டேடா மதம்!

என்னுடைய வயது அறுபதைத் தாண்டி விட்டது. என்னுடைய வழக்கமான மாலைப் பொழுது போக்கு, பக்கத்தில் உள்ள பூங்காவிற்குச் செல்லுவது. அங்கு விளையாடும் குழந்தைகளின் சத்தம், பறவைகளின் ஒலி, எதுவும் என்னை அதிகம் பாதிப்பதில்லை. அத்துடன், அங்கு வரும் பெரும்பாலானவர்களுடன் பேசுவதையும் தவிர்ப்பவன்.

சில மாலைப் பொழுதுகளில், அங்கு ஒரு இளைஞன் தன்னுடைய திறன்பேசியில் (smart phone) ஏதாவது செய்து கொண்டிருப்பான். இந்த பூங்காவில் நான் நிகழ்த்திய உரையாடல் என்றால் இந்த இளைஞனுடந்தான். இங்கு என் நினைவில் இருக்கும் சில சுவாரசியமான வாதங்களை முன் வைக்கிறேன்.

“வணக்கம் சார். என் பேர் காளிதாஸ். எல்லோரும் காளின்னு கூப்பிடுவாங்க. உங்களை இந்தப் பூங்காவில் அடிக்கடிப் பார்த்திருக்கிறேன். இங்கு என்ன செய்றீங்க?”

“இங்கு ஏதாவது செய்வதற்குத் தான் வரணுமா?”

கா: ”அப்படி இல்லை சார். இங்கு நான் உங்களைப் பார்க்கும் பொழுது, நீங்கள் வெறுமனே உடகார்ந்திருக்கீங்க….”

“யார் சொன்னாங்க நான் வெறுமனே இருக்கேன்னு? என்னுடைய வேலையை நான் செய்துகிட்டுதான் இருக்கேன்.”

கா: “அப்படி என்ன வேலைதான் செய்யறீங்க இங்க?”

“என்னுடைய வேலை பல தெய்வங்களைத் துதிப்பது. என்னுடைய சுவாசத்தைக் கட்டுப்படுத்துவது.”

கா: “இதை ஒரு வேலையாக நீங்க நெனக்கிறீங்களா?”

“நான் எங்க இதை வேலைன்னு சொன்னேன்? நீதான், நான் வெறுமனே இருக்கேன்னு சொன்னாய்.”

கா: “தப்பா எடுக்காதீங்க சார். கொஞ்சம் விவரமா இங்க நீங்க செய்யறதைச் சொல்ல முடியுமா?”

“அதை உனக்குப் புரிய வைப்பது கஷ்டம்.”

கா: “பரவாயில்லை, முயற்சி பண்ணுங்க, நான் புரிஞ்சுக்க முயற்சிக்கிறேன்.”


கா: “என்னோட வேலையை முடிச்சுட்டேன். இப்ப சொல்லுங்க சார்.”

“பல இஷ்ட தெய்வங்கள் எனக்கு உண்டு. ஒவ்வொரு தெய்வத்தையும் துதிப்பதற்குச் சில பாடல்கள் உள்ளன. அதை என் மனத்தளவில் பாடி விடுவேன். இதை நான் ஒரு முப்பது ஆண்டுகளாகச் செய்து வந்துள்ளேன்.”

கா: “ஒரு மாலைப் பொழுதில் எத்தனை தெய்வங்களைத் துதிப்பீர்கள்?”

“அப்படி எல்லாம் கணக்கு ஒன்னும் கிடையாது. முடிந்த அளவு நான்கைந்து தெய்வங்களை ஒரு நாளில் துதித்து விடுவேன்.”

கா: இந்த நாளில் இந்த தெய்வம்னு ஏதாவது கணக்கு உண்டா?

“அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது. ஒரு வாரத்தில், பெரும்பாலும் எனக்குத் தெரிந்த பாடல்கள் எல்லாத்தையும் சொல்லி முடிச்சுடறது வழக்கம்.”

கா: “சார், தப்பா நெனச்சுக்காதீங்க சார். எல்லா தெய்வமும் ஒன்னுதான்னு சொல்றாங்க. அப்படியிருக்க, நீங்க மட்டும் ஏன் பல தெயவங்களையும் வழிபடறீங்க?”

“நான் இந்த வாக்கு வாதத்திற்கு வரலை. எனக்குப் பிடிச்சதை நான் செய்யறேன். யாருக்கும் கெட்டது செய்யலையே.”

கா: “எப்படி சொல்லறதுன்னு தெரியல. இந்த 21 –ஆம் நூற்றாண்டில் இப்படியெல்லாம் செய்யறது கொஞ்சம் பிற்போக்குத்தனமாகத் தெரியவில்லை?”

“அடுத்த முறை சந்திக்கும் பொழுது விவரமாக இதைப் பற்றி பேசலாம்.”


“உன்னோட வேலையை முடிச்சிட்டயா?”

கா: “முடிச்சிட்டேன் சார்.”

“அப்படி என்ன வேலை செஞ்ச?”

கா: “அது உங்களுக்கு புரியாது.”

“பரவாயில்லை. விவரி, நான் புரிஞ்சுக்க முயற்சிக்கிறேன்.”

கா: “என் பொண்ணு இங்க விளையாடறத திறன்பேசில படம் பிடிச்சிடுவேன்.”

“பார்த்திருக்கேன்.”

கா: “அப்படியே, அந்த படத்தை ஃபேஸ்புக், இன்ஸ்டாக்ராம் –ல மேலேத்திடுவேன்.”

“அப்புறம்?”

கா: “சார், உலகத்துல எத்தனை விஷயம் நடக்கறது. டிவிட்டரில என்னை ஒரு 10,000 பேர் பின்பற்றறாங்க. பல விஷயங்களைப் பற்றிக் கருத்துத் தெரிவிப்பேன்.”

“டிவிட்டர், உங்களுக்குக் கருத்துத் தெரிவிக்க பணம் ஏதாவது தராங்களா? இல்லை, அவங்க உங்களை கருத்து தெரிவிக்காவிட்டால், ஏதாவது மோசமான விளைவுன்னு
பயமுறுத்தறாங்களா?”

கா: “என்ன சார் புரியாம பேசறீங்க. உலக நிகழ்வுகளில் ஒவ்வொரு மனிதனும் பங்கேற்க வேண்டும் சார். உங்க காலம் போல இல்லை. ஒவ்வொரு மனிதனிடம் ஒரு திறன்பேசி மூலம் ஒரு ஊடகப் போரையே நிகழ்த்த முடியும்.”

“ஆக, எந்த வித நிர்பந்தமும் இல்லாம, நீங்களே கருத்து தெரிவிக்கறீங்க. Interesting. அப்புறம் வேற என்ன செய்வீங்க?”

கா: ”புதிய சினிமா பற்றி டெக்னிகலாக அலசுவோம். அதையும் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸப்பில் விவரமாகக் கருத்து தெரிவிப்போம். முக்கியமாக, யுடியூப்பில் புதிதாக டிரெண்டு ஆகின்ற விடியோக்களை அவசியம் பார்த்து விடுவேன்.”

“புரியாமத்தான் கேக்கறேன். இதை எல்லாம் செய்ய வேண்டும்னு யார் உங்களுக்கு சொல்லிக் கொடுத்தாங்க?”

கா: “எதுக்கு சார், யாராவது சொல்லித் தரணும்? எப்படி வாழ்க்கையை அனுபவிக்கணும்னு நாமே தான் முடிவு செய்யணும். இந்தப் புதிய திறன்பேசி தொழில்நுட்பம் வந்ததிலிருந்து, இந்த முறைகளை என்னுடைய சந்ததியினர் தானே கத்துக்கிட்டோம்.”

“அப்புறம், வாட்ஸப்புனு ஏதோ சொன்னீங்களே. அதுல என்ன செய்வீங்க?”

கா: “எனக்கு ஒரு 30 வாட்ஸப் குழுக்களில் பங்குண்டு. என்னோட பள்ளி, கல்லூரில, படிச்சவங்க, பல ஆபீஸ்ல வேல செஞ்சவங்க, சில அரசியல் மற்றும் சினிமா ஆர்வமுடைய குழுக்கள்னு ஒரு நாளைக்கு குறைஞ்சது ஒரு 100 செய்திகள் வரும். சில சுவையான செய்திகளை மற்ற குழுக்களுடன் ஷேர் செய்வது, சில கருத்துக்களுக்கு என்னுடைய ஆமோதல், எதிர்ப்பு, விளக்கம் என்று அது ஒரு பெரிய உலகம். உங்களுக்கு புரியாது சார்.”

“கொஞ்சம் புரியுது, உனக்கு எவ்வளவு வேலைகள் இருக்குன்னு. நாளைக்கு மேலும் பேசலாம்.”


கா: “இஷ்ட தெயவங்களை வணங்கி முடிச்சாச்சா, சார்?”

“இன்றைக்கு முடிச்சாச்சு. கொஞ்சம் உன்னுடைய பூங்கா திறன்பேசி வேலைகளைப் பற்றி நினைத்தேன். சில சந்தேகங்கள் கேக்கலாமா?”

கா: “தாராளமா!”

“நீங்க டிவிட்டர், வாட்ஸப் மற்றும் ஃபேஸ்புக்கில் பல உலக நடப்புக்கும் கருத்து தெரிவிக்கிறதா சொன்னீங்க. உலக நடப்புகள் நடந்த வண்ணம் இருக்கு. இன்னிக்கி ஒரு பெரிய விபத்து, நாளைக்கு ஒரு வங்கி ஸ்ட்ரைக் அப்படி ஏதாவது நடந்துகிட்டே இருக்கு, இல்லையா? உங்களைப் போல பல கோடி பேர்கள் கருத்து தெரிவிக்கிறீங்க. அதுக்கு பிறகு என்ன நடக்கிறது?”

கா: “சார், அமெரிக்க தேர்தலையே மாற்றி விடும் சக்தி இந்த சமூக வலையமைப்பிற்கு இருக்கு. என் போல பல மக்களின் கருத்து, அரசியல் தலைமையை வேறு விதமாகச் சிந்திக்க வைக்கிறது.”

“அதெல்லாம் சரி. இதை வேற விதமாக சொன்னால், உங்கள் கருத்தின் வீச்சு பற்றி உங்களுக்கே தெரியாது. நம்முடைய கருத்தால், ஏதாவது நல்லது நடக்காதா என்ற எண்ணத்தில் நீங்கள் பதிவு செய்கிறீர்கள். அப்படித்தானே?”

கா: “சார், இந்த டிஜிட்டல் உலகில், உங்கள் பங்கைச் செய்தல் ஒவ்வொரு மனிதனுடைய கடமை. ஒரு பிரச்னையில், மனிதர்களின் கருத்துக்கள் எல்லாம் ஒன்றிணைந்து சரியான முடிவை உலக நாடுகள் எடுக்கும்னு நம்பணும் சார்.”

“யார் உங்களுடைய கருத்துக்களை ஒன்றிணைக்கிறாங்க?புரியும்படி சொல்லுங்களேன்.”

கா: “அதெல்லாம் உங்களுக்குப் புரியாது. எந்த ஒரு மனிதரும் இதைச் செய்வதில்லை. ஏன், எந்த ஒரு அமைப்பும் கூட இதைச் செய்வதில்லை. பல அமைப்புகள் இந்தக் கருத்துக்களை ஒன்றிணைத்து வெளியிடுகின்றன. அதன்படி சில பிரச்னைகளுக்கு முடிவெடுக்கப்படுகிறது.”

“ஆக, நம்ம அரசாங்கம் இந்த அமைப்புகளின் அறிக்கைக்காக காத்திருந்து முடிவெடுக்கிறதா? அப்புறம் அதிகாரிகள், அமைச்சர்கள், துறை வல்லுனர்கள் எதுக்கு?”

கா: “நம்ம நாட்டுல இன்னும் அந்த அளவுக்கு முன்னேறல. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பல அறிக்கைகளை டிவிட்டர் மூலம் வெளியிடுகிறார்.”

“சரியா போச்சு. தப்பு இல்லாம ஆங்கிலம் கூட டைப் செய்யத் தெரியாத ஒரு அதிபர், உங்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாகி விட்டாரோ?”

கா: “அத விடுங்க சார். தப்பான உதாரணம். இன்னிக்கி அமெரிக்க செனட், மார்க் மற்றும் சுந்தரை கேள்விக் கணைகளால் துளைக்கக் காரணம் என்ன? சமூக வலைத்தளங்களின் பலத்தைக் கண்டு அரசாங்கங்கள் பயப்படுகின்றன.”

“சரியா நீங்க புரிஞ்சுக்கல தம்பி. சமூக வலைத்தளங்கள் டிவி மற்றும் செய்தித்தாள்கள் போல ஒரு கட்டுப்பாட்டோடு நடந்து கொள்வதில்லை என்பதற்காகவே செனட் இவர்களைக் கேள்வி கேட்டது. சரி, யார் இந்த மார்க்?”

கா: “என்ன சார் ஓட்டரீங்க. மார்க் ஃபேஸ்புக்கின் தலைவர். சுந்தர் கூகிளின் தலைவர்.”

“இவர்களை உனக்குத் தெரியுமா?”

கா: “இதென்ன கேள்வி சார்? அவர்களை எனக்குத் தெரியும். அவ்வளவுதான். என் வேலை இந்த டிஜிட்டல் உலகில் பங்கேற்பது.”

“சரி நாளை மேலும் பேசுவோம்.”


“சரி, காளி, இன்னொரு கேள்வி கேட்கலாமா?”

கா: தாராளமா!

“எப்படி, வாட்ஸப், ஃபேஸ்புக், யுடியூப், இன்ஸ்டாக்ராம் போன்ற பல வகை சமூக வலைத்தளங்களை ஒரே சமயத்தில் சமாளிக்கிறீர்கள்?”

கா: “ஒரே சமயத்தில் எல்லாத்தையும் செய்யறது முடியாத காரியம் சார். ஒரு வாரத்தில், ஏறக்குறைய எல்லா தளங்களிலும் ஓரளவிற்கு என்னுடைய பங்களிப்பை முடித்து விடுவேன்.”

“புரியுது. ஆனால் இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு முறை இருக்கல்லவா?”

கா: “உண்மைதான். ஆனால், இதெல்லாம் எளிதில் புரிஞ்சுக்கலாம். கடைசியில் எல்லாம் ஒன்னுதான். நம் பங்கு, நம் கருத்துக்களை எழுத்துக்களாகவோ, விடியோவாகவோ, அல்லது படமாகவோ தெரிவிப்பது. சில சமயம் ஒலியாகக் கூட சொல்லிவிடுவோம்.”

“இப்ப புரியுது உங்களது மதத்தின் அடிப்படை.”

கா: “என்ன சார், நான் டெக்னாலஜி பற்றி சொல்றேன், நீங்க மதம்கிறீங்க. சரியில்லை சார்!”

“நீ சொன்னபடி உன்னுடைய எழுத்து, படம், ஒலி, விடியோ எல்லாம் அடிப்படையில் என்ன?”

கா: “அது டிஜிட்டல் உலகில் டேடா அல்லது தமிழில் தரவுன்னு சொல்ல்லாம்.”

“இப்ப சொன்னாயே, அந்த தரவுக்கு பல வடிவங்கள் உண்டு, இல்லையா?”

கா: “அது சரி, அதுக்கு என்ன?”

“நீ சொன்னபடி, வாரத்திற்கு எல்லா வடிவங்களிலும் இந்த பல சமூக வலைத் தளங்களில் உன் பங்கீட்டை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நீ செய்கிறாய், இல்லையா?”

கா: “இதென்ன சார், நான் சொன்னதையே திருப்பி சொல்றீங்க?”

“சரியா கவனி – நான் ‘எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்’ என்பதை சேர்த்துச் சொன்னேன். ஒவ்வொரு சமூக வலத்தளத்திற்கும் ஒரு அனுகுமுறையுடன் உன் கடமையைச் செய்கிறாய் இல்லையா? இதை யாரும் நீ செய்ய வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தவில்லை, சரியா?”

கா: “சார், என்னதான் சொல்ல வரீங்க?”

“பெரிதாக உனக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லை. நான் இஷ்ட தெய்வங்களை பல விதங்களிலும் துதிக்கிறேன். நீயும் பல முறைகளில் இந்த சமூக வலைதளங்களில் உன் பங்கீட்டைச் செய்கிறாய். நீயும் சரி, நானும் சரி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இதைச் செய்கிறோம். சரியா?”

கா: “சார், என்னை மதவாதியாக்கி விடாதீங்க சார்…”

“நீ டிஜிட்டல் மதத்தைச் சேர்ந்தவன். நான் சற்று பழமை முறைகளைப் பின்பற்றுகிறேன். மற்றபடி, எனக்கு ஒரு பேட்டரி கூடத் தேவையில்லை. ஒரு விதத்தில் உன் மத முறைகளை விட, என்னுடைய முறைகள் மேலானது. மற்றவருக்கு எந்த தீங்கும் இதனால் நேராது.”

கா: “That’s a stretch, சார்.”

“சமூகப் பொறுப்பு எல்லாருக்கும் உண்டு. அதை மறந்துடாத. வெறுமனே இருந்தாலும் சரி, டிஜிட்டல் மதவாதியாக இருந்தாலும் சரி.”

கா: “குட் நைட் சார்.”

செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – அலுவலக எழுத்துப் பயன்பாடு – பகுதி 5

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மிகவும் பிரபலமாக இருந்த தட்டச்சுப் பணிகள் இன்று மறைந்துவிட்டன. தட்டச்சு வேலைகள் எப்படி மாறி இன்றைய புதிய வேலைகளாக மாறியுள்ளது? இன்றைய புதிய வாய்ப்புகள் என்னென்ன? செயற்கை நுண்ணறிவுத் துறை வளர்ந்துவிட்டால், இன்றைய அலுவலக வேலைகள் மறைந்து விடுமா? பரவலான வேலை வாய்ப்புகள் எங்கே இருக்கக் கூடும். இந்தப் பகுதியில் இந்த முக்கிய வாழ்வாதார விஷயத்தை ஆராய்வோம்

 

புதிய தமிழ் தொழில்நுட்ப யூடியூப் சானல் அறிமுகம்

தமிழில் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானம் பற்றிய எளிய அறிமுக விடியோ சானல் இது. தாராளமாக எல்லா வயதினருக்கும் பொருத்தமான சானல். குறிப்பாக, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்தச் சானல் மூலம் பயன் பெறுவார்கள் என்று நினைக்கிறேன்.

இதற்கு நல்ல வரவேற்பிருக்கும் என்று நம்புகிறேன். பிடித்திருந்தால் இந்த சேனலை subscribe செய்யுங்கள்.

உங்களது கருத்துக்களை தமிழிலோ, அல்லது ஆங்கிலத்திலோ பதிவு செய்யுங்கள்.

என்னுடைய பல விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பக் கட்டுரைகளை இங்கே நீங்கள் படிக்கலாம்:

https://thamizhnutpam.wordpress.com/

இந்திய அடுக்கு – நிதிப் புரட்சியின் அடுத்த கட்டம்

இந்தியாவில், உலகெங்கும் இருப்பது போல, வங்கிகள் பணம் மாற்றிக் கொள்ள மற்றும், நுகர்வோர் பணக் கொடுக்கல்/வாங்கலுக்கு பலதரப்பட்ட மின்னணு அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

 

ஆனால், இந்தியப் பொருளாதாரத்தின் ஒழுங்குபடுத்தப்பட்ட பிரிவினுக்கே (organized economic sector) பயனளித்தது. இந்தியப் பொருளாதாரத்தின் வெறும் 2% மட்டுமே இதிலடங்கும். எஞ்சியிருக்கும் பொருளாதாரம், ரொக்கத்தை (cash) நம்பியே இயங்கி வந்துள்ளது. இதற்கு, பல காரணங்கள் இருந்தாலும், இரண்டு முக்கிய விஷயங்கள்:

  1. ரொக்கம் என்பது ஒரு சேவை முடிந்தவுடன் உடனே கைமாறும்
  2. மிக எளிதாக வங்கியில்லாத இடத்திற்கெல்லாம், பயன்படும் கருவி ரொக்கம்

இவ்வளவு பெரிய இந்த ரொக்கப் பொருளாதாரத்தை எப்படி ஒழுங்குபடுத்தப்பட்ட பொருளாதாரத்திற்குள் கொண்டு வருவது? அத்துடன், அரசு மானியம், மற்றும், மக்கள் நலக் கொடுக்கல்/வாங்கலை எப்படி ரொக்கப் பொருளாதாரத்திலிருந்து விடுதலைச் செய்வது?

கிராமங்களில் இன்று நிச்சயமாக இருக்கும் இரண்டு விஷயம் – தபால் நிலையம் மற்றும் செல்பேசிகள். செல்பேசிகள் தபால் நிலையம் இல்லாத சில இடங்களிலும் உண்டு என்ற நிலை வந்துள்ளது.

வேறு விதமாகச் சொன்னால், இந்தியாவில் எந்த ஒரு புதிய பொருளாதார முயற்சியும் ரொக்கப் பொருளாதாரத்துடன் போட்டியிட வேண்டுமானால், முக்கியமாகச் சிந்திக்க வேண்டியத் தேவைகள்:

  1. ஐந்து வினாடிக்குள் ஒரு சேவை நிகழ்ந்தவுடன், பாதுகாப்பாக, பணம் கைமாற வேண்டும்
  2. எல்லா வித செல்பேசி, தபால் மற்றும் வங்கிகளுடனும் வெகு எளிமையாக, ஆனால் கட்டணமின்றி இந்தப் பரிவர்த்தனை நிகழ வேண்டும்
  3. இந்தியர்கள் செல்பேசி நிறுவனங்களுடன் பெரிதாக விசுவாசம் காட்டுவதில்லை. எந்த நிறுவனம் எந்தத் தருணத்தில், எங்கு நல்ல ஒரு திட்டம் தருகிறதோ, அவர்களுக்கே இந்தியர்களின் அந்நாளைய விசுவாசம். நல்ல வேளையாக, இந்திய அரசாங்கம், மேற்குலகைப் போல, குடிமக்களை செல் நிறுவனகங்களுடன் சட்டங்களால் கட்டிப் போடவில்லை. நிதி நிறுவனங்களும் செல்பேசி நிறுவனகங்கள் போல எளிதில் மாற்றக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும்.

 

 

உலகில் இன்று இது நிகழும் ஒரே நாடு இந்தியா. இதற்கு UPI மற்றும் ஆதார் என்ற அருமையான முயற்சி அடிப்படை என்று பார்த்தோம். உலகில் எந்த ஒரு நாட்டிலும் அவ்வளவு எளிதாக பண மாற்றம் ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு உடனே மாற்றல் என்பது அவ்வளவு எளிதல்ல.  அத்துடன் விசா/மாஸ்டர் போன்ற அமைப்புகள் பெரு வியாபாரிகளுக்கு உதவினாலும், சின்ன வியாபாரிகளுக்கு இவர்களின் மூன்று/நான்கு நாள் பணப் பரிமாற்றத் தாமதம் ஒரு பெரிய தடைக்கல். இதனாலேயே விசா/மாஸ்டர் போன்ற அமைப்புகள் இந்திய கிராமப் பகுதிகளில் அதிகம் காலூன்றவில்லை. இன்று, இந்தியர்கள் மெதுவாக, ப்ளாஸ்டிக் கார்டுகளைத் துறந்து பல நிதிப் பரிவர்த்தனைகளை செல்பேசியிலேயே செய்யத் தொடங்கி விட்டார்கள். அரசாங்கமும், மானியம் மற்றும் மக்கள் நலக் கொடுக்கல்/வாங்கல் விஷயங்களை நேரடியாகச் செய்யத் தொடங்கிவிட்டது. இதற்கு அர்த்தம், ரொக்கம் முழுவதும் மறைந்துவிட்டது என்பதல்ல. பிரச்னையை இந்த நிதிப் புரட்சியின் வடிவமைப்பாளர்கள் ஒழுங்காகப் புரிந்து கொண்டுள்ளார்கள். ரொக்கம் முழுவதும் மறைந்து, ஒழுங்குபடுத்தப்பட்டப் பொருளாதாரத்திற்குள் பெரும்பான்மை இந்தியர்கள் வருவதற்கு இன்னும் பல ஆண்டுகளாகலாம். ஆனால், முதன் முறையாக, மேற்குலகைக் காப்பியடிக்காமல் இந்தியப் பிரச்சினைக்கு ஒரு அருமையான இந்தியத் தீர்வு கண்டுள்ள இந்த நிதிப் புரட்சியின் வடிவமைப்பாளர்களை எத்தனைப் பாராட்டினாலும் போதாது. இந்த நிதிப் புரட்சி இந்தியாவில் இப்பொழுதுதான் ஆரம்பமாகி உள்ளது. இதன் வீச்சு, இந்தியப் பொருளாதாரத்தையே புரட்டிப் போடும் சக்தி கொண்டது.

நிதிப் புரட்சியின் அடுத்த கட்டம்

இந்திய நிதிப் புரட்சி இப்பொழுதுதான் ஆரம்பமாகியுள்ளது. இன்றைய முயற்சிகள் முழுவதும் பயனளிக்க இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகும். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

  1. தனியார் வங்கிகள், UPI மூலம் பல சேவைகள் அளித்தாலும், இதில் அதிகம் காசு பண்ண முடியாது என்று அறிந்துள்ளது. இதனால், இவர்கள் மிக முக்கியமாக, ஒரு புதிய சிந்தனையுடன் வங்கி வியாபாரத்தை அணுக வேண்டும். அதாவது, கட்டணம் வசூலித்துப் பழகிய வங்கிகள் கட்டணத்திற்கு பதில் வேறு வழியைக் காண வேண்டும். நுகர்வோர் விட்டுச் செல்லும் டிஜிட்டல் தடையங்கள் நாளைய வருமான வழிகாட்டிகள். இதற்கு, தகவல் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய வேண்டும். இந்த விஷயத்தை முழுவதும் புரிந்து கொண்ட தனியார் வங்கிகள் வெற்றி பெரும். மற்றவை தடுமாறும். முதல் முயற்சிகள் அதிகப் பயனில்லாமல் போகலாம் – இதற்கும் தயாராக இருக்க வேண்டும்
  2. அரசு வங்கிகள், பழைய முறைகளைத் துறந்து, புதிய UPI சேவைகளுடன் போட்டி போட வேண்டும். இங்குத் தொழிற்சங்கம் ஒரு இடையூறாகவும் இருக்கலாம். இந்த மாற்றத்தில் பெரிதும் பாதிக்கப்படுவது அரசு வங்கிகள் என்பது என் எண்ணம். ஆனால், ஒரு முக்கிய முன்னேற்றம் அரசு வங்கிகளைக் காப்பாற்றும் என்று நம்ப வாய்ப்பிருக்கிறது. இந்திய கொடுக்கல்/வாங்கல் சேவைகள் சந்தை ராட்சச வேகத்தில் விரிவடையும். இந்த விரிவடைப்பில், அரசு வங்கிகளும் பயன்பெறும். ஒரே குறை, விரிவான சந்தையில் அரசு வங்கிகளின் பங்கு, தனியார் வங்கிகளை விடக் குறைவாகவே இருக்கும்
  3. ஆர்.பி.ஐ., Payments Bank என்ற அமைப்பை 2014 முதல் அனுமதித்தது. இது போன்ற அமைப்புகள், கடனளிப்பு, மற்றும் சில விஷயங்களைத் தவிர, வங்கிகள் போல செயல்படலாம். இதில் முக்கியமாக, இந்திய தபால், ஒரு Payments Bank –ஐத் தொடங்கியுள்ளது. பீகார், ஒடிஸா போன்ற மாநிலங்களிலிருந்து கட்டட வேலை போன்ற சிறு வேலைகளை, மும்பய், சென்னை, பெங்களூரு போன்ற இடங்களில் செய்கிறார்கள்.  இவர்கள் பொதுவாக, தங்கள் கிராமத்திற்கு மணியார்டர் மூலம் பணம் அனுப்புகிறார்கள். இதற்கும் சில நாட்கள் பிடிக்கிறது. இந்தியத் தபால் 150,000 அலுவலகங்களுடன் இயங்கும் ஒரு பெரிய அமைப்பு. எந்த வங்கிக்கும் இத்தனைக் கிளைகள் இல்லை. இந்தியத் தபாலின் IPPB, மணியார்டர் விஷயத்தைத் தொழில்நுட்பம் கொண்டு தலைகீழாக மாற்றும் என்ற நம்ப வாய்ப்பிருக்கிறது. (IPPB – India Post Payments Bank). IPPB –யிடம் மற்ற வங்கிகளைப் போல ATM உண்டு, ATM card உண்டு, இவர்களிடம், வங்கி தொடர்பாளர்களும் (banking correspondents) உண்டு. வெறும் 15 நிமிடத்தில் UPI/Aadhaar செல்பேசி கொண்டு, பணம் மும்பயில் கட்டியவுடன், ஒரு சின்ன ஒடிஸா கிராமத்தில் குடும்ப உறுப்பினர் கையில் கிடைக்கும். இது இன்று சாத்தியம். இதற்கான கட்டணம், மணியார்டரை விட வெகுக் குறைவு. IPPB இன்னும் தன்னுடைய 150,000 கிளைகளிலும் எல்லா சேவைகளையும் அளிக்கத் தொடங்கவில்லை. இன்னும் 2 ஆண்டுகளில் இது ஒரு பெரிய இயக்கமாக மாற வாய்ப்பிருக்கிறது
  4. BBPS (Bharat Bill Payment System)  என்ற அமைப்பைப் பற்றி முன்னமே பார்த்தோம். இதன் பயனை முழுவதும் இந்திய வியாபாரங்கள் இன்னும் பெறவில்லை. இன்றைய அதிகபட்சப் பயன், இந்த சேவையைப் பயன்படுத்திச் சில மின்சாரம், தண்ணீர், வீட்டு வரி போன்ற பயன்பாட்டுக் கட்டணங்களைச் செலுத்துவதோடு சரி. இன்னும் வியாபார பொருள் விவரப் பட்டியல்களை (invoices) வியாபாரிகள் அதிகம் இந்த எளிய முறையைப் பயன்படுத்தத் தொடங்கவில்லை. இந்திய அரசாங்கத்திடம் இன்னும் மக்களுக்கு தன்னுடைய வியாபார விஷயங்களை முழுவதும் பகிரும் அளவுக்கு நம்பிக்கை வளரவில்லை. ஆரம்பத்தில், UPI  கொடுக்கல்/வாங்கல் சேவைகள் மீதும் நம்பிக்கையின்மை இருந்தது உண்மை. BBPS மீது நம்பிக்கை வளரத் தொடங்கினால், இந்தியாவின் 70 மில்லியன் வியாபாரங்களில், ஒரு 25% பங்கெடுத்தாலும், உலகின் மிகப் பெரிய வியாபார கொடுக்கல்/வாங்கல் அமைப்பாக இது மாற வாய்ப்புண்டு. ஏனென்னில், 17 மில்லியன் வியாபாரங்கள் வருடம் ஒன்றைக்கு, தலா 1,000 பொருள் விவரப் பட்டியல்களை இந்த அமைப்பு மூலம் சரி செய்து கொண்டால், 17 பில்லியன் பொருள் விவரப் பட்டியல்களை இந்த அமைப்பில் காடுகளை விடுதலை செய்யும். காகிதம் தேவையிருக்காது. வியாபார வருமான வரிக்கும் இது ஒரு அருமையான வழி. இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் சில சட்டங்கள், மற்றும் ஊக்கம் மூலம், இந்த மின்னணு  நெடுஞ்சாலையில் இந்திய வியாபாரங்கள் பயணிக்கும் என்று நம்பலாம். இது UPI புரட்சியை விடப் பன்மடங்கு பெரிது. இந்த நம்பிக்கைக்குக் காரணம், இந்திய வியாபாரங்கள் மிக வேகமாக மாறும் தன்மை கொண்டவை – இதில் உள்ள வளர்ச்சி வாய்ப்புகளை உடனே கண்டு கொள்வார்கள்.

 

சிறு வியாபாரங்களை இந்த முன்னேற்றம் சென்றடைய வேண்டும். இதற்கு, பல ஐடியாக்களும், சில முதல் முயற்சிகளும் ஆரம்பித்து விட்டது என்றாலும், இதில் இன்னும் சில தடைகள் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு முக்கிய காரணம், வங்கிகள் இன்னும் இந்த இந்திய அடுக்கைப் பயன்படுத்தி சிறு வியாபாரங்களுக்குக் கடன் வழங்கத் தொடங்கவில்லை. அத்துடன், சிறு வியாபாரங்களும், ரொக்கத்திலிருந்து விடுபட்டு, மின்னணு முறைகளை முழுவதும் அரவணைக்கவில்லை. இது மிக அவசியம் உடனே நிகழ வேண்டும். நாளொன்றுக்கு, 10% முதல் 30% வட்டி கொடுத்து பல சிறு வியாபாரிகள் இந்தியா முழுவதும் அல்லாடுவது நாம் எல்லோரும் அறிந்த விஷயம். இந்திய அடுக்கை, சிறு வியாபாரிகள் கடன் விஷயத்தில் பயன்படுத்தத் தொடங்கினால், மிகப் பெரிய சமூக மாற்றம் இந்தியாவில் உண்டாகும்.

 

 

இதுவரை நாம் பார்த்த எல்லா இந்திய அடுக்கின் அரவணைப்புகளும், தனியார், பொது வியாபாரங்கள், மற்றும், தனிநபர்களிடமிருந்து வந்தவை. இந்திய அரசாங்கம், சமூக மற்றத் திட்டங்கள் மற்றும் மானிய பட்டுவாடா விஷயத்தில் மட்டுமே இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வந்துள்ளது. விவசாய ஊக்கப் பணம், வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம் போன்ற விஷயங்களில் இடைத் தரகர்களை விடுவிக்க அரசாங்கம் இந்த இந்திய அடுக்கை பயன்படுத்தத் தொடங்க வேண்டும். அரசாங்க நிலச் சம்பந்தப்பட்ட விஷயங்களை இந்த இந்திய அடுக்கில் உள்ள டிஜிட்டல் பெட்டகம் மூலம் கொடுக்கல்/ வாங்கல்/ பதிவு விஷயங்களை முழுவதும் கொண்டு வந்துவிட்டால் லஞ்சம் வெகுவாக குறைந்துவிடும். அத்துடன் நகராட்சிகள் இந்தத் தொழில்நுட்பத்தை இன்னும் அதிகம் பயன்படுத்தத் தொடங்கவில்லை. இன்னும் 5-8 வருடங்களில் இவை நடக்கும் என்று நம்ப வாய்ப்பிருக்கிறது.

கடைசியாக மிக முக்கியமான விஷயம், இந்தத் தொழில்நுட்பம் மிகக் குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டு, அமுல் படுத்தப்பட்டுள்ளது. இதனால், பயன்பாட்டாளர்களுக்கு அதிகம் பயிற்சி அளிக்கப்படவில்லை. வணிக நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும். அத்துடன் அரசாங்கமும் பயிற்சியை துச்சமாக நினைக்கக் கூடாது. என்னதான் தொழில்நுட்பத்தில் வல்லவர்களாக இருந்தாலும், பயிற்சி விஷயத்தை ஒதுக்குதல் தவிர்ப்பது நல்லதல்ல

முடிவுரை

எந்த ஒரு ராட்சச ப்ராஜக்டிலும் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். இன்று உலக வணிகத்திற்கே முக்கியமான பனாமா கால்வாயைக் கட்டுகையில் 10,000 மனிதர்கள் பணியில் இறந்தார்கள். தேடிப் பிடித்து ஆவணப் படத்தைப் பார்ப்பவர்களைத் தவிர, இதை யாரும் பொருட்படுத்துவதில்லை. பனாமாவை விடப் பெரிய சாதனை இந்த இந்திய அடுக்கு. முதலில் நம்ப மறுத்த மேற்குலகம், Forbes, Fortune, Harvard Business Review, Wharton Business School என்று படிப்படியாக இதை ஆராயத் தொடங்கியுள்ளார்கள். இந்தியாவால் இதெல்லாம் சாத்தியமா என்று சொன்னவர்கள் இன்று அதிகம் பேசுவதில்லை. பொதுவாக, மற்ற அரசாங்கங்கள் பொறுத்திருந்து இந்திய சோதனை வெற்றி பெற்றபின் பார்க்கலாம் என்றே இயங்கி வருகிறார்கள். பொதுவெளியில் மேற்குலகால் இவ்வளவு வேகமாய் செயல்பட இயலாது. அதற்கான தொழில்நுட்ப வல்லமையும் அவர்களிடம் இருந்தும், இவ்வாறு செயல்படுத்த தூரநோக்கு அவர்களிடம் இல்லை; அத்துடன் அரசியல் தலைமையின் முழு ஒத்துழைப்பும் மேற்குலகில் இல்லை. இந்தியாவின் அதிஷ்டமான விஷயம், நம் அரசியல்வாதிகள் எத்தனை ஊழல் புரிந்தாலும், நம்முடைய இளைஞர்களின் திறமை மற்றும் மேலாண்மை மீது இவர்களின் நம்பிக்கை வளர்ந்து கொண்டு வந்துள்ளதுதான்.

 

 

இரண்டாம் உலகப் போர், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை தவிடு பொடியாக்கியது என்பது சரித்திரம். ஆனால், இன்றும் பிரிட்டிஷ் அரசாங்கம் மற்றும் அந்த நாடு உலக அளவில் முக்கியத்துவம் இழக்கவில்லை – ஏன்? அதன் சண்டையிடும் ராணுவம் குறைந்திருக்கலாம். அதன் உலகளாவிய கட்டுப்பாடும் குறைந்திருக்கலாம். ஆனால், பல நூறு ஆண்டுகளாக இங்கிலாந்து உருவாக்கிய உலகத்தர அமைப்புகள் (world class institutions) அந்த நாட்டை உலக அளவில் முக்கியமானதாக்குகின்றன. பிரிட்டிஷ் உடல்நல முறைகள், பல்கலைக் கழகங்கள், அவர்களது சக்தி வாய்ந்த கப்பல்துறை, விஞ்ஞான ஆராய்ச்சி கழகங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். சுதந்திர இந்தியாவில், பல உலகத் தர அமைப்புகள் உருவாகியது உணமை. ஆனால், பெருவாரியான இந்தியர்களை பயனடைய இவை உதவவில்லை. என் பார்வையில் ‘இந்திய அடுக்கு’ நாம் உருவாக்கிய உலகத்தர அமைப்பு. நம்முடைய அரசியல் நோக்குகளை அதன் மேல் பூசாமல், தொடர்ந்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அதன் குறைகளை நீக்குவது மிகவும் முக்கியம். ஏனென்றால், இந்த இந்திய அடுக்கு முயற்சி, சாதாரண இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் ஒரு அருமையான சுதந்திர, முன்னோடி இந்திய முயற்சியாக மலர வேண்டும்.

மேற்கோள்கள்

பல இணையதளங்கள், பத்திரிக்கைகளில் வந்தக் கட்டுரைகள் இந்தக் கட்டுரையின் ஆராய்ச்சிக்கு உதவியது. இந்த மேற்கோள்கள் இந்த முக்கிய இந்திய முயற்சியைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள உதவும் என்று நம்புகிறேன். சில சுட்டிகளுக்கு குறிப்புறையும் அளித்துள்ளேன்.

அடிப்படை விளக்கம்

  1. http://indiastack.org/ – இந்திய அடுக்கைப் பற்றிய அருமையான தளம், அருமையான கானொலிகள் உண்டு
  2. https://en.wikipedia.org/wiki/India_Stack
  3. https://www.slideshare.net/indiastack/india-stack-a-detailed-presentation
  4. http://www.livemint.com/Politics/afjuy0dHgS4beFggSTVddP/Aadhaar-20-Creating-Indias-digital-infrastructure.html
  5. https://www.linkedin.com/pulse/banking-india-stack-road-cashless-economy-prasanna-lohar/
  6. https://www.indiapost.gov.in/Financial/DOP_PDFFiles/20161014 1612hrs IPPB_Frequently Asked Questions 2 0.pdf – இந்திய தபால் துறையின் Payments Bank பற்றிய கேள்வி பதில்

விவரமான விளக்கங்கள்

  1. https://www.quora.com/What-is-India-Stack-How-is-it-going-to-impact-India-in-the-next-few-years
  2. http://www.cgap.org/blog/should-other-countries-build-their-own-india-stack
  3. https://medium.com/wharton-fintech/your-guide-to-upi-the-worlds-most-advanced-payments-system-b4e0b372bf0b – இந்திய சாதனையை அழகாக விளக்கும் ஒரு கட்டுரை
  4. http://www.cgap.org/photos-videos/india-stack-new-financial-inclusion-infrastructure
  5. http://www.cgap.org/blog/india-stack-major-potential-mind-risks
  6. http://mashable.com/2017/02/14/india-aadhaar-uidai-privacy-security-debate/#fyBOm47C1Oqg
  7. https://techcrunch.com/2016/06/14/indias-fintech-revolution-is-primed-to-put-banks-out-of-business/
  8. http://edugild.com/assets/img/medialogos/biometrics.pdf
  9. https://medium.com/wharton-fintech/the-bedrock-of-a-digital-india-3e96240b3718
  10. http://www.iamwire.com/2016/11/list-of-mobile-wallets-upi-payment-apps-in-india/145172
  11. https://www.youthkiawaaz.com/2016/06/nandan-nilekani-writes-about-aadhar-card/
  12. https://techcrunch.com/2013/12/06/inside-indias-aadhar-the-worlds-biggest-biometrics-database/

பின்னணி

  1. https://yourstory.com/2017/07/history-of-aadhaar/ – ஆதார் பின்னணி

செய்தித்தாள் கட்டுரைகள்

  1. http://www.thehindu.com/opinion/lead/Aadhaar-on-a-platform-of-myths/article13673159.ece
  2. https://economictimes.indiatimes.com/industry/banking/finance/banking/how-india-post-payments-bank-prepares-for-a-new-life-from-money-order-to-mobile-banking/articleshow/58917285.cms

ஆதார் பாதுகாப்பு விமர்சனம்

  1. http://www.cse.iitm.ac.in/~shwetaag/papers/aadhaar.pdf

மேற்குலகக் கருத்துக்கள்

  1. https://www.forbes.com/sites/abehal/2015/11/25/mapr-and-big-data-in-the-worlds-largest-biometric-database-project/#46579dbd2035 – Forbes
  2. https://www.forbes.com/sites/johnmauldin/2017/04/09/indias-tech-revolution-has-already-left-the-west-behind-its-the-best-investment-opportunity-now/2/#5a5e629c35a8
  3. http://uk.businessinsider.com/india-might-be-first-cashless-society-2017-6 – Business Insider
  4. http://www.icommercecentral.com/open-access/payment-systems-in-india-opportunities-and-challenges.pdf
  5. https://www.huffingtonpost.com/entry/why-were-excited-about-technology-stacks-for-financial_us_58add330e4b0598627a55f72 – Huffington Post
  6. https://hbr.org/2017/11/how-india-is-moving-toward-a-digital-first-economy
  7. http://knowledge.wharton.upenn.edu/article/mapping-indias-economic-future-jobs-productivity-and-banking-reform/?utm_source=kw_newsletter&utm_medium=email&utm_campaign=2017-12-14 – Wharton Business

எதிர்காலம்

  1. https://www.examrace.com/Current-Affairs/NEWS-Nine-Pillars-of-Digital-India-Important.htm – இந்திய அரசாங்க எதிர்காலத் திட்டம்

சொல்வனம் – மே  2018

இந்திய அடுக்கு – எதிர்காலம், சர்ச்சைகள்

இதுவரை இந்தக் கட்டுரைத் தொடரில், இந்திய அடுக்கின் மூன்று அடுக்குகளைப் பற்றி அலசினோம். இந்த மூன்று அடுக்கின் பலன்கள் ஏராளமாக இன்றே இந்தியா அனுபவித்துள்ளது. இதன் எதிர்காலம், இன்னும் பல சமூகப் புரட்சிகளைக் கொண்டுவரும். நாடு தழுவிய இந்த நிதிப் புரட்சியில் சர்ச்சைகள் ஏராளம். பல சவால்கள் நிறைந்த ஒரு மாபெரும் ப்ராஜக்ட், இந்திய அடுக்கு. எல்லாம் சுபிட்சம் என்று அர்த்தமில்லை. இதைப் பற்றியும் இந்தப் பகுதியில் அலசுவோம்.

பல இந்தியர்களுக்கு, ஏனோ இந்தியா ஒரு வல்லரசாகவில்லை என்ற ஏக்கம் இருப்பது சமூக வலைத்தளங்கள் மற்றும் 

பொது வெளிகளில் தெளிவாகத் தெரிகிறது. எந்த ஒரு நாடும் வல்லரசாக வேண்டும் என்று செயல்படுவது ஒரு நெடுங்கால நன்மை பயக்கும் விஷயமல்ல. இன்று உலகம் முழுவதும் அப்படி முயற்சி செய்த நாடுகளின் தடுமாற்றம் கண்கூடாகத் தெரிகிறது. முன்னாளைய இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், ரஷ்யா அந்தக் கனவுகளைத் துறந்து விட்டனர். மெதுவாக அமெரிக்காவும் அந்த நிலைக்கு வந்துவிடும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இன்று சைனா இந்த முயற்சியில் ஈடுபட்டாலும், அந்த நாடும் இந்த முயற்சிகளைத் துறந்துவிடக் கூடும். உலகின் சிறந்த நாடுகள் என்று பெயர் பெற்ற நாடுகளான, ஸ்வீடன், ஃபின்காந்து, டென்மார்க், கனடா போன்ற நாடுகள் கடந்த 60 ஆண்டுகளாக வல்லரசாகும் எந்த ஒரு நினைப்புடனும் செயல்படவில்லை. இந்த நாடுகளின் வெற்றி, தன்னுடைய குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மேற்கொண்ட முயற்சிகள். இந்திய அடுக்கின் நோக்கம், இந்தியாவை ஒரு வல்லரசாக்குவதல்ல. மாறாக,, அதன் குடிமக்களுக்கு சரியான சந்தர்ப்பங்களை உருவாக்கும் முயற்சி. டாம் ஃப்ரீட்மேன் கூறியது போல, ”இந்திய மக்களின் பேரார்வத்தின் அளவு, ஒரு ஷாம்பெயின் பாட்டிலை 70 ஆண்டுகள் குலுக்கியதற்கு ஈடாகும். இந்த பாட்டில் திறக்கும் பொழுது, வெளிப்படும் வேகம் இவ்வுலகம் கண்டிராதது”

இந்திய அடுக்கின் எதிர்காலம்

முதலில் சொல்லாமல் விட்டுப் போன சில இந்திய அடுக்கு விஷயங்களைப் பார்ப்போம்:

  1. ஒப்புதல் அடுக்கு (consent layer) – இந்த அடுக்கு, இன்னும் உருவாக்கத்தில் உள்ளது என்று சொல்லியிருந்தேன். 2017 –ல் முதன் முறையாக இந்த ஒப்புதல் அடுக்கில் ஒரு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவேறியது. CBSE பள்ளிகளின் இறுதியாண்டும் மதிப்பெண்கள், மாணவர்களுக்குக் காகிதமாக வழங்கப் படவில்லை. மாறாக, இதை ஒரு டிஜிட்டல் பெட்டகத்தில் (digital locker) ஒரு மின்னணு ஆவணமாக வைக்கப்பட்டது. ஒவ்வொரு 12 –ஆம் வகுப்பு மாணவனும், தன்னுடைய செல்பேசி அல்லது கணினி மூலம் இந்த மதிப்பெண் தாள்களை தரவிறக்கிக் கொள்ளலாம். மேலும், சேர வேண்டிய கல்லூரிக்கு இந்த மின்னணு மதிப்பெண் தாள்களைப் பார்க்க அனுமதியும் அளிக்கலாம் – ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும். இவ்வாறு, இந்த மதிப்பெண் தாள்கள் வெகு எளிதாக எத்தனைப் பல்கலைக்கழகங்களுக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம். அனாவசியமாக, நகல் எடுத்து, காடுகளை அழிக்க வேண்டாம். இது போன்ற அருமையான முயற்சிகள் மேலும் அடுத்த சில ஆண்டுகள் தொடரும்.
  2. ஒப்புதல் அடுக்கு, வீட்டுப் பத்திரம், ரேஷன் கார்டு, பிறப்பு, இறப்பு என்று முக்கிய ஆவணங்களுக்கு அடுத்தபடியாக ஒரு மின்னணு முறையாக மாற வாய்ப்பிருக்கிறது
  3. PayTM போன்ற பல சேவைகள் வந்துவிட்டாலும், இன்னும் அதன் தாக்கம் முழுமையடையவில்லை. இன்றைய 70 மில்லியன் பரிமாற்றங்கள், மாதம் ஒன்றிற்கு 200 மில்லியனாக 2020 –க்குள் உயரும். வியாபாரிகளும், நுகர்வோரும் இந்த நிதிப் புரட்சியின் முழுப் பயனையும் அனுபவிக்கையில், விசா போன்ற அமைப்புகள் இந்தியாவில் தொடர புதிய வழிகளைக் கண்டறிய வேண்டும். முதன் முறையாக, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியப் புதுமைகளைக் கண்டுத், தங்களின் முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
  4. இந்திய அடுக்கின் இன்னொரு முக்கிய அடுத்த கட்ட முயற்சி, சாலைச் சுங்கம் வசூலிப்பதை எளிதாக்குவது. இது FasTag என்று சொல்லப்படுகிறது. RFID மூலம் இயங்கும் இந்த மின்னணு முறை, எல்லாவித வண்டிகளிலும் பயன்படுத்தலாம். வடகிழக்கு அமெரிக்காவில் இயங்கும் EzPass போன்ற அமைப்பு இது. அமெரிக்க மாநிலமான MA –வில் எல்லா வண்டிகளும் நெடுஞ்சாலையில் இந்தமுறையைப் பின்பற்றுகின்றன.

5. GST என்ற விற்பனை வரி, இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த முயற்சி அல்ல. ஆனால், இதன் பின் இயங்கும், ஒரு மிகப் பெரிய விற்பனை வரி சார்ந்த தரவு தளம், இந்திய வியாபாரத்தையே மாற்றும் சக்தி கொண்டது. BBPS (Bharat Bill Payment System) என்ற இந்த முயற்சி, மாதம் ஒன்றிற்கு 1 பில்லியன் மின்னணு பொருள் விவரப் பட்டியல்களை (electronic invoices) கையாளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின்னணு பொருள் விவரப் பட்டியல்களை இணையம், செல்பேசி, அல்லது, பின்தொடர் (offline) முறைகளில் தாக்கல் செய்யலாம். மேலும், வாடிக்கையாளர்களும், இந்த அமைப்பைக் கொண்டே பொருட்களுக்குப் பணமளிக்கலாம் (இந்திய அடுக்கின் காகிதமற்ற முறைகளைப் பின்பற்றலாம்). இதில் உள்ள அருமையான ஒரு தொலைநோக்கான விஷயம் என்னவென்றால், இந்த மின்னணு பொருள் விவரப் பட்டியல்களை ஒரு டிஜிட்டல் பெட்டகத்தில் (digital locker) தேக்கிக் கொள்ளலாம். வங்கிகளிடம் கடன் வாங்கும் பொழுது, வியாபாரங்கள் இந்திய அடுக்கின், ஒப்புதல் அடுக்கு (consent layer) மூலம், தங்களுடைய வியாபார விவரங்களைச் சமர்ப்பிக்கலாம். இதில் எங்கும் காகிதம் இல்லை. இன்னும் சில ஆண்டுகளில், உலகில் முதன் முறையாக இந்தியாவில் இந்த மாற்றம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6. இன்று ஏறத்தாழ 15 மில்லியன் ஆதார் அடையாளக் கோரிக்கைகள் நாளொன்றிற்கு அரசாங்கத்திடம் (15 million authentication requests/day) முன்வைக்கப்பட்டு, சரியா, இல்லையா என்ற பதில் கிடைக்கிறது. இதன் பெரும் பயன்பாட்டாளர்கள்:

a. செல்பேசி நிறுவனங்கள்

b. பங்குச் சந்தை தரகர்கள்

c. வங்கிகள்

d. UPI மூலம் இயங்கும் சேவைகள்

7. மிக முக்கியமான இந்த முன்னேற்றங்கள் முழுவதும் இந்திய அரசாங்கத்தை அதிகமாக பாதிக்கவில்லை. இடைத் தரகர்களும், அரசியல்வாதிகளும் ஊழல் செய்வதால்தான் இந்திய குடிமகனின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை என்பது உலகறிந்த ஒன்று. இந்திய அடுக்கு அரசாங்க சேவைகளுக்கு இன்னும் சில ஆண்டுகளில் பயனில் வந்தவுடன், இடைத் தரகர் என்ற ஒருவர் தேவையின்றிப் போவார்கள். இன்று, இந்திய அடுக்கின் வீச்சு, வியாபாரத்துடன் சம்பந்தப்படுத்தப்படுகிறது. இன்னும் சில வருடங்களில், இது இந்தியக் குடிமகனின் முக்கியக் கருவியாக மாறும் சக்தி கொண்டது

8. இந்திய வங்கி முறைகள் கடந்த 70 ஆண்டுகளாக நடந்த முறையிலிருந்து அதிகம் மாறவில்லை. இந்திய அடுக்கு, சாதாரணர்களுக்கு நியாய வியாபார வட்டி, செல்பேசி மூலம், நேரடி வங்கித் தொடர்பு என்று காகிதமற்ற ஒரு முறையை இன்னும் 2 அல்லது 3 ஆண்டுக்குள் உருவாக்கிவிடும் என்று நம்பப்படுகிறது

9. செல்பேசி வசதி அதிகமில்லாத கிராமங்களில், ஒரு வங்கித் தொடர்பாளர் (banking correspondent), வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் ஒரு மின்னணு சேவை செயலாக்காளராக (electronic services enabler) இன்று பல கிராமங்களில் இயங்கி வருகிறார்கள். வங்கிகளின் நோக்கம் இன்று 4 கோடி குடும்பங்களின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்வது. இதில் மிகப் பணக்காரர்கள், மற்றும் நடுத்தர வர்கத்தினர் அடங்கும். இந்திய அடுக்கு மூலம், வங்கிகள், மிகக் குறைந்த செலவில் இன்னும் 20 கோடி இந்தியக் குடும்பங்களுக்கு வங்கிச் சேவைகளை எடுத்துச் செல்ல வேண்டும். இது இன்னும் சில ஆண்டுகள் பிடித்தாலும், மிகப் பெரிய சமூக மாற்றத்தை இது உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை

10. இந்திய வர்த்தகம், இன்றைய நிலையை விட, 10 முதல் 50 முறை இதனால் விரிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்திய அடுக்கு சர்ச்சைகள்

  1. முதலில் இந்திய அடுக்கின் நம்பகத்தன்மையைக் குறைத்த விஷயம், அதை உயர்த்தியவரின் செயலாலே வந்தது. நந்தன் நிலேகனி, 2014 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டது ஏனென்று தெரியவில்லை. ஆனால், இவரின் வாழ்நாள் சாதனைகளை, தவிடுபொடியாக்கிய விஷயம், இவர் அரசியலில் ஈடுபட்டது. இன்று, அதிலிருந்து விடுபட்டு, பல அருமையான சாதனைகளை நிகழ்த்தினாலும், இந்த அரசியல் நிழல் அவரையும் , இந்திய அடுக்கையும் தொடர்வது மறுக்க முடியாத விஷயம்.
  2. சில தன்னார்வலர்கள் இந்த இந்திய அடுக்கை உண்மையாக்கக் கடுமையாக உழைத்தும், இவர்களின், வெளியுலக, ஆலோசனை நிறுவனங்கள் சற்று சந்தேகத்தை எழுப்புவது உண்மைதான். இந்திய அரசாங்கம், சில முக்கிய பதவிகளில், லாபத்திற்காக இயங்கும் வெளியுலக லாப ஆலோசனை பணிகளில் ஈடுபட ஒரு இடைவெளி இருக்க வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும். இல்லையேல் அமெரிக்க லாபியிஸ்டுகள் போல ஆகிவிடும். அமெரிக்காவில் இன்று சட்டங்கள், பல பெரிய நிறுவனங்களைத் தாண்டி அமுல்படுத்துவதில் ஏராளமான சிக்கல் இருப்பது, இந்த லாபியிஸ்டுகள் செய்யும் நிழல் வேலைகளால் என்பது உலகறிந்த விஷயம்

இந்திய அடுக்கு, ஒரு ஆரம்ப நிலை தொழில்நுட்ப நிறுவனம் போல உருவாகிய ஒன்று. இதன் முக்கிய நல்முகம், இதனாலேதான், 8 ஆண்டுகளில், உலகில் எங்கும் நிகழாத நிதிப் புரட்சி இந்தியாவில் சாத்தியமானது. ஆனால், இந்த அணுகுமுறையின் முக்கியக் குறை, ஒரு பில்லியன் மக்களின் அந்தரங்கத்தைப் பற்றிய அதிகக் கவலையில்லாமல் செயல்படுவது. தொலிநுட்ப ரீதியில், ஆதார் மற்றும் இதர சேவைகள் மிகவும் பாதுகாப்பானவை என்பது உண்மை. ஆனால், இதில் சில குறைபாடுகள் இருப்பதும் உண்மை:
http://www.cse.iitm.ac.in/~shwetaag/papers/aadhaar.pdf – இந்த ஆராய்ச்சிக் கட்டுரை, அரசியல் சாயம் தடவாமல், குறைகளை முன்வைக்கிறது. 

a. வங்கிகள்/செல் நிறுவனகங்கள் போன்ற அமைப்புகள் ஆதார் அடையாளத்தைச் சரி பார்க்க UIDAI –யுடன், ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒப்பந்தத்தின்படி, UIDAI இந்த அடையாளப் பணிகளை செய்ய அனுமதிக்கும். இவர்கள் AUA/ASA  என்று அழைக்கப்படுகிறார்கள். வங்கிகள் ஒரு வாடிக்கையாளரிடம் ஆதார் அடையாளத்தைப் பல விஷயங்களுக்காகக் கோரலாம். நீங்கள் புதிதாக கணக்கு தொடங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்காக, கண்டிப்பாக வங்கி உங்கள் ஆதார் அடையாளத்தைக் கோரும். பிறகு, அந்த வங்கி மூலம், பங்குச் சந்தையில் நீங்கள் விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். இதற்காக மீண்டும் அந்த வங்கி உங்களிடம் கேட்டு உங்களது ஆதார் அடையாளத்தைப் பெற வேண்டும். ஆனால், ஏற்கனவே அவர்களிடம் உங்களது ஆதார் அடையாளம் இருப்பதால், அதையே பயன்படுத்த முயலலாம். உங்களது அனுமதியின்றி இதை அவர்கள் செய்யக் கூடாது. ஆனால். நடைமுறையில் எத்தனை வங்கிகள்/ செல் நிறுவனங்கள் பின்பற்றுகின்றன என்பது தெரியாது. ASA அமைப்புகள் மீது திடீர் ஆடிட் செய்வது முக்கிய அரசாங்கப் பொறுப்பு

b.ஆதார் ASA அமைப்பில் இன்னொரு சிக்கலும் உள்ளது. ஒரு முக்கிய நபரின் ஆதார் எண் மற்றும் அவரது           அடையாளம் தவறான கைகளில் சிக்கினால், அவரது மற்ற நடவடிக்கைகளை அவரது எந்த அனுமதியுமின்றி சட்டப் புறம்பாக கண்காணிக்கும் முயற்சி. இதற்கும் ஒரே தீர்வு, இவ்வகை அமைப்புகளை திடீர் ஆடிட் செய்வது

c. இன்னொரு குறை, இந்த அமைப்புகளில் பணி புரிவோர் – அதாவது, UIDAI, NPCI, CCI போன்ற அமைப்புகள் – அங்கு வேலை செய்து கொண்டே அடையாள தில்லு முல்லுக்களைச் செய்வது. இந்தக் குறையை இயற்பியல் பாதுகாப்பு முறைகளைப் (Physical security measures) பின்பற்றி இந்த அமைப்புகளில் பணி புரியும் யாராக இருந்தாலும், சோதனைகளுக்கு உட்பட வேண்டும். இது ஒரு முக்கிய அரசாங்கப் பொறுப்பு

4. இந்திய வருமான வரிக்கு முக்கியமான விஷயம் PAN எண். ஆதார் அடையாளமும் PAN எண்ணையும் இணைக்க 2017 –ல் அரசாங்கம் எடுத்துக் கொண்ட முயற்சி ஒரு குழப்பமான விஷயம். இணையம் வழியாக இரண்டையும் இணைக்க முற்பட்டாலும், பலரும் இதனால் அவதிப் பட்டார்கள். சரியாக ஒன்று சேர்க்கப்படாத தரவு ஒரு நுகர்வோர் பிரச்சினையல்ல. அரசாங்கப் பிரச்சினை. இந்திய மக்களிடம் இந்த தரவுக் கோளாருக்காக கட்டணம் வசூலிப்பது தவறு

5. இந்திய அடுக்கின் நன்மைகளை இன்னும் எளிமையாக விளக்க அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும். இவர்கள் உருவாக்கும் persona based விடியோக்கள் முழுவதும் விஷயத்தை விளக்காமல் சும்மா பற்பசை விளம்பரம் போல காட்சியளிக்கிறது. இவர்கள் கலையுலக திறமைகளை இதற்காகப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை

தமிழ்ப் பரிந்துரை

எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன்சில புதிய சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்

ஆங்கிலச் சொல்

தமிழ்ப் பரிந்துரை

India stack

இந்திய  அடுக்கு

Consent Layer

ஒப்புதல் அடுக்கு

Digital locker

டிஜிட்டல் பெட்டகம்

Banking correspondent

வங்கித் தொடர்பாளர்

Electronic services enabler

மின்னணு சேவை செயலாக்காளர்

Physical security measures

இயற்பியல் பாதுகாப்பு முறைகள்

சொல்வனம் – மார்ச்  2018

இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – பின்னணி

மேலை நாடுகளில், மென்பொருள் துறையில், தனியார் முயற்சிகளில் இரண்டு வகையுண்டு.

  1. முதல் வகை, மைக்ரோசாஃப்ட், ஆரகிள் மற்றும் அடோபி போன்ற பெரு நிறுவனங்களை எதிர்த்துக் கிளம்பிய திறமூல மென்பொருள் இயக்கம் (open software initiative).
  2. இன்னொன்று, மென்பொருளை விற்று பணம் பண்ணுவதை அறவே விட்டு, வசீகரமான இலவச இணைய தளங்களை நுகர்வோரிடம் கொண்டு சேர்த்து, அந்த வசீகரத்தை, விளம்பரம் மூலம் பணமாக்கல். கூகிள், அமேஸான் மற்றும் ஃபேஸ்புக் இந்த வகையில் சேரும்.

இந்த முயற்சிகளுக்கெல்லாம் துணை போன இந்திய நிரலர்கள், இதில் பெரிதாகப் பயனடையவில்லை. அத்துடன், சாதாரண இந்தியர்களும் பெரிய பயனடையவில்லை. இதில் முக்கியமான விஷயம், இரண்டாம் தரத்தினர், நுகர்வோரை மிகவும் நெருங்கி விட்டனர். நுகர்வோரின் பயன்பாட்டு முறைகளை, அவர்கள் விட்டுச் செல்லும், டிஜிட்டல் தடயங்களை வைத்து, இன்னும் அவர்களது இணைய அனுபவத்தை வசீகரமாக்கினார்கள். இதற்கு, அவர்களிடம் உள்ள ஏராளமான நுகர்வோர் இணையத் தரவு (internet browsing data) உதவியது. இன்று கூகிள் மற்றும் அமேஸானிடம், அமெரிக்க அரசாங்கத்தை விட அதிகத் தரவு உள்ளது.

இந்திய அடுக்கிற்கும் மேலே சொன்ன விஷயத்திற்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றலாம். இந்த இரண்டு விஷயங்களும் சேர்ந்த விஷயம்தான் இந்திய அடுக்கு என்னும் டிஜிட்டல் புரட்சி. அமெரிக்க மென்பொருள் முயற்சிகளில் திறன்பேசி ஒரு அங்கமாக இருக்கவில்லை. கணினி (மேஜை, மற்றும் லாப்டாப்) அமெரிக்க மென்பொருள் முயற்சியின் மையமாக உள்ளது. இந்திய டிஜிட்டல் முயற்சியின் மையம் திறன்பேசி. சாதாரண இந்தியர்களிடம் வியாபித்து இருக்கும் கருவி திறன்பேசி.

இந்திய அடுக்கு, ஒரு தேசிய முயற்சி என்பதால், இதனை உருவாக்கியவர்கள், எந்த ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தையும் முக்கியப்படுத்தவில்லை. உதாரணத்திற்கு, ஆதார் தரவுதளம், ஒரு திறமூல மென்பொருளையே பயன்படுத்துகிறது. அத்துடன், ஆதார் தொடர்பு யாவும் 2048 பிட் குறிமுறையாக்க, ஆனால், திறமூல மென்பொருள் நெறிமுறையையே பயன்படுத்துகிறது (2048 bit open source encryption algorithm).

 

ஆதார் எண்ணை ஒரு பயன்பாட்டாளர் சரியான அடையாளமா என்று கேட்கும் பொழுது, அந்தக் கேள்வி, ஒரு ஹடூப்/ ஹைவ் (Hadoop/Hive) என்ற தொழில்நுட்பம் மூலம் பதிலளிக்கப் படுகிறது. இதுவும் ஒரு திறமூல மென்பொருள். இவ்வகையில், இந்திய அடுக்கு, ஒரு திறமூல மென்பொருள் தொழில்நுட்பம் என்று சொல்லலாம்.

 

ஆதாரின் அடிப்படை, எந்த ஒரு சேவையும் உலகிலேயே மிக மலிவான ஒன்றாக இருக்க வேண்டும் என்பது. இதனால், உலகிலேயே மிகப் பெரிய தரவுதளம் ஆதார் மற்றும் அதன் மற்ற அடுக்குகள். இன்று இந்த தரவுதளத்தின் அளவு 10 பெடாபைட்டைத் (ஓராயிரம் டெராபைட் என்பது ஒரு பெடாபைட்- 2017/2018 -ல் வரும் சராசரி மடிக்கணினிகளில் 1 டெராபைட் என்பது சகஜம் ) தாண்டிவிட்ட்து. இந்திய அடுக்கின் முக்கிய சேவைகள் இலவசம் அல்லது, மிகக் குறைவான கட்டணம் தாங்கியது. கூகிளைப் போல, இந்தச் சேவைகளின் எதிர்காலம், நுகர்வோரின் தரவுகளில் அடங்கியுள்ளது. இந்திய அடுக்குகளின் பயன்பாட்டாளர்கள் நுகர்வோருக்கு இன்னும் வசீகரத்தை அவர்களது டிஜிட்டல் தடயங்களை (digital footprint) வைத்து அதிகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ஊடகங்கள் ஆதார் முயற்சியை ஒரு அரசியல் நிகழ்வாகவே பாவித்து, அதிக குறை சொல்லியே வந்துள்ளது. முதலில் நாம் சொன்னபடி, இம்முயற்சியைக் குழப்பமான இந்திய அரசியல் கண்ணாடியுடன் பார்த்ததன் விளைவு இது. ஆதார் ப்ராஜக்ட் பி.ஜே.பி. -யால் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. 2009 -ல் யு.பி.ஏ, அரசாங்கம் உருவாக்கிய ப்ராஜக்ட். ஏராளமாக இந்திய மென்துறை தொழிலில் சம்பாதித்து, உயர்பதவியில் இருந்தவர்கள், நாட்டிற்காக நல்லது செய்ய வேண்டும் என்ற உந்துதலோடு உருவாக்கிய ப்ராஜக்ட் ஆதார். இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த நந்தன் நிலேகனி இந்த ப்ராஜக்டில் முதலில் சேர்ந்தார். இவருக்கு இருந்த மிகப் பெரிய சவால், ஐ.ஏ.எஸ். படித்தவர்கள் மட்டுமே இவருக்கு உதவ முடியும் என்ற அரசாங்கக் கட்டுப்பாடு. இவர் நாடு முழுவதும் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் எவருக்கு கணினி விஞ்ஞானத்தில் ஞானம் மற்றும் ஆர்வமுள்ளது என்பதை சிலர் உதவியுடன் கண்டறிந்துள்ளார். இவர்களை நேர்கானலுக்கு அழைத்து, இதில், மிகவும் ஆர்வமும், அனுபவமும் உள்ளவர்களைச் சேர்த்துக் கொண்டார். இது நடைமுறையில் மிகப் பெரிய சவால். இவரைத் தொடர்ந்து, பல அனுபவமுள்ள இந்திய மென்பொருள் வல்லுனர்கள் இவருடன் இணைந்தனர். இவர்களில், பலர், சம்பளத்திற்காக வேலை செய்யவில்லை. இன்றும், UIDAI, NPCI, GSTN, CCA போன்ற அமைப்புகளில் பல இந்திய நிரலர்கள் சம்பளம் ஏதுமின்றி உழைத்து வருகின்றனர். (https://uidai.gov.in/about-uidai/contact-us/volunteers.html)

 

முதலில், ஆதாரைப் பற்றி முன்னாள் இந்திய நிதியமைச்சர் ப்ரணாப் முகர்ஜிக்கு புரியும்படி சொல்வது ஒரு பெரிய சவாலாக இருந்ததாம்.

ப்ளாட்ஃபார்ம் என்பது வெறும் கான்க்ரீட் அமைப்பு. அதனால் பெரிதாகப் பயன் ஏதுமில்லை. ஆனால், அதன் பக்கத்தில் தண்டவாளம் அமைந்தால், அதன் மதிப்பு அதிகரிக்கிறது. அந்த ப்ளாட்ஃபாரத்தில் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் வரத் தொடங்கினால், ப்ளாட்ஃபார்மின் மதிப்பு இன்னும் பெரிதாகிறது. ஆனால், வேலையை ப்ளாட்ஃபார்மிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்

இப்படிப் புரியவைத்து, இன்றும் கடினமாக உழைத்து வரும் ஆதார் நிரலர்கள் மற்றும் நிபுணர்களுக்கு, மிகப் பெரிய சவால், 2014 -ல் அரசாங்கம் பி.ஜே.பி. -க்கு மாறியதுதான். இந்த ப்ராஜக்டை அரசாங்கம் நிறுத்திவிடுமோ என்ற அச்சத்துடன் புதிய பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளனர். புதிய பிரதமரோ, பல புதிய எண்ணங்களுடன், இந்த ப்ராஜக்ட், அரசாங்க மானிய பிசகுகளை குறைக்க வழி வகுக்க வேண்டும் என்று சொல்லிதோடு நிற்காமல், மேலும், அரசு முதலீட்டை அதிகப் படுத்தினார்.

இன்று, ஆதார் ப்ராஜக்டால், அரசாங்கம் வருடத்திற்கு 1,000 கோடி ரூபாய்களை ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் மிச்சப்படுத்தியுள்ளது – சமையல் வாயு மானியத்தில் மட்டும். ஆதார் ப்ராஜக்ட்டின் முதலீடு 750 கோடி ரூபாய்.

மத்திய அரசாங்க அமைப்புகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வது இந்தியாவில் வழக்கமான ஒன்று. ஆனால், ஆதார் விஷயத்தில், அவை போட்டி போட்டுக் கொண்டு உதவ முன்வந்துள்ளன. உதாரணத்திற்கு, ஆர்.பி.ஐ. ஆதார் ப்ராஜக்டிடம், இந்திய வங்கியமைப்பை விரிவுபடுத்த ஆதார் உதவ வேண்டும் என்று சொன்னதோடு நிற்காமல், NPCI -க்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கூறியது. இதன் முக்கிய பலன், இன்று eKYC மூலம் 30 கோடி இந்தியர்கள் புதிதாக வங்கிக் கணக்கு திறந்துள்ளனர். உலகில் எங்கும் 30 கோடி வங்கிக் கணக்குகள் இவ்வளவு குறைந்த காலத்தில் நிகழ்ந்ததில்லை. SEBI என்ற பங்கு சந்தைச் சீரமைக்கும் அமைப்பு, eKYC -ஐ உடனே அமல்படுத்த முன்வந்தது.

இந்த ப்ராஜக்டில், அரசாங்கம் எல்லாவற்றையும் தானே செய்கிறேன் என்று 1950 வழிகளைப் பின்பற்றவில்லை. மாறாக, ஒரு நிதிப் புரட்சியின் முக்கிய வித்தை மட்டும் மண்ணில் தூவிவிட்டு. பல தனியார் மற்றும் அரசு நிறுவனங்களை இந்த வித்தைச் சார்ந்த சேவைகளை உருவாக்க விட்டது. இது இந்திய சரித்திரத்தில் இதுவரை நடக்காத ஒன்று. அணு ஆராய்ச்சி, விண்வெளி ஆராய்ச்சி விஷயங்களில், அரசாங்கம் வரிந்து கட்டிக் கொண்டு எல்லாவற்றையும் தானே செய்து வந்துள்ளது. ஒரு 8 ஆண்டுகளில், இந்த நிதிப் புரட்சி, ஒரு பெரிய இயக்கமாக மாறியதற்கு முக்கிய காரணம், அரசாங்கம் தன்னுடைய பங்கு மாற்றத்தின் வினையூக்கி (change catalyst) என்பதைப் புரிந்து கொண்டதுதான். முழு நேர, பகுதி நேர மற்றும் தன்னார்வலர்கள் – இதெல்லாம், இந்திய அரசாங்கம் செய்யுமா என்று நினைத்து கூடப் பார்ப்பது கடினம். ஆனால், இந்த ப்ராஜக்டில் இவை எல்லாம் அடக்கம். தலைமையும், குறிக்கோளும் சரியாக இருந்தால், மேற்குலகில் நடக்கும் அதிசயங்கள், இந்தியாவிலும் நடக்கும் என்பதற்கு உதாரணம் இந்த இந்திய அடுக்கு முயற்சி.

தமிழ்ப் பரிந்துரை

எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். சில புதிய சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்

ஆங்கிலச் சொல் தமிழ்ப் பரிந்துரை
India stack இந்திய அடுக்கு
Open software initiative திறமூல மென்பொருள் இயக்கம்
Internet browsing data நுகர்வோர் இணையத் தரவு
Open source encryption algorithm திறமூல மென்பொருள் நெறிமுறை
Change catalyst மாற்றத்தின் வினையூக்கி

சொல்வனம் – மார்ச்  2018

இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – விளக்கம்/ பயன்கள்

ஆதார் என்பது ஒரு அடையாள எண் என்று பார்த்தோம். இதனால், நேரடிப் பயன் ஏதும் இல்லை. இதைப் பயன்படுத்தும் மற்ற அடுக்குகளுக்கு ஆதார் மிகவும் பயனுள்ள விஷயம். ஆதாரின் ஆரம்பக் காலத்தில், அரசியல்வாதிகளுக்குப் புரியும்படி, இப்படி விளக்கப்பட்டதாம்!

“ரயில் ப்ளாட்ஃபாரம் என்பதில் என்ன இருக்கிறது? அது வெறும் கான்க்ரீட் அமைப்பு. அதன் பக்கத்தில் தண்டவாளங்களும், அதன் மேல் ரயில்களும் போகத் தொடங்கினால், ரயில் ப்ளாட்ஃபாரம் என்பது ஒரு மிகப் பெரிய மதிப்பைப் பெறுகிறது”.

காகிதத்திற்கு மை அழகல்ல

இந்த இந்திய அடுக்கை உருவாக்கியவர்கள் மிகத் தெளிவாகச் சிந்தித்திருந்தார்கள். இந்த டிஜிட்டல் அமைப்பு வெற்றி பெற, பல கோடி இந்தியர்களை வங்கி அமைப்பிற்குள் கொண்டு வர வேண்டும். இந்தியப் பொருளாதாரத்தை மூன்று விஷயங்கள் வளர்ச்சிக்குத் தடையாக இருந்து வந்துள்ளது:

1. வங்கி மூலம் அல்லாமல், காசு மூலம் வணிகப் பரிமாற்றம்
2. வர்த்தகத்தில் நம்பிக்கை இன்மை
3. தங்கத்தில் அநாவசிய முதலீடு

தங்க விஷயத்தை நாம் இங்கு விவாதிக்க மாட்டோம். ஆனால், மற்ற இரண்டு தடைகளுக்கும் வங்கிக் கணக்கு இல்லாமை மிகவும் முக்கிய காரணம். அத்துடன், வங்கிகள் படிவங்களாலேயே (forms) இந்தியர்களை பயமுறுத்தி வந்துள்ளனர். 2014 –ல் தனியார் வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்த அனுபவம் அலாதியானது. நான் இந்தியப் பிரஜையல்லாதது இந்த விஷயத்தை மேலும் சிக்கலாக்கியது. என் வாழ்வில் ஒரே நேரத்தில் ஏறக்குறைய 100 கையெழுத்துக்கள் போட்டது இந்த விஷயத்தில் தான்!

சாதாரண இந்தியர்களை இந்த வங்கி அமைப்பிற்குள் கொண்டு வரக் காகிதமும் கையெழுத்தும் ஒரு தடையாக இருக்கக் கூடாது. காகிதமற்ற அடுக்கு இதை எளிதாக்குகிறது.

1. வங்கிகள் ஒரு App –ஐ செல்பேசியில் வாடிக்கையாளரை தறவிறக்கச் செய்கிறது
2. இந்த App –ஐ இயக்கினால், டிஜிட்டல் கையெழுத்து மற்றும் வாடிக்கையாளரின் அடையாளம் சரியானது என்று ஆதார் எண் மூலம், வங்கிக்கு சில நிமிடங்களில் தெரிவிக்கப்படுகிறது. முக்கியமாக, ஆதார் வழங்கி, பதிவு செய்யப்பட்ட App – களுக்கு மட்டுமே இந்தச் சேவையை வழங்கும். அத்துடன், சரியானது என்று மட்டுமே சொல்லும், மற்ற விவரங்கள் எதுவும் கைமாறாது
3. இதை eKYC (Electronic Know Your Customer) என்று சொல்லப்படுகிறது. இதில் காகிதமும் இல்லை, மையும் இல்லை
4. ஒரு வங்கிக் கணக்கு திறக்க 30-60 நிமிடங்கள் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சில நாட்கள் ஆகும் இந்த விஷயம் (மேற்குலகில் இன்றும் பல நாட்கள் ஆகும் விஷயம் இது). 30 கோடி புதிய வங்கிக் ஜன் தான் கணக்குகளை இம்முறையில் திறந்துள்ளது

டிஜிட்டல் பெட்டகம் இந்த அடுக்கில் அடங்கும். இது ஓரளவே பயனில் உள்ளது. இதைப் பற்றி அடுத்தப் பகுதிகளில் அலசுவோம். இப்போதைக்கு, நமது ப்ளாட்ஃபாரத்திற்கு தண்டவாளம் இந்தக் காகிதமற்ற அடுக்கு. ரயிலுக்கான அடுக்கு, காசற்ற அடுக்கு.

காசுதான் கடவுளா?

தலையணைக்குக் கீழே, ஏன் உங்களது பணப்பையில் கூடக் காசு பாதுகாப்பற்றது. இந்தியர்கள், இன்று ஊபரில், தெருவோரக் கடைகளில், ஆட்டோக்களில், எங்கும் PayTM போன்ற சேவைகளை பணத்திற்கு பதில் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள்.

1. NCPI என்ற அரசு நிறுவனம், UPI என்ற மின்னணு கொடுக்கல்/வாங்கல் சேவையைத் தொடங்கியது. எப்படி இந்த UPI (Universal Payments Interface) –ஐ பயன்படுத்த வேண்டும் என்பதற்கு, பீம் என்ற App –ஐயும் வெளியிட்டார்கள். இன்றும், பீம் ஒரு முன்னோடியான App

2. UPI –யின் குறிக்கோள், இந்தியர்கள் செல்பேசிகளை மட்டுமே எடுத்துச் சென்று தங்களுக்குத் தேவையான சேவைகள்/ பொருட்களை வாங்க வழி வகுக்க வேண்டும். மேலும், இந்த வசதி, கிரெடிட் அட்டைகள் போல அல்லாமல், மிகக் குறைந்த கட்டணத்தில் செயல்பட வேண்டும்

3. சாதாரண இந்தியர்களுக்கு இந்த சேவை ஒரு வரப் பிரசாதம். அன்றாட செலவுகளுக்கு இந்த முறையைப் பயன்படுத்தினால், எந்தக் கட்டணமும் இல்லை. You cannot compete with free!

4. அர்.பி.ஐ. நாளொன்றிற்கு, 20,000 ரூபாய் வரை UPI (வசதியைப் பயன்படுத்தும்) சேவையைப் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது

5. எப்படி இயங்குகிறது UPI ? இதன் முக்கிய அங்கம் ‘மெய்நிகர் கொடுக்கல் முகவரி’ (Virtual Payment Address). ஒரு நுகர்வோரின் வங்கிக் கணக்கு ஆதார் மூலம் eKYC செய்யப்பட்டால், வங்கிக் கணக்கு எண், வங்கியின் IFSC பின்னணியில் இணைக்கப்படுகிறது. இந்தச் சேவைகள் யாவும் வங்கி, NCPI மற்றும் ஆதார் வழங்கிகள் குறிமுறையாக்க முறைகளில் பத்திரமாக கைகுலுக்குகின்றன.

6. நுகர்வோர் இந்த செய்முறைக்குப் பின் தங்களுடைய மெய்நிகராக்க பணப்பையில் (virtual wallet) வங்கிக் கணக்கிலிருந்து மாற்றிக் கொள்ளலாம்.

7. UPI மூலம் இயங்கும் ஒரு சேவையை நுகர்வோர் தங்களுடைய செல்பேசியில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தச் சேவையுடன் தங்களுடைய ’மெய்நிகர் கொடுக்கல் முகவரி’ (Virtual Payment Address) –ஐ இணைத்துக் கொள்ள வேண்டும்.

8. ஊபராகட்டும், கடைகளாகட்டும், பேருந்து/ ரயில் டிக்கெட்டுக்கள் என்று எங்கு வேண்டுமானாலும், தன்னுடைய செல்பேசி மூலம், இந்தியர்கள் பணம் கட்டத் தொடங்கிவிட்டார்கள்

https://www.youtube.com/watch?v=FjwzGGEAJ5E

9. UPI மூலம், மற்ற மெய்நிகராக்க பணப்பைக்கு பணத்தைக் கட்டலாம். ஒரு வியாபாரம், இதே போல, இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்

10. இந்த UPI –ஐ கொண்டு, இந்தியர்களுக்கு பலப் புது கொடுக்கல்/ வாங்கல் முறைகள் ஒரு நிதி சூறாவளியையே ஏற்படுத்தியுள்ளது.

11. இன்னும் சில மாதங்களில், UPI கட்டணம் வசூலிக்கத் தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இவற்றின் கட்டணம், விசா/மாஸ்டர் போன்ற அமெரிக்க சேவைகளை முழி பிதுங்க வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விசா/மாஸ்டர் இந்தியாவை விட்டு வெளியேறினால் யாரும் கவலைப் படப் போவதில்லை.

12. சமீபத்தில் இந்தியாவிற்கு பயணித்த பொழுது, என்னுடைய கிரெடிட் அட்டை எதுவும் பயன்படுத்தவில்லை. இந்திய வங்கிகள், குறிப்பாகத் தனியார் வங்கிகள், மேற்குலக வங்கிகளை ரோமானிய காலத்து நிறுவனங்கள் போல காட்சியளிக்க வைத்துவிட்டன!

இன்று, UPI மூலம் இந்தியர்களுக்குக் கிடைக்கும் கொடுக்கல்/வாங்கல் சேவைகளின் பட்டியல்:

 

App
BHIM App
Chillr
FTcash
ICICI Pockets
Mobikwik
PhonePe
Trupay
Vodafone M-Pesa
Cent UPI
eMPower
HDFC PayZapp
Jugnoo Pay
KayPay
SBI Pay
Simply Pay
PayTM

இந்தப் பட்டியல் வளர்ந்து கொண்டே வருவதால், இது முழுப் பட்டியல் அல்ல. எல்லா வங்கிகளின் இவ்வகைச் சேவைகளையும் சேர்த்துப் பார்த்தால், விசா/மாஸ்டரின் நிலமைப் புரியும். இந்திய அடுக்கின் நிதிப் புரட்சியின் ரயில் இதுவே என்று தோன்றுகிறது. ஆனால், இது ஒரு ஆரம்பம் என்றே நினைக்கிறேன். UPI மூலம் , ஆரம்பத்தில் இந்தியாவில் மாதம் ஒன்றிற்கு 1,000 கோடி ரூபாய்கள் கைமாறின. இன்று (அக்டோபர் 2017), மாதம் ஒன்றிற்கு 7,000 கோடிகளாக வளர்ந்துள்ளது. 77 மில்லியன் பரிமாற்றங்கள் மாதம் ஒன்றிற்கு நிகழ்கின்றன.(http://www.livemint.com/Industry/0XWmnn35PzuA4V5xxhhVdM/UPI-transaction-volume-hits-768-million-in-October.html)77 மில்லியன் பரிமாற்றங்கள் ஒரு டிஜிட்டல் தடையத்துடன் நிகழ்ந்துள்ளன. இத்தனை பரிமாற்றங்களும் இதற்கு முன் (குறைந்த பட்சம் 60 மில்லியன்) காசாகவே கைமாறியது. இதனால், பல பயன்கள் நுகர்வோருக்குக் கிடைக்கும் என்று நம்ப வாய்ப்புள்ளது. இதற்கு, இந்திய வங்கித் துறை, தலைகீழாக மாற வேண்டும். மேற்குலக வங்கிகளைப் போல அல்லாமல், இந்திய வங்கிகள் மாறும் என்ற நம்பிக்கை நிச்சயம் உள்ளது.இந்திய அடுக்கில், நாம் அதிகம் அலசாத பகுதி ஒப்புதல் அடுக்கு. இதைப்பற்றி பிற்பகுதிகளில் அலசுவோம். அதற்கு முன், இந்த இந்திய அடுக்கின் பின்னணியில் நடந்த சுவையான விஷயங்களை அடுத்த பகுதியில் பார்போம்.தமிழ்ப் பரிந்துரைஎல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். சில புதிய சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்

ஆங்கிலச் சொல் தமிழ்ப் பரிந்துரை
India stack இந்திய அடுக்கு
India stack இந்திய அடுக்கு
Forms படிவங்களாலேயே
Virtual Payment Address மெய்நிகர் கொடுக்கல் முகவரி
Virtual wallet மெய்நிகராக்க பணப்பையில்

சொல்வனம் – ஃபெப்ரவரி  2018

இந்திய டிஜிட்டல் புரட்சி

I think Visa, MasterCard and Discover will not be around five years from now in India because we are moving payments to marginal cost
மனிஷ் சபர்வால்அர்.பி.ஐ. – டிசம்பர் 2017

ஒரு அமெரிக்கர் அல்லது கனேடியரை அவர்களது நாட்டில், அரசாங்கம் அவர்களது அடையாளத்தைக் காட்டச் சொன்னால், தன்னுடைய காரோட்டி உரிமத்தைக் (driver’s license) காட்டுவார்கள். இதில் அவர்களது புகைப்படம் இருக்கும். அத்துடன், சின்ன ப்ளாஸ்டிக் கார்டாக இருப்பதால், எங்கும் எடுத்துச் செல்ல தோதான விஷயம். இதையே ஒரு 12 வயது சிறுவனையோ அல்லது சிறுமியையோ காட்டச் சொன்னால் என்ன செய்வார்கள்? குறைந்த பட்சம் 16 வயதானாலே காரோட்டி உரிமத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
மேற்கத்திய இந்த முறை இடிக்கிறது அல்லவா? ஏன்? காரோட்டுதல் என்பது ஒரு குடிமகனுக்கு அளிக்கப்படும் ஒரு உரிமை. 18 வயதானால், ஓட்டுப் போட அனுமதிப்பதைப் போன்றது. இது அடையாளமாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் இந்த நாடுகளில் காரோட்டாமலே இருந்து விடலாம். கனடாவில் அரசாங்க உடல்நல கார்டு உள்ளதால், இந்தக் கார்டை ஒரு அடையாளமாகக் கொள்ளலாம். அமெரிக்காவில் அதுவும் கிடையாது. பல நூறு தனியார் காப்பீடு நிறுவனங்கள் அட்டைகளை தனக்குத் தோன்றியபடி அடித்துத் தள்ளுகிறார்கள்.

  1. கனடாவின் உடல்நல அட்டையாகட்டும், அல்லது காரோட்ட உரிமமானாலும் (அமெரிக்கா/கனடா) சரி, இரண்டுமே மாநில அரசுகளால் அளிக்கப்படுபவை. இவை தேசிய அடையாளங்கள் அல்ல.
  2. கனடாவில் SIN மற்றும் அமெரிக்காவில் SSN என்பதே மத்திய அரசாங்கம் அளிக்கும் அடையாளம். ஆனால், இதில் புகைப்படம் கிடையாது.
  3. இலை மறைவாய், காய் மறைவாய் சில அரசாங்க, வங்கி மற்றும் கடன்/வரி விஷயங்களுக்காக இந்த அடையாளத்தைப் பகிர வேண்டி வரும். அமெரிக்காவில் SSN என்பது சீரியஸான விஷயமே அல்ல. எல்லா வணிகர்களும் சர்வ சாதாரணமாய்க் கேட்பார்கள்.
  4. காகிதத்தை மையமாகக் கொண்ட அரசாங்கங்கள் செய்த ஒரு முயற்சி, SSN மற்றும் SIN. இன்றைய மின்னணு உலகில் இதில் உள்ள குறைகள் மிகப் பெரிதாக விஸ்வரூபம் எடுக்கிறது.
  5. இந்திய அரசாங்கம், UIDAI என்ற அமைப்பைத் தொடங்கி, மேற்குலகின் கொள்கைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அதன் குறைபாடுகளை அறவே நீக்கி உருவாக்கிய முயற்சிதான் ஆதார்.

இந்திய அரசாங்கத்தின் நோக்கு, நாளொன்றிற்கு, 100 மில்லியன் ஆதார் அடையாளக் கோரிக்கைகளை 5 நொடிகளுக்குள் பதிலளிக்கும் சேவை. இத்தனைக்கும், இந்த 5 நொடிக்குள் நடக்கும் விஷயங்கள் மிகவும் நவீனமான ஒரு தொழில்நுட்பப் புரட்சி:

  1. ஆதார் எண் என்பது வெறும் ஒரு எண் – இதை வைத்துக் கொண்டு யாரும் எதையும் செய்ய முடியாது.
  2. கருவிழி வருடல் என்பது, ஆதாரின் உதவியினால், இன்று சாதாரண செல்பேசிகளில் சாத்தியம்.
  3. கருவிழி வருடல் (iris scan) மற்றும் ஆதார் எண் என்ற இரண்டும் UIDAI -க்கு அனுப்பப்பட்டால், 5 நொடிக்குள், இன்னார் ஒரு மெய்யான இந்தியப் பிரஜை என்று இந்தச் சேவை சொல்லிவிடும்.
  4. இதற்கான செலவு, அரசாங்கத்திற்கு .1 பைசா – அதாவது 1,000 கோரிக்கைகளை நிறைவேற்ற, அரசாங்கத்திற்கு ஆகும் செலவு 1 ரூபாய். இதைவிடக் குறைந்த செலவில் இத்தனை நவீன சேவை என்பது எங்குமே இயலாத காரியம்!
  5. இந்தக் கோரிக்கையை முன் வைக்கும் நிறுவனத்திற்கு, UDAI என்ன பதிலளிக்கிறது? இன்னார் ஒரு மெய்யான இந்தியப் பிரஜை அல்லது இந்த விவரத்துடன் ஆதார் தரவுதளத்தில் ஒரு பதிவும் இல்லை. அவ்வளவுதான். வாட்ஸாப்பில் வரும் வதந்தியைப் போல, அரசாங்கம், உங்களின் ஜாதகத்தை அம்பானியிடம் தராது!

சரி, இதனால் என்ன பயன்? ஏன் இதற்கு இப்படியொரு பில்ட் அப்?

முதலில், UDAI செய்த வேலை – முதல் ஆதார் எண் ஒதுக்குவதற்கு முன், ஆதாருடன் மின்னணு முறையில் எப்படித் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை வெளியிட்டதுதான். பல்லாயிரம், சேவை நிறுவனங்கள் ஆப்பிள் ஆப்ஸ்டோர், மற்றும் கூகிள் ப்ளேஸ்டோரில் ஒரு சின்ன நிரலை உருவாக்கினால், போதும். அந்த நிறுவனத்தின் நுகர்வோர் இந்த நிரல் மூலம் தங்களின் அடையாளத்தை எளிதில் நிறுவனத்துடன் சரி பார்த்துக் கொள்ளலாம்.

இந்த அமைப்பு வெற்றி பெற மிக முக்கியமான தேவை, காமிராவுடன் வரும் ஒரு செல்பேசி. இந்தியாவில் இன்று 1,183 (1,183,040,925 – Sep 2017) மில்லியன் (2017) செல்பேசிகள் உள்ளன. கிராமங்கள், சிறு நகரங்கள், பெறு நகரங்கள் என்று எங்கும் இந்தியர்கள் செல்பேசிகளைப் பயன்படுத்துவதால், இந்தத் தொழில்நுட்பப் புரட்சிக்குத் தேவையான நுகர்வோர் எந்திரம் வெறும் செல்பேசிதான். செல்பேசி இல்லாதோர் பெரும்பாலும் குழந்தைகள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆதார் மூலம் நடக்கும் இந்திய அடுக்கு தொழில்நுட்பம் காகிதத்தை எதிர்த்து உருவாகியுள்ள ஒரு மின்னணு புரட்சி.

இந்திய அடுக்கு என்று பலமுறை சொல்லியுள்ளேன். இந்த இந்திய அடுக்கு என்றால் என்ன?

  1. நான்கு மென்பொருள் அடுக்குகள் கொண்ட அமைப்பு ‘இந்திய அடுக்கு’. இதில் எல்லாவற்றிற்கும் அடிப்படை ஆதார் என்னும் அடுக்கு – இதை presenceless layer என்று அழைக்கப்படுகிறது – தமிழில் ’முன்னிலையற்ற அடுக்கு’ என்று சொல்லலாம். மற்ற அடுக்குகள் அனைத்தும் இந்த அடிப்படை அடுக்கை அடையாளத்திற்காகப் பயன்படுத்தும்.
  2. அடுத்தபடியாக வருவது காகிதமற்ற அடுக்கு – paperless layer. இது மிகவும் முக்கிய பயன்களை உருவாக்கும் அடுக்கு. அதாவது, ஒருவரின் டிஜிட்டல் அடையாளம் வெகு எளிதாக ஒரு நிதி நிறுவனத்திடம் பரிமாற்றிக் கொள்ள உதவும் அடுக்கு. உதாரணத்திற்கு ஒரு வங்கியில் நீங்கள் கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். மற்றொரு வங்கி உங்களைக் கவரும் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்துகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களது டிஜிட்டல் அடையாளத்தை புதிய வங்கியிடம் மிக எளிதில் மாற்றிக் கொண்டு, நீங்கள் அவர்களின் புதிய சேவையைப் பயன்படுத்தலாம். இதில் காகிதமே தேவையில்லை. இதைப் பற்றி விரிவாகப் பிறகு அலசுவோம்.
  3. அடுத்தபடி, காசற்ற அடுக்கு – cashless layer. இங்குதான் ஒரு நிதித் தொழில்நுட்பப் புரட்சியே நிகழ வாய்ப்புள்ளது. பல தரப்பட்ட செலவுகளுக்கு நீங்கள் உங்களது டிஜிட்டல் பணப்பையை (digital wallet) பயன்படுத்திப் பல சேவைகளையும் பெறலாம். நுகர்வோர் மற்றும் வணிகத்திற்கு மிகக் குறைந்த செலவில் இந்த அடுக்கு நிதிப் பரிவர்த்தனை (financial transactions) செய்ய உதவும். இன்று PayTM போன்ற சேவைகள் இந்த அடுக்கில் இயங்குகின்றன. இதைப் பற்றியும் விரிவாக அலசுவோம்.
  4. எல்லாவற்றிற்கும் மேலாக ஒப்புதல் அடுக்கு – consent layer. இந்த அடுக்கு இன்னும் முழுவதும் உருவாக்கப்படவில்லை. இதன் குறிக்கோள் – எந்த ஒரு ஆதார் சொந்தக்காரரும், தன்னுடைய விவரங்கள் எந்த அளவு, எப்படி, யாருடன், எத்தனை நாட்கள் பகிர்ந்து சொள்வது என்பதை முடிவெடுக்க முடியும். இதனால், பலவகை சேவைகள் – நிதி சேவைகளுக்கு அப்பால், கல்வி, உடல்நலம், அரசாங்க சலுகைகள், போன்ற பல பரிவர்த்தனைகள் எளிமையாக்கப்படும்.

சுருக்கமாகச் சொல்லப் போனால்:

  1. ’முன்னிலையற்ற அடுக்கு’, அதாவது presenceless layer, தேவைக்கேற்ப ஒருவரின் அடையாளத்தை வெளிப்படுத்த உதவும் – authentication on demand
  2. காகிதமற்ற அடுக்கு – அதாவது paperless layer, தேவைக்கேற்ப ஒருவரின் ஆவணங்களை வெளிப்படுத்த உதவும் – documents on demand
  3. காசற்ற அடுக்கு – அதாவது cashless layer, தேவைக்கேற்ப ஒருவரின் நிதிப் பரிவர்த்தனைகள் செய்ய உதவும் – financial transactions on demand
  4. ஒப்புதல் அடுக்கு – அதாவது consent layer, தேவைக்கேற்ப ஒருவரின் அனுமதி பெற உதவும் – permission on demand

கடந்த 8 ஆண்டுகளில் (2017), இந்த இந்திய டிஜிட்டல் முயற்சி ஒரு அரசாங்க ப்ராஜக்ட் என்பதையே நம்பவே கடினமாக உள்ளது. 3 கி.மீ. பாதாள ரயில் நீட்டிப்பிற்கு மேற்குலகில் 5 வருடம் ஆகிறது; 4 கி,மீ. நகர மைய நெடுஞ்சாலை நீட்டிப்பு 5 வருடமாகிறது!

  1. 2009 –ல் ஆதார் ப்ராஜக்ட்டுக்காக UIDAI என்ற அரசு நிறுவனம் உருவாக்கப்பட்டது
  2. 2010 –ல் UIDAI (Universal Identification Authority of India) எப்படி ஆதார் அடையாளங்களைக் கோர வேண்டும் என்ற வரைமுறையை (Aadhar Auth API) வெளியிட்டது. முதல் ஆதார் நம்பர் இன்னும் எவருக்கும் அளிக்கப்படவில்லை!
  3. 2011 –ல் NPCI (National Payments Corporation of India) என்ற அரசு நிறுவனம், மத்திய அரசாங்க சலுகைகளைப் பெற, ஆதாரை மையமாகக் கொண்ட ஒரு பணம் செலுத்தும் சேவையைத் தொடங்கியது. கிரேடிட் கார்டற்ற முதல் இந்திய பணம் செலுத்தும் முறை உருவானது
  4. 2012 –ல் UIDAI, மின்னணு நுகர்வோர் அறிதல் (eKYC – Electronic Know Your Customer) சேவையை அறிமுகப்படுத்தியது. இதற்கு ஆதார் எண்ணும், கருவிழி ஸ்கேன் மற்றும் செல்பேசியில் OTP இவை மட்டுமே தேவை. காகிதம் கிடையாது!
  5. 2015 –ல் CCA (Controller of Certifying Authorities) என்ற அரசாங்க அமைப்பு, டிஜிட்டல் சான்றிதழ் மற்றும் காப்புப் பெட்டகங்களை (digital certification and locker) அறிமுகப் படுத்தியது. மேற்குலகில் சில தனியார் நிறுவனங்கள் இந்தச் சேவையைப் புரிகின்றன. பெரும்பாலும் இவை டிஜிட்டல் சான்றிதழ் அமைப்புகள். இவ்வகை டிஜிட்டல் சான்றிதழ், பாதுகாப்பாக இணையத்தைப் பயன்படுத்த உதவும் கருவிகள். டிஜிட்டல் காப்பகங்கள் மேற்குலகில் தனியார் நிறுவனங்கள் அதிக வெற்றியின்றி சில ஆண்டுகளாக அளித்து வருகின்றன. தனியார் நிறுவனம், காப்புப் பெட்டகங்களை தீய நோக்குடன் (வேறென்ன, எல்லாம் லாப நோக்குதான்) பயன்படுத்தி விடுமோ என்று பலரும் அஞ்சுகிறார்கள்
  6. 2016 –ல் NCPI, ஒருங்கிணைக்கப்பட்ட மின்னணு பணம் செலுத்தும் இடைமுகப்பை (Unified electronic payments Interface) அறிமுகப்படுத்தியது. உலகின் மிக நவீனமான மின்னணு பணம் செலுத்தும் இடைமுகப்பை இதுவே ஆகும்.

இந்த டிஜிட்டல் புரட்சிக்கு முக்கிய தேவைகள் மூன்று:

  1. ஒரு வங்கிக் கணக்கு
  2. ஆதார் பதிவு
  3. செல்பேசி – காமிராவுடன்

இதைவிட எளிமையான தேவைகள் உள்ள ஒரு நிதியமைப்பு உலகில் எங்கும் இல்லை. ஆனால், இந்தியாவில் பல கோடி மக்கள் வங்கிக் கணக்கு இல்லாமல் இருந்தார்கள் (இன்னும் இருக்கிறார்கள்). இதை JAM என்கிறார்கள் – அதாவது, Jan Dhaan Account, Aadhar and Mobile.

இந்திய அரசாங்கத்தின் நோக்கம் எல்லா குடிமக்களுக்கும் இந்தச் சேவைகள் சென்றடைய வேண்டும் என்பதே. பொதுவாக, இந்தியாவில், சந்தையை விரிவாக்குவது என்பது தனியார் நிறுவனத்திடம் அரசாங்கம் விட்டுவிடும். நலிவுற்றோர் நலனுக்காக, அரசாங்கம், தானே முன்வந்து பல திட்டங்களையும், மானியங்களையும் செய்யும். இப்படிச் செயல்பட்டதில், இந்தியா பெரிதாக பயனடையவில்லை. இந்தத் தொழில்நுட்பம், இந்த இரண்டு விஷயங்களையும் ஒரே திட்டத்தில் நிறைவேற்ற முயற்சி செய்துள்ளது. இந்திய அடுக்கு, மற்றும் ஜந்தான் வங்கிக் கணக்கு ஒரு 60 கோடி இந்தியரை இன்னும் சில ஆண்டுகளில் அமைப்புடைய பொருளாதாரத்திற்குள் (organized economy) கொண்டு வரும். மேலும், மற்ற இந்திய அடுக்குகள், மிக மலிவாக நிதிப் பரிவர்த்தனைகள் செய்ய உதவும். எல்லாம் தடையின்றி நடந்தால், உலகின் மிகப் பெரிய பொருளாதாரப் புரட்சியாக மலர இந்திய அடுக்கு வழி வகுக்கும்:

இன்று அரசாங்கம், இந்த அடிப்படை மூன்று விஷயங்களில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.

அடுத்த பகுதியில், இந்த அடுக்களின் பயன் மற்றும் தொழில்நுட்பத்தை விரிவாக அலசுவோம்.
தமிழ்ப் பரிந்துரை

எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். சில புதிய சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்.

ஆங்கிலச் சொல் தமிழ்ப் பரிந்துரை
India stack இந்திய  அடுக்கு
Driver’s license காரோட்டி உரிமம்
Presenceless layer முன்னிலையற்ற அடுக்கு
Paperless layer காகிதமற்ற அடுக்கு
Cashless layer காசற்ற அடுக்கு
Consent layer ஒப்புதல் அடுக்கு
Digital wallet டிஜிட்டல் பணப்பை
Financial transactions நிதிப் பரிவர்த்தனை
Authentication on demand தேவைக்கேற்ப அடையாளம்
Documents on demand தேவைக்கேற்ப  ஆவணங்கள்
Financial transactions on demand தேவைக்கேற்ப நிதிப் பரிவர்த்தனைகள்
Permission on demand தேவைக்கேற்ப அனுமதி
eKYC – Electronic Know Your Customer மின்னணு நுகர்வோர் அறிதல்
Organized economy அமைப்புடைய பொருளாதாரம்

சொல்வனம் – ஃபெப்ரவரி  2018

இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – அறிமுகம்

இந்தியர்கள், பொதுவாகத் தொழில்நுட்பத் துறையில் முன்னேறியுள்ளதைப் பற்றிச் சொல்லிக் கொள்வதே சுவாரசியமான விஷயம்.  ஒவ்வொரு முறை இந்தியா வரும் பொழுதும் இப்படிப்பட்ட விஷயங்கள் காதில் விழுவதுண்டு.

  • “இன்ஃபோஸிஸ் – ல வேலைக்குச் சேர்ந்து, அமெரிக்கா போய், கல்யாணமாகி அங்கேயே செட்டில் ஆகிட்டானாம். அதான் உங்க ஊர் பக்கத்தில் இருக்கும் ஃப்ரீமாண்ட் என்கிற ஊர்ல இருக்கறதாகக் கேள்வி”
  • “அமெரிக்காவில கன்ஸாஸ் கிட்ட ஓர் ஊர்ல பெரிய வேலைல இருக்கான். டிசிஎஸ் அவனை அமெரிக்கா அனுப்பினாங்க. கூடிய சீக்கிரம் சுந்தர் பிச்சை போல வந்துறுவான்”
  • “உங்களுக்கு இந்த செல்ஃபோன் விஷயமெல்லாம் அத்துப்படிதானே? இந்தத் திருகு வேலையெல்லாம் இளசுகளுக்குத் தான் புரிகிறது”
  • “இங்க கரண்ட்டும் இல்ல, தண்ணியும் இல்லை. உங்க ஊர்ல அதுக்கெல்லாம் பஞ்சமே இல்லையாமே. இங்கெல்லாம் திரும்பி வந்துறாதே”.
  • “அப்பப்பா, இங்க பொல்யூஷன் தாங்க முடியல. கார் இருக்கிறவன் பாடு தேவலை. இந்த டீசல் புகையில புதுசு புதுசா வியாதிகளெல்லாம் வருதப்பா”
  • “அட OTP தெரியல? இதெல்லாம் உங்க ஊரிலிருந்து வந்துச்சுன்னு நெனச்சிருந்தேன்”
  • “உங்க ஊரப் போல இந்தியாவிலும் ஏடிஎம் வந்துருச்சு. கார்ட தேச்சா எங்க வேணும்னாலும் பணம் எடுத்துக்கலாம்”
  • “புதுசா எதுக்கெடுத்தாலும் கிரெடிட் கார்டு குடுத்துற்றாங்க. செளகரியமாக இருந்தாலும், பணம் கட்டலன்னா ஆள வச்சு பயமுறுத்தறாங்க”
  • ”எல்லாத்தையும் இணைச்சுறுவேன்னு அரசியல்வாதிங்க சொல்லிக்கிட்டு திரியறான். முதல்ல பான் கார்டு, அப்புறம் ஆதார் கார்டு வந்துச்சு. எல்லாத்தையும் இணைகிறேன்னு அரசாங்கம் ஒத்தக் கால்ல நிக்குது. காவிரியையும் கங்கையும் இணைக்கக் காணோம்”
  • “உங்க ஊர் தேவல. இங்க இருக்கற கூட்டத்துக்கு, எல்லாத்தையும் இணைக்கிறதுக்குள்ள கிழிஞ்சுறும். இங்க பாரு, எத்தனை கார்டு”
  • ”முன்ன மாதிரி ஆட்டோக்காரனிடம் பேரம் பேச வேண்டாம். ஊபர், ஓலா வந்தப்புறம், எல்லாம் செல்ஃபோனில் அழைத்துச் சரியான வாடகை கொடுத்தால் போதும். உங்க ஊரைப் போல மெதுவாக இந்தியாவில எல்லாம் வந்துக்கிட்டு இருக்கு. என்ன, இங்க ஊழல் அதிகம். அது சரியானா, இந்தியாவைப் பிடிக்க முடியாது”
  • “ISRO என்னவெல்லாம் செய்யுது! இந்தியா செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பிட்டோம். அட, இங்க வந்து வேலைப் பாருங்க. இந்தியாவில் என்ன இல்லை?”
  • “ஜியோ என்று ஒரு புயலான ஒரு செல்பேசி சேவை வந்திருக்கு. ஏராளமான விஷயங்கள் இலவசம். மாறாக உங்க ஜாதகத்தை அம்பானியிடம் கொடுத்துறணும். நம்மகிட்ட கருப்புப்பணமா இருக்கு, கவலப்பட…”
  • “இந்த வருஷம் புயலால அதிகம் சேதமில்லை. சரியாக எல்லோரையும் அப்புறப்படுத்திட்டாங்க”

இந்தக் கருத்துக்கள் மிகவும் நியாயமான சாதாரண மனிதர்களின் கருத்துக்கள். முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். இந்தியாவின் முன்னேற்றங்களைக் குழப்பமான ஊழல் அரசியல் செய்திக் கண்ணாடி அணிந்து பார்த்தால், இப்படிப்பட்ட கருத்துக்கள் சொல்லப்படுவது புரிந்து கொள்ள முடியும்.

  • அடிப்படைக் கல்வி, போக்குவரத்து, சட்டம், சுகாதாரம், நகராட்சி  வசதிகளில் பின்தங்கி, தொழில்நுட்பத்தில் வளர்வது, இந்தியா போன்ற ஒரு முரணான தேசத்தில் மட்டுமே சாத்தியம்
  • பல்லாண்டுகள் மக்கள் தீர்வுக்காக ஏங்கும் பிரச்சினைகளை (தண்ணீர், கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, குடியிருப்பு) ஒதுக்கிவிட்டு, புதிய விஷயங்களுக்குத் தீர்வு காணும் தேசம் இந்தியா
  • தன்னுடைய பிரச்சினைகளுக்கு, சல்லிசாக வளர்ந்த நாடுகள் எப்படியோ தீர்வு கண்டுவிடும் என்ற பழைய நோக்கு
  • தூரத்துப் பச்சை – மேலை நாடுகள் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிட்டதாக நம்பும் பாமரத்தனம்

இந்தியாவின் கடந்த முப்பது ஆண்டுகளில் உலகை நிமிர்ந்து பார்க்க வைத்த விஷயங்கள் பலவற்றை இந்தியா செய்துள்ளது.

  1. 1991 –ல் உலக தாராளமாக்கம் (liberalization). பல புதிய முயற்சிகளுக்கு இது வழி வகுத்ததால், இங்குச் சொல்லியாக வேண்டியுள்ளது. வேறு வழியில்லாமல் செய்யப்பட்ட ஒரு விஷயம் இது என்பது இன்று நாம் அறிவோம்.
  2. 1995 –ல் இந்தியாவில் முதன் முதலாக இணையம் (internet) மற்றும் செல்பேசிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகிற்கே இணையம் 1991 –ல் அறிமுகமானது
  3. 1998 –ல் தரையடியே அணுகுண்டு சோதனை. இதில் அணுக்கரு சேர்ப்பு மற்றும் அணுக்கரு பிளவு இரண்டும் அடங்கும்.
  4. 1999 –ல் ATM எந்திரங்கள் இந்தியாவில் பெருவாரியாக அறிமுகப்படுத்தப்பட்டது
  5. 2000 –ல் காப்பீடு தனியார் மயமாக்கப்பட்டது
  6. 2001 முதல் இந்திய விண்வெளிக் கழகம் மற்ற நாடுகளின் துணைக்கோள்களை விண்ணில் ஏவத் தொடங்கியது
  7. 2005 –ல் இந்தியா உலகின் முதல் பத்து பொருளாதார நாடுகளில் ஒன்றானது. இந்த ஆண்டில் தொலைத் தொடர்பு கட்டணங்கள் பெரிய அளவில் குறைக்கப்பட்டது
  8. 2009 –ல் சந்திரயான் செயற்கைக் கோள் சந்திரனைச் சுற்றி வந்தது
  9. 2014 –ல் மங்கல்யான் செயற்கைக் கோள் செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வந்தது. இந்த இரு நிகழ்விற்கு இடையில் இந்திய விண்வெளிக் கழகம் பல செயற்கைக் கோள்களை விண்ணில் மிதக்க விட்டது. உலகின் விண்வெளி தேசங்களில் முக்கிய ஒன்றாக இந்தியா மாறியது. 2016 –ல் 96 செயற்கைக் கோள்களை ஒரு ராக்கெட் மூலம் விண்ணில் மிதக்க விட்டது
  10. 2016 –ல் இந்தியா, பழைய 500 முதல் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது (demonitisation)
  11. 2017 –ல் பொது விற்பனை வரி அறிமுகப்படுத்தப்பட்டது (GST)

இதைத் தவிர இன்னும் பல விஷயங்கள் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நடந்து வந்துள்ளது. முக்கியமாகச் செல்பேசிகள் இந்தியாவில் சைனாவிற்கு அடுத்தபடியாக அதிகமாக விற்கிறது. மூன்று மாதத்திற்கு 25 மில்லியன் புதிய இணைப்புகள் (2000 –ல் கனடாவின் மக்கட்தொகை!) என்ற கணக்கில் இன்னும் வளர்ந்து வந்துள்ளது.

இன்று 15 இணைய நுழைவாயில்களுடன் உலகின் எந்த நாட்டுடனும் போட்டியிடும் அளவிற்கு இணைய இணைப்புகள் வளர்ந்துள்ளன.

இது என்ன இந்திய நியூஸ் ரீல் போல உள்ளது என்று தோன்றலாம். ஆனால் ஏதோ ஒன்று இடிக்கிறது. 1,200 மில்லியன் மக்கள் நிறைந்த தேசத்தின் சாதனைகள் இவ்வளவுதானா?

  1. நாம் பட்டியலிட்ட எதுவுமே இந்தியா உலக நாடுகளில் முதன் முறையாகச் செய்யவில்லை
  2. தனியார் துறையில் பணிபுரியும் இந்திய நிரலர்கள் உலகால், சல்லிசான நிரலர்கள் என்றே மதிக்கப்படுகின்றனர்
  3. இந்திய அரசாங்க முயற்சிகளான விண்வெளி மற்றும் அணு ஆராய்ச்சித் துறைகள் உலகின் முதல் 10 நாடுகளில் இந்தியா இருக்கும் அளவிற்கு உயர்த்தியதே தவிர, உலகின் முதன் முறையாக விஞ்ஞானத்தில் சாதிக்கும் ஒரு நாடாக மாற்ற முடியவில்லை
  4. இந்தியாவின் ஊழல் நிறைந்த அரசாங்கம் ஒன்றுதான் இந்தியாவை அளவிட உலக நாடுகள் ஒரு அளவுகோலாகப் பயன்படுத்துகின்றன
  5. இந்தியாவின் இளைஞர் சக்தி என்ற ஒரே ஒரு விஷயம்தான் இந்தியாவின் நல்முகமாக உலகிற்குத் தெரிந்தது

ஒரு புறம் இப்படியிருக்க, இன்னொரு புறம், சில இந்திய பொருளாதார விஷயங்கள் தானாகவே நிகழ்பவை. சில உதாரணங்கள்:

  1. எந்த ஒரு சேவையும் மிகவும் மலிவான விலைக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்
  2. எந்த ஒரு முயற்சியும் தண்ணீரை விரயப்படுத்தக் கூடாது
  3. எந்த ஒரு எந்திரமும் பெட்ரோலை அதிகம் பயன்படுத்தக்கூடாது (இந்த ஒரு விஷயத்தில் இந்தியா சறுக்கியுள்ளது, இந்திய சாலைகளைப் பார்த்தாலே தெரியும்)
  4. எந்த ஒரு புதிய தொழில்நுட்பமும் அதிக இடத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது
  5. எந்த ஒரு முயற்சியும் காகிதத்தை வீணாக்கக் கூடாது

இந்த ஐந்து கொள்கைகள் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது. உலகின் மிக அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பெரிய நாடு இந்தியா. 1,200 மில்லியன் இந்தியர்களுக்கு வசிக்க/பணிபுரிய இடம், தண்ணீர் மற்றும் வளங்கள்  மிகவும் அரிதானது.

முதலில் காகித விஷயத்திற்கு வருவோம். வட அமெரிக்கா காகிதத்தை வீணாக்குவதைப் போல, உலகில் எங்கும் இல்லை. காகித விரயம், மரங்களைக் கொல்லுவதற்கு ஈடானது என்பதை எல்லோரும் அறிவோம். இந்த அடிப்படைக் கொள்கையின்படி இந்தியா செய்த முயற்சிகள் இந்தியாவை என்றும் தலை நிமிர வைத்துள்ளது.

1980 -களிலிருந்து ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். இந்திய தேர்தல்களில் ஏறக்குறைய 600 முதல் 800 மில்லியன் வாக்காளர்கள் வாக்குகளைப் பதிவு செய்கிறார்கள். உலகின் மற்ற ஜனநாயக நாடுகளைப் போல, காகித அடிப்படையில் வாக்குகள் இந்தியாவில் ஆரம்பத்தில் பதிவு செய்யப்பட்டன. 1980 -களின் கடைசியில், இந்தியாவில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை மின்கலன்களில் செயல்படும் மிகவும் பாதுகாப்பான எந்திரம். பல நீதிமன்றங்கள் இந்திய எந்திரங்களை உலகின் மிக நவீன எந்திரம் என்று தீர்ப்பு அளித்துள்ளன. உலகில் இதைப் போன்று, யானையின் மேல், கொட்டும் மழையில், கொதிக்கும் வெயிலில், பொழியும் பனியில் சோதிக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம் எங்கும் இல்லை.

இதை ஏனோ இந்தியர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வதே இல்லை. இன்றும், ஜனநாயகத்தின் பாதுகாப்பாளன் என்று மார் தட்டிக் கொள்ளும் அமெரிக்காவில், பல இடங்களில் காகித வாக்களிப்பு தான். கனடா, ஆஸ்த்ரேலியா, யூரோப், எல்லாம் இதே கதிதான். ”அதெப்படி இந்திய வாக்களிப்பு எந்திரங்களை இறக்குமதி செய்து பயன்படுத்துவது? நமது ஜனநாயகத்தை இந்திய நிரலர்களிடம் விட்டு விடுவதைப் போல உள்ளதே!” – இப்படி வறட்டு கெளரவம் தடுத்தாலும், இந்தியாவின் இந்தச் சாதனையை யாரும் செய்யவில்லை.     

2009 -ல் இந்திய அரசாங்கம் ஒரு முக்கியமான முயற்சியில் இறங்கியது.

  1. ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு தனித்தன்மை வாய்ந்த அடையாளம் உருவாக்க வேண்டும். இந்த அடையாளம் கருவிழி வருடல் (iris scan) மூலமாகச் செய்ய வேண்டும் என்றும் முடிவெடுத்தது. அந்நாளில், இவ்வகை வருடிகள் பல்லாயிரம் ரூபாய்களுக்கு விற்ற காலம் அது. இதுவே ஆதார் என்ற ஒரு அடையாள மையம். இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்திற்கு ஆதார் ஒரு ஆணிவேர்
  2. ஒவ்வொரு இந்தியனின் நிதி விஷயங்கள் மற்றும் அரசாங்கம் சார்ந்த விஷயங்களை ஆதார் கொண்டு மிக எளிமையாக மற்றும் மலிவாகவும் கொண்டு சேர்க்க வேண்டும்
  3. தனியார் துறைதான் இந்திய தகவல் தொழில்நுட்பத்திற்கு ஆதாரம் என்ற பொதுக் கருத்தை அரசாங்கம் உடைத்தது. நாம் பார்த்த உதாரணங்களில் யாராவது “மிகப் பெரிய அரசாங்க தகவல் தொழில்நுட்ப வேலை பார்க்கிறாள்” என்று பெருமைப்பட்ட்தாகச் சொல்லவில்லை
  4. டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோஸிஸ் நினைத்துப் பார்க்க முடியாத விஷயத்தை, இந்திய அரசாங்கம் ஆதார் ப்ராஜக்ட் மூலம் நிறைவேற்றிக் காட்டியுள்ளது. இன்று உலகில் வெறும் 5 முதல் 6 நிறுவனங்கள் நாளொன்றிற்கு 1 பில்லியன் பரிமாற்றங்கள் நிகழ்த்துகின்றன. இந்த நிறுவனங்கள் இந்த நிலையை அடைய 10 ஆண்டுகள் பிடித்தன. ஆதார் இந்த நிலையை 5.5 ஆண்டுகளில் இந்தியாவிலேயே சாதித்துக் காட்டியுள்ளது. மற்ற இணைய தளங்கள் யாவும் அமெரிக்காவில் உள்ளன
  5. இந்திய அரசாங்கம் மேற்குலகின் பலவகை குறைகளையும் இந்த முயற்சி மூலம் சரிசெய்து வெற்றியும் பெற்றுள்ளது
  6. அடிப்படை விஷயத்தை அரசாங்கம் தன்னிடம் வைத்துக் கொண்டு, வங்கிகள் மற்றும் பிற சேவைகளுக்குப் பல வகை மலிவான சேவைகளை உருவாக்க வழி செய்துள்ளது

வழக்கம் போல, மேற்குலகம், உடனே நம்பத் தயாரில்லை. ஊழல் மிகுந்த இந்தியாவில் இது ஒரு ஸ்டண்ட் என்று நினைக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம். எந்த ஒரு வளர்ந்த நாட்டிலும் இவ்வளவு மலிவான ஆனால் நம்பகமான ஒரு அடையாளம் மற்றும் நிதிப் புரட்சி நிகழவில்லை.  இதைத் தனியார் (இந்திய/பன்னாட்டு) நிறுவனங்களிடம் விட்டிருந்தால், தீட்டியிருப்பார்கள். இந்திய அரசாங்கம் உலகில் முதன் முறையாக, நேர்த்தியாக ஒரு பல்லடுக்கு நிதிப்புரட்சி உருவாகும் சூழலை உருவாக்கியுள்ளது. இதில் வங்கிகள் (banks) , பங்கு சந்தை (stock market) , காப்பீடு (insurance) , வருமான வரி (income tax) , விற்பனை வரி (sales tax) , அன்றாட நிதி பரிவர்த்தனைகள் (daily financial transactions) என்று எல்லாம் அடங்கும்.

இக்கட்டுரைத் தொடரில், இந்த ‘இந்திய அடுக்கைப்’ பற்றி விரிவாக மற்ற பகுதிகளில் பார்ப்போம். அதற்கு முன், ஒவ்வொரு இந்தியக் குடிமகனும், தன்னுடைய அரசாங்கத்தைத் திட்டும் முன்பு, கொஞ்சம் இதைப் பற்றிப் பெருமையும் பட்டுக் கொள்ளலாம்.

தமிழ்ப் பரிந்துரை

எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். சில புதிய சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்

 

ஆங்கிலச் சொல் தமிழ்ப் பரிந்துரை
Liberalization தாராளமாக்கம்
Internet இணையம்
General Sales Tax பொது விற்பனை வரி
Iris scan கருவிழி வருடல்
Banks வங்கிகள்
Stock market பங்கு சந்தை
Insurance காப்பீடு
Income tax வருமான வரி
Sales tax விற்பனை வரி
Daily financial transactions அன்றாட நிதி பரிவர்த்தனைகள்

சொல்வனம் – டிசம்பர் 2017

 

தானோட்டிக் கார்கள் – காப்பீடு மற்றும் காப்புப்பிணை -பகுதி 13

சென்ற பகுதியில் சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றி அலசினோம். இவை சற்று போரடிப்பது போலத் தோன்றினாலும், நுகர்வோருக்கு மிகவும் முக்கியமானவை. அதைவிட மிக முக்கியமான விஷயம் வாகனக் காப்பீடு (vehicle insurance). தானோட்டிக் கார்களில் காப்பீடு ஒரு மிகப் பெரிய பிரச்னை. சொல்லப்போனால், தொழில்நுட்பத்திற்கு அடுத்தபடியாக, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது வாகனக் காப்பீடு சமாச்சாரம். இதோ ஒரு வருடத்தில், இரு வருடத்தில், ஐந்து வருடத்தில் தானோட்டிக் கார் வந்துவிடும் என்று சொல்லும் அனைவரும் காப்பீடு பற்றி நினைப்பதே இல்லை.

வாகனக் காப்பீடு வாகனத்தில் இல்லையேல், உங்களுக்குக் கார் ஓட்டும் உரிமம் இருந்தாலும், நீங்கள் கார் ஓட்டுவது சட்டப் புறம்பான விஷயம். இதற்குச் சட்டப்படி அபராதம் உண்டு. சரி, ஏன் வாகனக் காப்பீட்டிற்கு இவ்வளவு முக்கியத்துவம்?

எல்லாம் விபத்து நேர்ந்தால், யார் விபத்துச் சேதத்தை ஈடு கட்டுவது (compensation) என்பதை முடிவு செய்த பிறகு, காருக்குப் பழுது பார்ப்பது, மற்றும் பயணிகளின் மருத்துவச் செலவுக்கு யார் பொறுப்பு என்பதை முடிவு செய்யத்தான் இந்தக் காப்பீடு ஏற்பாடு.

ஒரு கார் விபத்து நேர்ந்தால், பல நிகழ்வுகள் இதில் அடங்கும். யாருக்கும் உயிர்சேதம் இல்லை என்னும் பட்சத்தில், கீழ்கண்ட விஷயங்கள் குறைந்தபட்சம் இதில் அடங்கும்;

  1. சம்பந்தப்பட்ட கார்களின் பழுது பார்க்கும் செலவு (repair costs)
  2. கார்கள் பழுது பார்க்கப்படும் காலம் வரை, காரின் ஓட்டுனருக்கு மாற்றுக் கார்
  3. விபத்தில் அடிபட்டவர்களுக்குச் சிகிச்சைச் செலவு
  4. விபத்தில் அதிர்வினால் உருவாகும் கழுத்துச் சுளுக்கிற்குச் சிகிச்சைச் செலவு. இது வாரங்கள், ஏன் சில சமயம், சில மாதங்கள் கூட ஆகலாம்

மிக முக்கியமான விஷயம், எந்தக் கார் மீது தவறு என்பது. முடிவு செய்யப்பட வேண்டும். விபத்தில் சம்பந்தப்பட்ட இரு வாகனங்களிடமும் காப்பீடு இருக்க வேண்டும். தவறு இழைக்கும் வாகனம், இரு வாகனப் பழுது மற்றும் மருத்துவச் செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது, தவறிழைத்த வாகனக் காப்பீடு, இரு வாகனங்களின் செலவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதை வேறு விதமாகச் சொல்லப் போனால், வாகனக் காப்பீடு எதற்காக? விபத்து நேரும் பட்சத்தில் ஓட்டுனர் காப்புபிணையை (driver liability) பூர்த்தி செய்வதற்கே இந்தக் காப்பீடு அமைப்பு உள்ளது. வாகனக் காப்பீடு என்பதை ஒரு காப்பீடு நிறுவனம் நிர்வகிக்கிறது. ஓட்டுனர் மாதா மாதம், காப்பீடு தவணைத் தொகையைக் (insurance premium) கட்ட வேண்டும். ஓட்டுனர் காப்புபிணை என்பது ஒரு நிதி அமைப்பு. மேற்குலகில், சராசரி ஓட்டுனர் காப்புப்பிணை ஒரு மில்லியன் முதல் 5 மில்லியன் டாலர்கள் வரை சகஜம்.

முன் பகுதியில், இந்தியாவில் வாகனங்களின் புதிய மாடலில் உள்ள குறைகளுக்காக, இலவசமாகத் தயாரிப்பாளர்கள் கார்களைத் திரும்ப அழைக்கும் (Automotive recalls) ஒழுங்குமுறை இருப்பதாகத் தெரியவில்லை என்று சொல்லியிருந்தேன். இதற்குக் காரணம், இந்திய சட்ட அமைப்பில், பொருள் காப்புப்பிணைச் (product liability) சட்டங்கள் இல்லை. மேற்குலகில், இவ்வகைச் சட்டங்கள் நுகர்வோரை, தயாரிப்பாளர்களின் தவறுகளிலிருந்து காப்பாற்றுகிறது.

பொருள் காப்பிணைப்பு என்பதில் பலவித விஷயங்கள் அடக்கம். உதாரணத்திற்கு, ஒரு காரில் சரியான கச்சாப் பொருட்களைப் பயன்படுத்தாமல், விபத்து நேர்ந்தால், விபத்துச் செலவுகளைத் தயாரிப்பாளர் ஏற்க வேண்டும். உதாரணத்திற்குக், காரின் எஞ்சின் மூடி எஃகினால் செய்யப்பட்டிருப்பாதாகத் தயாரிப்பாளர் சொல்லியுள்ளார் என்று வைத்துக் கொள்வோம். ஒரு விபத்தில் எஞ்சின் நொறுங்கி, சோதனையில், எஞ்சின் மூடி, அலுமினியத்தால் செய்யப்பட்டது என்று தெரிய வந்தால், வாகனத் தயாரிப்பாளர் நஷ்டஈடு கட்ட வேண்டும். இது போன்ற விஷயங்களில், அந்தக் குறிப்பிட்ட மாடல் வாங்கிய எல்லா நுகர்வோருக்கும் நஷ்டஈடு அழ வேண்டும். சமீபத்திய, வோக்ஸ்வேகன் உமிழ்வு சோதனை ஊழலுக்காகப் பல கோடி டாலர் நஷ்டஈடு நுகர்வோருக்கு வோக்ஸ்வேகன் நிறுவனம், கட்ட வேண்டும்.

1980 –களில், பல ஜப்பானிய கார் நிறுவனங்கள் பெட்ரோல் மிச்சப்படுத்த காரின் முன்னே உள்ள பம்பர்களில் styrofoam நிரப்பி வந்தது ஒரு பெரிய நீதிமன்ற போராட்டமே  நடந்தது. பல அமெரிக்கக் கார்கள், இன்றும் பல பாகங்களை  எஃகினால் உருவாக்குவதால், பாதுகாப்பான வாகனங்கள். நுகர்வோருக்கு பாதுகாப்பா அல்லது பெட்ரோல் செலவா என்று கேள்வி எழுந்தால், எது வெற்றி பெரும் என்று அனைவருக்கும் தெரியும்.

பொருள் காப்புப்பிணையின் (product liability) இன்னொரு அம்சம் தயாரிப்புக் காப்புப்பிணை. காற்றுப் பை (air bags) என்பது ஒரு விபத்து நேரும் பொழுது, பயணிகளைப் பாதுகாக்க உதவும் ஒரு அமைப்பு. வேகமாக (குறிப்பாக, ஒரு வேக எல்லைக்கு மேல்) விபத்து நேர்ந்த  மோதிக் கொண்ட காரின் காற்றுப் பை வெளிவராமல் இருந்தால், இதை ஒரு தயாரிப்புக் காப்புப்பிணை என்றும் கொள்ளலாம்.

மேற்குலகில், பொருள் காப்புப்ப்பிணை மிகவும் சீரியஸான விஷயம். கார்த் தயாரிப்பாளர்கள், இதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். ஒரு காரின் மாடல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டால், அதற்கான திட்டத்தில், பல விஷயங்கள் அடங்கும்;

  • காரின் உதிரி பாகச் செலவு
  • காரின் தயாரிப்புச் செலவு
  • காரின் உத்தரவாதப் பழுதுச் செலவு (warranty claims expense)
  • காரின் பொருள் காப்புப்ப்பிணை செலவு
  • காரின் விற்பனைச் செலவு

இதுபோன்ற பல விஷயங்கள் காரின் சில்லரை விலையைத் தீர்மானிக்கின்றன. தானோட்டிக் காருக்கு இப்படிச் செலவினைப் பட்டியலிடுவதில் ஒரு மிகப் பெரிய சிக்கல் உள்ளது.

காப்பீடின் முதல் கோட்பாடு – ஓட்டுனரின் கவனமின்மை.

இதையே பல நீதிமன்றங்கள் ஒரு அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதை driver negligence என்று சட்டத்துறையில் சொல்லுவார்கள். அதாவது, ஒரு விபத்தில் காரின் ப்ரேக் சரியாக வேலை செய்யவில்லை என்று நுகர்வோர் தயாரிப்பாளர் மீது ஒரு வழக்குத் தொடர்ந்தால், தயாரிப்பாளர் என்ன செய்வார்? ஓட்டுனரே, ப்ரேக்கை சரியாகப் பராமரித்தீர்களா? கடைசியாக ப்ரேக்கைப் பராமரித்ததற்குச் சான்று உண்டா? என்று இதை ஒரு driver negligence ஆக மாற்றி விடுவார்கள். அதாவது, காரை ஓட்டுபவரிடம் நிறையப் பொறுப்பு உள்ளது. பெரும்பாலும் விபத்து நேர்ந்தால், ஓட்டுனரே பொறுப்பு.

தானோட்டிக் காரில் மனித ஓட்டுனர் இல்லாத பட்சத்தில், விபத்து நேர்ந்தால் யார் பொறுப்பு?

ஓட்டுதல் என்பது மனிதரிடமிருந்து ஒரு காருக்கு (அல்லது ஒரு எந்திரத்திற்கு) மாறுகிறது. நம்முடைய சட்டங்கள் எதுவும் இதற்கு இடமளிப்பதில்லை.

விபத்து நேர்ந்தால், அது ஒரு தயாரிப்புக் காப்புப்ப்பிணையாகுமா? மனித ஓட்டுனர் உடைய ஒரு கார் தானோட்டிக் கார் மீது மோதினால், யார் பொறுப்பு?  இரு தானோட்டிக் கார்கள் விபத்திற்குள்ளானால், விபத்து நஷ்டத்தை எந்தத் தயாரிப்பாளர் ஏற்பது? ஏற்க வேண்டுமா?

பல கோடித் தானோட்டிக் கார்களை விற்கத் துடிக்கும் எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் கதி கலங்க வைக்கும் விஷயமிது. பல கோடிக் கார்கள் விற்பது ஒரு விஷயம். பல கோடிக் கார்களின் காப்புப்ப்பிணையைச் சுமப்பது இன்னொன்று.

தானோட்டிக் கார்கள் இன்று முழுத் தானோட்டித் தன்மையோடு (அதாவது SAE மாடலில் ஐந்தாவது தட்டு) வெளி வரத் தயங்குவதற்கு இது ஒரு முக்கிய காரணம்.

என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், இவ்வகைச் சட்டச் சிக்கல்கள் இந்தத் தொழில்நுட்பத்தைச் சமூகப் பயனுக்கு வராமல் செய்துவிடுமோ என்று சில நிபுணர்கள் அஞ்சுகிறார்கள்.

பல நாடுகள், பல மாநிலங்கள் என்று மெதுவாக நகரும் சட்ட அமைப்பில், இந்தச் சிக்கலானப் பிரச்னைக்கு முடிவு என்பது குறைந்த பட்சம் இன்னொரு பத்தாண்டுகளுக்கு இயலாத விஷயம். ஒரு ஓட்டுனர் இல்லாமல் பயணிக்க டெஸ்லா போன்ற தயாரிப்பாளர்கள் அனுமதிப்பதில்லை. ஆட்டோ பைலட் வசதியை சோதனை செய்ய ஓட்டுனர்களுக்கு அனுமதி அளித்தாலும், முழுப் பொறுப்பு ஓட்டுனரிடமே. இன்று , இதற்கு விதி விலக்கு என்று எதுவும் இல்லை.

சிலர் இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகள் சிலவற்றை முன் வைத்துள்ளார்கள். ஆனால், சட்டம் எதுவும் முடிவாகாத நிலையில், தானோட்டிக் கார்களுக்கு ஒன்றுதான் வழி;

  • தகுந்த சட்டம் வரும்வரை, தானோட்டிக் கார்கள் வந்தாலும், அதனை நீங்கள் வாங்கினாலும், முழுப் பொறுப்பு ஓட்டுனர்களிடமே
  • காரில் ஒரு சில நிமிடங்களுக்கு மேல், ஸ்டீயரிங்கை விட்டு காரைச் செலுத்துதல் சட்டத்திற்குப் புறம்பானது
  • அடுத்த 10 வருடங்களில், தானோட்டிக் கார்களினால், உண்மையாகவே போக்குவரத்து நெரிசல் குறைகிறதா என்று கண்காணிக்கப் பட வேண்டும்
  • அதே போல, அடுத்தப் பத்தாண்டுகளில், கார் விபத்துக்கள் தானோட்டிக் கார்களினால், குறைகிறதா என்றும் கண்காணிக்கப்பட வேண்டும்

இந்த தரவுகளை வைத்தே காப்பீடு மற்றும் காப்புப்ப்பிணை முடிவுகளை எடுக்க முடியும்.

பல தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு இது போன்ற விஷயங்கள் ஏமாற்றத்தை அளிக்கலாம். ஆனாலும், அவசரப்பட்டு, தொழிலிநுட்ப அடிப்படையில் சட்டங்களை மாற்றுவது ஒரு பொறுப்புள்ள சமூகத்திற்கு அழகில்லை என்பதே உண்மை.

தமிழ்ப் பரிந்துரை

தமிழ்ச் சொற்கள் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். கார் சம்பந்தமான பல தொழில்நுட்பச் சொற்கள் தமிழில் அதிகம் புழக்கத்தில் இல்லை. உதாரணம், ஆக்ஸிலரேட்டர் மற்றும் ப்ரேக். இதை தமிழில் மொழிபெயர்த்தால், நம்மில் பலருக்கும் புரியாது. இதனால், இது போன்ற வழக்குச் சொற்களை அப்படியே பயன்படுத்தியுள்ளேன். சில புதிய சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்

ஆங்கிலச் சொல் தமிழ்ப் பரிந்துரை
Regulation ஒழுங்குமுறைகள்
Vehicle insurance வாகனக் காப்பீடு
Compensation ஈடு கட்டுவது
Repair costs பழுது பார்க்கும் செலவு
Driver liability ஓட்டுனர் காப்புபிணையை
Insurance premium காப்பீடு தவணைத் தொகை
Automotive recalls தயாரிப்பாளர்கள் கார்களைத் திரும்ப அழைக்கும் ஒழுங்குமுறை
Product liability பொருள் காப்புப்பிணைச்
Air bags காற்றுப் பை
Warranty claims expense உத்தரவாதப் பழுதுச் செலவு
Driver negligence ஓட்டுனரின் கவனமின்மை

சொல்வனம் – அக்டோபர் 2017

தானோட்டிக் கார்கள் – சட்டங்களும் ஒழுங்குமுறைகளும் -பகுதி 12

வாகன உலகில் வாகனம் உருவாக்குவதில் எத்தனை சிக்கல்கள் உள்ளதோ, அதைவிட வாகன இயக்க உலகம் சிக்கலானது. அதிகக் கட்டுப்பாடுகள், சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் நிறைந்த உலகம், வாகன உலகம். உதாரணத்திற்கு, ஸ்டியரிங் இடது பக்கத்தில் உள்ள காரை இந்தியாவில் இயக்க முடியாது. அதே போல, வலப்பக்கம் உள்ள காரை பெரும்பாலான மேற்குலக (யு.கே தவிர) சாலைகளில் இயக்க முடியாது.

சமீபத்தில் இந்திய நண்பர்களுடன் பேசியதில், இந்தியா போன்ற நாடுகளில் அடிப்படை ஒழுங்குமுறைகளைத் (regulation) தவிரப்,  பெரும்பாலும் நடைமுறையில் மற்ற ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதை அறிந்தேன். உதாரணத்திற்கு, இந்தியாவில் கார்களின் புதிய மாடலில் உள்ள குறைகளுக்காக, இலவசமாகத் தயாரிப்பாளர்கள் கார்களைத் திரும்ப அழைக்கும் (Automotive recalls) ஒழுங்குமுறை இருப்பதாகத் தெரியவில்லை. வட அமெரிக்கா, யூரோப் மற்றும், ஜப்பானில் இது ஒரு நடைமுறை ஒழுங்குமுறை.

வாகன உலகின் மிக மெதுவாக மாறும் ஒரு அங்கம் ஒழுங்குமுறை மற்றும் சட்டங்கள் (laws and regulations). இவை வாகன உற்பத்தி மற்றும் இயக்கம் இரண்டையும் பாதிக்கும் விஷயங்கள். இவற்றைப் பற்றி விவரமாக அலசுவதற்கு முன், இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று புரிந்து கொள்வது அவசியம்.

முதலில், சட்டம் (law) என்பது நாம் எல்லோருக்கும் புரிந்த ஒன்று. நமது சமூக அமைப்புகளில், உருவாக்கப்படும் சட்டங்கள் எல்லாக் குடிமக்களுக்கும் பொருந்தும். வாகனங்கள் சம்பந்தமான சட்டங்கள் எல்லா ஓட்டுனர்களாலும் பின்பற்றப்பட வேண்டும். உதாரணத்திற்கு, எந்த ஒரு நாட்டிலும், ஒரு நெடுஞ்சாலையில், வேக எல்லைக்கு மேல் பயணிப்பது சட்ட விரோதச் செயல். சட்டத்தைப் பின்பற்றாவிட்டால், சட்டப் பாதுகாவலர்களால், அபராதம் கட்ட வைக்கவும் முடியும்.

ஒழுங்குமுறைகள் (regulation) சற்று மாறுபட்டது. நீதிமன்றம் ஒழுங்குமுறைகளைப் பெரும்பாலும் உருவாக்குவதில்லை. Disc Brakes என்னும் தொழில்நுட்பம் கார்களில் பயன்படுத்துவதுப் பாதுகாப்பிற்கு நல்லது என்பதை ஒரு வாகனப் பொறியாளர்கள் அமைப்பு முன் வைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இது ஒரு ஒழுங்குமுறை. இவ்வகை ஒழுங்குமுறைகள், ஆரம்பத்தில், தயாரிப்பாளர்கள் தன்னிச்சையாகப் பின்பற்றுகிறார்கள்.  அதே போல, காரின் ப்ரேக் அழுத்தி விட்டவுடன் மீண்டும் அழுத்துவதற்கு முன் இருந்த நிலைக்கு வர வேண்டும். இதுவும் ஒரு ஒழுங்குமுறை. மேற்குலகில்,, கார் தயாரிப்பாளர்கள், இந்த ஒழுங்குமுறைக்குக் கட்டுப்படுகிறார்கள். உதாரணத்திற்கு, 2008 –ஆம் ஆண்டு, டொயோடாவின் பல புதிய கார்களில், இந்த ப்ரேக் பிரச்னை வந்தது. டொயோடா, தன்னுடைய செலவில், பல கோடி கார்களை, திரும்ப அழைத்து ப்ரேக் வேலையைச் செய்தது. ஏன் டொயோடா இப்படிச் செய்தது? ப்ரேக் சரியாக வேலை செய்யாததுக் கண்டுபிடிக்கப்பட்டால், நுகர்வோர் மானநஷ்ட வழக்குத் தொடர்ந்தால், பல்லாயிரம் கோடி டாலர்கள் டொயோடாவிற்கு நஷ்டம் ஏற்படும். அத்துடன், டொயோட்டா கார்கள் பாதுகாப்பற்றவை என்று நுகர்வோர் நம்ப, இவ்வகை நிகழ்வுகள் இடம் தருகின்றன. தகுந்த நேரத்தில், டொயோடா தலையிட்டு பிரச்னையைச் சரி செய்யாவிட்டால், டொயோடாவின் விற்பனை பாதிக்கப்படும். இதனைத் தவிற்க, டொயோடா போன்ற கார் தயாரிப்பாளர்கள், தங்களுடைய கார் மாடல்களில் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டால், தன்னுடைய செலவில் சரி செய்கிறார்கள்.

சமீபத்தில், 2016 –ல், உமிழ்வு சோதனைகளில் (emission tests)  தில்லால்ங்கடி செய்தது என்று வோக்ஸ்வேகன் நிறுவனம் மீது மானநஷ்ட வழக்கு, அந்த நிறுவனத்தையே மூழ்கச் செய்யும் நிலைக்கு வந்துள்ளது.

சில நேரங்களில், ஒழுங்குமுறைகள் சட்டங்களாக மாறுகின்றன. உதாரணம், இருக்கை வார் (seat belt) என்பது ஒரு ஒழுங்குமுறையாகத் தான் இருந்தது. பிறகு இதுவே சட்டமாக மாறியது. இதைப் பற்றிச் சற்று விவரமாகப் பிறகு பார்ப்போம்.

கார் தயாரிப்பாளர்களின் சங்கங்கள், மற்றும் பொறியாளர்களின் அமைப்புகள் ஒழுங்குமுறைகளை முன்வைக்கின்றன. இவை எல்லாத் தயாரிப்பாளர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுச் செயல்முறைக்குக் கொண்டு வருவது எளிதான செயல் அல்ல. இதில் பல தொழில் அரசியல் மற்றும், வியாபார உள்நோக்கங்கள் இந்தப் பிரச்னையை மிகவும் சிக்கலாக்கி விடுகின்றன. ஒழுங்குமுறையைச் சிறு தயாரிப்பாளர்கள் சில சமயங்களில்

செயல்படுத்தப் போதிய நிதி இல்லாததால், அரசியல் செய்து, இவ்வகை ஒழுங்குமுறைகள் தோல்வியடைய முயற்சிப்பார்கள். ஒழுங்குமுறை, லாபத்தைக் குறைக்கும் பட்சத்தில், அதை நடக்க விடாமல் செய்யும் தயாரிப்பாளர்களும் உள்ளார்கள். ஒழுங்குமுறைச் சட்டமாக மாறும் பொழுது, இவ்வகைப் பனிப்போர்கள் இன்னும் சிக்கலாகி விடும்.

இருக்கை வார் (seat belt) என்பது பாதுகாப்பிற்கு (ஓட்டுனர் மற்றும் பயணிகளுக்கு) நல்லது என்பது 1970 –களில் கண்டுபிடிக்கப்பட்டது. கார் தொழில் வழக்கப்படி, சில விலை உயர்ந்த மாடல்களில் இந்தப் பாதுகாப்பு அம்சத்தைத் தயாரிப்பாளர்கள் அறிமுகப்படுத்தத் தொடங்கினார்கள். ஆனால், பெரும்பாலான வாகனங்களில் இந்தப் பாதுகாப்பு அம்சம் ஒரு இருபதாண்டுகள் கழித்தே ஒரு அம்சமானது. இதற்கிடையில், காற்றுப் பைகள் (air bags) விபத்தில் உயிர்களின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியம் என்று தெரிய வந்தது. இந்தப் பாதுகாப்பு அம்சமும் சில விலை உயர்ந்த மாடல்களில் தயாரிப்பாளர்கள் அறிமுகப்படுத்தத் தொடங்கினார்கள். ஆனால், பெரும்பாலான கார்களில் இரண்டு அம்சங்களும் இன்றியே வெளி வந்தன. ஏனென்றால், இது ஒரு ஒழுங்குமுறையாக இருந்தது. சட்டமாக அல்ல.

விபத்தில் உயிர்சேதத்தைக் குறைப்பது இருக்கை வாரா அல்லது காற்றுப் பைகளா என்று ’நீயா நானா’ ஒரு 20 ஆண்டுகள் தயாரிப்பாளர்களுக்கும், ஒழுங்கு அமைப்புகளுக்கும் நீதி மன்றத்தில் நிகழ்ந்தது. ஏன் இப்படி இழுத்தடித்தார்கள்? ஒழுங்கு அமைப்பால் (regulatory body), திட்டவட்டமாகப் புள்ளி விவரம் கொண்டு, விபத்தில் உயிர் பாதுகாப்பிற்கு எது சிறந்தது என்று சொல்ல முடியவில்லை. கார் தயாரிப்பாளர்கள், செலவினமாக ஒரு அம்சத்தை ஏன் காரில் சேர்க்க வேண்டும் என்று தவிர்க்க நினைத்தார்கள். அத்துடன், சில புதிய சிக்கல்கள்,  இதை மேலும் இழுத்தடிக்க உதவின. உதாரணத்திற்கு, காற்றுப் பை, குழந்தைகள் மற்றும் சன்னமான உடலமைப்பு கொண்ட பெண்களுக்கும் விபத்தில் உதவவில்லை என்று தெரிய வந்தது. பெண்களோ குழந்தைகளோ, விபத்தில் காற்றுப்பை ஊதியதால், இறந்த செய்திகளை, ஊடகங்கள் ஊதி வாசித்தன.

கடைசியில், எப்படிக் காற்றுப் பைகள் நிறுவப்பட வேண்டும் என்ற விஞ்ஞான பூர்வமான தெளிவு வந்தவுடன், இவ்வகைக் காற்றுப் பைகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அபாயம் இல்லை என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. இதன் பிறகு 1993 –ஆம் ஆண்டு, இருக்கை வார் கார்களில் தேவை என்பது ஒரு ஒழுங்குமுறையிலிருந்து சட்டமாக மாறியது. 2003 -ல் காற்றுப் பைகள் (குறைந்த பட்சம் இரண்டு) கார்களில் இருக்க வேண்டும் என்பதும் ஒழுங்குமுறையிலிருந்து சட்டமாக மாறியது. இன்று வட அமெரிக்காவில், எந்த ஒரு காரில் காற்றுப் பை ஊதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டால், அவ்வகைக் கார்கள் மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்ற சட்டம் உள்ளது.

இவ்வளவு விரிவாக இருக்கை வார் கொள்கையைப் பற்றி எழுதக் காரணம், ஒழுங்குமுறையிலிருந்து எதுவும் ஒரு சட்டமாக மாறுவது என்பது மிகவும் சிக்கலான ஒரு வாகன நிகழ்வு. உயிர் சம்பந்தப்பட்டிருப்பதால், தீர முழுவதும் விசாரித்து முடிவுக்கு வரும் வரை, பல மாநில, தேசிய சட்ட அமைப்புகளில் ஆமை வேகத்தில் நகர்ந்து சட்டமாக மலர்வதற்குள் பல்லாண்டுகள் ஆகி விடுகின்றன.

இதே அமைப்புகள் மிக வேகமாக வளர்ந்து வரும் தானோட்டிக் கார்களை எப்படிச் சீரமைக்கப் போகின்றன?

ஒரளவு புரிந்த பாதுகாப்பு விஷயங்களுக்கே பல்லாண்டுகள் ஆகியுள்ளது சரித்திரம். இன்னும் சரியாகப் புரியாமலிருக்கும் தானோட்டிக் கார்கள் பற்றிய ஒழுங்குமுறைகள் என்பது மிகவும் மெதுவாகவே நிகழும். மேலும், படிப்படியாகப் பல்வேறு அமைப்புகளால், பல ஆண்டுகள் குழப்பப்பட்டுத் தெளிவு ஏற்படும் என்பது நிச்சயம். இத்தனைக்கும், தானோட்டி கார் தயாரிப்பாளர்களுக்குள் அதிக ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. இவர்களே எந்த ஒரு ஒழுங்குமுறையையும் இதுவரை முன்வைக்கவில்லை.

சரி, தானோட்டிக் கார்களுக்குச் சாலையில் எந்தக் கட்டுப்பாடும் இல்லையா? பொதுவாக எல்லா வாகனக் கட்டுபாடு அமைப்புகளும் ஏற்றுக் கொள்ளப்பட்ட  ஒரு பரிந்துறை, நான்காம் பகுதியில் நாம் பார்த்த SAE –ன் ஐந்து படிகள் கொண்ட தானோட்டிக் கார்களில் உள்ள தானோட்டித் தன்மை. இதில் முதல் மூன்று படிகள் முழுவதும் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்று. இன்றைய சட்ட அமைப்புகள் இதை முழுவதும் ஏற்றுக் கொண்டு சட்டங்கள் உருவாக்கியுள்ளன. நான்காவது படிக்குச் சில குழப்பமான சட்டங்கள் உள்ளன. ஐந்தாவது படிக்கு இன்று சரிவரச் சட்டங்கள் இல்லை. ஏனெனில், இன்று அதிகப் பயன்பாட்டில், இவ்வகைக் கார்கள் இன்று இல்லை.

எப்படி கூகிள், டெஸ்லா மற்றும் பல தயாரிப்பாளர்கள் தங்களுடைய கார்களைப் பொதுச் சாலைகளில் சோதனை செய்கிறார்கள்? இதற்கு ஒன்றும் சரியான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் இல்லையா?

சட்டங்கள் மாநில வாரியாக, தேசம் வாரியாக மாறுபடுகின்றன. ஒரு அமெரிக்க மாநிலத்தின் சட்டம் இன்னொரு மாநிலத்தில் வேறுபடும். அதே போல, யூரோப்பிய நாடுகளிலும் இதே நிலைதான். ஒன்று மட்டும் இந்தக் கட்டுரையை எழுதும் பொழுது (டிசம்பர் 2016) சீராக உள்ளது. அமெரிக்க, கனேடிய மாநிலங்கள் ஆகட்டும், யூரோப்பிய நாடுகளாகட்டும், இரண்டுமே, சோதனை ஓட்டங்களை மட்டுமே அனுமதிக்கின்றன.

என்னதான் தானோட்டிக் காராக இருந்தாலும், பொதுச் சாலைகளில் ஒரு மனித ஓட்டுனர் இல்லாமல் பயணிக்க எவருக்கும் அனுமதியில்லை.  அதோடு நிற்காமல், வட அமெரிக்க மாநிலங்களில் (இதில் சில மாநிலங்கள் மட்டுமே அடங்கும்) இன்னும் சில சட்டங்கள் உள்ளன.

  1. இரண்டு முதல் ஐந்து மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள காப்பீடு (insurance) கார் தயாரிப்பாளருக்கு இருக்க வேண்டும்
  2. ஒரு சுதந்திர அமைப்பின் சான்றிதழ் (independent certification body) பெற்ற நபர் ஒருவர் இந்தச் சோதனை ஓட்டங்களில் காருடன் பயணிக்க வேண்டும்
  3. மனித ஓட்டுனரால், காரின் கட்டுப்பாட்டைச் சில நேரங்களில் எடுத்துக் கொள்ளும் வசதி இருக்க வேண்டும்
  4. சில மாநிலங்களில், இவ்வகை தானோட்டிக் கார்களில், விபத்து நடந்தால், கருப்புப் பெட்டிகள் (black box) (விமானத்தைப் போல) விபத்து நடந்த 30 நொடிகளின் கணினித் தரவுகளைப் பதிவு செய்ய வேண்டும். அத்துடன், வாகனக் கட்டுப்பாடு அமைப்புகளுக்கு ஏழு ஆண்டுகள் வரை இந்தத் தரவுகள் கொடுக்கப்பட வேண்டும்

டெஸ்லாவின் சமீபத்திய ஆட்டோ பைலட் வசதி கலிஃபோர்னியா மாநிலத்தின் சட்டங்களைக் கருத்தில் கொண்டு, 8 நிமிடத்திற்கு மேலாக எந்த ஓட்டுனரையும் ஸ்டீயரிங் சக்கரத்திலிருந்து கைகளை அகற்ற விடுவதில்லை.

இருக்கும் சட்டங்களை வைத்துக் கொண்டுதான் இந்தத் துறை முன்னேற வேண்டும். மேலும், சரியான ஒழுங்குமுறைகள் அடுத்த சில ஆண்டுகளில் வருவது இந்தத் துறைக்கு மிகவும் அவசியம். சட்ட அமைப்புகளுக்குத் தொழில்நுட்பம் புரிவதற்கு நாளாகும். ஆனால், சட்டத்தின் மேற்பார்வை நுகர்வோருக்கு மிகவும் அவசியம்.

அடுத்த பகுதியில், தானோட்டிக் கார்களின் காப்பீடு பற்றி அலசுவோம்.

தமிழ்ப் பரிந்துரை

தமிழ்ச் சொற்கள் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். கார் சம்பந்தமான பல தொழில்நுட்பச் சொற்கள் தமிழில் அதிகம் புழக்கத்தில் இல்லை. உதாரணம், ஆக்ஸிலரேட்டர் மற்றும் ப்ரேக். இதை தமிழில் மொழிபெயர்த்தால், நம்மில் பலருக்கும் புரியாது. இதனால், இது போன்ற வழக்குச் சொற்களை அப்படியே பயன்படுத்தியுள்ளேன். சில புதிய சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்

ஆங்கிலச் சொல் தமிழ்ப் பரிந்துரை
Regulation ஒழுங்குமுறைகள்
Automotive recalls கார்களைத் திரும்ப அழைக்கும் ஒழுங்குமுறை
Law சட்டம்
Emission tests உமிழ்வு சோதனைகள்
Seat belt இருக்கை வார்
Regulatory body ஒழுங்கு அமைப்பு
Air bags காற்றுப் பைகள்
Insurance காப்பீடு
Black box கருப்புப் பெட்டிகள்

சொல்வனம் – செப்டம்பர் 2017

தானோட்டிக் கார்கள் – தொழில்நுட்ப அறிமுகம் – விஞ்ஞான வளர்ச்சியினால் உங்கள் வேலை போகுமா? -பகுதி 11

2030 –ல் தனிநபர் (நப) ஒருவருக்கும், தானோட்டிக் கார் தயாரிப்பாளருக்கும் (தயா) நடக்கும் கற்பனை உரையாடல்.

நப: ஒரு வாரம் முன்னதான் உங்க கம்பெனியின் தானோட்டிக் காரை வங்கினேன்

தயா: ரொம்ப சந்தோஷம்

நப: உங்கள பாராட்ட நான் அழைக்கவில்லை. இன்று என்னுடைய கார் நான் சொல்லும் இடத்திற்குப் போக மறுக்கிறது.

தயா: புரியும்படி சொல்லுங்க. இதுக்கு முன்னாடி உங்க கட்டளையைப் பின்பற்றியதா?

நப: போன வாரம் முழுவதும் எல்லாம் பின்பற்றியது. இன்னிக்கு அதுக்கு என்னவோ மூடு சரியில்லைன்னு நெனைக்கிறேன்.

தயா: அது எந்திரம் சார். மூடு எல்லாம் அதுக்குக் கிடையாது

நப: எனக்குத் தெரியாது சார். நீங்க தான் உங்க விளம்பரத்துல அதுக்கு மூளையெல்லாம் இருக்குன்னு சொல்றீங்க. அத எப்படி குஷி படுத்தறதுன்னு உங்க கார் கையேடுல ஒன்னுமே சொல்லலை

தயா: மூட விடுங்க. ஆரம்பத்திலேயிருந்து என்ன நடந்துதுன்னு விவரமா சொல்லுங்க

நப: வழக்கமா நான் மீன் பிடிக்கறதுக்கு வாரக் கடைசில பக்கத்துல 120 கி,மீ. தொலைவுல இருக்குற ஏரிக்கு போகிற வழக்கம். இன்னிக்கு புதுசு தானோட்டிக் காரோட போகலாம்னு கிளம்பலாம்னா கார் இப்படி அடம் பிடிக்கிறது.

தயா: சரி, காருல ஜி.பி.எஸ். –ல ஏரிக்கான ஆயங்களை (coordinates) கொடுத்தீர்களா?

நப: ஊம்

தயா: சீட் பெல்ட் போட்டீங்களா?

நப: செஞ்சேன் சார். என்னுடைய மீன் பிடிக்கும் படகை கூடக் கட்டினேன் சார்

தயா: எங்க கட்டினீங்க?

நப: வழக்கம் போல, காருக்கு மேலதான்.

தயா: சார், நீங்க ஓட்டின பழைய காருல அதெல்லாம். சரி. நாங்க அங்க ஒரு ரேடார் வச்சிருக்கோம். அதை மூடிட்டீங்கன்னா எப்படி சார் கார் நகரும்? கண்ணைக் கட்டிட்டா, தானோட்டிக் கார் எப்படி சார் ஓட்டும்? அதை முதலில் கழட்டுங்க சார். எல்லாம் சரியாயிரும்…

~oOo~

ஓட்டுனர்கள்

என்னதான் கார்களும் அதன் பின் விளைவுகளையும் நாம் சாடினாலும், உலகெங்கிலும் பல கோடி மனிதர்கள்,  தங்கள் வாழ்வாதாரத்திற்காக வாகனம் ஓட்டுகிறார்கள். உதாரணத்திற்கு, வட அமெரிக்காவின் ஜனத்தொகை 350 மில்லியன் (கனடா, அமெரிக்கா). இதில் 3.4 மில்லியன் லாரி ஓட்டுனர்கள் உள்ளனர். சரியான புள்ளிவிவரம் இல்லாவிட்டாலும், ஏறக்குறைய, 750,000 டாக்ஸி ஓட்டுனர்கள் உள்ளனர். இதைத் தவிர, உள்ளூருக்குள் சின்ன வண்டிகளில் டெலிவரி செய்பவர்கள், பஸ் ஓட்டுனர்கள், ஊபர் காரோட்டிகள் என்று மொத்தம் குறைந்தது 6 மில்லியன் மனிதர்கள் வட அமெரிக்காவில் வாகனம் ஓட்டுவதைத் தொழிலாகக் கொண்டவர்கள்.

கடைசியாக எனக்குத் தெரிந்து, டைப் செய்யும் எந்திரங்களை நம்பிப் பல கோடி மனிதர்கள் ஒரு 60 ஆண்டு காலம் முன்னர்வரை இருந்தனர். இன்று, நீதிமன்றம்/அரசாங்கம் போன்ற துறைகளில் பணிபுரியும் சில லட்சம் மனிதர்களைத் தவிர, மற்றவர்கள் இந்தத் துறையில் இல்லை. கணினிகள் மற்றும் அச்சு எந்திரங்கள், டைப் செய்யும் எந்திரத்தைப் பயனற்றவையாக்கி விட்டன. படிப்படியாக நிகழ்ந்த இந்தச் சமுதாய/தொழில்நுட்ப மாற்றம், இன்று ஏறக்குறைய முழுமை அடைந்துவிட்டது.

வட அமெரிக்கச் சாலைகள் மிகவும் நீண்டவை. ஒரு கோடியிலிருந்து மறு கோடி செல்ல பல நாட்கள் ஆகும். 5 முதல் 8 நாட்கள் ஒரு பயணத்திற்கு என்பது மிகவும் சாதாரண விஷயம். இதில் பெரும்பாலும் சரக்குகளை லாரிகள், கப்பல் துறைமுகத்திற்கும், பெரிய கடைகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் எடுத்துச் செல்லும். 24 மணி நேரத்தில், பல லாரி ஓட்டுனர்கள், 16 மணி நேரம் வரை லாரி ஓட்டுகிறார்கள்.

அதைப் போலவே, பல நகரங்களிலும், விதவிதமான  டாக்ஸி அமைப்புகள் உள்ளன. விமான நிலையம் செல்லும் பிரத்யேக டாக்ஸிகள், நகர மையத்தில் மட்டுமே பயணிக்கும் டாக்ஸிகள் மற்றும் ஊபர், ஓலா போன்ற புதிய இணைய டாக்ஸிச் சேவைகள் இவற்றில் அடங்கும். இவைப் பெரும்பாலும் கார்களை ஓட்டுவதை வாழ்வாதாரமாகக் கொண்ட அமைப்புகள்.

என் பார்வையில், முதலில் நடக்கக்கூடிய சமுதாய மாற்றம், தானோட்டிக் கார்களால், வாகனம் ஓட்டுபவர்களின் வாழ்வாதாரம். ஆண்டு முழுவதும் எளிதாகப் பயணிக்கவல்ல பகுதிகளில் (உதாரணம் கலிஃபோர்னியா, நிவேடா, அரிஸோனா, டெக்ஸஸ் போன்ற மாநிலங்கள்) இவ்வகைச் சரக்குப் போக்குவரத்து தானோட்டி லாரிகளுக்கு மாறும் வாய்ப்புள்ளது, இதே பகுதிகளில், ஊபர் மற்றும் சில டாக்ஸிச் சேவைகளும் தானோட்டிக் கார்களுக்கு மாறலாம். அரசாங்கங்கள், தொழிற்சங்க அமைப்புகள் என்று மிகவும் சிக்கலானப் பிரச்னையாக, இது மாறலாம். லாரி நிறுவனங்கள் மற்றும் ஊபர் போன்ற அமைப்புகளுக்கு, வாகனங்களை அதிக நேரம் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். சரியான மேலாண்மையுடன், ஒவ்வொரு மணி நேரமும் காசு பண்ணலாம். தொழிலாளர்க் கொந்தளிப்பு இதனால், பல வருடங்கள் நீடிக்கும் வாய்ப்பும் உள்ளது. தானோட்டி வாகனங்களால், நிறைய லாபம் இருப்பதால், இவ்வகை நிறுவனங்கள் ரிஸ்க் எடுக்க அவசியம் முற்படும்.

இவ்வகைத் தானோட்டி லாரிகள், நெடுஞ்சாலையில் பயணித்தால், தானியங்கிப் பெட்ரோல் பம்புகளும் தேவை. இவ்வகைத் தானியங்கி பம்புகள் உருவாக்கப்பட வேண்டும். இல்லையேல், இவ்வகை லாரிகள், 5 முதல் 8 மணி நேரம் வரைதான் பயணம் செய்ய முடியும். இன்று சோதிக்கப்படும் தானோட்டி லாரிகள் லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் சான் ஃப்ரான்ஸிஸ்கோ நகரங்களுக்கு இடையில், அதாவது 5 மணி நேரப் பயண இடைவேளையில் சோதிக்கப்படுகின்றன.

நிறுத்துமிடம்

தானோட்டிக் கார்களுக்கு, அதாவது டாக்ஸிகளுக்கு நிறுத்துவதற்காக,  நகருக்கு வெளியே பெரிய இடங்கள் தேவைப்படும். இவ்வகை நிலங்களை ஒதுக்குவதில் உள்ள ரியல் எஸ்டேட் பிரச்னைகளை, நகர அரசாங்கங்கள் சந்திக்க வேண்டி வரும். இதனால், பல அரசியல் நெருக்கடிகளும் உருவாகலாம்.

தானோட்டிக் கார்களுக்கான வாடகையும் மிகவும் சர்ச்சைக்குள்ளாகும். இவற்றின் கட்டணம் மனித டாக்ஸியைவிடக் குறைவாக இருக்குமா? ஊபரைப் போல, நெருக்கடிக் காலங்களில் கட்டணத்தைக் கூட்டிக் கடுப்படிப்பார்களா? இவை எல்லாம் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

காவல்துறை சிந்தனை

சமீபத்தில், தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட ஒரு போலீஸ் வல்லுனரிடம் தானோட்டிக் கார் ஆர்வலர்கள் கனடாவில் ஒரு பேட்டி எடுத்தார்கள், பல புதிய காவல்துறை சார்ந்த சமூக விஷயங்களை இந்த வல்லுனர் முன்வைத்தார். சாலைகளில், இவ்வகை வாகனங்கள் வந்த பிறகே இதன் முழுச் சமுதாயத் தாக்கத்தை நாம் அறிய முடியும். இவை வெறும் இன்றைய நம் ஊகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

  1. முதல் விஷயமாக, காவல் துறைக்கு, மிக முக்கியமான விஷயம், ஒரு காரின் சொந்தக்காரர் யாரென்று தெரிய வேண்டும். எந்த ஒரு கார் சம்பந்தப்பட்ட குற்றம் நடந்தாலும், சம்பவத்தில் இடம்பெற்ற காரின் சொந்தக்காரரைப் பொறுத்தே தண்டனை வழங்கப்படுகிறது. இதனால், தானோட்டிக் கார்கள் ஒரு நகருக்குள் வந்தால், அதன் உண்மையான சொந்தக்காரரின் பெயர்களை ஒரு பட்டியலிட வேண்டும். ஏதாவது ஒரு விபத்தில் தானோட்டிக் கார் ஈடுபட்டிருந்தால், அந்தக் கார் எவரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது காவல் துறை மற்றும் நீதித் துறைக்கு மிகவும் முக்கியம். இன்று நகரில் உள்ள டாக்ஸிகள் ஒவ்வொன்றும் ஒரு தனிநபர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஊபர் கார்களும் அதன் சொந்தக்காரரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கும். தானோட்டிக் கார்களும் இப்படியே பதிவு செய்யப்பட வேண்டும் என்பது காவலர்களின் எண்ணம்.
  2. இரண்டாவது விஷயம், தானோட்டிக் கார்கள் சட்டப்புறம்பான பொருட்களைக் கடத்தப் பயன்படுத்தப்படலாம். ஒரு தானோட்டிக் கார்களில் ஏராளமான துப்பாக்கிகளைக் கடத்தி, மாட்டிக் கொண்டால், யார் இதைக் கடத்துகிறார்கள் என்று எப்படிச் சொல்வது? இதனாலேயே காவல் துறையினர், அனைத்து வாகனங்களும் ஒரு தனி நபர் பெயரில் பதிவு செய்வது அவசியமென்று சொல்லி வருகிறார்கள்.
  3. மூன்றாவது விஷயம், தானோட்டிக் கார்களுக்குத் தனியான வரைபாதை சில நகரங்களில் தேவைப்படலாம். இதற்குக் காரணம், பெரும்பாலும் மனிதர்கள் ஓட்டும் கார்களே. மனிதர்கள் கார்களைச் சீராக ஓட்டுவதில்லை. ஆரம்பத்தில் பெரும்பாலும் மனிதர்கள் ஓட்டும் வாகனங்களுடன், இவை பயணம் மேற்கொள்ள வேண்டும். இன்றைய சோதனைக் கார்கள் இந்த விஷயத்தில் நன்றாகவே இயங்கியுள்ளன. ஆனாலும், இவை கோடியில் ஒரு வாகனம் என்று இருக்கும் பொழுது ஏற்படும் வெற்றி, கோடியில் பல லட்சம் வாகனங்களாக மாறும் பொழுது உருவாகும் பிரச்னைகள் வேறுபட்டவை. பெரும்பாலும், இவ்வகைத் தானோட்டி வாகனங்கள், வேக எல்லைக்குள் பயணிக்கும். மனிதக் காரோட்டிகளுக்கு இது எரிச்சலூட்டலாம்! குறுக்கே வெட்டிப் பயணம் செய்யும் மனித கார்களுடன் இவை சமாளிக்கத் திண்டாடலாம். இதனால், தானோட்டி வாகனங்களுக்குத் தனியான வரைபாதைகள் அமைக்க வேண்டி வரலாம். இப்படித் தனி வரைபாதை அமைத்தால், அதற்கான செலவு மற்றும் பராமரிப்புச் செலவை யார் ஏற்றுக் கொள்வார்கள்?  ஊபர் போன்ற பயனடையும் நிறுவனங்கள் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஒரு வாதம். நகரப் போக்குவரத்து நெருக்கடி குறைவதால், பொது மக்கள் இந்தச் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இன்னொரு வாதம். போக்குவரத்து செரிசல் உண்மையிலேயே குறையுமா என்பது திட்டவட்டமாகச் சொல்ல இயலாத நிலையில், இது ஒரு சர்ச்சையான விஷயம் என்பதில் ஐயமில்லை.
  4. நான்காவது, சாலையில் பழுதடைந்து தானோட்டிக் கார் நின்றுவிட்டால், அதனை அப்புறப்படுத்துவது ஒரு பிரச்னை. இது நகரத்தின் பொறுப்பு என்றாலும், பழுதடைந்த கார் எப்படி அப்புறப்படுத்தும் நிறுவனத்திற்குத் தெரியப்படுத்தும்? இதற்காகச் சரியான ஒரு கட்டுப்பாடு அமைப்பு ஊபர் போன்ற நிறுவனங்களிடம் இருக்க வேண்டும். அப்புறப்படுத்துவதற்கும் தகுந்த கட்டணத்தை நிறுவனம் கட்ட வேண்டும்.
  5. ஐந்தாவது, ஒரு வேடிக்கையான போலீஸ் சிந்தனை – ஆனால், சாத்தியமான ஒன்று. ஒரு ஊபர் தானோட்டிக் கார் ஒரு சாலையில் பயணம் செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். நகரில் உள்ள இளைஞர்கள் இக்காரின் முன் வேகமாகச் சென்று திடீரென்று ப்ரேக்கைப் போடுவது, அல்லது அதன் வெகு அருகாமையில் காரைச் செலுத்துவது என்றுக் காரை குழப்ப முயற்சிக்கலாம். இதனால், இவ்வகை stunting செயல்களால் பல பிரச்னைகளை உருவாக்கலாம். இவ்வகை சூழலில் தவறு யாருடையது என்று துல்லியமாக சொல்வது கடினம். விமானங்கள் போல, கருப்புப் பெட்டிகளைத் (black box) தானோட்டிக் கார்களில் இருக்க வேண்டும் என்று காவல் துறையினர் சொல்லி வருகின்றனர். பல வகை சூழல்களில் ஏற்படும் விபத்துக்களுக்கு இது ஒன்றே வழி.
  6. ஆறாவது, விபத்துக்களில் சேதம் நேரிட்டால், யார் கட்டணம் கட்ட வேண்டும் என்பது. இதைப் பற்றி விவரமாகக் காப்பீடுப் பகுதியில் பார்ப்போம்.

அருகாமை விமானப் பயணங்கள்

இவ்வகைத் தானோட்டிக் கார்களின் வெற்றியைப் பொறுத்து, அரை/முக்கால் மணி நேர விமானப் பயணம் பெரிதும் பாதிக்கப்படும். அரை/முக்கால் மணி நேரத்தில், சிறு விமானங்கள், 300 முதல் 600 கி.மீ. வரையே பயணம் செய்கின்றன. விமானப் பாதுகாப்பு நேர விரயம், விமான நிலையப் பயண நேரம் என்று விமானப் பயணம் இன்று 4 முதல் 5 மணி நேரம் வரை ஆகிறது. அத்துடன், விமானம் சில குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே நமக்கு வேண்டிய ஊருக்குப் பறக்கிறது. தானோட்டிக் கார்கள், இதே தூரத்தை, 3 முதல் 6 மணி நேரத்திற்குள் எந்த நேரத்திற்கு வேண்டுமானாலும் பயணம் செய்ய வசதியாக இருக்கும். இதனால், சின்ன விமான நிறுவனங்கள் நஷ்டப் படலாம். பலருக்கு வேலையும் போகலாம். விமானத் தயாரிப்பாளர்களும் பாதிக்கப்படலாம்.

தனியார் தானோட்டிக் கார்களினால், ஏற்படும் சமூக மாற்றங்கள் நாம் நினைத்து கூடப் பார்க்க முடியாதவை. என் பார்வையில், இது குறைந்தபட்சம், ஒரு 25 ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள விஷயம் என்பதால், இதைப் பற்றி எழுதவில்லை.

இங்கு சொல்லப்பட்ட மாற்றங்கள் இன்றைய ஊகங்கள். நாம் நினைத்துப் பார்க்காத பல மாற்றங்களும் நமது அரசியல், சமூக, சட்டங்களில் ஏற்படும் என்பது நிச்சயமாகச் சொல்லலாம்.

சொல்வனம் – ஜூலை 2017