கருவிகளின் இணையம் – ஒரு பருந்துப் பார்வை – பகுதி 1

2015 –ன் ஆரம்பத்தில் நடந்த நுகர்வோர் கருத்தரங்கில், சாம்சுங்கின் தலைவர், ஒரு பி.எம்.டபிள்யு. காரை நுண்ணறிப்பேசியில் அழைக்க, அவரை நோக்கி விரைந்த, அந்தக் கார், அவர் முன் வந்து நின்றது. காரில் ஏறியவுடன், அவருடைய நுண்ணறிப்பேசி மூலம், சென்றடைய வேண்டிய இடத்தைச் சொல்ல, காரும் அங்கே செல்லத் தொடங்கியது. காரில் ஓட்டுனர் எவரும் இல்லை.

2015, ஜூலை மாதம் க்ரைஸ்லரின் ஜீப் வண்டிகளை இணையம் மூலம் ஓட்டுனரிடமிருந்து கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய விஷயம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. என்ன, ஓடும் காரை இன்னொருவர், இணையம் மூலம் கட்டுப்படுத்த முடியுமா?

மேலே சொன்ன இரு விஷயங்களும், எப்படி இணையத்துடன் இணைக்கப்பட்ட கருவிகள் நம்முடைய வாழ்க்கையை மாற்ற போகின்றன என்பதற்கு உதாரணம். கருவிகள், (devices) அல்லது உணர்விகள் (sensors) என்பது நமக்கெல்லாம் ஓரளவு பரிச்சயமான சொற்கள். ஆனால், இதற்கும் இணையத்திற்கும் (internet) என்ன சம்பந்தம்?

இன்றைய நோக்கில் அதிக சம்பந்தம் இல்லாதது போலத் தோன்றினாலும், நாம் இங்கு பார்த்த இரு உதாரணங்கள் இந்த சம்பந்தத்தின் நல் முகம் மற்றும் தீய முகத்தையும் காட்டுகின்றன. இன்று, நம்முடைய நுண்ணறிப்பேசியை (smart phone) ஒரு கருவியாக நாம் பார்க்கிறோம். அதில், இணையம் மூலம் விடியோக்களைப் பார்க்கிறோம், பண்பலை வானொலிகளைக் கேட்கிறோம். கருவி இணையத்தின் ஆரம்ப நிலை, நமது இன்றைய நுண்ணறிப்பேசி.

கணினி, மற்றும் மின்னணுவியல் தொழில்நுட்ப வல்லுனர்கள் எதிர்காலத்தில் (அதாவது, இன்னும் 5 முதல் 10 வருடத்திற்குள்) இவை ஒருங்கிணைந்து விடும் என்று சொல்லி வருகிறார்கள். வழக்கம் போல, இது ஒரு குத்து மதிப்பான மதிப்பீடு. இதில், பல பிரச்னைகள் தீர்க்கப் பட வேண்டும். மேலும் பல வகை பயன்பாடுகள், மக்களால் அரவணைக்கப்பட வேண்டும். இவற்றையும் தாண்டி, கருவிகளின் இணையச் செயல்பாடுகள், என்றும் இல்லாத அளவு, இன்று ஒரு பெரும் தொழில்நுட்பப் புரட்சியை உருவாக்கும் சக்தி வாய்ந்தது என்று பல தொழில்நுட்பப் போட்டியாளர்களால் பொதுவாக ஒப்புக் கொள்ளப் படுகிறது. இந்தக் கட்டுரைத் தொடர், இவ்வகையான கருவிகளின் இணையம் (internet of things) பற்றிய அறிமுகம். இவ்வகைக் கருவிகளினால், வரப்போகும் பயன்கள், பிரச்னைகள், சமூக மாற்றங்கள் பற்றிய அலசலே இக்கட்டுரைகள்.

 

IOT part1-pic1

ஆரம்பத்தில், 1990 -களில் இணையம் என்பது பொது மக்களை, மின்னஞ்சல் எனும் பயன்பாட்டை நோக்கி பயணிக்க வைத்தது. பொதுவாக, இந்த காலகட்டத்தில், மனிதர்களைவிட, கணினிகளின் இணையம் உருவாகியது. இன்று, சில முதியவர்கள் மின்னஞ்சல் அனுப்பத் தயங்குவதைக் கிண்டல் செய்யும் நாமும் தடுமாறிய காலம் 1990 –கள். நாம் இணையத்துடன் தொடர்பு கொண்ட ஆரம்ப காலம் அது. 2000 –களில் செல்பேசிகள் ஒரு புறமும், சமூக வலையமைப்பு பயன்பாடுகள் (முகநூல், டிவிட்டர்) பெரிதாக அங்கீகாரம் பெற்றன. செல்பேசிகள் மனிதர்களின் இணையம் உருவாக உதவியது என்று சொல்லலாம். மனித வரலாற்றில் என்றும் இல்லாத அளவு, தூரத்தை வென்ற மனிதத் தொடர்பு உருவாகியதும் செல்பேசிகளால் என்றால் மிகையாகாது. துவையல் சரியாக வரவில்லை என்றால், நன்றாக சமைக்கத் தெரிந்த 1,000 கி.மீ. தொலைவில் உள்ள அக்காவை இரவு 9 மணிக்கு அழைக்கும் பழக்கம் உருவாகியது இந்த காலத்தில் தான்.சமூக வலையமைப்பு பயன்பாடுகள் அடுத்த கட்டமாய், சமூகங்களின் இணையம் உருவாக உதவியது என்று சொல்லலாம். ஒரு இசை/விளையாட்டு நிகழ்ச்சிக்குச் சென்று, அங்கு நடப்பதை உடனடியே உலகிற்கு (அதாவது, தொடர்புடைய சமூகத்திற்கு) அறிவிக்கும் வழக்கம் வலையமைப்பு பயன்பாடுகள் உருவாக்கிய சமீபத்திய நிகழ்வு.

இவ்வாறு, நாம் கடந்த 25 ஆண்டுகளில், முதலில், கணனிகளுடன் உடன் தொடர்பு, பிறகு, தொலைவில் உள்ள மனிதர்களுடன் உடன் தொடர்பு , பிறகு, உலகின் வெகு தொலைவில் உள்ள மனித சமூகங்களுடன் உடன் தொடர்பு என்று வளர்ந்து வந்துள்ளோம்.

சில நூறு கணினிகள் இணைந்த அமைப்பு இணையம் என்று ஆரம்பித்து, அது பல்லாயிரம் கணினியாகி, அத்துடன் பல லட்சம் செல்பேசிகள்/நுண்ணறிப்பேசிகள் (cell phones/smart phones) இணையத்தில் இணைந்தன. இது, இணையம் நம்மைத் தேடி கையளவில் வந்த காலம் எனலாம். செல்பேசிகளுக்கும் கணினிகளுக்கும் (வில்லை, மடி, கை, காது என்று எல்லா வகையும் இதில் அடங்கும்) அதிக வித்தியாசமில்லாமல் போகவே, இணையம் என்பது பல நூறு கோடி கணினிகளின் அரட்டை அரங்கமாக இன்று மாறியுள்ளது. செல்பேசி மற்றும் கணினி அரட்டைகள் போதாதென்று இன்னும் பல நூறு கோடி கருவிகள் இணையத்தில் அரட்டை நிகழ்த்தப் போகின்றன என்பது இன்றைய தொழில்நுட்பக் கணிப்பு. இன்றைய இணையம் நாம் திரும்பி நகைக்கும் 1990 –களில் உருவான இணையம் போல இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் தோன்றும்! சில மதிப்பீடுகளின்படி, 2020 –களில் 2,600 கோடி கருவிகள் இணையத்தில் விளையாடும் என்கிறார்கள். 850 கோடி மனிதர்களுக்கு எப்படி 2,600 கோடிக் கருவிகள் இருக்கும்? ஏதோ உதைப்பது போல இருக்கிறதா? இந்தத் தொழில்நுட்பம் எதிர்பார்ப்பதைப் போல வளர்ந்தால், இதில் வியக்க ஏதுமில்லை. ஒவ்வொரு தொழிற்சாலையும், ஒவ்வொரு வீடும், மருத்துவ மனையும், பள்ளியும், வாகனமும், இத்தகைய இணைய அரட்டைக் கருவிகளை (ஓவ்வொன்றுக்கும் தலா பல கருவிகள்) கொண்டு வேலை செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுனர்கள்.

கீழே உள்ள யுடியூப் விடியோவில், இவ்வகை கருவிகளின் இணையத்தின் வீச்சை அழகாக சொல்லியுள்ளார்கள். இவை யாவும் என்னவோ இன்னும் 30 வருடங்கள் கழித்து நிகழும் போலத் தோன்றினாலும், முன்னமே சொன்னது போல, இவற்றின் சாத்தியம் 5 முதல் 10 ஆண்டுகளில் என்று நம்ப பல சாட்சியங்கள் இன்றே இருக்கிறது. பல புதிய பொருட்கள் இந்த எதிர்காலத்தை நோக்கி இன்றே பயணிக்கத் தொடங்கிவிட்டன. இந்தத் தொடரில், இவ்வகை பொருட்கள் பலவற்றின் அறிமுகம் தரவுள்ளேன்.

இன்று, பல புதிய டிவி –க்கள் இணைய வசதியுடன் வருகின்றன. காரின் ரேடியோ நம் செல்பேசியுடன் புளூடூத்தில் (Bluetooth) இணைகிறது. இது கருவிகளின் இணையம் ஆகுமா? இன்றைய சூழலில், இது உண்மை என்றாலும், இவை மிகவும் எளிமையான ஒருங்கிணைப்பு என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலும், ஒருங்கிணைப்பு, இணையத்துடன் அல்லாமல், சூழலில் உள்ள மற்ற அமைப்புகளோடு (கார் ரேடியோ, டிவி மற்றும் ரெளடர்) தொடர்பு நடக்கிறது. கருவிகள் இணையத்துடன் தொடர்பு கொண்டால் மட்டும் போதாது. முடிவுகளை அந்தந்த சூழலுக்கேற்ப தானே எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால், நமக்கு இக்கருவிகளால் பயன், பன்மடங்கு அதிகரிக்கும் என்பது வல்லுனர்களின் எண்ணம்.

இந்த விதக் கருவிகள் எப்படி நம் அன்றாட வாழ்வை பாதிக்கலாம் என்று ஓரளவிற்கு புரிந்து கொள்ள, இன்றைய அன்றாட நிகழ்வு ஒன்றை, முதலில் பார்க்கலாம் (சாதாரண நிகழ்வு என்பதால், சரியான அறுவை என்று இதைத் தாண்டிச் சொல்ல தயவு செய்து முயற்சிக்காதீர்கள்). அதே நிகழ்வுகள் சில ஆண்டுகளுக்குப் பிறகு (5 முதல் 10 ஆண்டுகளுக்குள்) எப்படி நிகழலாம் என்றும் பார்க்கலாம். கருவிகள் இணையத்துடன் இணைந்து உருவாக்கும் தாக்கத்தை புரிந்து கொள்ள, இவ்வகை கற்பனை நிகழ்வுகள் உதவலாம்.

முதலில் ஒரு சின்ன பின்னணி. மனோகர், சென்னையில் பெஸண்ட் நகரில் தன்னுடைய மனைவி அகிலா மற்றும் 11 வயது மகள் செல்வியுடன் வசிக்கிறார். அவருக்கு அம்பத்தூரில் ஒரு கார் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் உற்பத்தி மேலாளர் வேலை. அகிலா கிண்டியில் வங்கி ஒன்றில் வேலை பார்க்கிறார். செல்விக்கு அடையாரில் பள்ளி.

  1. காலை ஏனோ அலாரம் சரியான நேரத்திற்கு ஒலித்தும் நாங்கள் எழவில்லை. மீண்டும் அலாரம் அலரவே (இதனாலே, தமிழில் அலார்ம் என்பது அலாரம் ஆகியதோ?) அடித்துப் பிடித்து, எழுந்து கொண்டோம். மணி 6:45 –ஐத் தொட்டு விட்டது. செல்வியை எழுப்புவதற்குள், மணி 7:00 ஆகிவிட்டது
  2. வழக்கமான காலை அவசரக் குளியல், செல்வியை தயார் செய்தல் எல்லாம் முடிந்து, டோஸ்டரில் கரிந்த ரொட்டியுடன் போராடி, எப்படியோ அகிலா காலை உணவை காப்பியுடன் 7:45 -க்குள் தயார் செய்து விட்டாள். செல்வியை தயார் செய்து, வெளியே கிளம்பும் பொழுது மணி 8:15 ஆகிவிட்டது
  3. காரில், யார் அந்த உதவாக்கரைப் பண்பலை ரேடியோவை அலரவிட்டது? காலை பயணத்தின் பொழுது, மனோகருக்கு கணேஷ் குமரேஷின் வயலின்தான் பிடிக்கும். சி.டி,-க்கு மாற்ற, இன்னும் சில நிமிடங்கள் விரயம்
  4. ஒரு வழியாக, காரை விரட்டி, செல்வியின் பள்ளிக்கு 9:00 மணிக்குள் சென்றடைய வேண்டும். இரண்டு சிக்னல்களைத் தாண்டியவுடன், வழக்கமான வழியில், பிரச்னை. கார்பரேஷன்காரர்கள் ரோட்டை வெட்டிப் பழி வாங்கினார்கள்.
  5. சில குறுக்குச் சாலைகளில் சென்று, பள்ளியை அடைகையில் மணி 8:55 ஆகிவிட்டது, வகுப்பிற்கு ஓடினாள் செல்வி
  6. காரை ஒரு வழியாக அம்பத்தூருக்கு விரட்டி தொழிற்சாலையை அடைகையில் மணி 9:40 ஆகியிருந்த்து. எத்தனை வேக எல்லைமீறல் டிக்கட் கிடைக்குமோ தெரியவில்லை
  7. அலுவலகம் சென்றடைந்தவுடன் அகிலா அழைத்தாள். அவசரமாக கிளம்பியதால், வீட்டைப் பூட்ட மறந்து, மீண்டும் வீடு திரும்பி, பூட்டிவிட்டு அலுவலகத்திற்கு அரை மணி நேரம் தாமதம் என்றாள். மாலை செல்வியை பள்ளியிலிருந்து அழைத்துச் செல்வதாகவும் சொல்லி வைத்தாள்
  8. வழக்கமான சில மின்னஞ்சல்களைப் பார்த்து முடித்து, 10:00 மணிக்கு, அன்றாட உற்பத்தி மீட்டிங். எங்கள் நிறுவனத்துக்கு, பூனே அருகில் இன்னொரு தொழிற்சாலையும் உண்டு, அன்று, பூனேயின் உற்பத்தி எதிர்பார்த்ததைவிடக் குறைவு. 1:00 மணிக்கு பூனேயில் என்ன பிரச்னை என்று அலசி, மேலிடத்திற்கு விளக்க வேண்டும்.
    சென்னையின் உற்பத்தி விவரங்களை ஆராய்ந்ததில், சரியாக இருந்தது போலதான் தோன்றியது, சென்னையிலும் பிரச்னை இருந்தால் என்னவாகியிருக்கும் என்று சில நொடிகள் ஒரு கவலை வந்து மறைந்தது
  9. மதியம் 1:00 மணி மீட்டிங்கில், ஒரு அழுத்தும் எந்திரம் (pneumatic press) சில நாட்களாகவே சரியாக வேலை செய்யாமல், பழுதாகியிருப்பது தெரியவந்தது. அதை சரி செய்ய 1 வாரம் ஆகும் என்றும், அதற்கான உதிரி பாகம் ஜப்பானிலிருந்து வர வேண்டும் என்றும் சொன்னார்கள். இன்னும் 1 மாதத்திற்கு அனைவரும் தாளிக்கப் படுவது நிச்சயம். விட்டு போன உற்பத்தியை வேறு சரி கட்ட வேண்டும்
  10. மாலை 4:45 –க்கு, காரை என்னுடைய அம்மா தங்கியிருக்கும் மாம்பலத்திற்கு செலுத்தினேன். அம்மாவுக்கு ரத்த அழுத்த நோய். ஓரளவு பார்த்துக் கொண்டாலும், அவ்வப்பொழுது மருந்து சாப்பிடுவதைச் சரியாகச் செய்வதில்லை. அன்று அம்மாவிடம் விசாரித்ததில், மருந்து சரியாக வேலையே செய்வதில்லை என்று குறை பட்டுக் கொண்டிருந்தார். மேலும், மாலை 4:00 மணி முதல், சற்று தலை சுற்றுவதாகவும் சொன்னார்.
  11. மாலை 7:00 மணி வரை அம்மாவுடன் இருந்துவிட்டு, வீட்டிற்கு கிளம்பி அடையாறு அருகில் வருகையில், டி.நகரில் எப்பொழுதும் வாங்கும் காப்பி பொடி, மற்றும் சில திண்பண்டங்கள் வாங்க மறந்தது நினைவுக்கு வந்தது. நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று வீட்டை அடைந்தார் மனோகர்
  12. செல்வியின் நாள் எப்படி இருந்தது என்று அம்மா வீட்டில் இருந்த பொழுதே அவள் செல்பேசியில் சொன்னாள். இரவு உணவின் பொழுது, அவளது பள்ளி நாளின் விவரங்கள் மேலும் சொன்னாள். அவளுடைய டீச்சர் அவள் சரியாக தண்ணீர் குடிப்பதில்லை என்றும் சொன்னாள்

அடுத்த பகுதியில், இதே நிகழ்வுகள், எப்படி கருவி இணைய மயமான உலகில் நடக்கும் என்று பார்ப்போம்.

சொல்வனம் –  ஆகஸ்ட் 2015

இணையத்தின் திடீர் சாமியார்கள் – அந்தரங்கம் யாவுமே

விபூதி கொடுத்து உங்களுடைய பிரச்சினைகளை தீர்க்கிறோம் என்று கிடைத்ததை சுருட்டும் சாமியார்களை பற்றி அறிந்து இவர்களை தவிர்க்கக் கற்றுக் கொண்டுவிட்டோம். ஆனால், இணையத்தில் உங்கள் அந்தரங்க விஷயங்களைப் பெறத் துடிக்கும் மோசடிக் கூட்டம் பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை.

உங்களிடமிருந்து நீங்கள் அறிந்தும் அறியாமலும் மிக சாதுரியமாய் உங்களது அந்தரங்க நிதி சம்பந்தப்பட்ட முக்கிய விஷயங்களைப் பெறும் முயற்சிகளுக்கு ‘ஃபிஷிங்’ (phishing) என்கிறார்கள். பொதுவாக ‘ஃபிஷிங்’ முறைகள் பல தொடர்பு மீடியாக்கள் மூலம் செய்யப் பட்டாலும் (கடிதம் மற்றும் தொலைபேசி) இக்கட்டுரையில் இணையத்தில் நடப்பவை பற்றி சற்று அலசுவோம்.

ஆப்பிரிக்க சர்வாதிகாரி பெரிய சொத்தை விட்டு விட்டு மண்டையை போடும் சமாச்சாரம் நினைவிருக்கிறதா? அதன் வளர்ந்த, முதிர்ந்த மோசடி வடிவம்தான் ‘ஃபிஷிங்’ . பொதுவாக, இவர்கள் அனுப்பும் கடிதம் ஒரு பெரிய நிதி நிறுவனத்திலிருந்து தொடர்பு கொள்வதைப் போல தோன்றும். இம்மாதிரி நடிப்பு மின்னஞ்சல்களை பல்லாயிரம் பேருக்கு அனுப்புவார்கள். மிக சாதுரியமாய் எழுதப்பட்ட மின்னஞ்சல். ஆயிரக்கணக்கான அஞ்சல்கள் அனுப்புவதில் சில ஏமாளிகள் கிடைத்தாலே இவர்களுக்கு வெற்றி. மின்னஞ்சல் அனுப்ப அதிகம் செலவொன்றும் இல்லை.

pic121

அப்படி உங்களிடமிருந்து என்ன எதிர்பார்கிறார்கள்? பெரிதாக ஒன்றும் இல்லை – உங்களது கிரெடிட் கார்டு எண், அதன் பாதுகாப்பு எண், உங்களது வங்கிக்கணக்கின் கடவுச்சொல் (password) , உங்களது அரசாங்க எண், அல்லது உங்களது தாயின் பிறப்புப் பெயர். இதை வைத்து என்ன செய்வார்கள்? முதலில் உங்களது கிரெடிட் கார்டில் சில சின்ன சில்லரைப் பரிவர்த்தனைகள் செய்து சரி வருகிறதா என்று பார்ப்பார்கள். பிறகு, முடிந்த வரை சுருட்டல்தான். இதே போல ‘பே பால்’ (Pay Pal) போன்ற வசதிகளின் எண் மற்றும் கடவுச் சொல் கிடைத்து விட்டால், சில பல டிவி, குளிர்சாதன பெட்டி, சோபா என்று உங்கள் செலவில் புதுக் குடித்தனமே ஆரம்பித்து விடுவார்கள்!

எப்படி உஷாராவது? முதலாக, உங்கள் பெயர் முருகன் என்று வைத்துக் கொள்வோம். இவர்கள் அனுப்பும் மின்னஞ்சலில் உங்களது வங்கியின் சின்னம் (logo) நிஜம் போலவே இருக்கும். ஆனால், ‘அன்பான வாடிக்கையாளரே’ என்றுதான் தொடங்குவார்கள், ‘அன்பான திரு முருகன் அவர்களே’ என்று எழுதுவதில்லை. உடனே உஷார்! இவர்களது மின்னஞ்சலில் உங்கள் வங்கி அனுப்புவது போலவே ஒரு இணைப்பு (link) வேறு தருவார்கள். உங்களது நலன் மேல் அக்கறையுடன் , ”உங்கள் கிரெடிட் கார்டில் மோசடி நடந்திருப்பது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. தயவு செய்து கீழே உள்ள இணைப்புக்கு சென்று உங்களது உண்மையான எண் மற்றும் பாதுகாப்பு எண்களை பதிவு செய்து விடுங்கள்!” என்று அன்பை பொழிவார்கள். அப்படியே நீங்கள் ”திரு. முருகன் அவர்களே” இல்லாததைக் கவனிக்காவிட்டாலும், இணைப்பின் மேலே மெளசை மேவ (க்ளிக் செய்யாதீர்கள்) விடுங்கள். இவர்களது இணைத்தளத்தின் முகவரி மூலம் (உங்கள் வங்கி இணைத்தள முகவரி இருக்காது) குட்டு அடிபடும். இது இரண்டாவது உஷார்.

இது போன்ற மின்னஞ்சலுக்கு சரியான இடம் ஸ்பாம் (Spam) என்ற விசேஷ குப்பைத்தொட்டி. ஏதாவது சந்தேகம் இருந்தால் உங்கள் வங்கியை அழைத்து பேசுங்கள். மேற்கத்திய வங்கிகள் இது போன்ற ஏமாற்றுக்கார பரிவர்த்தனைகளை மென்பொருள் கொண்டு உடனே (24 மணி நேரத்துக்குள்) பிடித்து, கார்டு சொந்தக்காரரைத் தொடர்பு கொண்டு உங்களது பரிவர்த்தனையா என்று விசாரிக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், நான் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும் என் வங்கியைத் தொடர்பு கொண்டு இந்தியா செல்வதைத் தெரிவிப்பேன். இல்லையேல், மியூசிக் லேண்டில் கணக்கர் அலுத்துக் கொள்வதைக் கேட்க வேண்டி வரும், ‘அரை ட்ராயரும், தண்ணி பாட்டிலும் எடுத்துட்டு ஃபாரின்லிருந்து வந்துர்றாங்க. கிரெடிட் கார்ட் மட்டும் உதைக்குது!”

ஒட்டுக் கேட்தல்

தமிழ் சினிமாக்களில், கதாநாயகி, காதலனுடன் மாடியில் பேசுவதை கீழே அவரது அப்பா ஒட்டுக் கேட்பார். உடனே கதாநாயகியைத் தரதரவென்று இழுத்து கொண்டு ஒரு படுக்கையறையில் தள்ளி கதவை சாத்துவார். அதென்ன, அத்தனை இந்திய சினிமா கதாநாயகிகளும் மல்லாக்கவே படுக்கையில் விழுந்து அழுகிறார்கள்? இதைப் பற்றி யாராவது ‘சொல்வனத்தில்’ ஆராய்ச்சி செய்தே ஆக வேண்டும்! பிறகு கதாநாயகிக்கும் கதாநாயகனுக்கும் கைத் தொலைபேசியில் உரையாடல் தொடர்கிறது! கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கைத்தொலைபேசியில் ஒட்டுக் கேட்பது சற்று கடினம். சிம் கார்டை வேறு மாற்றி பேசுபவரின் அடையாளத்தைக் கண்டு கொள்வது மிகவும் கடினமாக்கப் படுவதை நாம் பல சினிமாக்களில் பார்க்கிறோம்.

pic13கணினியும் தொலைதொடர்பியலும் கல்யாணம் செய்த காலம் போய், இணையத் தொலைதொடர்பு (Internet Telephony) என்ற குழந்தையே பிறந்துவிட்ட காலம் இது. ஒட்டுக் கேட்பது ஒரு அந்தரங்க மீறல். கை தொலைபேசி போன்ற கருவிகளில்லாத காலத்தில் இருந்தே ஒட்டுக் கேட்தல் (wire tapping) நடந்து வரும் ஒரு சமாச்சாரம். ஒட்டுக் கேட்பதற்கு சட்டப்படி ஒரு தேடுதல் ஆணை (warrant) தேவைப் பட்டது. ஆரம்ப காலத்தில், தொலைபேசிப் பரிமாற்றம் (phone exchange) வழியாக ஒரு மனித உதவியுடன் இணைப்புகள் கொடுக்கப்பட்டு வந்தன. தொலைபேசிப் பரிமாற்றத்தில் ஒரு சிறு மாற்ற்ம் மூலம் இருவர் பேசுவதை பாதுகாப்பு மற்றும் சட்ட நிர்வாகப் பணிமணைகள் கேட்க முடிந்தது. ஓரளவுக்குக் குற்றவாளிகளைப் பிடிக்க இது தேவையாகவும் இருந்தது.

நிலமை ரொம்ப மாறிவிட்டது. கைத்தொலைபேசித் தொழில்நுட்பம் மிகவும் மதிநுட்பமிக்கதாக ஆகிவிட்டது. அத்தோடு இணையத் தொலைதொடர்பு இன்னும் ஒட்டுக் கேட்பதை கடினமாக்கிவிட்டது. ’இன்னிக்கு டான்ஸ் வ்குப்பில் என்ன சொல்லிக் கொடுத்தா உங்க டீச்சர்?’ என்று சென்னையில் உள்ள பாட்டி, மேஜிக் ஜாக்கில் மயாமியில் உள்ள பேத்தியை விசாரிப்பாள். இணையம் மூலமாகப் பேசும் பாட்டியின் தொலைபேசி எண்ணை பார்த்தால். பாஸ்டனிலிருந்து பேசுவதைப் போலத்தான் சொல்ல முடியும். இது இணைய தொழில்நுட்ப விந்தை. (Local Number Portability என்ற இடமற்ற நுட்பம்) இதே போல பெய்ரூட்டில் வாழும் ஒரு ஹெஸ்புல்லா தீவிரவாதி தன் அமெரிக்கக் கூட்டாளியுடனும் எதையாவது தாக்கத் திட்டம் போட முடியும். pic14சிக்கல் என்னவென்றால், இரு பேச்சாளர்களிடையே, சில பல தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் உள்ளன. மயாமி உரையாடலை எடுத்துக் கொள்வோம். சென்னை நகரத்தில் உள்ள பல இணைய சேவை நிறுவனத்தில் ஒன்றின் மூலமாக உரையாடலின் ஆரம்பம். பிறகு மேஜிக் ஜேக் நிறுவனம். இத்தனைக்கும் பாட்டிக்கு, ஒரு பாஸ்டன் நகர எண்ணிலிருந்து தான் அழைப்பது தெரியாது. பிறகு, மயாமியில் உள்ள பல இணைய சேவை நிறுவனத்தில் ஒன்றின் மூலமாக உரையாடலின் முடிவு. நடுவில், சாட்டிலைட்,, மைக்ரோவேவ், கோஆக்ஸ் போன்ற சிலபல தொட்ர்பு இடை சமாச்சாரங்கள். எப்படி ஒட்டுக் கேட்பது? தேடுதல் ஆணை என்பது உள்நாட்டு சட்ட ஆணை. தோற்றத்தில் உள்நாட்டு உரையாடல் போல தோன்றினாலும், இது ஒரு பன்னாட்டு உரையாடல்.

ஸ்கைப் போன்ற வசதிகள் இதை மேலும் சிக்கலாக்கியுள்ளன. இரு ஸ்கைப் பேச்சாளர்கள் இடையே தொலைபேசி எண்ணே தேவையில்லை. சதி செய்கிறார்களா அல்லது வியாபாரம் பேசுகிறார்களா என்றே சொல்ல முடியாது. இந்த வளர்ச்சி ஓரளவுக்கு தனிப்பட்டோர் அந்தரங்கக் காவலுக்கு வெற்றி என்று கொண்டாலும், பொது நலன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது. இந்த விஷயத்தில் இரு பக்கம் இருப்பது தெளிவு. தனி மனித அந்தரங்கம், நம் அரசியல் சாசனத்தில் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளத்தால், இது ஒரு ஜனநாயகப் பிரச்சினை. பயங்கரவாதத்தால், இது ஒரு பாதுகாப்புப் பிரச்சினையும்கூட. உலகின் பல்வேறு ஜனநாயக நாடுகளில் அதிக சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஒரு முக்கிய விஷயம் இது.

மெய் அந்தரங்கங்கள்

காவல் துறையினர் குற்றங்களைக் கண்டுபிடிக்க 100 ஆண்டுகளுக்கு மேலாகக் கைரேகையை உபயோகித்து வருகிறார்கள். அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (homeland security) ஒரு படி மேலே போய், பயணிகள் சிலரிடம் பத்து விரல் ரேகைகளையும் பெற்றுக் கொண்டு அவர்களது நாட்டுக்குள் அனுமதிக்க முடிவெடுக்கிறார்கள். விரல்கள் ஒவ்வொருக்கும் வெவ்வேறு ரேகையுண்டாம். ஒரு விரல் ரேகையை ஏமாற்றி விடலாம். ஆனால் பத்து விரல் ரேகைகளை வைத்து ஏமாற்றுவது சற்று கடினம். பல உயர் பாதுகாப்பு தளங்களில் பத்து விரல் ரேகையுடன் எண்ணைப்பசை மற்றும் உஷ்ணம் கொண்டு ப்ளாஸ்டிக் பித்தலாட்டம் நடக்கிறதா என்று மிக சக்தி வாய்ந்த வருடிகள் முடிவெடுக்கின்றன. புதிய மடிக்கணினிகளில் கைரேகை வருடிகள் (scanner) வரத் தொடங்கிவிட்டது. இதைப்பற்றி அதிகம் பேசப்படாத சமாச்சாரம் இது: ஒரு ஆயிரம் வருடல்களில் 5 வருடல்களாவது தவறு செய்ய வாய்ப்புள்ளது. சமுதாயப் பார்வையில் கைரேகை என்பது குற்றங்களுடன் சேர்த்து பார்க்கப்படுகிறது. ஒருவரின் கைரேகை எடுக்கப்பட்டால், அவரைப் பற்றிய மதிப்பீடு கீழிறங்குவது இயல்பு. இது மாறுவது மேற்படி நடைமுறைகள் பரவலானால் ஏற்படலாம்.  ஆனால் மேற்படி நடைமுறைகள் இந்த மதிப்பீடுகளுக்கு வணங்கி மாறுதல்களை அடைவதும் நேருமா என்று பார்க்க வேண்டும்.

pic15முக வடிவு வருடிகள் (Facial Scan) பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், முகவடிவு மாறக்கூடியது. தாடி, மீசை வளர்த்தாலோ, அல்லது சிகை அலங்காரம் மாறினாலோ வருடிகள் குழம்பி தப்பு முடிவெடுக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலும் முகவடிவு கைரேகை மற்றும் இதர நுட்பங்களுடன் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தனியாக முடிவெடுக்க உகந்த நுட்பமில்லை. இதுவும் குற்றவாளிகளை தேட காவல்துறையினர் உபயோகிக்கும் முறைகளில் ஒன்று.

கருவிழி வருடிகள் (iris scanning) பல உயர் பாதுகாப்பு தளங்களில் சில வருடங்களாக உபயோகப்படுத்தப்படுகிறது. பல ஹாலிவுட் சினிமாக்களில் பார்த்திருப்பீர்கள். கை ரேகையுடன் கருவிழி (ஸ்டார் ட்ரெக்கில் புளித்துப் போன விஷயமிது!) வருடலும் செய்தவுடன் ஒரு விpic16னோத  கதவு வழக்கத்துக்கு மாறாக புதுக் கோணத்தில் திறக்கும்! கருவிழிகள் மனிதருக்கு மனிதர் மாறுபடுமாம். முக வடிவு அளவு இல்லாவிட்டாலும், கருவிழி வருடல்களிலும் தவறு நேர வாய்ப்புள்ளது. அத்தோடு, இப்புதுமை வருடி செயலாக்கு அல்காரிதம் தனியார் நிறுவனங்களால் உருவாக்கப்பட்டவை. நீதி மன்றத்தில் செல்லாது. பொது மக்களுக்கு இதன் செயல்முறைகள் வெளியிடப்படுவதில்லை.

மனிதக் குரல் வைத்து பாதுகாக்கும் துறை இப்பொழுதுதான் வந்துள்ளது. ‘சிவாஜி’, ரஜினிக்கு வேண்டுமானால் உதவியாக இருக்கலாம். ஜலதோஷம் பிடித்தால் குழம்பி விடும்!

இது போன்ற மனித உறுப்புகள் வழி வருடல்கள் பயோமெட்ரிக் வருடல் (biometric scanning) என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. இம்முறை வருடல்கள் ஒரு தனியார்/அரசு நிறுவனத்தின் அனுமதிப்புக்கு (authentication) உகந்த நுட்பங்களே.  பரந்த திரளுக்கு இவற்றைப் பயன்படுத்துகையில் சிக்கல்கள் எழலாம்.

விமான நிலையங்கள் மற்றும் பல பொது இடங்களில் செய்யப்படும் வருடல் பதிவுகள் (scanned electronic records) ஒரு தனி நபர் சொத்து. பாதுகாப்புக்காக செய்யப்பட்டாலும் மின்னணுப் பதிவாக இருப்பதால் எளிதில் திருடப்பட வாய்ப்புள்ளது. தவறான கைகளில் சிக்கினால் இதைக் கொண்டு ஒரு அப்பாவிக்குப் பல சிக்கல்கள் ஏற்படுத்த முடியும். இந்த விஷயத்தில் தனியார் நிறுவனங்களும் அரசாங்கமும் மூச் – அதிகம் பேசுவதில்லை. கைரேகை சமாச்சாரம் குற்றங்களை ஆய்ந்து தண்டனை அளிப்பதறகு என்று நாம் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் மற்ற பயோமெட்ரிக் விஷயங்களில் பொதுமக்களை, நம்மைக் கலந்து ஆலோசிக்காமல்  ரகசியத்தில், அவசரமாக முடிவெடுப்பது சற்று உறுத்தத்தான் செய்கிறது. ஓரளவுக்கு இது அரசாங்கங்கள் தனிநபர் அந்தரங்க உரிமைமீது நடத்தும் தாக்குதல்தான். ஜனநாயக முறையில் நாம் வாக்களித்து அமர்த்திய அரசாங்கமே சட்டத்தை உபயோகித்து, பாதுகாப்பைக் காரணம் காட்டி இப்படி செய்வது நவீன வாழ்க்கையின் சோகம்.

விடியோ கண்காணிப்பு

விடியோ காமிராக்கள் மிக மலிந்து விட்டதால், அவற்றின் பழைய உபயோகங்கள் சற்று பழகிவிட்டன. வளரும் குழந்தையின் வளர்ச்சிக் குதூகலங்கள், பழைய நண்பர்களுடன் சந்திப்பு என்று எழுதத் தொடங்கினால் பலர் அடுத்த கட்டுரையை படிக்கப் போய்விடுவார்கள். மேற்கத்திய நாடுகளில் சர்வ சாதாரணமாக ஒவ்வொரு நாளும் நடக்கும் நடைமுறை ஒன்றை பார்ப்போம்:

1. காலை மணி 6:00: சாமிநாதன் தன் காரை கராஜிலிருந்து வெளியே எடுக்கிறார். அவரது அடுத்த வீட்டு விடியோ விழித்து அவரின் செயல்களை பதிவு செய்கிறது.

2. காலை மணி 6:05: சாமிநாதன் சிவப்பாகி விட்ட ஒரு போக்குவரத்து விளக்கைக் (traffic light) கடக்கிறார். சிவப்பு விளக்கைப் பார்க்காமல் கார் ஓட்டுகிறாரா என்று ஒரு விடியோ அவரது காரை மீண்டும் பதிவு செய்கிறது.

3. காலை மணி 6:10: சாமிநாதன் ஒரு பெட்ரோல் பம்பிற்குள் சென்று காருக்கு பெட்ரோல் நிரப்புகிறார். காசு கொடுக்காமல் ஓடிவிடுவாரோ என்று விடியோ காமிரா அவரை பதிவு செய்கிறது.

4. காலை மணி 6:20: சாமிநாதன் அவரது வங்கியின் ஏடிஎமில் பணமெடுக்க செல்கிறார். அவரது முழு பரிவர்த்தனையையும் ஒரு சின்ன விடியோ காமிரா பதிவு செய்கிறது.

5. காலை மணி 6:20 முதல் 6:50 வரை: சாமிநாதன் ஒரு சின்ன டிவி நட்சத்திரமாகப் போகிறார். அவர் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. ஒரு பெரிய நெடுஞ்சாலைக்குள் நுழைந்து ஒரு 30 கி.மி. பயணிக்கிறார். ஒவ்வொரு 5 கி.மி.க்கும் ஒரு விடியோ காமிரா அவர் வேக எல்லைக்கு மேல் பயணிக்கிறாரா என்று பதிவு செய்கிறது. இது போக்குவரத்து நெரிசல் நிர்வாகத்துக்கும் உபயோகிக்கப்படுகிறது.

6. காலை மணி 6:55: சாமிநாதன் காஃபிக் கடை ஒன்றுக்குள் நுழைகிறார். அங்கும் அவரை பதிவு செய்ய ஒரு விடியோ தயார்.

7. காலை மணி 7:05: சாமிநாதன் அவருடைய கம்பெனி கார் நிறுத்துமிடத்திற்கு உள்ளே வருகிறார். கம்பம் ஒன்றுக்கு ஒரு விடியோ காமிரா அவர் எங்கு நிறுத்தினாலும் பதிவு செய்யத் தயாராக இருக்கிறது.

8. காலை மணி 7:10: சாமிநாதன் அவருடைய கம்பெனி நுழைவில் அவருடைய அடையாள ப்ளாஸ்டிக் அட்டையை ஒரு வருடியில் சறுக்குகிறார். அங்கும் ஒரு விடியோ காமிரா அவரது செயலை பதிவு செய்கிறது.

இது சாதாரண அன்றாட மேற்கத்திய நாட்டுக் காலை. மேலே சாமிநாதன் அவரது அலுவலகத்திற்குள் நுழையவே இல்லை. குறைந்தபட்சம் 13 முறை படமெடுக்கப்பட்டுள்ளார் (அவர் தாண்டிய சில பல போக்குவரத்து விளக்குகளை இங்கே விட்டு விட்டோம்).. சற்று யோசியுங்கள். அவர் என்ன கமலஹாசனா? அவரிடம் யார் அனுமதி கேட்டார்கள்? பார்க்கப் போனால் பாப்பராட்ஸி தொடரும் ஹாலிவுட் நடிகைக்கும், சாதாரண மனிதருக்கும் அதிக வித்தியாசமில்லை. சாதாரணமானவரின் புகைப்படத்தை யாரும் அச்சடித்துக் காசு பண்ணுவதில்லை. இத்தனைக்கும், படமெடுத்த பாதி காமிராக்கள் சாமிநாதனின் வரிப்பணத்திலிருந்து வாங்கியவை! இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பொது இடங்களில் விடியோ கண்கானிப்பு அதிகரித்து வருகிறது. தனியார் துறையில் பாதுகாப்புக்காக உபயோகம் செய்யப்படும் கண்காணிப்பைப் பற்றி நாம் இங்கு பேசப் போவதில்லை.

பொதுவாக விடியோ கண்காணிப்பு பொது மக்களின் பாதுகாப்புக்காக் செய்யப்படுவதாக அரசாங்கங்கள் சொல்கின்றன. இதில் ஓரளவுக்கு உண்மையுண்டு என்பதை மறுக்க முடியாது. உதாரணமாக, 1994ல் அமெரிக்கா ஓக்லஹொமாவில் நடந்த குண்டுத் தாக்குதலுக்கு முக்கிய துப்பு, ஒரு ஏடிஎம் காமிரா என்பதை அறிவோம். லண்டன் பாதாள ரயில் குண்டுத் தாக்குதலை நடத்திய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க விடியோ காமிராக்கள்தான் உதவின. போலிஸார் எல்லா குற்றம் நடக்கின்ற இடங்களிலும் இருக்க முடியாதே?  குற்றம் செய்வதே போலிஸார்தானே என்பீர்கள். அது வேறு விஷயம்!

விடியோ கண்காணிப்பு பற்றிய பொது விவாதம் சற்று சிக்கலானது. சில இடங்களில் காமிராக்கள் இருப்பது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தந்தாலும், அதுவே மிகையானால் பாதுகாப்பே சற்று பயமாக மாறுவது வினோதமானது. “உங்களிடம் மறைக்க ஒன்றும் இல்லையெனில் ஏன் பயப்பட வேண்டும்” என்பது ஒரு வாதம். ஆனால் இவ்வாதம் முக்கியமான ஒரு கோணத்தை புறக்கணிக்கிறது. “தனியொருவரின் அந்தரங்கம், அரசியல் சட்டத்தால் உத்தரவாதம் செய்யப்பட்டது. ஏன் அரசாங்கம் அன்றாட வாழ்க்கையில் ஊடுறவ வேண்டும்?” என்பது மிக முக்கியமான கேள்வி. மேலும் எல்லாரையும் எப்போதும் சந்தேகத்துடன் இந்தக் காமிராக்கள் பார்க்கின்றன என்பது சமூகத்தைப் பற்றி என்ன தெரிவிக்கிறது? மக்களை நம்ப முடியாது என்று கருதும் சமூகத்தின் இயல்பு என்ன வகை?

பொது இடங்களில் ஏறக்குறைய அந்தரங்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலை சற்று ஜீரணிக்க முடியாத ஒன்றாகவே படுகிறது. மிகப் பெரிய விளையாட்டு போட்டிகள் நடக்குமிடங்களில் (ஒலிம்பிக், ஓடிஐ,, சூப்பர் பெளல்) குற்றவாளிகளை பிடிக்க, குற்றங்களை தவிர்க்க விடியோ சாதனங்கள் உதவுகின்றன. இவ்விடியோ பிம்பங்களுடன், முக வடிவு கண்டறிதல் ( face recognition technology) தொழில்நுட்பமும் இணைந்தால், விளைவுகள் கவலைக்கு இடமளிக்கிறது. குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் மட்டுமே இந்த அரசாங்க தகவல் தளத்தில் சேமிக்கப்பட்டு இருக்கும் என்று யாரும் உத்தரவாத்ம் கொடுப்பதில்லை. இதே நுட்பம்தான் நமது விமான/ரயில் நிலயம் மற்றும் பல முக்கிய பொது இடங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது. காமிரா தொழில்நுட்பம் வளர்ந்து, காமிராக்கள் சுழன்று மற்றும் ஜூம் செய்து துல்லியமாய் படமெடுக்கும் திறனை பெற்றுவிட்டன. குத்து மதிப்பான ஒரு உருவத்தை மென்பொருள் கொண்டு துல்லியமாக்கும் திறமையும் இன்று வந்துவிட்டது.

விளைவு – தேவைப்பட்டால், உங்களின் ஒவ்வொரு பொது இயக்கத்தையும் அரசாங்கத்தால் கண்கானிக்க முடியும்.

கனடா போன்ற வளர்ந்த நாடுகளில், பொது மக்களின் அந்தரங்க பாதுகாப்புக்காக ஒவ்வொரு மாநிலத்திலும் Privacy Commissioner என்ற ஒரு உயர்பதவி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் எதை, எங்கிருந்து, எப்பொழுது, எப்படி கண்காணிக்கலாம் ஆகிய விதிமுறைகளை இந்த அமைப்பு வெளியிட்டு அமலாக்கவும் செய்கிறது. ஓரளவுக்கு இது போன்ற அமைப்புகள் பொது மக்களைத் தேற்றினாலும் அரசுடைய செயல்கள் குறித்த சந்தேகம் முழுவதும் நீங்கியதாகப் படவில்லை.

சில உருப்படியான யோசனைகள்

1. கிரிக்கெட் ரசிகரா நீங்கள்? டெண்டுல்கரே கேட்டாலும் உங்கள் கடவுச்சொல்லை கொடுக்காதீர்கள்.

2. கடவுச்சொல்லை சீரியஸாக எடுத்துக் கொள்ளுங்கள். சும்மா மகன் பேரை வைத்துக் கொள்ளாதீர்கள். இதற்கு பல நல்ல முறைகள் இருக்கின்றன. உதாரணம், நீங்கள் கடந்த பத்து வருடங்களில் 7 வீதிகளில் வசித்திருக்கலாம். அந்த 7 வீதிகளின் முதல் எழுத்தை, உங்களுடைய திருமண வருடத்தோடு இணைத்து ஒரு கடவுச்சொல்லை தேர்ந்தெடுக்கலாம். உங்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம் இது. குடும்பத்து உறவினரிடம் இக்கடவுச்சொல்லை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

3. ஒரு இணைத்தளத்தில் பதிவு செய்து அத்தளத்தை நிறைய உபயோகிக்க விருப்பமா? பதிவு செய்த உடனே அத்தளம் உங்களுக்கு அனுப்பும் கடவுச்சொல்லை உறுதிப்படுத்தும் மின்னஞ்சலை அழித்துவிட்டு, கடவுச்சொல்லை ஒரு முக்கிய புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

4. ஆர்குட்டில் தெரியும் என்று உங்களைப் பற்றிய அந்தரங்க விஷயங்களை மூன்றாமவரிடம் (நான்காமவர், ஐந்தாமவரும் இதில் அடங்கும்) பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

5. என்னிடம் ரகசியமே இல்லை என்று உங்கள் புகைப்படம் மற்றும் முகவரியை பகிரங்கமாய் ஃபேஸ்புக்கில் போட்டு அலட்டிக் கொள்ளாதீர்கள்.

6. கூகிள், ஹாட்மெயில், யாஹு போன்ற இணைய அமைப்புகள் பல்வேறு சேவைகளை வழங்குகிறார்கள். உதாரணத்திற்கு, உங்களுக்கு ஜிமெயில் கணக்கு ஒன்று உண்டு என்று வைத்துக் கொள்வோம். அதற்கான Profile ஒன்று ஏற்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் பள்ளி நண்பர்களுடன் அரட்டை அடிக்க ஒரு கூகிள் குழு ஆரம்பிப்பதாக வைத்துக் கொள்வோம். அதே கூகிள் Profile மீண்டும் உபயோகிக்கப்படும். பள்ளி நண்பர்களுக்காக உங்கள் முகவரி, புகைப்படம், உங்கள் நாய்க்குட்டியின் பெயர் என்று சகலத்தையும் கொட்டித் தீர்ப்பீர்கள். உங்களின் அத்தனை கூகிள் சம்பந்தப்பட்ட தொடர்பிலும் இத்தனை விவரங்களையும் சம்மந்தப்பட்டவர்கள் பார்க்கலாம். மிக யோசித்து உங்கள் Profile ஐ உருவாக்குங்கள்.

7. உங்கள் வங்கிபோல பாசாங்கு செய்யும் மின்னஞ்சல் வந்தால் வங்கியை அழைத்து விசாரியுங்கள்.

8. நீங்கள் கடும் சிவ பக்தரா? திருவண்ணாமலை செல்லுங்கள். அனாவசியமாக சிவன் படத்தை மின்னஞ்சலில் முன்னோக்கி அனுப்பாதீர்கள்.

9. மறைந்த ஆப்பிரிக்க, தென் அமெரிக்க பணக்கார சர்வாதிகாரிகள் உங்கள் ஸ்பாம் குப்பைதொட்டியில் இருக்க வேண்டியவர்கள்.

10. கனடாவில் குறைந்த விலை மருந்துகள், வயாக்ரா, இலவச நோக்கியா -மறக்காமல் உங்கள் ஸ்பாம் குப்பைதொட்டியில். முடிந்தால் ஸ்பாம் காப்பு மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவுங்கள்.

11. இணையத்தில் இருப்பவர்கள் எல்லாம் உத்தமர்கள் அல்ல. படித்த ஏமாற்றுக்காரர்கள் அதிகம் உலவும் இடம் இணையம்.

12. பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையா? உங்கள் இணைத்தள முகவரி https:// என்று ஆரம்பிக்கிறதா என்று பார்க்கவும். கடைசியில் உள்ள ‘s’ பாதுகாப்பான இணைத்தளத்தை குறிப்பது. (Secure http – SSL encrypted). வங்கிக்கணக்கு மற்றும் ஏடிஎம் எண்கள் அல்லது பே பால் (Paypal), மற்றும் கிரெடிட் கார்ட், அரசாங்க எண் (Social Security Number) எதையும் கொடுக்குமுன் நீங்கள் கவனித்துப் பார்த்தால் பல பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஆசையாய் அண்ணன் மகள் சிடி விற்கிறாள் என்று http:// துவங்கும் இணைத்தளத்தில் உணர்ச்சிவசப்பட்டு கிரெடிட் கார்ட் எண்ணை கொடுக்காதீர்கள்.

13. அரசாங்கம் ஏதோ ஒரு சலுகையைத் தீவிரமாக பிரச்சாரம் செய்தால் அந்தரங்கம் பற்றி சற்று யோசித்து முடிவெடுங்கள்.

14. ஆஸ்பத்திரியில் சகட்டு மேனிக்கு (என்ன பொருத்தம்!) மரபணுச் சோதனைகள் எடுத்தால், அறிக்கையை யாரிடம் அனுப்புவார்கள் என்று விசாரியுங்கள். காசு கொடுக்கும் உங்களுக்கு அறிக்கையை கொடுக்கக் கோருங்கள். தகவலைப் பெறும் நபர்களைக் குறைந்த பட்ச எண்ணிக்கைக்குக் குறுக்க முயலுங்கள்.

முடிவுரை

எஸ்.பி.பி யின் பாடலை மீண்டும் ஒரு முறை பார்ப்போம்:

அந்தரங்கம் யாவுமே, சொல்வதென்றால் பாவமே
ஏழையின் தனிமையை (காதலை) மாளிகை அறியுமா?

இக்கட்டுரையை படித்து சிலரேனும் தங்கள் இணைய/ஷாப்பிங் வழக்கங்களை சற்று மாற்றிக் கொண்டால், அல்லது அந்தரங்கக் கோணத்தில் தங்களது நிதி, சுகாதார, அரசாங்க விஷயங்களை யோசித்தால், வெளியிட்ட பயன் ‘சொல்வனத்தை’ அடையும்.

சொல்வனம் ஏப்ரல் 2010

அந்தரங்கம் யாவுமே, எப்படி எப்படி…

எஸ்.பி.பி யின் கொஞ்சல் குரலை கேட்டுக்கொண்டு, எஸ் எம் எஸ் அனுப்பும் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் நம்மிடையே ஏராளம். தொடர்கதையில் ‘அடுத்த வாரம்…’  போடுவதை போல, சர்வ சாதாரணமாய், ‘ஃபேஸ் புக்கில் இரவு சந்திப்போம்’, அல்லது, ஓர்கூட்டில் அல்லது டிவிட்டரில் தொடர்கிறார்கள். நண்பர்கள் அதிகம் இருப்பதை காட்டிக் கொள்ள, மற்றும் மின் அரட்டை அரங்கம் நடத்த இந்த இணைய சமாச்சாரங்கள் மிக தேவையாக நினைக்கிறோம். இந்த ஜந்துக்களால் சில நன்மைகள் இருந்தாலும், கூடவே சில அந்தரங்க அபாயங்களும் நாம் அறியாமலே நம்மை தொடர்கின்றன. நண்பரை பற்றி உங்களுக்கு தெரிந்த அளவுக்கு, நண்பரின் நண்பரின் நண்பரை பற்றித் தெரியுமா? இது சமூக வலையமைப்பு மென்பொருளின் (Social Networking software) தீயமுகம். இது போன்று பல மின்னணு அந்தரங்க சமரசங்கள் (electronic privacy compromises) பற்றிய அலசலே இக்கட்டுரையின் நோக்கம்.

கூகிள், ஆப்பிளிடம் சரணம்

மார்ச் 1, 2010, : கூகிள் நிறுவனம், பல அமெரிக்கர்களிடம் மன்னிப்பு கேட்டது. எதற்கு? அவர்களின் அந்தரங்கத்தை பாதுகாக்காமல் அலட்சியப் படுத்தியதற்கு. அப்படி என்ன செய்து விட்டது கூகிள்? உதாரணத்திற்கு. நீங்கள் விடுமுறையின் போது என்ன நீச்சல் உடை வாங்க வேண்டும் என்று உங்கள் தோழியை கேட்டு ஜிமெயிலில் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருப்பீர்கள். உங்கள் தோழியின் பதிலை படிக்கும் போது நீச்சல் உடை விளம்பரத்தை கவனித்தீர்களா? கூகிளுக்கு உங்கள் அந்தரங்கமான நீச்சல் உடை பற்றி தெரிய என்ன தகுதி? விளம்பரம் என்று சொல்லிக்கொண்டு நீங்கள் எழுதும் ஒவ்வொரு வார்த்தையயும் படிக்கப்படுகிறது. ஒரு சொற்ப, ஆனால் மோசமான செய்தி. கூகிள் டாக் என்ற உடன் செய்தி பரிமாற்ற மென்பொருளில் நீங்கள் எழுதும் வார்த்தைகள் சேமிக்கப் படுகின்றன. தேடப்படுகின்றன. அந்தரங்கம் யாவுமே, எப்படி எப்படி?

மார்ச் 1, 2010 : ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் கருவி மிக பிரபலமடைந்த நிலையில் அதன் பாதுகாப்பின்மை அனவருக்கும் பிடிபட தொடங்கியுள்ளது. டைகர் ஸ்கிரிப்ட் என்ற மென்பொருள் வந்துள்ளது. அனுப்பி 30 வினாடிக்குள் ஒரு செய்தியை படித்தபின் (படித்தவ்ரிடம், அனுப்பியவரிடம்) அழித்துவிடலாம். இது டைகர் உட்ஸ் காதல் விவகாரத்திலிருந்து வந்த குறும்பு மென்பொருள்! அந்தரங்கம் யாவுமே, இப்படி இப்படி!

pic32009 ஆண்டின் கடைசியில் வெளி வந்த ‘பா’  திரைப்படத்தில் 12 வயது ஆரோ வேடத்தில் நடிக்கும் அமிதாப், பள்ளிக்கு வந்த எம் பி மீது கோபம் கொண்டு, அவரை இணையத்தில் தேடுகிறார்.. ”கூகிளிடமிருந்து தப்பி எங்க போகப் போகிறார்” என்று அவரை தேடி, அவருக்கு மின்னஞ்சல் அனுப்புவதாக காட்சி. நசைச்சுவை நன்றாக இருந்தாலும், சற்று வேறு விதமாக யோசிப்போம். கூகிள் மூலமாக எம் பி யை அடைந்து அவருக்கு எப்படி வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் மின்னஞ்சல் அனுப்பலாம். அவருடைய அந்தரங்கம் சமரசப்படுத்துவது உண்மை. ஆரோவின் நோக்கம் சிறு பிள்ளைத்தனமானது. ஆரோவிற்கு பதிலாக ஒரு பயங்கரவாதியும் அதை செய்ய முடியும். 12/26/08 அன்று, மும்பை தாக்குதல்கள் நடந்த போது, தொலைக்கட்சிகள் வெளிச்சம் போட்டுக் காட்டின. பயங்கரவாதிகள் தொலைக்காட்சி இல்லாத எங்கோ இருந்து விட்டால் பாவமே என்று, சி என் என் அதை இணையத்திலும் காட்டிய வண்ணம் இருந்தது! நம் பாதுபாப்பு துறையினரின் அந்தரங்கம் சமரசப்படுத்தப்பட்டது.

சிங்கார சென்னையில் நடக்கும் ஒரு கற்பனை 2013 உரையாடல்:
கபாலி: “சர்யான தொயில் தெரியாத கத்துகுட்டியாக் கீற. ஒன் ரோதன தாங்கல சிங்காரம். பெயில் குட்து வெளில கொண்டுவரதுக்குள்ள பெண்டு நிமிருதில்ல”.
சிங்காரம்: “மன்னிச்சுகண்ணே. அப்பால இது மாரி நடக்காது. சூடம் மேல சத்தியம்!”
கபாலி: ”பெரிய சத்தியம் பண்ற மூஞ்சியப் பாரு. செய்ர திருட்டுத் தொயில்ல சுத்தம் வேணும்டா. எதுக்குடா உனக்கெல்லாம் ஒரு தொட கம்பூட்ட்ரு அப்றம் கைபோனு.குடுத்து ரெய்னிங் வேற?’
சிங்காரம்: ”மெய்தாண்ணே. அந்த கூகிள் என்னது – ஸ்டீர்ட் வ்யூ சரியா புரியல. வயக்கம் போல தொயில் செய்யப் போய் மாட்னது என் தப்புதான். மன்னிச்சு விடுண்ணே!”
கபாலி: “யார்ரா, கம்ப்யூட்டர் கண்ணாயிரத்தை. வரச் சொல்லு. இனிமே தொயிலுக்கு யார் போனாலும் ஸ்டீர்ட் வ்யூ பாத்து, சரியான சந்து வயியா போய் அள்ளிகினு வரனும், சரியா. சிங்காரம், நம்ம குமாரப் பாரு.. போன தப, சரியா ஸ்டீர்ட் வ்யூ பாத்து, அந்தம்மா நகைகடத்தனமா இருந்தத கவனிச்சு, சுட்டியா அள்ளினா பாரு. புத்தி யூஸ் பன்னு தலைவா.. ”.

சற்று மிகையான உரையாடல்தான். ஆனால் கூகிள் ஸ்டீர்ட் வ்யூ (Street View – Google Maps) மிகவும் சர்ச்சைக்குரிய மென்பொருள். ஒரு இடத்திற்கே போகாமல், அந்த இடத்தின் முகவரி மட்டுமே இருந்தால், காரின் மூலம் அந்த வீதியில் பயனித்தால், எப்படி இருக்கும் என்று விடியோவே இருந்த இடத்திலிருந்தே பார்க்கலாம். ஒரு முகவரியின் எல்லாப் பக்கங்களிலும் என்னவென்ன கட்டிடங்கள் மற்றும் நில அமைப்புகள் இருக்கின்றன என்று பயன திட்டமிட உருவாக்கப்பட்ட மென்பொருள். நான் மேலே சொன்ன திருட்டு விஷயத்திற்கும் சத்தியமாக திட்டமிடலாம். ரொம்ப கவலை வேண்டாம். இன்னும் இந்திய நகரங்கள் ஸ்டீர்ட் வ்யூவில் வரவில்லை. ஆனால், உங்களின் அந்தரங்கம் எப்படி எப்படியோ பறிபோக வாய்ப்புள்ளது.

பொதுவாக மின்னணு அந்தரங்க சமாச்சாரங்களை நாம் அலட்சியப்படுத்துகிறோம் அல்லது அறியாமலிருக்கிறோம். ‘அந்தரங்கமாவது மண்ணாங்கட்டியாவது’ என்று சன் கணினி நிறுவனத்தின் அந்நாளைய தலைவர் ஸ்காட் மெக்நீலி 15 வருடங்கள் முன் சொன்னதை யாரும் பொருட்படுத்தவில்லை. இன்று அதுவே வியாபாரம், சமூகம், தனியார் தொடர்பு, அரசியல் மற்றும் மருத்துவ துறையை ஆட்டிப்படைக்கத் தொடங்கிவிட்டது. நம் அரசியல் சட்டம் இயற்றியவர்கள் நம்முடைய அந்தரங்கத்தை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டார்கள். இன்று பயங்கரவாதத்தை காரணம் காட்டி அரசாங்கங்களும் அத்து மீற சட்ட வியூகங்கள் ஏற்படுத்திக் கொண்டு செயல்படுகின்றன. இதனால் சாதாரண மனிதர்கள் அவர்கள் அறியாமலே பாதிக்கப்படுகிறார்கள்.

ஆரம்ப அசட்டுத்தனம்

மனிதர்கள் ஆப்பிரிக்காவில் உருவானவர்கள் என்ற தியரிப்படி பார்த்தால், நமக்கு ஆப்பிரிக்கர்கள் உறவுக்காரர்கள் தானே? 90 களில் அப்படி எனக்கு பல ஆப்பிரிக்க உறவுக்காரர்கள். கேள்வியே படாத ஆப்பிரிக்க தேசத்தில் சர்வாதிகாரி பல கோடி டாலர்கள் சொத்தை அனுபவிக்காலமல் மண்டையை போட, அவரின் சொத்தை அனுபவிக்க 50/50 முறையில் எனக்கு திடீரென்று நெருக்கமான ஆப்பரிக்கர் ஒருவர் என் அமெரிக்க டாலர் வங்கி கணக்கு எண்ணை அன்புடன் மின்னஞ்சலில் கேட்பார். இவர்கள் கேட்கும் விதம் மிகவும் உண்மையானதாக ஆரம்பத்தில் தோன்றும். அடுத்த நாளே, இன்னொரு ஆப்பிரிக்க தேச சர்வாதிகாரி மண்டையைப் போட, இன்னொருவர் உங்களது நெருக்கமான உறவினராக துடிப்பதைப் பார்த்து உஷாராகி விடுவீர்கள். பிறகு, உங்களுக்கு மனதில் தோன்றும் கேள்வி, ‘இவர்களுக்கு என் மின்னஞ்சல் முகவரி எப்படி கிடைத்தது?’.  இது ஆரம்ப கால அந்தரங்க தாக்குதல். ஒரு இணைத்தள சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் பட்டியலை திருடிவிட்டால், இப்படி ஒரு பொது மின்னஞ்சலை அனுப்புவது எளிது. ஏமாந்தவர்களிடம் சுருட்டலாம். ஆனால் இன்று இது ஒரு பெரிய தொழிலாகி பல மடங்கு இயக்கத்திறமையுடன் செயல்படத் தொடங்கிவிட்டன.

pic2இப்படி அசட்டுத்தனமாக தொடங்கிய அந்தரங்க ஆக்கிரமிப்பு, சில வல்லுனர்கள் சம்மந்தப்பட்ட விஷயமாக இருந்தது மாறி, ஒரு பொது பிரச்சினையாய் மேலை நாடுகளில் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. இணைத்தள நுகர்வோர் (Internet users)  அதிகரிக்க இப்பிரச்சினையும் வளர்ந்துவிட்டது. வளரும் நாடான இந்தியா இதற்கு விதி விலக்கல்ல. பலர் அதிக அனுபவமின்றி இணையத்தில் மேய்வதால் இப்பிரச்சினை புதியவர்களை அதிகம் தாக்க வாய்ப்புள்ளது. பொதுவாக, தன் பிள்ளை, பெண்கள் மேலை நாடுகளில் வசிப்பதால், இந்திய பெற்றோர்களுக்கு மின்னஞ்சல் போன்ற விஷயங்கள் தேவைபடுகின்றன. பேரன் பேத்தியை பார்க்க பிகாஸா என்று தொடங்கி, தன்னை அறியாமலே ஸ்கைப் மற்றும் மெஸசஞ்சர் போன்ற உடன் தொடர்பு மென்பொருள் வரை வளர்ந்து மேலை நாட்டவருக்கும் நமக்கும் அதிக வித்தியாசம் இல்லை. இந்தியாவில் ஐஃபோன் போன்ற புதிய கைதொலைபேசிகள் மிகவும் பிரபலமடைய தொடங்கியுள்ளது. பொதுவாக, கம்பியற்ற தொலைதொடர்பில் பாதுகாப்பு, கம்பி வழியே இணைதளங்களை உபயோகிப்பதை விட சற்று குறைவுதான். அடுத்த சில ஆண்டுகளில் கம்பியில்லா விவர தொலைதொடர்பு (wireless data communication)  இந்தியா போன்ற நாடுகளில்தான் பரிசோதனை செய்யப்படும். காரணம், 50 கோடி கை தொலைபேசிகள் உள்ள நாடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம். இது என்னவோ, மேல் நாட்டு பிரச்சினை என்று நாம் ஒதுக்கி வைக்க முடியாது.

அடுத்த கட்ட தாக்கம்

புதிதாக மின்னஞ்சல் அனுப்ப தொடங்கியவர்கள் சில ஆரம்ப கால அனுபவங்கள் தவிர்க்க முடியாதது. யாரோ ஒருவர் வரிந்து கட்டிக்கொண்டு உங்களுக்கு வயக்ரா தேவை என்று சில பல போலி இணைதளங்களை காட்டி  தீவிரமாக பிரசாரம் செய்வார். கடலூரில் இருக்கும் உங்களுக்கு, கனடாவில் மருந்து குறைந்த விலையில் கிடைக்கிறது என்று உப்பு சப்பில்லாத மின்னஞ்சல் அனுப்புவார். சில நாட்களில் இது ஒரு புதிய மீடியாவின் இரைச்சல் என்று புரிந்துவிடும். ஆனால், பல புதியவர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு சரியாக அறிந்து கொள்ளாமல் பல மின்னஞ்சல்களை முன்னோக்கம் (forward)  செய்வதுதான். நோக்கியா இந்த மின்னஞ்சலை 10 பேருக்கு முன்னோக்கி அனுப்புவதால் இலவச கைதொலைபேசி தருகிறார்கள் என்று அப்த்தமான அறிவுப்புகள், உங்கள் மின்னஞ்சல் முகவரியை தெரிந்து கொள்ள நடத்தும் மோசடி. மின்னஞ்சலில் பிள்ளையார் படமும் அதே மோசடிதான். பக்தி வயப்பட்டால் கோவிலுக்கு செல்லுங்கள் – முன்னோக்கி அனுப்பாதீர்கள்.

நிறைய பூச்சாண்டி காட்டியாகிவிட்டது. சற்று பேயையே சந்திப்போமே!

இருமுக ராட்சசன்

இந்த அந்தரங்க பிரச்சினைக்கு இரு முகங்கள் : 1) தனிப்பட்ட அந்தரங்கம் 2) பொது அந்தரங்கம்.

தனிப்ப்ட்ட அந்தரங்கத்தில் பல விஷயங்களை உள்ளன. உங்களது உறவுகள், பொருளாதார, மற்றும் மருத்துவ விஷயங்கள். இதன் விளைவுகள் எப்படிப்பட்டவை? பொதுவாக, தனியார் நிறுவனங்கள், உங்கள் அந்தரங்கத்தை உபயோகித்து பல பொருட்களை நீங்கள் விரும்பாமலே வாங்க வைப்பதில் முயற்சி செய்யலாம். உங்கள் மருத்துவ அந்தரங்கங்களை அறிந்து சில மருத்துவ வசதிகள் உங்களுக்கு மறுக்கப் படலாம். உங்களின் கிரெடிட் கார்டு மற்றும் அரசாங்க எண்ணை பயன்படுத்தி உங்களுக்கு மிக பெரிய நிதி இழப்பு ஏற்படலாம்.

அதென்ன பொது அந்தரங்கம்? அரசாங்கம் ச்ம்மந்தப்பட்ட ரகசியங்கள், பயங்கரவாத விஷயங்கள், பொது இடங்களில் உங்கள் நடத்தை விவரங்கள். இதன் விளைவுகள் எப்படிப்பட்டவை? பயங்கரவாதத்தை காரணம் காட்டி, உங்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப் படலாம். பொது ஒழுங்கு என்ற பேரில் அரசாங்கம் உங்களை தர்மசங்கடப் படுத்தலாம். பயங்கரவாதத்தினால். விமான நிலயங்களில், தனிப்பட்ட தேடல்கள் சற்று அந்தரங்கத்தை உதாசீனப்படுத்துவதை இன்று நாம் ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டோம்.

பாதுகாப்பு வேண்டுமா அல்லது அந்தரங்கம் வேண்டுமா என்ற கேள்வி எழும்போது, பாதுகாப்பே நமக்கு பெரிதாகப் படுகிறது. பொது நலன் வேண்டுமா அல்லது அந்தரங்கம் வேண்டுமா என்ற கேள்வி எழும்போது, பொதுநலனே நமக்கு பெரிதாகப் படுகிறது. அதே போல, பயங்கரவாத ஒடுக்க்மும் தனி மனித உரிமைகளும் வைத்துப் பார்த்தால், தனி மனித உரிமைகள் மறக்கப்படுகின்றன. நிறைய பணம் கொடுத்து மென்பொருள் வேண்டுமா அல்லது விளம்பர வரவால் உருவான இலவச மென்பொருள் வேண்டுமா? இலவச மென்பொருளின் விலை உங்கள் அந்தரங்கம் என்று கூகிள் இன்று ஒப்புக் கொள்கிறது.

மின்னணு அந்தரங்கம் என்பது ஒரு விஸ்தாரமான துறை. இதை நாம் இரு முகங்களாக பிரித்தாகிவிட்டது. தனிப்பட்ட அந்தரங்க பகுதியில், சில தொழில்நுட்பங்களை அலசுவோம்: 1) RFID என்ற நுட்பம். இது நுகர்வோர் பொருள் வாங்கும் வழக்கங்களை மாற்றும் முயற்சி. இத்தொழில்நுட்பத்திற்கு ஒரு பொது அந்தரங்க தாக்கு முகமும் உண்டு. 2) ஆரோக்கிய அந்தரங்கம்.  மரபணு சோதனைகள் மற்றும் காப்புரிமை பற்றி அலசுவோம் 3) Phishing என்ற நிதி மோசடி செய்யும் அந்தரங்க தாக்குதல்கள்.

பொது அந்தரங்க பகுதியில், சில தொழில்நுட்பங்களை அலசுவோம்: 1) ஒட்டுக் கேட்தல்.  உங்களுக்கு தெரியாமல் உங்கள் உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதன் விளைவுகளை ஆராய்வோம் 2) மெய் வருடல் தொழில்நுட்பம் – இதை பையோமெட்ரிக் வருடல் (biometric scanning) என்றும் சொல்வார்கள். 3) விடியோ கண்காணிப்பு. இத்தொழில் நுட்பத்தால் வரும் அந்தரங்க மீறல்களை அலசுவோம்.

மிக புத்திசாலித்தனமாக நம் அந்தரங்கங்கள் இவ்வாறு பறி போவதை எத்தனை பேர் உணருகிறோம்? சமீபத்தில், ஒரு இந்திய குடும்பத்தின் இணைய உபயோக முறை என்க்கு மிகவும் வினோதமாக பட்டது. குடும்பத்தில் உள்ள அத்தனை பேருக்கும் ஒரே மின்ஞ்சல் முகவரி. வீட்டிலிருந்தும், அலுவலகத்திலிருந்தும் அண்ணன், தங்கை என்று அனைவரும் ஒரே கடவுக்சொல் (password)  உபயோகிக்கிறார்கள்! குடும்பத்தில் ரகசியங்கள் ஏதும் இல்லை என்று பெருமை வேறு. இவர்கள் மின்னஞ்கல் உடைக்கப்பட்டால், குடும்பமே தெருவில் வந்தது போல அல்லவா?

மின்னணுவியல் துறத்தல்

enemy-of-the-state1998 ஆம் ஆண்டு வெளி வந்த ஹாலிவுட் திரைபடம் ‘The Enemy of the State’. மிக விறுவிறுப்பான இப்படத்தில் வில் ஸ்மித் ஒரு தொழிலாளர் வழக்கறிஞர். அவரின் மனைவிக்காக பரிசு வாங்கும் இடத்தில் ஒருவர் மிகவும் பகிரங்கமாக அரசாங்கத்து அதிகாரிகளால் கொலை செய்யப் பட்ட போது எடுத்த ஒரு விடியோவை அவரிடம் விட்டுச் சென்று மண்டையை போடுவார். பாவம் வில், ஓடு ஓடென்று படம் முழுவதும் ஓடுவார். ஹாலிவுட் மசாலாக்கள் தடவப்படிருந்தாலும், இப்படத்தில், அவருடைய அந்தரங்கம் பறிக்கப்படுவதை மிக அழகாக் காட்டியிருப்பார்கள். அவருடைய ஒவொரு பேச்சும் ஒட்டுக் கேட்கப்படும். அவருடைய வங்கிக் கணக்கு காலி செய்யப்படும். அவருடைய கிரெடிட் கார்ட உறையவைக்கப்படும். அவருடைய அடையாளமே மாற்ற்ப்படும். அவருடைய பல அரசாங்க பதிவுகள் மாற்றப்பட்டு அவரை ஒரு குற்றவாளியாக்கும் மின்னணு முயற்சிகள் அவரை பைத்தியமே பிடிக்கும் வகையில் காட்டியிருப்பார்கள். அவர் படும் அல்லல்கள் இப்படத்தின் கதை.

pic570 களில் முதன் முறையாக டில்லி செங்கோட்டை அருகே நெரிசல் மிக சாந்தினி செளக் அனுபவம் மிக அசாதாரணமானது. சென்னை மூர் மார்கெட் போலல்லாமல் அன்புடன் ஏமாற்றுவார்கள். பயணப்பை (travel bag) ஒன்று அழகாக இருக்க, உடைந்த இந்தியில் விலை விசாரித்தேன். விலை மிக அதிகமாக கடைக்காரர் சொன்னதால், வேண்டாம் என்று விட்டுவிட்டு நடையைக் கட்டினேன். பத்தடி நடந்தவுடன் கடைக்காரர் தொடர்ந்தார் – விலை பாதியாகியது. எனது பொருளின் தரம் பற்றிய சந்தேகம் இரட்டிப்பாகியது! வேண்டாம் என்று இன்னும் பத்தடி நடக்கையில் கடைக்காரர் என்னைத் தொடர்ந்து விலையை கால்வாசியாக்கினார். விட்டால் போதுமென்று அடுத்த தெருவுக்குள் நடக்க ஆரம்பித்தேன்.

சொல்லி வைத்தாற்போல் இன்னொரு கடைக்காரர் பயணப்பை ஒன்றை என்க்கு வேறு விலையில் தொடங்கி விற்கப் பார்த்தார். என்க்கு சந்தேகம், ‘என் நெத்தியில் பயணப்பை வாங்குபவன் என்று எழுதி ஒட்டியிருக்கிறதா?’. எப்படி இவர்கள் என்னை துரத்துகிறார்கள்? விட்டால் போதுமென்று செளக்கின் வேறு பகுதிக்கு விரைந்தேன்.

pic6உங்களை உதறவிடாமல் மின்னணுவியலால் தொடர்ந்தால் எப்படி இருக்கும்? வில் ஸ்மித் போல ஓட வேண்டியதுதான். அப்படிப்பட்ட சமாச்சாரம் RFID. (Radio Frequency Identification Tag)  வானொலி அலைவரிசையில் வேலை செய்யும் நுட்பம் இது. 1999 ல் இதன் ஆரம்பம் என்னவோ சரக்கு விவரம்  எடுப்பதற்காக (inventory control)  உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னால், பட்டை குறியீடு (bar code) நியமான UPC (Universal Product Code)  உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. RFID வந்த பிறகு சரக்கு விவரமெடுத்தல் இயக்கத்திறமை மிகவும் முன்னேறியது. வால் மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள், நுகர்வோர் பொருள் தயாரிப்பாளர்களை RFID நியப்படி பொருள்களை அடையாளம் காட்டினால்தான் வங்குவோம் என அடம் பிடிக்கத் துவங்கின. இதற்கும் டிஜிட்டல் அந்தரங்கத்துக்கும் என்ன சம்மந்தம்? உள்ளது, விளக்குவோம்.

முதலில் இந்த RFID எப்படி வேலை செய்கிறது? பொருளின் மேலே ஒரு நுண்ணிய மின்னணு சிப் மற்றும் ஆண்டெனா அடக்கம். ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனிப்பட்ட எண் – இதை ‘டேக்’ (Tag)  என்று அழைக்கிறார்கள். இந்த Tag ஐப் படிக்க ஒரு படிக்கும் மின்னணு கருவி (RFID electronic reader)  தேவை.  இதில் உள்ள வசதி என்னவென்றால், ஒரு நூறு அடி வரை தள்ளியிருந்தவாறு படிக்கும் மின்னணு கருவி Tag ஐப் படித்துவிட முடியும். இதனால் பல அன்றாட வேலைகள் சுலபமாகிறது. கால்நடை, நுகர்வோர் பொருட்கள், மற்றும் தயாரிப்பு சம்மந்தமான கச்சா பொருட்களை நிர்வகிப்பது எளிதாகிறது. பட்டை குறியீடு போலல்லாமல், பல பொருட்களை ஒரே நேரத்தில் படிககவும் முடியும்.

முதன்மையான பயனை நீட்டி வேறு விதத்தில் பயன்படுத்த முற்படுகையில் வந்தது வினை. இந்த நுட்பம் விற்பனையாளர்களின் கனவு. உதாரணத்திற்கு, ஒரு பெரிய சூப்பர் மார்கெட்டில் பல முக்கிய இடங்களில் படிக்கும் கருவிகளை வைத்துவிட்டால், உங்களின் வாங்கும் முறைகள் நீங்கள் அறியாமலே பதிவு செய்யப்படலாம். பொருட்கள் ஒவ்வொன்றிலும் Tag  உள்ளதால், அதை நீங்கள் எடுக்கும் போது எளிதாக பதிவு செய்யலாம். அந்த நிறுவனத்தின் கிரெடிட் கார்டு உங்களிடம் இருந்தால் கேட்கவே வேண்டாம். எந்த பொருட்களின் மேல் நாட்டம் கொண்டு வாங்காமல் விட்டீர்கள் என்று உங்கள் வாங்கும் ஜாதகமே விற்பனையாளர் கையில்.

pic8விற்பனையாளர்களின் நெடுநாள் கனவு இது: உங்கள் வீட்டின் வெளியே உங்களுக்காக ஒரு குப்பை தொட்டி ஒன்று இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். உபயோகித்த பொருட்களின் உறைகளை அதில் எறிவீர்கள்.  விற்பனையாளர் ஒரு படிக்கும் கருவி தாங்கிய வண்டி ஒன்றை உங்கள் வீதிவழியே அனுப்புவார். உங்கள் குப்பைதொட்டியில் உள்ள tags ஐ படித்தால், உங்கள் குடும்பம் வாரத்திற்கு எத்தனை பால், ரொட்டி, முட்டை, கோக் உபயோகிக்கிறீர்கள் என்று கணித்துவிடலாம். உங்கள் அருகில் உள்ள சூப்பர் மார்கெட் உங்களது உணவுப் பொருட்களை தகுந்த மாதிரி அனுப்பி உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்துக் கொள்வார்கள். சில விற்பணையாளர்கள் ஒரு படி மேலே போய், உங்களது குளிர்சாதன்ப் பெட்டியில் இப்படி ஒரு படிக்கும் கருவியை நீங்கள் நிறுவினால், இன்னும் மேல் என்று ஆசை காட்ட முயன்று வருகிறார்கள். உங்களின் தேவைகள் உங்கள் கையில் இருக்காது. ஆசை காட்டி, தேவைக்கு மேல் பொருட்களை உங்கள் தலையில் கட்டிவிடத் திட்டம்தான் இது.

வில் ஸ்மித் துரத்தப்படுதல் ஒன்றுமில்லை

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் உல்கிலேயே மிகப் பெரிய நில எல்லை. மிக அதிக பன்னாட்டு வியாபாரம் நடக்கும் எல்லையும் இதே. வேலை காரணமாய் இரு நாடுகளிலிருந்தும் எல்லை நகரங்களில் வசிப்போர் எல்லையை நாள்தோரும் கடக்கிறார்கள். அமெரிக்கர்களுக்காக ஒரு வசதியை சில எல்லை மாநிலங்கள் கொண்டு வந்தன. அமெரிக்கர்கள் தன்னிச்சையாக இந்த  வசதியை ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கு எல்லை கடவை எளிதாகும். அதாவது, கார்களில் லைஸன்ஸ் தகடில் RFID பொருத்திவிட்டால், எல்லையில் நிற்கவே வேண்டாம். நூறு அடிக்கு முன்னமே நீங்கள் வருவதை எல்லை ஏஜண்ட் படிக்கும் கருவியில் படித்து, உங்களை கடக்க விடுவார். விளைவுகளை அறியாமல், பல அமெரிக்கர்கள் இந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக் கொண்டார்கள். இத்தனை வசதி வாய்ந்த விஷயத்தில் என்ன விளைவு இருக்க முடியும்?

pic9எல்லை ஏஜண்டைப் போல திருடர்கள், ஏமாற்றுக்காரர்கள் அனைவரும் ஒரு படிக்கும் கருவியை வைத்துக் கொண்டால், உங்களது நடவடிக்கைகளை வேவு பார்க்கலாம். எங்கெல்லாம் கிரெடிட் கார்டு உபயோகிக்கிறீர்கள், எந்த வங்கியில் கணக்கு வைதிருக்கிறீகள் – எல்லாம் மிக எளிதாக ஏமாற்றுக்காரர்கள் கையில். அவ்வளவு எளிதா இது? நம்ப மாட்டீர்கள், அவ்வளவு எளிது. பல்வேறு பொருள் கிடங்குகளிலும் உபயோகப்படுத்தும் நுட்பம் இது. இதில் எந்த வித பாதுகாப்பும் இல்லை – அமெரிக்க எல்லை ஏஜண்டுகள் உபயோகிக்கும் (EPCGlobal Gen2) RFID முறையில்.

பல நாடுகள் இந்த தொழில்நுட்பத்தை முக்கிய ஆணவங்களுக்கு கொண்டு வர திட்டம் தீட்டி வருகின்றன. பல பாதுகாப்பு வல்லுனர்கள் புதிய ஆணவங்களின் பாதுகாப்பின்மையை சுட்டிக்காட்டுவதுடன் தகர்த்தியும் காட்டியுள்ளார்கள். இங்கிலாந்து, மற்றும் ஜெர்மனீய பாஸ்போர்டுகள் இதில் அடக்கம். இந்த ஓட்டைகள் பல நாடுகளை RFID ஐ தழுவுவதிலிருந்து குறைக்கக் காணோம். உதாரணமாக மலேசியா 25 மில்லியன் தேசிய கார்டுகளை அதன் குடிமக்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது. கதார் அரசு இப்படிப்பட்ட ஒரு கார்டில் விரல் ரேகையுடன் வழங்கத் தொடங்கியுள்ளது. சீனா மிகப் பெரிய RFID திட்டம் ஒன்று தொடங்கியுள்ளது – அதன் 130 கோடி குடிமக்களுக்கும் மின்னணு கார்ட் வழங்குவது திட்டத்தின் குறிக்கோள்.

மற்ற நாடுகள் அமெரிக்கா போலல்லாமல் ஓரள்வுக்கு பாதுகாப்புடன் உள்ள நியத்துடன் (ISO 14443) RFID நுட்பத்தை உபயோகிக்கின்றன. சீன அரசுடைய  கெடுபிடி சற்று அதிகம். அந்த கார்டில் மற்ற நாட்டைவிட விவரம் அதிகம். உங்கள் பெயர், பாலினம், மதம், குழந்தைகளின் எண்ணிக்கை, தொலைபேசி எண், வேலை நிலை எல்லாம் பதிவு செய்யப்படும். ஜனங்களின் எல்லா விவரங்களையும், அவர்களது நடவடிக்கைகள் மற்றும் இயக்கத்தை இப்படி கண்காணித்த வண்ணம் இருக்கிறது. எங்கே அந்தரங்கம்?

அரசாங்கங்கள் இதைக் கட்டுப்படுத்த அதிகம் நடவடிக்கை எடுப்பதில்லை. தனியார் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த சட்டங்களும் சரியாக நிறுவப்படவில்லை. இன்நிலையில் RFID நுட்பத்தால் தனியொருவர் அந்தரங்கம் மிகவும் பாதிக்கப்படுகிறது என்றால் மிகையாகாது.

ஆரோக்கிய அந்தரங்கம்

வளர்ந்த நாடுகளில் தனி நபரின் ஆரோக்கியம் மிகவும் அந்தரங்கமான ஒன்று. நம் கலாச்சாரம் சற்று வேறுபட்டது. உதாரணம், 2002 ல் வந்த ‘பஞ்ச தந்திரம்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நாயராக வரும் ஜெயராமின் மகனுக்கு இருதயத்தில் ஓட்டை என்று படம் முழுவதும் நகைச்சுவை என்ற பேரில் ஊருக்கொல்லாம் தம்பட்டம் அடிப்பது நம் கலாச்சாரம். சமுதாய சூழலில் மற்றவர்களுக்கு வந்துள்ள நோய்களை பற்றி அதிகம் வம்படிக்கிறோம்.

இவ்வாறு, பொதுவாக ஆரோக்கிய மற்றும் நோய்களைப் பற்றி பேசுவதன் விளைவுகளைப் பற்றி நாம் அதிகம் கவலைப் படுவதில்லை. 1990 களில் மனித மரபணுத் திட்டம் (human genome project)  இந்த வழக்கங்களை மாற்றும் வகையில் பல புதிய கண்டுபிடிப்புகளை தந்தது. பல தீர்க்க முடியாத நோய்களின் காரணம் மரபணு கோளாறுகள் என்பதை இன்று நாம் அறிவோம். அமெரிக்கா போன்ற நாடுகளில் (இந்தியாவிலும் இது நகர்புறங்களில் தொடங்கி விட்டது) ஆரோக்கியத்துக்குக் கவனிப்பு வேண்டுமானால் ஆரோக்கியக் காப்புரிமை தேவை. பொதுவாக, காப்புரிமை கொடுப்பதற்காக சில பல ஆரோக்கியம் பற்றிய கேள்விகளை உங்களிடம் ஒரு ஆலோசகர் கேட்பார். உங்களின் பதில்படி (உங்களின் நினைவாற்றலைப் பொருத்து) காப்புரிமையின் சட்ட திட்டங்கள் முடிவெடுக்கப்படும். இதில் ஆலோசகர் முக்கியமாக ஆராய்வது உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் மருத்துவ நிலைகள் பற்றியே (Preexisting conditions). உதாரணத்திற்கு, உங்களுக்கு ஏற்கனவே இருதய நோய் இருந்தால், அது காப்புரிமைக்குள் அடங்காது. அந்த இருதய நோயை காப்புரிமையில் சேர்க்க அதிக கட்டணம்  (premium) கட்ட வேண்டும்.

pic10இன்று ஓரளவுக்கு சாதுரியமாய் பேசி நீங்கள் உங்களுடைய ஏற்கனவே இருக்கும் மருத்துவ நிலைகளை ஆலோசகரிடமிருந்து மறைக்கலாம். உங்களது மின்னணு ஆரோக்கிய பதிவு, அதாவது இ.ஹெச்.ஆர் (Electronic Health Record)  ஆலோசகர் கையில் கிடைத்தால், உங்கள் ஜல்லியடி பலிக்காது. அவை டாக்டரின் கிறுக்கல் கையெழுத்தில் உங்களிடமோ, மருத்துவரின் அலுவலகத்திலோ இருக்கும் வரைதான் உங்களது பொய்கள் செல்லும். உங்களது இ.ஹெச்.ஆர் யாரிடம் இருக்க வேண்டும் என்பது மிக சர்ச்சைக்குரிய விஷயம். கனடா, டென்மார்க் போன்ற நாடுகளில், அரசாங்கம் நோயாளிகளின் பக்கம். அமெரிக்காவில் இழுத்தடிக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், சில காப்புரிமை நிறுவனங்கள், உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் மருத்துவ நிலைகளை வைத்து, உங்களுக்கு காப்புரிமை அளிக்க மறுக்கலாம். உங்களுக்கு ஆரோக்கிய கவனிப்பு மறுக்கப்பட்டதற்கு சமம் இது.

சில அரிதான நோய்கள் முழுவதும் குணப்படுத்த முடியாமல் மருத்துவ விஞ்ஞானிகளுக்கு இன்னமும் சவாலாக இருக்கின்றன. இவைகள் பெரும்பாலும், மரபணுக் கோளாறுகள் (genetic disorders). உதாரணம், CF  என்று அழைக்கப்படும் Cystic Fibrosis  மற்றும் MD  என்று அழைக்கப்படும் Muscular Dystrophy  போன்ற நோய்கள். தமிழ் சினிமாவில் வரும் ரத்தப் புற்றுநோய் (Leukemia) இதில் உண்டா என்று அனாவசிய ஆராய்ச்சி வேண்டாம்! ஒருவருக்கு மரபணு சோதனை (genetic test) செய்தால், அவருக்கு இவ்வகை மரபணுக் கோளாறு வர வாய்ப்புண்டா என்று சொல்லிவிட முடியும். மேல்வாரியாக பார்த்தால் இது நல்ல முன்னேற்றம். இன்று 2000 க்கு மேற்பட்ட மரபணுச் சோதனைகள் கருவிலிருந்து தாத்தா வரை செய்கிறார்கள். இவ்வகைச் சோதனைகளால், சம்பந்தப்பட்டவருக்கு மட்டுமல்லாமல், அவருடைய குழந்தைகள், பேரன் பேத்திகள் அனைவருக்கும் நோய் வர வாய்ப்புண்டா என்றும் சொல்லிவிடலாம்.

இந்த மரபணுப் பரிசோதனை அறிக்கை யாரிடம் இருக்க வேண்டும் என்பது மிக சர்ச்சைக்குரிய விஷயம். காப்புரிமை நிறுவனத்திடம் அறிக்கை கிடைத்தால், குடும்பத்திற்கே மருத்துவக் காப்பு மறுக்கப்படலாம். வேலை தேடும் கம்பெனியிடம் கிடைத்தால், வேலையே மறுக்கப்படலாம். இது ஒரு வகை மரபணுப் பாகுபாடு (genetic discrimination)  உருவாகும் அபாயம் உள்ளது. இன்றைக்கு இது பெரிய பிரச்சினையில்லை. ஆனால் வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்தில், சீக்கிரத்தில் இது விஸ்வரூபம் எடுக்கலாம். மருத்துவ அந்தரங்கம் மிகவும் சீரியஸான விஷயம்.