்தாலும், கட்டிடங்களின் ஒளிப் பயன்பாடுகளில் மிகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது
  3. 6LoWPAN என்பது எல்லா வகையிலும் Zigbee -யுடன் போட்டி போடும் ஒரு நுட்பம். 800 மீட்டர் வரை செயல்படக் கூடிய உணர்விகளின் கம்பியில்லா தொடர்பு நுட்பம். ஆனால், Zigbee என்பது நீண்ட காலமாக சந்தையில் இருப்பதால், இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு, பல பயன்பாடுகள் உள்ளன. நாளடைவில் இதே நிலையை 6LoWPAN –னும் அடைய வாய்ப்பிருக்கிறது.

IOT part10-pic3

இதைத் தவிர பல தொழிற்சாலை உணர்வி இணைப்பு முறைகள், ஆங்காங்கு பயனில் உள்ளது. உதாரணத்திற்கு, KNX, Wireless HART, WiMax, Weightless  போன்ற நுட்பங்கள். இவற்றைப் பற்றி இக்கட்டுரைகளில் நாம் அதிகம் அலசப் போவதில்லை.

அடுத்தக் கட்ட முயற்சிகள், இரு தொழில்நுட்பப் போராட்டம் என்ற நிலை உருவாகியுள்ளது, அது Zigbee -யா அல்லது 6LowPAN –ஆ என்ற போராட்டம். நுகர்வோர் இன்று கணினிகளில் பயனபடுத்தும் விண்டோஸ், ஆண்ட்ராய்டு மற்றும் லினிக்ஸ் போன்ற விஷயம் இது. ஒவ்வொன்றிற்கும் சில நிறை/குறைகள் இருக்கின்றன.

  1. விண்டோஸைப் போல, Zigbee சந்தையில் சில வருடங்களாகப் பயனில் இருந்தாலும், Zigbee –யின் பெரும் குறை IPv6 முறையை பின்பற்றாதது எனலாம். இன்று, இது ஒரு பெரும் குறையாக யாருக்கும் தெரிவதில்லை – ஏனென்றால், நம்மிடம் உள்ள பல கணினி பாகங்களும் IPv4 முறையிலேயே தொடர்பு வைத்துக் கொண்டு வந்துள்ளன. எதிர்காலத்தில், அதாவது இன்னும் 5 ஆண்டுகளில், இந்த நிலமை IPv6 –க்குச் சாதகமாக மாறிவிடும் என்று நம்பப்படுகிறது
  2. Zigbee முறையைக் கொண்டு (http://www.zigbee.org/) உருவாக்கப்படும் பயன்பாடுகளுக்கு, இந்த அமைப்பு, நிறைய பயன்பாடுகளை உருவாக்க உதவிகளைச் செய்து வருகிறது. அத்துடன், Zigbee –யிலிருந்து IPv4 இணையத்துடன் தொடர்பு என்பது வெகு எளிமையான முறை
  3. 6LoWPAN என்பது புதிய நுட்பம். ஆனால், IPv6 – ஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு நுட்பம். ஆனால், இணையத்துடன் இணைவது Zigbee –ஐப் போல, எளிமையானதல்ல
  4. இன்றும், Zigbee –யின் இணையத் தொடர்பு அத்தனை பாதுகாப்பான விஷயமல்ல. விஷமிகள் எளிதாக Zigbee வலையமைப்பைத் தாக்கிவிடலாம்
  5. இருந்தும், 6LoWPAN என்னும் புதிய நுட்பம், பயன்பாடுகள் அதிகமின்றித் தவிக்கிறது. அத்துடன், இதைக் கற்பதிலும் பல சிக்கல்கள் உள்ளன

ஆக, இந்த இரண்டு நுடபங்களும் எதிர்காலத்தில் புளுடூத்4 உடன் பயன்படுத்தப் படும் என்று நம்பலாம். ஆக, அடிப்படை மின்னணுவியல் பாகங்களை வைத்துப், பயனுள்ள கருவியாக இந்த நியமங்களைப் பயன்படுத்தி, ஒரு/பல உணர்வி(களை)யையும், ஒரு குட்டி செயலியுடன் இணைத்து உருவாக்க முடியும். இதற்கு, பல உப மின்னணுவியல் பாகங்களும் தேவை – உதாரணத்திற்கு, செயலிக்குத் தேவையான மெமரி, மற்றும் வெளியுலக இணைப்பிற்காக தேவையான USB, RJ45 போன்ற இணைப்பு வசதிகள்.

கருவிகளின் இணையம் என்பது கோடிக் கணக்கான  உணர்விகள், கணினி செய்லிகள் மற்றும் இவற்றை இணையத்துடன் இணைக்கும் தொடர்பியல் தொழில்நுட்பம் எல்லாம் சேர்ந்த விஷயம். அனைத்தையும் ஒரே நிறுவனம் செய்து வழங்கும் என்பது நடவாத காரியம். உணர்விகளை பல நூறு நிறுவனங்கள் தயாரிக்கிறார்கள். உதாரணத்திற்கு, நுண்ணறிப்பேசியில் உள்ள உணர்விகளை, இன்று, STMicroelectronics, LG, Samsung. Freescale, Fairchild Semiconductor, Bosch Sensortec, Knowles Electronics, InvenSense போன்றவர்கள் தயாரிக்கிறார்கள். அதே போல, மிக முக்கியமான செயலிகளை (Micro controller Units) பல நூறு நிறுவனங்கள் தயாரிக்கிறார்கள். இன்று, ARM, Freescale, Texas Instruments, Atmel, Intel and STMicroelectronics போன்றவர்கள் தயாரிக்கிறார்கள். இவற்றை இணைக்கும் வேலையை பல நூறு நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.

சரி, இதுவரை நாம் பார்த்தது என்னவோ வன்பொருள் போல அல்லவா காட்சி அளித்தது? இதில் எங்கு நிரலர்களுக்கு வேலை? நாம் விளக்கிய பகுதிகள், இந்தத் தொழில்நுட்பத்தின், கட்டுமானப் பகுதிகள். ஒவ்வொரு கருவி இணைய தொழில்நுட்பத்திலும், இத்தகைய அடிப்படைக் கட்டுமான அமைப்புகளின் அடிப்படையில் நிரலர்களுக்குத் தேவையான அமைப்புகள் உருவாக்கப் படுகிறது.

IOT part10-pic4மேலேயுள்ள படம் கணினி வலையமைப்பு  (computer networking) அறிந்தோருக்குப் புதிதல்ல, மேலே உள்ள இரு தளங்களைத் தவிர (Application, presentation) மற்ற தளங்களை Zigbee அல்லது 6LowPAN போன்ற நியமங்கள் பூர்த்தி செய்கின்றன. கடைசி இரண்டு தளமும், நிரலர்களுக்கு மிகவும் முக்கியம். பல வீடு மற்றும் கார் சம்பந்தப்பட்ட நுகர்வோர் பயன்பாடுகளில், நுண்ணறிப்பேசியில் இவ்விரண்டு தளங்களும் ஒரு பயன்பாடாக உள்ளது. ஆனால், எல்லா பயன்பாடுகளும், வெறும் நுண்ணறிப்பேசியால் கட்டுப்படுத்தப்படும் என்றாகாது. பல, பெரிய கருவி இணையப் பயன்பாடுகளுக்கு, நுண்ணறிப்பேசியைவிட சக்தி வாய்ந்த கணினி வழங்கி அல்லது மேக கணினி வழங்கித் தேவைப் படும். இத்தகைய சிக்கலான தேவைகளுக்கு மேலே காட்டியுள்ள கட்டமைப்பு சரிப்படாது. இதைப் பற்றி விவரமாக அடுத்த பகுதியில் பார்ப்போம்.

சொல்வனம் – டிசம்பர் 2015

கருவி இணையத் தொழில்நுட்பம் – கருவிகளின் இணையம் – பகுதி 10

முதலில், கருவி/உணர்வி (device/sensor) என்று உங்களை இதுவரை குழப்பியதற்கு, மன்னிக்கவும்.
கருவிக்கும் உணர்விக்கும் என்ன வித்தியாசம்?

உங்களிடம் ஒரு சாதாரணப் பாய் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். பறக்கும் மாயப்பாயெல்லாம் அல்ல. இதை எப்படி நுண்ணறிப் பாயாக மாற்றுவது?

1. முதலாக, அந்த பாயிற்கு ஒரு தனி இணைய முகவரி தேவை. அது இருந்தால்தான், மற்ற பாய்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் இந்த பாயிடம் தொடர்பு கொள்ள முடியும்

2. இணையம் மூலம் தொடர்பு கொள்ள பாயிற்கு ஒரு குட்டி ரேடியோ (ரேடியோ பற்றி விவரமாகப் பிறகு பார்ப்போம்) தேவை

3. பாய் வெறும் தரையில் இருக்கிறதா, அதில் யாராவது படுத்துக் கொண்டிருக்கிறார்களா, அல்லது சுறுட்டப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்ள சில உணர்விகள் தேவை. சுறுட்டப்பட்டதை, மனிதர் ஒருவரின் எடை அதன் மேலுள்ளதை அறிய உணர்விகள் தேவை

4. நம்முடைய பாயை நமக்குத் தெரியாமல் யாராவது எடுத்துக் கொண்டு போய்விட்டால் (சுறுட்டிக் கொண்டு என்று குழப்ப மாட்டேன்), அதன் ரேடியோ மூலம் பாய் எங்கிருக்கிறது என்று சொல்லிவிடலாம்.
இப்படி, உணர்விகளுடன் சேர்ந்து ஒரு சாதாரணப் பாய், நுண்ணறிப் பாயாகியது. அது ஒரு கருவியாகிவிட்டது!

உணர்வி என்றால் என்ன என்பதை விளக்குவது எளிது. ஆனால், மின்னியலில் வழக்கமாக அனைவருக்கும் தெரிந்த உணர்விகளை விட இந்தத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் உணர்விகள், சற்று மாறுபட்டவை. ஒரு உணர்வியோடு இன்னும் கொஞ்சம் மின்னணுவியல் மூலம் அதற்கு, கணிக்கும், மின்பரப்பும் மற்றும், தேக்கும் ஆற்றல்களைச் சேர்த்தால், அது ஒரு கருவியாக மாறிவிடுகிறது.

மேலும் குழப்பி விட்டேனா?

ஆட்டத்தை ஆரம்பத்திலிருந்து பார்ப்போம். அதற்கு முன், இந்தப் பகுதியும், அடுத்த இரு பகுதிகளும், இந்தத் தொழில்நுட்பத்தை சற்று ஆழமாக அலசும் பகுதிகள்.

IOT part9-pic1

நம் எல்லோருக்கும் பரிச்சயமான துவைக்கும் எந்திரத்தைச் (washing machine) சற்று கூர்ந்து கவனிப்போம். முதலில், அதில் தண்ணீர் நிரப்பும் பொழுது, தேவையான தண்ணீர் நிரம்பிய உடன், குழாயை மூடிவிடும் ஒரு மின் உணர்வி அதில் உள்ளது, இதை ’நீர் மட்ட உணர்வி’ (water level sensor) என்கிறோம். இத்தனை நேரம் துவைத்தவுடன், தண்ணீரை வடிக்கும் மின் உணர்வி ஒன்றும் அதில் உள்ளது. இதை ‘நீர் வடிக்கும் உணர்வி’ (water drain sensor) என்கிறோம். நீர் வடிந்தவுடன், இந்த உணர்வி புதிய தண்ணீர் வடியாமல் இருக்க, தடுக்கிதழை (valve) மூடி விடுகிறது. எத்தனை நேரம் துணிகள் தோய்க்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்யும் கடிகையும் (timer) ஒரு உணர்விதான். இப்படி, பல உணர்விகள், நம்முடைய வீட்டில் உள்ள சாதாரண எந்திரங்களில் உள்ளது.

இதைப் போல அளவுகளைக் கட்டுப் படுத்தும் உணர்விகள், பல எந்திரங்களிலும் பயன்படுத்துவதற்காக, கடந்த 100 ஆண்டுகளாக, மின்னியல், மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள்.

குறிப்பாக, பல பயன்பாடுகளுக்காக, மின்னியல் வல்லுனர்கள் பலவிதமான உணர்விகளை, பல துறைகளின் தேவைகளுக்காகவும் உருவாக்கி வந்துள்ளார்கள்;

1. ஒளி உணர்விகள் (optical sensors) – கட்டிடம், தொழிற்சாலை, சுற்றுச்சூழல், சில்லறை வியாபாரம், மற்றும் மருத்துவத் துறைகளில், பயன்படும் உணர்வி. ஒளியை ஒரு டிஜிட்டல் குறிகையாக (digital signal) மாற்றுவது இதன் வேலை

2. தொடர்பு/அசைவு உணர்விகள் (contact/motion sensors) – கட்டிடம், தொழிற்சாலை, போன்ற துறைகளில், பயன்படும் உணர்வி. தொடர்பையை/அசைவை ஒரு டிஜிட்டல் குறிகையாக மாற்றுவது இதன் வேலை. சொல்லப் போனால், தொடர்பு உணர்விகள் வெறும் சாதாரண மின் விசை

3. வெப்ப உணர்விகள் (temperature sensors)- கட்டிடம், தொழிற்சாலை, சுற்றுச்சூழல், சில்லறை வியாபாரம், வீடுகள், கார்கள், மற்றும் மருத்துவத் துறைகளில், பயன்படும் உணர்வி. வெப்பத்தின் அளவை ஒரு டிஜிட்டல் குறிகையாக மாற்றுவது இதன் வேலை. நாம் ஜுரம் வந்தால் பயன்படுத்தும் தெர்மாமீட்ட்ரின் டிஜிட்டல் வடிவம். ஆனால், சில தொழில் பயன்பாடுகளில், பல நூறு டிகிரி வெப்பத்தை இவை அளக்க வேண்டும்

4. அழுத்த உணர்விகள் – (pressure sensors)- தொழிற்சாலை, சுற்றுச்சூழல், பொதுப் பயண ஊர்த்திகள், கார்கள், மற்றும் மருத்துவத் துறைகளில், பயன்படும் உணர்வி. அழுத்தத்தின் (காற்று, திரவம், வாயு) அளவை ஒரு டிஜிட்டல் குறிகையாக மாற்றுவது இதன் வேலை

5. ஒலி உணர்விகள் – (sound sensors)- தொழிற்சாலை, சுற்றுச்சூழல், பொதுப் பயண ஊர்த்திகள், கார்கள், வீடுகள், மற்றும் மருத்துவத் துறைகளில், பயன்படும் உணர்வி. ஒலியின் அளவை ஒரு டிஜிட்டல் குறிகையாக மாற்றுவது இதன் வேலை. உதாரணத்திற்கு, மைக் என்பது நாமெல்லாம் அறிந்த ஒலி உணர்வி

 

6. ரசாயன உணர்விகள் – (chemical sensors)- தொழிற்சாலை, சுற்றுச்சூழல், கார்கள், மற்றும் மருத்துவத் துறைகளில், பயன்படும் உணர்வி. ரசாயன மாற்றத்தின் (காற்று, திரவம், வாயு) அளவை ஒரு டிஜிட்டல் குறிகையாக மாற்றுவது இதன் வேலை. உதாரணத்திற்கு, ஒரு திரவத்தின் ph அளவை அளக்கும் உணர்வி, ரசாயனத் தொழிலில் மிகவும் பயந்தரும் விஷயம்

7. சுழல்காட்டி உணர்விகள் (rotation sensors or gyroscopes) – தொழிற்சாலை, சுற்றுச்சூழல், பொதுப் பயண ஊர்த்திகள், மற்றும் மருத்துவத் துறைகளில், பயன்படும் உணர்வி. சுழற்சியின் அளவை ஒரு டிஜிட்டல் குறிகையாக மாற்றுவது இதன் வேலை. இன்று நம்மிடம் உள்ள பெரும்பாலான திறன்பேசிகளில் சுழல்காட்டி உணர்விகள் உள்ளன. திறன்பேசியைத் திருப்பியவுடன், அதில் தோன்றும் புகைப்படமும் திரும்புவதற்கு இந்த் உணர்வியே காரணம்

8. காந்த உணர்விகள் – (magnetic sensors)- தொழிற்சாலை, சுற்றுச்சூழல், கார்கள், மற்றும் மருத்துவத் துறைகளில், பயன்படும் உணர்வி. காந்த சக்தியின் அளவை, ஒரு டிஜிட்டல் குறிகையாக மாற்றுவது இதன் வேலை. நம்மிடம் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளின் கதவுகளில் இவ்வகை உணர்விகள் பொறுத்தப்பட்டுள்ளது

9. ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, பிராணவாயு அளவு, எடை, (blood pressure, pulse, oxygen level, weight sensors) போன்ற பல உணர்விகள் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது

10. தொழிற்சாலைகளில், வேக அளவு, திரவங்களின் பாகுநிலை அளவு, உராய்வின் அளவு (accelerometer, viscosity, friction sensors) என்று பல்வேறு உணர்விகள் பயன்படுத்தப்பட்டுள்ளது

11. சுற்றுப்புற சூழலியலில், ஈரப்பசை, காற்றளவு, நீரில் உள்ள பிராணவாயுவின் அளவு (moisture, wind speed, dissolved oxygen water sensors) போன்றவற்றை அளக்க பல உணர்விகள் உள்ளன

மேலே பட்டியலிட்ட உணர்விகள் இன்று பயனில் இருக்கும் பல்லாயிர உணர்விகளின் ஒரு சின்ன பகுதி மட்டுமே. எல்லா உணர்விகளும் பொதுவாக ஒன்றைச் செய்கின்றன. இயற்கையின் மற்ற அளவுகளை, மின்னளவாக மாற்றுகின்றன.  (digital measurement) கணினிகள் கண்டுபிடிப்பதற்கு முன்னே, பல உணர்விகள் நம்மிடம் இருந்தன, உதாரணம், மைக். இன்றைய உணர்விகள், மின்னளவை டிஜிட்டல் முறையில் மாற்றித் தருவதால், கணினிகளுக்கு இவ்வகை உணர்விகள் அறிவிக்கும் அளவுகளை வைத்து ஒரு முடிவெடுக்க தோதாக உள்ளது.

 

ஆக, இவ்வகை உணர்விகள், புதிதல்ல. உணர்விகள் மிகச் சிற்றுருவாக்கம் (miniaturization) மற்றும் செயல்திறன் என்பது மிகவும் புதிது. அதிலும், இவற்றை, ஒரு சின்ன நெல் அளவில், மின்சுற்றுக்களோடு இணைத்து உருவாக்கும் MEMS (Micro electro mechanical systems) துறை, இந்த உணர்விகளைத் தலை கீழாக மாற்றிவிட்டன. பெட்டியளவு பந்தளவு என்றிருருந்த உணர்விகளை விடத் துல்லியமாக, விரலளவு மின்சுற்றில் அடங்கி வேலை செய்வது, இந்த உணர்விகள் துறையில் மிகப் பெரிய முன்னேற்றம்.

 

IOT part9-pic4

மேலே உள்ள படம், உங்களது, இன்றைய திறன்பேசிகளில் இருக்கும் உணர்விகளைக் காட்டுகிறது. திரைத்தடவலோ, புகைப்படம் எடுப்பதோ, அல்லது, ஜி.பி.எஸ் அலைவாங்கியாக செயல்படுவதன் முக்கிய காரணம் உணர்விகள்.

மேலே உள்ள திறன்பேசியை ஒரு உணர்வி என்பதா அல்லது கருவி என்பதா? இத்துறையின் பார்வையில் இது ஒரு பல்லுணர்வி கொண்ட ஒரு கருவி. பல்லுணர்வி சரி – இதில் பல உணர்விகள் உள்ளன. எப்படி இது திடீரென்று கருவியானது?

1. நுண்ணறிப்பேசியால், இந்த உணர்விகளின் அளவுகளை ஒரு சின்ன ரேடியோ மூலம் இணையத்துடன்
தொடர்பு கொள்ள முடியும்

2. உணர்விகளின் அளவுகளை வைத்து, முடிவெடுக்கவும் முடியும். உதாரணத்திற்கு, திறன்பேசியைத் திருப்பினால், காட்டியளிக்கப்படும் படத்தின் திசைப்போக்கும் (orientation) மாறும்
மேலே சொன்ன இரு காரணங்களால், ஒரு உணர்வியோ, பல உணர்விகளோ உடைய ஒரு அமைப்பு கருவியாகிறது. அதாவது, உணர்வியை (களை) கருவியாக்கத் தேவை:

1. முடிவெடுக்க உதவும் செயலி மற்றும் சார்ந்த மென்பொருள்
2. இணையத்துடன் இணைய ரேடியோ
3. விரல்நுணியில் அடங்கும் அளவு

 

IOT part9-pic5

ரேடியோ என்றவுடன், பண்பலை என்று நினைக்க வேண்டாம். உங்களது பழைய செல்பேசி, GPRS , 2-G, 3G போன்ற முறைகளில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள உதவியது. இன்று, LTE, 5G என்று பல முறைகளின் மூலம், பேச்சு, மற்றும், இணையத் தொடர்பை, திறன்பேசிகள் நமக்கு வழங்குகின்றன. இத்தகைய தொடர்பு முறைகள் இத்துறையில் ’ரேடியோ’ என்று சொல்லப்படுகிறது.

ஒரு வேடிக்கையான விஷயம், ஐ-ஃபோன் வெளி வந்தவுடன், வழக்கம் போல பல்லாயிரம் ஜோசியங்களைப் பலரும் எழுதித் தள்ளினார்கள். ஆனால், எவருமே, ஒரு உணர்விகளின் ஒரு புது யுகம் என்று சொல்லவில்லை. 2007 –க்கு பிறகு, உணர்விகளின் தேவை பலநூறு மடங்குகள் அதிகரித்து, இன்று இணையக் கருவிகளின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியதற்கு முக்கிய காரணம், ஐஃபோன் மற்றும் திறன்பேசிகள்.

உணர்விகளின் இன்னொரு பிரச்னை, இவற்றை இயக்கத் தேவையான மின்சாரம். திறன்பேசியின் மின்கலம், அதிலுள்ள உணர்விகளுக்கு உயிரளிக்கிறது. பல உணர்விகள், திறன்பேசிகளில் உள்ளது போல கூட்டமாக இன்னும் சில உணர்விகளோடு இருக்கப் போவதில்லை. இவை, எங்கோ ஆள் நடமாட்டமில்லாத இடங்களில் அல்லது, எவரும் அதிகம் கண்டு கொள்ளாத இடங்களில் வேலை செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மின்னேற்றம் என்று மின்சாரத்தைத் தேடி ஓட முடியாது. அத்துடன், பல கோடி கருவிகளுக்கு அன்றாட மின்னேற்றம் என்பது இயலாத காரியம். இதனால், மிகவும் குறைவான மினசாரத்தில், இவை இயங்க வேண்டும். திறன்பேசிகள் வைத்திருப்போர் புளூடூத்தை அல்லது வை.ஃபை. (Wifi) –யும் முடுக்கி விட்டால், திறன்பேசியில் சார்ஜ் வெகு வேகமாக குறைவதைப் பார்த்திருப்பீர்கள். திறன்பேசியின் ரேடியோக்கள் இவை.

IOT part9-pic6இதே தொழில்நுட்பம் கருவிகளின் இணையத்திற்கு ஒத்து வராது. அத்துடன், கருவிகள் தேவையில்லாத பொழுது, அதாவது எந்த அளவையும் அளக்காத நேரங்களில், அதற்கு மிகக் குறைவான மின்சாரமே தேவை. இதனால், கருவிகளுக்கு தேவையான புதிய வலையமைப்பு முறைகள் தேவை. புதிய இணையக் கருவிகளுக்காக, புளூடூத் 4.0, IEEE 802.15.4e, 6LoWPAN போன்ற நியமங்கள் (new wireless networking standards) உருவாகியுள்ளன. இந்த நியமங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு தேவையைப் பூர்த்தி செய்யும் முயற்சி. உதாரணத்திற்கு, புளூடூத் 4.0 மிக அருகாமை மின்பரப்புதலுக்கு இன்றைய புளூடூத்தை விடச் சிறந்தது. அதேபோல, IEEE 802.15.4e என்பது, குறைந்த மின்சாரம் தேவைப்படும் கருவிகளின் சற்று நீண்ட தொலைவு தேவைக்காக உருவாக்கப்பட்டது. 6LoWPAN என்பது, மிகவும் பாதுகாப்பான கருவி இணையத் தொடர்பிற்காக உருவாக்கப்பட்டது. இவற்றைப் பற்றி டெக்னிகலாக தெரிந்து கொள்ள விழைபவர்களுக்கு, இக்கட்டுரைத் தொடரின் இறுதியில் பல சுட்டிகளைத் தரத் திட்டமிட்டுள்ளேன். ஒன்று மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். இக்கருவிகளில் உள்ள மின்கலன்கள், 5 முதல் 10 வருடம் வரை நீடிக்க வேண்டும். பொதுவாக, பல கருவிகள் ஓரிடத்தில் நிறுவப்பட்டால், அவை அனைத்தும் இணையத்துடன் தொடர்பு கொள்ள வேண்டிய பயன்பாடுகள் மிகக் குறைவு. ஒரு கருவிக் கூட்டத்திற்கு, ஒரு அலைப்பரப்பி/வாங்கி (transceiver) இருந்தால், முக்கால்வாசி பயன்பாடுகளுக்குப் போதுமானது. அந்த அலைபரப்பும் கருவிக்கு, சூரிய மின்கலம் மூலம் சக்தி கொடுத்தால் போதும் என்பது வல்லுனர்களின் கணிப்பு. அத்துடன் இணைந்து செயல்படும் மற்ற உணர்விகள் மின்கலத்தில் இயங்கலாம்.

 

IOT part9-pic7

மிகக் குட்டியான இவை, கோடிக் கணக்கில் வருங்காலத்தில் பயன்படுத்தப்படும் என்று பார்த்தோம். திடீரென்று, பல இந்தியாக்கள் உலகுடன் இணைந்தால், உலகால் ஜனத்தொகையை சமாளிக்க முடியாது. அதுபோல, பலநூறு கோடி கருவிகள் இணையத்தில் இணைந்தால், அதன் கதி என்ன? நல்ல வேளையாக, இதைப் பற்றிய சிந்தனை, 15 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியதால், அதற்கான வழிகளை உருவாக்கியுள்ளனர். இன்றைய இணையம் அதன் எல்லையைத் தொட்டு விடக் கூட அபாயத்தில் உள்ளது. இந்த அபாயத்தில் பெரிய அபாயம், இணையத்துடன் இணையும் ஒவ்வொருவருக்கும் ஒரு இணைய முகவரித் தேவை. இன்று, பெரும்பாலும், அந்த முகவரி 4 வினையாக உள்ள IP v4 என்ற முறை. இன்று, 6 வினை இணைய முகவரிகள் சாத்தியம், அதாவது IP v6 என்ற முறை. முற்றிலும், எல்லா வலையமைப்பு மின்னணுவியல் சாதனங்களும் முழுவதும் IP v6 முறைக்கு மாறாவிட்டாலும், இன்றைய இணையம் இரு முறைகளையும் கையாளக்கூடிய ஒன்று. IP v6 முறையில், பல்லாயிரம் கோடி இணைய முகவரிகள் சாத்தியம். இதனால், பல நூறு கோடி கருவிகள் இணையத்துடன் தொடர்பு கொண்டு செய்தி அனுப்பலாம், பெறலாம். நாட்பட, அனைத்து கருவிகளும் IP v6 முறையைப் பின்பற்றத் தொடங்கிவிடும்.

ஆனால், இது மட்டுமே இத்துறையின் பிரச்னை அல்ல. புதிய கருவிகள், புதிய தேவைகள், மற்றும் புதிய பிரச்னைகளை உருவாக்க வல்லவை. அடுத்த பகுதியில் மேலும் பார்ப்போம்.

சொல்வனம் – டிசம்பர் 2015

கட்டமைப்பு உலகில் கருவிகள் – கருவிகளின் இணையம் – பகுதி 9

”என்ன சொல்றீங்க, புரியவே இல்லை”

“புதுசா எங்க வீட்ல இணைய ஃப்ரிட்ஜ் வாங்கினோம். அதுல, பொருட்கள் குறைஞ்சா உடனே சூப்பர் மார்கெட்டுக்கு செய்தி அனுப்பிடும். சூப்பர் மார்கெட் வீட்டுக்கு சாமான் எல்லாம் அனுப்பிச்சுடுவாங்க”

“அதுக்கும் எங்க வங்கிக்கும் என்ன சம்பந்தம்? இதெல்லாம் எதுக்கு எங்க கிட்ட சொல்றீங்க?”

“தெரியாத்தனமா புது பிரிட்ஜ் செய்த தவறுல, வேண்டாத பொருட்களை சூப்பர் மார்கெட் காரங்க வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. அத்தோட கிரெடிட் கார்டிலிருந்து காசையும் எடுத்துக்கிட்டாங்க”

“அதுக்கு நாங்க என்ன செய்யணும்கிறீங்க?”

“புது பிரிட்ஜ் செஞ்ச தவறை மன்னிச்சு, அந்தக் காசை திருப்பிட முடியுமா?”

”இதென்ன வம்பா போச்சு. உங்களுக்கு எங்க வங்கி கிரெடிட் கார்டு குடுத்துச்சா, இல்ல உங்க ஃப்ரிட்ஜுக்கு குடுத்துச்சா?”

“எனக்குத்தான் கொடுத்தீங்க. ஆனால், ஒரு முறை மன்னிக்க மாட்டீங்களா? புதுக் கருவி சின்னத் தப்பு செஞ்சா, பெரிய மனசு பண்ண வேண்டாமா?”

“அதெல்லாம் முடியாது. நீங்களாச்சு, உங்க ஃப்ரிட்ஜாச்சு, உங்க சூப்பர் மார்கெட்டாச்சு. எங்களை ஆளை விடுங்க”

***  ***

உலகின் ஏறக்குறைய 50% ஜனத்தொகை சிறு/பெரு நகரங்களில் உள்ளது. ஆனால், நகரங்கள் வெறும் உலகின் பரப்பளவில் 2% மட்டுமே.  2015 –ல், நகரங்களில் மட்டும் ஏறக்குறைய 120 கோடி கார்கள் உள்ளன. உலகின் 6 மனிதர்களுக்கு ஒரு கார் என்ற விகிதத்தில், இது ஒரு மிகப் பெரிய காற்று மாசுப் பிரச்னையாக மாறியுள்ளது. அத்துடன், பல வளரும் நாடுகளில், போக்குவரத்து நெரிசல் மிகப் பெரிய பொருளாதாரப் பிரச்னையாகவும் மாறியுள்ளது. இத்துடன், இது ஒரு ஒலி மாசுப் பிரச்னையாகவும் வளர்ந்து அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது.

இதைவிட இன்னும் அச்சுறுத்தும் விஷயம், நகரமயமாதல் குறையவில்லை, இன்னும் அதிக வேகத்துடனே நடந்து வருகிறது.

  • மணிக்கு 7,500 மனிதர்கள், உலகின் ஏதோ ஒரு நகரத்தில் குடிபுகவென இடம்பெயர்ந்து போய்க்கொண்டே இருக்கிறார்கள்
  • உலகின் 80% கரியமிலவாயு, நகரங்களிலிருந்து வெளியாகிறது
  • உலகின் 75% சக்தியை நகரங்கள் உறிஞ்சுகின்றன

இதனால், நகரங்களின் கட்டமைப்புகள் தாக்கு பிடிக்க முடியாமல் தவிக்கின்றன. எல்லா நகரில் வாழும்  மனிதர்களுக்கும் உள்ள பிரச்னைகள்:

  • போக்குவரத்து நெரிசல்
  • பொதுப் போக்குவரத்துடைய நம்பகத்தன்மை இல்லாமை
  • நகர அரசாங்கச் சேவைகளின் போதாமைகள்
  • சாலைகள் மற்றும் பொதுச் சொத்துக்களின் பராமரிப்பு இன்மை
  • சாலை விளக்கொளி பற்றாததும், அதிக ஒளி மாசுபடுதலும்
  • நகரத் துப்புறவு
  • நகர் வாழ் மக்கள் பாதுகாப்பு

 

IOT part8-pic1இந்தப் பிரச்னைகள், பல்லாண்டுகளாக இருப்பவை என்று சொன்னாலும், நிலமை கடந்த சில ஆண்டுகளாக மிகவும் மோசமடைந்து வருகிற ஒன்று. இணையத்தில் இணைக்கப்பட்ட கருவிகள் பல விதங்களிலும் நகரங்களை நுண்ணறி நகரங்களாக்க முடியும். இப்படிப்பட்ட முயற்சிகள் பல மேற்கத்திய நகரங்களில் சோதனை முறையில் இன்றே தொடங்கிவிட்டன. இந்தப் பழம் பிரச்னைகளுக்கு, புதிய தொழில்நுட்பம் வெகுவாக உதவும் என்று பல நகரத் தலைவர்கள் சொல்லுவதோடு நிற்காமல், செயலிலும் இறங்கியுள்ளார்கள். நகரங்களில் நுண்ணறிப்பேசிகளின் வீச்சு அதிகம் இருப்பதால், இதை ஒரு பயனுள்ள கருவியாக நகர வாழ்க்கை மேம்பாட்டிற்காக மாற்றி அமைக்கலாம் என்பது இந்த முயற்சிகளின் அடிப்படை. இந்தப் பகுதியில், இந்தத் துறையில் உள்ள பயன்பாடுகளை ஆராய்வதோடு, சில உலக நகரங்களின் முயற்சிகளையும் ஆராய்வோம்.

நுண்ணறிக் கார்கள் நிறுத்தும் இடங்கள்

நகர மையங்களில் கார்களைச் சில நேரங்களில் பயன் படுத்தக் கூடாது என்ற சிங்கப்பூர் போன்ற நகரங்கள் பல்லாண்டுகளாகச் சட்டம் வைத்துள்ளன. ஆயினும், பல மேற்கத்திய நகர மையங்களில் உள்ள மிகப் பெரிய பிரச்னை,  காரை நிறுத்த இடம் இருக்கிறதா என்று தேடும்

ஓட்டுனர்கள் மேலும்  கீழும் பயணிப்பது அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் எரிச்சலூட்டும் விஷயம். அத்துடன், தெருவோர கட்டணக் கார் நிறுத்துமிடங்கள் பல இருந்தும், இந்தப் பிரச்னை தீர்ந்ததாக இல்லை. நகரங்களுக்கு வருவாய் தரும் இந்த விஷயம் இப்படித் தலைவலியாக இருப்பது சரியாகத்தான் இல்லை.

நகர மையத்தின் ஒரு கி.மீ. சுற்றளவில் நிறுத்துமிடத்தின் வாடகை எல்ல பெரு நகரங்களிலும் அதிகம். ஆனால், 2 கி.மீ. சுற்றளவில் நிறுத்துமிடத்தின் வாடகை அவ்வளவு அதிகமில்லை. பல ஓட்டுனர்களுக்கு இத்தகைய நிறுத்துமிடங்கள் எங்கிருக்கிறது என்று தெரிவதில்லை. அத்துடன், அப்படியே அந்த நிறுத்துமிடத்தைக் கண்டுபிடித்தாலும், அங்கு காலி இடங்கள் இருப்பதில்லை.  காலை ஏழு மணிக்கெல்லாம் இப்படிப்பட்ட மலிவான நிறுத்துமிடங்கள் நிரம்பி விடுகின்றன.

பல மேற்கத்திய நகரங்களின் செல்ல ப்ராஜக்டாக இத்தகைய கார் நிறுத்துமிடங்களை நுண்ணறி நிறுத்துமிடங்களாக மாற்றும் முயற்சி.

  1. ஒவ்வொரு நிறுத்துமிடத்திலும் ஓர் உணர்வியை (எடை உணர்வி ஒன்றே இதற்குப் போதும்) நிறுவிவிட்டால், எந்த நிறுத்துமிடத்தில் கார் உள்ளது, எந்த இடத்தில் கார் இல்லை என்று எளிதாகச் சொல்லி விடலாம்.
  2. உணர்வியின் நிலையை அந்த நிறுத்துமிட கணினி இத்தனை காலி இடங்கள் உள்ளன என்று நகர அரசாங்க கணினிக்கு செய்தி அனுப்பிய வண்ணம் இருக்கும். பெரும்பாலும், இத்தகைய பயன்பாடுகளுக்குக் கம்பித் தொடர்பு தொழில்நுட்பம் போதுமானது.
  3. நகர அரசாங்க கணினி வழங்கி, தன்னுடைய இணைத்தளத்தில் இத்தனை காலி நிறுத்துமிடங்கள் இத்தனை கட்டணத்தில் உள்ளது என்று வெளியிட்டுக் கொண்டே இருக்கும்
  4. குடிமக்கள், தங்களுடைய நுண்ணறிப்பேசியில் நகர நிறுத்துமிடப் பயன்பாடு ஒன்றை நிறுவினால், எங்குக் காரை நிறுத்த காலி இடம் இருக்கிறது என்று உடன் செய்தியுடன், அவர்களுக்கு இஷ்டப்பட்ட நிறுத்துமிடத்திற்குச் சென்று காரை நிறுத்தலாம். இந்த நிலை மாறிக் கொண்டே இருக்கும். ஓட்டுனர்களும் தேவைக்கேற்ப நிறுத்துமிடத்தைத் தேர்ந்தெடுக்கலாம். லாஸ் ஏஞ்சலஸ் நகரின் மையப் பகுதியில் இந்த முறை இன்று பயன்படுத்தப்படுகிறது.
  5. நகர மையப் போக்குவரத்து நெரிசலை இது குறைப்பதுடன், நகருக்கு வருமானத்தையும் கூட்டுகிறது. மையத்திலிருந்து 2 அல்லது 3 கி.மீ, தொலைவில் உள்ள நிறுத்துமிடங்களும் பயனுக்கு வருவதால், நகருக்கு கூடுதல் வருமானம்

கீழே, லண்டனில் உள்ள இத்தகைய நுண்ணறி நிறுத்துமிட அமைப்பின் விடியோ:

பொதுப் போக்குவரத்து இணையக் கருவிகள்

இதைப் பற்றி, பொதுப் போக்குவரத்துப் பகுதியில் விரிவாகப் பார்த்தோம். பல நகரப் போக்குவரத்து அமைப்புகள், இன்று பல வித சோதனை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இவர்களின், மிகப் பெரிய குறிக்கோள்கள்:

  1. பயணிகள் எங்கிருந்தாலும், அடுத்தப் பேருந்து அல்லது ரயில் எப்பொழுது வரும் என்பதே இவர்களின் தகவல் தேவை. பெரிய நகரங்களில், போக்குவரத்து நெரிசல்களால், பல நேரங்களில் சரியான நேரத்திற்கு ஓர் இடத்தை வந்து சேர முடிவதில்லை
  2. ஜி,பி.எஸ், உதவியால், பஸ் அல்லது ரயிலின் நிலையை அறிந்து, அதன் பயண அட்டவணையை உடனுக்குடன் மாற்றி, பயணிகளின் நுண்ணறிப்பேசியில் துல்லியமாக நேரத்தை அறிவித்தல் இன்று சாத்தியம். இதற்கு, எந்த வித புதிய கருவியும் தேவையில்லை. ஓடும் பஸ் மற்றும் ரயிலில் ஜி.பி.எஸ், இருந்தால் போதுமானது
  3. யூபர் போன்ற சேவைகள் நகரங்களில் இன்று வாடகைக் கார் என்ற தொழிலையே தலைகீழாக்கி விட்டார்கள் இவர்கள் பயன்படுத்துவதெல்லாம் வெறும் ஜி.பி.எஸ், -டன் இணைந்த ஓர் இணையப் பயன்பாடுதான். பயணிகள் தங்களது நுண்ணறிப்பேசி மூலம் அருகில் உள்ள வாடகைக் காரை தங்கள் பயணத்திற்கு எளிதாக அமர்த்திக் கொள்ளலாம். பல நகர அரசாங்கங்கள் யூபருடன் தகராறு என்றிருந்தாலும், இத்தகைய சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது
  4. சற்று மாறுபட்ட இரு சேவைகளைப் பற்றி இங்கே சொல்லியாக வேண்டும். முதலாவது ஜிப்கார் (zipcar) என்ற சேவை. நகருக்குள் பல நிறுத்துமிடங்களில், சில இடங்களை இவர்கள் கட்டணம் கட்டித் தனதாக்கிக் கொள்கிறார்கள், இந்த அமைப்பில் நீங்கள் உறுப்பினர் ஆகிவிட்டால் (இதற்கு, வருடாந்திர சந்தா உண்டு), நகர மையத்திற்கு, பொதுப் போக்குவரத்தில் வந்தடைந்து, அதன் அருகில் இருக்கும் ஜிப்கார் ஒன்றை எடுத்துக் கொண்டு, உங்களது அடுத்தக் கட்ட பயணத்தைத் தொடரலாம். உங்கள் இலக்கு அருகில் இருக்கும் ஜிப்கார் நிறுத்துமிடத்தில் காரை விட்டு விட்டு உங்களது இலக்கிற்கு நீங்கள் நடையைக் கட்டலாம். நீங்கள் பயன்படுத்திய நேரத்திற்கு வாடகை மட்டும் உங்களிடமிருந்து ஜிப்கார் வசூலிக்கும். நகர மைய நிறுத்துமிட கட்டணத்தைவிட இது மிகவும் குறைவு
  5. உங்களது சட்டை, டை கசங்குவதைப் பற்றிக் கவலை இல்லையேல், இன்னொரு முறையை இன்று இணையத்தின் உதவியுடன் பல மேற்குலக நகரங்கள் அமுல்படுத்துகின்றன. இது மாறுபட்ட வாடகை சைக்கிள் முறை. உங்களிடம் ஒரு கருவி ஒன்றைக் கொடுக்கிறார்கள். இதற்கும் வருடாந்திர சந்தா வேண்டும். ஜிப்கார் போல, ஆங்காங்கே இவ்வகை சைக்கிள்கள் நகர மையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும். அரை மணி நேரப் பயணம் அல்லது ஒரு மணி நேரப் பயணம் உங்களது சந்தாவுடன் உண்டு, நகர மையத்தில், இத்தகைய சைக்கிள்களை, நகர மையவாசிகளும், பொதுப் போக்குவரத்துப் பயணிகளும் பயன்படுத்துகிறார்கள். சிகாகோ நகரில், இவ்வகை சைக்கிள் நிறுத்துமிடத்தில், குளியலறைகளும் உண்டு. உங்களது நிறுவன தலைவர், சைக்கிளில் வந்து, குளித்துவிட்டு, சூட்டை அணிந்து, காலை மீட்டிங்கிற்கு வந்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. மாறாக அவரைப் பாராட்ட வேண்டும். இந்த முறையின் ஆணிவேர், சந்தாதாரர்களிடம் உள்ள கருவி. கருவியைப் பயன்படுத்தினால்தான் சைக்கிளை விடுவிக்க முடியும். சைக்கிளை விடுவித்தால், உங்களது கருவி, ‘இதோ முருகன் சைக்கிளை 8:20 –க்கு ஏடுத்துள்ளார்’ என்று உடனே ஒரு மின்பரப்பி/வாங்கி மூலம் சொல்லிவிடும். தன்னுடைய இலக்கை அடைந்த முருகன், சைக்கிளை திருப்பியவுடன் ‘இதோ முருகன் 8:45 –க்கு சைக்கிளைத் திருப்பிவிட்டார்’ என்ற நிகழ்வு பதிப்பிக்கப்படும். 25 நிமிடப் பயணத்திற்கு கட்டணம் தனியாக எதுவுமில்லை என்ற முடிவும் உடன் எடுக்கப்படும்.

சாலைகள் மற்றும் பொது சொத்துக்களில் கருவிகள்

கருவி இணையப் பயன்பாடுகளில் சாலைகளை இரு கோணங்களிலிருந்து பார்க்க வேண்டும்.

  1. சாலைக் குறிகள் மற்றும் சாலை ஒளியமைப்பு
  2. சாலைகள் சந்திக்கும் இடத்தில் உள்ள மின் சிக்னல்கள்

நாம் உலகின் எந்த நகரத்தில் வாழ்ந்தாலும், காலை வெளிச்சம் வந்தவுடன் எரியும் மின்விளக்குகளைப் பார்த்திருப்போம். சில மின் விளக்குகள் 11 மணி வரை அணைக்கப் படுவதே இல்லை. இந்த மின்சார விரயம் வரிப் பண விரயம் என்றுதான் சொல்ல வேண்டும். குறைந்த பட்சம், விளக்குகள் பகலொளியைப் பொறுத்து தானே மின்சாரத்தைத் துண்டிக்கும் தொழில்நுட்பம் பல்லாண்டுகளாக உள்ளது. இதை ஒவ்வொரு விளக்கிலும் சேர்க்கத் தேவையில்லை. நகர விளக்குகளைக் கட்டுப்படுத்தும் மின் கட்டுப்பாடு மையத்தில் சேர்த்தாலே போதும்.  அடுத்தக் கட்ட முயற்சியாக, சில மேற்குலக நகரங்கள் அசைவு உணர்விகளை சோதித்து வருகின்றன. மனித நடமாட்டம்/கார் ஓட்டம் இல்லாத வீதிகளுக்கு ஒளி தேவையில்லை. ஆனால், நடமாட்டம் இருந்தால், உடனே விளக்குகள் உயிர்பெறும். இதனால், இரவில் செலவாகும் மின்சாரத்தின் அளவையும் குறைக்கலாம். ஆனால், நகர் ஒன்றுக்குப் பல்லாயிரம் உணர்விகள் தேவையாவதால், இன்னும் உணர்விகளின் விலை குறைய வேண்டும்.

 

IOT part8-pic5

நகர வீதிக் குறிகள் மற்றும் முக்கியச் செய்தி அறிவிப்புப் பலகை என்று ஒரு டிஜிட்டல் கம்பம் எதிர்காலத்தில் சாத்தியம்.

நகரத் துப்புரவுக் கருவிகள்

சொன்னால் நம்ப மாட்டீர்கள் – குப்பை என்பது நகரங்களின் ஒரு பெரும் பிரச்னை. அதுவும் நம்முடைய மறுபயனற்ற தூக்கி எறியும் கலாச்சாரம், இந்தப் பிரச்னையை பூதாகரமாக வளர்த்து விட்டது. இன்று சில பெரிய மேற்கத்திய நகரங்கள், தங்களுடைய குப்பையை லாரிகள் மூலம், 500 கி.மீ.  வரை அனுப்பி, பூமிக்குள் புதைக்கிறார்கள்.

எவ்வளவுதான் இதைப் பற்றிய விழிப்புணர்வை கொண்டு வர நகர அரசாங்கங்கள் முயற்சித்தாலும், இந்தப் பிரச்னை குறைந்ததாகக் தெரியவில்லை. முற்றிலும் இந்தப் பிரச்னையைக் கருவிகள் கொண்டு தீர்க்க முடியாவிட்டாலும், ஓரளவிற்கு, மறைமுகமாகக் கருவிகள் உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. மிகவும் புதிய கோண முயற்சிகள் பலவும் இத்துறையில் இருப்பது, பிரச்னையின் தீவிரம் எப்படிப்பட்டது என்பதைக் காட்டும் விஷயம்.

IOT part8-pic7முதலில் இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்ஹம் நகரம், குப்பைத் தொட்டிகளுடன் (அதுவும், குளிர்பாண அலுமினிய குவளைகளை ஏற்கும் குப்பைத் தொட்டிகள்)  சூரிய ஒளியில் இயங்கும் ஓர் இறுக்கும் எந்திரத்தைக் (compactor) குப்பைத் தொட்டியிலேயே நிறுவியுள்ளது, 150 குவளைகளையே ஏற்றுக் கொள்ளும் தொட்டிகள், 1,500 குவளைகள் வரை இறுக்கும் எந்திரத்தின் துணையால் ஏற்கிறது. நிரம்பியவுடன், அதிலுள்ள உணர்வி, செய்தி ஒன்றை அனுப்பி விடுகிறது. பத்து முறை காலி செய்ய வேண்டிய குப்பைத் தொட்டியை ஒரு முறையே காலி செய்வதால், மனித உழைப்பு விரமாவதைக் குறைக்க முடிகிறது. மேலும், காலி செய்ய வரும் வண்டியின் பெட்ரோல் செலவும் மிச்சமாகிறது.

அட்டைப் பெட்டிகள், காகிதம், கண்ணாடி போன்ற பொருட்களை உலகின் எல்லா நகரங்களும் மறுபயன்பாட்டிற்காகப் பிரித்து, ஒன்றாகச் சேகரித்து, உற்பத்தியாளர்களுக்கு விற்கின்றன. இத்தகைய மறுபயன்பாட்டுத் தொட்டிகளில் அளவு உணர்வி ஒன்றை நிறுவிவிட்டால், அத்துடன் தொடர்புடைய கணினிக்கு 90% நிரம்பும் தருணத்தில் செய்தி ஒன்றை அனுப்பி விடுகிறது. 90% நிரம்பியத் தொட்டிகளை மட்டும் காலி செய்ய லாரிகள் அனுப்பி மறு பயன்பாட்டுப் பொருட்களை எடுத்து வருவது பல விதங்களிலும் நகரங்களுக்குப் பொருளாதார உதவியாக இருக்கும். இதை ஒரு சிண்டெலூர் என்ற சிறிய நிறுவனம் செய்து காட்டியுள்ளது. இதன் விடியோ கீழே:

நகரப் பாதுகாப்புக் கருவிகள்

விடியோ கண்காணிப்பு பல ஆண்டுகளாக உலகின் பெரு நகரங்களில் நடக்கும் ஒன்று. ஒவ்வொரு கார் நிறுத்துமிடத்திலும், ஊருக்குள் உள்ள நெடுஞ்சாலைகளின் முக்கியப் பிரிவுகள், சில முக்கிய சிக்னல்கள் என்று  விடியோ காமிராக்கள் நகரவாசிகள் யாவருக்கும் பரிச்சயமான விஷயம். பெரிய நகரங்களில் நடக்கும் குற்றங்களைக் குறைக்க இவ்வகைக் காமிராக்கள் மிகவும் உதவுகின்றன. இன்று, இந்தத் தொழில்நுட்பம், அசைவு உணர்வியுடன் இணைத்து, நடமாட்டம் இருந்தால், மனிதர்களைத் தொடரும் அளவு வளர்ந்து விட்டது. இவ்வகைக் காமிராக்கள் பாதுகாப்பிற்கு மிகவும் பயன்படுகிறது. இத்துடன், இன்றைய காமிராக்கள் இரவிலும் தெளிவாகப் படம் பிடிக்கும் நுட்பம் கொண்டவை.

பல யூரோப்பிய நகரங்கள், (குறிப்பாக ஸ்பெயின், ஃப்ரான்ஸ்) காற்றில் உள்ள மாசு, தண்ணீரில் உள்ள பிராணவாயு போன்ற அளவுகளைக் கண்காணிக்க, பல உணர்விகள், கருவிகளை ஆள் நடமாட்டமில்லாத இடங்களில் நிறுவி சோதனை முறையில் நகரச் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டிற்காகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இப்படிச் சிலப் பயன்பாடுகள் உடனே சில நகரங்களில் பயனளிக்கத் தொடங்கிவிட்டன. ஆனால், பல பயன்பாடுகள் ஒரு சோதனை அளவில் உள்ளது, இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில், உணர்விகள் மற்றும் கருவிகளின் விலை குறையக் குறைய, மேலும் புதிய கருவி இணைய முயற்சிகள் கட்டமைப்பு உலகில் நிச்சயமாகப் பயனில் இருக்கும். ஏனென்றால், கட்டமைப்பு உலகில் உள்ள பிரச்னைகள் மிகப் பெரியவை. சின்ன முன்னேற்றமும் வரிப் பணத்தைச் சரியான வழியில் நகரவாசிகளுக்குப்  பயன் தருமேயானால், நகரங்கள் இதில் முதலீடு செய்யத் தயாராக உள்ளன.

சொல்வனம் – நவம்பர் 2015

 

பொதுப் போக்குவரத்துத் துறை -கருவிகளின் இணையம் – பகுதி 8

பொதுப் போக்குவரத்து என்றவுடன், நமக்குப் பேருந்து, டாக்ஸி, ரயில் போன்ற விஷயங்கள், ஞாபகத்திற்கு வரும். வட அமெரிக்கர்களுக்கு வாடகைக் காரும், விமானங்களும் உடனே மனதில் தோன்றலாம். இவை யாவும் பொதுப் போக்குவரத்து விஷயங்கள். தனியார் கார்களில் இக்கருவிகளின் இணையம் பற்றிச் சென்ற பகுதியில் அலசினோம். இந்தப் பகுதியில், பெருவாரியான வாகனங்கள் கொண்ட ஒரு அமைப்பில், இத்தகைய கருவிகளின் தாக்கம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம். இதை ஆங்கிலத்தில், fleet management  என்று அழைக்கிறார்கள்.

இத்தகைய வாகனங்களின் அமைப்புகளில், சில முக்கியமான பிரச்னைகள், தனியார் வாகனங்களிலிருந்து மாறுபட்டவை:

  1. நிறைய வாகனங்கள் இருப்பதால், எத்தனை எரிபொருள் தேவை என்பது மிக முக்கியம். 2% மிச்சம் என்பது, தனியார் வாகனங்களைக் காட்டிலும் பொது வாகன அமைப்புகளில், மிகவும் பெரிய விஷயம்
  2. தனியார் வாகனங்களைப் போல அல்லாமல், பல நாட்கள் இவ்வாகனங்கள் தொடர்ந்து செலுத்தப்படும். நாட்டின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு சரக்கு எடுத்துச் செல்லும் லாரி, ரயில், நிற்காமல் ஓடும் வாகனங்கள். இவற்றின் பாகங்கள் சரியாக தொடர்ந்து வேலை செய்வது மிக அவசியம்
  3. இத்தகைய வாகன அமைப்பில் எவ்வளவு நேரம் வண்டி ஓடுகிறதோ, அவ்வளவி லாபம். அதாவது, ஓடாத லாரியோ, பறக்காத விமானமோ, இவ்வகை வியாபாரத்தில், ஒரு பாரமாகக் கருதப்படுகிறது

 

IOT part7-pic1எப்படிக் கருவிகள்/உணர்விகள் இந்த வியாபாரத்தை முன்னேற்ற உதவும்?

  1. ஒரு ரயிலின் எஞ்சினோ அல்லது ஒரு லாரியோ, ஒவ்வொரு மைலுக்கும் பல வகை சூழ்நிலைகளைக் கடக்கிறது. இன்று, இத்தகைய சூழ்நிலைகளின் தரவு நம்மிடம் இல்லை. ஏதாவது ஒரு பாகம் வேலை செய்யாமல் நின்றாலே, என்னவாயிற்று என்று பார்க்கிறோம். இதனால், வருமுன் காக்காமல், பல நாட்கள் பழுது வேலையில் வாகனங்கள் பயனின்றிப் போகின்றன. டிஜிட்டல் உணர்விகள், ஒவ்வொரு மைலுக்கும் 10 மெகாபைட் வரை தரவுகளை (data) ஒரு மேகக் கணினி வழங்கிக்கு (cloud data server) கொடுத்த வண்ணம் இருக்கும், என்று கணிக்கப் பட்டுள்ளது
  2. உதாரணத்திற்கு, லாரியின் டயர்களில் டிஜிட்டல் வால்வுகள் சாலையின் தரத்திற்கேற்ப, எவ்வளவு தேய்மானம் அடைகிறது என்று அளந்து தொடர்ந்து தரவுகளைக் கொடுத்த வண்ணம் இருக்கும். இதை வைத்து, டயரில், ஒரு 20 சதவீதம் இருக்கும் போது, மாற்றிவிட்டால், சரக்குப் போக்குவரத்து தொடர்ந்து நடக்க வழி செய்யலாம்; மேலும், இது பாதுபாப்புக்கும் (safety) நல்லதொரு விஷயம். இத்தகைய வருமுன் பராமரிப்பு (preventive maintenance) மிக முக்கியப் பயன் தரும் விஷயம்
  3. அத்துடன், இத்தகையத் தரவுகள், ஓட்டுனர் எப்படி வாகனத்தைச் செலுத்துகிறார் என்றும் தெரிய வரும். சில வேகங்களில், சில எடை தாங்கிய லாரிகள், வழக்கத்திற்கும் அதிகமாக எரிபொருளை எரிக்கும். இன்று, ஓட்டுனர்கள் எப்படி வாகனங்களை ஓட்டுகிறர்கள் என்று பக்கத்தில் உடகார்ந்து பயணம் செய்தால்தான் தெரியவரும். ஓட்டுனர்களுக்கு எந்த வேகத்தில், பயணம் செய்தால், எத்தனை எரிபொருள் மிச்சப்படுத்தலாம் என்ற விஷயங்களை வாகனத்தின் வேகம் மற்றும் எரிபொருள் நுகரும் தரவைக் (fuel consumption data) கொண்டு பரிந்துரை செய்யலாம். ஒரு லாரியில் 50 லிட்டர் எரிபொருளைப் பயணம் ஒன்றுக்கு மிச்சப்படுத்த முடிந்தால், 1,000 லாரிகள் கொண்ட அமைப்பில், வருடத்திற்கு, எவ்வளவு எரிபொருள் செலவைக் குறைக்க முடியும் என்று கணக்கு பண்ணிப் பாருங்கள்

 

IOT part7-pic2

4. மைல் ஒவ்வொன்றுக்கும், மேகக் கணினிவயலுக்கு தரவு அனுப்ப வேண்டியதில்லை. வாகனத்தில், உள்ள கணினி, இவற்றைச் சேகரிக்கலாம். பயணம் முடிந்தவுடன், தரவுகளின் சாராம்சத்தை, மேகக் கணினி வயலுக்கு மேலும் ஆய்வு செய்ய அனுப்பி விடலாம். சில உடன் வாகன முடிவுகளை, வகன கணினியே எடுக்கலாம். உதாரணத்திற்கு, வெளியே உள்ள வெப்பத்திற்கேற்ப, உள்ளே உள்ள பொருட்களைக் குளிர்விக்கும் அளவைக் கட்டுப்படுத்தலாம்

5. குளிர்விக்கப்பட்ட பொருட்கள் (பழம், காய்கறிகள்) வண்டியில் மிக அதிக தூரம் செய்யும் பொழுது, அதனுடைய குளிர்நிலை சரியாக இல்லையேல், எடுத்து செல்லப்படும் சரக்கு பயனில்லாமல் வாடிவிடும். லாரியில் குளிர்நிலையை அளந்து, அதைச் சரிசெய்யும் உணர்விகள்/கருவிகளின் இணையம் மூலம் இந்த இழப்பை பெருவாரியாகக் குறைக்கலாம். பிரேஸில் நாட்டில் இப்படி ஒரு முயற்சியின் விடியோ இங்கே:

எப்பொழுது எந்த ரயில், விமானம், பேருந்து வரும் என்பதைப் பெரும்பாலும், நாம் இணையம் மூலம் தெரிந்து கொள்கிறோம். குறிப்பாக, விமானம் எங்கு பறந்து கொண்டிருக்கிறது, எத்தனை மணிக்கு அதன் இலக்கைச் சென்று அடையும் என்பதை வெறும் கூகிள் வைத்துத் தெரிந்து கொள்ளலாம் – காரணம், பறக்கும் விமானம் ஒவ்வொரு நொடியும் தன்னுடைய இடம், வேகம், உயரம், போன்ற முக்கிய விஷயங்களைத் தரைக்கு அனுப்பிய வண்ணம் உள்ளது. எதிர்காலத்தில், பஸ், ரயில் போன்ற பொது வாகன அமைப்புகளும் இவ்வாறு காத்திருக்கும் பயணிகளுக்கு செய்திகளை அனுப்பி, நேரத்தை மிச்சப்படுத்தும் என்பது நிச்சயம்.

 

IOT part7-pic3

இன்றைய விமானங்களில், ADS-B என்ற சுய கண்காணிப்பு தொழில்நுட்பம் நிறுவப்பட்டுள்ளது. இதனால், விமானத்தில், வேகம், உயரம் போன்ற விஷயங்கள் விண்வெளியில் பறக்கும் செயற்கைகோள் மூலம், உலகில் எந்த விமான நிலயம் மூலம் வேண்டுமானாலும் கண்காணிக்கலாம். அத்துடன், இந்தக் குறிப்பிட்ட அதிர்வெண்ணை யார் வேண்டுமானாலும் கண்காணிக்க முடியும். இதையே பல்வேறு இணைய தளங்கள் விமானத்தின் சரியான நிலையைச் சுடச்சுட வெளியிடுகின்றன.

இதைக் கருவிகளின் இணையம் என்று சொல்லலாம், சொல்லாமலும் இருக்கலாம். ஏனென்றால், கருவிகள், இந்த முக்கிய தரவுகளை நமக்கு அளித்தாலும், அது, ஒரு பாதுகாப்பிற்குப் பயன்படுவதோடு நின்று விடுகிறது.

கருவிகளின்/உணர்விகளின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. பறக்கும் விமானத்திலிருந்து பல லட்சம் பாகங்கள் உணர்விகள் மூலம் தங்களது நிலையை விமானத்தில் உள்ள ஒரு கணினியிடம் விளா வாரியாகச் சொல்லிவிடும். விமானக் கணினி, பயணம் முடிந்த பின், அதை அழகாகத் தொகுத்து, தரையில் உள்ள பராமரிப்பு அமைப்பிற்கு அனுப்பிவிடும். கீழ் இறங்கிய விமானத்திற்கான பழுது வேலைகளை, இதனால், முன்கூட்டியே அறிந்து, தகுந்த பாகங்களை உறபத்தியாளரிடமிருந்து தருவித்து, சரியான பராமரிப்பு செய்தால், விமானம் பழுது பார்த்தலுக்காக பல நாட்கள் பறக்காமல் இருக்க வேண்டியதில்லை. இதனால், விமான நிறுவனத்திற்கு லாபமும் அதிகமாகும் (பயணிகள் எப்பொழுதும் பயன் படுத்தும் விமான நிறுவனங்களில்) – கூடவே விமானப் பாதுகாப்பும் அதிகரிக்கும்

சொல்வனம் – நவம்பர் 2015

 

பொது மருத்துவம் – கருவிகளின் இணையம் – பகுதி 7

”போன வாரம் எங்க மாமா அப்படி ஒரு பெரிய கலாட்டா பண்ணிட்டார்”

”என்னாச்சு?”

”மருத்துவமனையில் சேர்ந்து, 2 நாள் சிகிச்சை முடிந்து, வீட்டுக்குத் திரும்பினார். கையோட, அவருக்கு மருத்துவமனை ஒரு நுண்ணறிப்பேசியைக் கொடுத்து, அவருடைய கட்டிலில், சில கருவிகளை இணைத்துத், தனிப்பட்ட இணைய கனெக்‌ஷன் வேற. என் பையன் அருணுக்கு அப்படி ஏதும் விளையாட்டு விஷயங்கள் வாங்கித் தரவில்லை என்று கடுப்பு வேறு”

”விஷயத்துக்கு வா”

”மாமா அந்த நுண்ணறிப்பேசியில் என்னவோ செய்ய, வீட்டில் ஆம்புலன்ஸ் வந்து காலனியே கூடிடுச்சு. மாமா, ஜாலியா சிரிக்கறாரு”

”அப்படி என்னதான் செஞ்சாராம்?”

”மயக்கத்துல இருக்கும் போது இப்படி அப்படி தடவுங்கனு ஒரு நுண்ணறிப்பேசிய குடுத்தாங்க. சரி, போரடிக்காம இருக்க என்னவோ விளையாடக் குடுக்கறாங்கன்னு விட்டுட்டேன். உனக்குத்தான் தெரியுமே, எனக்குச் சிவப்பு கலர் பிடிக்கும்னு. அந்த நுண்ணறிப்பேசியில் உள்ள பல ஸ்லைடுகளை சிகப்பு ஆகும் வரை நகர்த்தி விட்டேன். எனக்கு என்ன தெரியும், இது வலி எவ்வளவு, மூச்சு முட்டல் எவ்வளவுனு கேக்கறாங்கனு? கண்ணாடி வேற போட்டுக்கலையா…”

***

i

பொது மருத்துவத்தில், பல வகை மருத்துவ சேவைகள் இதில் அடங்கும். சில நாடுகளில் (இங்கிலாந்து, கனடா), மருத்துவ சேவைகளை, மக்களது வரிப்பணத்திலிருந்து, அரசாங்கம் வழங்குகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில், மருத்துவ சேவைகள் காப்பீடு மூலமாக (medical insurance) வழங்கப் படுகின்றன. அங்குள்ள குடிமக்கள், காப்பீடு பணம் கட்டுவதற்குத் தகுந்தவாறு, சேவைகள் வழங்கப் படுகின்றன. இந்தியா போன்ற நாடுகள், அமெரிக்க முறையை பின்பற்றத் தொடங்கிவிட்டன. இந்த இரு முறைகளிலும் உள்ள மருத்துவ சேவைப் பிரச்னைகள் என்னவோ ஒன்றுதான்.

மிக முக்கியமான மருத்துவ சேவை பிரச்னைகளில் இவை அடக்கம்:

  1. படுக்கைகள் அதிகம் இல்லாததால், நோயாளிகள், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம், வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள். வீடு திரும்பிய நோயாளிகளை மருத்துவப் பயிற்சியுடைய எவரும் பார்த்துக் கொள்ள வழியில்லை
  2. சரியான உணவு மற்றும் மருந்துகளை நோயாளிகள் உட்கொண்டார்களா என்று கண்காணிக்க வழி இல்லை
  3. சிகிச்சைக்குப் பின், சரியான உடற்பயிற்சி எடுத்துக் கொள்கிறார்களா என்றும் நோயாளிகள் கண்காணிக்கப்படுவதில்லை
  4. நோயாளிகளின் நிலை மிகவும் மோசமடைந்த பிறகே, அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகிறார்கள்

மருத்துவ சிகிச்சைக்குப் பின்,  சிகிச்சையின் பொழுது உள்ளதைப் போலவே தொடர்ந்து கவனம் இருந்தால்தான், சிகிச்சை வெற்றி பெறும். ஆயினும், இதற்கு வழியில்லாமல், இன்று, இது ஒரு மிகப் பெரிய உடல்நலப் பிரச்னை. அதிலும், வயதானவர்களைச் சரிவர கவனிப்பது, தற்போதைய மருத்துவ முறைகளில் மிகவும் கடினம்.

இன்று, வயதானவர்கள்கூட  நுண்ணறிப்பேசியை பயன்படுத்தும் முறையைப் புரிந்து கொண்டு விட்டார்கள். இதனால், இத்தகைய கருவிகளில் மருத்துவ இணையத்தின் மிக முக்கிய அங்கம், நுண்ணறிபேசி.

மேலேயுள்ள விடியோ இன்று நடக்கவல்ல ஒரு கருவி இணைய முயற்சி. இதில் உள்ள கருவிகள் மிகவும் எளிதானவை. ரத்தத்தில் உள்ள பிராணவாயுவை (blood oxygen level) அளக்கும் உணர்வி, மருந்துகளை அளந்து தரும் வழங்கி (medicine dispenser) , இணையத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய எடை எந்திரம் (smart weighing scale).

இந்தச் சிறு கருவிகளின் கூட்டம், பயிற்சி பெற்ற நர்ஸ்களுக்கு, இணையம் மூலம் நோயாளிகளின் நிலையைச் சொல்லிய வண்ணம் இருக்கின்றன. எந்த நோயாளின் நிலை மோசமடைந்தாலும், உடனே நர்ஸ், நுண்ணறிப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, சரி செய்ய முயற்சிப்பார். இல்லையேல், நோயாளியின் உறவினரைத் தொடர்பு கொண்டு, உடனே மருத்துவமனைக்கு அழைத்து வரும் ஏற்பாட்டையும் செய்ய முடியும். இத்தகைய கருவிகளின் இணையம் மூலம் சிகிச்சை மேம்படுவதால், அதிக படுக்கைகள், ஆஸ்பத்திரியில் தேவையில்லை. அத்துடன், இத்தகைய முயற்சிகளுக்கு ஆகும் செலவு என்பது, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதை விடக் குறைவானது.

இந்த முயற்சியின் இன்னொரு முகம், டாக்டர்கள் பயன்படுத்தும் கருவிகள். பெரிய மருத்துவமனைகளில் பயன்படுத்தும் காகிதப் பதிவுகளுக்கு (patient records) அளவே இல்லை. முதலில் காகிதம், பிறகு, அதையே கணினியில் டைப் செய்து முக்கிய நோயாளிகளின் மருத்துவ அளவுகள், ஸ்கான், எக்ஸ் கதிர் சுருள் போன்ற விஷயங்களையும் மேலேற்றி விடுகிறார்கள். இதனால், கணினியில் உள்ள விஷயம் முக்கியமானதாக இருந்தாலும், பழைய செய்தி போல எப்போதாவது பயன்படும் விஷயம். இத்தனைக்கும், மருத்துவமனைகளில் பயன்படுத்தும் மின்னணுவியலுக்குக் குறைச்சலே இல்லை. டாக்டர் நோயாளியை பார்க்கும் பொழுது பயன்படுத்துவது என்னவோ காகிதப் பதிவுதான்!

இன்று கலிஃபோர்னியாவில், ஒரு மருத்துவமனையில் டாக்டர்களுக்கு எல்லா மருத்துவக் குறிப்புகளும், பரிசோதனை முடிவுகளும், வில்லைக் கணினி/ நுண்ணறிப்பேசியில் வழங்கப் படுகிறது. நோயாளியின் அன்றைய நிலையும் கணினிகள் மூலம், டாக்டர்களின் வில்லைக் கணினியில் உடனுக்குடன் கிடைத்து விடுகிறது. கருவிகள்/உணர்விகள் மருத்துவமனையின் வழங்கிக் கணினிக்கு, உடனுக்குடன் அளவுகளை அனுப்பிக் கொண்டே இருக்கின்றன. இதனால், மருத்துவர்கள், காகிதத்தைத் துரத்துவதை விட்டு, நோயாளிகளைக் கவனிக்கலாம்.

இந்தப் பகுதியில் நாம் இன்றைய சாத்தியங்களைப் பார்த்தோம். இத்துறை இன்னும் குழந்தைப் பருவத்தில் உள்ளது. பல வகை புதிய உணர்விகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள் பொறியாளர்கள். வெப்பம், எடை, பிராணவாயு அளவு, நாடியளவு, ரத்த அழுத்தம், சுற்றுவட்ட அளவு போன்றவற்றிற்கு, இன்று உணர்விகள் உண்டு. ஆனால், மருத்துவத் துறையில், ஒரு நோயாளி எவ்வளவு வலியில் இருக்கிறார், எப்படி அவர் பார்வையில் அவரது நிலமை உள்ளது என்பதும் முக்கியம். இவற்றை, நுண்ணறிபேசிகளில் பயன்பாடுகள் மூலம் நோயாளிகளே தெரிவிக்கும் முறைகளும் வந்துவிட்டன.

கனடாவின், மிகவும் குளிர் (இந்த நாட்டில், எங்கும் குளிர்தான் – சில பகுதிகளில், செல்ல முடியாத அளவிற்குக் குளிர்) வாய்ந்த வடக்கு பகுதிகளுக்கு, இன்று இப்படியும் ஒரு வான்கூவர் நகரத்தில் வசிக்கும் மருத்துவர் சேவை செய்கிறார்;

கருவிகளின் இணையம், நோயாளிகளுக்கும், அவர்களைக் கவனிக்கும் மருத்துவத் துறையினருக்கும் பயன்படும் ஒரு விஷயம். இத்துடன், பயண வசதிகள் குறைந்த பகுதிகளுக்கு, இவ்வகைத் தொழில்நுட்பங்கள் மிகவும் பயன்படும். தூரம் என்பது இணையத்திற்கு ஒரு பொருட்டே இல்லை. மிகப் பெரிய மருத்துவரிடம் சிகிச்சை பெற்று பல நூறு மைல்களுக்கு அப்பால் வாழும் நோயாளிகளுக்கு வீட்டிலிருந்தபடி சிகிச்சைக்கடுத்த மீட்சியைப் (post procedure recovery) பெறலாம்.

லாபத்திற்காக இயங்கும் அமெரிக்க முறையும், அல்லது அரசாங்கத்தால் குடிமக்களுக்கு வரிப்பணத்திலிருந்து வழங்கப்படும் கனடா/இங்கிலாந்து போன்ற முறையும், இவ்வகைக் கருவி இணைய வசதிகளால் பயனடையும். நம்முடைய உதாரணங்கள் இத்தகைய இரு அமைப்புகளிலும் நோயாளிகளுக்கு உதவுவதைப் பார்த்தோம். எந்த முறையானாலும், நோயாளிகளின் பிரச்னையைத் தீர்க்க வழி செய்தால், இன்றைய அமைப்பை விட முன்னேற்றம் என்று சொல்ல வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், கருவிகள் மனித சேவையை என்றும் விலக்கி விடாது – துணை போனாலே அது சேவையின் தரத்தை உயர்த்தும்.

சொல்வனம் – அக்டோபர் 2015

அலுவலகங்களில் கருவிகள் – கருவிகளின் இணையம் – பகுதி 6

பெரும்பாலும் அலுவலகங்களில்தான், கணினி வல்லுனர்கள் வேலை செய்கிறார்கள் – இதனால், கருவிகளின் இணையம் அலுவலகங்களில் தானே முதலில் தொடங்க வேண்டும்? கேள்வி என்னவோ நியாயமானதுதான். ஆனால், அலுவலகங்கள், கட்டிடங்களில் இவ்வகைக் கருவிகளின் தாக்கம் என்னவோ மிகக் குறைவுதான். இத்தனைக்கும், உலகையே மாற்றி அமைக்கத் துடிக்கும் நிறுவனங்களின் அலுவலகங்கள் என்னவோ மிகவும் பின்தங்கித்தான் இருக்கின்றன.

அலுவலகக் கட்டிடங்களின் சக்தி தேவைகளைக் குறைத்து, அதன் செயல்திறனை உயர்த்த, பல வழிகளை, LEED (Leadership in Energy and Environmental Design) என்ற அமைப்பு, முன் வைத்து, அப்படிக் கட்டப்படும் கட்டிடங்களுக்குச், சில ஆண்டுகளாக, சான்றிதழும் வழங்கி வருகிறார்கள். இதில் முக்கியமான அளவுகளாக, இந்த அமைப்புப் பார்ப்பது:

  1. மின்சார சக்தியை வீணாக்காமல் பயன்படுத்துகிறார்களா?
  2. கட்டிடத்தை குளிர்விக்கவும், சூடாக்கவும் எவ்வளவு சக்தியைப் பயன்படுத்துகிறார்கள்?
  3. தண்ணீரை எவ்வாறு சேமித்து பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக, மழை நீரை மறுபயன்படுத்துகிறார்களா?
  4. அலுவலகப் பாதுகாப்பு அமைப்பு ,எவ்வாறு உள்ளது?
  5. மறுபயன்பாட்டுப் பொருள்களைப் (recycling) பயன்படுத்துகிறார்களா?
  6. எப்படிக் கழிவை (மக்கும், மக்காத) நகர அமைப்புகளோடு சேர்ந்து கையாளுகிறார்கள்?
  7. இதைத் தவிர கட்டிடப் பொருட்கள் சம்பந்தப்பட்ட சில தேவைகளும் உண்டு

IOT part5-pic1

சில, புதிய அலுவலகக் கட்டிடங்கள் இவ்வகைச் சான்றிதழ் பெறுவதில் பெருமை கொள்கிறார்கள். இந்தச் சான்றிதழ் பெறுவதற்காகச், சில கருவிகளை கட்டிடத்தில் நிறுவ வேண்டிய கட்டாயம், உருவாகிறது. சில கட்டிடங்கள், இவ்வகைச் சான்றிதழை, அதிக வாடகை வசூலிக்கும் ஒரு வழியாகப் பார்க்கிறார்கள். சில மேற்கத்திய நகரங்களில், இவ்வகைச் சான்றிதழ் பெற்ற கட்டிடங்களுக்குச் சில வரிச் சலுகைகளும் உண்டு.

நாம் நினைப்பதை விட, பல பெரிய அலுவலகங்களில் ஏராளமான பொருட்கள் விரயமாக்கப் படுகிறது. விரயத்தை குறைப்பதும் ஒரு முக்கியமான வேலை. எத்தகைய விரயம்?

  • காகித விரயம் (பல அச்சு எந்திரங்களை பயன்படுத்தும் பெரிய அலுவலகங்களில் இது ஒரு பெரிய பிரச்னை). இதில் பொட்டலக் காகிதமும் (packaging materials), சம்பந்தப்பட்ட பொருட்களின் விரயம்
  • தொடர்ந்து எரிவதால், பல மின் குமிழ்கள் விரயம் செய்யும் மின்சாரம்
  • தொடர்ந்து வேலை செய்வதால், கணினிகள் விரயம் செய்யும் மின்சாரம்
  • யாரும் இல்லாத அலுவலகங்களில் அநாவசிய குளிர்சாதன விரயம். குளிர் நாடுகளில், வெப்ப சக்தி விரயம்
  • தண்ணிர் விரயம். பல மாடி, பல துறைகள் கொண்ட பெரிய அலுவலகங்களில் இது மிக அதிகம்
  • உணவுப் பொருட்கள் விரயம்

இது போல சொல்லிக் கொண்டே போகலாம்.

IOT part5-pic2

இத்தனை விரயத்தையும் குறைக்க, பல வழிகளை கருவிகள்/உணர்விகள் இன்றே செய்து காட்ட வல்லவை. ஆனால் இந்தத் துறையில், இதை ஒரு தார்மீகப் பொறுப்பாக, பல அலுவலகத் தலைவர்கள் எண்ணுவதில்லை. இன்றும் மேற்குலகில் கட்டப்படும் பல புதிய கட்டடங்கள் இத்தகைய குறிக்கோளுக்காக எதையும் செய்வதில்லை. இந்த அணுகுமுறையில், கட்டிடம் கட்டும் செலவு சற்று கூடுதலாகும். ஆனால், கட்டிடப் பராமரிப்புச் செலவு மிகக் குறையும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு பெரிய கட்டிடம் கட்ட 2 முதல் 3 ஆண்டுகள் ஆகலாம். ஆனால், கட்டப்படும் கட்டிடம், குறைந்தது 60 முதல் 100 வருடம் வரைப் பயன்படும். பராமரிப்புச் செலவு 60 முதல் 100 வருடங்களுக்கு குறைப்பது மிகவும் புத்திசாலித்தனமான ஒரு தொலை நோக்கு.

கருவிகள்/உணர்விகள் எந்த வகையில் உதவும்?

  1. ஆள் நடமாட்டமில்லாத அறையில் தானாக விளக்குகள் அணைந்து விட வேண்டும். இதற்கு தேவை ஒரு சிறிய இயக்க உணர்வி (motion sensor). பத்து ஆண்டுகளாக இவ்வகை உணர்விகள் கிடைக்கின்றன
  2. மாலை அலுவலகர்கள் வீட்டிற்குக் கிளம்பிச் சென்றவுடன், விளக்குகள் தானே அணைந்து விட வேண்டும், காலையில் அவர்கள் அலுவலகத்திற்குள் வரும் பொழுது தானே எரிய வேண்டும்
  3. வெய்யில் காலத்தில், அதிக மனிதர்கள் கூடியுள்ள அறைகளில் வெப்பம் அதிகமாக இருக்கும். அந்த அறையின் வெப்பநிலை உடனே குறைக்கப்பட வேண்டும்
  4. குளியலறைகளில், தண்ணீர் கைகளை கழுவியவுடன் தானே நின்று விட வேண்டும் (மேற்குலகில் இந்த வசதி எல்லா பொது இடங்களிலும் உண்டு). இதற்குத் தேவை, ஒளி உணர்வி (photo electric sensor) தாங்கிய குழாய்கள்
  5. இன்று இயக்க உணர்விகளைத் தாண்டி, பல்புகளிலேயே உணர்விகள் வந்துவிட்டன. இவை கட்டிடக் கட்டுப்பாட்டுக் கணினியுடன் தொடர்பில் இருக்கும். எங்கே நடமாட்டம் உண்டு என்பதை கணினிக்கு உடனே தெரியப்படுத்தும்
  6. குளியலறையில் உள்ள ஒளி உணர்விகள், அதற்கு வெளியிலும் பல வேலைகளைச் செய்ய வல்லது. இவை சற்று உயர்த்தர உணர்விகள். மறு பயன்பாடுத் தொட்டிகள், அச்சடிக்கும் எந்திரங்களின் டிரேக்களில் இவற்றை நிறுவிவிட்டால், எப்பொழுது நிரம்பி வழிகிறது தொட்டி, அல்லது காலியாகிறது டிரே என்று கணினிக்கு செய்தி அனுப்ப வல்லவை இந்த வகை உணர்விகள்

மேலே உள்ள விடியோ யான்ஸி என்ற நிறுவனம் தன்னுடைய உணர்விகள் அலுவலகங்களில் எவ்வாறு உதவுகிறது என்று காட்டுகிறது.

இன்னொரு சிறிய நிறுவனம், வியாபாரக் கட்டிடங்களின் செயல்திற்னை உயர்த்துவதற்காக, பல புதிய உணர்விகளை அறிமுகப்படுத்திக் கொண்டு வருகிறது. கட்டிடங்களின், வெளிச்சம், வெப்பம், குளிர் என்று பல உணர்விகள் எவ்வாறு கட்டிடங்களுக்கு ப்யனளிக்கும் என்ற என்லைடன் (Enlighten) நிறுவன விடியோ:

https://player.vimeo.com/video/127652023

Enlighted: Lighting Is Only the Beginning from Enlighted, Inc. on Vimeo.

கட்டிடங்கள் விஷயத்தில் இன்னும் இரு முக்கிய பிரச்னைகள் – பாதுகாப்பு மற்றும் வாகன நிறுத்துமிடம். வாகன நிறுத்துமிடத்தை சமாளிப்பது வியாபாரக் கட்டிடங்களில், பெரிய விஷயம். நகரத்தில் மையப் பகுதிகளில் இருக்கும் இக்கட்டிடங்களில், இடத்தின் மதிப்பு ஏராளம். இருக்கும் இடத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது அவசியம். அடுக்கு மாடி வியாபாரக் கட்டிடங்களில், பல கீழ் தளங்கள் வாகன நிறுத்துமிடமாகப் பயன்படுத்தப் படுகிறது. எத்தனை கார்கள் நிறுத்தப் பட்டிருக்கின்றன, எத்தனை காலி இடங்கள் உள்ளன என்பதை உணர்விகள் கொண்டு எளிதாக கணித்து விடலாம். இன்று, பல கட்டிடங்களில், எத்தனை காலி நிறுத்துமிடங்கள் உள்ளன என்று பெரிதாக வெளியே காட்சியளிப்பில் காட்டுகிறார்கள். இவ்வகை உணர்விகள் இரு வகைப் பட்டவை. முதல் வகை, கட்டிடத்தின் உள்ளே/வெளியே செல்லும் பகுதியில் மட்டும் இருக்கும். மொத்தம் எத்தனை வாகனங்கள் நிறுத்த முடியும் என்பது தெரிந்த விஷயம். உதாரணத்திற்கு, 500 வாகனங்கள் ஒரு கட்டிடத்தில் நிறுத்த முடியும் என்று வைத்துக் கொள்வோம். 15 வாகனங்கள் உள்ளே போனால், 485 காலி இடங்கள் இருக்கும், 4 வாகனங்கள் வெளியே சென்றால், 489 காலி இடங்கள் இருக்கும், எந்த தளத்தில் இந்த காலி இடங்கள் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு நிறுத்துமிடத்திலும் ஒரு உணர்வி இருந்தால், எந்த தளம், எந்த நிறுத்துமிடம் காலியாக இருக்கிறது என்று துல்லியமாகச் சொல்லிவிட முடியும்.

IOT part5-pic3

பாதுகாப்புக்கு இன்று விடியோ காமிராக்கள், ஏறக்குறைய அனைத்து வணிகக் கட்டிடங்களிலும் வந்து விட்டன. இத்துடன், சின்ன செயலிகள் தாங்கிய கார்டுகள், விழி வருடிகள் என்று டிஜிட்டல் முறைகள் வந்துவிட்டன. இந்த உணர்விகள், கட்டிடத்தில் யார், எந்த நேரத்தில், எந்தப் பகுதியில் இருக்கிறார்கள் என்று எளிதாகச் செல்லிவிட முடியும்.

இந்தக் கட்டிட விஷயத்தில், பழைய வியாபாரக் கட்டிடங்களும் ஓரளவு பயன்பெற வாய்ப்புண்டு. குறிப்பாக, உணர்வி தாங்கிய மின் குமிழ்கள் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கும். கணினியோடு தொடர்பு இருந்தால், இந்தக் கருவிகளால் மேலும் பயன் பெற வாய்ப்புண்டு. அப்படித் தொடர்பு இல்லாவிட்டாலும், ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் தானால் அணைந்து கொள்ளும் திறமை கொண்டது. இந்தத் துறை, மற்ற கருவி இணையத் துறைகளை விட மெதுவாகவே முன்னேறும் என்று எதிர்பார்க்கலாம். வியாபாரக் கட்டிடங்கள் கட்டுவதற்கு ஏராளமான கட்டுப்பாடுகள், பர்மிட்டுகள் தேவை. மேலும், பழைய கட்டிடங்களில் வாடகை பெரிதாக கிடைக்கும் என்பதால், இவற்றின் சொந்தக்காரர்கள் உடனே மாற மாட்டார்கள். ஓரளவிற்கு, இது சட்டத்தால் மாற்ற முடியும். இதை நாம் மேலும், கட்டுமான கருவி இணையம் பகுதியில் பார்ப்போம்.

IOT part5-pic4கட்டிடங்களில் இன்றைய கருவி இணைய துறையில் அதிகம் பயன்படுத்தப் படும் தொழில்நுட்பம், Zigbee என்ற நுட்பம். மிகக் குறைந்த மின்சாரமே தேவையான உணர்விகள் இதில் அடக்கம். மின்விளக்கு, வெப்பம், நகர்வு, மற்றும் சில உணர்விகள் இதில் அடக்கம். LEED இயக்கத்திற்கு மேலும் உதவ, Zigbee Green என்ற மிகக் குறைவான மின்சாரம் பயன்படுத்தும் நியமம் ஒன்று உருவாகியுள்ளது. சில உணர்விகள் மின்கலம் இல்லாமலே வேலை செய்யும் திறம் படைத்தவை. உதாரணத்திற்கு, ஒரு குப்பைக் கூடை நிரம்பி விட்டால், எச்சரிக்கும் உணர்வி காகிதங்களின் அசைவையே சக்தியாக பயன்படுத்திக் கொள்ளலாம்!

மேலே உள்ள விடியோ, இவ்வகை உணர்விகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை அழகாக விளக்குகிறது.

சொல்வனம் – அக்டோபர் 2015

அணியப்படும் கருவிகள் – கருவிகளின் இணையம் – பகுதி 5

“எப்படி இருக்கீங்க கண்ணன்?”

“எடைதான் குறையவே மாடேங்குது, டாக்டர்”

“நான் சொன்ன மாதிரி உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி செய்யறீங்களா?”

”அதுல நான் ரொம்பக் குறிக்கோளோட இருக்கேன் டாக்டர். இந்த ஆறு மாசமா, தவறாம, இனிப்பே சாப்பிடறதில்லை. அதோடு, ஒரு நாள் விடாம உடற்பயிற்சி, டாக்டர்”

“ஏன் உங்க எடை அப்படியே இருக்குன்னு நெனைக்கிறீங்க?”

”நீங்கதான் சொல்லணும் டாக்டர்”

“கடந்த 150 நாட்களில், நீங்க, 12 முறைதான் உடற்பயிற்சி செய்தீங்க”

‘உங்களுக்கு எப்படித் தெரியும் டாக்டர்? சும்மா போட்டுத் தாக்காதீங்க”

”6 மாசம் முன்னாடி ஃபிட்பிட் –னு ஒரு கருவி வாங்கினீங்களா?”

“ஆமாம் டாக்டர்”

”ஊங்களது முகநூல் சுவற்றில் ஃபிட்பிட் தகவல் முழுசும் மேலேத்தி அலட்டி இருக்கிறீங்களே. அதுல, வெறும் 12 நாள்தான் உடற்பயிற்சி செஞ்சிருக்கீங்க”

”டாக்டர், வாங்கி 1 மாசத்திலேயே, அது தொலைஞ்சு போச்சு”

“சும்மா, கதை கட்டாதீங்க கண்ணன். கடைசி டேடா, போன வாரம் வெள்ளிக் கிழமை பார்த்ததாக ஞாபகம். இனிமேல், வாரத்துக்கு ரெண்டு முறை எனக்கு உங்க ஃபிட்பிட் நடவடிக்கைகளை அனுப்பிச்சுடுங்க!”

oOo

 

ioT_Wearable_Watch1

அணியப்படும் கருவிகளே, கருவிகளின் இணையம் என்ற தொழில்நுட்பத்தின் மிகப் பெரிய தூதுவனாக இன்று உள்ளது. அத்துடன், நிறையப் பணம் இருப்பவர்கள், அலட்டிக் கொள்ள உதவும் ஒரு நுட்பம் என்ற கருத்தையும் பரவ உதவியதும், இக்கருவிகளே. ஆனால், குழந்தைத்தனத்தைத் தாண்டி, இக்கருவிகள் மிகவும் முக்கியமான விஷயங்களுக்குப் பயன்படும்படி பல புதிய நிறுவனங்கள் செயல்படத் தொடங்கிவிட்டன. வெகு விரைவில், ஆரம்பக் கருத்துக்கள் மறையும் என்று நம்பலாம். கருவிகளின் இணையம் பற்றிப் பலருக்கும் புரிய வைத்த தொழில்நுட்பம் என்பதால், இது மிகவும் முக்கியமான ஒரு முன்னேற்றம். கருவிகளின் இணையத்தை முன்னேற்றத் துடிப்பவர்கள், அதன் விமர்சகர்கள் அனைவரும், ஆரம்பத்தில், ஏதாவது அணியப்படும் கருவியைக் கண்டே, அப்படி மாறியவர்கள். நீங்களும் இந்தப் பகுதியைப் படித்து, அதன் ஆதரவாளர் அல்லது எதிர்ப்பாளராகலாம்! இன்னொரு முக்கிய விஷயம் – அணியப்படும் கருவிகளின் மிகப் பெரிய வாடிக்கையாளர்கள் 1980 –க்கு பிறந்த Millennials என்று அழைக்கப்படும் புதிய தலைமுறையினர்.

இந்தத் தொழில்நுட்பத்தின் பயன்களைச் கீழ்கண்டவாராகப் பிரிக்கலாம்:

  1. ஜாலியாக அலட்டிக் கொள்ள உதவும் அணிக் கருவிகள்
  2. உடல்நிலைத் தகுதியை (physical fitness) அளக்கும் அணிக் கருவிகள்
  3. விளையாட்டில் உயர்வுபெற உதவும் அணிக் கருவிகள்
  4. தொழில்களில் வேலைக்குப் பயன்படும் அணிக் கருவிகள்
  5. நோயாளிகளுக்குப் பயன் படும் அணிக் கருவிகள்
  6. உடல் ஊனமுற்றோருக்கு உதவும் அணிக் கருவிகள்

இன்று ஆப்பிள் கடிகாரம் இவ்வகை அணிக் கருவிகளின் ராஜா என்று பலராலும் பரவலாக நம்பப்பட்டாலும், பெபிள் என்ற நிறுவனம் எவ்வாறு இந்தத் துறையில் பல்லாண்டுகளாகத் தொழில்நுட்பத்தை முன்னேற்றி வந்துள்ளது என்பதையும் இக்கட்டுரையில் பார்ப்போம்.

ஜாலியாக அலட்டிக் கொள்ள உதவும் அணிக் கருவிகள்

 

IoT_iwatch_Android_Wear_2

ஆப்பிள் கடிகாரம் வெளிவரப்போகிறது என்ற அரசல் புரசலான செய்திகள் வரும்போதே, பெபிள் கடிகாரங்கள் சந்தையில் முன்னோடியாக இருந்தது. இன்று ஏராளமான நிறுவனங்கள் இவ்வகைக் கடிகாரங்களைத் தயாரித்துச் சந்தைக்குக் கொண்டு வரத் தொடங்கிவிட்டன. பல மாடல்கள் கொண்ட, இவ்வகைக் கடிகாரங்கள், சில வேலைகளை எளிதாக்குகிறது:

  • உங்களது திறன்பேசியில் வரும் குறுஞ்செய்திகளை (text messages) கடிகாரத்திலேயே பார்க்கலாம் (தமிழில் அல்ல). சின்னச் செய்திகளை உங்கள் கடிகாரத்திடம் சொல்லிவிடலாம் – ஆம், அதில் ஒரு குட்டி ஒலிவாங்கியும் உண்டு!
  • உங்களது அடுத்தச் சந்திப்பு அல்லது திட்டம் பற்றிய அறிவிப்பை திறன்பேசியிலிருந்து பெற்றுக்கொண்டு, உங்கள் கடிகாரம் அறிவிக்கும்
  • கிரிக்கெட் மாட்சின் தற்போதைய நிலவரங்களை உடனுக்குடன் கைகடிகாரத்தில் நொடிப்பொழுதில் தெரிந்து கொள்ளலாம்
  • அடுத்தது மழையா வெய்யிலா என்ற வானிலை அறிக்கைகளையும், இடி மின்னல் எச்சரிக்கைகளையும்  உங்களுடைய கடிகாரத்தை மணிக்கட்டில் பார்த்தாலே தெரிந்துவிடும்
  • உங்களுக்குப் பிடித்த சினிமா தியேட்டரில் அடுத்தக் காட்சிகளில் என்ன படம் என்று கடிகாரம் சொல்லும்
  • அட, மறந்து விட்டேனே – நேரமும், தேதியும் காட்டாவிட்டால் அது என்ன கடிகாரம்?
  • உங்களது பாட்டுப்பெட்டியில், என்ன சங்கீதம் ஒலிக்க வேண்டும் என்பதை உங்களது கடிகாரத்திலிருந்தே நீங்கள் முடிவு செய்யலாம்
  • கடிகாரத்தின் முகப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை மென்பொருள் மூலம் மாற்றி அமைக்கலாம். வாரம் ஒரு முகப்பு, அல்லது நாள் ஒரு முகப்பு என்று அலட்டித் தள்ளலாம்

இவை அனைத்தையும் இன்றைய ஆப்பிள் கடிகாரமும் செய்கிறது. கடிகாரங்கள் இவற்றை மட்டும் செய்யாமல், இன்று உடல்நிலைத் தகுதியையும் (physical fitness) அளக்க ஆரம்பித்து விட்டன.

இந்தப் பகுதியில் இன்னும் இரு அலட்டல் சமாச்சாரங்களைப் பார்ப்போம். முதலாவது, எங்குப் பயணித்தாலும், விடியோ என்று அணிந்து கொள்ளும் படப்பதிவுக் கருவி. காலையில் இட்லி சாப்பிட்டதை, டிவிட்டரில் அலட்டிக் கொள்ளும் மனிதர்களுக்குத் தகுந்த ஒரு கருவி. எங்கு வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம். இதோ மதுரைக்கு பஸ்ஸில் பயணம் என்று முழுப் பயணத்தையும் விடியோவில் எடுத்து, அதையே முகநூலில் மேலேற்றலாம்!

Kids_IoT_watch_Mom_3

 

சற்று பயனுள்ள அலட்டல் என்ற வகையைச் சேர்ந்தது மைஃப்ளிப் என்ற கருவி. சிறு குழந்தைகள் பள்ளி சென்று தொலைந்து விடக் கூடாதே என்று கவலைப் படும் பணக்கார குடும்பங்களுக்கு ஜி,பி.எஸ், குறுஞ்செய்தி என்று அனைத்தும் தாங்கியது மைஃப்ளிப்.

குழந்தை எங்கிருக்கிறது என்று ஜி,பி.எஸ். காட்டிவிடும். மேலும், ஐந்து குறிப்பிட்ட நபர்களுடன் மட்டுமே தொடர்பு கொள்ளும் குட்டி கடிகாரம் இது. பெற்றோருக்குக் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியும் உண்டு (உதாரணமாக, இவ்வகை கடிகாரம் அணிந்த சிறுவர்களுக்கு, ”மாலை பள்ளி முடிந்தவுடன், 3:50 –க்கு, அம்மா வடக்கு கேட் முன் இருப்பேன்” என்று செய்தி அனுப்பலாம் ).

இதுபோன்ற கருவிகள் பல பின்விளைவுகளை இன்னும் நுகர்வோர்கள் முழுவதும் புரிந்து கொள்ளவில்லை. இவ்வகைக் கருவிகளால், அலட்டிக் கொள்ள முடிந்தாலும், பல அபாயங்களும் கூடவே வருகிறது.

  1. பாதுகாப்பிற்காக அணிவிக்கப்பட்ட இக்கருவிகளை இணைய விஷமிகள் ஊடுருவி, பிள்ளைகளின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்காலாம்
  2. படம் பதிவு செய்யும் கருவிகள், சுற்றியுள்ளவரின் அனுமதியில்லாமலே படம் பிடிப்பது, சட்டத்துக்குப் புறமானது. மேலும், இவ்வகைக் கருவிகள் பொதுவிடத்தில் படமெடுத்தாலும் அந்தரங்க மீறல் விஷயங்களே
  3. மேலே நாம் பார்த்த கடிகாரங்கள் இரு கட்சிகளாகச் செயல்படுகின்றன. ஆப்பிள் உலகம் மற்றும் ஆண்ட்ராய்டு உலகம். ஒன்றில் வேலை செய்தால், இன்னொன்றில் வேலை செய்யாது. கூகிள் சென்ற வாரம், ஆண்ட்ராய்டு கடிகாரங்கள் ஐஃபோனுடன் வேலை செய்யும் என்று அறிவித்தது ஒரு நல்ல முன்னேற்றம். ஆப்பிள் இன்னும் முரண் பிடித்துக் கொண்டிருக்கிறது

உடல்நிலைத் தகுதியை (physical fitness) அளக்கும் அணிக் கருவிகள்

 

Healthcare_ioT_Internet_Of_Things_track_fitbit_4ஒன்றல்ல, இரண்டல்ல, பல வகையான அணிக் கருவிகள் இன்று இளைய வயதினரைக் கவர அணி வகுக்கின்றன! பெரும்பாலும், இவை கையில், காலில் அல்லது கழுத்தில் அணியும் சிறு கருவிகள். இவற்றை அணிந்து கொண்டால், இக்கருவிகள் என்ன செய்யும்?

  • மணிக்கட்டில் அணியும் இக்கருவிகள், பெரும்பாலும், எத்தனைப் படிகள் (step count) நடந்து இருக்கிறீர்கள் என்று சொல்லும் – அதுவும், இன்று, இவ்வாரம், இம்மாதம் என்று கணக்கு வைத்துக் கொண்டு காட்டும். அதையே உங்களது திறன்பேசிக்கு அனுப்பிவிடும்
  • எத்தனை தூரம் ஓடினீர்கள், எத்தனை வெப்ப அளவுகள் (கலோரிகள்) செலவழித்தீர்கள் என்று பல விஷயங்களை நாள், வாரம், மாதம் என்று கணக்கு வைத்து அழகாக புரியும்படி திறன்பேசியில் காட்டிவிடும். சிலருக்கு இது ஒரு நல்ல உடற்பயிற்சி உந்துதலைக் கொடுக்கிறது. சென்ற வார நடை/ஓட்டத்தை விட இவ்வாரம் குறைவாக உள்ளதே என்று சென்ற வார அளவை அடைய இது ஒரு தூண்டுகோலாக அமைய வழி வகுக்கிறது. நம் மனதைப் போல, கருவி பொய் சொல்லாது. வளர்ச்சியோ, வீழ்ச்சியோ சரியான அளவுகள் சம்பந்தப்பட்டது
  • எத்தனை மணி நேரம் உறங்கினீர்கள் என்றும் கணக்கு வைத்துக் கொள்ளும். நாள்தோறும், சரியான அளவு உறக்கம் என்பது ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது. பொதுவாக, எத்தனை மணி நேரம் உறங்கினோம் என்பது நமக்கு ஒரு குத்து மதிப்பாகத் தான் தெரியும். எழுந்தவுடன் சற்று சோர்வாக இருந்தால், சரியாகத் தூங்கவில்லை என்று அர்த்தமாகாது. உங்களது அசைவுகளை வைத்து, கருவி, உங்களது தூக்க அளவை கணித்து விடுகிறது
  • பொதுவாக, இவ்வகைக் கருவிகளைப் பயன்படுத்துபவர்கள், இரு விஷயங்களைப் பின்பற்றுகிறார்கள். முதல் வகை, ஒரு குறிக்கோளை மனதில் வைத்து உடற்பயிற்சி செய்பவர்கள். இவர்கள் ஒரு நாளைக்கு பத்து மைல் நடக்க வேண்டும், முப்பது மைல் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற ஒரு இலக்கை வைத்துக் கொண்டு, மெதுவாக, அந்தக் இலக்கை அடைய, இக்கருவிகள் உதவுகின்றன. இரண்டாம் வகை, நண்பர்களுடன் சமூக வலைதளங்களில் போட்டி மனப்பான்மையோடு, இத்தனை கலோரிகள் செலவழித்தேன், இத்தனை தூரம் ஓடினேன் என்று அலட்டிக் கொண்டு, சில காலம் தள்ளுபவர்கள். இரு சாராருக்கும் இவ்வகைக் கருவிகள் வழி வகுக்கின்றன

மேலேயுள்ள விடியோ, இவ்வகைக் கருவிகளை விமர்சிக்கிறது. பல கருவிகள் சந்தையில் இருப்பதால், ஏராளமான குழப்பம் இருப்பது உண்மை. 2015 நிலவரப்படி, இரண்டு உடல்நிலைத் தகுதியை அளக்கும் அணிக் கருவிகள், பற்றிய ஒரு ஒப்பிடல், கீழே;

அம்சம் ஃபிட்பிட் ஃளெக்ஸ்
ஜாபோன் அப்24
விலை $79 $48
பட்டைக் குறியீடு வருடி இல்லை உண்டு
நிறுத்தல் கடிகாரம் இல்லை உண்டு
நடவடிக்கை அறிக்கை உண்டு உண்டு
தூக்க அறிக்கை உண்டு உண்டு
கலோரி  அளவு இல்லை உண்டு
மனநிலை (மூட்) இல்லை உண்டு
மின்கல நாட்கள் (ஒரு மின்னேற்றத்தில்) ஐந்து நாட்கள் ஏழு நாட்கள்
மின்னேற்ற நேரம் இரண்டு மணி நேரம் ஒரு மணி 20 நிமிடங்கள்
எல்.ஈ.டி. காட்சியளிப்பு உண்டு உண்டு
தண்ணிர் எதிர்ப்புத் தன்மை உண்டு உண்டு
திறன்பேசித் தொடர்பு புளூடூத் 4.0 புளூடூத் 4.0
USB மூலமாக கணினியுடன் செய்தி பரிமாற்றம் எளிமையாக உண்டு இல்லை
கணினி மற்றும் திறன்பேசி களுடன் உறவாடும் திறமை விண்டோஸ், விண்டோஸ் திறன்பேசி, ஐ.ஓ.எஸ், ஆண்ட்ராய்டு ஐ.ஓ.எஸ், ஆண்ட்ராய்டு

 

மிகவும் எளிமையாக இவ்வகைக் கருவிகளை சாதாரணர்களும் பயன்படுத்துமாறு, புதிய முயற்சிகள் சந்தைக்கு வந்தபடியே இருக்கின்றன. இந்த வகையில், அதிகம் பெரிதாக எதுவுமே காட்டாமல், தேவையான அனைத்தையும் திறன்பேசிக்கு எளிதாக மாற்றிவிடும் கருவிகளும் உண்டு. இவ்வகைக் கருவிகள், மற்றக் கருவிகளைப் போல எல்லாம் செய்யவல்லது. ஆனால், சிலருக்கு இவ்வகைக் கருவிகளை, கழுத்தில், காலில், கையில் அணிய அதிக பந்தா இல்லாமல் இருப்பதும் பிடிக்கிறது.

இப்படி, பல நிறுவனங்கள் இந்தத் துறையில் போட்டி போட்டுக் கொண்டு இயங்கத் தொடங்கிவிட்டன. முக்கியமான வித்தியாசம், கருவிகளுடன் வரும் திறன்பேசி மென்பொருளைப் பொறுத்தது.

விளையாட்டில் உயர்வுபெற உதவும் அணிக் கருவிகள்

 

IoT_Internet_of_Sports_5

இந்தப் பகுதியில் நாம் அலசப்போகும் கருவிகளுக்கும், உடல்நிலைத் தகுதி (physical fitness) கருவிகளுக்கும் அதிகம் இல்லாதது போலத் தோன்றினாலும், இவை சற்று மாறுபட்டவை. இவற்றின் குறிக்கோள், ஒரு விளையாட்டு வீரரின் செயல்திறனைக் கூட்டுவது. இவ்வகைக் கருவிகள் பயிற்சியில் மிகவும் பயனளிக்கக் கூடியவை.

  1. முதல் வகை, கண்களில் கண்ணாடி போல அணிந்து கொண்டு ஓட்டப் பயிற்சி, மற்றும் பனிச்சறுக்கல் (alpine skiing), போன்ற விளையாட்டுகளில் தேர்ச்சிபெற உதவும் கருவி. இவை வேகம், நேரம், தூரம், பனிச்சறுக்கலில் உயரம், சரிவின் அளவு போன்றவற்றைக் காட்டுவதுடன், ஒவ்வொரு முயற்சியின் அளவுகளையும், திறன்பேசிக்கு அனுப்பி விடுகிறது. திறன்பேசியில் அழகான படங்களுடன் உங்களுடைய முன்னேற்றத்தையோ/ பின்னேற்றத்தையோ நாள், வாரம், மாதம் என்று படம் வரைந்து காட்டிவிடுகிறது
  2. பலவகை விளையாட்டுகளுக்குத் தகுந்தவாறு, கருவிகள் வந்துவிட்டன. டென்னிஸ்ஸுக்கு, பேஸ்பால், கால்ஃப் போன்ற விளையாட்டுக்களுக்கு மட்டையில், அல்லது பந்தை அடிக்கும் குச்சி அல்லது சுத்தியலுடன் (racquet, bat, strike, hammer) இணைக்கும் கருவிகள் இவை. புளூடூத் மூலம், விளையாட்டு வீரரின் செயல்திறன் அளவுகளை திறன்பேசிக்கு அனுப்பி விடுகிறது. இந்த விஷயங்களை வைத்து, அந்த வீரர் தொடர்ந்து தன் பயிற்சியின் இலக்கை அடைய எளிதாக்க உதவும் கருவிகள் இவை
  3. ஒட்டப் பந்தய வீரர்களுக்குப் பயிற்சியில் மிகவும் உதவக்கூடிய கருவிகள் அவர்களுடையக் காலுறைகளில் அணிபவை. ஒற்றைக் காலிலோ, இரண்டு கால்களிலோ, இவ்வகைக் கருவிகளை அணியலாம். எந்தக் காலில் அழுத்தம் அதிகம், பின்னங்கால்களை எவ்வளவு பயன் படுத்துகிறார்கள், முன்னங்கால்களை இரு புறமும் (இடது, வலது) சரியாக பயன்படுத்துகிறார்களா என்று அத்தனை தரவுகளையும் படிப்படியாக இக்கருவிகள் பதிவு செய்து, திறன்பேசிக்கு அனுப்பி விடுகிறது.
  4. இன்னொரு முக்கியமான விளையாட்டு விஷயம், வீரர்களுக்கு விளையாடும் பொழுது ஏற்படும் காயங்கள். காயம் படும் பொழுதைக் காட்டிலும், சில ஆண்டுகளுக்குப் பின், இத்தகைய காயங்களின் விளைவுகள் மிகவும் மோசமானவை. இதைத் அணுக்க விளையாட்டுக்கள் (contact sports) என்கிறார்கள் – கால் பந்து, பனி ஹாக்கி போன்ற விளையாட்டுக்களில், வீரர்கள் மோதும் பொழுது, தலையில் ஏற்படும் காயங்கள் உடனே சிகிச்சை அளிக்கப்பட்டால், நெடுங்கால விளைவுகளைத் தடுக்கலாம். தலையில் அணியும் தொப்பிக்குள் உள்ள உணர்வி மோதலின் அளவை சரியாகக் கணித்து நடந்த சம்பவத்தைப் பதிவு செய்கிறது. அணியின் மருத்துவருக்கு, இது மிகவும் பயனுள்ள சிகிச்சை நண்பன். ஏனென்னில், மனிதர்களால் இத்தகைய மோதலின் அளவைச் சரியாகச் சொல்ல முடியாது. பல மோதல்கள் கவனிக்கப்படாமலே இன்று விடப்பட்டு, வீரர், வயதாகி ஓய்வு காலத்தில் மருத்துவமனையோடு காலம் தள்ளுவதைத் தடுக்க இவ்வகைக் கருவிகள் பெரிதாக உதவலாம்

https://player.vimeo.com/video/106684794

மேலே சொன்ன உதாரணங்கள், விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியில் இக்கருவிகள் எப்படி உதவுகின்றன என்று பார்த்தோம். நாளடைவில், இத்தகையக் கருவிகள், எந்த வீரர் வெற்றி பெறுவார் என்பதைத் தீர்மானிக்கும் அளவிற்கு மிகவும் உதவும் என்று நிபுணர்கள் சொல்லுகிறார்கள். எதிர்காலத்தில், இவ்வகைக் கருவிகள் வீரர் தேர்ந்தெடுப்பிலும் பயன்படும் என்ற கருத்து நிலவுகிறது.

தொழில்களில் வேலைக்கு பயன்படும் அணிக் கருவிகள்

கூகிள் நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன் (2012) கூகிள் கிளாஸ் (Google Glass)  என்றத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இந்த நுட்பம், கண்களில் அணியும் ஒரு கண்ணாடியின் ஒரு பகுதியில் சிறு தகவல்களைக் காண்பிக்க வல்லது. அத்துடன், அதில் இணைக்கப்பட்டுள்ள காமிரா மூலம், அணிந்தவர் பார்க்கும் காட்சியை, இணையம் மூலம் உடனே இன்னொருவருக்கு அனுப்பும் திறன் படைத்தது.

இந்தத் தொழில்நுட்பத்தினால் உருவாகிய ஏராளமான நுகர்வோர் பிரச்னைகளால், கூகிள், இன்று இந்த நுட்பத்தை மேலும் மெருகேற்றி வெளியிட, வேலை செய்து கொண்டிருக்கிறது.

கூகிள் கண்ணாடி என்ன பிரச்னைகளை சந்தித்தது?

  1. அந்தரங்கம் முதல் பிரச்னை. பார்க்கும் எதையும் பதிவு செய்யலாம் என்ற பட்சத்தில், கண்ணாடி அணிபவர், பதிவு செய்ய யாரிடம் அனுமதி பெற்றார்?
  2. ஒற்றைக் கண்ணில் அணிந்து கொண்டு, நடமாடுவது ஏதோ ஒரு ரோபோ போல கட்சியளிப்பது பலருக்குப் பிடிக்கவில்லை. அத்துடன், வழக்கமாக அணியும் கண்ணாடியை விடப் பெரிதாக இருந்ததும் இன்னொரு குறை
  3. பயன்பாட்டுச் சிக்கல்கள். கூகிள் கண்ணாடி, பெட்டியிலிருந்து வெளியே எடுத்து, உடனே பயன்படுத்த முடிவதில்லை. இதற்காகப் பயிற்சி தேவைப்படுகிறது. வாங்கிய பலரும் எளிமையாக இல்லாததால், கண்ணாடியைத் திருப்பி அனுப்பி விட்டனர்
  4. அச்சம். பார்போருக்கு இவ்வகை கண்ணாடி அணிந்தவர்கள் அச்சுறுத்தலாகப் பட்டது

ஆனால், இதற்கு முழுவதும் காத்திருக்கத் தேவையில்லை என்று சில நிறுவனங்கள், இந்த நுட்பத்தைத் தங்களுடைய தொழில் தேவைகளுக்குப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. உற்பத்தி மற்றும் தயாரிப்புப் பகுதியில், நாம் பார்த்தது போல, சுரங்கத் தொழிலில், பல தொலை தூர இடங்களில் (remote areas) வேலை செய்ய நேரும். அங்கு சென்று, பல எந்திரங்களைப் பழுது மற்றும், பராமரிப்பு வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, என்னதான் பயிற்சி அளித்தாலும், அவர்களுக்கு உதவ இந்த வகை அணிக் கருவிகள் மிகவும் பயன்படுகிறது. கீழே உள்ள விடியோ, இத்த்கைய சூழலில் எவ்வாறு ஒரு நிபுணர் தொலை தூர பராமரிப்பு வேலைகளில் இந்தக் கருவி மூலம் உதவுகிறார் என்று பார்க்கலாம்.

கூகிள் கண்ணாடியின் ஒரு அருமையான பயன்பாடு, இவ்வகைத் தொழில் உலகப் பயன்பாடுகள். கூகிளின் கண்ணாடி தொழில்நுட்பத்தை தொழிலுலக தேவைக்கேற்ப மாற்றியமைத்ததில் இந்த நிறுவனம் வெற்றி கண்டுள்ளது. அனைத்து தொடர்புகளும் ஒரு நிறுவனத்திற்குள்ளே இடுப்பதால், அந்தரங்கப் பிரச்னை இல்லை. அத்துடன், தொழிலாளர்களுக்குச் சரியாக பயிற்சி அளிப்பதால், பயன்படுத்துவதில் பிரச்னையும் இல்லை. இந்தக் கருவியை தயாரிக்கும் நிறுவனத்தின் இன்னும் சில தகவல்கள் இங்கே.

wearables_Fold_Chips_Tech_IoT_6

மைக்ரோசாஃப்ட், முப்பரிமாண ஹோலோலென்ஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவுள்ளது. முப்பரிமான பிம்பங்கள் அணியப்படும் கண்ணாடி வழியே பலவித புதிய பயன்பாடுகளை உருவாக்கும் என்று மைக்ரோசாஃப்ட் சொல்லி வருகிறது. இன்னும் சில மாதங்களில், நுகர்வோர் இவ்வகைக் கண்ணாடிகளை நாடுகிறார்களா என்று தெரிந்துவிடும்.

 

இந்தக் கருவிகளின் அடுத்தக் கட்டமாக, மின்னணு பச்சைகுத்தல் (electronic tattoo) போன்ற முன்னேற்றங்கள் மூலம் பல புதிய பயன்பாடுகளை உருவாக்க முடியும். மின்னணுவியல் பொருட்கள் என்றவுடன் நமக்கு அவை வளையாத பொருட்களாகத் தோன்றும்.  ஆனால், இன்று மின்னணுவியல் சுற்றுக்கள் (bendable electronic circuits) வளையும் தன்மையைப் பெறத் தொடங்கிவிட்டன. தன்னுடைய பரப்பளவிலிருந்து 2 மடங்கு வரை வளைந்து வேலை செய்யும் திறனை இன்று ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். உடலின் உட்பகுதியில் அணிந்து கொள்ளக் கூடிய இவ்வகை கருவிகள், பல புதிய மாற்றங்களை உருவாக்க வல்லது என்கிறார்கள் நிபுணர்கள். கீழே உள்ள விடியோவில் இந்தத் தொழில்நுட்பத்தை, கூகிளின் ஆராய்ச்சி முயற்சிகளுக்குத் தலைமை வகிக்கும் பெண்மணி எளிமையாக விளக்குகிறார்.

நோயாளிகளுக்கு பயன்படும் அணி கருவிகள்

பலவகைக் கருவிகள் நோயாளிகளைக் கண்காணிக்க உதவும் வழிகளை நாம், ‘பொது மருத்துவம்’ என்ற பகுதியில் பார்க்கவுள்ளோம். வளையும் கருவிகள், நோயாளி மற்றும் அவரைக் கவனிக்கும் மருத்துவ உதவியாளர் இரு சாராருக்கும் பயன்படும் நுட்பம். கீழேயுள்ள விடியோவில், இது எப்படி நிகழ்கிறது என்று காட்டுகிறது:

பிஞ்சுக் குழந்தைகளுக்குக் கூட, இக்கருவிகளை அணிவிக்கலாம் என்று சில நிறுவனங்கள் சொல்லி வருகின்றன. ஆனால், இத்துறையில் பல சர்ச்சைகள் உள்ளன. உதாரணத்திற்கு, சில டாக்டர்கள் தங்களது நோயாளிகளை மாதம் ஒரு முறையோ, அல்லது இரண்டு மாதம் ஒரு முறையோதான் பார்க்கிறார்கள். நோயாளியின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதைச் சில அளவுகள் கொண்டு முடிவெடுக்கிறார்கள். கடந்த ஒன்று அல்லது இரண்டு மாதங்களாக நோயாளியின் நிலை என்ன என்பதைப் பெரும்பாலும் யூகிக்கிறார்கள். கருவிகளை அணிந்த நோயாளிகள் துல்லியமாக நோயாளியின் கடந்த மாதங்களில் என்ன நடந்தது என்பதைக் காட்ட வல்லது. இது சில நோய்களை வருமுன் தடுக்க உதவும். ஆனால், எத்தனை டாக்டர்களுக்கு இதை எல்லாம் படிக்க நேரமிருக்கும் என்பது ஒரு பெரிய கேள்விதான். அத்துடன், தன் அன்றாட உடல்நிலைப் பற்றி மருத்துவருக்குத் தெரிவிப்பது நோயாளியின் விருப்பம். கருவிகள் முடிவெடுக்கக் கூடாது.

ஒன்றை மட்டும் மறுக்க முடியாது. கருவி இணையத் துறையில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்னவோ இவ்வகை அணிக் கருவிகள் என்றால் மிகையாகாது. அலட்டவோ, காக்கவோ, சரியாக விளையாட்டுப் பயிற்சி பெறவோ, தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு நிபுணத்துவம் வழங்கவோ, இந்த அணிக் கருவிகள் நிச்சயம் பயன்படத்தான் போகிறது.

அணிக் கருவிகளின் தாக்கம் மற்றும் எதிர்காலம் பற்றிய ஒரு குறும் படம் இங்கே:

உடல் ஊனமுற்றோருக்கு உதவும் அணிக் கருவிகள்

உடல் ஊனமுற்றோருக்காகத் தயாரிக்கப்படும் அணிக் கருவிகள் சாதாரண மனிதர்களுக்கு உள்ளது போல அல்லாமல், மிகவும் கவனமாகத் தயாரிக்கப்பட வேண்டும். சாதாரண மனிதர்கள், கருவிகள், அப்படி இப்படி இருந்தால், சுதாரித்துக் கொள்வார்கள். அணியும் நுகர்வோரின் குறைபாட்டை அறிந்து, அந்தக் குறையை நீக்க உதவும் கருவியாக தொழில்நுட்பம் மாற வேண்டும். சாதாரண அணிக் கருவிகளை விட அதிகமாகவே, இதனால், பரிசோதித்த பிறகே இப்பொருட்கள் சந்தைக்கு வர வேண்டும். இதனால், இத்தகைய அணிக் கருவிகளின் விலையும் சற்று கூடுதலாகவே இருக்கும். மருத்துவத் துறையில் சோதனை கெடுபிடிகள் அதிகம். வெளி வந்த மென்பொருளை மெதுவாக சரி செய்து கொள்ளலாம் என்ற போக்குகிற்கு இடமில்லை. அத்துடன், அமெரிக்காவில் ஃப்.டி.ஏ. சான்றிதழ் பெறுவதற்குள் கிழிந்துவிடும். ’நோயாளி’ என்ற சொல் வந்தாலே, எழு அடுக்கு சோதனை செய்து, எல்லோரையும் அனுசரித்துப் பொருளை வெளி கொண்டு வருவது, மருந்து கம்பெனிகளுக்கு மட்டும் கைவந்தக் கலை.

சில தொழில்நுட்ப வல்லுனர்கள், அலட்டிக் கொள்ள உதவும் இத்தகைய கருவிகள்/உணர்விகளை உடல் ஊனமுற்றோருக்குப் பயன்படுமாறு மாற்றி அமைக்க முயற்சி எடுப்பது, இன்னும் நம்மில் மனிதாபிமானம் நிறைய இருப்பதைக் காட்டும் விஷயம்.

பயானிக் லேப்ஸ்  என்ற கனேடிய நிறுவனம், சக்கர நாற்காலியில் நடக்க முடியாமல் தவிக்கும் ஊனமுற்றோருக்கு நடக்க உதவும் ஒரு ரோபோ அணிக்கருவியைத் தயாரிக்கிறது. விலை ஏராளமாக இருப்பதால், மருத்துவமனைகளோடு சேர்ந்து இந்தத் தயாரிப்பை சந்தைக்குக் கொண்டு வரும் முயற்சியாக மாறியுள்ளது.

சென்ஸிமாட் என்ற இன்னொரு கனேடிய நிறுவனம், சக்கர நாற்காலியில் உடகாரும் ஊனமுற்றோருக்கான, பெரிய பிரச்னையான அழுத்தப் புண்கள் வருவதைத் தடுக்க உதவும் கருவி ஒன்றை உருவாக்கி உள்ளது, சக்கர நாற்காலியின் சீட்டின் அடியில் இந்த உணர்விகள், எங்கு அழுத்தம் அதிகமாக உள்ளது என்பதை ஒரு திறன்பேசிக்கு தரவாக அனுப்பி விடுகிறது. தேவைக்கேற்ப, அழுத்தத்தைச் சீரமைத்தால், புண் வருவதைத் தடுக்க முடியும். சில புண்கள் ஆறுவதற்குப் பல்லாண்டுகள் ஆவதால், இது ஒரு மிக நல்ல முன்னேற்றம் என்று சொல்ல வேண்டும்.

முதியோர் இல்லங்களில் உள்ள ஒரு பெரும் பிரச்னையை அழகாக அணிக் கருவி கொண்டு உதவும் இன்னொரு முயற்சி இங்கே:

சொல்வனம் – செப்டம்பர் 2015

தனியார் போக்குவரத்து உலகம் – கருவிகளின் இணையம் – பகுதி 4

”பதினோரு மணிக்கா ஆபீஸூக்கு வருவது?”

“அது ஒரு பெரிய கதை. எல்லாம் என் மகன் குமாரால் வந்தது.”

“நீங்க லேட்டா வந்துட்டு, பையனை ஏன் குறை சொல்றீங்க?”

”குமாருக்கு இன்னிக்குப் பள்ளிச் சுற்றுலா. காலை 6:00 மணிக்கு வீட்டிற்குப் பஸ் வந்து அழைத்துச் சென்றது.”

“அதுக்கு என்ன?”

“அவன், தெரியாமல் என்னுடைய திறன்பேசியை எடுத்துச் சென்று விட்டான். என்னுடைய கார் அந்த திறன்பேசி இல்லாமல் கிளம்பாது. நம் ஆபீஸ் செக்யூரிட்டிக்குச் செல்லும், கண்ணும் வேணுமே.”

“8:00 மணிக்குத்தான் தெரிய வந்து, அவனுடைய சுற்றுலா தளத்திற்கு டாக்ஸி பிடித்துச் சென்று, திறன்பேசியை மீட்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.”

oOo

தனியார் போக்குவரத்திற்கு வாகனங்களை உலகம் முழுவதும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். இத்துடன், பைக்குகள், சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் என்று பலவித இரு சக்கர ஊர்திகளும் இன்று பயனில் உள்ளன. இன்றைய கார்களில், பல புதியக் கருவிகள் இணையத்துடன் முழுவதும் இணைக்கப்படாவிட்டாலும், சேர்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்தப் புதிய கருவிகள் பெரும்பாலும் காரின் கணினி உதவியுடன் இயங்குகின்றன.

1. புதிய கார்களில், காமிராக்கள் காரை நிறுத்த உதவி புரிகின்றன

2. சில கார்களில், தானே காரை நிறுத்தும் வசதியும் வந்துவிட்டது. காமிரா உதவியுடன், கார் தானே சரியான இடத்தில் நிறுத்திக் கொள்கிறது. அதிக இடம் இல்லாத பெரு நகரங்களில் இது மிகவும் உதவியாக உள்ளது

3. சில விலை உயர்ந்த மாடல்களில், மிக அருகே இன்னொரு கார் இருந்தால், ஓட்டுனரின் காட்சிப் பெட்டியில், எச்சரிக்கை மற்றும் அலாரம் அடித்து உதவுகிறது. நெடுஞ்சாலைகளில், இது மிகவும் உதவுகிறது. இரவு கார் ஓட்டுபவர்கள், சற்று சோர்வால், கவனமிழந்து பக்கத்து சாலைப் பிரிவிற்கு வழுக்கினால், அதற்கும் எச்சரிக்கை உண்டு

4. 2007 –க்கு பிறகு வந்த ஏறக்குறைய எல்லா கார்களிலும், புளூடூத் முறையில் சாலையிலிருந்து கவனத்தை சிதறாமல், திறன்பேசியில் பேச முடிகிறது. பல மாடல்கள், ஓட்டுனரின் குரல் ஆணையை வைத்து அலுவலகத்தையோ, வீட்டையோ அழைக்கும் வசதி வந்து விட்டது

5. இன்று, ஓட்டுனர்கள் ஜி.பி.எஸ். வசதி திறன்பேசியில் வந்துவிட்டதால், எங்கு செல்ல வேண்டுமானாலும், கூகிளின் வரைபட மென்பொருளுடன் பேசியே ஆணை பிறப்பிக்கலாம்

இது இவ்வாறிருக்க, அடுத்தக் கட்டத் தனியார் வாகன முயற்சிகள், சில வெற்றிகளையும் இன்று பார்த்து விட்டது. டெஸ்லாவின் மின் கார், கூகிளின் தானியங்கிக் கார்கள், தனியார் வாகனங்களின் அடுத்தக் கட்ட முன்னோட்டத்தை உணர்த்துகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களைக் காட்டிலும் செயல்திறனில் மிகவும் முன்னேறிய கார் டெஸ்லாவினுடையது. உலகின் மிகப் பயனுள்ள மின்கார் இது – ஒரு மின்னேற்றத்தில் 600 கி.மீ. வரை பயணம் செய்யலாம். மேலும், இதில் எண்ணெய் சமாச்சாரம் எதுவும் கிடையாது.

முக்கியமாக, எஞ்சின் ப்ளாக் இல்லாததால், எடையும் குறைவு. சாமான்களைக் காரின் முன்னும், பின்னும் வைத்துக் கொள்ளலாம். கார் கண்ணாடியைத் துடைக்க உதவும் சோப்புத் தண்ணிரைத் தவிர எந்த திரவமும் இக்காரில் இல்லை. காரின் மின்சார மோட்டார், காரின் அடியே அமைக்கப்பட்டுள்ளது. இரவு மின்னேற்றம் செய்தால், அடுத்த நாள் காரை ஓட்டலாம். இக்காரை இயக்குவதெல்லாம் மனிதராக இருந்தாலும், அதன் மோட்டரைக் கட்டுப்படுத்துவது, எப்பொழுது மின்னேற்றம் செய்வது, ஓட்டுனருக்குப் பல வகை அளவுகளைக் காட்சியளிப்பாக வழங்குவது, என்பதை எல்லாம், கருவிகள் மூலமாகப் பெற்று, காரின் கணினி முடிவிற்காக ஓட்டுனருக்கு முன்வைக்கும், கருவி இணைய முன்னேற்றம். முக்கியமாக, உலகில் முதன் முறையாக, ஓடும் காருக்கு மென்பொருள் மாற்றங்கள் செய்யும் வசதியுள்ள கார் டெஸ்லா. ஓட்டுனரின் ஒப்புதல் பெற்றே இந்த மாற்றங்கள் செய்யப்படும். இதற்காக, டீலரிடம் ஓடத் தேவையில்லை.

கூகிளின் தானியங்கிக் கார், கருவிகளின் வாயிலாகத் தன்னைச் சுற்றியுள்ள பயண உலகைக் கணிக்கிறது. ஜி.பி.எஸ். கருவி, லேசர்கள் மூலம், குறுக்கே வரும் பாதைசாரிகள் மற்றும் சாலைப் பழுது வேலையினால் உருவாகும் மாற்று வழிகளைக் (street diversions) கூடச் சமாளிக்கிறது.

கூகிள் தானியங்கிக் கார், சில வருடங்களாகச் சோதனையில் உள்ளது. கூகிள் நிரலர்கள், இதன் மென்பொருளை மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இதனால், சாலை விபத்துக்கள் குறைய, நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆப்பிளும் இவ்வகை காரை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 2015 –ல் பி.எம்.டபிள்யூ, சாம்சங்குடன் இணைந்து திறன்பேசி மூலம் கட்டுப்படுத்தக்கூடிய கார் ஒன்றை செய்முறை விளக்கம் காட்டியது.

இன்னும் இத்தகைய கார்கள், எல்லோரும் ஓட்டுவதற்காகச் சந்தைக்கு வரவில்லை. சில ஆண்டுகளில் இது சாத்தியம். இன்று கார்களில், சாலையைப் பார்த்து ஓட்டிக் கொண்டே புளூடூத் கொண்டு செல்பேசியில் பேச வசதியுண்டு. அனைத்து புதிய பைக்குகள்/கார்களிலும் ஜி.பி.எஸ். வசதியும் வந்துவிட்டது. இயக்கம் என்னவோ தப்பு செய்யும் நம் போன்ற ஓட்டுனர்கள் கையில்தான் உள்ளது. இன்றையக் காருக்குள்ளும், பலவகை உணர்விகள் உள்ளன. கண்ணாடியைச் சுத்தம் செய்யும் சோப்புத் தண்ணீரின் அளவு, எஞ்சினில் மோட்டார் எண்ணையின் அளவு, டயரில் காற்றழுத்த அளவு போன்ற விஷயங்களை அளந்து கொண்டே இருக்கின்றன. இன்றைய, பல விலை உயர்ந்த கார்களில், தக்க அளவை விட ஏதும் குறைந்தால் அதை ஓட்டுனருக்கு அறிவிக்கும் காட்சியளிப்பை வாகனத்தின் கணினி செய்கிறது. ஆனால், இவை யாவும் ஓர் ஆரம்ப நிலையே. சமீப காலமாக, கார் நிறுவனங்கள், மின்னணுக் கருவிகளைப் புதிய மாடல்களில் அள்ளி வீசுகின்றன. காரின் எஞ்சினை கட்டுப்படுத்தும் கணினியும் மென்பொருளும் ஏராளமாக முன்னேறியுள்ளன. இதனால், நம்மூர் கபாலி மெக்கானிக்கிடம் காரை எடுத்துச் செல்ல முடிவதில்லை என்று சிலர் அலுத்துக் கொள்வதும் சகஜமான விஷயம்.

IOT part3-pic1

கார் ஓட்டுனர்களிடம், அவர்களுக்குப் பெரும் உதவியாகக் கூடியக் கருவிகள் யாவை என்று ஆய்வு செய்ததில், இவற்றை மிக முக்கியம் என்று 2015 –ல் கூறியுள்ளார்கள்:

• ஓட்டுனர் சோர்வடையும் பொழுது, கவனச் சிதறல் ஏற்படும். இதைக் கருவி ஒன்று கணித்து, ஓட்டுனரை ஓய்வெடுக்கச் சொல்லுமானால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

• பெரும்பாலும் விபத்துக்களில், நடக்குமுன் 30 நொடிகள் மிகவும் முக்கியம். ஓட்டுனரின் உயிரைக் காக்க இந்த 30 நொடிகளில் சரியான எச்சரிக்கையை வாகனம் அளித்தால், 60% உயிர்களைக் காக்க முடியும். 30 நொடிக்குள் வாகன வேகத்தைக் குறைப்பதுடன் எச்சரிக்கையும் கருவிகள் மூலம் செய்தால் பயனுள்ளதாக இருக்கும்

• போக்குவரத்துத் தடங்கள் (traffic lanes) மாற்றுவதைக் கருவிகளே செய்தால் கார் ஓட்டுவது பாதுகாப்பாக இருக்கும்

• கார் பழுதாகியதும் என்ன செய்ய வேண்டும் என்பதை விடியோ அல்லது குரல் மூலம் கருவிகள் வழிகாட்டினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

IOT part3-pic2

இதைத் தவிர, சில செளகரிய விஷயங்களையும் ஓட்டுனர்கள் எத்ரிபார்க்கிறார்கள்:

• காருக்குள் ஒரு குட்டி இணையதள வசதி (internet hot spot) – இது இன்றைய டெஸ்லா காரில் உண்டு

• காருக்குள் வெவ்வேறு பயணிகள் கேட்க, தனிப்பட்ட ஒலிக் கற்றைகள் (நம்முடைய உதாரணத்தில், மனோகருக்கும், செல்விக்கும் தனித்தனி ஒலிபரப்புகளைப் பார்த்தோம் – கணேஷ் குமரேஷின் வயலின் குழந்தைகள் பாடல்களோடு காருக்குள் அவரவர் காதுகளை எட்டியது)

• காரின் கண்ணாடி ஜன்னல்கள் கணினித் திரையாகப் பயன்பட வேண்டும்

• நகரும் காரின் ஜன்னலின் வெளியில் தெரியும் காட்சிகள், கணினி விளையாட்டுடன் தேவைப்பட்டால், இணைந்து கொள்ள வேண்டும்

இன்று, இத்தகையப் புதிய கார்களுக்காக நாம் காத்திருக்கையில், கருவி இணைய முயற்சிகளைப், பல புதிய நிறுவனங்கள் செய்த வண்ணம் இருக்கின்றன. இவற்றில், ஒன்று, நாவ்டி (NavD) என்ற நிறுவனம். திறன்பேசி மூலம், ஓட்டுனரின் கவனத்தைச் சிதறடிக்காமல், பல வேலைகளையும் செய்து முடித்துக் கொள்ளக் கூடிய ஒரு நுண் ஒளிப்படக்காட்டி (micro projector) அடக்கம். இதனால், விடியோ உரையாடல்கள், சைகை மூலம், பல ஆணைகளைப் பிறப்பிக்க வழி செய்துள்ளார்கள்.

பொதுவாக, மூன்று விஷயங்கள் கார் சம்பந்தப்பட்டக் கருவி இணையத்தின் மையமாகச் சொல்லலாம்:

1. காரை ஓட்டுபவர் எவ்வளவு பாதுகாப்பாகக் காரை ஓட்டுகிறார்? ஓட்டுனரின் பாதுகாப்புக்கு (safety) என்ன வழிகள்?

2. காரின் பாகங்களின் ஆரோக்கியம் எப்படி உள்ளது?

3. கார் பயணிக்கும் சாலைகளில், என்ன நடக்கிறது? சாலையில் நடக்கும் நிகழ்வுகளைக், கார் எப்படிச் சமாளிக்கிறது?

மேலே குறிப்புகள் ஒன்று மற்றும் மூன்று, ஓட்டுனரைச் சார்ந்த விஷயங்கள். பெரும்பாலும், சாலை விபத்துக்கள், ஓட்டுனரின் கவனக் குறைவு மற்றும் வேகத்தினால் நிகழ்கின்றன என்பது பல ஆய்வுகளின் முடிவு. கருவி இணைய நிறுவனங்கள் இதில் பெரும் ஈடுபாடு காட்டுகின்றன. மற்றபடி, வசீகரத்திற்காக, பல சின்னச் செளகரிய மென்பொருள் கொசுறுகளையும் நுகர்வோருக்கு அள்ளி வீசுகிறார்கள்.

IOT part3-pic3

இதை எல்லாம் கருவிகளின் இணையம் மூலம் சாதிக்க முடியும் என்று நம்ப வாய்ப்புள்ளது. உதாரணத்திற்கு, எந்த ஒரு விபத்தும், நடக்கும் முப்பது வினாடிகளுக்கு முன் தடுக்கப்பட்டால், மிகப் பெரிய உயிர் சேதம் இன்றிக் காக்க முடியும் என்று ஓர் ஆய்வு சொல்கிறது. அத்துடன், சாலையில் சட்டப்படி உச்ச வேக அளவிற்கு மேல் பயணம் செய்வது, இன்னொரு காரணம். கருவிகள் தாங்கிய கார்கள், ஓட்டுனர் அதிக வேகம் பயணிக்க நினைத்தாலும், அவரைத் தடுக்கும் சக்தி கொண்டவை. சிலருக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் பிடிக்காவிட்டாலும், பலரின் பாதுகாப்பான பயணத்திற்கு இது அவசியம்.

கார்களின் கட்டமைப்பு மிகவும் சிக்கலானது. இவற்றில், நேரும் பழுதுகளை, இரு வகையாகப் பிரிக்கலாம்:

1. பழுது பார்க்கும் நிலையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பழுதுகள்

2. காரின் கணினியின் மென்பொருள் மாற்றங்கள்

இன்றே நமது கார்களில் ஏராளமான கணினி மென்பொருட்கள் பல உணர்விகளைக் கட்டுப்படுத்துகின்றன. எதிர்காலக் கார்கள், எப்பொழுதும் இணையத்துடன் தொடர்பு கொண்டிருப்பதால், மென்பொருள் மாற்றங்களை காருக்கு நேராக கார் நிறுவனம் அனுப்பிவிடலாம். இதற்காக, டீலரிடம் செல்ல வேண்டியதில்லை.

பயணிக்கும் பொழுது காரே, அதனைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளைக் காமிராக்கள் மூலம், காரின் கணினிக்கு அனுப்பி, மென்பொருள் மூலம், அடுத்தபடி என்ன செய்ய வேண்டும் என்பதை நொடியில் முடிவெடுக்கிறது. இவ்வகைக் காமிராக்கள் எல்லா கார்களிலும் பொருத்தப்படத் தேவையில்லை. கூகிள் தானியங்கிக் காரின் விடியோவில் பார்த்தது போல், பாதசாரிகளையும், சைக்கிள் ஓட்டுபவர்களையும் சமாளித்துச் செலுத்தும் தொழில்நுட்பம், இன்று உள்ளது.
எந்த ஒரு காரும் சுற்றியுள்ள சிக்னல், நிறுத்துமிடம் போன்ற விஷயங்களைச் சார்ந்தே வேலை செய்யும். இதைப் பற்றி விவரமாக, கட்டமைப்புகளில் கருவிகளின் இணையத்தின் தாக்கம் பற்றி விவரிக்கையில் பார்ப்போம்.

கீழே ஹோண்டா நிறுவனத்தின் கருவி இணைய விடியோவைக் காணலாம்:

இந்தப் பகுதியில் நாம் அலசிய பல எதிர்பார்ப்புகள் வேறு விதமாக எதிர்காலத்தில் பூர்த்தி செய்யப்படலாம். ஆனால், பாதுகாப்பான பயணத்திற்கு, இத்தகைய முன்னேற்றங்கள் மிகவும் அவசியம். எத்தனை கார்கள் தானியங்கிக் கார்களாகும் என்று பல வித கணிப்புகள் இருந்தாலும், இன்னும் 10 வருடங்களில், ஒரு 5% கார்களாவது தானியங்கிக் கார்கள் ஆக வாய்ப்பு உள்ளது. அத்துடன், மின் கார்கள் இத்தகையக் கருவி இணைய உலகிற்குச் சரியான வாகனங்கள். இன்றைய மின்கலம் மற்றும் மின்னேற்றப் பிரச்னைகளைச் சரி செய்ய என்றும் இல்லாத அளவிற்கு இன்று அவசியம் அதிகமாகி வருகிறது. ஏனென்றால், புதிய கணினி மற்றும் மின்னணுக் கருவிகள் அனைத்திற்கும் இத்தகைய சக்தி எப்பொழுதும் தேவைப்படுகிறது.

கார் என்றவுடன் காப்பீடு உங்களது நினைவுக்கு வந்தால், அது சரியானதே. காப்பீடு நிறுவனங்கள், மனித ஓட்டுனரின் இயல்பை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகள். இளைஞர்/இளைஞிகள் அதிக விபத்துகளில் சிக்கினால், இவர்களின் காப்பீடு அதற்கேற்றவாறு உயரும். அதே போல, கார் எத்தனை புதிதோ அத்தனை காப்பீடு உயரும். புதிய கார்களின் பாகங்களின் விலை, பழைய கார்களை விட அதிகம். கருவி இணைய முயற்சிகள் காரின் பாதுகாப்பை அதிகரித்து, காப்பீடு என்ற விஷயத்தையே தலை கீழாக்கி விடுகின்றன.  டெஸ்லா போன்ற இன்றைய கார்கள், நெடுஞ்சாலை மற்றும் நகரின் வீதியில் ஓட்டுனரின் பாதுகாப்பிறகாக காரின் இயக்கத்தை மற்ற கார்களின் வேகத்தைப் பொறுத்துக் கட்டுப் படுத்தும் அளவிற்கு வளர்ந்து விட்டன. காப்பீடு நிறுவனங்களுக்கு இதனால், சற்று ஜுரம் வந்து, அவை பலவித புதிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஓட்டுனர்களின் கார் ஓட்டும் பழக்கங்களைப் பதிவு செய்யப் புதிய கருவிகள், சில இலவச ஊக்க அளிப்புகள் என்று தங்களைத் தயார் படுத்தத் தொடங்கி விட்டன.

தானியங்கிக் கார்கள் காப்பீடு நிறுவனங்களைப் பெரிதாக பாதிக்கும். இதனால், சில சட்டச் சிக்கல்களை இந்த நிறுவனங்களே ஏற்படுத்தும் என்றும் நம்பலாம். குறிப்பாக, டெஸ்லாவின் முயற்சிகள், கார் தொழிலையே மாற்றிவிடும் சக்தி கொண்டவை என்று பல வல்லுனர்களாலும் இன்று சொல்லப் படுகிறது. முழுக் கருவி இணைய வீச்சை இன்னும் எவராலும் இத்துறையில் கணிக்க முடியவில்லை. இணையத்துடன் தொடர்புடைய ஒரே காரினால், இத்தனை பயம், எதிர்பார்ப்பு, மற்றும் ஆதங்கம் இத்துறையில் இன்றுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் இன்னும் பரவப் பரவ, காரகளைச் சார்ந்த பல உப தொழில்கள், குறிப்பாக, காப்பீடு மற்றும், பராமரிப்பு சார்ந்தவை, மிகவும் கவலைப்பட வாய்ப்புள்ளது. புதிய முயற்சிகள் நுகர்வோரைச் சார்ந்த விஷயங்கள்; பாதிக்கப்பட்ட உப தொழில்களைச் சார்ந்தன அல்ல. உதாரணத்திற்கு, விடியோ டேப் எந்திரத்தைச் சார்ந்த தொழில்கள் இன்று இல்லை என்று யாரும் கவலைப் படுவதில்லை. மாறாகப், புதிய தலைமுறையினர், விடியோ பார்க்கும் பொழுது இணைய வேகம் சரியில்லாததைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்:

சொல்வனம் – செப்டம்பர் 2015

கருவிகளின் இணையம் – ஒரு பருந்துப் பார்வை – பகுதி 3

விரைவில், என்றால், எத்தனை விரைவில்? இது மிகவும் கடினமான கேள்வி. ஜோஸ்யம் எல்லாம் இதற்கு ஒத்து வராது. ஒன்று மட்டும் தைரியமாகச் சொல்லலாம். மின்னணுவியல், கணினி மற்றும் மென்பொருள் துறைகள் என்றும் இல்லாத அளவு இந்தத் தொழில்நுட்பத்தை முன்னேற்றத் துடியாக வேலை செய்து வருகின்றன. சமீபத்தில் வெளிவந்த ஆப்பிள் நிறுவனத்தின் கடிகாரம் இந்த போக்கிற்கு மிகவும் ஒரு உந்துதலாய் அமைந்துள்ளது. ஏராளமான நிறுவனங்கள் களத்தில் குதித்துள்ளன.

 

IOT part2-pic5

இந்தத் தொழில்நுட்ப நிறுவனங்கள், இத்துறையின் பல்வேறு உபதுறைகளில், தங்களது கைவசத்தைக் காட்டி வருகிறார்கள். திடீரென்று, பல ஆண்டுகளாக எழுத்தாளர்கள் கனவு கண்டதைப் போல, பல சம்பந்தமில்லா நிறுவனங்கள் போட்டியிட்டுக் கொண்டே ஒத்துழைக்கிறார்கள். இதை coopetition  என்று சொல்லுகிறார்கள். உதாரணத்திற்கு, Samsung, Google, Apple, Microsoft, LG, SAP, Intel, GE என்று ஒரு விசித்திரக் குடும்பம் – இன்னும் சில குழந்தைகள், பேரன் பேத்திகளோடு, குடும்பத்தில் உள்ள அனைத்து உணர்ச்சிகளுடன் இந்தத் துறையில் முன்னேறத் துடிக்கிறார்கள். நுகர்வோர் மின்னணுவியல் கருத்தரங்களுக்கு (consumer electronics shows) இவர்கள் அனைவரும் படை எடுக்கிறார்கள. இதுவரை, ஆரகிளோ, எஸ்.ஏ.பி. –யோ, நுகர்வோர் மின்னணுவியல் பக்கம் தலை வைத்துப் படுக்க மறுக்கும் நிறுவனங்கள்.

2015 –ல் நடந்த நுகர்வோர் மின்னணுவியல் கருத்தரங்கில், இந்த விநோத குடும்பத்தின், சில நிச்சயதார்த்த விடியோக்கள் இங்கே:

 

கருவி இணைய பில்ட் அப்

 

IOT part2-pic6

கணினி மற்றும் மென்பொருள் துறைகளில், தமிழ் சினிமா டைரக்டர்கள் போல, பில்டப் கொஞ்சம் அதிகம். வரலாறு படைக்கப் போகும் என்று விவரிக்கும் மொக்கைப் பட டைரக்டருக்கும், மென்பொருள் ஆசாமிகளுக்கும் சின்ன வித்தியாசம்தான். மொக்கைப் பட இயக்குனரின் கதி, படம் வெளி வந்தவுடன் தீர்மானமாகிவிடும் – அது ஒரு மாதமோ, இரண்டு மாதமோ ஆகலாம். கணினி மென்பொருள் துறையில் நுகர்வோரை ஒரு மென்பொருள் சென்று அடைந்து பயனுற ஒரு ஐந்து முதல் பத்தாண்டுகளாவது ஆகிறது. இதை hype cycle  என்கிறார்கள், இன்று ஏராளமாக ஊதி வாசிக்கப்படும் விஷயம் (2014) கருவிகளின் இணையம். அடுத்த ஐந்து ஆண்டுகள், இந்தத் தொழில்நுட்பத்திற்கு மிகவும் முக்கியம். பல ஊதி வாசிக்கப்பட்ட தொழில்நுட்பங்கள், இந்த ஐந்து ஆண்டுகளில் காணாமல் மறைந்து விடுகின்றன. இதை ஒரு மரணப் பாதாளமாகப் பார்க்கிறார்கள். இதைத் தாண்டி அடுத்த கட்டத்திற்குச் செல்லும் தொழில்நுட்பமே நமக்கு நீண்ட நாள் பயன் அளிக்கிறது.

 

இத்துறையின் ஆரம்பம், 16 ஆண்டுகளுக்கு முன் 1999 –ல் தொடங்கியது என்று சொல்லலாம். கெவின் ஆஷ்டன் (Kevin Ashton) என்னும் ஆங்கிலேயர், சோப்பு மற்றும் நுகர்வோர் பொருட்களைத் தயாரிக்கும் Procter and Gamble நிறுவனத்தில் வேலை செய்யும் பொழுது, RFID தொழில்நுட்பத்தை உபயோகிக்கையில் (இதைப்பற்றி விரிவாக சொல்வனத்தில், சில ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்தேன்) கருவிகளின் இணைய தொடர்பு நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்று முதலில் கருத்து வெளியிட்டார். அவர் அப்பொழுது சொன்ன விஷயம்தான் Internet of things – வழக்கம் போல, மார்கெடிங் வல்லுனர்கள், இணையத்துடன் சம்பந்தமே இல்லாத சில விஷயங்களுக்கு இந்தப் பெயரை சூட்டி குழப்புவது, இந்த தொழிலின் நீண்ட நாள் வழக்கம். ஆனால் இன்று, இது ஒரு மிகவும் சீரியஸான தொழில் முயற்சியாகவும் வளர்ந்துள்ளது.

 

IOT part2-pic7

உடனே, யாராவது, ”அடுத்த ஞாயிறு எல்லா கருவிகளும் கைகோர்த்துக் கொண்டு உங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தும். தயவு செய்து உங்களது பொன்னான வாக்குகளை எனக்கு அளியுங்கள்” என்றால், ஓட்டம் பிடியுங்கள். இன்றையக் கருவிகளின் முடிவாற்றல் திறன், ஆரம்ப மற்றும் இடைப்பட்ட நிலைகளில் உள்ளது. இன்னும் இவை வளர, பலவித தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நிறுவன ஒத்துழைப்பு தேவை. பொதுவாக, இன்றைய கருவிகள் பெரும்பாலும், ஒரு நிறுவனத்தின் படைப்புகளோடே வேலை செய்கின்றன. உதாரணத்திற்கு, ஆப்பிள் கடிகாரம், ஐஃபோன், மற்றும், ஐபேடுடன் நன்றாக வேலை செய்யும். அதே போல சாம்சுங்கின் பல கருவிகளும், சாம்சுங் உலகில், நன்றாக வேலை செய்யும். சில கருவிகளை ஒரு நிறுவனத்திடம் வாங்கி, மற்றவற்றை இன்னொரு நிறுவனத்திடம் வாங்கினால், உங்கள் பாடு திண்டாட்டம்தான்.

இப்படிப்பட்ட பல சிக்கல்கள், வளர்ந்துவரும் இத்துறையில் ஏராளமாக உள்ளன. நல்ல விஷயம் என்னவென்றால், பல நிறுவனங்களும், ஒரு சாதாரண நுகர்வோர் பார்வையில், தங்களது முயற்சிகளை முன்னேற்றினால்தான் வாடிக்கையாளர்கள் கருவிகளை வாங்குவார்கள் என்று புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டன. எல்லாவற்றையும் ஒரே நிறுவனத்திடம் நுகர்வோர் வாங்குவார்கள் என்று எதிர்பார்ப்பது அறிவற்ற செயல். ஆனால், பிரச்சினை இதுவென்று ஒப்புக் கொண்டால் மட்டும் போதாது. அதைத் தீர்ப்பது அவ்வளவு எளிதல்ல, இத்தகைய தொழில்நுட்பப் பிரச்சினைகளை, விரிவாகப், பிறகு அலசுவோம்.

என்னதான் பல புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும், பல கருவிகளும் கம்பியில்லா தொடர்பு (WiFi) அல்லது புளூடூத் (Bluetooth) மூலமாகவே தங்களது அளவுகளை அடுத்த நிலைச் செயலிக்கு அனுப்புகின்றன. இவை,பாதுகாப்பில் அவ்வளவு பலமற்றவை. இந்தப் பிரச்சினை, ஒரு காருக்குள்ளோ அல்லது வீட்டிற்குள்ளோ பெரிதாக நாம் நினைப்பதில்லை. இவற்றை தாண்டி, இணையத்தில் இக்கருவிகள் தங்களது அளவுகளை பதிவு செய்ய வேண்டுமானால், கருவி பாதுகாப்பு, இன்னும் வளர வேண்டும். இதைப் பற்றி, விரிவாக இன்னொரு பகுதியில் பார்ப்போம்.

இன்னொரு முக்கியமான விஷயம், நுகர்வோரின் வழக்கங்கள் எப்படி மாறுமென்பது. சரியான தொலை பேசியே இல்லாத இந்தியா, சைனா போன்ற நாடுகளில் வசிக்கும் நுகர்வோர், செல்பேசிகள் மற்றும் நுண்ணறிபேசிகளை, மேலை நாட்டவர்களை விட, வேகமாக ஏற்றுக் கொண்டு, நன்றாகவும் பயன்படுத்துகிறார்கள். ஆனால், புதிய கருவிகளை யார் விரைவில் ஏற்பார்கள் என்று சொல்ல முடியாது. எந்தக் கருவிகளுக்கு வரவேற்பிருக்கும் என்றும் சொல்வது கடினம். இந்தக் கருவி இணைய முயற்சிகள் பல்வேறு துறைகளில் வேகமாக வளர்ந்து வருகிறது. முக்கியமாக, நுகர்வோரற்ற துறைகளில், இத்துறை வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மற்ற துறைகளில் உள்ள முன்னேற்றங்கள் அடுத்தபடியாக நுகர்வோரைச் சென்றடையும் என்று நம்ப வாய்ப்புள்ளது. நுகர்வோர் துறைகளில் பல கோடி கருவிகள் விற்க வாய்ப்புள்ளதால் இதை முன் நிறுத்தி, பல காட்சியளிப்புகள் இன்று வந்த வண்ணம் உள்ளது. அத்துடன், இவ்வகை காட்சியளிப்புகள் சமூகத்தின் தொழில்நுட்ப மனப்போக்கையும் மாற்றும் முயற்சியில் ஒரு வழி என்று சொல்லலாம்.

சொல்வனம் – ஆகஸ்ட் 2015

கருவிகளின் இணையம் – ஒரு பருந்துப் பார்வை – பகுதி 2

முன்னே சொன்ன 12 விஷயங்களும் நம்முடைய அன்றாட நிகழ்வுகள். இதையே  கருவிகளின் இணையம் எப்படி மாற்றி அமைக்க வல்லது என்று அடுத்து பார்ப்போம் – ஒரு 10 ஆண்டுகள் முன்னோக்கிச் செல்வோம். நிகழ்வுகளை விளக்குவதற்கு முன், சில அறிமுகங்கள் அவசியமாகிறது. மனோகரின் வீட்டு கணினியின் பெயர் ‘நெல்லை’. அவருடைய கார் கணினியின் பெயர், ‘சக்தி’. அவருடைய அலுவலக கணினியின் பெயர், ’மாலன்’. இந்த மூன்று கணினிகளும் மனோகரின் குரல் கேட்டு இயங்கக் கூடியவை.

  1. காலை 6:00 மணியாகியவுடன், ‘நெல்லை’ மனோகர் மற்றும் செல்வியின் படுக்கையறை பக்கத்தில் உள்ள விளக்கை உயிர்பெறச் செல்துவிட்டது! மேலும் மெலிதாக சுப்ரபாதம் இசை படுக்கையறை மற்றும் சமையலறைகளில் பரவ, ஜன்னல்களின் திரைகள் முனைவு மாறி (polarization) வெளிச்சம் உள்ளே வரத் தொடங்கியது. நேற்று (ஞாயிறு) ஒழுங்காக 9:00 மணிக்கு எழுப்பிய அதே ‘நெல்லைக்கு’ இன்று வேலைநாள் என்று தெரியும்
  2. அகிலா நேற்றிரவு வைத்த ரொட்டியை டோஸ்டரை ‘நெல்லை’ பதமாக வாட விட்டது. சமையலறையில் இருக்கும் காபி மெஷினை இயக்கிவிட, காபி தயாராகிக் கொண்டிருந்தது
  3. செல்வி தயாராகி, அனைவரும் காலை உணவை அனைவரும் சாப்பிட்டு விட்டுக் கிளம்பும் பொழுது மணி, 7:50
  4. மனோகரின் தானியங்கிக் கார் அருகே வருகையில் அவருடைய செல்பேசியை வைத்து, அவருக்கு சரியான இருக்கை அமைப்பை சரி செய்து வைத்திருந்தது ‘சக்தி’. அவர் உள்ளே அமர்ந்ததும், வழக்கம் போல செல்வியின் பள்ளி மற்றும் அவரது அம்பத்தூர் தொழிற்சாலைக்குப் போக வேண்டுமா என்று கேட்டுக் கொண்டது ’சக்தி’. அவருக்குப் பிடித்த ‘கணேஷ் குமரேஷ்’ வயலின் ஒலிக்க, பயணம் தொடங்கியது. காரோ, பின் சீட்டில் அமர்ந்திருந்த செல்விக்காக அவளுக்கு பிரியமான குழந்தைகள் பாட்டையும் ஒலிக்கச் செய்தது!IOT part2-pic1

 

  1. முதல் சிக்னலை அடைந்தவுடன், சிக்னலுடன் தொடர்பு கொண்ட ‘சக்தி’, பாதையில் வேலை நடப்பதால், சற்று வேறு பாதையில் செல்வியின் பள்ளியை 8:30 மணிக்கு அடைய முடியும் என்று மனோகருக்கு அறிவித்தது. காரில் உள்ள ஜி.பி.எஸ் கருவியுடன் தொடர்பு கொண்டு, வேறு பாதையையும் அமைத்துக் கொண்டது. சரியாக, 8:32 மணிக்கு, செல்வியை பள்ளியில் விட்டு விட்டுப், பயணம் தொடர்ந்தது
  2. ஒரு மணி நேர பயணத்தில், மனோகருடைய தானியங்கிக் கார், மற்ற மனிதர்கள் ஓட்டும்/தானியங்கி கார்களுடன் பல சாலைகளை/ சிக்னல்களைக் கடந்ததை, வேடிக்கைப் பார்க்க மனோகரிடம் நேரமில்லை. அன்றைய செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் என்று பயணம் தொடர்ந்தது. காலை, 9:28 மணிக்கு தொழிற்சாலையில் அவரை விட்டு விட்டு, வழக்கமான இடத்தில் தானே நிறுத்திக் கொண்டது. அவருடைய தானியங்கி மின்சாரக் கார், சென்னையின் சுட்டெரிக்கும் வெய்யிலில் முழுகி மின்சாரம் உற்பத்தி செய்யத் தொடங்கியது
  3. மனோகர் அலுவலகத்தை அடைய, உடல் வருடல் (biometric scan) மூலம், அவரை அக்கருவி வழிவிட்டது. அவருடைய கையில் ஒட்டப்பட்ட செயலியை அவரது அலுவலக வருடிக்கு, கதவருகே வந்தவுடன், எதையும் தொடாமலே மனோகர் வந்திருக்கிறார் என்று தெரியும். அலுவலகம் சென்றவுடன் அகிலா அழைத்தாள். அவளுடைய செல்பேசியில், ’நெல்லை’ வீடு பூட்டப்பட்டச் செய்தியை அனுப்பியதாகச் சென்னாள். மனோகரும், செல்வியை பள்ளியில் விட்டதை சொல்லி, அடுத்த வேலையைப் பார்க்கப் போனார்
  4. ’மாலன்’ பூனே மற்றும் சென்னை உற்பத்தி விவரங்களைக் காட்டியது. சென்னையில் உள்ள அழுத்த எந்திரம், இன்னும் 5 மாதத்திற்குள் பழுது பார்க்கப்பட வேண்டும் என்று பராமரிப்பு விவரங்கள் சொல்வதாக, ’மாலன்’ சொன்னது. பழுது பார்க்கும் ஜப்பானிய கம்பெனி விவரங்கள் அத்துடன் காட்டி, அவர்களுக்கு எவ்வளவு செலவாகும் என்ற ஒரு வேண்டுகோள் அனுப்பலாமா என்றது. அடுத்த 45 நாட்களின் உற்பத்தி எப்படி பாதிக்கப்படும் என்று ஒரு உதவி ரிப்போர்ட்டும் காட்டியது. நாளை தெரிந்துவிடும் என்று மனோகர் வேண்டுகோளுக்குச் சரி சொன்னார்
  5. பகல் 12:30 -க்கு உணவுக்காக கேன்டீன் சென்றபோது, மூன்று முக்கிய மின்னஞ்சல்கள். வீட்டைச் சுத்தம் செய்யும் ரோபோ எல்லா அறைகளையும் சுத்தம் செய்து விட்டதாக, ‘நெல்லை’ செய்தி அனுப்பியிருந்தது. செல்வியின் பள்ளியிலிருந்து அவள் எவ்வளவு தண்ணீர் குடித்தாள் என்று அவளுடைய தண்ணீர் பாட்டில் செய்தி அனுப்பியிருந்தது. அம்மாவின் ரத்த அழுத்தம் சற்று அதிகமாகியிருப்பதை அவருடைய உடையில் பொருத்தப்பட்ட மானிட்டர் ஒரு செய்தி அனுப்பியிருந்தது. அம்மாவின் நர்ஸுக்கும் இந்தச் செய்தி எட்டியிருக்கும்
  6. ’சக்தி’ 420 கிலோவாட் சூரிய ஒளி மூலம் தேவைக்கு அதிகமாக மின்சாரம் காரில் சேமிக்கப் பட்டிருப்பதாகவும், அதை விற்று விடலாமா என்று சொன்னதோடு, தலா கிலோவாட்டிற்கு 20 ரூபாய் மூலம் 8,400 ரூபாய், 2:00 மணிக்குள் விற்றால் கிடைக்கும் என்று ஆசை காட்டியது!
  7. மாலை, அம்மாவைச் சந்திக்க ‘சக்திக்கு’ தன் செல்பேசி மூலம், செய்தி அனுப்பினார் மனோகர். மாலை 4:45 மணிக்கு அம்மாவின் மாம்பலம் வீட்டிற்கு தானியங்கிக் கார் விரைந்தது. டீ நகரில், காப்பிப் பொடி மற்றும் திண்பண்டங்கள் வாங்க வேண்டியது நினைவுக்கு வர, ‘சக்தியிடம்’, அடுத்த பயணத்தில் இதை சேர்த்துக் கொள்ளும்படி மனோகர் சொன்னார். அங்கு, நர்ஸ் ஏற்கனவே வந்திருந்தார். கடந்த 1 வார ரத்த அழுத்த விவரங்களை ஆராய்ந்து, அம்மாவின் மருந்தை சற்று மாற்றி அமைத்துவிட்டு, மருந்துகடைக்குப் புதிய ஆணையை அனுப்பிவிட்டார். இந்த விதப் பரிசோதனை வருகைக்கு, அடுத்த மாதம் காய்ச்சி விடுவாள்.
  8. பள்ளி திரும்பிய செல்வி, தனது பாட்டியை அழைத்து, அவளுடைய பள்ளி வரைபடங்களை வீடியோ மூலம் காட்டினாள். அத்துடன். செல்வியின் ஆசிரியையின் விமர்சனமும் இருந்தது. தன்னுடைய புதிய தண்ணீர் பட்டிலின் மகிமையைப் பற்றி, பாட்டியிடம் சொல்லி சந்தோஷப்பட்டாள். அம்மாவிடம் விடைபெற்றுக் கொண்டு காரில் ஏறியதும், ‘சக்தி’, “டீ நகருக்குப் போக வேண்டுமா?’ என்று கேட்டு, அனுமதி பெற்று கடைக்குச் சென்றது. செல்பேசி மூலம் ஆர்டர் கொடுத்துவிட்டு காசையும் கட்டிவிட்டார், மனோகர். கடையை அடைந்த பொழுது, தயாராக இருந்த பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு பயணமானது கார். பயணிக்கும் பொழுது, ‘சக்தி’, ‘உங்களது பின் டயர்களில் இன்னும் 60 நாட்கள் மட்டுமே பத்திரமான பயணம் சாத்தியம். புதிய டயர்கள் மாற்ற முயற்சி எடுங்கள்’ என்றது.

அடடா, என்ன ஒரு பூச்சுற்றல் என்று உங்களுக்குத் தோன்றலாம். இதெல்லாம் இன்னும் 10 வருடங்களில் சென்னையில் சாத்தியமா? இதில், சில நிகழ்வுகள் சற்று ஓவராகத் தோன்றினாலும், மற்றவை, என் பார்வையில் சாத்தியமே. சென்னையில் இல்லாவிட்டாலும், மற்ற மேற்கத்திய நகரங்களில் சாத்தியம். கற்பனை என்பதால், ஏன் சென்னையில் நிகழக் கூடாது? உண்மையான பூச்சுற்றல், 10 வருடத்திற்குப் பின் தமிழர்கள் ஆங்கில மோகத்தைத் துறந்து தங்களுடைய குழந்தைகள், கணினிகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டுவார்கள் என்று நம்புவது 🙂

 

IOT part2-pic2இந்த நிகழ்வுகளில் தடிமனாகக் காட்டியிருப்பவை, கருவிகள் – மனிதர்களை விட ஏராளமாக அவை பேசுவதைப் போலத் தோன்றினால், அது உண்மையே. நம்முடைய உரையாடல்களில், சமயம், இடம் மற்றும், மனிதரை அறிந்து, அதற்கு தகுந்தவாறு உரையாடுகிறோம். கருவிகள் எதையும் பொருட்படுத்தாமல் பேசித் தள்ளும். அட, எப்பொழுது கருவிகள் பேசின? யாருடன் பேசின? எதன் வழியாகப் பேசின? இந்த உதாரண நிகழ்வுகளைக் கொண்டே என்ன நடந்தது என்று விரிவாகப் பார்ப்போம்.

முதல் புள்ளியில் உள்ள கருவிகள் எப்படி உரையாடின என்று பார்ப்போம். இதில் அடங்கியுள்ள கருவிகள்:

  • பாட்டு இசைக்கும் கருவி (சுப்ரபாதம் இசையைத் தேடி இசைக்கும் வல்லமை படைத்தது)
  • படுக்கையறை விளக்குகள் – கட்டளை கிடைத்தவுடன் இயங்க வல்லவை. சூரிய வெளிச்சம் பட்டால், அணைந்து கொள்ளும் வல்லமை கொண்டது
  • ஜன்னல்களின் திரைகள் – இவற்றை இன்றையத் திரைச்சீலைகளாக நினைக்காதீர்கள். இவை முனைவாக்கத்தினால், வெளியே உள்ள வெளிச்சத்தை உள்ளே அனுமதிக்கவும், தடுக்கவும் வல்லமை கொண்டது

எங்கே இவை பேசின?

  • ‘நெல்லை’, முதலில் காலை 6:00 மணியானதும், இன்றைய செல்பேசி போல அலாரம் ஒலி மட்டும் எழுப்பவில்லை – மனோகர் மற்றும் செல்வியின் அறைகளில் இருந்த விளக்குகளுக்கு ‘உயிர்பெறு’ என்று செய்தி அனுப்பியது.
  • அடுத்தது, மனோகர் மற்றும் செல்வி அறைகளில் உள்ள ஜன்னல்களுக்கு முனைவாக்க மாற்றம் செய்ய, ஆணை அனுப்பியது.
  • கடைசியாக, ‘நெல்லை’, பாட்டு இசைக்கும் கருவிக்கு, ’இந்தப் பாடலை இசை’ என்று ஆணையும் அனுப்பியது.
  • விளக்குகள் உயிர்பெற்று இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, ‘நெல்லை’ ஜன்னல்களுக்கு ஆணை அனுப்பியது என்று வைத்துக் கொள்வோம்
  • ஜன்னல்கள் ஒளியை உள்ளே அனுமதித்ததும், விளக்குகள் (இரு அறைகளில்) ‘நெல்லை’ –க்குத் ’தேவைக்கு அதிகமான ஒளியுள்ளது. 6:02 –க்கு, நான் அணைந்து விடுகிறேன்’ என்று ‘நெல்லை’ –க்குச் செய்தி அனுப்பியது
  • சுப்ரபாதம் இசை முடிந்ததும், இசைக்கருவி, ‘நெல்லை’ – க்குப், பாடல் முடிந்துவிட்டது என்று 6:20 –க்கு இன்னொரு செய்தி அனுப்பும்

இவ்வளவு சின்ன விஷயத்திற்காக 6 உரையாடல்கள். ஒவ்வொரு புள்ளியிலும் உள்ள கருவிகளின் ‘வளவள’ எவ்வளவு இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். அதுவும், இது ஒரு குடும்பத்தின் கருவிகளின் ஒரு நாள் உரையாடல். இதைப் பல கோடி குடும்பங்களாக எண்ணிப் பாருங்கள் – தலை சுற்றும் அளவிற்கு, கருவி உரையாடல்கள் உருவாகும் சாத்தியக்கூறுகள் உள்ளன. இளைஞர்களின் இன்றைய ‘வாட்ஸ் ஆப்’ மிகச் சாதரணமாகப் படும்! சில இளைஞர்/ இளைஞிகளாவது கொஞ்சம் உரக்கச் சொன்னால் குறைவாகச் செய்வார்கள். கருவிகள், யார் பேச்சையும் கேட்காது. தேவையோ, இல்லையோ, கருவிகள், இயங்கிக் கொண்டே இருக்கும் (பழுதான சமயம் தவிர) – ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கும்.

 

IOT part2-pic3சொல்லப்போனால், இந்த உரையாடல் நமக்கு புதிதே அல்ல. இது போன்ற கருவி உரையாடல்கள், ஒவ்வொருவருடைய காரிலும் (2007 –க்கு பிறகு உள்ள பெரும்பாலான கார்கள்) ஒவ்வொரு நாளும் நடக்கிறது. நாம் பெரிதாகக் கண்டு கொள்ளுவதில்லை. உதாரணத்திற்கு, காரைக் கிளப்பி, நீங்கள் அதன் விசையை அழுத்துகையில் என்ன நடக்கிறது?. எந்த சிலிண்டருக்கு எத்தனை காற்றும், பெட்ரோலும் தேவை என்பதை ஒரு கணினி முடிவெடுக்கிறது. பயணத்தின் ஒவ்வொரு கணமும் இந்த முடிவை பல்வேறு அளவுகளை வைத்து முடிவெடுக்கிறது. எஞ்சினுக்குள் எரியும் எரிபொருளின் வெப்பம் குறைக்க எண்ணை எஞ்சினை குளிர்விக்கிறது. எண்ணையின் வெப்பம் மற்றும் பாகுநிலையை (viscosity) அதே கணினி கண்காணித்துப் பெட்ரோல் மற்றும் காற்றின் அளவைக் கட்டுப் படுத்திக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு நொடியும், பல நூறு முறைகள் இந்த உரையாடல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. இதனால் தான், இன்றய கார்கள் பெட்ரோல் விஷயத்தில் சிக்கனமாக இருக்கின்றன. கார் விஷயத்தில், எல்லா உரையாடல்களும், பின்னணியில், காருக்குள்ளே நடந்து முடிந்து விடுகிறது. எப்பொழுதாவது, முகப்புப் பெட்டியில் (dashboard), ‘கோளாறு’ என்று அலறும் வரை நாம் கண்டு கொள்வதில்லை.

சரி, எங்கே இதில் இணையம் வந்தது? இதுவரை நாம் பார்த்த உரையாடல்கள் யாவையும், காருக்குளேயோ, வீட்டின் கணினிக்குள்ளோ அடங்கிவிட்டது. நாம் பார்த்த உதாரணத்தில், ’மாலன்’ எந்திரங்களின் பல விவரங்களைச் சேகரித்து வைக்கும் என்று கொள்ளலாம். அத்தனை எந்திரக் கருவிகள் ஒவ்வொரு நிமிடம் அனுப்பும் அளவுகளையும் நிறுவனத்தின் ஒரு வழங்கி வயலில் திரட்டி வைக்கப்பட்டிருக்கும் என்றும் கொள்ளலாம். மேல்வாரியாகப் பார்த்தால், உதிரி பாகங்களை மாற்றும் முடிவை, இது போன்ற விவரங்களைக் கொண்டு கணினி முடிவுக்காக முன் வைக்கிறது.

 

IOT part2-pic4சற்று ஆழமாக அலசினால், சில விஷயங்கள் தெளிவாகும்:

  • கருவிகள், ஒரு எந்திரத்திலுள்ள சிறு செயலியுடன் (processor) தொடர்பு கொள்கிறது
  • செயலி, தேவைக்கேற்ப, கருவியுடன் தொடர்பு கொண்டு, ஆணை பிறப்பிக்கும் வல்லமை கொண்டது
  • ஒரு தொழிற்சாலையில், இது போல பல எந்திரங்களுக்கும், தலா ஒரு செயலி செயல்படும்
  • எல்லா எந்திரச் செயலிகளையும் இணைக்கும் வேலையை நிறுவனத்தின் வழங்கி வயல் செய்கிறது
  • இதைத்தான் கருவிகளின் இணையம் என்று சொல்லுகிறார்கள். நிறுவனத்தின் வழங்கி வயலுக்குப் பதில், இணையத்தில் ஒரு மேக சேகரிப்பு (cloud storage) மையத்திலும் சேகரிக்கலாம்
  • முக்கியமாக, இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், ஒவ்வொரு படியிலும், முடிவாற்றல் திறன் (இதை கணினி ஆசாமிகள் intelligence என்று குழப்புகிறார்கள்) அதிகரித்துக் கொண்டே இருக்கும். சில முடிவுகளை எந்திரச் செயலிகளே எடுத்து விடலாம். இன்னும் சில சிக்கலான முடிவுகளை, செயலிகளை இணைக்கும் மையத்தில் முடிவெடுக்கலாம். உதாரணத்திற்கு, சென்னைத் தொழிற்சாலை செயலிகள் ஒரு தொழில்பகுதி கணினியால் (plant computer) இணைக்கப்படலாம். அந்தத் தொழில்பகுதியில், 3 ஷிஃப்ட் இருந்தால், ஷிஃப்ட் இடைவேளையில் செய்யப்பட வேண்டிய சில செயல்களை தொழில்பகுதி கணினி முடிவெடுக்கலாம். உதாரணத்திற்கு, தொழிற்சாலைத் தரைகளைச் சுத்தம் செய்யும் ரோபோக்களை இயக்குவது, ஆட்கள் அதிகம் இல்லாத பகுதிகளில் , விளக்குகளை சன்னமாக்குதல் போன்ற முடிவுகளுக்கு நிறுவனத்தின் வழங்கிகள் தேவையில்லை

பல கோடி புதிய கருவிகள், உணர்விகள் இணையத்தையே ஒரு கேள்விக்குறியாக்கும் சக்தி படைத்தது. எனினும், இந்த முன்னேற்றம் தடுக்க முடியாதது. புதிய சிந்தனை, அணுகுமுறைகள் அவசியமாகிறது.

எப்படி, இங்கு திடீரென்று வழங்கி வயல் (server farm) பற்றிய பேச்சு அடிபட்டது? நாம் சொன்ன தொழிற்சாலை உதாரணத்தில், பல நூறு எந்திரங்களின் பல கருவிகள், நாள் முழுவதும், ஓயாமல் வெப்பம், ஒளி, அழுத்தம், எடை, அசைவு, சத்த அளவு, பருமன், நேரம் என்று அளவுகளை அனுப்பிய வண்ணம் இருக்கும், இதற்கான சேமிப்புத் தேவை இதுவரை நாம் காணாத அளவு அதிகமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இத்தனை ராட்சச சேமிப்பு மற்றும் செயல்படுத்தும் திறனுக்கு வழங்கி வயல்களை விட்டால் வேறு வழியில்லை. நல்ல வேளையாக, இத்தகைய வசதிகள் நாளுக்கு நாள் விலை குறைந்த வண்ணம் இருப்பதால், இந்தத் தொழில்நுட்பம் விரைவில் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

சொல்வனம் – ஆகஸ்ட் 2015